முன்னோக்கு

அமெரிக்காவிற்கும் உலகிற்கும் எதிரான சதி: அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் COVID-19 தொற்றுநோய் பற்றிய உண்மையை எவ்வாறு ஒடுக்கின

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை, மூத்த வாஷிங்டன் போஸ்ட் நிருபரும் ஸ்தாபக உள் இரகசியங்களை அறிந்தவருமான பாப் வூட்வார்ட் (Bob Woodward), அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளை வெளியிட்டார். இது கோவிட்-19 அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான பொது முயற்சிகள் இருந்தபோதிலும், புதிய நோயால் ஏற்படும் பாரிய ஆபத்து குறித்து ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகை முழுமையாக அறிந்திருந்தது என்பது தெளிவாக்குகின்றது.

ட்ரம்ப் நிர்வாகம் அச்சுறுத்தலைப் பற்றி பொதுமக்களிடம் பொய் சொன்னதாக நாடாக்கள் நிறுவுகின்றன. அதே நேரத்தில் இது வேண்டுமென்றே நடைமுறைப்படுத்திய ஒரு கொள்கை, கிட்டத்தட்ட 200,000 மக்களின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான முக்கியமான காலகட்டத்தில், சீனாவில் எடுக்கப்பட்டதைப் போன்ற சரியான நேரத்து நடவடிக்கைகள், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் நூறாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும், ஆனால் வெள்ளை மாளிகை முன்னோடியில்லாத குற்றமாக பொதுமக்களிடம் பொய் சொல்ல ஒரு கொடூரமான முடிவை எடுத்தது.

இது அமெரிக்காவினதும் மற்றும் உலக மக்களுக்கும் எதிரான சதியாகும்.

பிப்ரவரி 7 ம் தேதி, ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் உரையாடியதாக வூட்வார்ட்டிடம் கூறினார். ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதிக்கு தொற்றுநோயால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய ஒரு தெளிவான மற்றும் அப்பட்டமான மதிப்பீட்டை வழங்கியிருந்தார். “இது கொடிய பொருள்” என்று ட்ரம்ப் கூறினார். "இது உங்கள் கொடூரமான காய்ச்சலைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது ... இதனது ஐந்து சதவிகிதத்துடன் [இறப்பு விகிதம்] பார்க்கையில் காய்ச்சலின் விகிதம் ஒரு சதவிகிதம் மற்றும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானது."

இந்த வார்த்தைகள் அடுத்த வாரங்கள் மற்றும் மாதங்களில் ட்ரம்ப் பகிரங்கமாக வெளியிட்ட அறிக்கைகளுக்கு முரணானவை. அதில் அவர் தொற்றுநோயை பருவகால காய்ச்சலுடன் ஒப்பிட்டு, அது “மறைந்துவிடும்” என்று உறுதியளித்தார், மேலும் தொற்றுக்கள் “குறைந்து கொண்டே போகின்றன” என்றும் கூறினார்.

ட்ரம்ப் தனது பகிரங்க அறிக்கைகளின் விஞ்ஞான ரீதியான வார்த்தையாடல்களை தவிர்த்து, வூட்வார்ட் உடனான தனது கலந்துரையாடலில் நோய் பரவுவது பற்றிய தெளிவான மற்றும் துல்லியமான புரிதலை நிரூபித்தார். "இது காற்று வழியாக செல்கிறது, பாப். தற்போதைய விஞ்ஞான கருத்துக்கு முற்றாக உடன்படும் வகையில் இது எப்போதும் தொடுவதை விட கடுமையானது,” என்று ட்ரம்ப் கூறினார்.

ஜனவரி 28 அன்று, வூட்வார்ட்டின் கருத்தின் படி, ட்ரம்ப்பிற்கு அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி. ஓ’பிரையன் பின்வருமாறு கூறினார், “இது உங்கள் ஜனாதிபதி பதவியில் நீங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் ... இது நீங்கள் எதிர்கொள்ளும் கடுமையான விஷயமாக இருக்கும்."

