ட்ரம்ப் “பாசிச தலைவர்” ஆக போட்டியிடுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சின்கிளேர் லூயிஸின் (Sinclair Lewis) It Can’t Happen Here நாவலில் வரும் நாடக காட்சியை ஒத்த ஒரு காட்சியாக, வியாழக்கிழமை இரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் இருந்து, அவரது மறுதேர்வு, “கிளர்ச்சியாளர்கள்” மற்றும் “சோசலிஸ்டுகளுக்கு” எதிரான கடைசி அரண் போன்றது என சித்தரிக்கும் ஒரு பாசிச வார்த்தையாடலை வெளியிட்டார்.

முன்நிகழ்ந்திராத மற்றும் சட்டவிரோதமான ஒரு நடவடிக்கையாக, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை (Republican National Convention - RNC) நிறைவு செய்யும் தனது உரைக்கு பின்னணியாக வெள்ளை மாளிகையை ட்ரம்ப் பயன்படுத்தினார், மேலும் மறுதேர்தலில் வெற்றியடையும் உந்துதலில் ஜனாதிபதி அலுவலகத்தை தனது தனிப்பட்ட சொத்தாகவே பாவிக்கிறார். ஒரு கட்டத்தில், ட்ரம்ப் வெள்ளை மாளிகையை நோக்கி திரும்பி, “உண்மை என்னவென்றால், நான் தான் இங்கு இருக்கிறேன்… அவர்கள் இங்கு இல்லை” என்று இறுமாப்புடன் கூறினார்.

வின்கான்சின் மாநிலத்தில், கெனோஷாவில் ஜாக்கோப் பிளேக் (Jacob Blake) பொலிஸால் சுடப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கிலும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த நிலையில் ட்ரம்ப் தனது வார்த்தையாடலை வெளியிட்டுள்ளார். குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட ஆத்திரமூட்டும் உரைகளால் தூண்டப்பட்ட ஒரு பாசிச மக்கள் படையின் அங்கத்தவர் ஒருவர், கெனோஷாவில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பெரிய துப்பாக்கிச் சூட்டை நடத்தி முடித்து வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் ட்ரம்ப் பேசினார்.

வாஷிங்டனில், ஆகஸ்ட் 27, 2020, வியாழக்கிழமை அன்று, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் நான்காவது நாளன்று வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசுகிறார் (AP Photo/Alex Brandon)

இத்துப்பாக்கி சூட்டிற்கு எதிராக வெள்ளை மாளிகைக்கு வெளியேயும் மற்றும் சியாட்டில், போர்ட்லாந்து, ஆஸ்டின், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கெனோஷா உட்பட, நாடெங்கிலுமுள்ள பிரதான நகரங்களிலும் பேரணிகள் நடந்தன. மேலும், NBA, WNBA, NHL, NFL மற்றும் MLB உட்பட, பிரதான விளையாட்டுக் குழுக்களின் அனைத்து விளையாட்டு வீரர்களும் விளையாட்டுக்களையும் பயிற்சிகளையும் இரத்து செய்வதற்கும் இட்டுச் சென்றது.

இந்த புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்புகளுக்கு ட்ரம்பின் பதிலிறுப்பு ஒரு பாரிய ஒடுக்குமுறையை தொடங்குவதாக உள்ளது. வின்கான்சினில், ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு அரிஸோனா, மிச்சிகன் மற்றும் அலபாமா ஆகிய மூன்று மாநிலங்களின் இராணுவ காவல்படையினர் அங்கு வந்து கொண்டிருக்கின்றனர் அல்லது துருப்புக்களுக்கும் மற்றும் நாடெங்கிலும் இருந்து அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இராணுவமயமாக்கப்பட்ட காவல்படையினருக்கும் “உதவ” ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்துள்ளனர்.

ட்ரம்ப் தனது உரையில், “நமது காவல்துறையினருக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கும் வகையில் நாம் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்” என்று அறிவித்து, பொலிஸ், இராணுவம் மற்றும் மத்திய துணை இராணுவப் படையினர் ஆகியோருக்கு தனது முக்கிய அழைப்பைப் பற்றி தெளிவுபடுத்தினார். மேலும், உரையில் கலந்து கொண்ட எல்லை ரோந்து படைப் பிரிவின் உறுப்பினர்களைச் சுட்டிக்காட்டி, அவர்களை “துணிச்சல்மிக்கவர்கள், தைரியசாலிகள்” என்று அழைத்ததற்கு முன்னதாக, “எனது நிர்வாகம் எப்போதும் சட்டத்தை அமுல்படுத்தும் ஆண்கள் மற்றும் பெண்களுடன் துணை நிற்கும்,” என்றும் அவர் கூறினார்.

