ஜேர்மன் ஏகாதிபத்தியமும் அலெக்ஸி நவால்னியின் விசித்திரமான நிகழ்வும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆகஸ்ட் 20 ம் தேதி, மேற்கு சார்பு ரஷ்ய அரசியல்வாதி அலெக்ஸி நவால்னி மாஸ்கோவுக்கு செல்லும் ஒரு விமானத்தில் நோய்வாய்ப்பட்டார். அவர் பேர்லினில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர், ஜேர்மன் அரசாங்கம் அவருக்கு “நோவிச்சோக்” என்னும் நரம்பை தாக்கும் விஷம் கொடுத்ததாக திட்டவட்டமாக அறிவித்தது.

மேற்கத்திய நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனியில், நவால்னி விஷமூட்டப்பட்டதற்கு ரஷ்ய அரசாங்கமே பொறுப்பு என்று அறிவித்து, ரஷ்யாவுடன் மோதலுக்கான அவர்களின் அழைப்புகளை அதிகரித்துள்ளன. ஒரு குறிப்பிட்ட வடிவம் மீண்டும் மீண்டும் எழுகின்றது. ஒரு சம்பவம் நடைபெற்றவுடன், உடனடியாக அதற்கு புட்டின் அல்லது அசாத் பொறுப்பு என்று ஊடகங்களால் அறிவிக்கப்பட்டு, அதற்கான உடனடி பிரதிபலிப்பு கோரப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் பகிரங்கமாக பெயரிடப்படுவதற்கு முன்னர் மிகவும் வழக்கமான படுகொலை வழக்கிற்கு கூட ஒரு பெரிய விசாரணையை தேவையாக உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில், முழு மேற்கத்திய ஊடகங்களும் உடனடியாகவும் ஒருமனதாகவும் யாரை குற்றம் கூற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டன.

நவால்னி விஷம் ஊட்டப்பட்டுவிட்டார் என்று கருதினால், குறைந்தது ஒரு தொகை சந்தேக நபர்கள் இருக்கக்கூடும் என்று ஒருவர் நினைப்பார். புட்டின் ஆட்சியை ஆதரிப்பதால் அல்ல, மாறாக அவர்கள் அதை எதிர்ப்பதால் ஒரு நபர் அல்லது தனிநபர்கள், நவால்னிக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என்பது சாத்தியமில்லாமல் இல்லை?

எல்லாவற்றிற்கும் மேலாக, Nord Stream II எரிவாயு குழாய் அமைப்பதை நிறுத்துமாறு ஜேர்மனிய அரசாங்கம் அமெரிக்காவிலிருந்து கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், சமீபத்திய நிகழ்வுகள் ஏற்கனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்ற அழைப்புகளை துரிதப்படுத்தியுள்ளன.

ஜேர்மனி வரலாற்று ரீதியாக கிழக்கு ஐரோப்பாவை அதன் செல்வாக்கு மண்டலமாக அல்லது ஹிட்லரின் வார்த்தையான “உயிர்வாழ்விடமாக” காண்கின்றது. இப்போது, 27 மில்லியனுக்கும் அதிகமான சோவியத் மரணங்களுக்கு வழிவகுத்த பார்பரோசா நடவடிக்கை தொடங்கி கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ரஷ்யாவுடனான மோதலுக்கான குற்றச்சாட்டை ஜேர்மனி மீண்டும் முன்னெடுக்கின்றது.

Rheinische Post செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரி அனெகிரெட் கிராம்ப்-காரன்பவர் ரஷ்ய அரசாங்கத்திற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று வெளிப்படையாக அச்சுறுத்தினார்.

"புட்டின் அமைப்பு" என்பது ஒரு "ஆக்கிரமிப்பு ஆட்சி, இது வன்முறை வழிமுறைகளால் தனது நலன்களைச் செயல்படுத்த எந்தவிதமான தடையும் இல்லாமல் முயல்கிறது மற்றும் சர்வதேச விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறுகிறது," என்று அவர் கூறினார். அலெக்ஸி நவால்னியின் விஷமூட்டல், ரஷ்யாவில் சட்டவிரோத இரசாயன ஆயுதங்கள் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு சான்றாகும் என்று அவர் வலியுறுத்தினார். புட்டின் ஆட்சி "சிரியாவில், தங்கள் சொந்த குடிமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய ஆட்சிகளைப் போலவே உள்ளது."

