முன்னோக்கு

ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னரும் பொலிஸ் வன்முறை தொய்வின்றி தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொலிஸ் வன்முறை மற்றும் இனவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர கோரி, ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை தூண்டிவிட்ட பல இனத்தவரும் பல வம்சாவழியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்ட பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னர், வேகம் தணிந்ததற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் அமெரிக்கா எங்கிலும் பொலிஸ் அவர்களின் பயங்கரவாத ஆட்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

மினெயாபொலிஸ் பொலிஸ் அதிகாரி ஒருவரால் 8 நிமிடங்களுக்கும் மேலாக கழுத்து நெரிக்கப்பட்டு ஃபுளோய்ட் கொல்லப்பட்ட மே 25 க்குப் பின்னர் இருந்து, அமெரிக்காவில் குறைந்தபட்சம் 235 பேர் பொலிஸால் கொல்லப்பட்டுள்ளனர். அன்றாடம் அண்மித்து 3 பேர் பொலிஸால் கொல்லப்படுகின்றனர் என்ற நிலையில், கொல்லப்படும் வேகம் இந்தாண்டு 1,000 ஐ கடந்து செல்லும் பாதையில் உள்ளது.

விஸ்கான்சின், கெனொசாவில் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையான 29 வயது ஆபிரிக்க அமெரிக்கர் ஜாக்கோப் பிளேக்கின் முதுகில் ஒரு பொலிஸ் அதிகாரியால் ஏழு முறை சுடப்பட்ட கொலை முயற்சியே கோபமான இந்த போராட்டங்களின் வெடிப்பை உருவாக்கி உள்ள சமீபத்திய சம்பவமாக உள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்டும் ஆச்சரியமான விதத்தில் பிளேக் உயிர்பிழைத்துள்ளார் என்றாலும், அவர் தந்தை செவ்வாய்கிழமை Chicago Sun-Times க்கு கூறுகையில், அவர் மகன் இப்போது இடுப்புக்குக் கீழே முடமாகி இருப்பதாகவும், அவர் காயங்களில் இருந்து அவர் முழுமையாக மீள்வார் என்பதில் மருத்துவர்கள் நிச்சயமின்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.

அருகில் நின்றிருந்தவரால் எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட ஒரு செல்போன் காணொளி, பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து பிளேக் விலகி சென்று, அவர் காருக்குள் நுழைய முயலுகையில், ஒரு வெள்ளையின அதிகாரி, துப்பாக்கி ஏந்தியவாறு, அவரின் சட்டையைப் பிடித்து தள்ளி, மிக அருகாமையிலிருந்து அவர் முதுகில் ஏழு முறை துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்ட போது, பிளேக்கின் மூன்று மகன்கள் அந்த வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸால் தாக்கப்பட்ட பின்னர் நடந்த தீ வைத்தல் மற்றும் கொள்ளையடிப்பு சம்பவங்களைக் குறிப்பிட்டு, பிளேக்கின் தந்தை கூறுகையில், "வீதிகளில் ஒரு நாயைச் சுடுவதைப் போல என் மகனைச் சுட்ட அந்த பொலிஸ் அதிகாரிகள் தான் கெனொசாவில் நடந்துள்ள அனைத்திற்கும் பொறுப்பு,” என்றார். “அதற்கு என் மகன் பொறுப்பில்லை. என் மகனிடம் ஓர் ஆயுதம் கூட கிடையாது. அவர் துப்பாக்கி கூட வைத்திருக்கவில்லை,” என்றார்.

இதற்குப் பொறுப்பான அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, கைது செய்யப்பட வேண்டுமெனக் கோரி கெனொசாவில் ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமை இரவும் வீதிகளில் இறங்கிய கறுப்பின மற்றும் வெள்ளையின போராட்டக்காரர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளையும், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் மிளகு பந்துகளையும் எதிர்கொண்டனர். திங்கட்கிழமை மதியம் அந்நகரின் ஜனநாயகக் கட்சி நகரசபை தலைவருடன் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அங்கே வசிப்பவர்களின் முயற்சியும், அவர்கள் கோரிக்கைகளை மேலுயர்த்திய போது, பதட்டங்கள் அதிகரித்து, அதேபோல கலகம் ஒடுக்கும் கருவிகள் ஏந்திய பொலிஸ் மற்றும் மிளகுப்பொடி தெளிப்பான்களைச் சந்தித்தது.

ஒரேகன் போர்ட்லாந்தில் இருந்து இலினோய், சிகாகோ மற்றும் மிச்சிகன் டெட்ராய்ட் வரையில், முடிவில்லா இந்த படுகொலைகளுக்கு எதிராக சமீபத்திய நாட்களில் நாடெங்கிலுமான போராட்டங்கள் பொலிஸின் இடைவிடாத அடக்குமுறையைச் சந்தித்துள்ளன. பத்திரிகையாளர்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இன்னும் பலர் மீது மிளகுப்பொடி தெளிப்பான், மிளகுப் பந்துகள், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் "உயிருக்குக் குறைந்த ஆபத்து" என்று கூறப்படும் இன்னும் பல ஆயுதங்களும் பொலிஸால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இலத்தீன் அமெரிக்க சர்வாதிகாரங்கள் நடத்திய காட்சிகளுக்கு ஒத்திருக்கும் வகையில் அடையாளம் குறிக்கப்படாத வேன்களில் பிடித்து இழுத்து அடைத்து செல்லும் நடவடிக்கைகளை நடத்தியமை உட்பட, போர்ட்லாந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதலைத் தொடுக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் மத்திய இராணுவப் படைகளை அனுப்பி இருந்தார்.

