முன்னோக்கு

அமெரிக்க தேர்தல் நெருங்கி வருகையில், ட்ரம்ப் பாசிச வன்முறையைத் தூண்டுகிறார்

Trump incites fascistic violence as US election approaches

அமெரிக்க தேர்தல் நெருங்கி வருகையில், ட்ரம்ப் பாசிச வன்முறையைத் தூண்டுகிறார்

Joseph Kishore—SEP candidate for US president

16 September 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஏழு வாரங்களே உள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் அது ஊக்குவித்து வரும் வன்முறை மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை, சுகாதார மற்றும் மனிதச் சேவைகள் துறையின் மக்கள் தொடர்பு விவகாரங்களுக்கான ட்ரம்பின் உதவி செயலர் மைக்கெல் காப்புட்ரோ (Michael Caputo) பேஸ்புக்கில் ஒரு காணொளியை பதிவிட்டார். அதில் அவர் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொள்ள வலியுறுத்தியதுடன், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மீது நிர்வாகத்தின் விடையிறுப்பை அரசாங்க விஞ்ஞானிகள் விமர்சிப்பதற்காக அவர்கள் "தேசத்துரோக" நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்.

“சீமாட்டிகளே சீமான்களே, உங்களிடம் துப்பாக்கிகள் இருந்தால், தோட்டாக்களை வாங்கிக் கொள்ளுங்கள், ஏனென்றால் அது கிடைப்பது கடினமாக ஆகப் போகிறது,” என்று காப்புட்ரோ அறிவித்தார். நவம்பரில் பைடென் விட்டுக்கொடுக்க மறுத்தால், ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயுதமேந்திய வன்முறைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுமளவுக்கு அவர் சென்றார். பதவியேற்பு விழாவில் டொனால்ட் ட்ரம்ப் பதவியிலிருந்து விலக மறுக்கும் போது, துப்பாக்கிச்சூடு தொடங்கும்,” என்றார். “நீங்கள் பார்த்துள்ள ஒத்திகைகள் ஒன்றுமே இல்லை,” என்றார்.

ஜனநாயகக் கட்சியினர் காப்புட்ரோவின் அச்சுறுத்தல்களைக் குறைத்துக் காட்டியதுடன், மனோரீதியில் நிலைகுலைந்த ஒருவரின் பிதற்றல்கள் என்பதாக அவற்றை உதறித் தள்ளினர். செவ்வாய்கிழமை, காப்புட்ரோ அறிவிக்கையில் அவர் HHS இல் இருந்து விடுப்பு எடுக்க பரிசீலித்து வருவதாக அறிவித்தார்.

ஆனால் காப்புட்ரோவின் காணொளி முன்னணி ட்ரம்ப் ஆதரவாளர்களின் பிற கருத்துக்கள் மற்றும் ஜனாதிபதியின் கருத்துக்களுடனே கூட பொருந்தி உள்ளது. நிக்சனின் அருவருக்கத்தக்க நடவடிக்கை உத்திகளில் முக்கியஸ்தராக இருந்தவரும் இந்த கோடையில் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியவருமான ரோஜர் ஸ்ட்ரோன், செப்டம்பர் 10 இல், பாசிசவாத அலெக்ஸ் ஜோன்சிற்குக் கூறுகையில் ட்ரம்ப் தேர்தலில் தோல்வியடைந்தால் அவர் "இராணுவச் சட்டத்தை" அறிவித்து, வாக்குப் பெட்டிகளை பறிமுதல் செய்து, அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களைக் கைது செய்ய வேண்டும் என்றார். ட்ரம்ப் பதவியிலிருக்க முயலுகையில் அவருக்கு எதிரான போராட்டங்கள் குறித்த ஒரு செய்தி வெளியிட்டதற்காக Daily Beast பத்திரிகையின் பணியாளர்கள் "தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, அவர்களின் அலுவலகங்களை மூட வேண்டும்" என்று ஸ்ட்ரோன் அறிவித்தார்.

