கிழக்கு மத்தியதரைக்கடலில் கிரேக்க-துருக்கி போர் வேண்டாம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையே அச்சுறுத்தல்கள் மற்றும் கடற்படை பயிற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பாவும் மத்திய கிழக்கும் போரின் விளிம்பில் உள்ளன. இந்த கோடையில், கடல் எல்லைகள் மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலில் கடலுக்கடியில் உள்ள எரிவாயு வயல்களை அணுகுவதற்குமான மோதல்கள் மற்றும் லிபியாவில் தசாப்த கால போரின் விளைவுகளுக்கும் இடையில் கிரேக்கக் கப்பல்கள் துருக்கிய மற்றும் அதன் நேட்டோ கூட்டு என்றழைக்கப்படுபவற்றின் கப்பல்களுடனும் மோதிக்கொண்டன அல்லது துப்பாக்கிச்சுடுதல்களை பரிமாறிக்கொண்டன. கடுமையான எச்சரிக்கைகள் செய்யப்பட வேண்டும். மத்தியதரைக் கடலில் ஒரு மோதல் வெடிக்ககுமானால் அது ஒரு உலக மோதலாக தீவிரமடைய அச்சுறுத்துகின்றது.

இந்த அபாயங்களை முன்னணி அதிகாரிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். கடந்த மாதம், ஏதென்ஸ் மற்றும் அங்காராவுக்குச் செல்வதற்கு முன்பு, ஜேர்மன் வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் “பதட்டம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவை மட்டும் பாதிக்காது. மேலும் அதிகரிப்பது அனைத்து பக்கங்களையும் சேதப்படுத்தும்.” என அறிவித்தார். பின்னர் ஏதென்ஸில், அவர் மேலும் கூறுகையில், “கிழக்கு மத்தியதரைக் கடலில் தற்போதைய நிலைமை நெருப்புடன் விளையாடுவதற்கு சமம். ஒவ்வொரு சிறிய தீப்பொறியும் பேரழிவிற்கு வழிவகுக்கும்.”

செப்டம்பர் 4, 2020, கிரேக்க தீவான கிரீட்டிற்கு அருகிலுள்ள கிரீஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயுதப் படைகளுடன் விமானப்படை ஜெட் விமானங்கள் பங்கேற்கின்றன.நன்றி: கிரேக்க பாதுகாப்பு அமைச்சு

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், 1914 ஜூன் 28 அன்று ஆஸ்திரிய பேராயர் ஃபிரான்ஸ் பேர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் தூண்டப்பட்ட பால்கன் மோதல்கள், ஆகஸ்ட் 4 அன்று ஐரோப்பாவில் முதலாம் உலகப் போர் வெடித்ததைத் தூண்டியது. இன்று, அவர்களின் 20 ஆம் நூற்றாண்டின் முன்னோர்களை விட ஏகாதிபத்திய சக்திகள் இனி உலகளாவிய மோதல் உந்துதலைத் தடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

நூற்றாண்டு பழமையான கிரேக்க-துருக்கிய பிராந்திய மோதல்களின் மறுஎழுச்சி, கோவிட்-19 தொற்றுநோயால் துரிதப்படுத்தப்பட்டதும் மற்றும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான நேட்டோ கூட்டணியின் முறிவு ஆகியவற்றுடன் பிரிக்கமுடியாத வகையில் அமெரிக்க உலக மேலாதிக்கத்தின் வீழ்ச்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இது எகிப்து மற்றும் துனிசியாவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகளுக்கு விடையிறுக்கும் வகையில், 2011 ல் லிபியாவிலும் சிரியாவிலும் நேட்டோ தொடங்கிய இரத்தக்களரிப் போர்களின் பலனாகும். இதன் விளைவாக இலாபங்கள் மற்றும் மூலோபாய நலன்களுக்கான போராட்டம் நேட்டோவையும் இந்த பிராந்தியத்தையும் கிழிக்கிறது.