அமெரிக்க எல்லை ரோந்துப்படையின் துணைஇராணுவமான BORTAC படைப்பிரிவு உட்பட இத்தகைய படைகள் போராட்டக்காரர்களுக்கு எதிராக நேரடியாக பயன்படுத்தியதன் மீதெழுந்த பரந்த சீற்றத்தைத் தொடர்ந்து பெரிதும் பின்புலத்தில் இவை பின்னுக்கு இழுக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் நியூ யோர்க் நகரிலும் பீட்ஸ்பர்க்கிலும் அடையாளம் குறிக்கப்படாத அதிகாரிகளைக் கொண்டு அவர்களின் சொந்த பிடித்து இழுத்து செல்லும் நடவடிக்கைகளை நடத்துவதற்கு, ட்ரம்பிடம் இருந்து அவர்களுக்கான குறிப்பைப் பெற்றுள்ளனர். இதற்கிடையே டெட்ராய்ட் மற்றும் சிகாகோ உட்பட பல மிகப் பெரிய நகரங்களில், பொலிஸூடன் சேர்ந்து செயல்பட, ஜனநாயகக் கட்சி நகரசபை தலைவர்களின் முழு சம்மதத்துடன், நூற்றுக் கணக்கான மத்திய இராணுவப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் பகிரங்கமாக பொலிஸ் வன்முறையையும் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களையும் தூண்டிவிட்டு வருகின்றனர்; குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் முதல் நாளில் 'பொலிஸ்' என்ற வார்த்தை 25 முறை கையாளப்பட்டது, இது, "தீவிர இடது" இன் "குண்டர் ஆட்சியில்" இருந்து சமூகத்தின் பாதுகாவலர்களாக கையாளப்பட்டது. ஜனாதிபதி, அவரின் தனிநபர் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக உள்ளாட்சி மட்டத்திலும் மற்றும் மத்திய அரசு மட்டத்திலும் உள்ள பொலிஸ் அலுவலக கட்டிடத்தில்தான் அவரின் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளார்.

ஆனால் கெனொசாவில் போராட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் பயங்கர ஆட்சியை விஸ்கான்சின் ஜனநாயகக் கட்சி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும்.

முதல் நாள் இரவு போராட்டங்களுக்குப் பின்னர் விஸ்கான்சினின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் Tony Evers மாலை 8 மணி ஊரடங்கை அமலாக்க பொலிஸிற்கு உதவியாக 125 தேசிய பாதுகாப்புப்படை சிப்பாய்களை நிலைநிறுத்தினார். நகர வீதிகளில் ரோந்து செல்ல இராணுவத்தின் பன்முக பயன்பாட்டு துரித ஊர்திகள் (Humvees) பயன்படுத்தப்பட்டதுடன், அந்நகரின் பிரதான இலவச வழியிலிருந்து வெளியே செல்வதற்கான பாதையைத் தடுக்க கட்டுமான வேலைக்கு உபயோகப்படுத்தும் லாரிகள் பயன்படுத்தப்பட்டன. பொலிஸ்-எதிர்ப்பு வன்முறை போராட்டங்களுக்கு எதிராக இன்னும் அதிக ஆதாரவளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக Evers செவ்வாய்கிழமை மதியம் அவசரகாலநிலையை அறிவித்தார்.

ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் “வெள்ளையின மேலாதிக்கம்" மற்றும் "அமைப்புரீதியிலான இனவாத" ஐ எதிர்ப்பதற்கு வாக்குறுதி அளிக்கின்ற அதேவேளையில் கறுப்பினத்தவரின் உயிரும் மதிப்புடையதே என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பேசியவாறு, நகர வீதிகளில் பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் அதை வரைந்து வைத்தவாறு, கறுப்பினத்தவரின் உயிரும் மதிப்புடையதே என்பதற்கு அவர்களின் ஆதரவை அறிவிப்பதில் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளிடம் இருந்து நிறைய பேச்சுக்கள் உள்ளன என்றாலும், எதுவும் மாறியதாக தெரியவில்லை. பொலிஸ் படுகொலைகளின் வேகத்தைக் குறைப்பதற்குக் கூட எதுவும் செய்யப்படவில்லை.

