எதிர்த்தரப்பு தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு நஞ்சுட்டப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ரஷ்யாவை ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று, ஜேர்மனியின் பேர்லின் நகரின் Charite மருத்துவமனை மருத்துவர்கள், ரஷ்யாவின் நேட்டோ சார்பு தாராளவாதக் கட்சியின் தலைவரான அலெக்ஸி நவால்னிக்கு (Alexei Navalny) நஞ்சுடப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளை தாங்கள் கண்டறிந்துள்ளதாக கூறினர். Charite தனது கண்டுபிடிப்புக்களின் படி, “கோலினெஸ்டெரேஸ் (cholinesterase) தடுப்புமருந்துகளின் செயலில் உள்ள வஸ்துகளின் குழுவிலிருந்து ஒரு போதை வஸ்து,” அவருக்கு வழங்கப்பட்டுள்ளது, என்றாலும் குறிப்பிட்ட அந்த வஸ்து பற்றி இன்னும் அறியப்படவில்லை என்று கூறியது. நவால்னிக்கு அதற்கான மாற்று மருந்தாக அத்திரோபீன் (atropine) கொடுத்து சிகிச்சையளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பேர்லினும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இந்த நிகழ்வை உடனடியாக தமக்கு சார்பாக பற்றிக்கொண்டன. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் (CDU) வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸூம் (SPD) வழங்கிய ஒரு கூட்டறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “ரஷ்யாவின் அரசியல் எதிர்த்தரப்பில் திரு நவால்னியின் முக்கிய பங்கை கருத்தில் கொண்டு, இந்த செயல் குறித்து விரைந்து முழுமையான விசாரணையை மேற்கொள்ள நாட்டின் அதிகாரிகள் அவசரமாக அழைக்கப்படுகிறார்கள், இது முற்றிலும் வெளிப்படையான முறையில் இருக்க வேண்டும்.” மேலும், இதற்கு காரணமானவர்களை “அடையாளம் கண்டு அவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும்,” என்று அவர்கள் கோரிக்கை விடுத்ததுடன், “நவால்னி முழுமையாக நலமுடன் மீண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம். மிகுந்த சவாலானதொரு அனுபவத்தை எதிர்கொள்ளும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் கூறினர்.

அலெக்ஸி நவால்னி(நன்றி: விக்கிமீடியா காமன்ஸ்)

ஐரோப்பிய ஒன்றியமும் விசாரணை செய்யக் கோரியது. “ரஷ்ய அதிகாரிகள் ஒரு சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையைத் தொடங்க வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு பிரதிநிதி ஜோசப் பொரெல் (Josep Borrell) திங்கட்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் கோரினார். அதேபோல, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையும், “ரஷ்ய அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய நபரை குறிவைக்கும் குற்றவியல் நடவடிக்கை” என்று இதை கண்டித்து, “ஒரு விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு” கோரிக்கை விடுக்கிறது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitri Peskov), நவால்னியின் நோய் குறித்து குற்றவியல் விசாரணையைத் தொடங்குவதற்கான எந்தவித திட்டமும் மாஸ்கோவிடம் இல்லை என்று அறிவித்தார். “எங்களது மருத்துவர்களின் மற்றும் ஜேர்மனியில் உள்ள மருத்துவர்களின் மருத்துவ பகுப்பாய்வு முற்றிலும் உடன்பட்டது. ஆனால் அவர்களது முடிவுகள் வேறுபட்டவை. எங்களது ஜேர்மன் சகாக்களின் அவசரம் பற்றி எங்களுக்கு புரியவில்லை” என்று பெஸ்கோவ் கூறினார். நவால்னியின் நோயைப் பற்றி விளக்க “வேறு பல மருத்துவ சாத்தியப்பாடுகளும்” இருப்பதாக அவர் வலியுறுத்தினார்; அதாவது ரஷ்ய மருத்துவர்கள் ஆரம்பத்தில் நவால்னி கலவளர்ச்சி மாற்றக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கண்டறிந்தனர் என்கிறார்.

ஆகஸ்ட் 20 அன்று டோம்ஸ்கில் இருந்து மாஸ்கோவிற்கு விமானத்தில் பயணிக்கையில் திடீரென நோய்வாய்ப்பட்ட நவால்னிக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எவ்வாறாயினும், தெளிவான விடயம் என்னவென்றால், பெப்ரவரி 2014 இல் உக்ரேனில் கியேவில் நேட்டோ ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்புடன் தொடங்கப்பட்டு, ரஷ்யாவை தனிமைப்படுத்தவும், ஆட்சி மாற்றத்தை பாதுகாக்கவும் வாஷிங்டன், பேர்லின் மற்றும் ஏனைய நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் கொண்டிருக்கும் உந்துதல் ஒரு புதிய மற்றும் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதே. பெலாரூஸில் ஆகஸ்ட் 9 ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னர் ஒரு வெடிக்கும் நெருக்கடி உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய மூலோபாயத்தின் நோக்கில், பெலாரூஸில் தொழிலாள வர்க்கம் திடீரென நடவடிக்கைகளில் இறங்கியதனால், இந்த நெருக்கடி மேலும் சிக்கலாகியுள்ளது.

