BORTAC என்றால் என்ன, அது ஏன் போர்ட்லாந்தின் தெருக்களில் ரோந்து செல்கிறது?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சமீபத்திய நாட்களில் பெரிதும் ஆயுதம் ஏந்திய கும்பல்கள், படைப்பிரிவு சின்னங்கள் அல்லது பெயர் குறிச்சொற்கள் இல்லாமல் பொதுவான உருமறைப்பு உடையணிந்து, ஒரேகனின் போர்ட்லாந்தின் தெருக்களில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்ப்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டு கைதுசெய்வதை திகிலுடன் பார்த்திருக்கிறார்கள்.

கூட்டாட்சி முகவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிராக நிரந்தர உடல் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய CS கண்ணீர்ப்புகை, இரப்பர் தோட்டாக்கள், மிளகு குண்டுகள், பாரிய ஒலி-ஒளி எழுப்பும் குண்டுகள் மற்றும் அதீத ஒலியெழுப்பும் சோனிக் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட மிகவும் அச்சமூட்டும் காட்சிகளில், அடையாளம்காட்டாத துணைப்படைகள் ஆர்ப்பாட்டக்கார்களை கைதுசெய்து, "விசாரணைக்காக" அடையாளம் குறிக்கப்படாத வாகனங்களுள்ளும் கார்களினுள்ளும் தூக்கிவீசினர்.

கூட்டாட்சி முகவர்களின் இந்த குழுக்கள் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் (DHS) குடையின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களிலிருந்து பெறப்படுகின்றன. வாஷிங்டனில் உள்ள இந்த அமைப்புகளின் உயர் அதிகாரிகளின் கட்டளையின் படி அவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

CBP photo - BORTAC Training

இந்த அணிகளில் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (CBP), குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க அமைப்பு (ICE), யுஎஸ் மார்ஷல் சேவை, கடலோர காவல்படை, கூட்டாட்சி பாதுகாப்பு சேவை மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (TSA) ஆகியவற்றின் முகவர்கள் உள்ளனர். உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) நாடு முழுவதும் பயன்படுத்த மொத்தம் 2,000 அதிகாரிகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்குவது சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்புக்குள் BORTAC எனப்படும் ஒரு பெரிதும் அறியப்படாத சிறப்பு பிரிவின் முகவர்களாவர். BORTAC என்பது எல்லை ரோந்து தந்திரோபாய பிரிவு ( Border Patrol Tactical Unit) என்பதன் சுருக்கமாகும்.

இந்த ஆண்டு பிப்ரவரி முதல், ட்ரம்ப் நிர்வாகம் 10 நகரங்களில் குடியேற்றவாசிகளை சுற்றிவளைக்க BORTAC ஐ அணிதிரட்டுகிறது. அங்கு உள்ளூர் அரசாங்கங்கள் புலம்பெயர்ந்தோரை தடுத்து வைத்து நாடுகடத்துவதில் மற்றும் குடியேற்ற சோதனைகளை மேற்கொள்வதில் கூட்டாட்சி குடியேற்ற முகவர்களுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டாம் என்று போலீசாருக்கு உத்தரவிட்டன. குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க அமைப்பின் (ICE) செய்தித் தொடர்பாளர் பிப்ரவரி மாதம் 10 நகரங்களில் புலம்பெயர்ந்தோரின் கைதுகளை 35 சதவீதம் அதிகரிக்க BORTAC அணிதிரட்டப்படுவதாக விளக்கினார். இன்றுவரை, BORTAC முகவர்கள் அட்லாண்டா, பாஸ்டன், சிகாகோ, டெட்ராய்ட், ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூ ஓர்லியன்ஸ், நியூயோர்க், சான் பிரான்சிஸ்கோ மற்றும் நெவார்க் ஆகிய இடங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மே 25 ஆம் தேதி ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை மினியாபோலிஸ் காவல்துறையினர் கொலை செய்தது தொடர்பாக வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் அலைக்கு பதிலளிக்கும் விதமாக போர்ட்லேண்டிற்கு BORTAC அனுப்பப்பட்டது. போர்ட்லாண்ட் ஒரு பரிசோதனை களமாகவும், ஜனாதிபதி ட்ரம்ப் "அராஜகக் கலவரங்கள்" என்று முத்திரை குத்திய பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை "ஆதிக்கம் செலுத்துவதற்கும்" அடக்குவதற்கும் உறுதியளித்த வழிமுறைகளுக்கு ஒரு உதாரணமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்டது.

