கிரேக்க அரசாங்கம் 11,000 க்கும் மேற்பட்ட தஞ்சம் கோருபவர்களை வெளியேற்றுவதைத் தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் கிரேக்கத்தில் தஞ்சம் கோரி அதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த 11,000 க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு எதிராக கிரேக்க அதிகாரிகள் ஜூன் 1 ஆம் திகதி முதல் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

இந்த மார்ச் மாதம் அமுலுக்கு வந்த புதிய ஜனநாயகக் கட்சியின் (New Democracy-ND) பழமைவாத அரசாங்கத்தின் சட்டமியற்றலின் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது, ஒருமுறை அகதிகளுக்கு அடைக்கல அனுமதி வழங்கப்பட்டால் அவர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட முகாம்கள், குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளிலிருந்து அவர்கள் வெளியேற 30 நாட்கள் மட்டும் அவகாசம் உண்டு என்று வரையறுக்கிறது. தஞ்சம் கோருபவர்களாக அவர்கள் பெறத் தகுதியுள்ள எந்தவித நலனுதவியும் அதன் பின்னர் நிறுத்தப்படும்.

அடைக்கலம் தேடும் அகதிகளுக்கு தங்கும் வசதிகளை வழங்கும் நாட்டின் அனைத்து 67 தங்கும் விடுதிகளும் இந்த ஆண்டுக்குள் மூடப்படும்.

நாளாந்தம் நூற்றுக்கணக்கான புதிய நோய்தொற்றுக்களுடன் கோவிட்-19 தொற்றுநோய் மீண்டும் வெடித்து பரவி வரும் நிலையில், அகதிகளை வெளியேற்றும் ND அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறிப்பாக மிருகத்தனமானவையே.

லெபோஸின் மோரியா முகாமில் இருந்து வந்ததைத் தொடர்ந்து ஆப்கானிய புலம்பெயர்ந்தோர் தங்களது குடும்பத்தினருடன் முகாமிட்டுள்ளனர் (AP Photo/Yorgos Karahalis)

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கிரேக்க பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் அமுலுக்கு வந்ததான “சர்வதேச பாதுகாப்புச் சட்டம்” (International Protection Act-IPA) திருத்தியமைக்கப்பட்டதன் கீழ் இந்த நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. தண்டனைச் சட்டம் என்பது தண்டனை நடவடிக்கைகளுக்கான ஒரு வரம்பாக உள்ளது, அதாவது சர்வதேச சட்டத்தால் முறையாக பாதுகாக்கப்பட்ட தஞ்சம் கோருவதற்கான உரிமையை தீவிரமாக அழித்தொழிக்கும் புதிய விரைவான தஞ்சம் கோரும் செயல்முறையை இது உள்ளடக்கியது. புதிய செயல்முறை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமையாக பயன்படுத்தப்படுகிறது. பல உரிமைகோரல்கள் வந்த சில நாட்களுக்குள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த சட்டம், உரிமை கோரல் நேர்காணலில் கலந்து கொள்ளாதது அல்லது சரியான நேரத்தில் பதிவை புதுப்பிக்காதது உட்பட மிகச்சிறிய நிர்வாக மீறல்களை காரணப்படுத்தி கூட உரிமை கோரல்களை இரத்து செய்ய அனுமதிக்கிறது.

கிரீஸில், இன்னும் வேறு அகதிகள் உள்நுழைவதை தடுப்பதற்காக அகதிகள் ஏற்கனவே முகம்கொடுக்கும் எதிர்ப்புமிக்க சூழலில் இந்த சட்டம் சட்டமாக்கப்படுகிறது. மார்ச் மாதம் ஆரம்பத்தில் Skai தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் புலம்பெயர்வு மற்றும் புகலிட விவகார அமைச்சர் நோட்ரிஸ் மிதாராகிஸ் (Notis Mitarakis) இவ்வாறு தெரிவிக்கையில் அது முற்றிலும் தெளிவுபடுத்தப்பட்டது: “உரிமை கோருபவர்களுக்கு இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் புகலிடம் அளிப்பதும், அதன்பின்னர் அவர்கள் பெறும் நன்மைகளையும் தங்கும் உரிமைகளையும் திரும்பப் பெறுவதும் நமது நோக்கம், ஏனென்றால் இவை அனைத்துமே அகதிகள் நமது நாட்டிற்குள் தஞ்சம் புகுந்து நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ள அவர்களை ஈர்த்தன என்பதே.”

