யார் இந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் கமலா ஹரீஸ்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முதல்முறையாக செனட்டர் பதவிக்கு வந்திருந்தவரும் கலிபோர்னியாவின் முன்னாள் அரசு அட்டார்னி ஜெனரலுமான கமலா ஹரீஸை அவருடன் இணைந்து போட்டியிடும் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜோசப் பைடென் தேர்ந்தெடுத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்பதுடன், 2020 ஜனாதிபதி தேர்தல்களுக்கான ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் வலதுசாரி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளுடன் அது சரியாக பொருந்தி வருகிறது.

அப்போதைய கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹரிஸ், யு.எஸ்-மெக்ஸிகோ எல்லை வேலியில் 2011 ஆம் ஆண்டில் யு.எஸ். எல்லை ரோந்து முகவர்களுடன் ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார் (Photo: Office of the Attorney General of California)

இந்தாண்டு ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவதற்கான அவரது முயற்சியில் வெளிப்பட்டதைப் போலவே, ஜமேக்கா தந்தைக்கும் தமிழ்நாட்டின் அன்னைக்கும் பிறந்த ஹரீஸின் கலப்பு வம்சாவழியே பைடென் அவரைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னாலிருந்த கணக்கீடுகளில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. நவம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நாளுக்கு முன்பாக எஞ்சியுள்ள மூன்று மாதங்களில், ஜனநாயகக் கட்சியினர் தெளிவாக இன மற்றும் பாலின அடையாள அரசியலை இரட்டிப்பாக்கி வருகின்றனர்.

பைடென்-ஹரீஸ் வேட்பாளர்களுக்குப் பின்னால் கருத்தொருமைப்பாட்டைச் சுட்டிக்காட்டும் விதமாக, ஹிலாரி கிளிண்டனும் பேர்ணி சாண்டர்ஸூம் அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அதிவேகமாக ஆமோதித்தனர்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்குப் போட்டியிட்ட முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக அவர் இருந்த போதே உலக சோசலிச வலைத் தளம் ஜூலை 2019 இல் பிரசுரித்த அவரின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசியல் விபரங்களில், அமெரிக்க குற்றகரமான நீதித்துறையின் ஒரு பிரதிநிதியாகவும் பெருநிறுவன மற்றும் உளவுத்துறை அரசு நலன்களுக்கான ஒரு நம்பகமான பாதுகாவலராகவும் அவரின் தொழில்வாழ்வைத் தொகுத்து விளங்கப்படுத்தியது.

***

ஜனநாயகக் கட்சியின் 2020 ஜனாதிபதி வேட்பாளர்களாக இப்போது போட்டியிடும் இரண்டு டஜன் வேட்பாளர்களில் கலிபோர்னியாவின் செனட்டர் கமலா ஹரீஸ், கடந்த ஜனவரியில் அவர் போட்டியிடப் போவதாக அறிவித்ததில் இருந்தே வழமையாக கருத்துக்கணிப்புகளில் அவர் அக்கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடும் ஐந்து முன்னணி போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வந்துள்ளார்.

பெருநிறுவன ஊடகங்களும் ஜனநாயகக் கட்சி ஸ்தாபகமும் இரண்டுமே ஜூன் 26-27 மியாமி விவாதத்தில் அவரின் செயல் திறமையைப் பாராட்டின, அப்போது அவர் செனட்டில் இனப்பாகுபாடு கொண்ட ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செயல்படுவதும் மற்றும் பரப்புவதும் மீதான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடெனின் கருத்துக்களை அவர் தாக்கியிருந்தார். அதற்குப் பின்னர் இருந்து கருத்துக்கணிப்புகளிலும் நிதி திரட்டல்களிலும் முன்னுக்கு நகர்ந்துள்ள அவர், இந்த வாரம் முதல்முறையாக கலிபோர்னியாவின் கருத்துக்கணிப்பு ஒன்றில் முதலிடத்தை எட்டியுள்ளார்.

அவரது நான்கு முக்கிய போட்டியாளர்களில் இருவர் 70 வயதின் மத்தியில் உள்ள வெள்ளையினத்தவர்கள் என்ற நிலையில், ஜனநாயகக் கட்சியோ பாலினம் மற்றும் இன அடையாள அரசியலைத் தழுவ பரிசீலித்து வருவதால், ஜமேக்கா மற்றும் தென்னிந்திய வம்சாவழியின் கலவையாக அவரின் பாலினமும் சேர்ந்து, 54 வயதான ஹரீஸ், இந்த வேட்புமனுவை வெல்ல தவறினாலும் கூட அனேகமாக துணை ஜனாதிபதியாக தேர்வாகக்கூடும்.