2013 ஆம் ஆண்டில், சிரியப் போரின் ஆரம்ப கட்டங்களில், மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் (CSIS) என்ற சிந்தனைக் குழு, கிழக்கு மத்தியதரைக் கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் மீதான மோதல்களின் பரிணாமங்களை பின்வருமாறு விவரித்தது:

எவ்வாறாயினும், கிழக்கு மத்தியதரைக் கடலின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் உலகின் மிக பூகோளஅரசியல் ரீதியாக சிக்கலான ஒரு பகுதியின் மையத்தில் உள்ளன. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான பதட்டங்கள், சைப்ரஸுடனான உறைந்த நிலையில் உள்ள மோதல் மற்றும் துருக்கி, சைப்ரஸ் குடியரசு மற்றும் கிரீஸ் ஆகியவற்றுக்கிடையேயான சிக்கலான உறவுகள் அனைத்தும் கிழக்கு மத்தியதரைக் கடலில் இருந்து எரிபொருளை உருவாக்கி விற்பனை செய்வதற்கான முயற்சிகளை சிக்கலாக்குகின்றன. சிரிய உள்நாட்டுப் போர் பொருளாதார மற்றும் பூகோள அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு ஒரு புதிய மூலகாரணத்தை ஊட்டியுள்ளது. இதன் பின்னணியில் நிற்பது ரஷ்யா, இது கிழக்கு மத்தியதரைக் கடல் எரிசக்தி இலாபத்தை எடுக்க முயல்வதுடன், மேலும் ஐரோப்பிய சந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கும் முக்கிய வினியோகஸ்தரான தனது நிலையை நிலைநிறுத்துகிறது.

இந்த மோதல்கள் 2013 ல் இருந்ததை விட இன்று மிகவும் வெடிக்கும் நிலையில் உள்ளது. கிரேக்கத்தைவிட துருக்கியின் மக்கள்தொகை எட்டு மடங்கு அதிகமாகவும், ஒரு பெரிய இராணுவத்தை கொண்டிருந்தாலும், அதற்குள்ள பிரெஞ்சு ஆதரவால் அங்காராவை எதிர்கொள்ள ஏதென்ஸ் தைரியமாக இருக்கிறது. பிரான்சின் லிபிய பினாமியான, போர்ப்பிரபு கலீஃபா ஹப்தாரின் லிபிய தேசிய இராணுவத்திற்கு (LNA) எதிராக லிபியாவில் உள்ள இஸ்லாமிய தேசிய உடன்படிக்கைக்கு (GNA) துருக்கி ஆதரவளிப்பதில் பாரிஸ் கோபமாக உள்ளது. துருக்கியின் கொள்கையை, அதன் முன்னாள் ஆபிரிக்க காலனித்துவ சாம்ராஜ்யத்தில் அதன் நலன்களுக்கு தாங்க முடியாத அச்சுறுத்தலாக பிரான்ஸ் பார்க்கிறது. இது ஹப்தாரின் பிற ஆதரவாளர்களை, குறிப்பாக எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இல் துருக்கிக்கு எதிராக கிரேக்கத்துடன் ஒரு பிராந்திய கூட்டணியில் ஈடுபடுத்த முயல்கின்றது. கிழக்கு மத்தியதரைக் கடலில் சிரியாவின் பிராந்திய பங்கு தவிர்க்க முடியாமல் அதன் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் ஈரானையும் இதனுள் உள்ளிளுக்கின்றது.

1991 ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்ட பின்னர் நேட்டோவிற்கான முக்கிய இராணுவ-அரசியல் எதிர்ப்பலம் இல்லாது போன பின்னர், கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க தலைமையிலான மத்திய கிழக்கு போர்களின் தோல்வி, விரைவாக ஒரு புதிய உலகப் போரை நோக்கி இட்டுசெல்கிறது. துருக்கிக்கு எதிரான பிரான்சின் கொள்கை ஐரோப்பிய ஒன்றிய சக்திகளை வாஷிங்டனில் இருந்து பிரிந்து ஒரு சுயாதீன வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கான பலமுறை கூறப்பட்ட தீர்மானத்தை பிரதிபலிக்கிறது. இது ஐரோப்பாவை இலக்குவைத்து ஈரானுடனான வர்த்தகத்தின் மீதான வர்த்தக போர் கட்டணங்களையும் பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ள வாஷிங்டனுக்கு எதிரான ஐரோப்பிய ஏகாதிபத்திய நலன்களை வலியுறுத்துவதை உள்ளடக்கியது.

பொலிஸ் மிருகத்தனம், தொற்றுநோய் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் வெடிக்கும் பதட்டங்கள் தொடர்பாக வளர்ந்து வரும் சமூக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், கிரேக்க-துருக்கிய மோதலில் பெரிதும் மவுனமாக இருக்கும் வாஷிங்டன், சந்தேகத்திற்கு இடமின்றி புதிய போர்களைத் தயாரித்து வருகிறது. எவ்வாறாயினும், மத்தியதரைக் கடலில் ஐரோப்பிய ஒன்றிய கொள்கையை வாஷிங்டன் கண்காணித்து அதன் சொந்த போர்களைத் திட்டமிடுகிறது என்பதில் சந்தேகமில்லை.