ஜூன் 1 ம் தேதி, அவர் 1807 இன் கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்தப்போவதாகவும், ஆயிரக்கணக்கான கடமையில் ஈடுபடக்கூடிய துருப்புக்களை வாஷிங்டன் டி.சி மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களுக்கு ஆர்ப்பாட்டங்களைத் தடுத்து நிறுத்த உத்தரவிடுவதாகவும், அறிவித்தார். இது அரசியலமைப்பை தூக்கியெறிந்து ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதாகும். தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளால் இந்த முயற்சியில் அவர் தடுக்கப்பட்டார். அவர்கள் ஆட்சி கவிழ்ப்பு முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும் கட்டுப்படுத்த முடியாத மக்களின் பதில்தாக்குதலை தூண்டக்கூடும் என்றும் உணர்ந்தனர்.

இந்த தனது திட்டத்தைக் கைவிடுவதற்குப் பதிலாக, இராணுவத்தை நேரடியாக அழைப்பதற்கு முன்னர் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நாஜிகளின் கெஸ்டபோ பாணி எல்லைப் படுகொலையில் இரத்தம்தோய்ந்த துணை இராணுவ குண்டர்களைப் முதல் கட்டத்தில் பயன்படுத்தி தனது திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த முற்படுகின்றார்.

இந்த பொலிஸ் அரசு நடவடிக்கை முழு தொழிலாள வர்க்கத்தையும் இலக்காகக் கொண்டது. நவீன வரலாற்றில் மிகப்பெரிய பொது சுகாதாரம், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், மற்றும் அரசாங்கத்தின் படுகொலைக்கு ஒத்த வேலைக்குத் திரும்புவதற்கான கொள்கைக்கு வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மத்தியில், அமெரிக்க ஆளும் வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிரான சமூக எதிர்ப்பின் வெடிப்புமிக்க வளர்ச்சிக்கு எதிராக அதன் அடக்குமுறை சக்திகளைத் தயாரித்து வருகிறது.

BORTAC என்றால் என்ன?

BORTAC என்பது சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பின் ஒரு கிளையான அமெரிக்க எல்லை ரோந்தின் தந்திரோபாய பிரிவு ஆகும். இது சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் SWAT குழுவிற்கு சமமானதாக பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது. இது இராணுவத்தின் கிரீன் பெரெட்ஸ் (Army Green Berets) அல்லது கடற்படை சீல்ஸ் (Navy SEALS) போன்ற ஒரு இராணுவ சிறப்புப் படை பிரிவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பின் வகைப்பட்டதாக மிகவும் துல்லியமாக வரையறுக்கப்படுகிறது.

குடிவரவு மற்றும் குடியுரிமை வழங்கும் சேவை தடுப்புக்காவல் நிலையங்களில் குடியேறியவர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த 1984 ஆம் ஆண்டில் இந்த பிரிவு நிறுவப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் குறிப்பாக9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னரும் அதன் நோக்கம் மற்றும் "பணித்திறன்கள்" விரைவாக விரிவுபடுத்தப்பட்டது.

CBP photo - BORTAC Training

2007 ஆம் ஆண்டில், BORTAC புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைக் குழுவின் (SOG) கட்டளையின் கீழ், அதன் சகோதர குழுவான எல்லை ரோந்து தேடல் (Border Patrol Search), அதிர்ச்சி மற்றும் மீட்பு பிரிவு (BORSTAR) உடன் இணைக்கப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது டெக்சாஸின் El Paso வில் உள்ள Biggs Army Airfield தலைமையிடமாக உள்ளது.

அமெரிக்க எல்லை ரோந்து (US Border Patrol) அமெரிக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பல BORTAC பிரிவுகளை பராமரிக்கிறது. இந்த பிரிவுகள் வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள சிறப்பு எதிர்ப்பு குழுக்களின் (Special Response Teams) தலைமையகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.