ட்ரம்ப் அவரின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில், சட்டத்தைத் தம் கைகளில் எடுக்கும் அதிவலதினரைப் பெருமைப்படுத்தி உள்ளதுடன், போராட்டக்காரர்களுக்கு எதிராக சட்டத்தை மீறிய "பழிவாங்கும் நடவடிக்கை" க்கு அழைப்புவிடுத்துள்ளார், மேலும் வாக்குப்பெட்டிக்கள் "மோசடி" செய்யப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியிருப்பதுடன், அவருக்கு எதிராக செல்லும் ஒரு தேர்தல் முடிவுகளை அவர் ஏற்கப் போவதில்லை என்று பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

வாரயிறுதி வாக்கில் ஃபாக்ஸ் நியூஸ் உடனான ஒரு பேட்டியில், ட்ரம்ப், ஜூன் மாதம் செய்ததைப் போலவே, உள்நாட்டு எதிர்ப்புக்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்த கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பிரயோகிக்க மீண்டும் அச்சுறுத்தினார். தேர்தல் இரவுக்குப் பின்னர் போராட்டங்களுக்கு அவர் எவ்வாறு விடையிறுப்பார் என்று கேட்கப்பட்ட போது, அவர் கூறுகையில், “அவர்கள் அதை செய்தால் மிக விரைவிலேயே நாங்கள் அவர்களை வீழ்த்துவோம்,” என்று கூறியதுடன், “அதை செய்ய எங்களுக்கு உரிமை உண்டு, நாங்கள் விரும்பினால் அதை செய்ய எங்களுக்கு அதிகாரமும் உள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இதுதான் உள்நாட்டுப் போரின் மொழி.

ட்ரம்ப், அவரது கட்டளையின் கீழ் ஒரு பாரிய பாசிசவாத இயக்கத்தை கொண்டிருக்கவில்லை என்றாலும், நவம்பர் 3 இல் என்ன நடந்தாலும் அதுபோன்றவொரு இயக்கத்தை அபிவிருத்தி செய்ய இந்த தேர்தலை அவர் பயன்படுத்த முயற்சித்து வருகிறார்.

அமெரிக்காவிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, ஆளும் வர்க்கத்திற்குள், அமெரிக்காவின் அரசியல் அமைப்பு முறிந்து வருகிறது என்பது அதிகரித்தளவில் அங்கீகரிக்கப்படுகிறது. “நவம்பர் மாதம், ஜனநாயகத்தின் ஒரு இலகுவான நடைமுறைக்கு முன்னறிவிப்பாக இருக்காது, மாறாக வன்முறை, மோதல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிக்கு முன்னறிவிப்பாக இருக்கும்,” என்று எக்னோமிஸ்ட் எழுதுகிறது.

ட்ரம்ப் தேர்தலில் தோற்று ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அந்த வாரயிறுதியில் "வாஷிங்டனில் பேராபத்து" குறித்து பைனான்சியல் டைம்ஸ் எழுதியது. “தேர்தல் முடிவு சிறிய வித்தியாசத்தில் இருக்கும் பட்சத்தில் ஒரு நாடகபாணியிலான காட்சிகள் அரங்கேறுவதுடன் சேர்ந்து, வீதிகளில் வன்முறை அமைதியின்மையின் பின்புலத்தில் ஓர் அரசியலமைப்பு நெருக்கடி தாண்டவமாடக்கூடும் — இது சமீபத்திய மாதங்களில் பல அமெரிக்க நகரங்களில் வெடித்துள்ளது,” என்று குறிப்பிட்டது. இந்த காட்சிகளுக்கு பின்னால், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் —ட்ரம்ப் தரப்பிற்காகவோ அல்லது அவருக்கு எதிராகவோ— இராணுவமே நேரடியாக தலையிடுவது உட்பட சாத்தியமான சூழல்களை விவாதித்து வருகிறார்கள் என்பதையும் பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