சிரிய அரசாங்கம் பொதுமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்ற ஆதாரமற்ற மற்றும் பல சந்தர்ப்பங்களில் முற்றிலும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள், அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கு மேற்கத்திய சக்திகளுக்கு சாக்குப்போக்குகளாக பலமுறை சேவை செய்துள்ளன.

முக்கிய செய்தித்தாள்களின் கருத்து பக்கங்களில் வார்த்தைப்பிரயோகங்கள் அனைத்தும் ஆக்கிரோஷமானது. ஜேர்மனிய நிதிய நாளேடான Handelsblatt ஆகஸ்ட் 25 அன்று "மேற்கு நாடுகள் வெறுமனே குலைப்பதைவிட்டு ஒரு கடி கடிக்கவேண்டும், மற்றும் மாஸ்கோ உடனான கூடிக்குலவும் அணுகுமுறை ஒரு முடிவிற்கு வந்துவிட்டது" என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று கோபமாக குறிப்பிட்டது. செப்டம்பர் 3 ம் தேதி, Der Spiegel இதழ், "கடும்தன்மைக்கான நேரம் இப்போது. கிரெம்ளினில் உள்ள மனிதனை காயப்படுத்த வேண்டிய நேரம் இது" என்று கோரியது.

புதன்கிழமை அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தபோது, ஜேர்மன் இராணுவ நச்சுவியலாளர்கள் நவால்னி ஒரு குற்றத்திற்கு பலியானார் என்பதையும், நோவிச்சோக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நரம்பு தாக்கும் விஷம் ஊட்டப்பட்டதையும் "சந்தேகத்திற்கு இடமின்றி" நிரூபித்ததாக அறிவித்தார். "மிகவும் கடுமையான கேள்விகளுக்கு பதிலளிக்க" ரஷ்ய அரசாங்கத்திற்கு அவர் ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்தார், மேலும் ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோவும் கூட்டு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார்.

இந்த இரு அமைப்புகளும் மேர்க்கலின் கோரிக்கைகளுக்கு உடனடியாக பிரதிபலிப்பை காட்டின. வியாழக்கிழமை ஒரு அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவை பொருளாதாரத் தடைகளால் அச்சுறுத்தியது. வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதியான ஜோசப் போரலுக்கு எழுதிய கடிதத்தில், 107 ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் “இந்த குற்றத்திற்கான உண்மையான பின்னணியை விசாரிக்க” “ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஐரோப்பிய குழுவின் கட்டமைப்புகளுக்குள்” விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினர். இந்த கடிதத்திற்கான முன்முயற்சியை ஜேர்மன் பசுமைக் கட்சியின் பிரதிநிதியான செர்ஜி லாகோடின்ஸ்கி முன்னெடுத்தார்.

ரஷ்யாவிற்கு எதிரான இந்த ஆக்கிரமிப்பு பிரச்சாரத்திற்கு நவால்னியின் விஷம் தான் காரணம் என்று நம்புவது அப்பாவித்தனமாகவே இருக்கும். நேட்டோவின் நீண்ட காலமாக தொடரும் ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காக அவரது விடயம் செயல்படுகிறது. ஜேர்மனி, குறிப்பாக, ஒரு பெரிய இராணுவ சக்தியாக மீண்டும் வெளிவருவதற்கான அதன் நீண்ட கால இலக்கை நோக்கி மேலும் ஒரு படி எடுக்க வழக்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

நவால்னி வழக்கைப் பற்றி ஊடகங்கள் அல்லது அரசியல்வாதிகள் கூறும் எதையும் மதிப்புடையதாக எடுக்கமுடியாது. அவரது தலைவிதி குறித்து கூறப்படும் அக்கறையின் பாசாங்குத்தனத்தை மிகைப்படுத்த முடியாது.