அதன் தற்போதைய வடிவத்தில் உள்ள நிறுவனம் "வெளிநாட்டு மற்றும் தேசிய அளவிலான உள்நாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தும்" "ஒரு விரைவான செயற்படும் அலகு" என வகைப்படுத்தப்படுகிறது. BORTAC முகவர்கள் உலகம் முழுவதும் 28 நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ "மிகவும்-ஆபத்தான பணிகள்" என்று கருதப்படுபவற்றில் பங்கேற்கும்போது, சில வகையான கைக்குண்டெறி ஏவுகணைகள், 37 மிமீ எரிவாயு துப்பாக்கிகள், எம் 4 கார்பைன்கள் (அதிக சக்தி வாய்ந்த தாக்குதல் துப்பாக்கிகள்) மற்றும் Steyr SSG துப்பாக்கி (ஒரு வகை குறிபார்த்து சுடும் துப்பாக்கி) போன்றவற்றை பயன்படுத்துவர். BORTAC முகவர்கள் கடமையிலும் மற்றும் கடமையில் இல்லாதபோதும் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல அதிகாரம் பெற்றவர்கள். BORTAC நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பணியாளர்கள் Kevlar ballistic தலைக்கவசம் மற்றும் குண்டுதுளைக்காத கவச ஆடை ஆகியவற்றை அணிந்திருப்பர். உள்நாட்டில் ஈடுபடுத்தப்படும்போது, இந்த முகவர்கள் "அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக" பெயர் குறிச்சொற்களுக்கு பதிலாக எண்களை அணிவார்கள் என்று சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

BORTAC இன் பணி “குடிவரவு மற்றும் குடியுரிமை வழங்கல் சேவைக்கு விசேஷமாக பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் ஆயுதம் தாங்கிய தந்திரோபாய பிரிவுகளுடன் வழங்குவதே ஆகும் என கூறப்பட்டது. ஒரு சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பின் தகவல் தாள் "இந்த BORTAC அணிகள் உண்மையில் அவற்றின் பிரிவுகளை பாலைவனத்தில் கொண்டிருக்கின்றது" என்று குறிக்கிறது. ஆவணம் தொடர்கிறது: "முகவர்கள் பாலைவன புதர்களில் ஒளிந்துகொண்டு பல நூற்றாண்டுகள் பழமையான இரகசிய சுரங்கப்பாதைகளூடாக ஊர்ந்துவரும் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காக காத்திருக்கிறார்கள்."

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், BORTAC முகவர்கள் புலம்பெயர்ந்தோரை வேட்டையாடுவதில் நிபுணத்துவம் பெற்ற பயிற்சி பெற்ற கொலையாளிகள்.

முன்னாள் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட்டுடன் பெயர் தெரிவிக்காது உரையாடினார். அமெரிக்க இராணுவ-உளவுத்துறை அமைப்பிற்குள் BORTAC முகவர்கள் "அதிக பயிற்சி பெற்ற, மதிப்புமிக்க, குறைந்த அளவிலானோர்" என்று கருதப்பட்டுகின்றனர். "அசாதாரண சூழ்நிலைகளில் உள்நாட்டு சட்ட அமுலாக்கத்திற்கு இந்த முகவர்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுவார்கள்" என்று அந்த அதிகாரி போஸ்ட்டிடம், "இந்த பிரிவினர் பொதுவாக சும்மா உட்கார்ந்திருக்கார்" எனத் தெரிவித்தார்.

BORTAC மற்றும் அதன் சகோதரக் குழு BORSTAR இரண்டும் அமெரிக்க இராணுவ சிறப்பு நடவடிக்கை படைகளுடன் ஒப்பிடும்போது சிறிய பிரிவுகளாகும். இரு அமைப்புகளும் 271 BORTAC மற்றும் 282 BORSTAR “செயலூக்கமான” மற்றும் “தயார்நிலையிலுள்ள சேமப்படை பிரிவு” முகவர்களைப் பயன்படுத்துகின்றன என்பதை 2016 முதல் கிடைக்கக்கூடிய மிக சமீபத்திய தரவு காட்டுகிறது. கூடுதல் பயிற்சி பெற்ற 180 முகவர்கள் "செயலற்ற" நிலையில் உள்ளனர் என்று குறிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரிவுகள், அமெரிக்க கடலோர காவல்படையின் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு உதவி குழு, Navy SEALs மற்றும் இராணுவ சிறப்புப் படைகள் போன்ற அமெரிக்க இராணுவ சிறப்புப் படைகள் மற்றும் பல வெளிநாட்டு நாடுகளின் உயரடுக்கு பொலிஸ் மற்றும் இராணுவப் பிரிவுகளிடமிருந்து பயிற்சி பெற்றன. அவர்கள் உளவுத்துறை, உளவு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்கள். வெளிநாட்டு சட்ட அமுலாக்கம்; எல்லை ரோந்து திறன் கட்டிடம்; வான்வெளி செயல்பாடுகள்; கடல்சார் செயல்பாடுகள் மற்றும் துல்லியமாக குறிவைத்தல் திறன் போன்றவற்றில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முகவரும் தூரத்திலிருந்து குறிவைத்து சுடும் சான்றிதழ் பெற்றவர்கள்

