முன்னோக்கு

மில்லியனர்களின் காங்கிரஸ் வேலையில்லாதவர்களைக் கொள்ளையடிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அதிகபட்சமாக 30 மில்லியன் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வேலையில்லாதவர்களுக்கான கூட்டாட்சியின் கூடுதல் சலுகைகள் ஜூலை 31 அன்று காலாவதியாகும் நிலையில், அது குறித்து நடவடிக்கை எடுக்க அமெரிக்க காங்கிரஸ் மறுப்பதானது, அமெரிக்காவில் பெருநிறுவன கட்டுப்பாட்டிலுள்ள அரசியல் அமைப்புத்தான் சமூக நலன்களை இயக்குகிறது என்பதை நிரூபிக்கிறது. பொதுவாக மில்லியனர்கள் அதிகளவு அங்கத்துவம் வகிக்கும் காங்கிரசுக்கு, வேலையின்மை சலுகைகள் குறைக்கப்படுவதால் உருவாகும் பெரும் துன்பம் தொழிலாள வர்க்கத்தின் மீது தான் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி சிறிதும் அக்கறை இல்லை.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் வர்க்க காட்டுமிராண்டித்தனமான இந்த நடவடிக்கையின் விளைவை ஏற்கனவே அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். அதாவது, அவர்களுக்கு கிடைத்து வரும் மாநில வேலையின்மை சலுகைகளின் அளவைப் பொறுத்து அவர்களது வாராந்திர வருமானம் 60 முதல் 90 சதவிகிதம் வரை குறைக்கப்படும். ஜூலை 31, வெள்ளிக்கிழமை, அதே நாளில் வெளியேற்றங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சட்ட உரிமையும் காலாவதியாவதால், அண்ணளவாக 20 மில்லியன் குடியிருப்பாளர்கள் தங்களது மாத வாடகையை செலுத்த முடியாத நிலையில் இருப்பார்கள். மேலும், தேசிய அளவில் கோவிட்-19 நோய்தொற்று பரவி வரும் நிலைமைகளின் கீழ், சுகாதார காப்பீட்டிற்கும், மருத்துவ சிகிச்சைக்கும் மட்டுமே அவர்களால் செலவு செய்ய முடியும் என்ற நிலையில், மில்லியன் கணக்கானவர்கள் போதுமான உணவை வாங்க கூட முடியாத நிலையில் இருப்பார்கள்.

கூடுதல் சலுகைகள் மீதான வெட்டுக்கள் என்பது, வாஷிங்டனின் “போக்குவரத்து அடைப்பினால்” ஏற்பட்ட விளைவோ அல்லது பெருநிறுவன ஊடகங்கள் முன்வைப்பது போல, ஜனநாயகக் கட்சியினருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையிலான தேர்தல் ஆண்டு மோதல்களின் எதிர்பாராத விளைவோ அல்ல. இதுவொரு திட்டமிடப்பட்ட கொள்கையாகும்.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் மற்றும் ட்ரம்ப் நிர்வாகம் என அனைவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதற்கும், பாகுபாடு நிறைந்த முரட்டுத்தனத்தைக் காட்டுவதற்கும் ஒரே வர்க்க நலன்களை பாதுகாப்பதுடன், ஒரே இலக்கையும் பின்தொடர்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் அபாயத்தை கூட பொருட்படுத்தாமல், முதலாளித்துவ வர்க்கத்திற்காக இலாபங்களை ஈட்டுவதற்கு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்த வறுமை, பசி மற்றும் வீடற்ற தன்மை ஆகியவற்றை அச்சுறுத்தலாகப் பயன்படுத்த அவர்கள் நோக்கம் கொண்டுள்ளனர்.

சனிக்கிழமை நடைபெற்ற மூன்று மணித்தியாலங்கள் கொண்ட பேச்சுவார்த்தைக்கான அமர்வுக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் தோன்றுகையில், பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) (நிகர மதிப்பு 12 மில்லியன் டாலர்), ஜனநாயகக் கட்சியின் சார்பாக பேசுகையில், மற்றும் கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் (Steven Mnuchin) (நிகர மதிப்பு 300 மில்லியன் டாலர்), ட்ரம்ப் நிர்வாகத்தின் சார்பாக பேசுகையில், வேலையில்லாதவர்களுக்கு வாரத்திற்கு 600 டாலர் வழங்கப்படும் கூடுதல் சலுகை அதன் முந்தைய வடிவத்தில் புதுப்பிக்கப்படாது என்பதை ஒப்புக் கொண்டனர்.

