பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

லெபனானின் பெய்ரூட்டில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர், இது நகரின் துறைமுக மாவட்டத்தை தரைமட்டமாக்கியது மற்றும் ஆறு மைல் தொலைவில் உள்ள கட்டிடங்களையும் சேதப்படுத்தியது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மற்றும் செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட ஏராளமான ஸ்மார்ட்போன் வீடியோக்கள் ஒரு துறைமுகக் கிடங்கில் ஒரு பெரிய நெருப்பைக் காட்டுகின்றன. பெய்ரூட்டுக்கு மேலே உள்ள நீல வானத்தில் புகைபோக்கி போன்ற வெள்ளை நெடுவரிசை நீள்கிறது, அதைத் தொடர்ந்து ஒரு பயங்கரமான குண்டு வெடிப்பும், ஒரு மாபெரும் காளான் போன்ற மேகத்தையும் அதன் பாதையில் உள்ள அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அதிர்ச்சி அலையையும் வெளிப்படுத்துகிறது.

அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜேர்மனியின் புவி அறிவியல் மையமான GFZ இன் படி, குண்டுவெடிப்பு 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் சக்தியுடன் தாக்கியது, “இது மத்தியதரைக் கடலில் 200 கிலோமீட்டர் (180 மைல்) க்கும் அதிகமான தூரத்திலுள்ள சைப்ரஸில் கேட்டு உணரப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கிறது.

வீதி மட்டத்தில் பெய்ரூட்டில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த தருணத்தைக் காட்டும் டுவிட்டரில் பகிரப்பட்ட ஸ்மார்ட்போன் வீடியோவின் ஒரு காட்சி

மற்ற அறிக்கைகள் அவசரகால மருத்துவ உதவி தேவைப்படும் காயமடைந்தவர்களில் அதிகமானோர் பகுதி மருத்துவமனைகளில் உள்ளனர் மற்றும் அதிகாரிகள் இரத்த தானம் செய்வதற்காக பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்க நேரப்படி இரவு 7:30 மணியளவில் பெய்ரூட்டில் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், லெபனானின் சுகாதார மந்திரி ஹமாத் ஹசான் இன் படி குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாகவும் 4,000 பேர் காயமடைந்ததாகவும் கார்டியன் தெரிவித்துள்ளது.

கார்டியன் அறிக்கை கூறியது: "மிகப்பெரிய வெடிப்பிலிருந்து இறுதி இறப்பு எண்ணிக்கை, பெய்ரூட்டால் உடனடியாக வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களை விட கணிசமாக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெபனான் செஞ்சிலுவை சங்க அதிகாரி Georges Kettaneh, சேதமடைந்த கட்டிடங்கள் வழியாக மீட்புக் குழுக்கள் ஒன்றிணையும்போது அதிகமான இறப்புகள் எதிர்பார்க்கப்படும்” என்றார்.

குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்றாலும், லெபனான் பொதுப் பாதுகாப்புத் தலைவரான அப்பாஸ் இப்ராஹிம் செய்தி ஊடகத்திடம், இது ஒரு கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அதி வெடிப்பு தன்மை கொண்ட பொருட்களின் விளைவாக இருக்கலாம் என்று கூறினார்.

லெபனானின் ஜனாதிபதி அலுவலகத்துடன் அடையாளம் காணப்பட்ட ஒரு டுவீட் கணக்கு, பிரதமர் ஹசான் தயப்பை மேற்கோள் காட்டுகிறது, "குடிமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் 2,750 டன் என மதிப்பிடப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் ஆறு ஆண்டுகளாக ஒரு கிடங்கில் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது".

உர உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் ஒரு சக்திவாய்ந்த வெடிபொருள் ஆகும். ஒப்பிடுகையில், 1995 இல் Alfred P. Murrah பெடரல் கட்டிடத்தில் 168 பேரைக் கொன்ற கொடிய வெடிப்பை வெடிக்கவைக்க ஓக்லஹோமா நகர குண்டுவெடிப்பாளர்கள் 2 டன் அம்மோனியம் நைட்ரேட்டைப் பயன்படுத்தினர்.