ஜனநாயகக் கட்சி களத்தில் எஞ்சியவர்களைப் போலவே, ஹாரீஸூம் ட்ரம்புக்கு எதிரான ஒரு முற்போக்கான மாற்றீடாக காட்டிக் கொள்ள முயன்று வருகிறார், அதேவேளையில், அவர் விசயத்தில், முன்னணியில் உள்ள “மிதமான" போட்டியாளர் பைடெனிடம் இருந்தும், கட்சியின் "இடது" சாரி பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரென் என்கின்ற இரண்டு பிரதான போட்டியாளர்களிடம் இருந்து வேறுபட்டு நிற்க முயன்று வருகிறார். இதை அவர், "தேர்வு செய்யுமாறு கோரும்" பைடெனின் வாதத்துடன், ஒரு முன்னாள் வழக்குரைஞராக அவரால் ட்ரம்பை ஆக்ரோஷமாக சவால் விடுக்க முடியும் என்ற கருத்தையும் சேர்த்து, இரண்டு வழிகளில் முன்னெடுக்க முயன்றுள்ளார்.

ஆளும் வர்க்கத்துடனான அவரின் நற்பெயரைப் பொறுத்த வரையில், குற்றவியல் நீதி மற்றும் தேசிய பாதுகாப்பு விசயங்களில் ஓர் ஈவிரக்கமற்ற செயல்பாட்டாளராக அவரின் முன்வரலாறு தான் ஹரீஸ் வேட்பாளரார் ஆனதன் இதயதானத்தில் உள்ளது. அவர் ஆறாண்டுகளாக சான் பிரான்சிஸ்கோவில் மாவட்ட அரசு தரப்பு வழக்குரைஞராக இருந்தார், பின்னர் 2016 இல் செனட் ஆசனத்தை ஜெயிப்பதற்கு முன்னர், அதே அளவிலான பதவி காலத்திற்குக் கலிபோர்னியா மாநில அரசு தரப்பு தலைமை வழக்குரைஞராக இருந்தார்.

வரவு-செலவு திட்டம், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நீதித்துறை உட்பட குழு வேலை ஒதுக்கீடுகளில் அவர் வகித்த நிறைவான பணிகளில், இப்போதைய நீதியரசர் பிரெட் கவானா (Brett Kavanaugh) உச்ச நீதிமன்ற பதவிக்குப் போட்டியிட்டதன் மீது கேள்வி எழுப்புவதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக அவர் மிகப் பெரியளவில் பிரபலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், செனட் சபையின் ஜனநாயகக் கட்சி தலைவர்கள் ஹரீஸை ஆரம்பத்தில் இருந்தே ஊக்குவித்து வந்தனர்.

2017 இல் உளவுத்துறை கமிட்டிக்கு அவர் நியமிக்கப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது—அதுபோன்றவொரு முக்கிய பதவிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட இருந்த ஒரே ஜனநாயகக் கட்சியாளராக இருந்தார், ஜனநாயகக் கட்சி ஸ்தாபகம் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தைப் பொறுத்த வரையில், அது ஹரீஸ் "பாதுகாப்பான கரங்களில்" இருக்கிறார் என்பதற்கான அறிகுறியாக இருந்தது.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களிலேயே, ஹரீஸ், ட்ரம்ப் அமெரிக்க அரசியலமைப்பை அப்பட்டமாக மீறினார் என்பதற்காகவோ அல்லது புலம்பெயர்ந்தவர்களை அவர் இன்னல்படுத்தினார் என்பதற்காகவோ அல்ல மாறாக அவர் மாஸ்கோவின் ஒரு கையாள் என்ற மெக்கார்த்திச பூசிமொழுகலின் அடிப்படையில் ட்ரம்ப் மீது பதவிநீக்க குற்றவிசாரணை கோரியதன் மூலமாகவும், ரஷ்ய-விரோத மோசடி பிரச்சாரத்தில் முதன்மை நபராக காட்டிக் கொண்டதன் மூலமும் அந்த நம்பிக்கைக்குக் கைமாறு செய்துள்ளார்.

ஜூன் மாத ஆரம்பத்தில் கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் ஹரீஸ் உரையாற்றுகையில், “இந்த முப்படைகளின் தலைமை தளபதி என்பவரைக் குறித்து சற்று பேசுவோம். அமெரிக்க உளவுத்துறை மற்றும் சட்ட அமலாக்க தலைவர்களின் வார்த்தைகளை விட, அவர் கிளிப்பிள்ளையைப் போல ரஷ்யாவின் பொய்களையே பேசிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா குறுக்கீடு செய்ததை அவர் மறுக்கிறார். அவர் மீது பதவிநீக்க குற்றவிசாரணை தொடங்கப்பட வேண்டும், நமக்கு ஒரு புதிய முப்படைகளின் தலைமை தளபதி அவசியப்படுகிறார்,” என்றார்.

ஜூன் 27 ஜனநாயகக் கட்சி விவாதத்தில் திரும்பவும் அவர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையைத் தாக்கிய போதும், இதே தொனியைத் தொடர்ந்த அவர், வட கொரியா சம்பந்தமாக, ட்ரம்ப் "புகைப்பட விளம்பரத்துக்காக, ஒரு சர்வாதிகாரி, கெம் ஜொங்-உன் ஐ அரவணைக்கிறார்,” என்று அறிவித்ததுடன், “நமது ஜனநாயகம் மற்றும் நமது தேர்தல்களுக்கு அச்சுறுத்தல் என்று வரும்போது அவர் அமெரிக்க உளவுத்துறை சமூகத்தின் வார்த்தையை விட ரஷ்ய அதிபரின் வார்த்தையையே எடுத்துக் கொள்கிறார்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். ஹரீஸ், MSNBC இல் விவாதத்திற்குப் பிந்தைய ஒரு பேட்டியில், ஜமால் கஷோகி (Jamal Khashoggi) படுகொலை சம்பந்தமாக "அமெரிக்க உளவுத்துறை சமூகத்தின் வார்த்தைகளை விட சவூதி இளவரசரின் வார்த்தைகளை" ஏற்றுக் கொண்டதற்காக ட்ரம்பைத் தாக்கினார்.

