முன்னோக்கு

குடியரசு கட்சியின் தேசிய மாநாடு: ஒரு பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கம் பாசிசவாத வன்முறையைத் தூண்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொலிஸ் மற்றும் இராணுவத்தை முடிவின்றி கௌரவப்படுத்திய சொற்பொழிவாளர்களின் ஒரு அணிவகுப்புடன் சேர்ந்து, பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களைக் குண்டர்கள் மற்றும் அராஜகவாதிகள் என்ற குற்றஞ்சாட்டுக்களுடன், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நேற்றிரவு அதன் மூன்றாம் நாளை நிறைவு செய்தது.

விஸ்கான்சின் கெனொசாவில் கட்டவிழ்ந்து வரும் உடல்ரீதியான தாக்குதல் வன்முறை அந்த மாநாட்டின் வாய்மொழி வன்முறைக்கு துணை இணைப்பாக வழங்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு பாசிசவாத துப்பாக்கிதாரி, 26 வயதான ஜாக்கோப் பிளேக் மீதான பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை அடுத்து பொலிஸ் வன்முறைக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கியால் சுட்டார்.

17 வயதான Kyle Howard Rittenhouse என்ற அந்த துப்பாக்கிதாரி இரண்டு பேரைக் கொன்றதுடன், மூன்றாவது ஒருவரைக் கடுமையாக காயப்படுத்தினார், பின்னர் அவர் துப்பாக்கியுடன் பொலிஸ் இருந்த இடத்தைக் கடந்து சென்று இலினோயில் உள்ள அவர் வீட்டுக்குத் திரும்ப பொலிஸால் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவர் வீட்டில் பின்னர் கைது செய்யப்பட்டார்.

ஜனவரி 30 இல் ஐயோவாவின் டு மொய்ன் இல் ஒரு பிரச்சார பேரணியில் கலந்து கொண்ட ஒரு தீவிர ட்ரம்ப் ஆதாரவாளரான ரிட்டன்ஹவுஸ், அக்கூட்டத்தில் ஜனாதிபதியிடமிருந்து வெறும் ஒரு சில அடி தூரத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் காணொளியைக் காண முடிகிறது. அந்த நிகழ்வின் ஒரு டிக்டாக் காணொளியையும் அவர் பதிவிட்டிருந்தார். அதிதீவிர வலது துணை இராணுவப்படை குழுவான கெனொசா பாதுகாப்புப்படை போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸிற்கு பக்கபலமாக வலதுசாரி துப்பாக்கிதாரிகளை அந்நகருக்கு வருமாறு அழைப்பு விடுத்தபோது, அதற்கு விடையிறுத்தவர்களில் ரிட்டன்ஹவுஸூம் ஒருவராக இருந்தார்.

வெள்ளை மாளிகையிலிருந்து, கெனொசாவின் எரிவாயு நிலையம் வரையில் நிராயுதபாணியான அப்பாவி மக்கள் மீது ரிட்டன்ஹவுஸ் துப்பாக்கியால் சுட்டதில் அங்கே சங்கிலித் தொடர் போன்ற நேரடியான காரணகாரியங்கள் உள்ளது. மே 25 இல் ஜோர்ஜ் ஃபுளோய்டின் பொலிஸ் படுகொலைக்குப் பின்னர் தொடங்கிய முதல் போராட்டங்களில் இருந்து, பொலிஸிற்கு ஆதரவான மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிரான ட்ரம்பின் தொடர்ச்சியான பகட்டாரவார பேச்சுக்களில், “கொள்ளையடித்தல் தொடங்கும் போது, துப்பாக்கிச் சூடும் தொடங்குகிறது,” என்று மக்கள் உரிமை இயக்கத்தின் போது தெற்கு பகுதி ஷெரீஃப் முதன்முதலில் வெளிப்படுத்திய கருத்தையும் மற்றும் இழிவார்ந்த இனவாத கோஷங்களையும் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் ட்வீட்டரில் பதிவிட்டமையும் உள்ளடங்கும். ரிட்டன்ஹவுஸ் இந்த வார்த்தைகளை நடவடிக்கையில் கொண்டு வந்துள்ளார்.

துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அவர் உரையில், ஜனநாயகக் கட்சியினர் நிர்வகிக்கும் நகரங்களின் பட்டியலில் கெனொசாவையும் உள்ளடக்கினார், போர்ட்லாந்து மற்றும் சியாட்டல் உள்ளடங்கலாக அங்கெல்லாம் அராஜகம் கட்டவிழ்ந்துள்ளதாக குறிப்பிட்டதுடன், ட்ரம்பை நேசிக்கும் ஒரு பாசிசவாதியால் போராட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார்.