உண்மையில் போராட்டக்காரர்களிடையே பிரபலமாக உள்ள கோஷமான பொலிஸிற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதற்கான கோரிக்கை ஏறக்குறைய உச்சரிக்கப்பட்ட உடனேயே, ஜனநாயகக் கட்சியினர் அதிலிருந்து தங்களைத் தூர நிறுத்திக் கொண்டனர். மக்கள் கோபத்தை கலைக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் பாகமாக, ஃபுளோய்ட் படுகொலைக்கு உடனடியாக பின்னர் முன்வைக்கப்பட்ட அந்நகர பொலிஸ் படையை "கலைப்பதற்கான" பெரிதும்-வரவேற்புப் பெற்ற முன்மொழிவை மினெயாபொலிஸின் ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலான நகர மன்றம் எதிர்த்தது.

வெள்ளிக்கிழமை ABC News உடனான ஒரு பேட்டியில், முன்னாள் துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோ பைடென், அவருடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் செனட்டர் கமலா ஹரீஸ் உடனிருக்க, அவர் நிர்வாகம் பொலிஸிற்கு இன்னும் அதிக நிதி ஒதுக்கீட்டை வழங்க செயல்படும் என்பதைத் தெளிவுபடுத்தியதுடன், சொல்லப் போனால் ட்ரம்ப் தான் பொலிஸிற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பார் என்று வாதிட்டார். “நான் பொலிஸ் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க விரும்பவில்லை,” என்று அறிவித்த பைடென், “அவர்களுக்கு இன்னும் நிறைய உதவி தேவைப்படுவதாக நினைக்கிறேன், அவர்களுக்கு இன்னும் அதிக ஒத்துழைப்பு தேவைப்படுவதாக நினைக்கிறேன்…" என்றார்.

ஜூன் மாதம் ஒரு பிரச்சார நிகழ்வில் பைடென் குறிப்பிடுகையில், “அவர்களை நெஞ்சில் சுடுவதற்குப் பதிலாக காலில் சுடுமாறு" அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதே பொலிஸ் படுகொலைகளுக்கான தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்தினார். இதற்கிடையே வேட்பாளர் போட்டியில் பைடெனின் முன்னாள் எதிர்ப்பாளரும் இப்போது முன்னணி துணைவருமான செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ், பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் வழங்குவது பொலிஸ் படுகொலைகளுக்கு ஒரு தீர்வாக அமையக்கூடும் என்று அழைப்பு விடுத்துள்ளார்!

வெடிப்பார்ந்த போராட்டங்களின் வெடிப்பை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஆளும் உயரடுக்கின் கொலை பாதக விடையிறுப்பால் தீவிரப்படுத்தப்பட்ட பாரிய சமூக நெருக்கடியுடன், அமெரிக்கா ஒரு வெடி உலையாக உள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், காங்கிரஸ் மற்றும் வெள்ளை மாளிகையால் மத்திய அரசின் 600 டாலர் வேலைவாய்ப்பின்மை சலுகை காலாவதியாக அனுமதிக்கப்பட்டு ஒரு மாதமாகி விட்டது. கடன் இடைநிறுத்த காலம் காலாவதி ஆகயிருப்பதால் வரவிருக்கும் மாதங்களில் பத்து மில்லியன் கணக்கானவர்கள் வெளியேற்றங்கள் மற்றும் கடன் வசூலிப்பு நடவடிக்கைகளை முகங்கொடுக்கிறார்கள்.

ஆயுதமேந்தியவர்களின் சிறப்பு அமைப்பான பொலிஸ் துறை, செல்வந்தர்களின் சொத்து நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களை அடிமட்டத்திலிருக்கும் 90 சதவீதத்தினரில் இருந்து பிரிக்கும் அளப்பரிய சமூக இடைவெளி மீது பொலிஸ் வேலை செய்வதற்கும், வர்க்க ஆட்சியை அமலாக்கி அரசைப் பாதுகாக்க இன்றியமையாததாக உள்ளது. ஜனவரியில் வெள்ளை மாளிகையில் யார் அமர்ந்தாலும், பொலிஸ் வன்முறை தொடரும், சொல்லப் போனால் இன்னும் தீவிரமடையும். சமூக பதட்டங்கள் எந்தளவுக்கு அதிகரிக்கிறதோ, இரண்டு கட்சிகளும் மேற்பார்வையிடும் பொலிஸ் பயங்கரவாத நடவடிக்கையின் வன்முறையும் அந்தளவுக்கு அதிகரிக்கும்.

பொலிஸ் வன்முறை மற்றும் இனவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான ஓர் ஒருங்கிணைந்த சுயாதீனமான சமூக சக்தியாக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதும், இனம் மற்றும் ஏனைய அடையாள போக்குகளை ஒட்டி தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரைப் பிளவுபடுத்துவதற்கான எல்லா முயற்சிகளையும் நிராகரிப்பதும் அவசியமாகும். இதற்காக தான் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஜனாதிபதி பதவிக்கு ஜோசப் கிஷோரையும் துணை ஜனாதிபதி பதவிக்கு நோரிஸ்சா சான்டா குரூஸையும் கொண்ட தேர்தல் பிரச்சாரத்துடன் போராடி வருகிறது. இந்த முன்னோக்குடன் உடன்படும் அனைவரும் எங்கள் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும் இன்றே SEP இல் இணையுமாறும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்!

Loading