ஒட்டுமொத்தமாக ஜனநாயகக் கட்சியைப் போலவே, ஹரீஸைப் பொறுத்த வரையிலும் “அமெரிக்க உளவுத்துறை சமூகத்தின் வார்த்தைகளை" ஏற்றுக் கொள்ள தவறுவதைத் தவிர வேறெதுவும் மிகப்பெரிய அரசியல் விதிமுறை மீறல் கிடையாது.

ஒரு வழக்குரைஞர் தொழில்வாழ்வு

1998 இல் சான் பிரான்சிஸ்கோவில் துணை மாவட்ட வழக்குரைஞராக பதவி வகிப்பதற்காக வளைகுடாவைக் கடப்பதற்கு முன்னதாக, ஆக்லாந்து நகரத்தை உள்ளடக்கிய அலமெடா உள்ளாட்சிகான துணை மாவட்ட வழக்குரைஞராக 1990 இல் ஹரீஸ் அவரின் அரசியல் தொழில்வாழ்க்கையை தொடங்கினார். அப்பெண்மணி விரைவிலேயே உயர்மட்ட தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, உயரடுக்கு சமூக வட்டாரங்களுக்குள் நகர்ந்து, அங்கே அவர் எண்ணெய் வள செல்வந்த வாரிசு வனெஸ்சா கெட்டி (Vanessa Getty) போன்ற புரவலர்களை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் சிறிது காலம் கலிபோர்னியா நாடாளுமன்ற சபாநாயகர் வில்லி பிரௌனுடன் (Willie Brown) திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்தார், இவர் சான் பிரான்சிஸ்கோ நகரசபை தலைவரானதும், அப்பெண்மணியின் அரசியல் வாழ்வு மற்றும் நிதியியல் நலன்களை ஊக்குவித்தார்.

ஹரீஸ் 2003 இல் தற்போதைய சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அரசு தரப்பு வழக்குரைஞர் டெரன்ஸ் ஹாலினன் (Terence Hallinan) ஐ சவால்விடுக்க முடிவெடுத்தார், அதற்குள் அப்பெண்மணியால் அவருக்காக இரண்டு மடங்கு அதிகமாக நிதி திரட்ட முடிந்திருந்ததுடன், சான் பிரான்சிஸ்கோ நெறிமுறை ஆணையர் அந்நகர பிரச்சார நிதி சட்டத்தை மீறியதற்காக அதிகபட்ச அபராதம் விதிக்கும் அளவுக்கு அப்பிரச்சாரத்தில் மிக அதிகளவில் பணம் செலவிட்டிருந்தார். வளைகுடா பகுதி தீவிரக் கொள்கை வட்டாரங்களுடன் நெருக்கமான தொடர்புகளில் இருந்த முன்னாள் பாதுகாப்பு வழக்கறிஞர் ஹாலினன் —இவர் தந்தையே கூட முற்போக்கு கட்சியின் 1952 ஜனாதிபதி வேட்பாளராக இருந்திருந்தார்— வணிக ஸ்தாபகம், பொலிஸ் சங்கங்கள், சான் பிரான்சிஸ்கோ குரோனிக்கல் ஆகியவற்றால் எதிர்க்கப்பட்டார். அப்பத்திரிகை அந்த போட்டியில், “ஹரீஸ், சட்டம் ஒழுங்கிற்கானவர்" என்று தலையங்கம் எழுதியது.

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஹரீஸ், ஜனநாயகக் கட்சியின் ஆளுநர் வேட்பாளராக இருந்த ஜெர்ரி பிரௌன் இருந்த இடத்திற்கு ஜனநாயகக் கட்சியின் இசைவுடன் மாநில தலைமை அரசு தரப்பு வழக்குரைஞர் (attorney general) பதவிக்கு விருப்பத்திற்குரியவராக இருந்தார். அவரின் உள்ளூர் காங்கிரஸ் சபை பெண் உறுப்பினர் நான்சி பெலோசி, ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் டயான் ஃபைன்ஸ்ரைன் மற்றும் பார்பரா பாக்சர் இருவரும் என இவர்களின் ஆதரவுடன் போட்டியிட்டார்.