“This Week” என்ற ABC நிகழ்ச்சியில், கூடுதல் சலுகையை முனுச்சின் ஒரேயடியாக தாக்கிப் பேசினார், வேலையில்லாத தொழிலாளர்களுக்கு வாரம்தோறும் வழங்கப்படும் 600 டாலர் கூடுதல் சலுகை “அதிகப்படியானது” என்று மீண்டும் மீண்டும் அவர் விவரித்ததுடன், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்டிருந்த மாநில அடைப்புக்கள் முடிவுக்கு வந்த பின்னர் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும்படி அழைக்கப்பட்ட போது பரந்தளவில் அவர்கள் வேலைக்குத் திரும்ப மறுத்ததற்கு இந்த கொடுப்பனவுகள் வழிவகுத்தன என்று புகார் தெரிவித்தார்.

அவரது பேட்டியாளர் “கூடுதல் 600 டாலர்” உதவி பெறுவது தொழிலாளர்களை வேலை தேடுவதில் ஊக்கமிழக்கச் செய்கிறதா என்று தனது அவநம்பிக்கையை அவர் வெளிப்படுத்திய போது, “சில சந்தர்ப்பங்களில் நாங்கள் வேலைக்கு அதிக பணம் செலுத்துகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - வேலை செய்வதை விட வீட்டில் இருப்பதற்கு. இது முழு பொருளாதாரத்திலும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது”. இது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது” என்று முனுச்சின் பதிலிறுத்தார்.

செனட் குடியரசுக் கட்சியினரின் மற்றும் ஏராளமான பெருநிறுவன வேலை வழங்குநர்களின் கூற்றுக்களுக்கு குரல் கொடுத்து வந்த முன்னாள் ஹோலிவுட் நிதியாளரது தனிப்பட்ட சொத்து மதிப்பானது ஒரு வருடத்திற்கு 10,000 தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகையை வழங்குவதற்கான செலவை ஈடுசெய்யும். ஆனால் அவர்களோ, வாரத்திற்கு 600 டாலர் வழங்கும் கூட்டாட்சி சலுகையினால் தொழிலாளர்களை குறைந்த ஊதியம் வழங்கக்கூடிய துரித உணவு, சில்லறை விற்பனை மற்றும் மலிவு உழைப்பு விற்பனையகங்களுக்கு மீண்டும் வேலைக்குத் திரும்பத் தூண்டுவது கடினம் என்று வாதிட்டனர்.

அதே நிகழ்ச்சியில் பேசுகையில், பெலோசி, வேலையற்றவர்களுக்கு தனது அனுதாபத்தைக் காட்ட முயற்சித்தார், மேலும், தவறான பெயரிடப்பட்ட, கூலி வருவாய் பாதுகாப்புத் திட்டத்தின் (Paycheck Protection Program) கீழ் வழங்கப்படும் கூட்டாட்சி கொடுப்பனவுகளின் பேரில் மில்லியன் கணக்கான டாலர்களை வாரிக் கொண்ட தொழிலதிபர்களை காட்டிலும் வேலையற்ற தொழிலாளர்களே பெரியளவில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றனர் என்று விமர்சித்தார்.

என்றாலும், சபையில் இரண்டாம் நிலை ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மைத் தலைவர் ஸ்டெனி ஹோயர் (Steny Hoyer) கடந்த வாரம், கூடுதல் சலுகை பேச்சுவார்த்தைக்குட்பட்டது என்றும், வாராந்திர சலுகை தொகையை குறைப்பதற்கு குடியரசுக் கட்சி கோருவது “ஒப்பந்தத்தை முறிப்பதற்கான” வழியல்ல என்றும் ஆலோசனை வழங்கியதை பெலோசி ஏற்றுக்கொண்டார்.