அமெரிக்க ஏகாதிபத்தியம் சொந்த வீட்டிற்கு வருகிறது

கடந்த இரண்டு தசாப்தங்களாக, BORTAC பரவலாக வெளிநாடுகளில் செயல்பட்டு வருகிறது. இது உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஏகாதிபத்திய குற்றங்களுக்கு உதவுகிறது. 2003 ஆம் ஆண்டில் ஈராக் மீதான சட்டவிரோத மற்றும் ஆத்திரமூட்டப்படாத படையெடுப்பின் ஒரு பகுதியான ஈராக் சுதந்திர நடவடிக்கை மற்றும் நீடித்த சுதந்திர நடவடிக்கை ஆகியவற்றில் அதன் குற்றப்பதிவேடுகளில் அடங்கும். இந்நடவடிக்கைகளின் விளைவாக நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நாட்டின் சமூக உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டது.

இன்றுவரை, கொலம்பியா, பனாமா, எஸ்தோனியா, ஹைட்டி, பெரு, பெலிஸ், மெக்ஸிகோ, கொஸ்டரிகா, கென்யா, உக்ரேன், கொசோவோ, ஆர்ஜென்டினா, ஹோண்டுராஸ், ஈக்வடோர், பொலிவியா, மால்டோவா, எத்தியோப்பியா, ஆர்மீனியா, தஜிகிஸ்தான் மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளில் BORTAC முகவர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" போது, BORTAC முகவர்கள் ஜோர்டான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தென் அமெரிக்காவில் குறிப்பாக எல் சால்வடார் மற்றும் பொலிவியாவிலும் எண்ணற்ற "போதைப்பொருள் எதிர்ப்பு" நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அமைப்பின் "வெளிநாட்டு உள் பாதுகாப்பு பணிகள்" என்று குறிப்பிடுவது, BORTAC முகவர்கள் அந்தந்தநாட்டின் "அரசாங்க படையினருக்கு" பயிற்சி அளிப்பதாகும். வெளிநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் துணை இராணுவ பிரிவுகளின் தந்திரோபாய குழுளின் டஜன் கணக்கானவர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு பயிற்சியை BORTAC வழங்கியுள்ளது.

2005 முதல் 2007 வரை, ஈராக்கிய எல்லை போலீசாருக்கு பயிற்சி அளிப்பதில் முகவர்கள் பெரிதும் ஈடுபட்டனர். BORTAC முகவர்கள் 2008 முதல் 2011 வரை எல்லைகளில் ஈராக் எல்லை போலீஸ் அதிகாரிகளுடன் "ஆலோசனை" அளித்து செயல்பட்டு, "பாதுகாப்பு அமைச்சகத்தின் இடைக்கால பாதுகாப்பு குழுக்களின்" உறுப்பினர்களாக பணியாற்றினர். இந்த அமெரிக்க பிரிவு ஈராக் எல்லை போலீஸ் தந்திரோபாய குழுக்களுக்கும் ஈராக் எல்லை போலீஸ் அதிகாரிகள் மற்றும் மேலாளர்களுக்கும் பயிற்சி அளித்தது.

அமெரிக்காவிற்குள், BORTAC அமெரிக்காவின் தெற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் இயங்குகிறது. பெரிய அளவிலான "கைதிகளின் இடையூறுகளின்" போது கைதிகளை மிருகத்தனமாக கொடுமைப்படுத்துவதன் மூலம் அமெரிக்க சிறைச்சாலைக்கு "உதவி வழங்குவதனுடன்" அதன் உண்மையான பணியில் இந்த நிறுவனம் தொடர்கிறது.