அந்த மிகப்பெரிய அமெரிக்க மாநிலத்தின் நகர வழக்குதொடுநராகவும் (prosecutor) மற்றும் உயர்மட்ட சட்ட அமலாக்க அதிகாரியாகவும் இரண்டு விதத்திலுமே, ஹரீஸ் கடுமையான "சட்ட ஒழுங்குக்கு" வக்காலத்து வாங்குபவராக தன் பெயரை நிலை நிறுத்தி இருந்தார். சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்குரைஞராக, அப்பெண்மணி பெரும்பாலான நேரங்களில் மரபார்ந்த சட்ட நடைமுறைகளை அலட்சியப்படுத்தி அதிக குற்ற தண்டனைகள் வழங்கியதற்காக சுயபெருமை பீற்றி கொண்டார். 2003 இல் 52 சதவீதத்தில் இருந்த கடுங்குற்ற தண்டனை விகிதங்கள் அவர் தலைமையின் கீழ் 2006 இல் 67 சதவீதத்திற்கு அதிகரித்தன.

ஆனால் இந்த குற்ற தண்டனைகளின் அதிகரிப்பு பெரும்பாலும் தெளிவாக ஹரீஸ் மற்றும் அவரது அலுவலகத்தின் பாகத்தில் நடந்த துஷ்பிரயோகங்களின் காரணமாக இருந்தன. 2012 இல், உச்ச நீதிமன்ற நீதிபதி Ann-Christine Massulo வழங்கிய தீர்ப்பில், மருந்துகளைத் திருடியதுடன் பொய் அறிக்கைகளை வழங்கிய ஆய்வக தொழில்நுட்ப வல்லுரும் ஒரு ஊழல் பொலிஸ் குற்றவாளியுமான ஒருவர் பற்றிய விபரங்கள் அழிக்கப்பட்டிருந்ததை மறைத்ததன் மூலம், ஹரீஸ் அலுவலகம் பிரதிவாதியின் உரிமைகளை மீறிவிட்டதாக தீர்ப்பு வழங்கினார்.

ஹரீஸ் மாநில அரசு தரப்பு தலைமை வழக்குரைஞராக இருந்துபோது, சிறைக்கைதிகளை நெரிசலாக அடைத்து வைப்பது மற்றும் அவர்கள் மீதான துஷ்பிரயோகத்தை அரசியலமைப்புக்குப் புறம்பான "குரூர மற்றும் அசாதாரண தண்டனை" என்று கண்டித்த நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக அவர் அரசு சிறைச்சாலை முறையின் உயர்மட்ட பாதுகாப்பை நியாயப்படுத்தினார். மாநில அரசின் தலைமை சட்ட பிரதிநிதியாக "எனக்கென எனது தரப்புக்காரர் இருக்கிறார்கள், வாடிக்கையாளரைத் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை,” என்ற எரிச்சலூட்டும் அறிக்கையுடன் அவரின் ஆக்ரோஷமான வழக்கு விசாரணை முறையைப் பாதுகாத்த பின்னர், அவர் சிறைச்சாலைகள் மீதான மத்திய அரசின் நீதிமன்ற கண்காணிப்பை முடிவுக்குக் கொண்டு வர முயன்றார்.

2015 இல் ஹரீஸ் அம்மாநில அரசின் மரண தண்டனை சட்டங்கள் குரூரமாக மனிதாபிமானமின்றி இருப்பதாக அறிவித்து, ஒரு கீழ் நீதிமன்ற தீர்ப்பை மாற்றுவதற்கு முயன்றார். மீண்டுமொருமுறை அவர் வெறுமனே அவர் தரப்பு பிரதிவாதியைப் பாதுகாப்பதாகவும், அந்த விசயத்தில் கலிபோர்னியா மாநில அரசு அவரின் சொந்த கண்ணோட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ஹரீஸ் வாதிட்டார்.

2014 இல் Brown v. Plata வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அம்மாநிலத்தின் சிறைச்சாலைகள் நெரிசலாக இருப்பதாகவும் அவற்றில் குரூமான வழமைக்கு மாறான தண்டனை நடப்பதாகவும் அறிவித்தபோது, ஹரீஸ் அந்த தீர்ப்பையும் எதிர்த்தார். கைதிகள் மூன்று பேர் படுக்கும் அடுக்கடுக்கான படுக்கைகளில் குவிக்கப்பட்டு, மருத்துவக் கவனிப்பின்றி நோய்வாய்பட்டு இறந்து கொண்டிருந்தனர். கலிபோர்னியா மாநில அரசு அதைத் தொடர்ந்து 40,000 பேர் மட்டுமே சிறையில் இருக்குமாறு கைதிகளின் அளவைக் குறைக்க உத்தரவிட்டது. சொல்லப்போனால், கலிபோர்னியா விரைவில் சிறையிலிருப்பவர்களை விடுவித்தால், அரசு ஒரு முக்கியமான உழைப்பு ஆதாரத்தை இழக்கும் என்று ஹரீஸ் வாதிட்டார், இதற்காக அவர், நாளொன்றுக்கு 2 டாலருக்காக காட்டுத்தீயில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடும் பயிற்சி பெறாத சிறைக்கைதிகளை அம்மாநிலம் சார்ந்திருப்பதை மேற்கோள் காட்டினார்.

2015 இல், உள்ளாட்சி வழக்குதொடுனர்கள் விசாரணை எழுத்துப்பிரதிகளில், பொய் ஒப்புதல் வாக்குமூலங்களை இடையில் செருகி அவர்கள் பெற்றிருந்த தீர்ப்புகளை ஹரீஸ் பாதுகாத்தார். அந்த நேரத்தில், வழக்குரைஞரின் தவறான நடத்தையை நிரூபிக்க போதுமானளவுக்கு சாட்சியங்கள் இல்லை என்றவர் வலியுறுத்தினார்.