கடந்த ஆண்டு, ஜூன் 20 அன்று, ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு வெறும் 10 நிமிடங்கள் இருக்கும் நிலையிலே ட்ரம்ப் அதனை தடுத்து நிறுத்தினார். நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஒரு உரையில், கிரேக்கத்திற்கான அமெரிக்க தூதர் ஜெஃப்ரி பியாட் கிழக்கு மத்தியதரைக் கடலின் உலகளாவிய முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர்: “புதுப்பிக்கப்பட்டுள்ள பெரும் சக்திகளுக்கு இடையிலான போட்டி மற்றும் கடந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்புகளின் சகாப்தத்தில், ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்காவிற்கான இந்த உலகளாவிய குறுக்குப்பாதைகள் அமெரிக்க மூலோபாய சிந்தனையின் முன்னணிக்கு திரும்பியுள்ளன. கிழக்கு மத்தியதரைக் கடலை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்ட பல வருடங்களுக்குப் பின்னர், முழு அரசாங்கத்தையும் கருத்தில் கொண்டு அமெரிக்க நலன்களை எவ்வாறு முன்னேற்றுகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா பின்வாங்கியுள்ளது…”

தற்காலிக கிரேக்க-துருக்கிய சமாதான ஒப்பந்தம் எப்படியாவது எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், முதலாளித்துவத்தின் கீழ் இத்தகைய மோதல்களை அமைதியாக தீர்க்க முடியாது என்பதையே வரலாறு காட்டுகிறது. அமெரிக்க மேலாதிக்கத்தின் சரிவு மற்றும் உலகளாவிய தொழில்துறையின் ஈர்ப்பு மையத்தை துருக்கி அல்லது சீனா போன்ற நாடுகளை நோக்கி, கிழக்கு நோக்கி மாற்றுவது, 20 ஆம் நூற்றாண்டின் மார்க்சிஸ்டுகளால் அடையாளம் காணப்பட்ட முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் வெடிப்பதற்கான காரணங்களை முன்னோடியில்லாத வகையில் தீவிரத்துடன் முன்கொண்டு வருகின்றன. 1914 இல் உலகப் போரின் வெடிப்பிற்கன காரணமாக உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புக்கும், மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் மற்றும் உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாக இருப்பதற்கும் இடையிலான முரண்பாடே காரணம் எனக் கண்டுகொண்டனர். கிழக்கு மத்தியதரைக் கடலில் ஏற்பட்டுள்ள மோதல் ஒரு புதிய உலகப் போருக்கான ஏகாதிபத்திய உந்துதலின் மேம்பட்ட நிலை பற்றிய எச்சரிக்கையாகும்.

இந்த ஆபத்துக்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. கிரேக்கம், துருக்கி, பிரான்ஸ் அல்லது பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களிடையே ஒரு உலகளாவிய மோதலாக விரிவடையக்கூடிய ஒரு போருக்கு எந்த ஆர்வமும் இல்லை. அமெரிக்க தொழிலாள வர்க்கத்தில், போருக்கு பாரிய எதிர்ப்பும் சோசலிசத்திற்கான ஆதரவும் அதிகரித்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் அதிகரித்துவரும் சமூக எதிர்ப்பையும், அவற்றுக்கு தீர்வுகள் இல்லாத சிக்கலான சர்வதேச பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முரண்பாடுகளையும் எதிர்கொள்வதால், அவர்கள் அத்தகைய போரைத் தொடங்கி, அதை ஒரு பேரழிவுகரமான உலகளாவிய மோதலாக விரிவடைவதற்கான ஆபத்து மிகவும் உண்மையானதே.