இரண்டரை மணி நேரத்தில், அம்மாநாட்டில் பேசிய ஒரேயொரு பேச்சாளர் கூட கெனொசா சம்பவங்களை மேலுயர்த்தவில்லை அல்லது ஒரு துளி வருத்தத்தையோ அல்லது ரிட்டன்ஹவுஸ் நடத்திய நடவடிக்கைகளுக்குக் கவலையையோ வெளிப்படுத்தவில்லை. புதன்கிழமை காலை வெளியிடப்பட்ட அவர் பெயரும் அவர் ட்ரம்ப் ஆதரவாளர் என்ற அவர் அடையாளமும் நிச்சயமாக மாலை 8.30 மணிக்கு அந்த மாநாட்டு அமர்வு தொடங்குவதற்கு முன்னமே தெரிந்திருந்தது.

இவ்வாறு கூட்டாக வாய்திறவாமல் இருப்பதானது பின்வருவதன் மீது சம்மதத்தை எடுத்துக்காட்டுகிறது: அதாவது, பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் மற்றும் ஒடுக்குமுறையின் ஏனைய வடிவங்களுக்கும் எதிராக போராடுபவர்களுக்கு எதிராக, குடியரசுக் கட்சி, சட்டத்தைத் தன் கையிலெடுக்கும் வன்முறை கட்சியாக ஆகியுள்ளது. இது ஏற்கனவே திங்கட்கிழமை எடுத்துக்காட்டப்பட்டது, அப்போது செயிண்ட் லூயிஸில் கறுப்பின மக்களின் உயிரும் மதிப்புடையதே (Black Lives Matter) இயக்கத்தின் போராட்டக்காரர்களை நோக்கி ஆயுதங்களை உயர்த்திக் காட்டி சட்டத்தை தம் கையிலெடுத்த செல்வச் செழிப்பான தம்பதியினர் மார்க் மற்றும் பாட்ரிசியா மெக்குளோஸ்கி அம்மாநாட்டில் உரையாற்றினர். (கறுப்பின) ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நகர் பகுதிகளின் பாதுகாவலராக ட்ரம்பை அவர்கள் புகழ்ந்துரைத்தனர்.

ஒரு பாசிசவாத இயக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவுகளினது முனைவு தான் ட்ரம்பில் வெளிப்பாட்டைக் காண்கிறது. அதுபோன்றவொரு இயக்கத்திற்கு இப்போது அங்கே ஒரு பாரிய சமூக அடித்தளம் இல்லையென்றாலும், ட்ரம்ப், எல்லை ரோந்துப்படை மற்றும் சுங்க அமலாக்கத்துறை போன்ற ஒடுக்குமுறையின் முன்னணி அமைப்புகளுக்கும் மற்றும் பொலிஸிற்கும்; இராணுவத்தின் பிரிவுகளுக்கும்; இனவாதம், புலம்பெயர்ந்தோர் விரோத வெறித்தனத்தையும் மற்றும் கம்யூனிச-எதிர்ப்பையும் அடித்தளமாக கொண்டு அணித்திரட்டப்பட்ட அதிதீவிர வலது மற்றும் பாசிசவாத கூறுபாடுகளுக்கும் அழைப்பு விடுத்து வருகிறார்.

அம்மாநாட்டின் முதல் பேச்சாளர், "நமது வாழ்வையும், நமது அண்டை பகுதிகளையும், நமது பள்ளிகள், தேவாலயங்கள் மற்றும் மதிப்புகளையும் அழிக்க முயலும் பழி உணர்ச்சி கொண்ட குண்டர்களை" எதிர்த்து நிற்கும் “மேற்கத்திய நாகரீகத்தின் பாதுகாவலராக" ட்ரம்பை அறிவித்த போதே, அம்மாநாட்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த பாசிசவாத தொனி அமைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் சபை உறுப்பினர் மடிசன் ஹாதோர்ன் (Madison Hawthorn) ஹிட்லரின் உல்லாச ஓய்விடமான Eagle's Nest க்கு (கழுகின் கூடு) விஜயம் செய்து வந்துள்ளார் என்ற செய்திகளுக்கு மத்தியில், அவர் புதன்கிழமை அம்மாநாட்டில் உரையாற்றியதுடன், “தலைவர்" பயன்படுத்திய இடத்தைப் பார்த்தது "அவரின் சாதனை பட்டியலில்" இருக்கும் என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