கிரீஸ் முழு அடைப்பில் இருந்தபோது அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஒருசில மாதங்கள் தாமதப்படுத்தப்பட்டதால் ஏதென்ஸ் நகர மையத்தில் உள்ள விக்டோரியா சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான அகதிகள் தங்களது குடும்பத்தினருடன் உறங்கும் வறிய நிலையை உணர்த்தும் காட்சிகளை உருவாக்கின. ஆகஸ்ட் 21 அன்று Vice இல் பிரசுரமான ஒர் கட்டுரை, “அவர்களிடையே புதிதாக பிறந்த குழந்தைகளும், உடல் ஊனமுற்ற வயோதிகர்களும் இருந்தனர், அவர்கள் பாய்கள் மற்றும் அட்டைப் பெட்டிகளைக் கொண்டு கடுமையான வெயிலில் முகாமிட்டு இருப்பதுடன், நேரத்திற்கு உணவோ தண்ணீரோ கிடைக்காத நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்தது.

Refugee Support Aegean (RSA) என்ற அமைப்பு ஆகஸ்ட் 3 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கை, விக்டோரிய சதுக்கத்தில் வீடற்றவர்களை மட்டும் கண்டறியும் நோக்கில், லெபோஸ் தீவின் இழிபெயர் பெற்ற மோரியா முகாமில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டிருந்த பல வறிய குடும்பங்களைப் பற்றி ஆவணப்படுத்தியது.

இது ஆப்கானிஸ்தானில் சித்திரவதையிலிருந்து தப்பி வந்தவரும், மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தந்தையுமான அப்துல் தனது நிலைமையைப் பற்றி கூறியதை இவ்வாறு குறிப்பிட்டது: “எனது குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. மன அழுத்தம் காரணமாக இரைச்சல் மிகுந்த இடங்களில் அவனால் இருக்க முடியாது. எந்தவொரு அதிகப்படியான பதற்றமும் அவனை உளவியல் மற்றும் சரீர ரீதியாக மோசமடையச் செய்யும். ஏதென்ஸ் தெருக்களில் நாங்கள் திரிய வேண்டிய நிலை ஏற்பட்டதிலிருந்து அவன் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் அவன் தனது தலையை அடிக்கடி பிடித்து கொள்கிறான்; மேலும் தலையை அழுத்துவதுடன் தலையில் அடித்துக் கொள்கிறான். எங்களது மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், எங்களுக்கு வீடு இல்லை, பாதுகாப்பான இடம் இல்லை, பாதுகாப்பும் இல்லை… நாங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கிறோம், இப்போது மேலும் நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறோம் என்றாலும், எங்களுக்கு மேலும் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் நான் எனக்குள் ஒரு ஆழமான பயத்தையே உணர்கிறேன்…”

Human Rights Watch அமைப்பு, “ஆப்கானிஸ்தானிலிருந்து கிரீஸூக்கு வந்து தனியாக வாழும் 21 வயது” பஷிராவின் விவகாரம் பற்றி குறிப்பிட்டது. தஞ்சம் வழங்கப்பட்டு பின்னர் மோரியா முகாமில் இருந்து அவரது கூடாரத்தை விட்டு அவர் வெளியேற இந்த மாதம் சில நாட்கள் அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டது. இச்சூழ்நிலை பற்றி பஷிரா, “அவர்கள் எனக்கு வழங்கப்படும் பண உதவியை குறைத்து, என்னை வெளியேறும் படி கூறினார்கள்… மேலும், மீண்டும் அவர்கள் வரும்போது [கூடாரத்தில்] நான் அங்கிருப்பதைப் பார்த்தால் அவர்கள் என்னை பலவந்தமாக வெளியேற்றவிருப்பதாக கூறினர். நான் தனி ஆளாக இருப்பதால் எங்கு செல்வது என்று தெரியாத நிலையில், எனக்கு பயமும் விரக்தியும் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

