கோவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கையில் இந்தியா இப்போது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது, ஆனாலும் "மீண்டும் திறத்தலை" தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்களன்று 90, 000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய்களைப் பதிவுசெய்த பின்னர், உலகில் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுகள் கொண்ட நாடாக இந்தியா பிரேசிலைத் தாண்டிவிட்டது. ஏறக்குறைய 1,000 தினசரி மரணங்கள் அடங்கிய பேரழிவு நிலைமை இருந்தபோதிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தீவிர வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் பல்வேறு மாநில அரசுகள் பொருளாதாரத்தை மீண்டும் திறக்க அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதில் எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு பிராந்திய மற்றும் சாதி-கட்சிகள் தலைமையிலான அல்லது அவை ஆதரிக்கும் மாநில அரசாங்கங்களும் அவர்களின், ஸ்ராலினிச ஒத்துழைப்பாளர்களான சிபிஎம் மற்றும் சிபிஐ யும் இதில் அடங்கும்.

இந்தியாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, திங்கட்கிழமையன்று நாட்டில் புதிய தொற்றுகள் ஒரே நாளில் 90,802 பதிவாகி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இது இந்தியாவின் உத்தியோகபூர்வ மொத்தத்தை 4.2 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. சுமார் ஒரு மாதமாக, இந்தியாவில் உலகிலேயே அதிக தினசரி தொற்றுகள் பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை 71,642 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் பரவும் வேகம் கடந்த ஒரு மாதத்தில் வியத்தகு முறையில் துரிதமாகியுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் சுமார் 55,000 புதிய தினசரி தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இப்போது ஒரு நாளைக்கு சராசரியாக 80,000 புதிய தொற்றுகளுக்கு மேல் உள்ளது. இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்குள் 2 மில்லியனிலிருந்து 4 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. நோய்த்தொற்றுகள் ஒரு மில்லியனாக அதிகரிக்க 13 நாட்கள் மட்டுமே ஆனது, ஆகஸ்ட் 22 அன்று 3 மில்லியனிலிருந்து செப்டம்பர் 4 ஆம் தேதி 4 மில்லியனாக மாறியது.

இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் கொடூரமானவை இருந்தாலும், அவை நெருக்கடியின் உண்மையான அளவை கணிசமாக குறைத்து மதிப்பிடுகின்றன. மோசமான பரிசோதனை விகிதம் காரணமாக, COVID-19 நோய்த்தொற்றுகளில் ஒரு பகுதி மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதை பெரும்பாலும் அனைத்து நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். உலகில் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா ஏற்கனவே அமெரிக்காவை விஞ்சிவிட்டது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொது சுகாதார ஆராய்ச்சியாளரும், வாஷிங்டனை தளமாகக் கொண்ட நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையத்தின் (CDDEP) இயக்குனருமான டாக்டர் ரமணன் லக்ஸிநாராயன் CBS செய்திக்கு கூறினார்: “இந்தியா (அமெரிக்காவை) கடந்து செல்வது நேரம் பற்றிய விஷயம் மட்டுமே. அறிவிக்கப்பட்ட நோய்த் தொற்றுகளைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அங்கே குறைந்த அளவிலான பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதால், இந்தியாவில் உண்மையான நோய்த்தொற்றுகள் ஏற்கனவே அமெரிக்காவை விட அதிகமாகி இருப்பது சாத்தியம் தான்.” இரத்த மாதிரிகளை “seroprevelance” பரிசோதனை செய்து பார்த்ததில் இந்தியாவில் "குறைந்தது 100 மில்லியன் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருப்பதை அது குறிக்கிறது" என்று அவர் கூறினார்.

மத்தியில் உள்ள மோடி அரசாங்கத்தின் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் கடுமையான மற்றும் குற்றவியல் கொள்கைகள் சுகாதார பேரழிவுடன் சேர்ந்து கூடுதலாக பெரும் சமூக துன்பங்களை உருவாக்கியுள்ளன.

