ஆகஸ்ட் 26 இணையவழி விரிவுரை: “முதலில் துன்பமானதாக, இரண்டாவது கேலிக்கூத்தானதாக: மார்கோஸ், டுரேற்ற மற்றும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிகள்.”

பிலிப்பைன்ஸ் ஸ்ராலினிஸ்டுகள் ஆகஸ்ட் 26 விரிவுரைக்கு முன்னதாக கல்வியாளர் ஜோசப் ஸ்காலிஸை அவதூறு செய்கிறார்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஆகஸ்ட் 26 அன்று, பிலிப்பைன்ஸ் வரலாற்றின் முன்னணி அறிஞரான ஜோசப் ஸ்காலிஸ், “முதலில் துன்பமானதாக, இரண்டாவது கேலிக்கூத்தானதாக: மார்கோஸ், டுரேற்ற மற்றும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிகள்.” என்ற தலைப்பில் ஒரு இணையவழி விரிவுரையை நிகழ்த்துவார். நிகழ்வு சிங்கப்பூர் நேரம் மாலை 3 மணி. (பிலிப்பைன்ஸில் அதே நேரம். நியூயோர்க், அதிகாலை 3 மணி. பேர்லின், காலை 9 மணி. கொழும்பு, மதியம் 12:30 மணி. சிட்னி, மாலை 5 மணி).

ஸ்காலிஸ், பேர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகளில் பேராசிரியர் பட்டம் பெற்றவராவார். அவர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வாளர் ஆவார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பங்களிப்பு செய்வதோடு காலனித்துவத்துக்கு பிந்தைய பிலிபைன்ஸில், அரசியல் மற்றும் புரட்சிகர இயக்கங்களின் வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மனிதநேயம், கலை மற்றும் அறிவியல் துறை நடத்தும் இந்த நிகழ்வு, உலக மக்களுக்கு இலவசமாகும். பிலிபைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.பி.), கட்சியின் அரசியல் பாதையுடன் தொடர்புடைய பல்வேறு அரசியல் குழுக்களும், பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுரேற்றேயை 2016 இல் தேர்ந்தெடுத்ததற்கு ஒப்புதல் அளித்தமை பற்றி விரிவுரையில் ஆராயப்படும். அந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு, சிபிபி டுரேற்றேயை “பாசிஸ்ட்” என்று கண்டனம் செய்த போதிலும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவரது ஜனாதிபதி பதவிக்கு ஒப்புதல் அளித்தது.

டுரேற்ற  மீதான சி.பி.பி.இன் ஆர்வத்திற்கும், 1965 முதல் 1986 வரை நாட்டை வழிநடத்திய மற்றும் 1972 இல் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியவருமான ஃபெர்டினாண்ட் மார்கோஸின் கம்யூனிஸ-விரோத சர்வாதிகாரத்தை முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி (பி.கே.பி) அங்கீகரித்தமைக்கும் இடையிலான வரலாற்று ஒற்றுமையை இந்த விரிவுரை ஆராயும். தற்போதைய சி.பி.பி., 1967 இல் பி.கே.பி. உடன் பிளவுபட்ட அதே வேளை, போட்டியாளர்களுக்கு இடையில் அடிநிலையில் காணப்படும் வேலைத்திட்ட அடிப்படையிலான தொடர்ச்சி, டுரேற்றேக்கு சி.பி.பி. அளித்த ஆதரவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவுரையில் மார்கோஸின் சர்வாதிகாரத்தை ஆதரிப்பதற்கு பி.கே.பி.யை வழிநடத்திய மற்றும் சி.பி.பி. டுரேற்றேயை அங்கீகரிப்பதை நியாயப்படுத்திய வர்க்க தர்க்கத்தை பற்றி ஆராயப்படும்.

இந்த நிகழ்வு ஸ்ராலினிச கட்சியின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரும் மற்றும் கருத்தியல் தலைவருமான ஜோஸ் மரியா சீசன், ஸ்காலிஸை அச்சுறுத்தி அவதூறு செய்து முகநூலில் கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த விரிவுரை பற்றிய பொது ஆர்வத்தைத் தடுப்பதற்கு சீசன் முயற்சித்த போதிலும், வரலாற்று விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாமல், ஸ்காலிஸை "ஒரு கம்யூனிச-விரோத வெறிபிடித்து, ஒரு கல்விமான் ட்ரொட்ஸ்கிஸ்டாக தன்னை காட்டிக்கொள்ளும், உளவியல்போர் செய்யும் ஒரு சி.ஐ.ஏ. முகவர்" என்று பகிரங்கமாக முத்திரை குத்தினார். வேறு பல இடுகைகளிலும் அவர் இதே போன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறினார்.