நியூயோர்க்கிலிருந்து வந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் சிறுபான்மைத் தலைவர் சார்லஸ் ஷூமர் (Charles Schumer) முன்மொழிந்தபடி கொடுப்பனவுகளின் அளவுகளை குறைத்துக் கொண்டே வருவதற்கு பெலோசி பரிந்துரைத்தார், அதாவது இதில் “வேலையின்மை காப்பீட்டை மேம்படுத்தி வழங்கப்படுவதான இந்த தொகையின் அளவு வேலையின்மை விகிதத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். அதாவது, அந்த தொகை குறையும் போது, 600 டாலருக்கு உட்பட்டு ஏதோவொரு குறைவான தொகையை வழங்க நீங்கள் பரிசீலிக்கலாம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல் (Mitch McConnell) (நிகர மதிப்பு 22.5 மில்லியன் டாலர்) தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கான சரியான காலக்கெடுவாக ஆகஸ்ட் 7 திகதியை நிர்ணயித்தார், செனட் அதன் ஆகஸ்ட் இடைக்கால ஓய்விற்குப் பின்னர் இந்த நாளில் தான் தொடங்கும். பெரும்பாலான அமெரிக்க தொழிலாளர்களை காட்டிலும் மிகஅதிக சம்பளத்துடன் கூடிய ஒரு மாத கால விடுமுறை இடைவெளிக்குப் பின்னர் பாராளுமன்ற சபையும், செனட்டும் சிறப்பாக தொடங்கலாம், ஆனால் வேலையற்றவர்களுக்கான சலுகைகளை கடுமையாக குறைப்பதை தடுக்கவோ அல்லது அவற்றை மீட்டெடுக்கவோ அவை தவறிவிட்டன.

கூட்டாட்சியின் கூடுதல் சலுகைகள் காலாவதியான அதே நாளில், பிரதிநிதிகள் சபை, கட்சி வாக்கெடுப்பின் மூலம், பாதுகாப்புத் துறை, அத்துடன் தொழிலாளர் துறை, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, கல்வித்துறை, நீதித்துறை, போக்குவரத்துத் துறை, எரிசக்தித் துறை மற்றும் பல ஏனைய முகமைகளுக்கும் நிதி வழங்க வகைசெய்யும் 1.3 டிரில்லியன் டாலர் மசோதாவை நிறைவேற்றியது.

அந்த மசோதாவின் 750 பில்லியன் டாலருக்கு நெருக்கமான இராணுவ கூறு, 40 வாரங்களுக்கு மேலாக கூடுதல் வேலையின்மை நலனுக்கு நிதியளிப்பதை சாத்தியமாக்கியிருக்கும்.. இது, வெளிநாட்டு அவசர நடவடிக்கைகள் (Overseas Contingency Operations), ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள், அத்துடன் மிகவும் பரந்த பகுதிகள் எங்கும் நடத்தப்படும் ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கான செலவுகளை ஈடுசெய்ய பென்டகன் பயன்படுத்தும் ஊழல் நிதியான 70 பில்லியன் டாலரை – இது நான்கு வாரத்திற்கான கூடுதல் சலுகைத் தொகைக்கு ஈடானது - உள்ளடக்கியது.

34 பில்லியன் டாலர் மதிப்புள்ள F-35 போர் ஜெட் விமானம் கொண்ட ஒற்றை ஆயுத அமைப்பிற்காக மிக சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா இரண்டு வார கால கூடுதல் சலுகை தொகையை வழங்க பயன்படும். ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கட்டுமானத்துறைக்காக 18 பில்லியன் டாலர் மதிப்புள்ள Gerald R. Ford-class என்ற விமானந்தாங்கிக் கப்பல் (ஐந்து கப்பல்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது, மேலும் மொத்தம் 10 வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது) வாங்கப்பட்டுள்ளது, இது 30 மில்லியன் அமெரிக்க குடும்பங்களை பாதுகாக்க ஒரு வார கால கூடுதல் வேலையின்மை சலுகையை வழங்குவதற்கு சமமானது.