தலைமை வழக்குரைஞராக ஹரீஸின் பழிவாங்கும் ஜனநாயக விரோத தன்மை, நீதிமன்ற அறைகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. 2010 இல் ஹரீஸ் ஒரு சட்டத்திற்கு ஆதரவளித்தார், பின்னர் அது ஆளுநர் Arnold Schwarzenegger ஆல் கையெழுத்திடப்பட்டது, அந்த சட்டம், பள்ளிக்கு ஒழுங்காக வராத குழந்தைகளின் பெற்றோரைச் சிறையில் அடைப்பதற்கும் அவர்களுக்கு 2,000 டாலர் அபராதம் விதிப்பதன் மூலம் பள்ளிகளை மேம்படுத்த முயன்றது. பள்ளிக்கு ஒழுங்காக வராத குழந்தைகளின் பெற்றோர்கள் சிறையில் நேரத்தைக் கழிக்க வேண்டியிருக்கும் என்பது அந்த சட்டம் வெளிப்படையாக கொண்டிருந்த போதினும் கூட, பெற்றோர்களைச் சிறைக்கு அனுப்புவது அந்த சட்டத்தின் "உத்தேசிக்கப்பட்ட விளைவு அல்ல" என்று கடந்த மே மாதம் CNN பேட்டி ஒன்றில் வாதிட்டார்.

பொலிஸ் மற்றும் அரசியல்வாதிகளைத் தண்டனையிலிருந்து காப்பாற்ற ஏறக்குறைய அவரால் ஆன அனைத்தையும் செய்து வந்த ஹரீஸ் அதேவேளையில் ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கம் மீதான வக்கிரமான தாக்குதல்களை நடத்துவதற்கு ஒரு வழக்குதொடுநராக அவரது அதிகாரங்களைப் பயன்படுத்தினார். இது, பதவியிலிருந்த போது நடைமுறையளவில் அவரின் கறைபடியாத முற்போக்குத்தன்மையின் முன்வரலாறுக்கும் அவரின் பிரச்சாரம் குறிப்பிடுவதற்கும் இடையே குறிப்பிடத்தக்க முரண்பாடாக நிற்கிறது. அவர் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு உதவியாக வெளியிடப்பட்ட நாங்கள் கைப்பிடித்துள்ள உண்மைகள் (The Truths We Hold) என்ற அவரது புத்தகத்தில், ஹரீஸ் அவரின் அரசியல் முன்வரலாறைக் குறித்த பட்டவர்த்தனமான பொய்மைப்படுத்தல்களுடன் எப்போதும் கூறப்படும் உணர்வுபூர்வக் கருத்துக்களைக் கலந்துவிடுகிறார். அவர் தன்னைத்தானே "முற்போக்கு வழக்குத்தொடுநர்" என்று கூறிக் கொள்கிறார். இதை விட, "அவர் பதவியின் அதிகாரத்தை நியாயமான உணர்வுடன், முன்னோக்கு மற்றும் அனுபவம் கொண்டு பயன்படுத்தியதாக" அவர் விபரிக்கிறார்.

ஆனால் ஒரு வழக்குதொடுநராக அவரது தொழில்வாழ்வைக் கவனித்த பலருக்கும் வேறொரு முன்னோக்கு இருப்பது தெரிந்திருக்கும். லாஸ் ஏஞ்சல்ஸில் அப்பாவி மக்களுக்கான லயோலா சட்டப்பள்ளி திட்டத்தின் முன்னாள் இயக்குனர் Lara Bazelon நியூ யோர்க் டைம்ஸின் மக்கள் தலையங்க பகுதியில் எழுதுகையில், “மாவட்ட அரசு தரப்பு வழக்குரைஞராகவும், பின்னர் மாநிலத்தின் அரசு தரப்பு தலைமை வழக்குரைஞராகவும் குற்றவியல் நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு முற்போக்காளர்கள் அவரை வலியுறுத்தியபோது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், திருமதி. ஹரீஸ் அவற்றை எதிர்த்தார் அல்லது மவுனமாக இருந்து கொண்டார்,” என்று எழுதினார். சிறைச்சாலை சட்ட அலுவலகத்தின் நிர்வாக இயக்குனர் டொனால்ட் ஸ்பெக்டர் Daily Beast பேட்டி ஒன்றில் கூறுகையில், “எனக்கு தெரிந்த வரையில், அவர் அரசு தரப்பு தலைமை வழக்குரைஞராக இருந்தபோது குற்றவியல் நீதித்துறையை மேம்படுத்த அவர் ஒன்றுமே செய்யவில்லை,” என்றார்.