1974 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் பதவி விலகுவதற்கு வழிவகுத்த வாட்டர்கேட் சதித்திட்டத்தின் வெளிப்படுத்தலுடன் தொடர்புடைய அமெரிக்க பத்திரிகை துறையில் வூட்வார்ட் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். அப்போதிருந்து, வூட்வார்ட் அரசின் உயர் மட்டங்களுடனான தனது வரம்பற்ற அணுகலைப் பயன்படுத்தி பல நிர்வாகங்களின் கீழ் வெள்ளை மாளிகையின் உள் விபரங்களை வெளியிட்டு தொழில்வாழ்க்கையில் எழுச்சியுற்றார். ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை பற்றிய வூட்வார்ட்டின் புதிய புத்தகத்தை வெளியிடுவதற்காக நடத்தப்பட்ட நேர்காணல்களின் ஒரு பகுதியாக ட்ரம்ப் நாடாக்கள் வெளியிடப்பட்டன.

வாஷிங்டன் போஸ்டின் வாட்டர்கேட் விசாரணையின் முடிவுகளை வூட்வார்ட் நாளுக்கு நாள் வெளியிடுவதன் மூலம் தனது தொழில் வாழ்க்கையை நடாத்தியவர், பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றக்கூடிய தகவல்களை அவர் எவ்வாறான நோக்கங்களுக்கும் தேவைகளுக்காகவும் தடுத்து வைத்திருந்தாலும், வெள்ளை மாளிகை செய்த குற்றங்களுக்கு அவரையும் உடந்தை ஆக்குகின்றது.

வூட்வார்ட் அவற்றை ஆறு மாதங்களுக்கு மறைத்து வைத்த பின்னர் இப்போது இந்த நாடாக்களை வெளியிட்டிருப்பதானது, எதிர்வரவிருக்கும் தேர்தல் பற்றிய நெருக்கடியானது அரசிற்குள் பிளவுகளை பெருமளவில் அதிகரித்துள்ளதாலாகும். ஆனால் இந்த தகவலை வெளியிடத் தேர்ந்தெடுப்பதில், ட்ரம்ப்பிற்கு எதிரான பிரிவினர் ஒரு பெரிய மூடிமறைப்பில் தங்களையும் உடந்தையாக்கியுள்ளனர்.

தொற்றுநோய் குறித்த உளவுத்துறை தகவல்களை ட்ரம்பும் அவரது அமைச்சரவையும் மட்டுமே பெற்றிருக்க மாட்டார்கள். இரு கட்சியினதும் உயர் பதவியில் உள்ள செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அமெரிக்க உளவு அமைப்புகளிடமிருந்து தொடர்ந்து விளக்கங்களைப் பெறுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் முன்னாள் ஜனாதிபதிகள் உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து பெறுகிறார்கள். “அநாமதேய ஆதாரங்கள்” என நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் அடிக்கடி மேற்கோள் காட்டிய இந்த விளக்கங்கள், அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள்களின் ஆசிரியர்களுக்கு அதைப்பற்றி தெரிந்திருக்கும் என்பதையே காட்டுகின்றது.

மேலும், வூட்வார்ட் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கை அல்லது இறப்பைக் குறிக்கும் தனது வசம் உள்ள நாடாக்களை வைத்திருப்பது பற்றி, போஸ்ட் மற்றும் பிற முக்கிய செய்தி நிறுவனங்களில் தனது சகாக்களுடன் விவாதித்திருக்க மாட்டார் என்பது நினைத்தும் பார்க்க முடியாததாகும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த சதித்திட்டத்திற்கு ட்ரம்ப் மட்டும் காரணம் அல்ல. இந்த நாடாக்கள் ஊடகங்கள் ஆபத்துக்களை பற்றி அறிந்திருந்தன, ஆனால் அமெரிக்க மக்களை எச்சரிக்க மறுத்துவிட்டன என்பதற்கான நேரடி ஆதாரங்களாகின்றது

வாட்டர்கேட் ஊழலின் அடிப்படை கேள்விகளான, "ஜனாதிபதிக்கு என்ன தெரியும், அது எப்போது அவருக்குத் தெரியும்?" என்பது "அரசாங்கத்திற்கும் காங்கிரசிற்கும் ஊடகங்களுக்கும் என்ன தெரியும், அது எப்போது அவர்களுக்குத் தெரியும்?" என்பதாக விரிவடைந்துள்ளது.