புலம்பெயர்வு மற்றும் புகலிட விவகார அமைச்சர் மிதாராகிஸ் ஜூலை 3 அன்று, “இந்த ஆண்டு, 16,000 புலம்பெயர்ந்தோர் எங்கள் தீவுகளிலிருந்து வெளியேறினர், துரதிர்ஷ்டவசமாக 110 பேர் விக்டோரியா சதுக்கத்தில் எஞ்சியுள்ளனர். இங்கு வீட்டு வசதியும் வேலையும் வழங்கும் ஒரு திட்டம் உள்ளது, அவர்கள் அவர்களது ‘சொந்த காலில் நிற்க,’ வேண்டும், எங்களால் அவர்களுக்கான வாழ் நாள் சலுகைகளை வழங்க முடியாது” என்று ஆத்திரமூட்டும் வகையில் ட்வீட் செய்து அகதிகளின் மீது பழியைப் போட முயற்சித்தார்.

இந்த ஜூன் மாதம் RSA சார்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் (European Court of Human Rights) சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை, “தங்கள் காலில் நிற்க” விரும்பும் அகதிகளை எதிர்கொள்ளும் சிக்கலான பிரமைகளை எடுத்துக்காட்டுவதன் மூலம் மித்தாரகிஸின் கூற்றுக்களை பொய்யாக்குகிறது. இது, “கிரீஸில் தங்குவதற்கு அந்தஸ்து பெற்றவர்கள் பல்வேறு வகையான உத்தியோகபூர்வ ஆவணங்களை அணுகுவதற்கு கடுமையான நிர்வாக தடைகள் முன்வைக்கும் குறிப்பிட்ட சவால்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். இந்த தடைகள், சுகாதாரம், வீட்டுவசதி, சமூக நலன் மற்றும் தேசிய மக்களுக்கு சமமான நிலைமைகளில் தொழில் சந்தையை அணுகுவது போன்ற முக்கிய உரிமைகளை அணுகுவதற்கு தேவைப்படும் ஆவணங்களுக்கான முன்நிபந்தனைகளை பூர்த்தி செய்வதிலிருந்து தடுக்கின்றன” என்று தெரிவித்தது. முக்கியமாக குறிப்பிடுவதானால் வரி அடையாள எண் (Tax Identification Number-AFM) வழங்குவதற்கு முகவரி ஆதாரம் தேவைப்படுகிறது. என்றாலும், Catch-22 சூழ்நிலையில் சமீபத்தில் வெளியேற்றப்பட்டவர்களை இது குறிக்கிறது, அப்போதிருந்து, அகதிகள் முதலாவதாக ஒரு இடத்தை வாடகைக்கு எடுப்பதற்கும், வங்கிக் கணக்கை திறப்பதற்கும் அவர்களுக்கு வரி அடையாள எண் தேவைப்படுகிறது.

இந்த புதிய சட்டம், கிரேக்கத்தின் கடல் எல்லையை தாண்டி படகு நிரம்ப வரும் அகதிகளையும் புலம்பெயர்ந்தோரையும் திருப்பியனுப்ப வலியுறுத்த பயன்படுத்தப்படும் “திருப்பி அனுப்பு” என்றழைக்கப்படும் கிரேக்க காவல்படை நடவடிக்கை கொண்டுள்ள தீவிரத்துடன் இணைந்து கொண்டுள்ளது, சர்வதேச சட்டத்தின் கீழ் இது ஒரு சட்டவிரோதமான நடைமுறையாகும்.

ஆகஸ்ட் 14 ஆம் திகதி நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு விசாரணை அறிக்கையின் படி, குறைந்தது 1072 புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்புபட்ட குறைந்தது 31 தனித்தனியான சம்பவங்கள் மார்ச் மாதத்திலிருந்து நடந்துள்ளன. அறிக்கையின் படி, “கிரேக்க அதிகாரிகள் தங்களது படகின் எந்திரங்களை இயங்காது செய்த பின்னர் அவர்களது சொந்த படகுகளில் புலம்பெயர்ந்தோரை தத்தளிக்க விடுகின்ற அதேவேளை, சில நேரங்களில் ஏனையோர் துருக்கிய மற்றும் கிரேக்க நீர்நிலைகளுக்கு மத்தியிலான எல்லையில் தண்ணீரில் தத்தளிக்க விடப்பட்டு விடுகின்றனர்.”

