கிரேக்க-துருக்கிய விட்டுக்கொடுப்பற்ற நிலை கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் போர் அபாயத்தைத் தீவிரப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

துருக்கி மற்றும் கிரீஸிற்கு இடையே கிழக்கு மத்திய தரைக்கடலில் தீவிரமடைந்து வரும் மோதல் ஒரு புதிய அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. நேட்டோ உறுப்பு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் மத்தியத்தரைக்கடல் பகுதி மற்றும் உலகிற்கே தீமூட்டிவிடக்கூடிய மோதல்களில் ஒருவருக்கு எதிராக ஒருவர் மீது போர் தொடுக்க பகிரங்கமாகவே அச்சுறுத்தி வருகிறார்கள்.

கடந்த வியாழக்கிழமை, துருக்கியின் F-16 ரக ஜெட் விமானங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்காக துருக்கி அகழ்ந்து வரும் கிழக்கு மத்திய தரைக்கடல் பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளின் மீது கீறேற் கிரேக்க தீவுக்கு அருகில் கிரீஸின் F-16 ரக விமானங்களை வழிமறித்தன. ஜூலையில் கிரேக்க மற்றும் துருக்கிய கடற்படை இஃப்ளோடில்லா விரைவுபடகுகள் ஒன்றை நோக்கி ஒன்று நேரடியாக செலுத்தப்பட்டன, இதில் பேர்லின் தலையிட்டு அங்காராவை அழைத்து துருக்கிய கப்பல்களின் போக்கை மாற்றுமாறு கட்டளையிட்ட போது கடைசி நிமிடத்தில் மட்டுமே ஒரு மோதல் தவிர்க்கப்பட்டது. ஆகஸ்டில் கிரீஸிற்கு ஆதரவாக பிரான்ஸ் இரண்டு போர்க்கப்பல்களையும் ரஃபால் போர் விமானங்களையும் அனுப்பிய போது பதட்டங்கள் அதிகரித்திருந்தன.

பேர்லினில் வெள்ளிக்கிழமை நடந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் துருக்கிக்கு எதிராக கிரீஸை ஆதரித்து மேற்கொண்டு இன்னும் ஆக்ரோஷமான நிலைப்பாடு எடுக்கும் போக்கில் இருந்தது. அந்த கூட்டத்திற்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் கூறுகையில், “கிரீஸ் மற்றும் சைப்ரஸ் உடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லுறவையும் நலன்களையும் பாதுகாப்பதில் நாங்கள் தெளிவாகவும் தீர்மானமாகவும் உள்ளோம். துருக்கி ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க வேண்டியிருக்கும்,” என்றார்.

துருக்கியின் ஜெனரல் டைனமிக்ஸ் F-16 ரக போர் விமானம் (படம்: ரோபர்ட் சுலிவன்/ விக்கிபீடியா)

இம்மாத இறுதியில் துருக்கிய பொருளாதாரத்தின் குரல்வளையை நெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடையாணைகளை விதிக்குமென பொரெல் சூசகமாக குறிப்பிட்டார். “துருக்கி மற்றும் கிரீஸ் மற்றும் சைப்ரஸிற்கு இடையே பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வுகள் காண்பதற்கான இந்த முயற்சியில் ஜேர்மன் எடுத்த முயற்சிகளுக்கு" நன்றி கூறிய அதேவேளையில், அவர் துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு "அதிகரித்து வரும் ஏமாற்றத்தை" வெளியிட்டதுடன், துருக்கிய அதிகாரிகளுக்கு எதிராக தடையாணைகளைப் பரிந்துரைத்தார். பரந்த "கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், 24-25 செப்டம்பரில் ஐரோப்பிய கவுன்சிலில் விவாதிக்கப்படும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பின்னர் கேட்கப்பட்ட கேள்விகளின் போது, “துருக்கிய பொருளாதாரம் ஐரோப்பிய பொருளாதாரத்துடன் அதிகளவில் பிணைந்துள்ள" தொழில்துறைகளை ஐரோப்பிய ஒன்றியம் இலக்கில் வைக்கக்கூடும்,” என்பதை விவரித்தார்.