பாசிசவாத Qanon இணைய சூழ்ச்சி தத்துவத்தின் ஒரு பகிரங்க ஆதரவாளரான குடியரசு கட்சியின் காங்கிரஸ் சபை வேட்பாளர் Marjorie Taylor Greene இன்று வெள்ளை மாளிகைக்கு விருந்தினராக அழைக்கப்பட இருப்பதாகவும், அப்போது ட்ரம்ப் அவரை ஆமோதிக்கும் உரை வழங்குவார் என்றும் பத்திரிகை செய்திகள் குறிப்பிட்டன. 14 வது காங்கிரஸ் மாவட்டமான ஜோர்ஜியாவில் குடியரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் ஜெயித்த Greene, குடியரசு கட்சியின் பலம் வாய்ந்த அந்த மாவட்டத்தில் பொது தேர்தலில் ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுக் கட்சி மாநாடு, வெறியர்கள், எடுபிடிகள், பணம்-பறிப்பவர்கள் மற்றும் முற்றுமுதலான பாசிசவாதிகளின் ஓர் இழிவான கூட்டமாக உள்ளது, ஆனால் இந்த உண்மை அது பிரதிநிதித்துவம் செய்யும் ஆபத்தைக் குறைத்துவிடாது. இரண்டு பிரதான முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்று, அதாவது அமெரிக்க முதலாளித்துவத்தின் உத்தியோகபூர்வ அரசியல் அமைப்புமுறையில் பாதி, அமெரிக்காவில் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை ஸ்தாபிக்க ஒரு பாசிசவாத இயக்கத்தைத் தூண்டிவிட முயன்று வரும் ஜனாதிபதியின் மேற்பார்வையில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் அச்சுறுத்தலான அபிவிருத்தியாகும்.

இந்த அபாயம் ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்யும் மற்றும் முறையிடும் சமூக சக்திகளின் உள்ளார்ந்த பலத்திலிருந்து எழவில்லை, மாறாக தொழிலாள வர்க்க போராட்டங்களை ஒடுக்குவதில் ஜனநாயகக் கட்சி மற்றும் நடுத்தர வர்க்க "இடது", அத்துடன் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரத்தில் இருந்து எழுகிறது.

ட்ரம்ப் அவரின் எல்லா அரசியல் நடவடிக்கைகளிலும், சமூக நலன்களில் ஆழ்ந்த திவால்நிலையான, அந்த முதலாளித்துவ எதிர்கட்சியின் திவால்நிலையை பயன்படுத்த முற்படுகிறார். நிதியியல் செல்வந்த தட்டுக்களைச் செல்வ செழிப்பாக்குவதற்காக அர்பணித்து கொண்டுள்ள ஒரு முதலாளித்துவக் கட்சியான ஜனநாயகக் கட்சி, சில வேளைகளில் சமூகத்தின் உயர்மட்ட ஒரு சதவீதத்தினருக்குள் செல்வவளத்தை நியாயமாக வினியோகிப்பது குறித்து —அது இன மற்றும் பாலின வேற்றுமையின் அதிக அக்கறையுடன் ஒதுக்கப்பட வேண்டுமென—குறைகூறுகிறது, ஆனால் இந்த இலாபகர அமைப்புமுறையின் அடிப்படை கட்டமைப்பைச் சவால்விடுக்கவில்லை.

ட்ரம்புக்கான ஜனநாயகக் கட்சி "எதிர்ப்பின்" நிஜமான தன்மை 2016 இல் ட்ரம்பால் தோற்கடிக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் அசாதாரண கருத்துக்களில் வெளிப்பட்டது. அவர் கடந்த வார பேட்டி ஒன்றில், நவம்பர் 3 தேர்தல் முடிவு சிறிய வித்தியாசத்தில் இருந்தால் 2020 ஜனநாயகக் கட்சி வேட்பாளர் காலத்திற்கு முந்தியே விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்று அறிவுறுத்தினார். “இது இழுத்தடிக்குமென நான் நினைப்பதால், ஜோ பைடென் எந்தவொரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது, இதனால் நாம் ஒரு இம்மிகூட இடமளிக்காமல் இருந்தாலும், நாம் எதிர்தரப்பைப் போலவே அதேயளவுக்கு ஒருமுனைப்புடன் அயராது இருந்தால் அவரால் ஜெயிக்க முடியுமென நான் நம்புகிறேன்,” என்றார்.