ஒரு “முற்போக்காளர்" பிம்பத்தை ஏற்பது

மாவட்ட வழக்குரைஞர்களும் ஏனைய வழக்குத்தொடுநர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அடையாளப்படுத்துவதற்காக அவர்களால் கூறப்படும் ஓர் அறிக்கையைச் சுட்டிக்காட்டும் விதத்தில், “மக்களுக்காக கமலா ஹரீஸ்,” என்ற கோஷத்துடன் ஹரீஸ் அவரின் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர்ச்சியாக அல்லாமல் இடைவிட்டு இடைவிட்டு, அப்பெண்மணி பல்வேறு பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளிலும் நிலைப்பாடுகளை எடுத்தார், மேலோட்டாமாகவே அதை "முற்போக்குத்தனம்" என்று சித்தரிக்க முடியும், நெருக்கமான ஆய்வுகளைக் மேற்கொண்டால், வழமையாக ஒன்றுக்கும் உதவாதவையாக உள்ளன. ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒருவேளை கவனக்குறைவாக, அவர் "இடது" உணர்வு குரலை உயர்த்தி இருந்தாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லை அல்லது அடுத்த நாளே திரும்ப பெற்றுக் கொண்டார்.

இவ்விதத்தில் தான் "அனைவருக்கும் மருத்துவக் கவனிப்பு" என்ற பேர்ணி சாண்டர்ஸின் அழைப்பைத் தழுவினார், ஆனால் மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு ஆதரவாக தனியார் மருத்துவக் காப்பீட்டை முடிவுக்குக் கொண்டு வருவது என்ற கேள்வி வந்ததும் அவர் இரண்டுமுறை தன்னை பின்வாங்கிக் கொண்டார், அதுபோன்றவொரு திட்டத்தை நடைமுறைப்படுத்த உண்மையில் அவருக்கு எந்த உத்தேசமும் இல்லை என்பதற்கு இதுவொரு அறிகுறியாகும்.

சக ஜனாதிபதி வேட்பாளர் எலிசபெத் வாரெனுடன் சேர்ந்து ஹரீஸ் காலநிலைமாற்ற அபாய வெளியீட்டு சட்டம் (Climate Risk Disclosure Act) என்றறியப்படும் ஒரு செனட் சட்டமசோதாவையும் ஆதரித்தார், அது "கனிம வள எரிபொருள்களில் இருந்து மாசுபாடற்ற எரிசக்திக்கு மாறுவதை வேகப்படுத்துவதற்கு சந்தை சக்திகளை" பயன்படுத்துவதாக இருந்தது. இந்த சட்டமசோதா, முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் மற்றும் ஏனைய ஜனநாயகக் கட்சி தலைவர்களால், சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தல் மற்றும் "பசுமை எரிசக்தியை" இலாபமீட்டும் நடவடிக்கைகளாக ஊக்குவிக்க முடியும் என்ற வாதங்களின் அடிப்படையில் இருந்தது.

இந்த திவாலான முன்மொழிவு மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது எந்த அபராதங்களும் விதிப்பதில்லை. நிறுவனங்கள் எந்தளவுக்கு பசுமை வாயுக்களை வெளியிடுகின்றன, அவை என்ன கனிமவள எரிபொருள்களைப் பயன்படுத்துகின்றன, பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தங்களுக்கு இணங்க அவை கார்பன் வெளியீடுகளைக் குறைத்தால் அவற்றின் சொத்து மதிப்புகள் எவ்வளவு பாதிக்கப்படும் என்பதைப் பட்டியலிடுவதற்கு அப்பாற்பட்டு மாசுபாட்டைக் குறைப்பதற்காக அவை என்ன செய்யும் என்பதை அச்சட்டமசோதா கோரவில்லை.

புலம்பெயர்வு விடயத்திலும், DACA பெறுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுதலைப் பாதுகாக்க வாக்குறுதி அளித்த ஹரீஸ், மெக்சிகோ உடனான ட்ரம்பின் எல்லை சுவரைப் பகிரங்கமாக எதிர்த்தார். ஆனால் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டி புலம்பெயர்ந்தவர்களுக்கான ட்ரம்பின் கடுங்காவல் முகாம்களின் வலையமைப்புக்காக சமீபத்தில் செனட்டில் ஒதுக்கப்பட்ட 4.6 பில்லியன் டாலரை அவர் நயவஞ்சகமாக ஆதரித்தார். ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஏனைய செனட் சபை ஜனநாயகக் கட்சியினரைப் போலவே, இந்த பெண்மணியும் அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அந்த சட்டமசோதா இருகட்சியினராலும் 84-8 என்ற எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது.

கலிபோர்னியா அல்லது வாஷிங்டனில் அவரின் உண்மையான முன்வரலாறை விட ஹரீஸிற்கு அதிக தாராளவாத பிம்பத்தை வழங்குவதற்காக, ஜனநாயகக் கட்சியின் முதன்மை வாக்காளர்களிடையே அவர்களின் அரசியல் செல்வாக்கை கருத்தில் கொண்டு, ஏனைய சட்ட முன்மொழிவுகள் இயற்றப்பட்டிருந்தன. உளக்கிளர்ச்சியூட்டும் marijuana மருந்தை மத்திய அரசு சட்டபூர்வமாக்குவதை ஆதரித்த அப்பெண்மணி, மாநில வழக்குதொடுநர்களின் சமதரப்பினரின் மட்டங்களுக்கு அரசுத்துறை பிரதிவாதிகளின் சம்பளங்களை உயர்த்துவதையும் ஆதரித்தார். ஆசிரியர் வேலைநிறுத்த அலைக்குப் பின்னர், ஹரீஸ் அமெரிக்காவின் ஒவ்வொரு பள்ளி ஆசிரியருக்கும் ஆண்டுக்கு 13,500 டாலர் சம்பள உயர்வுக்கு அழைப்பு விடுத்தார்.