மார்ச் 19 ம் தேதி அடுத்தடுத்த அழைப்பில், ட்ரம்ப் ஏன் நோயின் அபாயத்தை குறைத்து மதிப்பிட முயன்றார் என்பதை வூட்வார்ட்டுக்கு விளக்கினார். அவர், "நான் எப்போதுமே அதைக் குறைத்துக்காட்டவே விரும்பினேன் ... நான் இன்னும் அதை குறைத்துக்காட்டவே விரும்புகிறேன், ஏனென்றால் நான் ஒரு பீதியை உருவாக்க விரும்பவில்லை." என்றார்.

ட்ரம்ப் என்ன "பீதியை" பற்றி பேசினார்? வோல் ஸ்ட்ரீட்டின் பிணையெடுப்பு தயாரிக்கப்படுவதற்கு முன்னர் பங்குச் சந்தையில் விற்றுத்தள்ளலை தடுப்பதில் அவர் முதன்மையாக அக்கறை கொண்டிருந்தார். மேலும், தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நோய் பரவுவதைப் பற்றி பெருகிய முறையில் கவலைப்பட்ட நிலையில், பரந்தளவிலான தொழிலாள வர்க்க வெளிநடப்புகளைப் பற்றி அவர் அஞ்சினார். அவ்வாறானவை மார்ச் மாதத்தில் அமெரிக்க வாகன ஆலைகளை மூடுவதற்கு வழிவகுத்தது.

ஜனவரியில் தனக்குத் தெரிந்ததைப் பற்றி பொதுமக்களை எச்சரிப்பதற்குப் பதிலாக, தொற்றுநோயை வெடிப்பிற்கான தயாரிப்புகளை அரசாங்கம் மேற்கொண்டது. இதனை நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் அல்லாது, அமைதியாக மக்களுக்கு தெரியாது உலக வரலாற்றில் பெரிய நிறுவனங்களின் மிகப்பெரிய பிணையெடுப்பு மூலம் தயாரிக்கப்பட்டது.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சந்தைகள் வீழ்ச்சியடைந்த பின்னர் அடைத்தல் தவிர்க்க முடியாதது என்பது தெளிவாகத் தெரிந்தபோது, அரசாங்கம் 6 ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்புடன் தயாராக இருந்து. இது விரைவாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், பிணையெடுப்பு பாதுகாக்கப்பட்டவுடன், மில்லியன் கணக்கான தொழிலாளர்களை தொழிற்சாலைகளிலும், குழந்தைகளை பள்ளிகளிலும் அடைப்பதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கியது.

வூட்வார்ட் உடனான ட்ரம்ப்பின் உரையாடல்களின் பதிவுகள், சோசலிச சமத்துவக் கட்சியின் மதிப்பீட்டின் ஒரு அழுத்தம் மிக்க உறுதிப்படுத்தல் ஆகும், அது ஆகஸ்ட் 1 அன்று வெளியிட்ட அறிக்கையில், தொற்றுநோய் பற்றிய தகவல்களை அடக்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் வேண்டுமென்றே முயற்சி செய்தது என்று விளக்கியது:

உலகம் ஒரு சுகாதாரப் பேரிடரின் மிக விளிம்பில் நின்று கொண்டிருந்தது என்பதை 2020 இன் முதல் நாட்களிலேயே —அநேகமாக டிசம்பரின் இரண்டாவது பாதியிலேயே என்று சொல்லலாம்— அமெரிக்க அரசாங்கமும் அதன் உளவு-சேகரிப்பு முகமைகளும் புரிந்து கொண்டு விட்டன என்பது தெளிவு.

டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையிலான காலத்தைக் குறிப்பிட்டு, நாங்கள் எழுதினோம்:

ட்ரம்ப் நிர்வாகமும் இரண்டு முதலாளித்துவக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்றத் தலைவர்களும் பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் வழிகாட்டுதல்களின் படி பெருந்தொற்றின் பரவலைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் வங்கிகள், மிகப்பெரும் பெருநிறுவனங்கள் மற்றும் சக்திவாய்ந்த வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் ஆகியோரை மீட்பதற்கு முன்னுரிமை வழங்குகின்ற சமூகரீதியாக பேரழிவுகரமான முடிவுகளை எடுத்தனர்.