மார்ச் 25 அன்று நான்கு மணி நேரத்திற்கும் குறைவான அறிவிப்புடன் செயல்படுத்தப்பட்ட மோடியின் தவறாக திட்டமிடப்பட்ட மற்றும் மோசமாக தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஊரடங்கு ஒட்டு மொத்த தோல்வியாகும். இந்திய ஆளும் உயரடுக்கு ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி பரந்தளவில் பரிசோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் ஆகிய ஒரு விரிவான முறையை செயல்படுத்த அல்லது நாட்டின் நாள்பட்ட பாழடைந்த பொது சுகாதாரப் பாதுகாப்பு முறைக்கு அவசியமான நிதி வளங்களை அளிப்பதற்கு மறுத்துவிட்டது.

மேலும், ஊரடங்கினால் ஒரே இரவில் வேலை இழந்த கோடிக்கணக்கான வறிய தொழிலாளர்களுக்கு பாஜக அரசு பஞ்ச பாணி நிவாரண திட்டங்களைத் தான் வழங்கியது, இதன் விளைவாக மிகப்பரந்தளவில் வறுமை, வீடின்மை மற்றும் பட்டினி நிலைமை ஏற்பட்டது.

ஊரடங்கு மற்றும் சமூக பாதுகாப்பை வழங்க அரசாங்கம் மறுத்ததன் காரணமாக முன்கண்டிராத வகையில் பொருளாதார சரிவு உருவாக்கியுள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதம் குறைந்துள்ளது, இது முக்கிய பொருளாதாரங்களில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும். ஆளும் வர்க்கம் இந்த சமூக துயரத்தை சாதகமாக்கி, தொழிலாளர்களை பணிக்கு திரும்பும்படி தள்ளி, அதன் கொத்தடிமை சுரண்டல் மூலம் இலாபத்தைப் பிழிந்தெடுப்பது மீண்டும் தொடங்கும். ஏப்ரல் பிற்பகுதியில் ஏற்றுமதி தொழில்கள் மற்றும் பிற தொழில்துறைகள் மீதான ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க பாஜக அரசு அனுமதி வழங்கத் தொடங்கியது. இது விரைவாக நோய்த்தொற்றுகள் அதிகரிக்க வழிவகுத்தது.

இந்த வைரஸ் இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது, பல முக்கிய நகரங்களில் வறிய மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாத கிராமப்புறங்களிலும் ஆழமாக தன்னை நிலைநிறுத்தியள்ளது. இது நாட்டின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தொலைதூர அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கூட சென்றடைந்துள்ளது. COVID-19 தொற்றுகள் மற்றும் இறப்புகளின் சீற்றம் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான மோடி அரசாங்கம் மற்றும் அதன் மாநில சகாக்களின் ஓட்டத்தில் எந்தவிதமான தளர்வு அல்லது இடைநிறுத்தத்தை ஏற்படுத்தவில்லை. மனித உயிர்களுக்கு முன்னே இலாபங்களை நிறுத்தி, அவர்கள் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" என்ற ஒரு கொலைகாரக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் - இக்கொள்கையின்படி அதிகாரிகள் வைரஸ் அடாவடியாக பரவுவதை அனுமதிக்கின்றனர், அது பெரும்பான்மையான மக்களை பாதித்து தானாகவே காணாமல் போய்விடும்.

பெரும்பாலான வணிகங்கள் இப்போது மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வசிக்கும் மற்றும் சரியான கழிப்பறை வசதி இல்லாமல் பல்லாயிரக்கணக்கான நகர்ப்புற ஏழைகளுக்கு எப்போதும் சாத்தியமில்லாத சமூக இடைவெளி மற்றும் பிற அடிப்படை தடுப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் கைவிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் பட்டணங்களில் உள்ள சந்தைகளில் மீண்டும் மக்கள் நெரிசல் ஏற்பட்டுள்ளதால் தொற்றுநோய்கள் மேலும் அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன.

திங்களன்று மோடி அரசாங்கத்தின் "திறப்பின்" நான்காவது கட்டத்தின்படி, இந்தியா தினசரி நோய்த்தொற்றுகளில் ஒரு புதிய உலக சாதனை படைத்த அதே நாளில், ஐந்து மாத முடக்கம் முடிவுக்கு வந்து சுரங்கப்பாதை ரயில் நெட்வொர்க்குகள் தேசிய தலைநகரான டெல்லி மற்றும் பிற பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் மீண்டும் தொடங்கின. அதிக எண்ணிக்கையிலான மக்கள் மோசமான காற்றோட்டமுள்ள சுரங்கப்பாதை ரயில்களில் நெரிசலில் பயணிக்கும்போது நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் கூர்மையாக அதிகரிக்கும் என்பது உறுதி.