மால்டாவின் பத்திரிகையாளர் Daphne Caruana Galizia மற்றும் ஸ்லோவாக்கிய புலனாய்வு பத்திரிகையாளர் ஜான் குசியாக் மற்றும் அவரது வருங்கால மனைவி ஆகியோரின் கொலைக்குப் பின்னர், இரு வழக்குகளிலும் அரசாங்கத்திற்குள்ளேயும் மற்றும் பெரிய வணிகங்களுக்குள் இருந்தும் ஈடுபாட்டை வலுவான சான்றுகள் சுட்டிக்காட்டினாலும் பொருளாதாரத் தடைகள் பற்றி எதுவும் பேசப்படவில்லை. இரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் உறுப்பினர்களாகும்.

பல சாட்சிகள் அவரே பத்திரிகையாளரின் படுகொலைக்கு உத்தரவிட்டதாக அடையாளம் காட்டியிருந்தாலும் ஸ்லோவாக்கிய தொழிலதிபர் மரியான் கோக்னர் குசியாக்கின் கொலை வழக்கிலிருந்து இந்த வாரத்திலேயே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

எதிர்க் கட்சி ஊடகவியலாளர் ஜமால் கஷோகியை இஸ்தான்புல்லில் உள்ள தனது துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்டு மற்றும் வெட்டித்துண்டாக்க உத்தரவிட்ட பின்னர் சவூதி ஆட்சி ஒருபோதும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளவில்லை.

நோவிச்சோக் வகையைச் சேர்ந்த ஒரு நரம்பை தாக்கும் விஷத்தால் நவால்னி விஷமூட்டப்பட்டார் என்பதற்கு, “சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது” என்பதை தவிர நிரூபிக்க இதுவரை எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. ஆதாரங்களை முன்வைத்த மூனிச் நகரில் உள்ள ஆய்வகம் நடுநிலை அல்லது சுயாதீனமானது அல்ல. இது ஜேர்மன் இராணுவத்தின் கட்டளையின் கீழ் உள்ளது. இது ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவின் இராணுவ கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் ரஷ்ய அரசாங்கத்தை இழிவுபடுத்துவதில் நேரடி அக்கறை கொண்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஜேர்மன் வெளியுறவு புலனாய்வு அமைப்பு (BND) ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் இருப்பதை "நிரூபிப்பது" எனப்படுவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. இது ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான போருக்கு முக்கிய சாக்குப்போக்காக செயல்பட்டது. ஆனால் பின்னர் அக்குற்றம் எவ்வித அடிப்படையும் இல்லாதது என நிரூபிக்கப்பட்டது.

ஆனால் நவால்னி விஷமூட்டப்பட்டதாக ஒருவர் ஏற்றுக்கொண்டாலும், இது எந்த வகையிலும் புட்டின் ஆட்சியின் ஈடுபாட்டை நிரூபிக்கவில்லை. நோவிச்சோக் 1970 கள் மற்றும் 1980 களில் சோவியத் ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்டது. ஆனால் சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னர் எல்லாவற்றையும் போலவே இதையும் பணம் கொடுத்து பெறக்கூடியதாக இருந்தது. எடுத்துக்காட்டாக, BND 1990 களில் ஒரு ரஷ்ய இராணுவ விஞ்ஞானியிடமிருந்து நோவிச்சோக்கின் மாதிரியை வாங்கி அதன் மேற்கத்திய சகாக்களுக்கு அனுப்பியது. அவர்கள் அதை தாமும் உற்பத்தி செய்யும் நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். நரம்பை தாக்கும் விஷம் தனியார் கைகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் பல்கேரிய குண்டர் கும்பல்களிடையே தமது பிணக்கை தீர்க்க பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் உளவுத்துறை முகவரான புட்டின் முதலில் நவால்னிக்கு விஷம் கொடுத்து, இரண்டு நாட்களுக்குப் பின்னர் அங்கு விஷம் கண்டுபிடிக்கப்படும் என்பது கட்டாயமாக தெரிந்திருந்தும், ஒரு ஜேர்மன் வைத்தியசாலைக்கு வெளியேற அனுமதிக்குமளவிற்கு ஒரு முட்டாளாக இருப்பார் என்பதும் இன்னும் விளக்கமளிக்க முடியாத ஒன்றாகும்.