50 வயது சிரிய ஆசிரியை நஜ்மா அல்-காதிப்பின் சாட்சியத்தை அந்த கட்டுரை மேற்கோளிட்டது, ஜூலை 26 அன்று ரோடோஸ் தீவில் உள்ள ஒரு தடுப்பு மையத்திலிருந்து இருளின் மறைவில் முகமூடி அணிந்த கிரேக்க அதிகாரிகள் அவரும் இரண்டு குழந்தைகளும் உட்பட 22 பேரை அழைத்துச் சென்று, துருக்கிய கடலோர காவல்படையினரால் அவர்கள் மீட்கப்படுவதற்கு முன்னர், அவர்களை துடுப்புகள் இல்லாத, மோட்டார் இல்லாத மிதக்கும் படகில் கைவிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்.

இந்த சம்பவங்களில் ஒன்றிலிருந்து தப்பிய 50 வயது சிரிய ஆசிரியையான நஜ்மா அல்-காதிப், நியூ யோர்க் டைம்ஸ் இடம், “குண்டுவெடிப்புக்கு பயந்து சிரியாவை விட்டு நான் வெளியேறினேன் – ஆனால் இது நடந்தபோது, குண்டுவெடிப்பில் இறந்திருக்க வேண்டுமென்றே நான் விரும்பினேன்” என்று தெரிவித்தார்.

நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கைக்கு பதிலளிக்கையில், ஐரோப்பிய ஆணையத்தில் புலம்பெயர்வு கொள்கையை மேற்பார்வையிடும் யல்வா ஜோஹன்சன் (Ylva Johansson), தனது “கவலையை” வெளிப்படுத்தினார், என்றாலும் “அவற்றின் செல்தகமையை விசாரிக்க தான் அதிகாரமற்றவர்” என்று தெரிவித்தார். மேலும் அவர், “ஐரோப்பிய விழுமியங்களை மீறுவதன் மூலமாகவும் மக்களின் உரிமைகளை மீறுவதன் மூலமாகவும் நமது ஐரோப்பிய எல்லையை பாதுகாக்க முடியாது. எல்லைப்புற கட்டுப்பாட்டை மக்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பொறுத்து ஒருவருக்கொருவர் கைகோர்த்து செயல்படுத்த முடியும் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

கிரேக்கத்தின் கொள்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் பரந்த மூலோபாய இலக்குகளின் ஒரு பகுதியாகும் என்ற உண்மை இத்தகைய வெற்று வார்த்தையாடல்களுடன் முரண்படுகிறது.

புலம்பெயர்வு மற்றும் உள்நாட்டு விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் மோனிக் பரியாட் (Monique Pariat) உடன் ஜோஹன்சனும் மார்ச் மாதத்தில் கிரேக்கத்திற்கு சென்றார், அங்கு அவர்கள் மிட்சோடாகிஸ் மற்றும் மிதராகிஸூடன் சந்திப்புக்களை நடத்தினர். ஆணைய அறிவிப்பின் படி, இந்த விஜயம் “கிரேக்கத்தில் புலம்பெயர்வு நெருக்கடியை நிர்வகிப்பது தொடர்பாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட உதவி நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இருந்தது.”

ஜூன் மாத இறுதியில், மிதராகிஸூக்கு எழுதிய கடிதத்தில், பரியாட், “திரு மிதராகிஸின் வழிகாட்டுதலின் கீழ் புலம்பெயர்வு மற்றும் புகலிட அதிகாரிகள் மேற்கொண்ட முன்னேற்றத்தை” பாராட்டியதுடன், அவரது முயற்சிகள் “கிரேக்கத்திற்கு மட்டும் முக்கியமானதல்ல மாறாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கே முக்கியமானது” என்றும் கூறினார்.