தேசியளவிலும் மற்றும் தேர்தல் கல்லூரி போட்டியில் முடிவைத் தீர்மானிக்கும் மாநில "போர்க்களம்" அனைத்திலும் என இரண்டு வித கருத்துக்கணிப்புகளிலும், பைடென் தான் தேர்தலில் விருப்பத்திற்குரிய வேட்பாளராக கூறப்படுகிறார். ஆனால் கிளிண்டனின் அறிவுரையைச் சுலபமாக புறக்கணித்து விட முடியாது! கிளிண்டன் 2000 இல் காலத்திற்கு முந்தியே அல் கோரிடம் சரணடைந்ததை வெளிப்படையாக நினைவூட்டுகிறார், அவர் புஷ்ஷிற்கு ஒரு விட்டுக்கொடுப்பு அழைப்பை செய்தார் பின்னர் அதிலிருந்து அவர் பின்வாங்க வேண்டியிருந்தது. எவ்வாறிருப்பினும் கிளிண்டனின் அறிவுரை அவரின் எதிர்பார்ப்புகளின் ஒரு துணுக்கொளியாக இருப்பதுடன் பைடென் முகாமின் போராடும் வேகம் குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பதற்கும் இரண்டு விதத்திலும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

ட்ரம்ப் விரும்பாத தேர்தல் முடிவுகளை அவர் சர்வசாதாரணமாக ஏற்க மறுத்து பதவியிலிருந்து விலக மறுத்தால், பைடென் இந்த கோடையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல, ட்ரம்பை வெள்ளை மாளிகையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற அவர் இராணுவத்தை எதிர்பார்க்கக் கூடுமென அறிவுறுத்தியதைத் தவிர, அத்தகைய சூழலில் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதைக் குறித்து எந்த ஜனநாயகக் கட்சியினரும் எதுவும் குறிப்பிடவில்லை.

ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியின் நிஜமான சமூக அந்தஸ்து குடியரசு கட்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட பல்வேறு பிற்போக்குத்தனமான பாசிசவாத முறையீடுகள் அனைத்தினது பொதுவான தன்மையில், அதாவது அச்சத்தில், எடுத்துக்காட்டப்படுகிறது.

மில்லியன் கணக்கானவர்களை வீதிகளுக்குக் கொண்டு வந்த பொலிஸ் வன்முறைக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள்; ஓர் உயிராபத்தான தொற்றுநோய் நிலைமைகளின் கீழ் பாதுகாப்பற்ற வேலையிடங்களுக்கு மீண்டும் திரும்ப அழுத்தமளிக்கப்படுவதற்காக ஆசிரியர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளிலும் அதிகரித்து வரும் எதிர்ப்பு; ட்ரம்ப் நிர்வாகமும் மாநில அரசாங்கங்களும், ஜனநாயகக் கட்சியும் சரி குடியரசுக் கட்சியும் சரி, இந்த பேரிடருக்கு எந்தவொரு கூட்டான சமூக விடையிறுப்பையும் நாசப்படுத்தி வரும் நிலையில், கொரொனா வைரஸ் மரண எண்ணிக்கை 200,000 ஐ நோக்கி சென்று கொண்டிருக்கையில், ஒட்டுமொத்த மக்களிடையே அதிகரித்து வரும் சீற்றம் என அதிகரித்து வரும் சமூக போராட்டங்கள் கோலோச்சும் ஒரு சூழலில் ட்ரம்பும் அவர் எடுபிடிகளும் செயல்பட்டு வருகின்றனர்.

குடியரசுக் கட்சி மாநாட்டில் நிலவிய கடிவாளமற்ற உணர்ச்சிப் பெருக்கு வெறுமனே தேர்தல் நோக்கங்களை மட்டும் எடுத்துக்காட்டவில்லை. அது மாநாட்டில் பங்கெடுத்த அதிதீவிர வலது ஆர்வலர்களின் பாகத்திலிருந்து மட்டுமல்ல, மாறாக அதிகரித்தளவில் அது சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாகக் காணும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் பாகத்திலிருந்தே, ஓர் ஆழ்ந்த தனிமைப்படல் மற்றும் பலவீன உணர்வை எடுத்துக்காட்டுகிறது.

ஒரு பேச்சாளர் மாற்றி ஒரு பேச்சாளர் சோசலிசத்தைக் கண்டிக்கின்ற போதும், ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டால் அதைத் தொடர்ந்து தவிர்க்கவியலாமல் சோசலிசம் ஏற்படும் என்று அறிவிக்கின்ற போதும், அவர்கள் இந்த அபாயத்தை மோசடியாக பைடென் மீதும் எந்தவித தாக்கத்தையும் கொண்டிராத ஜனநாயகக் கட்சியினர் மீதும் சாட்டுகின்றனர். ஆனால் உழைக்கும் மக்களிடையே முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திரும்பிய ஒரு பாரிய இயக்கத்தின் அதிகரித்து வரும் வளர்ச்சியே அவர்களின் நிஜமான கவலையாக உள்ளது.

Loading