ட்ரம்ப் தொடர்ந்து, “அமெரிக்க கனவை நாங்கள் காப்பாற்றுகிறோமா அல்லது நமது நேசத்திற்குரிய விதியை அழிக்க ஒரு சோசலிச திட்ட நிரலை அனுமதிக்கிறோமா என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கும்” என்று கூறினார். மேலும், “சோசலிசத்திற்கான” மற்றும் “பேர்னி சாண்டர்ஸ் போன்ற தீவிரவாத மார்க்சிஸ்டுகளுக்கான ஒரு உளவாளியாக பைடென் உள்ளார்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வலதுசாரி காய்ச்சல் கனவு யதார்த்தத்தை தலைகீழாக்குகின்றது. உண்மையில், பைடெனுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டுள்ள சாண்டர்ஸ் அதற்கு ஈடாக ஒன்றையும் பெறவில்லை.

கோவிட்-19 தொற்றுநோய், அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் நாடு முழுவதிலுமான முடிவில்லாத பொலிஸ் கொலைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்கொண்டுள்ள கொலைகார தோல்வியால் வெறுப்படைந்து போயுள்ள நாடு முழுவதிலுமுள்ள பெரும்திரளான உழைக்கும் மக்களான “மார்க்சிஸ்டுகளையும்” “சோசலிஸ்டுகளையும்” கண்டே உண்மையில் அவர் பயப்படுகிறார்.

அவர் தனது உரையில், ஒவ்வொரு வாரமும் இரண்டு 9/11 தாக்குதல்களுக்கு சமமாக, நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கும் உண்மையை ட்ரம்ப் சர்வசாதாரணமாக புறக்கணித்து, கோவிட்-19 தொற்றுநோய்க்கான தனது அரசாங்கத்தின் பதிலிறுப்பை அபத்தமாக பாராட்டினார். மேலும் அவர், அமெரிக்காவின் தனிநபர் இறப்பு விகிதம் ஐரோப்பாவை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ள போதிலும், “அதிகப்படியான இறப்பில் அமெரிக்காவை காட்டிலும் 30 சதவிகிதம் கூடுதலான அதிகரிப்பை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்வதாக,” அபத்தமாக கூறுகிறார்.

பொருளாதார நெருக்கடியால் பல மில்லியன் மக்களுக்கு வேலையில்லாமல் போனது பற்றியோ அல்லது தன்னலக்குழுக்களின் செல்வம் வானளாவிய உயரங்களை எட்டுகின்ற போதிலும் கூட, கூட்டாட்சி வேலையின்மை உதவிகளை குறைக்க வெள்ளை மாளிகையும் காங்கிரசும் ஒன்றிணைந்து இயங்கிய பின்னர் மில்லியன்களுக்கு மேலானவர்கள் பட்டினியையும், வீட்டை விட்டு வெளியேறும் நிலைமையையும் எதிர்கொள்வது பற்றியோ ட்ரம்ப் ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.

வாஷிங்டனில், ஆகஸ்ட் 27, 2020, வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் இருந்து தனது ஏற்புரையை வழங்கி முடித்த பின்னர், மைதானத்தில் பெருநகர பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதுகின்றனர் (AP Photo/Julio Cortez)

ட்ரம்பின் வார்த்தைகளில், அமெரிக்கா ஒரு புவியிலுள்ள சொர்க்கம், என்றாலும் இங்கு மக்கள் அதிருப்தியடைகிறார்கள் என்றால் அவர்கள் “கிளர்ச்சியாளர்கள்” என்பதால் தான் என்கிறார்.

இந்த வினோதமான காட்சியைப் பார்க்கும் எவரும், இந்த கோமாளி வெள்ளை மாளிகைக்கு அருகில் எங்கிருந்து வந்தார் என்று கேட்பார்கள்? 170,000 பேரைக் கொன்ற பின்னர் மீண்டும் அவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு எப்படி இருக்கும்?