பெப்ரவரி 2014 இல் உக்ரேனில், ரஷ்ய ஆதரவு அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய சார்பு ஆர்ப்பாட்டங்களை தகர்த்ததன் பின்னர், கியேவில் ஒரு தீவிர வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பை நேட்டோ ஆதரித்தது. இந்த நடவடிக்கையின் போது, எதிர்க்கட்சி துப்பாக்கிதாரிகள், ஆட்சியை இழிவுபடுத்தி பின்னர் கவிழ்ப்பதற்கு பொலிஸ் ஒடுக்குமுறையை பயன்படுத்தி அடுத்து நடந்த “துப்பாக்கிச்சூடு படுகொலைகள்” என்றழைக்கப்பட்ட நிகழ்வில் உக்ரேனிய கலகப் பிரிவு பொலிஸை இரகசியமாக சுட்டுக் கொன்றனர். இது உக்ரேனில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்ததோடல்லாமல், கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்ய எல்லைகளில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு வெடிக்கும் இராணுவ நிலைப்பாட்டிற்கும் வழிவகுத்தது. அனைத்து பால்டிக் குடியரசுகள், போலந்து மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ துருப்புக்களும் இராணுவ ஆலோசகர்களும் தற்போது அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த மாதம், பெலாரூஸில், பதவியிலிருக்கும் ஜனாதிபதி அலெக்சாண்டர் லூக்காஷென்கோவின் வெற்றி பிரகடனத்தை எதிர்த்து எதிர்க் கட்சி படைகள் போராட்டங்களைத் தொடங்கியமையானது ஒரு மிருகத்தனமான பொலிஸ் ஒடுக்குமுறைக்கு வழிவகுத்ததுடன், பெலாரூஸ் எங்கிலுமுள்ள தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் வேலைநிறுத்தங்கள் வெடித்தன. முன்னாள் சோவியத் குடியரசில் எழுந்த தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை நடவடிக்கையின் எழுச்சி அனைத்து அரசியல் பிரிவுகளினது முதலாளித்துவ சக்திகளையும் அதிர்ச்சியடையச் செய்தது. கிரெம்ளின் லூக்காஷென்கோவை ஆதரிக்கும் அதே வேளையில், போட்டி வேட்பாளர் ஸ்வெட்லானா டிகோனோவ்ஸ்காயாவுடன் தொடர்புடைய எதிர்க்கட்சிகளால் அமைக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்புக் குழுவிற்கு (Coordination Council) ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிக்கிறது.

மேலும், சமூக சமத்துவமின்மை மீதான கோபமும், கோவிட்-19 தொற்றுநோயை பேரழிவுகரமாக உத்தியோகபூர்வமாக கையாளுவதும் பெலாரூஸிய தொழிலாளர்கள் தீவிர நடவடிக்கைகளில் இறங்க உதவியதுடன், பெலாரூஸூக்கு அப்பாலும் அது விரிவடைந்தது. ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ரஷ்ய ஆளும் உயரடுக்கு மற்றும் ரஷ்ய தொழிலாளர்கள் இருவருக்குமே அதிகரித்தளவில் அதிருப்தி நிலவுவதானது, தீவிர வலதுசாரி ரஷ்யாவின் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் (Liberal Democratic Party of Russia-LDPR) பிராந்திய ஆளுநர் செர்ஜி ஃபுர்கலை (Sergei Furgal) கிரெம்ளின் நீக்குவதற்கு எதிராக கடந்த மாதம் தூர கிழக்கு நகரமான கபரோவ்ஸ்கில் (Khanafovsk) நடந்த ஆர்ப்பாட்டங்களில் இது மிகவும் சிதைந்த முறையில் பிரதிபலித்தது.

