முன்னோக்கு

அமெரிக்க நிதிய தன்னலக்குழு மரணத்திலிருந்து எவ்வாறு இலாபம் ஈட்டுகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா புதன்கிழமை இரண்டு மைல்கற்களை அமைத்தது. ஒன்று COVID-19 இனால் முதலாவது, மூன்று மாதங்களில் மிக உயர்ந்த அளவான 1,503 பேர் இறந்துள்ளனர், மற்றையது S&P 500 பங்குக்குறியீடு மதிய வேளையில் அதன் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது.

புதன்கிழமை பங்குச்சந்தைகள் மூடப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், 170,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற தொற்றுநோய்க்கு காரணகர்த்தாவான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது தினசரி கொரோனா வைரஸ் “பணிக்குழு” மாநாட்டின் முழுப்பகுதியையும் பங்குச் சந்தையின் எழுச்சியை பற்றி குறிப்பிட அர்ப்பணித்தார். ட்ரம்ப் தனது கருத்துக்களில், அமெரிக்க முதலாளித்துவத்தின் கருவறையான தொற்றுநோய்க்கான வெள்ளை மாளிகையின் பதிலளிக்கும் கோட்பாட்டை கோடிட்டுக் காட்டினார்.

அமெரிக்காவின் தேசிய பொருளாதார குழுவின் இயக்குனர் லோரன்ஸ் குட்லோ தயாரித்த ஒரு தொடர் தகவல் தகடுகளை (slides) சுட்டிக்காட்டிய ட்ரம்ப், பங்குச் சந்தையில் ஏற்பட்ட எழுச்சிக்கு காரணமாக அமெரிக்காவில் பூட்டுதல்களால் ஏற்படும் பொருளாதாரச் சுருக்கம் மற்ற நாடுகளை விடக் குறைவாக இருப்பதால் எனக் குறிப்பிட்டார்.

"பங்குச் சந்தை இன்று மீண்டும் 300 புள்ளிகள் உயர்ந்துள்ளது" என்று ட்ரம்ப் கூறினார். "எங்கள் பொருளாதாரம் ஐரோப்பாவை விட கணிசமாக சிறப்பாக செயல்படுகிறது. இது மக்கள் மிகவும் வலுவாக புரிந்து கொள்ள வேண்டும்; இதனது செயற்பாடு உண்மையில் உலகில் உள்ள எந்த சந்தையையும் விட சிறப்பாக இருக்கிறது.” என்றார்.

மார்ச் முதல் 9 ட்ரில்லியன் டாலர் நிதியச் செல்வம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பங்கு மதிப்புகள் 50 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். "இது முன்னர் யாரும் கேள்விப்படாத ஒரு எண்" என்று அவர் கூறி, புள்ளிவிவரங்களை "நம்பமுடியாததாக" உள்ளது என்று குறிப்பிட்டார்.

அடுத்த தகவல் தகட்டிற்கு நகரும் ட்ரம்ப், “அமெரிக்காவில் வைரஸ் தூண்டப்பட்ட பொருளாதார சுருக்கம் எங்கள் சகாக்கள் மற்றும் சக நாடுகளுடன் இருந்ததை விட மிகக் குறைவானதாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.”

ட்ரம்ப் முன்வைத்த புள்ளிவிவரங்களின்படி, யூரோ பகுதியில் 15 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்காவில் 10.6 சதவீதம் சரிந்தது. ட்ரம்ப் எதனை கருத்தில் எடுக்கவில்லை என்றால், குறைவான பொருளாதார சுருக்கம் இருந்தபோதிலும், அமெரிக்காவில் வேலையின்மை ஐரோப்பாவை விட மிகவும் உயர்ந்தளவிற்கு அதிகரித்தது.

ட்ரம்ப் முன்வைத்த புள்ளிவிவரங்கள் தொற்றுநோயியல் நிபுணர் மைக்கல் ஓஸ்டர்ஹோமின் அவதானிப்புகளுடன் ஒத்துப்போகின்றன. அவர் அமெரிக்கா COVID-19 இன் மையமாக இருக்கிறது என்ற உண்மையை விளக்கினார். ஏனெனில் இந்த நோயை மிகவும் திறம்பட கட்டுப்படுத்திய நாடுகளை விட அமெரிக்கா பூட்டுதல்களை விரைவாக தளர்த்தியது.

