முன்னோக்கு

மொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒவ்வொரு நாளும், உலகெங்கிலும் குறைந்தபட்சம் கால் மில்லியன் பேர் கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கு உள்ளாகி வருகிறார்கள், 5,500 க்கும் அதிகமானவர்கள் அந்நோயால் உயிரிழக்கிறார்கள். குறைந்தபட்சம் 17.1 மில்லியன் பேருக்கு நோய்தொற்று மற்றும் 669,000 க்கு அதிகமானவர்களின் உயிரிழப்புடன், உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் ஆறாவது "மிகவும் கடுமையான" சர்வதேச பொது மருத்துவ அவசரநிலை கவலையை அறிவித்து ஆறு மாதங்களுக்குப் பின்னர், ஒரு தடுப்பூசிக்கான பொதுவான அவசரத்தை முன்பினும் அதிக அக்கறையுடன் அதிகரித்துள்ளது.

இப்போது அமெரிக்காவில் மட்டும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர், சமீபம் வரையில் 154,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது. இவ்வாறிருக்கையிலும் சில மாதங்களுக்கு முன்னர் அந்த அரசாங்கம் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு தீவிர முயற்சியையும் கைவிட்டது.

இந்த வைரஸிற்கான அவரது நிர்வாகத்தின் ஆபத்து உண்டாக்கும் விடையிறுப்பைக் குறித்து வினவியபோது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவிர்க்க முடியாதவாறு பரிசோதனையில் ஏற்பட்டுள்ள முறிவையும், நோய் மற்றும் மரணம் குறித்த கொடூரமான புள்ளிவிபரங்களையும் அலட்சியப்படுத்தி விட்டு, அதற்கு பதிலாக ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க நடந்து வரும் நடைமுறைகளை மெச்சிக் கொண்டிருந்தார். இந்த நிலைப்பாட்டுக்குப் பின்னால், “சமூக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்" ஆட்கொலை கொள்கையும், மக்கள் இடைப்பட்ட காலத்திற்கு "இந்த வைரஸூடன் வாழ" பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடுமே குறிப்பிடப்படாத மூலகாரணமாக உள்ளது.

ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான 164 வகை மருந்துகளில் ஒன்றை, பத்து வருட பழமை வாய்ந்த உயிரிதொழில்நுட்ப நிறுவனம் Enter Moderna Inc., ஆராய்ச்சி செய்து வருகிறது. செவ்வாய்கிழமை, பைனான்சியல் டைம்ஸ் அறிவிக்கையில், அந்நிறுவனம் தற்போது அதன் மருந்தின் ஒரு டோஸ் அளவுக்கு அமெரிக்க மற்றும் ஏனைய அரசுகளிடம் 25 இல் இருந்து 30 டாலர் வரையில் கட்டணம் வசூலிக்க தற்போது திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டது. அந்த மருந்து தயாரிப்பு பெருநிறுவனத்தின் மனோபாவம் மொடர்னாவின் நிறுவனத் தலைவர் ஸ்டீபன் ஹோக்கால் மிகவும் கொடூரமான முறையில் உச்சரிக்கப்பட்டது. கடந்தாண்டு அண்மித்து 5 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியிருந்த அவர் கடந்த வாரம் காங்கிரஸ் சபை விளக்கமளிப்பு அமர்வில் பேசுகையில், “நாங்கள் அதை பணத்திற்கு விற்க மாட்டோம்,” என்றிருந்தார்.

தனது தடுப்பூசியின் ஒரு டோஸ் அளவுக்கு அமெரிக்க அரசுடன் 19.50 டாலர் உடன்படிக்கை செய்துள்ள Pfizer நிறுவனம், மற்றும் தனது தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்ததும் ஒரு டோஸ் அளவுக்கு 3 இல் இருந்து 4 டாலர் என நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியுடன் உடன்படிக்கை செய்துள்ள AstraZeneca நிறுவனம் போன்ற தடுப்பூசி குதிரைப்பேர ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிட்டாலும் கூட மொடர்னாவின் விலைப்புள்ளி அதிகமாக உள்ளது.

மொடர்னா நிறுவனத்தின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் Moncef Slaoui தலைமையிலான, தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்புக்கான அரசு மற்றும் தனியார் கூட்டுப்பங்காண்மை செயல்திட்டமான ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆப்ரேஷசன் Warp Speed திட்டத்திலிருந்து ஏற்கனவே மொடர்னா 955 மில்லியன் டாலர் பெற்றுள்ளதுடன், தேசிய மருத்துவ ஆணையத்துடனான அதன் பங்காண்மை மூலமாக தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுள்ளது. இதன் மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதும், அமெரிக்காவில் மட்டும் மொடர்னா நிறுவனம் 16.5 இல் இருந்து 19.8 பில்லியன் டாலர் வரையில் வருவாய் அறுவடை செய்ய தயாராக நிற்கிறது.