அறிக்கை தொடர்ந்தது:

பெருந்தொற்றின் பரவலால் மிகத்தீவிரமான சுகாதார அபாயம் முன்நிறுத்தப்பட்ட போதிலும், ஆளும் வர்க்கமானது, பெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்பின் மீது, அதாவது இந்த நோய் பங்குச் சந்தையை மற்றும் சமூகத்தின் மிகவும் வசதிபடைத்த ஒன்று முதல் ஐந்து சதவீதம் வரையான பேரின் தனிமனித செல்வத்தை எவ்வாறு பாதிக்கவிருக்கிறது என்பதன் மீதே கிட்டத்தட்ட பிரத்தியேக கவனம் குவித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அபாயம் குறித்து தெளிவாக பகிரங்கமாக அறிவிப்பதானது ஒரு நிதிரீதியான பீதிக்கு இட்டுச் சென்று, சந்தைகள் “தத்தளிப்பதற்கும் இன்னும் சொன்னால் அதளபாதாளத்தில் வீழ்வதற்கும்” காரணமாகி விடும் என்று முதலாளித்துவ நிதியசிலவராட்சியினர் அஞ்சினர்.

ட்ரம்பி்ன் அறிக்கைகள் முன்னர் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தால், பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான உயிர்கள் கூட காப்பாற்றப்பட்டிருக்கலாம். ட்ரம்ப் நிர்வாகத்தினுள் உள்ளவர்கள் உட்பட மருத்துவ வல்லுநர்கள், அமெரிக்காவில் தொற்றுநோய்கள் பெருமளவில் மீண்டும் எழுந்திருப்பது, அடைத்தல்களை ஓரளவு செயல்படுத்துதல் மற்றும் அவற்றின் முன்கூட்டியே இரத்துசெய்தல் ஆகியவற்றால் என்று குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக இந்த நாடாக்களின் வெளியீடு கடுமையான அடைத்தல்களுக்கான ஒரு பகிரங்க கோரிக்கைக்கு பங்களித்து, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

அப்படியானால், ஒவ்வொரு மாநிலத்திலும் அடைத்தல்கள் நீக்கப்பட்டு, தொழிலாளர்கள் பணியிடங்களுக்குள் நுழைந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை வூட்வார்ட் ஏன் நாடாக்களைப் பகிரங்கப்படுத்த காத்திருந்தார்?

வூட்வார்ட் கொடுத்த விளக்கமான, அவர் விடயத்தை "சரிபார்க்க" விரும்பினார் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளமுடியாது. பொதுமக்களை ஏமாற்றுவதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதியின் நாடாக்கள் அவரிடம் இருந்தன. இதில் "சரிபார்க்க" எதுவுமில்லை.

இங்கு மற்றொரு பதில் உள்ளது: வூட்வார்ட் தனது புத்தகத்தின் வெளியீட்டு தேதிக்கு நெருக்கமாக நாடாக்களை வெளியிடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை இறக்க அனுமதிக்கும்போது அதிக பணம் சம்பாதிக்க விரும்பினார். ஆனால் இந்த அடிமைத்தனமான விளக்கத்தினால் மூடிமறைப்பை விளக்க முடியாது. இல்லை, வூட்வார்ட்டின் வெளிப்படுத்தலுக்கான நேரம் அரச கொள்கையுடன் தொடர்புபட்டது. வூட்வார்ட் பல தசாப்தங்களாக ஊடக ஸ்தாபனத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்ததுடன், அவருடைய அறிக்கைகள் உயர்மட்ட அணுகல் மற்றும் செல்வாக்கின் வலைப்பின்னலை நம்பியுள்ளது. அவரது வெளிப்படுத்தல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன, ஆராயப்பட்டுள்ளன மற்றும் திட்டமிடப்பட்டுள்ளன.