செப்டம்பர் 13 அன்று ரஷ்யாவில் 18 பிராந்தியங்கள் பிராந்திய தேர்தல்களை நடத்தவுள்ள நிலையில், ரஷ்ய அரசு அமைப்பினுள் அதிகரித்துவரும் பிரிந்துபோகும் போக்குகளை கபரோவ்ஸ்கி ஆர்ப்பாட்டங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

நவால்னிக்கு உண்மையில் நஞ்சுட்டப்பட்டிருந்தால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நேரம் காரணமாக இது ஒரு அரசியல் நடவடிக்கை தான் என்பதை உறுதியாகக் கூறுகிறது. என்றாலும், யார் இதைச் செய்திருப்பார்கள், எதை அடைவதற்குச் செய்திருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு அடிப்படையான சாத்தியங்கள், பல தொடர்புடைய மாறுபாடுகளுடன் வெளிப்படுகின்றன. ஒன்று, புட்டின் ஆட்சியில் உள்ள பிரிவினரால் அவருக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ அல்லது ஜனாதிபதியின் ஆதரவுடனோ நவால்னிக்கு நஞ்சு அளிக்கப்பட்டிருக்கலாம், என்றாலும் ஒரு பொறுப்பற்ற மற்றும் வெளிப்படையான செயல் கிரெம்ளின் ஆட்சியை வலுப்படுத்துமா என்பது கேள்விக்குரியதே.

மற்றொரு சாத்தியம் என்னவென்றால், கிரெம்ளினை குற்றம்சாட்டுவதற்கு தாம் எதிர்பார்க்கும் ஒரு செயலைச் செய்வதன் மூலம் ரஷ்ய ஆட்சியை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ரஷ்யாவில் உள்ள எதிர்க்கட்சிகளோ அல்லது அவர்களது ஏகாதிபத்திய கையாட்களோ மற்றொரு “வேறொருவரின் பெயரிலான” தாக்குதலினால் நவால்னிக்கு ஆபத்தான அளவிற்கு நஞ்சைக் கொடுத்திருக்கலாம்.

இத்தகைய தாக்குதல், நவால்னியின் சிறந்த எதிர்ப்பிற்கான நற்சான்றிதழ்களுக்கு மெருகூட்டும் அரசியல் ரீதியான வசதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 2009 ஆம் ஆண்டில் “Yale World Fellows” திட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு முன்னர், ஒரு மோசமான புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு அரசியல்வாதியான நவால்னி, 2006 ஆம் ஆண்டில் ஜனநாயகத்திற்கான தேசிய நன்கொடை வழங்கல் திட்டம் (National Endowment for Democracy) வழியாக அமெரிக்க அரசாங்க நிதியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர் தற்போது ரஷ்ய மக்களின் பரந்த அடுக்குகளுக்கு மத்தியில் நேட்டோவின் ஒரு கருவியாக பார்க்கப்படுகின்றார்.

நவால்னிக்கு நஞ்சு கொடுத்த தாக்குதல்காரர் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், முன்னணி ஐரோப்பிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் புட்டின் ஆட்சியை உரக்க குற்றம்சாட்ட விரைகின்றனர்.

“ஏற்கனவே ஒரு வலுவான சந்தேகம் இருந்தபோதிலும், நஞ்சு கொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்பதுடன், ரஷ்ய தலைமையின் ஒரு வெறுக்கத்தக்க கொள்கையும் வெளிப்படுகிறது,” என்று ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) வெளியுறவுக் குழுவின் தலைவரான நோர்பேர்ட் ரொட்ஜென் (Norbert Rottgen) தெரிவித்தார். “இந்த நஞ்சுட்டும் கொள்கை எதிர்க்கட்சி உறுப்பினர்களை நயவஞ்சகமாக நீக்குவதையும் மற்றும் அனைத்து ரஷ்ய குடிமக்களுக்கும் ஒரு தெளிவான செய்தியை அனுப்புவதையும் உள்ளடக்கியது: அதாவது ஜனநாயக ரீதியாக எதிர்ப்பவர்கள் ஆபத்துக்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். ரஷ்யாவை நோக்கி, குறிப்பாக ஜேர்மனியில், அப்பாவித்தனமாகவும் அற்பமாகவும் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்படும் எதற்கும் இப்போது இடமில்லை,” என்று ரோட்ஜென் தெரிவித்தார்.

ஜேர்மன் பசுமைக் கட்சியின் வெளியுறவுக் கொள்கை செய்தித் தொடர்பாளர் ஓமிட் நோரிபோரும் (Omid Noripour) ரஷ்யாவை குற்றம்சாட்டினார். அவர், “இந்த வகையான படுகொலை அல்லது கொலைக்கான ஒரு முறை உள்ளது என்பது இப்போது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது,” என்று கூறினார். மேலும், பிரிட்டனின் சாலிஸ்பரி நகரில் உள்ள ஸ்கிரிப்பால் (Skripal) குடும்பத்திற்கு மாஸ்கோ நஞ்சு கொடுத்தது மற்றும் பேர்லினில் உள்ள ரியர்கார்டனில் (Tiergarten) செச்சென் (Chechen) ஆயுதக்குழுவின் முன்னாள் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு, அவர் “சாலிஸ்பரி தாக்குதலுக்குப் பின்னர் பிரிட்டிஷ் ஐரோப்பிய ஒன்றிய குழுவை அழைத்தது, ஆனால் ரியர்கார்டன் கொலைக்குப் பின்னர் ஜேர்மன் அரசாங்கம் அதைச் செய்யவில்லை. இப்போது இது மிகச் சரியான நேரம் என்பதுடன் அதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் உள்ளது – எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி [ஐரோப்பிய ஒன்றிய] குழுவின் தலைமைப் பதவியை வகிக்கிறது” என்றும் கூறினார்.