இது, மருத்துவக் கவனிப்பு போன்ற அத்தியாவசிய தொழில்துறைகளின் முதலாளித்துவ தனியுடைமையும் இலாபத்திற்கான உற்பத்தியும் எவ்வாறு உயிர்காக்கும் தடுப்பூசிக்கான ஆராய்ச்சியை பணம் சம்பாதிக்கும் மோசடிக்குள் திருப்புகிறது என்பதற்கு ஒரு நாசகரமான எடுத்துக்காட்டாகும்.

மொடர்னா விதிவிலக்கானதல்ல. அது நடைமுறை விதியை எடுத்துக்காட்டுகிறது. AstraZeneca நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பதில் வெற்றி பெற்றால் அதற்கு 1.2 பில்லியன் டாலர் வழங்கப்படும், Pfizer இன் தடுப்பூசிக்கு உரிமம் கிடைத்துவிட்டால் அதன் 100 மில்லியன் டோஸ் அளவை 2 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்க ட்ரம்ப் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு மருந்து நிறுவனமான Novavax இன் கொரொனா வைரஸ் தடுப்பூசி மருத்துவப் பரிசோதனையில் வெற்றியடைந்ததும் அது 1.6 பில்லியன் டாலர் வெகுமதியைப் பெறும்.

எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அரசின் கையளிப்புகள் தடுப்பூசி தயாரிக்காத நிறுவனங்களுக்கும் செல்கின்றன. பொது மருந்துகள் தயாரிப்புக்கான (generic pharmaceuticals) அமெரிக்க சர்வதேச நிதி அபிவிருத்தி பெருநிறுவனம் மூலமாக Eastman Kodak நிறுவனம் 765 மில்லியன் டாலர் கடன் பெறும் என்று இந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிதி கையளிப்பு கோவிட்-19 ஐ எதிர்த்து போராடுவதற்கான மருந்துகளை உருவாக்க உதவுமென ட்ரம்ப் நிர்வாகம் வாதிடுகிறது, ஆனால் Kodak நிறுவனம் அடுத்த 5 இல் இருந்து 8 ஆண்டுகளில் மட்டுமே அதன் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் அடையாள ஆட்சேபனைகளை மட்டுமே உயர்த்தி உள்ளனர். Barron க்கு அளித்த ஓர் அறிக்கையில் பிரதிநிதி Jan Schakowsky, “வரி செலுத்துபவர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் சிகிச்சைகளுக்கும் நியாயமான விலை நிர்ணயிக்க" அழைப்புவிடுத்தார். ஆபரேசன் Warp Speed க்கு ஒதுக்கப்பட்ட வரவு-செலவு திட்டக்கணக்கு, 10 பில்லியன் டாலர், பரிசோதனை மற்றும் நோய்தொற்று ஏற்படுத்துபவர்களை தடமறிவதற்கான அதிகரித்த செலவுகளிலேயே கணிசமானளவுக்கு தீர்ந்து போய்விட்டதாக, பெரும்பாலான கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சம்பளமின்றி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட சுமார் 25 மில்லியன் தொழிலாளர்கள் வாரத்திற்கு 600 டாலர் கூடுதல் வேலைவாய்ப்பின்மை நிதியுதவியை இழந்து வருகிறார்கள், நூறாயிரக் கணக்கான சிறு வணிகங்கள் திவாலாகி வருகின்றன, மாநில மற்றும் உள்ளாட்சி வரவு-செலவுத் திட்டக்கணக்கின் ஓட்டைகளை அடைக்க அங்கே "பணமில்லை" என்று கூறப்படுகிறது, அதாவது கல்வி, மருத்துவக் கவனிப்பு, பொது போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் இதர பொது சேவைகளில் பாரிய வெட்டுக்கள் நடத்தப்படும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.

முன்பெல்லாம், உயிர் காக்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கு குறிப்பிட்டளவுக்குக் கடமைப்பாடு இருந்தது. ஜோனஸ் சால்க் (Jonas Salk) போலியோவைக் குணப்படுத்தும் மருந்தை தயாரித்த பின்னர், மில்லியன் கணக்கான குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்காக போதுமான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய ஆதாரவளங்கள் திரட்டப்பட்டன, இது நடைமுறையளவில் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருந்து அந்நோயை இல்லாதொழித்தது. இதன் விளைவாக, 1988 இல் இருந்து 2018 வரையில், ஒவ்வொரு ஆண்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 350,000 இல் இருந்து வெறும் 33 ஆக குறைந்தது.

இன்றோ கொரொனா வைரஸ் தடுப்பூசியை வினியோகிக்க அதுபோன்ற செயல்திட்டம் கொண்டு வருவதற்கு அங்கே எந்த திட்டமும் இல்லை. அதற்கு பதிலாக, இந்த தொற்றுநோய் நிதிரீதியில் கொலை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.

மொடர்னாவின் சந்தை மூலதனமயமாக்கல் கடந்த 52 வாரங்களில், 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாக, ஏழு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பெரியளவில் புகழ்ந்து பேசப்பட்ட ஆனால் பெரிதும் பயனற்ற மருந்தான ரெம்டிசிவிர் (remdesivir) உற்பத்தி செய்யும் நிறுவனமான Gilead இப்போது 90 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது.