மார்ச் மாதத்தில் ஒவ்வொரு நாளும் 5,000 பேர் இறந்து கொண்டிருப்பதால், அவர் அந்த நாடாக்களை தனக்குள் இரகசியமாக வைத்திருந்தார் என்பது நினைத்துப் பார்க்க முடியாது. அவர் குறைந்தபட்சம் வாஷிங்டன் போஸ்டில் மற்றவர்களுடன் கலந்துரையாடியிருப்பார். மேலும் இந்த வெளிப்படுத்தல்கள் நியூ யோர்க் டைம்ஸ் உயர் ஆசிரியர் குழுவில் மற்றும் ஜனநாயகக் கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்களிடையே அதிகமாக அறியப்பட்டிருக்கலாம்.

இந்த நபர்கள் நாடாக்களை முந்தியே வெளியிட ஏன் வூட்வார்ட்டை ஊக்குவித்திருக்கவில்லை? ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடென் இப்போது கூறுவது போல், ஜனநாயகக் கட்சியினர் தொற்றுநோய்க்கு தீவிரமான பொது சுகாதார பதிலளிப்பைக் கோரியிருந்தால், இந்த நோய்கள் அடங்குவதற்கான போராட்டத்தில் இந்த வெளிப்படுத்தல்கள் அவர்களின் கையை பலப்படுத்தியிருக்காது அல்லவா?

உண்மை என்னவென்றால், நாடாக்கள் ஏன் வெளியிடப்படவில்லையெனில், ஜனநாயகக் கட்சியினர் அவற்றை விடுவிக்க விரும்பவில்லை. வார்த்தையாடல்கள் ஒருபுறம் இருக்க, தொற்றுநோய்க்கு ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பி்லிருந்து பெரும்பாலும் வேறுபடுத்த முடியாத ஒரு பிரதிபலிப்பையே பின் தொடர்ந்தனர்.

தொற்றுநோயின் அச்சுறுத்தலை ட்ரம்ப் தீவிரமாக மறுத்து வந்த நிலையில், ஜனநாயகக் கட்சியினர் மௌனமாக இருந்தனர். ஒரு மாதம் முழுவதும், ஜனவரி 29 முதல் பிப்ரவரி 29 வரை, அமெரிக்காவில் தொற்றுநோய் பிடிக்கப்பட்ட நிலையில், நியூ யோர்க் டைம்ஸ் இந்த விஷயத்தில் ஒரு தலையங்கத்தையும் வெளியிடவில்லை. ஜனநாயக செனட்டர் டயான் ஃபைன்ஸ்டீன், ஜனவரி 24 அன்று செனட் புலனாய்வுக் குழுவிற்கு அறிக்கையை வழங்கியதை அடுத்து, சந்தை வீழ்ச்சிக்கு முன்னதாக 1.5 மில்லியன் டாலருக்கும் 6 மில்லியன் டாலருக்கும் இடையில் பங்குகளை விற்றார், ஆனால் ஆபத்து தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கவில்லை.

நியூ யோர்க் டைம்ஸ் ஆசிரியர்கள், அவர்களின் “அநாமதேய ஆதாரங்களுடன்” வெள்ளை மாளிகை மற்றும் செனட்டுக்கு வழங்கப்பட்ட உளவுத்துறை விளக்கங்களின் உள்ளடக்கங்களை அறிந்திருக்கக்கூடிய சூழ்நிலைகளின் கீழ், அதேபோல், வூட்வார்ட்டின் நாடாக்கள் இருப்பதையும் அறிந்திருந்தும் அவர்கள் தோமஸ் ப்ரீட்மேன் போன்ற தமது எழுத்தாளர்களை "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" அடிப்படையில் தொற்றுநோயை பரவலாக்க அனுமதிக்கும் கொள்கைக்கு பகிரங்கமாக வாதிட விட்டனர்.

கருத்துக்கணிப்புகள் இதற்கு மாறாக காட்டியபோதிலும், அமெரிக்கர்கள் அடைத்தல்களால் "களைப்பும்" "சோர்வும்" அடைந்திருப்பதாக குறிப்பிட்டு அடைத்தல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மக்கள் விருப்பத்தின் நியாயமான வெளிப்பாடுகளாக, போஸ்ட் மற்றும் டைம்ஸ் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்களை ஊக்குவித்தன. இதில் சிலர் வெளிப்படையாக சுவாஸ்திகா சின்னங்களைக் காண்பித்தனர்.

