தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றி தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதற்கான சூழ்நிலையை அமைக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று கணிசமான பெரும்பான்மையுடன் அடுத்த அரசாங்கத்தை அமைக்க உள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கட்சி 145 ஆசணங்களைப் பெற்று, 54 பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகரித்துக்கொண்டுள்ளது.

வலதுசாரி பழமைவாத ஐக்கிய தேசியக் கட்சியில் (ஐ.தே.க.) இருந்து பிரிந்து சென்று இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்தாபிக்கப்பட்ட எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), 47 ஆசணங்கள வென்றது. முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. 58 ஆசணங்களையும் இழந்தது. அதற்கு அடுத்த பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கூட கிடையாது.

பல கல்விமான்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவோடு, சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஸ்தாபித்துக்கொண்ட ஒரு புதிய அமைப்பான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) இரண்டு ஆசணங்களை மட்டுமே வென்றது. ஜே.வி.பி. முதல் பாராளுமன்றத்தில் அதற்கு இருந்தவற்றில் நான்கு ஆசணங்களை இழந்துவிட்டது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கை தளமாகக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, முந்தைய பாராளுமன்றத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இம்முறை பத்து ஆசணங்களை மட்டுமே வென்றது.

கோடாபய ராஜபக்ஷ [Credit: AP Photo]

தேர்தல் ஆணையத்தின் ஆரம்ப மதிப்பீடுகளின்படி, 71 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். இது 10 மாதங்களுக்கு முன்பு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையில் 12 சதவீத வீழ்ச்சியாகும் மற்றும் 2015 ஆகஸ்ட்டில் நடந்த பொதுத் தேர்தலை விட 6 சதவீத வீழ்ச்சியாகும்.

புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்ட ஜனாதிபதி இராஜபக்ஷ, அவர் 70 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும், இது கொரோனா வைரஸ் தொற்றுநோயை அரசாங்கம் கையாண்டமை சம்பந்தமான "நம்பிக்கையின் வெளிப்பாடு" என்று பொய்யாகக் கூறிக்கொண்டார்.

எவ்வாறாயினும், வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சி, இராஜபக்ஷவின் பெருகிவரும் சர்வாதிகார வழிமுறைகளுக்கு எதிராகவும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள் மீதான பெரும் வணிகர்களின் தாக்குதலுக்கு அவர் ஆதரவு கொடுப்பதற்கும் எதிரான விரோதத்தை குறிக்கிறது. அவரது அரசாங்கம் வெகுஜன சோதனைகளை மேற்கொள்ள மறுத்துவருவதால், இலங்கையில் கொவிட்-19 நோய்த்தொற்று விகிதம் குறைவாக இருப்பதாக ராஜபக்ஷவால் கூறிக்கொள்ள முடிகின்றது.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தேர்தலின் போது மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மைக்காக பிரச்சாரம் செய்தது. அப்போது அதனால் அரசியலமைப்பை திருத்தி எழுதிய ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் மீதான தற்போதைய அனைத்து கட்டுப்பாடுகளையும் அகற்றிக்கொள்ள முடியும். கட்சியின் பகட்டான தேர்தல் பிரச்சாரத்திற்கு சுமார் 1,202 மில்லியன் ரூபாய் (6.5 மில்லியன் டொலர்) செலவாகியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மற்ற முதலாளித்துவ கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்காக செலவிட்டதை விட மிக அதிகமாகும்.

ஜனாதிபதி ராஜபக்ஷ, உத்தியோகபூர்வ தொற்றுநோய் தடுப்பு சுகாதார விதிமுறைகளை மீறி மக்களை அணிதிரட்டி, டசின் கணக்கான கூட்டங்களில் உரையாற்றினார். தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கூற்றுப்படி, ராஜபக்ஷ பங்கேற்ற ஒவ்வொரு கூட்டமும், அரசுக்கு 27 மில்லியன் ரூபாய் செலவு வைத்துள்ளது.

புதன்கிழமை வாக்களித்த பின்னர், ஜனாதிபதியின் சகோதரர் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ ஊடகங்களுக்கு பேசும் போது, தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பெறத் தவறினால், அது தேவையான உறுப்பினர்களைப் பெறுவதற்கான "ஏற்பாடுகளை" செய்யும் என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை கொள்வனவு செய்வதாகும்.

இலங்கை ஜனாதிபதியும் அவரது சகோதரரும் இராணுவ உயர்மட்டத்தினரும் சேர்ந்து ஒரு சர்வாதிகாரத்தை விரும்புகிறார்கள். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு அரசாங்கத்தையும் போலவே, ஜனாதிபதி இராஜபக்ஷவும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் துரிதப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்கள் மீது சுமத்துவதில் உறுதியாக இருக்கிறார். இது தீவிர வர்க்கப் போராட்டங்கள் மற்றும் புரட்சிகர எழுச்சிகளின் வெடிப்புக்கு களம் அமைக்கும்.