அவர், மத்திய அரசின் குறைந்தபட்ச கூலியை மணிக்கு 15 டாலராக அதிகரிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார், இது, இப்போதும் குறைந்தபட்ச ஊதிய தொழிலாளர்களைக் கடுமையான வறுமை நிலையில் விட்டு வைத்திருப்பதைத் தவிர, இந்த தொழிலாளர்களில் பலரை உணவு முத்திரைகள், வீட்டுவசதி மானியங்கள் மற்றும் மருத்துவச் சிகிச்சை உதவி போன்ற பொதுநல உதவி திட்டங்களுக்கு தகுதியற்றவர்களாக ஆக்கும்.

பகுதியாக, ஒப்பீட்டளவில் ஜனரஞ்சகமாக காட்டிக்கொள்வதற்கான அவரின் திறமையின்மை அவரின் சொந்த வாழ்க்கை சூழல்களில் வேரூன்றி உள்ளது. பல தசாப்தங்களாக ஆறு இலக்க வருவாய்களை ஈட்டியிருந்த அவர், இப்போது அதை விட அதிகமாக வருவாய் ஈட்டும் ஒரு மில்லியனராக உள்ளார். ஏப்ரலில் வெளியிடப்பட்ட அவரின் வருமான வரி பதிவுகளின்படி, அவரும் அவர் கணவர் செல்வந்த வழக்குரைஞர் Douglas Emhoff உம் 2018 இல் மொத்தம் முறைப்படுத்தப்பட்ட 1,884,319 டாலர் வருவாய் கொண்டிருந்தனர், இது அவர்களைச் சௌகரியமாக உயர்மட்ட 0.1 சதவீதத்தினரில் நிறுத்துகிறது. இதில் பெரும்பான்மை Emhoff இன் பொழுதுபோக்கு சட்ட பயிற்சியிலிருந்து வந்தது, அதேவேளையில் ஹரீஸ் செனட் சம்பளம் மூலமாக 157,352 டாலரும், அவரின் பிரச்சார நினைவுகூரலில் இருந்து நிகர இலாபங்களாக 320,125 டாலரும் ஈட்டியிருந்தார்.

சமூக வீரவசனங்களைப் பேசுவதற்கான அவரின் முயற்சிகளில் ஹரீஸ் அரைமனதுடன் முன்னுக்குப்பின் முரணாக இருந்துள்ளார் என்றாலும் —இது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பொலிஸ் அட்டூழியங்களைப் பாதுகாப்பதிலும் மக்களைச் சிறையில் அடைப்பதிலும் அவரின் தொழில்வாழ்வில் பெரும்பகுதியை செலவிட்ட ஒருவரின் இயல்பான உறுதிப்பாடு இல்லை என்கின்ற நிலையில்— அடையாள அரசியலைத் தழுவுவதில் அவர் ஓரளவுக்கு அதிக சக்தியை எடுத்துக்காட்டியுள்ளார், இதை அவர் முன்னர் சான் பிரான்சிஸ்கோவின் "முதல் கறுப்பின பெண்" DA என்பதிலும், கலிபோர்னியாவின் "முதல் கறுப்பின பெண்" தலைமை வழக்குரைஞர் என்பதிலும், தற்போது ஒரே கறுப்பின பெண் அமெரிக்க செனட்டர் என்பதிலும் கையிலெடுத்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களுக்காக மின்னிசொடா செனட்டர் அல் பிரான்கெனின் இராஜினாமாவுக்கு அழைப்புவிடுத்த முதல் நபர்களில் ஒருவராக இருந்து, ஹரீஸ் #MeToo பிரச்சார வாகனத்திலும் தாவினார். அந்த குற்றசாட்டுக்களில் எதுவுமே நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, அவை நடந்திருந்தாலும் கூட அவற்றில் எதுவுமே ஒரு குற்றவியல் குற்றச்சாட்டு மட்டத்திற்குத் மிகப்பெரிய தகாத செயலாக இருந்திருக்கவில்லை என்ற உண்மைக்கு மத்தியிலும், அத்தகைய கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

பிரசவ கால கறுப்பின பெண்களின் மருத்துவக் கவனிப்பு, வெள்ளையின தாய்மார்களை விட 3.3 மடங்கு அதிக விகிதத்தில் கறுப்பின தாய்மார்களிடையே பிரசவகால உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு இட்டுச் சென்றுள்ள நிலையில், பிரசவ கால கறுப்பின பெண்களின் மருத்துவ பராமரிப்பில் இன பாகுபாடுகளைக் களைய பிரசவகால கவனிப்பு சட்டம் (Maternal CARE ACT) என்றறியப்படும் ஒரு சட்டமசோதாவை ஹரீஸ் அறிமுகப்படுத்தினார். இந்த சட்டமசோதா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention - CDC) வெளியிட்ட மே 10 அறிக்கைக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது.