மேலும் பல ஒப்பீடுகளையும் செய்ய முடியும். ஜெனரல் மோட்டார்ஸ் (GM) தலைமை நிறைவேற்று அதிகாரி மேரி பார்ரா (Mary Barra) கடந்த ஆண்டு 21 மில்லியன் டாலர், அல்லது வாரத்திற்கு 420,000 டாலர்களை சம்பாதித்தார், இது 700 வேலையற்ற தொழிலாளர்களுக்கு வேலையின்மை சலுகைகளை வழங்குவதற்கு போதுமான நிதியாகும்.

அமசன் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) என்ற ஒரு தனிநபரின் தனிப்பட்ட செல்வத்தில் மார்ச் முதல் அதிகரிப்பு 74 பில்லியன் டாலர் ஆகும், இது நான்கு வாரங்களுக்கு கூடுதல் நன்மைகளை ஈடுகட்ட போதுமானது. டெஸ்லா தலைமை நிறைவேற்று அதிகாரி எலோன் மஸ்க் இதே காலகட்டத்தில் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சம்பாதித்தார். அவர் இன்னும் மூன்று வாரங்களுக்கு சலுகைகளை வழங்க முடியும். அமெரிக்க பில்லியனர்கள் ஒட்டுமொத்தமாக கடந்த நான்கு மாதங்களில் 565 பில்லியன் டாலர்களை சம்பாதித்தனர், இது 2021 மார்ச் வரை நீட்டிக்கப்பட்ட சலுகைகளுக்கு நிதியளிக்க போதுமானது.

மார்ச் மாத இறுதியில் CARES சட்டம் இயற்றப்பட்ட நான்கு மாதங்கள் உலகளாவிய முதலாளித்துவத்தின் வரலாற்றில் மிகவும் இலாபகரமான நேரமாக இருந்த பில்லியனர் தரத்திற்குக் கீழே உள்ள வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர் வகுப்பின் எஞ்சிய பகுதிகளையும் இது விட்டுவிடுகிறது.

செனட்டர் மெக்கானெல், 15 முதல் 20 உறுப்பினர்கள் கொண்ட அவரது குடியரசுக் கட்சி கூட்டத்தினர் கூடுதல் சலுகைகள் குறித்த எந்தவொரு நீட்டிப்பையும் எதிர்ப்பதாக கூறி, கொரொனோ வைரஸ் நோய்தொற்று அமெரிக்க பொருளாதாரங்களை தற்காலிகமாக மூடுவதற்கு கட்டாயப்படுத்தியதிலிருந்து மேற்கொள்ளப்பட்டதான மாபெரும் கூட்டாட்சி கடன்கள் குறித்து அவர்களில் கடும் எதிர்ப்பாளர்கள் பலரும் புலம்புவதை மேற்கோள்காட்டினார்.

எவ்வாறாயினும், மேலே குறிப்பிடப்பட்ட புள்ளிவிபரங்கள், கொடிய நோய்தொற்றுக்கான மைய புள்ளிகளாக விரைந்து மாறக்கூடிய பணியிடங்களுக்கு தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பாமல் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளை வழங்க போதுமான “நிதி இல்லை” என்ற கூற்றுக்களின் பொய்யான தன்மையை நிரூபிக்கின்றன.

தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட வளங்கள் ஏராளமாக உள்ளன. இந்த வளங்களை முதலாளிகளிடமிருந்து பறிமுதல் செய்து, அவற்றை நவீன சமுதாயத்தில் பாட்டாளி வர்க்கத்தின், முதன்மை உற்பத்தி வர்க்கத்தின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கு பயன்படுத்துவதை காட்டிலும் வேறு எந்தவிதமான பொருத்தமான தன்மையும் இருக்க முடியாது.

அத்தகைய முன்னோக்கிற்காக போராட, தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு பெருவணிக கட்சிகளிடமிருந்து முறித்துக் கொண்டு, தமது அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்ட வேண்டும். அதாவது, இலாப நோக்கு அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க நோக்கம் கொண்டதான புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் தனது சொந்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும். இதன் அர்த்தம், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து கட்டமைப்பதாகும்.

Loading