தேர்தலுக்கு முன்னதாக, சமூக பதட்டங்களைத் திசைதிருப்பவும், சிங்கள வாக்காளர்களை துருவப்படுத்தவும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தனது முஸ்லிம்-விரோத மற்றும் தமிழர்-விரோத பேரினவாதத்தை முடுக்கிவிட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவுடைய இஸ்லாமிய பயங்கரவாதக் குழு கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்திய குண்டுவெடிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணையின் முடிவுகளை அது முஸ்லிம்-விரோத பிரச்சார அலைகளை கட்டவிழ்த்து விட பயன்படுத்திக்கொண்டது.

அதே நேரம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி வருவதாகவும் அது வலியுறுத்தியது. ஆதாரமற்ற இந்த கூற்றுகளுக்கு, வடக்கில் பல இடங்களில் ஆயுதங்களைக் கண்டுபிடித்ததாகக் கூறி, பொலிஸ் இந்த பிரச்சாரத்திற்கு எண்ணெய் வார்த்தது.

கடந்த ஆறு மாதங்களில், ஐ.ம.ச., ஐ.தே.க. ஜே.வி.பி, தமிழ் கூட்டமைப்பு, முஸ்லீம் கட்சிகள் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. சிறுபான்மை நிர்வாகத்திற்கு பகிரங்கமாக ஆதரவளித்துள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அப்போதைய ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. சிறுபான்மை நிர்வாகம் கூட்டிய இரண்டு அனைத்து கட்சி கூட்டங்களில் இந்த கட்சிகள் கலந்து கொண்டதோடு, "தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான" ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஆதரித்தன.

ஏப்ரல் 27 அன்று, அதே அமைப்புகள் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டினால் ஜனாதிபதிக்கு "நிபந்தனையற்ற ஆதரவை" அளிப்பதாக உறுதியளித்தன. ஐ.ம.ச. மற்றும் ஐ.தே.க. தனித்தனியாக இரண்டு முறை அவரைச் சந்தித்த அதே வேளை, தமிழ் கூட்டமைப்பு தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து அதன் ஆதரவை உறுதிப்படுத்தியது.

மே 4 அன்று, ஐ.தே.க. தலைவர் ரனில் விக்கிரமசிங்க, தனது கட்சி "அரசாங்கத்திற்கு உதவ தயாராக உள்ளது" என்றும், இது "விரோத அரசியலை விளையாடுவதற்கான நேரம் அல்ல" என்றும் டெய்லி மிரர் பத்திரிகைக்கு கூறியிருந்தார்.

இந்த கட்சிகள் எதுவும் இலங்கையின் அரசாங்க நிர்வாகம் விரைவான மற்றும் தொடர்ச்சியான இராணுவமயமாக்கலை சவால் செய்யவில்லை. அவை அனைத்தும் அரசாங்கம் பாதுகாப்பின்றி “பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கும்” மற்றும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான பாரிய தாக்குதல்களுக்கும் ஆதரவளிக்கின்றன. ராஜபக்ஷவைப் போலவே, இந்த கட்சிகளும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தங்கள் வெடிக்கும் என்று அஞ்சுகின்றன.

தொழிலாள வர்க்கம் அரசாங்கத்திற்கு சவால் விடுவதைத் தடுப்பதில் போலி-இடதுகள் முக்கிய பங்கு வகித்தன. முன்னாள் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களை நவ சம சமாஜ கட்சி (ந.ச.ச.க.), முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) மற்றும் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியும் தடம்புறளச் செய்தன. இது கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரே எதிர்க் கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்வதற்கு கோட்டாபய இராஜபக்ஷவுக்கு வாய்ப்பளித்தது.

ந.ச.ச.க. தலைவர் விக்ரமபாஹு கருணாரத்ன, இந்த மாத தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டார். "வேறுபாடுகள்" இருந்தபோதிலும், தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக கூறி பிரதமருக்கு மு.சோ.க. இரண்டு முறை கடிதம் எழுதியது.

மு.சோ.க. தொழிற்சங்கத் தலைவர் துமிந்த நாகமுவ, இலங்கை தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்த பின்னர், தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக அமைச்சர் உறுதியளித்ததாகக் கூறினார். யு.எஸ்.பி மற்றும் அதன் தொழிற்சங்கங்களும் குணவர்தனவையும் பெருவணிகத் தலைவர்களையும் சந்தித்து, அவர்களின் ஊதியம் மற்றும் வேலை குறைப்புத் திட்டங்களுக்கு ஆதரவளித்து, தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடிப்பதைத் தடுத்தன.