ஓஸ்டர்ஹோம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

வெறுமனே, வைரஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவருதற்கு முன்பே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் பூட்டுதல் முயற்சிகளை நாங்கள் [அமெரிக்கா] கைவிட்டோம். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விரிவான பரவல்கள் ஏற்பட்ட இடங்களில் கூட, தொற்றுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்படும் வரை பல நாடுகள் பூட்டுதலை விடவில்லை…

மார்ச் 31 முதல் மே 28 ஆம் தேதி வரை 21,000 தொற்றுக்கள் அல்லது ஒரு நாளைக்கு 100,000 பேருக்கு 6.4 புதிய தொற்றுக்கள் என அமெரிக்கா அதன் மிகக் குறைந்த ஏழு நாள் சராசரியை பதிவு செய்தது. இந்த விகிதம் வெற்றிகரமாக புதிய நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்திய நாடுகளின் விகிதங்களை விட ஏழு முதல் பத்து மடங்கு அதிகமாக இருந்தது.

இதன் விளைவாக, அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தை விட ஐந்து மடங்கு COVID-19 தொற்றுக்களை சந்தித்துள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவதை உறுதி செய்வதற்காக 170,000 க்கும் மேற்பட்டவர்களை வேண்டுமென்றே இறக்க அனுமதிக்கும் கொள்கையை ட்ரம்ப் விவரித்தார். பொது சுகாதார நிபுணர்களின் ஒரு குழு சமீபத்தில் குறிப்பிட்டது போல், “அந்த COVID-19 இறப்புகளில் 99% ஐ நாங்கள் தடுத்திருக்க முடியும். ஆனால் நாங்கள் செய்யவில்லை.”

ட்ரம்பின் புதன்கிழமை கருத்துக்கள் கடந்த வாரம் அவர் அறிவித்தன் ஒரு அச்சமூட்டும் விளக்கத்தை தருகின்றன. ஒவ்வொரு நாளும் 1,000 பேர் இறந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தை எதிர்கொள்கையில் “அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், அது உண்மைதான், அது அவ்வாறே இருக்கின்றது” என்றார்.

உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல, தொற்றுநோய்க்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பு மக்களின் உயிரைப் பாதுகாக்கும் முயற்சியால் உந்தப்படவில்லை, மாறாக அதன் நிதிய தன்னலக்குழுவின் செல்வத்தை பாதுகாத்து விரிவுபடுத்தும் ஒற்றை எண்ணம் கொண்ட நோக்கத்தினால் இயக்கப்படுகிறது. சமூகக் கொள்கையில் தொற்றுநோய் எந்தப் பங்கையும் வகித்த அளவிற்கு, இது வோல் ஸ்ட்ரீட் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்கு 6 ட்ரில்லியன் டாலர்களை மாற்றுவதற்கான ஒரு சாக்குப்போக்காக இருந்தது. இது ஜனநாயகக் கட்சியினராலும் குடியரசுக் கட்சியினரால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த மரணங்களுக்கான ட்ரம்பின் பிரதிபலிப்பை பற்றி சிந்தித்தால், அது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆனால் அவர் ஒருபோதும் அதற்கு உடந்தையானவர்கள் இல்லாமல் இந்த குற்றத்தை செய்திருக்க முடியாது. நாட்டை முன்கூட்டியே மீண்டும் திறப்பதை உற்சாகப்படுத்தும் அதேவேளையில், வெள்ளை மாளிகை மீண்டும் திறப்பதற்கான முடிவை ஆளுநர்களிடம் விட்டுவிட்டது. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒரே மாதிரியாக அவர்கள் அனைவருமே, தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பு தங்கள் மாநிலங்களில் மீண்டும் வணிகங்களைத் தொடங்கினர். மையன், வட கரோலினா, கன்சாஸ் மற்றும் கொலராடோ உள்ளிட்ட பல ஜனநாயக ஆளுநர்கள் அதிகாரித்தில் உள்ளவை உண்மையில் வெள்ளை மாளிகையின் வழிகாட்டலுக்கு இணங்க வணிகங்களை மீண்டும் திறந்து வைத்தனர்.