அதேநாள், ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கிரீஸில் பிரெஞ்சு நிலைநிறுத்தல்களை சிரியா மீது பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா குண்டுவீசியதை சந்தித்த "செங்கோட்டு" கொள்கையுடன் ஒப்பிட்டு, ஓர் அசாதாரண அச்சுறுத்தலை விடுத்தார். சிரிய ஆட்சி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி இருந்தது என்ற மோசடியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த 2018 குண்டுவீச்சு, சிரிய விமானப்படை பாதுகாப்புகளை மாஸ்கோ தீவிரமாக கட்டமைப்பதற்கு இட்டுச் சென்றது.

அவர் கொள்கையை ஆக்ரோஷமான இராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே முன்னோக்கிய பாதை என்ற கண்ணோட்டத்தின் இருப்பதாக மக்ரோன் தெரிவித்தார். “மத்திய தரைக்கடல் இறையாண்மை என்று வரும்போது, நான் சொல்லுக்கும் செயலுக்கும் இணக்கமாக இருக்க வேண்டும்,” என்றார். “துருக்கியர்கள் வெறுமனே அதை கருத்தில் கொண்டு மதிக்கிறார்கள் என்று மட்டுமே என்னால் கூற முடியும். நீங்கள் ஒன்று கூறினால் அதை நடவடிக்கைகள் பின்தொடர வேண்டும் … இந்த கோடையில் பிரான்ஸ் என்ன செய்ததோ அது முக்கியமானது: அதுவொரு செங்கோட்டு கொள்கை. இதை நான் சிரியாவில் செய்தேன்.”

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவிலான கிரேக்க கொள்கை போரைத் தூண்டிவிடுமென எச்சரித்ததன் மூலமாக துருக்கிய அதிகாரிகள் இந்த வாரயிறுதியில் விடையிறுத்தனர். நேரடியாக துருக்கிய கடற்கரை பகுதிக்கு அருகில் உள்ள கிரேக்க தீவுகளைச் சுற்றியுள்ள ஆறிலிருந்து 12 மைல்கள் தூரம் வரையிலான பகுதிகள் உட்பட கிரீஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தை விரிவாக்குவதற்கான கிரேக்க பிரதம மந்திரி Kyriakos Mitsotakis இன் அச்சுறுத்தல்களையும், இந்த தீவுகளில் கிரீஸ் அதன் தரைப்படைகளைப் பலப்படுத்தி வருகிறது என்ற செய்திகளையும் அவர்கள் மேற்கோளிட்டனர்.

“இது போருக்கான அடித்தளமாக, போர் அறிவிப்பாக ஆகிவிடக்கூடும்,” என்று துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் Mevlüt Çavuşoğlu அறிவித்த அதேவேளையில், துணை ஜனாதிபதி Fuat Oktay, “அது போருக்கான அடித்தளமாக இல்லையென்றால், அது என்ன?” என்றார்.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறுகையில், “மத்திய தரைக்கடலில் மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள நம் நாட்டை, இங்கிருந்து ஒரு மீன்பிடி பிரம்பைக் கொண்டே உங்களால் மீன்பிடிக்க முடியும் என்கின்ற நிலையில், இதை சிறைப்பிடிப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது,” என்றார். அங்காரா ஏற்கனவே பல கடல்வழி போக்குவரத்து உரிமைகோரல்களைப் பணயத்தில் வைத்துள்ளது, அது சைப்ரஸ் மற்றும் கிரீஸ் வழியாக, இஸ்ரேலில் இருந்து இத்தாலி மற்றும் ஐரோப்பிய பெருநிலம் வரையில் கொண்டு செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள எரிவாயு குழாய் அமைப்பு திட்டங்களை முடக்கி வைத்துள்ளது.

இந்த கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி மோதல், தசாப்தங்களாக ஏகாதிபத்திய போர்களின் விளைவாகும், அதுவும் குறிப்பாக 2011 இல் இருந்து லிபியா, சிரியா மற்றும் ஈராக் மீதான நேட்டோ போர்களின் விளைவாகும். இத்தகைய போர்கள் லிபியாவை தசாப்தமாக உள்நாட்டு போரில் மூழ்கடித்துள்ளதுடன், சிரியாவில் நேட்டோ ஆதரவிலான இராணுவக் குழுக்களுக்கும் ரஷ்ய, சீன, ஈரானிய ஆதரவிலான ஆட்சிக்கும் இடையே ஒரு பேரழிவுகரமான பினாமி போரைத் தூண்டிவிட்டது. 1914 இல் முதலாம் உலக போர் தொடங்கிய போது இருந்ததைப் போலவே இப்போதும் கடலுக்கு அடியிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான போட்டியாளர்கள் ஒரு பிரதேசத்தில் பற்ற வைத்துள்ள நெருப்பு ஒரு பிராந்திய உலகளாவிய போராக வெடிக்க அச்சுறுத்துகிறது.