இந்த துரோகங்களை சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ராஜபக்ஷவின் புதிய அரசாங்கம், இப்போது வர்க்கப் போருக்கு தயாராகி வருகிறது.

புதன்கிழமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ "நாங்கள் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இவற்றை விட கடுமையான சவால்களை நாங்கள் ஏற்கனவே எதிர்கொண்டிருக்கின்றோம்,” என அச்சுறுத்தலாக அறிவித்தார்.

இது, இந்த ஆண்டு எதிர்மறையாக 1.3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் கூர்மையான வீழ்ச்சியை சுட்டிக் காட்டுவதாகும். கொவிட்-19 தொற்றுநோய் இலங்கை ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளதுடன் வெளிநாட்டு வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளதோடு சுற்றுலாத்துறை சரிந்துள்ளது. கொழும்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டுக் கடன்களுக்காக 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும்.

முந்தைய அரசாங்கங்கள் "இதை விட கடுமையான சவாலை எதிர்கொண்டன" என்ற ராஜபக்ஷவின் கருத்து, 2009 மே மாதம் முடிவடைந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் இனவாதப் போரைக் குறிக்கிறது.

அந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், அவரது சகோதரர் கோடாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராகவும் இருந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின்படி, போரின் இறுதி வாரங்களில் நாற்பதாயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான சரணடைந்த போராளிகள் "காணாமல் போயினர்". போரின்போதும் அதற்குப் பின்னரும், ராஜபக்ஷ நிர்வாகம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களை ஈவிரக்கமின்றி அடக்கியது.

கடந்த வாரம் ஒரு தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராஜபக்ஷ, ஒரு துறைமுக முனையத்தை இந்திய நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்வதற்கு எதிரான 10,000 கொழும்பு துறைமுக தொழிலாளர்களின் போராட்டத்தை கண்டனம் செய்தார்.

"துறைமுகம் மூடப்பட்டிருப்பது நமது பொருளாதாரத்தை இடித்து விழுத்துவதற்கே தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல. நான் இதை கண்டு பயந்துவிடவில்லை,” என்று அவர் அறிவித்தார். “நாட்டைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு தலைவர் அதிகாரத்திற்கு வரும் போதெல்லாம் தீவிரவாத குழுக்கள் [அவரை] நாசமாக்குவதற்கு வேலை செய்கின்றன," என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு முழுமையான பாராளுமன்ற பெரும்பான்மையும் புதிய சர்வாதிகார நடவடிக்கைகளும் தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்வதற்கு தன்னை அனுமதிக்கும் என்று ராஜபக்ஷ நம்பும் அதே வேளை, வெடிக்கவுள்ள போர்க்குணமிக்க போராட்டங்கள் புரட்சிகர குணாம்சத்தை எடுத்துக் கொள்ளும். இந்த ஊழல் நிறைந்த அரசியல் சமூக ஒழுங்கிற்கும் மற்றும் 30 ஆண்டுகால யுத்தத்தின் போது நடந்தவை உட்பட வேலைகள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் சீற்றம் ஒரு வெடிப்பு நிலையை எட்டுகின்றது.

ஆழமடைந்து வரும் நெருக்கடியையும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவுகளிலிருந்தும் பிரிந்து, புரட்சிகர சவால்களுக்கு தேவையான அரசியல் தயாரிப்புகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் விளக்கிய ஒரே அமைப்பு, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே.

ஏகாதிபத்திய யுத்த அபாயத்துடன் சேர்த்து, தொற்றுநோய் பேரழிவு மற்றும் ஊதியங்கள், வேலை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களையும் எதிர்கொள்ள ஒவ்வொரு வேலைத்தளத்திலும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு சோ.ச.க. தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டமே தொழிலாள வர்க்கத்திற்கான ஒரே வழி என்று சோ.ச.க. தெளிவுபடுத்துகின்றது.

சோ.ச.க. போட்டியிட்ட மூன்று மாவட்டங்களில் மொத்தம் 780 வாக்குகளை வென்றுள்ளது -யாழ்ப்பாணம் 146, கொழும்பு 303 மற்றும் நுவரெலியா 331. இந்த எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், அவை சோசலிசத்திற்கான வர்க்க உணர்வுள்ள வாக்குகளாகும். அவை சோ.ச.க.வுக்கு ஆதரவு பெருகி வருவதற்கான அறிகுறியாகும்.

வரவிருக்கும் காலகட்டத்தில், சோ.ச.க. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகளை சோசலிச சர்வதேசவாதத்திற்கு வென்றெடுப்பதற்கான அதன் அரசியல் போராட்டத்தை தீவிரப்படுத்தும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு இட்டுச்செல்ல ஒரு வெகுஜன கட்சியாக அதை கட்டியெழுப்பும்.

Loading