உயிர்செல் பரிவர்த்தனை, இரத்தக்கசிவு மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் சம்பந்தமான நடைமுறைகளை மருத்துவ பணியாளர்களிடையே மேம்படுத்துவது, பிரசவ கால தாய்மார்களுக்கான கருத்தரிப்பு கால திட்டங்கள் மற்றும் ஏனைய சேவைகளை இன்னும் அதிகமாக அணுகுவதற்கான வசதி, தற்காலிக வீட்டுவசதி திட்டங்கள், இன்னும் இதர பிற நடைமுறைகள் உள்ளடங்கலாக, அந்த பிரச்சினையில் இன்னும் விஞ்ஞானபூர்வ அணுகுமுறையை CDC அறிக்கை பெரியளவில் பரிந்துரைக்கிறது. மறுபுறம், ஹரீஸின் பிரசவகால கவனிப்பு சட்டம் பிரச்சினையை இனரீதியில் ஊன்றுவதுடன், குறிப்பாக அதில் அப்பெண்மணி மருத்துவக் கவனிப்பு பயிற்சியாளர்கள் நனவுபூர்வமாக பரந்தளவில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டுகிறார். “புதிதாக குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு அவசியமான கலாச்சாரரீதியில் சவாலான கவனிப்பு மற்றும் ஆதாரவளங்களை அவர்களுக்கு வழங்குவதற்காக" அதிக அபாயகரமான பிரசவங்களைக் கண்டறிவதற்காக அந்த சட்டமசோதா 150 மில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்கிறது.

இந்த பிரச்சாரத்தில் இந்த தருணத்தில், அடையாள அரசியலின் பிற்போக்குத்தனமான கவசத்தை வேறெந்த வேட்பாளரையும் விட ஹரீஸ் தான் அதிகமாக ஏற்றுள்ளார் என்று கூற முடியும். அந்த அர்த்தத்தில், அவர் ஹிலாரி கிளிண்டனின் 2016 பிரச்சாரத்திலிருந்து அவரின் குறிப்பை எடுத்துள்ளார். இந்த செனட்டரின் இளம் சகோதரி மாயா ஹரீஸ் கிளிண்டனின் 2016 பிரச்சாரத்தில் மூத்த கொள்கை ஆலோசகராக இருந்தவர் என்பதுடன், தற்போது ஹரீஸின் 2020 பிரச்சாரக் குழுவின் பெண் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இளைய ஹரீஸ் MSNBC இல் ஓர் அரசியல் பகுப்பாய்வாளராக பணியாற்றி வருவதுடன், ஒபாமா நிர்வாகத்தில் முன்னாள் அமெரிக்க துணை தலைமை வழக்குரைஞரும் ஊபெர் நிறுவனத்தின் பொது ஆலோசகருமான டோனி வெஸ்டை மணம் முடித்துள்ளார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக சட்ட பேராசிரியர் மிக்கெல் அலெக்சாண்டரின் 2010 புத்தகமான The New Jim Crow என்பதன் வரைவுகளையும் மாயா ஹரீஸ் திருத்தம் பார்த்துள்ளார். நியூ யோர்க் டைம்ஸில் சிறந்த விற்பனை நூல்கள் பட்டியலில் பல நாட்கள் இடம் பிடித்திருந்த அந்த படைப்பு, அமெரிக்காவில் ஒரு புதிய இன ஜாதி முறை இருப்பதாகவும், அது பெரிதும் ஏழை வெள்ளையினத்தவர்களால் செயல்படுத்தப்படுவதாகவும், அது எந்தவொரு மற்றும் எல்லா வர்க்க பரிசீலனைகளையும் விட ஒரு குறிப்பிடத்தக்க சமூக பிளவாக பெரியளவில் சுமையேறி இருப்பதாகவும் வாதிட்டது.

ஹரீஸ் அவரின் ஜனாதிபதி போட்டியில் ஜெயிக்க வேண்டுமானால், முதலாளித்துவ ஊடகங்கள் முதல் பெண் ஜனாதிபதியின் மற்றும் அவ்விதத்தில் முதல் கறுப்பின பெண் ஜனாதிபதியின் உருமாறும் தன்மையைக் கொண்டாடியவாறு, தொடர்ந்து சரமாரியான பிரச்சாரத்தைப் பொதுமக்கள் மீது வீச வேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜமேக்கா மற்றும் இந்திய வம்சாவழி வந்த ஹரீஸ், இந்த பதவிக்குப் போட்டியிடும் ஆபிரிக்க வம்சாவழியைச் சேர்ந்து மூன்றாவது பெண் மட்டுமே ஆவார்.

அவருக்கு முன்பிருந்த ட்ரம்ப் மற்றும் ஒபாமா நிர்வாகங்களைப் போலவே ஹரீஸ் நிர்வாகமும் அதேயளவுக்குப் பிற்போக்காக இருக்கும் என்ற உண்மையை இது எந்தவிதத்திலும் மாற்றிவிடப்போவதில்லை.

Loading