ஒரு தசாப்தமாக ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கையால் சீரழிக்கப்பட்ட துருக்கிய மற்றும் கிரேக்க அரசாங்கங்கள் இரண்டுமே மக்கள் செல்வாக்கிழந்து, போர்க் காய்ச்சலை தூண்டிவிடுவதன் மூலமாக தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று வருகின்றன. ஆனால் இந்த கொள்கை, சந்தைகள் மற்றும் மூலோபாய ஆதாயங்களுக்காக சுழன்று வரும் உலகளாவிய மோதல்களின் குழப்பங்களுக்கு மத்தியில், ஐரோப்பாவை முதலாம் உலக போருக்குள் மூழ்கடித்த அதேபோன்ற பொருளாதார போட்டியாளர்களுக்குள் கட்டவிழ்ந்து வருவதுடன், அவை மத்திய தரைக்கடலில் நிலவும் விட்டுக்கொடுப்பற்ற நிலைமையில் தயவுதாட்சண்யமின்றி எரியூட்டி வருகின்றன.

இப்பிரதேசம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சிரிய தோல்விக்குப் பின்னர் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அவற்றின் இடங்களை மீளப்பலப்படுத்துவதற்கான அவற்றின் முயற்சிகளுக்கு, புவிசார் அரசியல்ரீதியில், அப்பிராந்தியம் முக்கியமானது என்பது மட்டுமல்ல, மாறாக அது ஐரோப்பாவின் எரிசக்தி வினியோகத்திற்கும் முக்கியமானதாகும், மேலும் சீனாவின் போக்குவரத்து வழித்தட இணைப்பு திட்டத்தில் (Belt and Road Initiative) மத்திய கிழக்கு வழியாக ஐரோப்பாவுடன் வர்த்தக உறவுகளைக் கட்டமைப்பதற்கான சீனாவின் முயற்சிகளுக்கும் முக்கியமானதாக உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முந்தைய மேலாதிக்க நிலைமை சிதைவதே இந்த மோதலுக்கு எரியூட்டி வருகிறது என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. “மத்தியதரைக் கடலில் சிம்மாசனத்திற்கான புதிய விளையாட்டு,” என்ற ஒரு தலையங்க அறிக்கையில், நியூ யோர்க் டைம்ஸ், அமெரிக்க செல்வாக்கு பொறிவதன் நீண்டகால தாக்கங்களைச் சுட்டிக்காட்டியது.

ஒரு "புதிய மற்றும் அபாயகரமான நெருக்கடியில்" “பித்துப்பிடித்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்காக மத்தியஸ்தம் செய்ய ஜேர்மனிக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக தெரிகிறது,” என்று குறிப்பிட்ட அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “1996 இல் கிரீஸூம் துருக்கியும் போருக்குள் இறங்கியபோது செய்ததைப் போலவே, அமெரிக்கா ஆரம்ப காலத்தில் நேட்டோ பங்காளிகளுக்கு இடையே உட்பூசல்களை விதைத்து பிரிக்க நகர்ந்திருக்கலாம். பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தி ஜனாதிபதி ட்ரம்ப் திரு. எர்டோகனை அழைத்து பேசினார், ஆனால் அதில் எந்த விளைவும் ஏற்படவில்லை—ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா நம்பத்தகுந்த இடைதரகராக கருதப்படவில்லை…" என்றார்.

அனைத்திற்கும் மேலாக, லிபிய போரானது, துருக்கி உட்பட திரிப்போலியின் இஸ்லாமியவாத ஆட்சியின் ஆதரவாளர்களுக்கும், எகிப்திய எல்லையை ஒட்டிய கிழக்கு லிபியாவில் படைத்தளபதி கலிபா ஹாஃப்தாரைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் பிளவுபடுத்தி உள்ளது.