மாநிலங்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதை ஆளுநர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தபோது, நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அதன் அடைத்தல்களை நீக்கியது. சில ஜனநாயகக் கட்சி மாநிலங்கள் நோய் கட்டுப்பாட்டு மையங்கள் மீண்டும் திறக்கும் வழிகாட்டுதல்களை அனுமதிக்கும்வரை கூட காத்திருக்கவில்லை.

ட்ரம்பைப் போலவே ஜனநாயகக் கட்சியினரும், ஒரு ஆளும் வர்க்கத்திற்காகப் பேசுகிறார்கள். இது தொற்றுநோயால் ஏற்படும் உயிர் இழப்பு குறித்து முற்றிலும் அலட்சியமாக உள்ளது. பெருஞ்செல்வந்தர்களின் பங்கு முதலீடுகளில் அதன் தாக்கம் குறித்து மட்டுமே அக்கறை கொண்டுள்ளது.

அப்படியானால், வூட்வார்டின் முதலாளியும், வாஷிங்டன் போஸ்டின் உரிமையாளரான அமசன் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், கடந்த ஆண்டில் தனது செல்வத்தை கிட்டத்தட்ட இரு மடங்காக்கி, 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்புள்ள முதல் மனிதர் ஆனார் என்பது ஒரு தற்செயலானதொன்றா?

வூட்வார்ட்டின் நாடாக்கள் இப்போது வெளிவந்திருக்கின்றதென்றால், தேர்தல் தொடர்பாக ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்ட மோதல்தான் அதற்கு காரணம். ஆனால் ட்ரம்ப்பின் பிரிவுக்கான எதிர்ப்பாளர்களின் உந்துதல்கள் எதுவாக இருந்தாலும், நாடாக்கள் அவர்களை ட்ரம்பை விட குறைவாக குற்றம் சாட்டவில்லை.

அரசாங்கமும் முக்கிய ஊடகங்களும் கூறும் எதையும் நம்ப முடியாது. அவர்கள் இந்த நாடாக்களையே மறைத்திருப்பதால், அவர்கள் எதைப் பற்றியும் பொய் சொல்லலாம். இப்போது எழுப்பப்பட வேண்டிய அவசர கேள்வி: அமெரிக்க மக்களிடமிருந்து வேறு என்ன மறைக்கப்படுகிறது? பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டால், பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் மீண்டும் திறக்கப்படுவதை உடனடியாக நிறுத்திவிடு என்ற தகவல் ஊடகங்களுக்கும் அரசுக்கும் கைவசம் இப்போது உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆண்டு வெளிவந்த சதியை மறைக்க போஸ்ட் மற்றும் டைம்ஸ் செயல்பட்டாலும், உலக சோசலிச வலைத் தளம் அதை அம்பலப்படுத்த முயன்றது. WSWS ஐ தணிக்கை செய்வதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள அதே நேரத்தில் தொற்றுநோயைக் குறைத்துக்காட்டும் பிரச்சாரம் நிகழ்ந்ததில் ஆச்சரியமில்லை.

மெதுவாக வெளிப்படுவது என்னவெனில் ஒரு சதியாகும். இது அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்திலும், முதலாளித்துவ தன்னலக்குழுவிலும், மனித உயிர்களை இலாபத்திற்காக தியாகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ட்ரம்ப் தனது பொய்கள் மற்றும் குற்றங்கள் அனைத்திலும் இந்த வர்க்கக் கொள்கையை முன்னெடுத்து வந்துள்ளார்.

200,000 மனிதர்களின் மரணங்களுக்கு ட்ரம்ப் உடந்தையாக உள்ளார். ஆனால் ஊடகங்களிலும் அரசியல் ஸ்தாபகத்திலும் அவரது இணை சதிகாரர்களும் அவ்வாறே உடந்தையாக உள்ளனர். தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு சமூகக் குற்றமாகும். அதற்கு முழு முதலாளித்துவ ஒழுங்கமைப்புமே பொறுப்பாகும்.

Loading