கிரெக் சார்ஜென்ட் (Greg Sargent) செவ்வாய்கிழமை வாஷிங்டன் போஸ்டில் எழுதுகையில், அவரை வெற்றியாளராக அறிவிக்காத எந்தவொரு சூழலையும் உள்ளார்ந்து சட்ட முறைகேடாக சித்தரிப்பதற்கான ட்ரம்பின் கணக்கிட்ட முயற்சி மீது கவனத்தைக் கொண்டு வந்தார். “அதுபோன்றவொரு முடிவு வந்தாலும் கூட அதை எதிர்க்க அவரின் ஆதரவாளர்கள் ஒவ்வொரு விதத்திலும் தயாராக இருக்க வேண்டுமென ட்ரம்ப் அறிவுறுத்தி உள்ள நிலையில், இது வருகிறது… அவர்கள் சிந்தித்து பார்க்குமாறு அவர் கூறும் நிஜமான முடிவு எதுவாக இருந்தாலும் அது விடயமாக இருக்காது. ஆனால் நிச்சயமாக அரசியல் வன்முறையோ அல்லது ஆழமான வேறு உள்நாட்டு சேதங்களோ அதிகளவில் ஏற்படக்கூடும்,” என்று சார்ஜென்ட் குறிப்பிடுகிறார்.

வரலாற்றில் இல்லாத மட்டங்களுக்கு சமூக சமத்துவமின்மை, அத்துடன் சேர்ந்து இந்த தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு ஆகியவை புரட்சிகர விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு பாரிய சமூக அதிருப்தியை உருவாக்கி வருகிறது என்பதன் மீதான நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கவலைகளுக்கு, ட்ரம்ப் வழக்கில் இல்லாத வெளிப்பாட்டை வழங்கி வருகிறார்.

ஜனநாயகக் கட்சியோ இந்த முதலாளித்து இரண்டு கட்சி அமைப்புமுறையின் இரண்டாவது அணியாக உள்ளது. ட்ரம்புக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை திக்குமுக்காட செய்வதே அதன் பிரதான நோக்கமாக உள்ளது. ஜனநாயகக் கட்சியினர் அடையாள அரசியலின் அடிப்படையில் —இனம் மற்றும் பாலினம் மீதான விடாப்பிடியான பற்றுகோளுடன்—உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை அணித்திரட்ட முயல்கிறது. அவர்கள் பரந்த பெரும்பான்மை மக்களின் நிஜமான நலன்களைப் பூர்த்தி செய்ய எந்த வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.

ட்ரம்ப் இந்த தேர்தலை, உள்நாட்டு போரின் ஓர் அத்தியாயமாக முன்னெடுத்து வருகின்ற அதேவேளையில், ஜனநாயகக் கட்சியினரோ வலதுகள் மீது ஏதோவொரு வித இலேசான விமர்சனத்தையும் இடதின் மீது மிக அதிக வெறித்தனமான கண்டனங்களையும் சமநிலைப்படுத்தியவாறு, எப்போதும் தற்காப்பாக சென்று கொண்டிருக்கின்றனர்.

வெளிநாட்டு கொள்கை மற்றும் உள்நாட்டு கொள்கை இரண்டிலும் எதிர்கால பைடென் நிர்வாகத்தை ஆளும் வர்க்கத்தின் மிகவும் திறமையான பிரதிநிதியாக பார்க்கும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் பிரிவுகளே ஜனநாயகக் கட்சியின் பிரதான சமூக அடித்தளமாக உள்ளது. ஜனநாயகக் கட்சிக்குள் செல்வந்த நன்கொடையாளர்கள் பாய்ச்சும் பணத்தின் பாகமாக புளோரிடாவில் பைடெனின் பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக, பில்லியனர் மைக்கெல் புளூம்பேர்க் 100 மில்லியன் டாலர் செலவிட இந்த வாரம் உறுதியளித்தார்.

ஜனநாயகக் கட்சியினர் கொண்டுள்ள "சேதியை" கொண்டு பார்க்கையில், ட்ரம்பை நீக்குவது அனைத்தையும் "வழமைக்கு" கொண்டு வந்துவிடும், ட்ரம்ப் தான் ஒரு தனித்த மாறுபாடாக உள்ளார் இல்லையென்றால் சமூக ஆரோக்கியமாக இருக்கும் என்றிருக்கிறது. ஆனால் இந்த தனித்த மாறுபாடு எவ்வாறு நடந்தேறியது?