அதே நேரத்தில், ஒரு தடுப்பூசிக்கான போட்டி அமெரிக்க செல்வந்த தட்டுக்களால் புவிசார் அரசியல் அரங்கில் ஒரு குண்டாந்தடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உயிர்களைக் காப்பாற்றுவதற்காக மானியம் வழங்கி வரவில்லை, மாறாக சீனா, ரஷ்யா, ஈரான், வெனிசுவேலா, வட கொரியா மற்றும் கியூபாவுடன் மட்டும் மட்டுப்பட்டு இல்லாமல், உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முனைவுக்கு அது முட்டுக்கட்டையாக பார்க்கும் நாடுகளுக்கு எதிரான ஓர் ஆயுதமாக அதை பயன்படுத்துவதற்காக ஓர் "அமெரிக்க தயாரிப்பை" உருவாக்குவதற்காக மானியங்களை வாரியிறைத்து வருகிறது. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஒரு தடுப்பூசி இதுவரையில் வாஷிங்டனின் ஐரோப்பிய கூட்டாளிகளாக இருந்து வரும் நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றும் சாதனமாகவும் பயன்படுத்தப்படும்.

அமெரிக்காவுக்கு முன்னரே சீனாவோ அல்லது ரஷ்யாவோ கூட ஒரு தடுப்பூசியை அபிவிருத்தி செய்துவிடுமோ என்று அஞ்சி, அமெரிக்க பெருநிறுவன ஊடகங்கள் ஏற்கனவே அமெரிக்க தடுப்பூசி ஆராய்ச்சிகள் ஊடுருவி விட்டதாக அவ்விரு நாடுகள் மீதும் குற்றஞ்சாட்டி பொய்களின் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளன. இது அவற்றின் தடுப்பூசிகளைக் குற்றகரமாக்கவும் குழிபறிக்கவும் நோக்கம் கொண்டிருப்பதுடன், அவற்றை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதன் மீது தடைவிதிப்பதை சாத்தியமானளவுக்கு நியாயப்படுத்தவும் நோக்கம் கொண்டுள்ளது.

ஜூன் மாதம் உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus குறிப்பிட்டவாறு, கொரொனா வைரஸ் தடுப்பூசியைப் பொறுத்த வரையில் “இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே எந்த பிளவும் இருக்கக் கூடாது.”

ஆனால் அதுபோன்ற முறையீடுகள் செவிடர்களின் காதில் விழுவதில்லை. ட்ரம்ப் மற்றும் அவரின் உலகளாவிய சமதரப்புகளால் உமிழப்படும் தேசியவாதம், தனிநபர் மோதல்களின் விளைவல்ல, மாறாக ஒவ்வொரு நாட்டையும் ஆளும் மற்றும் கொள்கைகளைத் தீர்மானிக்கும் முதலாளித்துவச் செல்வந்த தட்டுக்களின் பொருளாதார நலன்களினது விளைவாகும்.

இத்தகைய பொருளாதார வர்க்க நலன்கள், எல்லா நாடுகளின் அறிவையும் ஆதாரவளங்களையும் பயன்படுத்தி, மொத்தத்தில் இலவசமாக கிடைக்கும் ஒரு தடுப்பூசியை அபிவிருத்தி செய்வதற்காக, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த பகுத்தறிவார்ந்த ஒரு முயற்சிக்கான மனிதகுலத்தின் அவசர அவசியத்துடன் சமரசத்திற்கிடமின்றி மோதுகின்றன. தேசிய நலன் அல்லது தனியார் இலாபம் சம்பந்தமான எந்தவொரு கேள்வியும் சமூகரீதியில் அவசியமான இந்த பணிக்காக அடிபணியச் செய்யப்பட வேண்டும்.

இது, எல்லா சமூக பரிசீலனைகளையும் ஒரு சிறிய மற்றும் ஒட்டுத்தனமான பல கோடி மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களை முன்பினும் அதிகமாக செழிப்பாக்குவற்கான ஒரு காலங்கடந்த பேரழிவுகரமான சமூக அமைப்புமுறையான முதலாளித்துவத்தின் கீழ் நடக்க முடியாது.

விஞ்ஞானம் மற்றும் மனித உயிர்களைக் காப்பாற்றுவதுடன் ஒத்து போகும் நலன்களைக் கொண்ட சமூக சக்தி, சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். இந்த சக்தி தான் இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்காக முன்னுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

இதன் அர்த்தம், மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்களையும் ஏனைய ஒவ்வொரு பிரதான தொழில்துறையையும் பறிமுதல் செய்யவும் மற்றும் இந்த ஏகபோகங்களை பொது கட்டுப்பாட்டிலான நிறுவனங்களாக மாற்றவும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணித்திரட்டுவது என்பதாகும். மனிதகுலத்தின் மீது பெருநிறுவன நலன்களின் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு, பொருளாதார வாழ்வு தொழிலாளர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு, ஓர் உண்மையான ஜனநாயக, சோசலிச சமூகம் நிறுவப்பட வேண்டும்.

Loading