இன்னும் அச்சுறுத்தலாக, ஐரோப்பிய ஒன்றிய எல்லை ரோந்து நிறுவனமான Frontex, ஏஜியன் கடலில் தனது படைகளை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ளது. மார்ச் மாதம் தொடக்கத்தில் கிரீஸ் தனது திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கையில், Frontex, நிறைவேற்று இயக்குநர், ஃபப்ரிஸ் லெக்கேரி (Fabrice Leggeri) இவ்வாறு தெரிவித்தார்: “துருக்கியுடனான கிரேக்க வெளி எல்லைகளில் விரைவாக வளர்ந்து வரும் சூழ்நிலையைப் பொறுத்தவரை, விரைவான எல்லைத் தலையீட்டிற்கு கிரேக்கம் கோரியிருந்ததை தொடங்க நான் முடிவு செய்துள்ளேன். இது, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் மற்றும் ஷெங்கனுடன் இணைந்த நாடுகளின் (Schengen Associated Countries) அதிகாரிகள் மற்றும் உபகரணங்களுடனான அவசர ஆதரவைக் கோரும், விதிவிலக்கான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஒரு அங்கத்துவ நாட்டுக்கு உதவும் Frontex இன் ஆணையின் ஒரு பகுதியாகும்.

“அடுத்த ஆண்டு தொடங்கி, விரைவான எல்லை தலையீடு நிகழுமானால், அப்போது செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை வழங்க நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய எல்லைப்புற மற்றும் கடலோர காவல்படையினரிடமிருந்து முதல் 700 அதிகாரிகளை பெற நாங்கள் நம்ப முடியும்.” “இன்று, இந்த முக்கியமான நேரத்தில் பங்களிப்பு செய்ய ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளையும் ஷெங்கனுடன் இணைந்த நாடுகளையும் நாங்கள் முற்றிலும் சார்ந்திருக்கிறோம்” என்று அவர் புகார் கூறினார்.

ஐரோப்பாவில் Oxfam அமைப்பின் புலம்பெயர்வு பிரச்சாரத்தின் இயக்குநரான ஈவ்லியன் வான் ரோம்பேர்க் (Evelien van Roemburg), “இந்த துஷ்பிரயோகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக உள்ளது, ஏனென்றால் இது பல ஆண்டுகளாக கிரேக்கத்தை புலம்பெயர்வு கொள்கைகளுக்கான பரிசோதனைக் களமாகப் பயன்படுத்தி வருகிறது. எனவே, ஐரோப்பாவின் வரவிருக்கும் புகலிட சீர்திருத்தத்திற்கான ஒரு மாதிரி செயல்திட்டமாக கிரேக்கத்தின் புகலிட முறையை ஐரோப்பிய ஒன்றியம் தற்போது பயன்படுத்தும் என்பது பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

போலி இடது எதிர்ப்பு, சிரிசா (தீவிர இடது கூட்டணி), ND இன் நடவடிக்கைகளை மனிதாபிமானமற்றதாகவும், 2015-19 அதன் சொந்த ஆட்சி காலத்தில் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோர் சமூகத்தில் இணக்கமான ஒருங்கிணைப்பை காண முடிந்தது எனவும் சித்தரிக்க முயற்சித்தது.

என்ன ஒரு மோசடி! ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கியுடன் கிரீஸ் ஒப்புக்கொண்ட ஒரு மோசமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அலெக்சிஸ் சிப்ராஸின் அரசாங்கத்தின் கீழ், கிரிஸ் ஐரோப்பிய எல்லைக் காவலராகவும் சிறைக் காவலாளியாகவும் மாற்றப்பட்டது. உலக சோசலிச வலைத் தளம் (WSWS) குறிப்பிட்டுள்ளபடி, சிரிசாவின் பிற்போக்குத்தன மரபுடன் தொடர்புபட்ட அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளில், இந்த ஒப்பந்தம் “புகலிடம் பெறுவதற்கான அடிப்படை உரிமையை நீக்கியது என்பதுடன், பல மனித உரிமை அமைப்புக்களாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் இது சட்டவிரோதமானது என்றும் கருதப்பட்டது. அப்போதிருந்து, அதிக நெரிசலான அபாயமிக்க பகுதிகளில் சிறையிலடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அகதிகள் பேரழிவுகர நிலைமைகளில் பல ஆண்டுகள் தங்களது வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், இடோமெனி கிராமத்தில் எதிர்ப்பு தெரிவித்த அகதிகளுக்கு எதிராக கண்ணீர்ப்புகை குண்டுகளையும் உணர்ச்சிகளை மழுங்கச் செய்யும் கையெறி குண்டுகளையும் பயன்படுத்தி அவர்களை முகாமிலிருந்து வெளியேற்ற சிரிசா அரசாங்கம் உத்தரவிட்டது.”

Loading