துருக்கிய வலைத் தளம் Ahval “மிகப்பெரும் மத்திய கிழக்கு மோதலில் ஐரோப்பா எவ்வாறு சிக்கி வருகிறது,” என்ற அதன் கட்டுரையில் குறிப்பிடுகையில், “ஒருபுறம், துருக்கி, கட்டார், ஒரு பிராந்திய இயக்கமான முஸ்லீம் சகோதரர்கள், மற்றும் ஈரானின் 'புரட்சிகர கூட்டணி' உள்ளது. மறுபுறம் சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலின் 'நடப்பிலுள்ள நட்பு நாடுகளின் குழு' இருப்பதைப் பார்க்கிறோம். … பிரான்ஸ், கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நடப்பிலுள்ள நட்பு நாடுகளின் குழுவை ஆதரிக்கின்றன, அதேவேளையில் ஸ்பெயின் மற்றும் மால்டா ஆகியவை புரட்சிகர கூட்டணியை ஆதரிக்க அதிக தயாராக இருப்பதாக தெரிகிறது, அதேவேளையில் முன்வரலாறைச் சார்ந்து இத்தாலி இரண்டுக்கும் இடையே நடைபோட்டு வருகிறது,” என்று குறிப்பிட்டது.

தீர்க்கவியலாத மோதல்களால் பிளவுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், வெளிப்படையாகவே துருக்கிக்கு எதிராக அதிக ஆக்ரோஷமான கொள்கையுடன் தன்னை இணைத்துக் கொள்ள முயன்று வருகிறது. இந்த வாரயிறுதியில், பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் 2022 இல் தொடங்குகின்ற பிரான்சின் ஐரோப்பிய ஒன்றிய தலைமைக்கு தயாரிப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட பிரெஞ்சு தூதர்களின் ஒரு சந்திப்பில் உரையாற்ற, அவரின் ஜேர்மன் சமதரப்பாளர் ஹெய்கோ மாஸை அழைத்திருந்தார். பிரான்சின் திட்டங்கள் "குழப்பத்திற்கிடமின்றி ஜேர்மன் தலைமையைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்காக நெறிப்படுத்தப்படும்" என்று லு திரியோன் தெரிவித்தார்.

சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவுக்கு மத்தியில் ஓர் ஆக்ரோஷமான, சுதந்திரமான உலக கொள்கையை அபிவிருத்தி செய்வதே ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்பதை மாஸ் தெளிவுபடுத்தினார். “அமெரிக்கா சீனாவுடனான அதன் போட்டியினூடாக உலகின் எஞ்சியப் பகுதிகளை முன்பினும் அதிக நேரடியாக பார்க்கிறது,” என்றார். “இதற்கு இணையாக, ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இருந்து, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் ஓர் உலகளாவிய சக்தியாக பாத்திரம் வகிப்பதற்கான அமெரிக்காவின் தயார்நிலை சரிந்துள்ளது. இது ஏற்படுத்தி உள்ள புவிசார் அரசியல் வெற்றிடத்திற்குள் சீனா பலவந்தமாக அதன் வழியை உருவாக்கி, களத்தில் நாம் பயன்படுத்தாத அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வருகிறது என்ற உண்மையும் நமக்கு தெரியும்,” என்றார்.

"லிபியா மற்றும் கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் அதன் நிலைகுலைக்கும் கொள்கையை மேற்கொண்டும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்பதையும், ஐரோப்பிய இறையாண்மை கிரீஸ் மற்றும் சைப்ரஸ் உட்பட அனைத்து உறுப்பு நாடுகளது இறையாண்மையையும் பாதுகாக்கிறது என்பதையும்" துருக்கி சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் "தெளிவுபடுத்தி இருப்பதையும்" மாஸ் சேர்த்துக் கொண்டார்.

ஆனால் ஜேர்மன் அல்லது ஐரோப்பிய ஏகாதிபத்தியம் மத்தியத்தரை கடல் மோதல்கள் மீது அமைதியாக முடிவெடுக்கும் என்று வாதிடுபவர்கள் வரலாற்றுக்கு எதிராக பலமாக பந்தயம் கட்டுகிறார்கள். ஏகாதிபத்திய போர்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயை உத்தியோகபூர்வமாக தவறாக கையாண்ட விதம் ஆகியவற்றுக்கு எதிராக உலகெங்கிலும் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் அதிகரித்து வருவதற்கு மத்தியில், தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச, போர்-எதிர்ப்பு இயக்கத்தில் ஐக்கியப்படுத்துவதே முக்கிய கேள்வியாக உள்ளது.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Control of offshore gas and oil provokes conflicts in eastern Mediterranean
[24 February 2020]

Loading