"உயர்மட்ட" நிகழ்வுகளில் உள்ளூர் சட்ட அமலாக்கத்திற்கு உதவ BORTAC குழுக்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. 1992 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் BORTAC பிரிவுகள் பயன்படுத்தப்பட்டமை பகிரங்கமாக அறியப்பட்ட நிகழ்வுகளில் அடங்கும். அங்கு அவை 1,000 கலவரதடுப்பு பயிற்சியளிக்கப்பட்ட கூட்டாட்சி சிறப்பு முகவர்களிடையே செயல்பட்டன. ரோட்னி கிங்கை கொடூரமாக தாக்கிய காவல்துறையினரின் Simi பள்ளத்தாக்கு குற்றவியல் விசாரணையின் மோசடிக்கு எதிராக லொஸ் ஏஞ்சல்ஸின் சிறுபான்மை தொழிலாள வர்க்க பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்தன. இது இறுதியில் குற்றமற்றவர் என்ற தீர்ப்புடன் முடிவடைந்தது.

ஏப்ரல் 2000 இல், ஆறு வயது கியூபா அகதி எலியன் கொன்சலஸின் உயர் வழக்கில் இந்த பிரிவு பயன்படுத்தப்பட்டது. கியூபாவுக்கு திருப்பி அனுப்புவதற்காக குழந்தையை கைப்பற்றுவதற்காக புளோரிடாவின் மியாமியில் உள்ள குடும்பத்தின் வீட்டில் சோதனை செய்ய BORTAC பயன்படுத்தப்பட்டது.

மிக சமீபத்தில், கத்ரீனா சூறாவளிக்குப் பின்னர் இந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டது. CBP ஆவணங்களின்படி, இம்முகவர்கள் நியூ ஓர்லியன்ஸுக்கு அழைக்கப்பட்டனர் மற்றும் சூறாவளியிலிருந்து ஏற்பட்ட பேரழிவு மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து "ஒழுங்கை மீட்டெடுப்பது" மற்றும் "கொள்ளையை சமாளிக்க" மார்ஷல்களாக நியமிக்கப்பட்டனர். உண்மையில், சூறாவளிக்கு இரக்கமற்ற, திறமையற்ற மற்றும் மனிதாபிமானமற்ற அரசாங்கத்தின் பிரதிபலிப்பு மீதான மக்கள் சீற்றத்தின் வெளிப்பாடுகளை அடக்குவதற்கு BORTAC முதன்மையாக பயன்படுத்தப்பட்டது.

போர்ட்லாந்தில் BORTAC அதே நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றது: பொலிஸ் மிருகத்தனத்தை எதிர்க்கும் இளைஞர்களையும் தொழிலாளர்களையும் அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்குமாகும். இது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்காவில் சர்வாதிகாரத்தை நோக்கிய திருப்பத்தின் முக்கிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பயங்கரவாதிகளுக்கு எதிரான பயன்பாட்டிற்காக என்றபேரில் கட்டப்பட்ட பொலிஸ் அரசு கட்டமைப்பு, முதலில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும், இப்போது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் இன்னும் பரந்தளவில் மாற்றப்பட்டுள்ளது.

BORTAC ஐ உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் யார் பொறுப்பு?

ட்ரம்ப் நிர்வாகம் ஆழமான மற்றும் முன்னோடியில்லாத அரசியல் நெருக்கடியில் உள்ளது. அரசியல் ஸ்தாபகம், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினர், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பங்குச் சந்தையை மிதக்க வைப்பதற்காக பெருநிறுவன அமெரிக்கா மற்றும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களைச் செலுத்தியதன் மூலம் தமது பிரதிபலிப்பை காட்டினர்.

தொற்றுநோயால் தூண்டப்பட்ட பொது சுகாதார நெருக்கடிக்கு எந்தவொரு தீவிரமான பதிலளிக்கவோ அல்லது நிதியளிக்கவோ அல்லது ஒழுங்கமைக்கவோ தவறியது. இது குற்றவியத்தனமான வேலைக்கு திரும்புக என்ற உந்துதலுடன் சேர்ந்து முழு அளவிலான பேரழிவை ஏற்படுத்தியது. நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் கட்டுப்பாட்டை மீறி வருகின்றன. முதலாளித்துவத்தின் முழு பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பும் திருத்தமுடியாதளவிற்கு மதிப்பிழந்துள்ளது.