இதேபோல, “புட்டின் அமைப்பைப் பற்றி நவால்னி விவகாரம் என்ன வெளிப்படுத்துகிறது,” என்று தலைப்பிலான கட்டுரையில், லு மொன்ட் நாளிதழின் மாஸ்கோ நிருபர் பெனாய்ட் விட்கைன் (Benoit Vitkine), நவால்னியின் நோய்க்கு புட்டின் தான் காரணம் என்பதற்கான சான்றாக, தற்போது ரஷ்ய எதிர்க்கட்சி ஆதரவாளர்களால் பயன்படுத்தப்படும் #WeKnowWholsGuilty என்ற ட்விட்டர் ஹேஷ்டேக்கை வெளிப்படையாக மேற்கோள்காட்டி, இவ்வாறு தெரிவித்தார்: “மனித உரிமைகளுக்கான பிரான்சின் தூதர் இந்த அழைப்பை எதிரொலித்துள்ளார். அதாவது, அரசியல் வன்முறை புட்டின் அமைப்புக்கு இயல்பானது என்ற சாதாரண உண்மை இந்த வார்த்தைகளுக்கு பின்னால் உள்ளது.”

உண்மையில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் புவிசார் அரசியல் ரீதியான அதற்கே பாதகமான 1991 சோவியத் ஒன்றிய கலைப்புக்குப் பிந்தைய 30 ஆண்டுகளுக்கு பின்னர், முதலாளித்துவ அமைப்பிற்கு பிற்போக்குத்தன வன்முறை இயல்பானது என்பதைக் காட்டுகிறது. மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் நிலவும் நேட்டோ போர் உந்துதல், ஏகாதிபத்திய சக்திகளுக்கான பிரதான இராணுவ எதிர்ப்பை நீக்குவதை சாத்தியமாக்கியதோடு, மில்லியன் கணக்கான இறப்புக்கள் மற்றும் பல மில்லியன் கணக்கான அகதிகளுடனான பேரழிவுகர அடிச்சுவட்டை விட்டுச் சென்றது. உக்ரேன் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், ஒரு அணுவாயுத சக்தியான ரஷ்யா மீதான நேரடி நேட்டோ தாக்குதலுக்கு அதிகரித்தளவில் இராணுவப் பயிற்சிகளும் தயாரிப்புகளும் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

முன்னர் சோவியத் ஒன்றியத்தின் எல்லைக்குள் இருந்த வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சி, இந்த அரசியல் நெருக்கடியில் ஒரு குறிப்பிடத்தக்க புதிய கட்டத்தை எட்டுவதைக் குறிக்கிறது. நேட்டோ சக்திகள், பெருகிவரும் போர்கள் மற்றும் வர்க்கப் போராட்டங்களின் ஒரு காலகட்டத்தில் ரஷ்ய அரசியலில் தலையிடுவதற்கான ஒரு கருவியாக நவால்னியை வைத்திருக்கின்றன என்பது அநேகமாக சுய தெளிவாகிறது. ரஷ்யாவிற்குள் அதிக அதிகாரத்தைப் பெறும் வகையில் நவால்னியைச் சுற்றியுள்ள எவ்வாறான அரசியல் சக்திகள் இருந்திருந்தாலும், அவை இன்னும் தொழிலாள வர்க்கத்திற்கு கடுமையாக விரோதமாக இருக்கும்.

ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான பாரிய தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் மீள் எழுச்சியின் ஊடாக மட்டுமே, போர் அபாயம், வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் பேரழிவுகரமாக உத்தியோகபூர்வமாக கையாளப்படுவது ஆகியவற்றிற்கு ஒரு முற்போக்கான அடிப்படையில் தீர்வு காண முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால், ரஷ்யா, பெலாரூஸ் மற்றும் இந்த பிராந்தியம் எங்கிலும், முதலாளித்துவத்தின் ஸ்ராலினிச மீள்புனருத்தானத்தில் இருந்து தோன்றிய முதலாளித்துவ குண்டர் தன்னலக்குழுவை எதிர்க்கும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை உருவாக்குவதாகும். இது, போருக்கும் மற்றும் தொற்றுநோய்க்கு மத்தியில் உலகளவில் முதலாளித்துவ அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ள கொலைகார கொள்கைகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் பாரிய, சர்வதேச அளவிலான இயக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்.

Loading