நாட்டின் மிகப்பெரிய விரைவு போக்குவரத்து அமைப்பான டெல்லி மெட்ரோவை மீண்டும் திறப்பது குறிப்பாக பயணிகளின் எண்ணிக்கையையும், தலைநகரில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அண்மையில் அதிகரித்து இருப்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் ஒரு பொறுப்பற்ற நடவடிக்கையாகும். மார்ச் மாதத்தில் கட்டாயமாக மூடப்படுவதற்கு முன்பு, அது தினமும் சராசரியாக 2.7 மில்லியன் பயணிகள் நிரம்பிய ரயில்களாக பயணித்தது. முதன்முதலில் மீண்டும் திறக்கப்பட்ட மஞ்சள் கோடு, வடக்கு டெல்லிக்கும், செயற்கைக்கோள் நகரமான குர்கானுக்கும் இடையில் இயக்கப்பட்டது, அந்த நகர் வட இந்திய மாநிலமான ஹரியானாவில் ஒரு தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மையமாக இயங்குகிறது. இது 37 நிலையங்களை இணைக்கும் மற்றும் தினமும் சுமார் 1.45 மில்லியன் பயணிகளை ஏற்றிச்செல்லும் பரபரப்பான பாதையாகும்.

உழைக்கும் மக்களுக்கு ஆபத்தான வைரஸ் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் குறித்து ஆளும் உயரடுக்கின் அலட்சியத்தின் மற்றொரு எடுத்துக்காட்டாக, மத்திய அரசு நிறுவனமான தேசிய சோதனை நிறுவனம் (NTA) நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றது. கோபமடைந்த மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர், அவர்களில் பலர் இந்த தேர்வுகளில் பங்கேற்க கணிசமான தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பது அலட்சியப்படுத்தப்பட்டன. மோடி அரசாங்கத்தின் முடிவை ஆதரித்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 17 அன்று மாணவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. தேர்வுகளை நடத்தத் தவறினால் மாணவர்களின் தொழில் “ஆபத்தில்” இருக்கும் என்று நீதிமன்றம் கூறியது. அது மேலும் கூறியது: "இயல்பு வாழ்க்கை COVID-19 நிலைமைகளில் கூட தொடர்ந்து செல்ல வேண்டும்." இது முற்றிலும் மோடி அரசாங்கத்தின் மற்றும் அதன் மாநில சகாக்களின் மந்திரத்திற்கு இணக்கமாக உள்ளது. வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பற்ற நிலையில் தொழிலாளர்கள் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அனைவரும் வலியுறுத்துகின்றனர், இதனால் வாழ்க்கை “இயல்பு நிலைக்கு” திரும்ப முடியும், அதாவது ஆளும் வர்க்கம் தொடர்ந்து தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியும். உலகெங்கிலும் உள்ள அவர்களது சகாக்களைப் போலவே, மோடி அரசாங்கமும் ஒட்டுமொத்த இந்தியாவின் முதலாளித்துவ உயரடுக்கினரும் முதலாளித்துவ அரசியலை மேலும் வலதுபுறமாக மாற்றுவதற்காக தொற்றுநோயை சாதகமாக்கிக் கொண்டுள்ளனர். மோடியின் சொந்த வார்த்தைகளில் கூறுவதாயின் அவரது அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்களில் "பெரும் பாய்ச்சல்" உடன் முன்னேறி வருகிறது, அதாவது பூகோள மூலதனத்தை ஈர்ப்பதற்கான முதலீட்டாளர் சார்பு கொள்கைகள். "சீர்திருத்தங்களில்" தனியார்மயமாக்கல், தொழிலாளர் சட்டங்களில் கடுமையான மாற்றங்கள், அதன் மூலமாக முதலாளிகள் விருப்பப்படி தொழிலாளர்களை "பணியமர்த்தலாம் மற்றும் பணிநீக்கம் செய்யலாம்", மேலும் பெருநிறுவன மேம்பாட்டுக்கு நிலத்தைப் பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவது மற்றும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