மலைப்பூட்டும் மட்டங்களுக்கு சமூக சமத்துவமின்மையை உண்டாக்கியுள்ள தசாப்த கால சமூக எதிர்புரட்சி; நாற்பதாண்டுகளாக முடிவில்லா போர், இவை இப்போது வல்லரசு மோதலாக மாற்றப்பட்டு வருகிறது; வெளிநாடுகள் மீது ஏகாதிபத்திய அடிமைப்படுத்தலுக்கும் உள்நாட்டில் ஒடுக்குமுறைக்கும் இரண்டையும் நோக்கி திருப்பி விடப்பட்ட இராணுவ-உளவுத்துறை-பொலிஸ் எந்திரத்தின் பாரியளவிலான வளர்ச்சி; சித்திரவதையைப் பயன்படுத்துவது முதல் உள்நாட்டு உளவுபார்ப்பு மற்றும் பெருநிறுவன-நிதியியல் சூழ்ச்சிகள் வரையில், ஆளும் வர்க்கத்தின் குற்றகரமாக்குதல் என முதலாளித்துவ ஜனநாயகத்தின் அரசியல் அமைப்புகளது முறிவு என்பது மிகவும் அடிப்படையான ஒன்றோடொன்று பிணைந்த காரணங்களின் விளைவாகும்.

2016 இல் ட்ரம்ப் அதிகாரத்திற்கு மேலுயர்ந்ததே ஏற்கனவே அடியிலிருந்த இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகளுக்கு வெளிப்பாட்டை வழங்கியது என்றாலும், இந்த தொற்றுநோய் மிகப் பிராண்டமான ஒரு உந்துவிசையாக சேவையாற்றி உள்ளது.

ட்ரம்புக்கு எதிரான எல்லா எதிர்ப்பும், ஜனநாயகக் கட்சிக்கு ஏற்புடையவை எதுவோ, அதாவது அதன் அர்த்தம் நிதியியல் பிரபுத்துவம் மற்றும் இராணுவத்திற்கு எது ஏற்புடையதோ அவற்றால் கட்டுப்படுத்தப்படும் என்பதே மிகப் பெரிய அபாயமாகும். ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், சிலி, இன்னும் பல நாடுகளிலும் பாசிசம் எவ்வாறு அதிகாரத்திற்கு வந்தது என்பதன் மீது வரலாற்று படிப்பினைகள் உள்ளன. அவை அனைத்துமே சமூக கோபத்தை ஆளும் வர்க்கத்தின் ஏதோவொரு அணிக்குப் பின்னால் திருப்பி விட்டதன் மூலமாக, தொழிலாளர்களை அரசியல்ரீதியில் நிராயுதபாணியாக ஆக்கிய பெரும் நாசகரமான விளைவுகளை மையத்தில் கொண்டுள்ளன.

அமெரிக்க முதலாளித்துவமும் உலக முதலாளித்துவமும் ஒரு முறிவு புள்ளியை எட்டியுள்ளது. தொழிலாள வர்க்கம் தீவிரமயப்படுத்தப்பட்டு வருகிறது. முதலாளித்துவ வர்க்கம் முன்பினும் அதிக நேரடியாக அரசியலமைப்புக்கு விரோதமான, அரசியலமைப்பை மீறிய, பட்டவர்த்தனமான பாசிசவாத ஆட்சி வடிவங்களுக்கு நகர்ந்து வருகிறது. நவம்பர் 3 க்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் யார் இருந்தாலும் இது தொடரும்.

இந்த தேர்தலில் மேலுயர்த்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தேர்தல் மூலோபாயத்தின் அடிப்படையில் தீர்த்துவிட முடியாது. அவை சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் அனைத்தையும் மறுஒழுங்கமைக்கவும் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றவும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர இயக்கத்தின் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

Loading