இப்போது, மந்தநிலை நிலைமை மட்டத்திலான வேலையின்மைக்கு மத்தியில், வெள்ளை மாளிகையும் காங்கிரசும் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு வீடின்மை மற்றும் பசியைத் தவிர்க்க உதவிய விரிவாக்கப்பட்ட வேலையின்மைக்கான உதவிகளை குறைத்து வருகின்றன.

அவருக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதால், டிரம்ப் மிகவும் கொடூரமான மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு திரும்புகிறார். பெருநிறுவன ஊடகங்கள் நவம்பர் தேர்தல்கள் நடத்தப்படுமா, அவ்வாறு நடந்தாலும் அதில் தனக்கு எதிரான ஒரு முடிவை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வாரா என்பது குறித்து வெளிப்படையாக ஊகித்து வருகின்றன.

எவ்வாறாயினும், நவம்பர் மாதத்தில் ஜனநாயகக் கட்சியினருக்கும் ஜோ பைடெனுக்கும் கிடைக்கும் வெற்றி ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைத் தடுக்கும் என்று தொழிலாளர்கள் நம்புவது ஒரு அபாயகரமான தவறாகும். இதைத்தான் பெரும்பாலான ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பேர்னி சாண்டர்ஸ் போன்ற "முற்போக்கான" ஜனநாயக கட்சியினர் என்று அழைக்கப்படுபவர்களை ஊக்குவிக்கும் பல்வேறு போலிஇடது அமைப்புகள் கூறிவருகின்றன. பைடென், பராக் ஒபாமா மற்றும் நான்சி பெலோசி உட்பட ஒரு முக்கிய ஜனநாயகக் கட்சிக்காரரும் கூட, அவை சர்வாதிகார அதிகாரத்தை பயன்படுத்தல் என்று ட்ரம்பின் நடவடிக்கைகளை கண்டிக்கவில்லை. பொலிஸ் அரசின் அச்சுறுத்தலுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஜனநாயகக் கட்சியினர் எந்த முறையீடும் செய்யவில்லை. ட்ரம்பின் சர்வாதிகார நிகழ்ச்சி நிரலுக்கு அஞ்சுவதை விட தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தை கண்டே அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே ட்ரம்பிற்கு எதிராக வெகுஜன எதிர்ப்பை தமது ரஷ்யாவிற்கு எதிரான பிரச்சாரத்தின் பின்னால் திசைதிருப்ப முயன்றதுடன் மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதும் ட்ரம்பின் தாக்குதல்களுக்கு எதிராக எந்தவொரு உண்மையான போராட்டத்தையும் எதிர்த்தனர். சமீபத்திய வாரங்களில், இவை ட்ரம்பிற்கு எதிராக உலகெங்கிலும் போர்க்குற்றங்களைச் செய்த அதே இராணுவம் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் என்ற ஆபத்தான மாயையை ஊக்குவிப்பதை முடுக்கிவிட்டுள்ளன. CIA, FBI மற்றும் இராணுவத்தின் பிரிவுகளுடன் கூட்டாக இணைந்துகொண்டு இணைய தணிக்கை உட்பட தங்கள் சொந்த சர்வாதிகார நிகழ்ச்சி நிரலை அவர்கள் ஊக்குவிக்கின்றனர்.

ட்ரம்பின் தாக்குதல்களுக்கு ஜனநாயகக் கட்சியின் உடந்தையாக இருப்பது அவர்களின் மவுனத்தை விட ஆழமாக இருக்கின்றது.

ட்ரம்ப் இப்போது மக்கள் எதிர்ப்பை நசுக்க அணிதிரட்டும் BORTAC இனையோ அல்லது ஆயுதமேந்திய மனிதர்களின் வேறு எந்த அமைப்புகளையோ உருவாக்கவில்லை. அமெரிக்காவில் பொலிஸ் அரசு கட்டமைப்பு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களால் பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, ஒபாமா நிர்வாகம் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க அமைப்பின் திறன்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தது. ஆட்சிக்கு வந்தபின், ஒபாமா புஷ்ஷின் கீழ் பாதுகாப்பான சமூகங்கள் என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை விரிவுபடுத்தினார். எல்லையைத் தாண்ட முயற்சிப்பவர்களுக்கு மாறாக, சமூகங்களில் ஏற்கனவே வசித்து வந்த புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் முயற்சியில் இந்த திட்டம் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் சட்ட அமுலாக்க முகமைகளை குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க அமைப்புடன் இணைத்தது.