உலக சோசலிச வலைத் தளம் இந்த வாரம் ஒரு கட்டுரையில் விளக்கியது போல, நவால்னி வலதுசாரி தீவிரவாதிகள், கிரெம்ளினுடன் போட்டியிடும் தன்னலக்குழுக்கள் மற்றும் மேற்கத்திய புலனாய்வு அமைப்புகளுடன் உறவு வைத்துள்ளார். அவரை அகற்றுவதில் ஆர்வமுள்ள பல எதிரிகள் அவருக்கு உள்ளனர். அவர் தனது ஆலோசகர்களுக்கு குறுக்கே வந்ததால் புட்டினை இழிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த தாக்குதலை அவர்கள் பார்த்திருக்கலாம் என்பதும் சாத்தியமே.

2014 ஆம் ஆண்டில், ஜேர்மன் ஆளும் வர்க்கம் மேலும் "சர்வதேச பொறுப்பை" ஏற்றுக்கொள்வது மற்றும் ஒரு பெரிய இராணுவ கட்டமைப்பைத் தொடங்குவது அவசியம் என்ற முடிவுக்கு வந்தது. "உலக அரசியல் குறித்து ஒதுங்கியிருந்து கருத்து தெரிவிக்க ஜேர்மனி மிகப் பெரியது" என்று அப்போதைய வெளியுறவு அமைச்சரும் தற்போதைய ஜேர்மனிய ஜனாதிபதியுமான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் கூறினார்.

அப்போதிருந்து, நாடு ஒரு பாரிய மறுஆயுதமயமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் பல இராணுவத் தலையீடுகளில் பங்கேற்றதுடன் மற்றும் ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ இராணுவ கட்டமைப்பில் இணைந்தது. இராணுவவாதத்தின் மீளெழுச்சி நாஜிக்களின் குற்றங்களை குறைத்துக்காட்டும், ஜேர்மனிக்கான-மாற்று போன்ற தீவிர வலதுசாரி சக்திகளை வலுப்படுத்துவதும் சேர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால், இந்த நிகழ்வுகள் தீவிரமடைந்துள்ளன.

நவால்னி விவகாரத்திற்கு முன்பே, ஜேர்மன் வெளியுறவு சங்கம் (DGAP) அதன் தலைவர் ரொம் எண்டெர்ஸிடமிருந்து ஒரு ஆக்கிரோஷமான கருத்தை வெளியிட்டது. ஜேர்மனி ஒரு "தைரியமான மற்றும் போரிடும்" வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. எண்டர்ஸ் DGAP க்கு மாறுவதற்கு முன்பு, ஏயர்பஸ் இன் தலைவராக இருந்தார். எயர்பஸ், போயிங்குடன் சேர்ந்து, உலகின் மிகப்பெரிய பொதுதேவைக்கான விமானங்களை தயாரிப்பது மட்டுமல்ல, ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரும் கூட.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் இப்போது ரஷ்யாவிற்கு எதிராக திரும்புகையில் ஒரு வரலாற்று வடிவத்தை பின்பற்றுகிறது. "கிழக்கில் உயிர்வாழும் இடத்திற்கான" அதன் போராட்டத்தில், நாஜி ஆட்சி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்து சோவியத் மக்களில் பெரும்பகுதியை அழிக்க முயன்றது. ரஷ்யாவுடனான அதன் ஆழமான மோதலில், ஜேர்மன் முதலாளித்துவம் இந்த குற்றவியல் மரபுகளை மீண்டும் ஒரு முறை வரைந்து வருகிறது.

Loading