என்றாலும், இந்த மிரட்டல் மிகவும் உண்மையானதே. ஏனெனில், ட்ரம்பிற்கான எப்போதும்போல மிகப்பெரிய நன்மையாக இருப்பது, அவரது ஜனநாயகக் கட்சி “எதிர்ப்பாளர்கள்” முதுகெலும்பு இல்லாமால் இருப்பதே அதற்குக் காரணம்.

கடந்த வார ஜனநாயகக் கட்சி மாநாட்டின் ஒருங்கிணைந்த கருத்தாக இருந்து என்னவெனில் மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையினரின், அதிலும் குறிப்பாக, தொழிலாள வர்க்கத்தின் எந்தவித கோரிக்கையும் நிராகரிக்கப்படுவதாகும். மரியாதைக்குரிய விருந்தினர்களான குடியரசுக் கட்சியினரையும் இராணுவ தளபதிகளையும் அதிருப்தி அடையச் செய்த இந்த நிகழ்வில், பணக்கார புறநகர் பகுதிகளில் உள்ள தனது வாக்காளர்களை இலக்கு வைப்பதற்கான ஜனநாயகக் கட்சி மொத்தமாக குரல் கொடுத்தது.

ஜனநாயகக் கட்சியினர் இன மற்றும் அடையாள அரசியலை முடிவற்ற வகையில் ஊக்குவிப்பதும், மற்றும் லிங்கன், கிராண்ட், ஜெபர்சன் போன்ற பிரமுகர்கள், மற்றும் வாஷிங்டனின் நினைவுச் சின்னங்கள் மற்றும் மரபு மீதான தாக்குதல்களை நியாயப்படுத்த நியூ யோர்க் டைம்ஸ் எடுத்த முயற்சிகளும், அமெரிக்க ஜனநாயகத்தின் ஒவ்வொரு பாரம்பரியத்தின் மீதும் ட்ரம்ப் முன்னணி தாக்குதலை நடத்தியுள்ள போதிலும், ஸ்தாபக தந்தையர்களுடன் தொடர்ச்சியாக அபத்தமாக உரிமை கோருவதற்கான வாய்ப்பை ட்ரம்பிற்கு வழங்கின.

இறுதி ஆய்வில், ட்ரம்ப் ஜனநாயகக் கட்சியினருடனான தனது மோதலை ஒரு போராகவே பின்தொடர்கிறார். அதேவேளை அவர்களோ, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வார்த்தைகளில் இதை ஒரு “ஒரேதரப்பின் இரண்டு நபர்களுக்கு இடையிலான போட்டியாகவே” தொடர்ந்து பார்க்கிறார்கள்.

அது ஏனென்றால், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருவணிகத்தின் இருகட்சிகளில் ஒன்றாக, ட்ரம்பைப் போலவே ஜனநாயகக் கட்சியினரும் முதலாளித்துவத்திற்கு எதிராக பெரும் மக்கள் எதிர்ப்பு வளர்ச்சி அடைவதைக் கண்டு பயப்படுவதுடன், அதற்கு விரோதமாக உள்ளனர்.

சோசலிசத்தின் எழுச்சி அலை பற்றிய ட்ரம்பின் அழிவுகரமான எச்சரிக்கைகளில் உண்மையின் கூறு உள்ளது. உண்மை என்னவென்றால், தனது வெள்ளை மாளிகை பதுங்கு குழியில் ஒளிந்திருக்கும் ட்ரம்ப் உண்மையில் தன்னைச் சுற்றியுள்ள சோசலிச உணர்வுகளால் முற்றுகையிடப்பட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியால் பேரழிவிற்குள்ளான அமெரிக்க தொழிலாள வர்க்கம், ட்ரம்ப் வழிநடத்துகின்ற மீண்டும் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்தை அதிகரித்தளவில் எதிர்ப்பதும், மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக இன்னும் அதிக வெளிப்படையான விரோதப்போக்கை கொண்டிருப்பதும் அரசியல் காட்சிகளில் வெளிப்படுகிறது.

இது, முதுகெலும்பு இல்லாத ஜனநாயகக் கட்சியோ மற்றும் பணக்கார உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் பிரிவுகளும் அல்ல, மாறாக ஒரு அமெரிக்க பாசிசத்தை உருவாக்கும் ட்ரம்பின் முயற்சிகளை எதிர்க்கும் உண்மையான சமூக சக்தியாகும்.

Loading