இப்போது, ஆசிரியர்களை பணிக்கு திரும்பும் பிரச்சாரத்தை ஜனநாயக நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ வழிநடத்துகிறார். கடந்த வாரம் மாநிலத்தின் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படலாம் என்று அறிவித்தார், இது தொற்றுநோயின் ஒரு புதிய எழுச்சிக்கான களத்தை அமைத்தது. ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை, குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதனால் பெற்றோர்கள் மீண்டும் வேலைக்குச் சென்று வோல் ஸ்ட்ரீட்டின் பிணை எடுப்புக்கு பணம் செலுத்துவதற்கான இலாபத்தை ஈட்ட முடியும்.

ட்ரம்ப் அறிவித்த “பொருளாதார வெற்றி” என்பது பணக்காரர்களின் வெற்றி மட்டுமே. அமெரிக்க சமுதாயத்தின் பெரும்பான்மைக்கு, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் ஒரு பேரழிவாக இருந்தன. இறப்பு எண்ணிக்கை விரைவில் 200,000 ஐ நெருங்குகிறது. சுமார் 30 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். கூட்டாட்சி வேலையின்மை சலுகைகள் காலாவதியானதை தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கானோர் வறுமையையும், வீடுகளில் இருந்து வெளியேற்றத்தையும் எதிர்கொள்கின்றனர்.

புளூம்பேர்க்கின் பில்லியனர்கள் பற்றிய குறியீட்டின்படி, அமெரிக்க பணக்கார பத்து பில்லியனர்களில் ஒன்பது பேர் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது செல்வந்தர்களாக உள்ளனர். இந்த பத்து பேர்கள் மொத்தமாக கடந்த ஆண்டில் 200 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளனர். அவர்களின் ஒருங்கிணைந்த செல்வம் 906 பில்லியன் டாலர்களை எட்டி, முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த பிரிவில் முன்னணியில் இருந்தவர் ஜெஃப் பெசோஸ் ஆவார். அவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 71 பில்லியன் டாலரில் இருந்து 187 பில்லியன் டாலராகியுள்ளது. மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி பில் கேட்ஸ் 8 பில்லியன் டாலர், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பேர்க் 20 பில்லியன் டாலர் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் 48 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளனர்.

சந்தைகளின் எழுச்சி இறப்புகளின் எழுச்சிக்கு இணையாக உள்ளது. மார்ச் 23 அன்று, பங்குச் சந்தை அதன் குறைந்த நிலையை எட்டிய நாளில், அமெரிக்காவில் COVID-19 இலிருந்து 693 பேர் இறந்தனர். அப்போதிருந்து, கிட்டத்தட்ட 170,000 பேர் இறந்துள்ளனர்.

தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் சமீபத்திய மாதங்களின் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி வருவது தொடர்பாக படிப்பினைகளை எடுக்க வேண்டியது அவசியம். அடுத்த மாதத்தில், மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். இது தொற்றுநோயின் பாரிய எழுச்சியைத் தூண்டி, இது ஆண்டு இறுதிக்குள் 300,000 இறப்புகளின் மதிப்பீடுகளை கூட நம்பிக்கையுடன் பார்க்க முடியும்.

பங்கு மதிப்புகள் இதனால் மேலும் உயரும் என்றால் ஆளும் வர்க்கம் இன்னும் நூறாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்க தயாராக உள்ளது. அதனால்தான் இது தொடர்பான விஷயங்களை அவர்களிடம் விட முடியாது.

நாடு முழுவதும், பள்ளிக்கு முன்கூட்டியே திரும்புவதற்கு ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த போராட்டம் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களில் உள்ள தொழிலாளர்கள் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதனால் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தி ஒழிக்கும் வரை அத்தியாவசியமற்ற உற்பத்தி நிறுத்தப்படவும் வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆண்டின் மனித வாழ்வின் கடுமையான இழப்பு முதலாளித்துவத்தின் படுகொலை சாரத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், சோசலிசத்தினால் அதனை அவசர மாற்றீடு செய்வது வாழ்க்கைக்கும் இறப்புக்குமான விஷயம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

Loading