ஒரு முன்னணி வரலாற்றாசிரியர் மீதான, சீசனின் கட்டுப்பாடற்ற தாக்குதல், டுரேற்ற அதிகாரத்திற்கு உயர உதவுவதில் கட்சியின் பங்கை மூடிமறைக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தால் தூண்டப்படுகிறது. சி.பி.பி. மற்றும் அதன் அரசியல் முன்னோக்குடன் பிணைக்கப்பட்ட "தேசிய ஜனநாயக" அமைப்புகள், பல தசாப்தங்களாக டவாவோ நகர மேயராக இருந்த டுரேற்றேக்கு ஆதரவளித்தன. அவர்கள் அவரது கட்சி மேடையில் பிரச்சாரம் செய்த இந்த காலகட்டத்தில், டுரேற்ற தனது நகரத்தில் பயங்கரவாத ஆட்சியை முன்னெடுத்த கொலைக் குழுக்களின் தலைவராக இருந்துகொண்டு ஒரு சர்வதேச நற்பெயரை கட்டியெழுப்பினார்.

2016 இல் டுரேற்ற பதவியேற்றபோது, பல்வேறு "தேசிய ஜனநாயக" அமைப்புகள் அவரது ஜனாதிபதி பதவியை உற்சாகமாக ஆதரித்தன. அவர்கள் அமைச்சரவை பதவிகளை ஏற்றுக் கொண்டு, அவர்களின் கூட்டங்களிலும் சொற்பொழிவுகளிலும் அவரை ஊக்குவித்தனர். சி.பி.பி. அதன் உத்தியோகபூர்வ ஆங் பயன் பத்திரிகையில், போதைப்பொருட்களுக்கு எதிரான ஜனாதிபதியின் போரை வரவேற்றதுடன் "புரட்சிகர சக்திகள்" அதனுடன் ஒத்துழைக்க வேண்டுமென அழைப்பு விடுத்தது. இந்த போதைப்பொருட்களுக்கு எதிரான போர், ஒரு வெகுஜன படுகொலை பிரச்சாரமாக மாறியது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் 30,000க்கும் மேற்பட்டோர் பொலிஸ் மற்றும் துணை இராணுவ படைகளால் கொல்லப்பட்டனர்.

சீசனுக்கு பதிலளிக்கும் விதமாக, ஸ்காலிஸ் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது:

"அரசியல் ரீதியில் மிகவும் திவாலான ஒரு கட்சியின் தலைவருக்க நான் பயப்படமாட்டேன். அவரது திவாலால் அவர் உடனடியாக அச்சுறுத்துவதற்கே முயல்கிறார். இதில், சீசனும் சி.பி.பி.யும் ஸ்ராலினிச பிற்போக்கின் இழிபுகழ்பெற்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்றன. உண்மை என்பது அச்சுறுத்தல்கள் மற்றும் அவதூறுகளை விட வலிமையானது.

"சீசனும் அவரது கட்சியும் டுரேற்றேக்கு அவர்களது பகிரங்க ஆதரவை சுட்டிக்காட்டியதற்காக என்னை ஒரு பொய்யர் என்று அழைக்கிறார்கள், அதே நேரத்தில் தங்களுடன் அரசியல் படுக்கையை பகிர்ந்துகொள்வோரின் அதே அடாவடித்தன வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். இந்த சொற்பொழிவை வழங்க எனக்கு சகல உரிமையும் உள்ளது, அதை நான் ஆற்றுவேன். எனக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சர்வதேச அளவில் எனது சகாக்களிடமிருந்து எனக்கு ஆதரவும், ஆகஸ்ட் 26 விரிவுரை பற்றிய ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. இதில் அனைத்து வாசகர்களையும் கலந்து கொள்ள அழைப்புவிடுக்கிறேன்.”

ஸூம் வழியாக நடைபெறும் விரிவுரைக்கு செவிமடுக்க இப்போதே பதிவு செய்து கலந்து கொள்ளுமாறு எங்கள் வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். பதிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கப்பூர் நேரத்தில் மூடப்படும், எனவே விரைவில் பதிவு செய்யுங்கள்.