பிபிசி அறிக்கை ஒன்று, "பிரதமர் ஹசான் தயப் இதை ஒரு பேரழிவு என்று அழைத்தார், மேலும் பொறுப்பானவர்கள் கணக்கு சொல்ல வைக்கப்பட வேண்டும் என்றார். 2014 முதல் அங்கு இருந்த ஒரு ‘ஆபத்தான கிடங்கு’ பற்றி அவர் பேசினார், ஆனால் அவர் விசாரணையை முன்கூட்டியே செய்ய மாட்டார் என்று கூறினார்" என தெரிவிக்கிறது.

ஒரு பட்டாசு கிடங்கு தீப்பிடித்தது என்றும், "தீ அருகிலுள்ள கட்டிடத்திற்கு பரவியது போல் தோன்றியது, பின்னர் மிகப் பெரிய வெடிப்பைத் தூண்டியது …" என உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது.

அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை தொடர்ந்தது: “இஸ்ரேலின் உயர்மட்ட வெடிகுண்டு நிபுணர்களில் ஒருவரான Boaz Hayoun, பட்டாசு, பெரிய குண்டுவெடிப்புக்கு ஒரு காரணியாக இருந்திருக்கலாம் என்றார். 'பெரிய வெடிப்புக்கு முன் ... நெருப்பின் மையத்தில், நீங்கள் தீப்பொறிகளைக் காணலாம், நீங்கள் பாப்கார்ன் போன்ற ஒலிகளைக் கேட்கலாம், நீங்கள் விசில் கேட்கலாம்' என வெடிபொருள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் சான்றிதழ் பிரச்சினைகள் குறித்து இஸ்ரேலிய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றும் Tamar குழுமத்தின் உரிமையாளர் Hayoun கூறினார்”.

ஜோர்ஜ் கார்டியாகோஸ் / பேஸ்புக் வீடியோவில் இருந்து

ட்ரம்ப் நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ தெரிவித்தார். "பெய்ரூட்டில் உள்ள எங்கள் குழு, ஒரு நகரத்திற்கும், நான் விரும்பும் ஒரு மக்களுக்கும் ஏற்பட்ட பரந்த சேதத்தை எனக்குத் தெரிவித்துள்ளது, இது ஏற்கனவே ஆழ்ந்த நெருக்கடியின் வேளையில் கூடுதல் சவாலாக உள்ளது" என்று பொம்பியோ ஒரு எழுத்துபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொம்பியோவின் குறிப்பு, லெபனானை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆழமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியைப் பற்றியது —சரிந்து வரும் நாணயம், பணவீக்கம் உயர்வு மற்றும் வறுமையை விரிவுபடுத்துதல் உட்பட— குறுங்குழுவாத மோதலின் தீவிரத்தோடு, இவை அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை மாலை வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பின் போது லெபனானில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெடிப்பு “ஒரு பயங்கரமான தாக்குதல் போல் தெரிகிறது” என்று கூறினார். ட்ரம்ப் மேலும் கூறியதாவது: “நான் எங்களின் சில பெருமைமிக்க தளபதிகளைச் சந்தித்தேன், அது ஒரு வகையான உற்பத்தி வெடிப்பு வகை நிகழ்வு அல்ல என்று அவர்கள் உணர்கிறார்கள். இது, அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் என்னை விட நன்கு அறிவார்கள், ஆனால் அவர்கள் அதை ஒரு தாக்குதல் என்று நினைக்கிறார்கள். இது ஒருவித வகையான குண்டு”.

ட்ரம்ப், லெபனான் அதிகாரிகளின் நிலைப்பாட்டிற்கு முரணான தனது அறிக்கைக்கு மேலதிக ஆதாரங்களையோ விளக்கத்தையோ வழங்கவில்லை.

Loading