அதன் கொள்கைகளுக்கு எதிராக பெருகிவரும் சமூக கோபத்தை ஒரு பிற்போக்கு திசையில் திசைதிருப்ப, மோடி சீனாவுடனான இந்தியாவின் எல்லை மோதலை தீவிரப்படுத்துவதன் மூலம் ஒரு போர்வெறி கொண்ட இந்திய தேசியவாதத்தைத் தூண்டிவிடுகிறார். இதில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அவர் ஊக்குவிக்கப்பட்டார், அது பெய்ஜிங்கிற்கு எதிரான பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒரு முக்கிய பங்காளியாக கருதுகிறது. திங்களன்று, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டம் மீண்டும் அதிகரித்தது, இரு நாடுகளுக்கும் இடையிலான உண்மையான கட்டுப்பாட்டு எல்லை கோடு (LAC) இருக்கும் இடத்தில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஒவ்வொரு பக்கமும் முதல் குண்டை மற்றையது சுட்டதாக குற்றம் சாட்டியது. ஜூன் மாதத்தில் இமயமலை ஒன்றில் தண்டுகள் மற்றும் கத்திகளுடன் சண்டையிட்டதில் பல டஜன் இந்திய மற்றும் சீன வீரர்கள் இறந்தனர், இது 45 ஆண்டுகளில் இரு தரப்பினருக்கும் இடையே முதல் தடவையாக ஏற்பட்ட நேரடி துப்பாக்கி சண்டை ஆகும். சீனாவின் "ஆக்கிரமிப்பை" எதிர்க்க புதுடெல்லியை வலியுறுத்தி வரும் இந்தியாவின் பிரதான ஊடகங்களின் சில பிரிவுகள் இப்போது எச்சரிக்கையை வெளிப்படுத்துகின்றன, அதாவது இரண்டு அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான இராணுவ மோதலின் ஆபத்து மிகவும் கடுமையானது. "நாம் முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும் ஆபத்தான விரிவாக்க எல்லைக்குள் நுழையும் விளிம்பில் இருக்கிறோம்" என்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு தலையங்கம் அறிவித்தது. "அது நடந்தால், அது ஒரு பேரழிவாக இருக்கும்."

சமீபத்திய வாரங்களில் மோடி அரசாங்கத்தின் வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போராட்டங்களில் பங்கேற்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திட்டமிடப்பட்ட தனியார்மயமாக்கல்கள் மற்றும் தொற்றுநோய்களின் போது சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற முன்னணித் தொழிலாளர்களுக்கு போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் அதிகாரிகளின் தவறியமை ஆகியவற்றிற்கு எதிராக கோபம் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் இடைவிடாமல் பரவுவதைத் தடுக்க, தொற்றுநோய்களின் அழிவுகரமான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உழைக்கும் மக்களை பாதுகாப்பதற்கான ஒரே வழி மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்திய ஆளும் உயரடுக்கின் தீங்கு விளைவிக்கும் கூட்டணி மற்றும் இராணுவ மோதலைத் தூண்டுவதை வெற்றிகரமாக எதிர்க்க வேண்டுமாயின் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்கம் ஒருங்கமைக்கப்பட வேண்டும். அது ஒரு தொழிலாளர் அரசாங்கத்துக்கும் சோசலிசத்துக்குமான போராட்டத்தில் கிராமப்புற ஏழைகள் மற்றும் பிற உழைப்பாளர்களை அணிதிரட்ட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு தனது அறிக்கையில் விளக்கியது போல், “COVID-19 தொற்றுநோய்க்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்க நடவடிக்கைக்கு!”: “தொற்றுநோய்க்கு எதிர்வினை ஆற்றுவதற்கான அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும். தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும், இப்போது ஆபத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன நடவடிக்கை அவசியம். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல, அல்லது முதன்மையானதும் கூட அல்ல. அது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டம் குறித்த ஒரு விடயமாகும். ”

Loading