ஒபாமா நிர்வாகத்திற்கு முன்னர், உள்நாட்டில் இந்த அமுலாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. எவ்வாறாயினும், 2011 ஆம் ஆண்டின் இறுதியில், உள்நாட்டில் கைது செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை எல்லையில் கைது செய்யப்பட்ட எண்ணிக்கையை சமன் செய்தது. ஒபாமா தனது எட்டு ஆண்டு காலத்தில் சுமார் 3 மில்லியன் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தியதன் மூலம் "நாடுகடத்துவதன் தலைவர்" (“deporter-in-chief”) என்ற புனைபெயரைப் பெற்றார். இது குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கீழ் இருந்த விகிதத்தை விட இரு மடங்கு அதிகமாகும். மேலும் அமெரிக்க வரலாற்றில் முந்தைய ஜனாதிபதிகளால் நாடு கடத்தப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாகும்.

நிர்வாகத்தின் "சீர்திருத்த" நடவடிக்கைகள் ஏற்கனவே நாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் மீது மட்டுமல்லாமல், எல்லையில் "அமெரிக்க கோட்டையை" வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன. 2010 ஆம் ஆண்டில், ஒபாமா ஆயிரக்கணக்கான கூடுதல் எல்லை முகவர்களை பணியமர்த்துவதன் மூலமும், பிரிடேட்டர் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி வானத்திலிருந்து ரோந்து செய்வதன் மூலமும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை மேலும் இராணுவமயமாக்க 600 மில்லியன் டாலர் ஒதுக்கிய மசோதாவில் கையெழுத்திட்டார்.

வெளிநாடுகளில் ஒபாமா நிர்வாகத்தின் சட்டவிரோத ஆளில்லா விமான படுகொலை திட்டத்தின் விளைவாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஏமன், சோமாலியா மற்றும் பிற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 2011 இல், யேமனில் ஒரு அமெரிக்க குடிமகனும், அடிப்படைவாத மதகுரு அன்வர் அல்-அவ்லாகி படுகொலை செய்ய ஒபாமா அங்கீகாரம் அளித்தார். இந்த கொலை, அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும். இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க குடிமக்களுக்கு விசாரணையோ அல்லது குற்றச்சாட்டோ இல்லாது மரணதண்டனைகளில் கையெழுத்திட முடியும் என்பதற்கு ஒரு முன்மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவ-உளவுத்துறை எந்திரத்தை மேலும் கட்டியெழுப்ப டிரில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்த பின்னர், ஒபாமா ட்ரம்ப்பிடம் ஆட்சியைக் கொடுத்து மற்றும் அமெரிக்க மக்களுக்கு அவரது ஜனாதிபதி பதவியை மதிக்கும்படி கூறினார். வெள்ளை மாளிகையில் தனது இறுதி செய்தியாளர் கூட்டத்தில், உள்வரும் நிர்வாகத்தின் அரசியல் சட்டபூர்வதன்மைக்கு உறுதியளித்த அவர், வெற்றி பெற்றதும், “ட்ரம்ப் தனது நோக்கங்கள் மற்றும் மதிப்புகளை முன்கொண்டு செல்வது பொருத்தமானது” என்று அறிவித்தார்.

ட்ரம்ப் பிரதிநித்துவப்படுத்தும் அதே ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவையே ஜனநாயகக் கட்சியும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த இருகட்சி அமைப்பின் கட்டமைப்பைக் கொண்டு ஒரு படி கூட முன்னேற முடியாது.

ட்ரம்ப் நிர்வாகம், இராணுவவாதம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டமும் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும் முதலாளித்துவத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான ஒரு போராட்டமாகும். இது ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவும் எதிராகவும் நடத்தப்பட வேண்டும்.

மேலும், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டம், சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்துடனும் சமூக திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழித்தல், வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் அனைத்து மனிதசமூகத்தையும் அச்சுறுத்தும் முடிவில்லாத போரின் விளைவுகளுக்கு எதிரான போராட்டத்துடனும் இணைக்கப்பட வேண்டும்.

Loading