எவ்வாறாயினும், கடந்த இரண்டு ஆண்டுகளும் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய வெடிப்பைக் கண்டன. அமெரிக்காவில் பொலிஸ் வன்முறைக்கு எதிராக உலகளாவிய எதிர்ப்புக்கள் மற்றும் போலந்து தேசிய ஆசிரியர்கள் வேலைநிறுத்தம், போர்த்துகீசிய செவிலியர்கள் வேலைநிறுத்தம் மற்றும் பிரெஞ்சு "மஞ்சள் சீருடை" போராட்டம் ஆகிய ஐரோப்பா முழுவதுமான இவ்வாறான இயக்கங்களுடன் அமெரிக்க ஆசிரியர்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள் மத்தியில் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன. இலத்தீன் அமெரிக்கா, இந்தியா மற்றும் குறிப்பாக மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளான ஈராக், லெபனான், சூடான் மற்றும் அல்ஜீரியாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஒவ்வொரு நாட்டிலும் தொற்றுநோயினால் கூர்மையாக்கப்பட்ட வர்க்கப் பதட்டங்களுக்கு மத்தியில் ஒரு மிருகத்தனமான “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” மூலோபாயத்தின் ஒரு பகுதியாக வேலைக்கு மற்றும் பள்ளிக்கு திரும்ப உத்தரவிடப்படுகின்றது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பால்கனில் வெடித்தபின் முதலாம் உலகப் போரை நிறுத்தியது எதுவென்றால், அக்டோபர் 1917 புரட்சியில் போல்ஷிவிக் கட்சி விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றி மற்றும் கம்யூனிச அகிலத்தை உருவாக்கி முதலாளித்துவத்திற்கும் மற்றும் ஏகாதிபத்திய போருக்கும் எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு தலைமை தாங்கியதாலாகும். இந்த மூலோபாய முன்னோக்கின் பாதுகாவலர்கள் இன்று உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவாகும் (ICFI). முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான, சர்வதேசரீதியாக அரசியல் அணிதிரட்டலின் மூலம், அரச அதிகாரத்தை கைப்பற்றி சோசலிசத்தை கட்டியமைப்பதால் மட்டுமே போருக்கான உந்துதலை நிறுத்த முடியும்.

போருக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் அபிவிருத்தியடையும் இயக்கத்தை நோக்கி திரும்புவதும், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை மார்க்சிச நனவுடன் ஆயுதபாணியாக்குவதற்காக போராட வேண்டும்.

கிரேக்க-துருக்கிய துளையிடும் உரிமை மோதலின் வரலாற்று மற்றும் அரசியல் வேர்கள்

கடல் எல்லைகள் மற்றும் வளங்கள் தொடர்பாக கிரேக்கத்திற்கும் துருக்கிக்கும் இடையிலான மோதல்கள் 20 ஆம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத சிக்கல்களில் வேரூன்றியுள்ளன. 1923 ஆம் ஆண்டு லவுசான் (Lausanne) ஒப்பந்தம் கிரேக்கத்திற்கும் துருக்கிக்கும் இடையில் நில எல்லைகளை நிறுவியது. இந்த நிகழ்வும் பின்னர் பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல்களும் ஏகாதிபத்தியத்தால் ஆணையிடப்பட்ட தன்னிச்சையான தேசிய-அரசுகளின் எல்லைகளூடாக பால்கனையும் மத்திய கிழக்கையும் பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளின் மாறாத பிற்போக்குத்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

முதலாம் உலகப் போரில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவிடம் தோல்வியடைந்த பின்னர் ஒட்டோமான் பேரரசின் அனட்டோலியன் பிரதேசத்தை பிளவுபடுத்த பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளை முஸ்தபா கெமால் அட்டாதுர்க்கின் துருக்கிய தேசிய இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட1919-1922 துருக்கிய சுதந்திரப் போர் தோற்கடித்தது. 1917 நவம்பரில் சோவியத் அரசாங்கத்தால் உலகின் முன் அம்பலப்படுத்தப்படுத்திகாட்டப்பட்ட 1916 சைக்ஸ்-பிகாட் (Sykes-Picot) ஒப்பந்தத்தில் லண்டனும் பாரிஸும் ஈராக் மற்றும் சிரியாவை உருவாக்க ஒப்புக்கொண்டன. பின்னர் அவர்கள் பேரரசின் எஞ்சிய பகுதியை பிரிக்க 1919 இல் கிரேக்கத்துடன் இணைந்து இன்றைய துருக்கி பிரதேசத்தை தாக்கினர்.

துருக்கியில் ஏகாதிபத்திய தலைமையிலான காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வலுவான ஆதரவைக் கொண்டிருந்த துருக்கிய தேசிய எதிர்ப்பை சோவியத் ரஷ்யா சரியாக ஆதரித்து, அங்காரா அரசாங்கத்திற்கு ஆயுதங்களையும் ஆதரவையும் வழங்கியது. அவசர இராணுவத் தேவையானது சோவியத் கொள்கையையும் ஆணையிட்டது: இலண்டன் மற்றும் பாரிஸ், பேர்லின், பிராக், டோக்கியோ மற்றும் வாஷிங்டன் ஆகிய நாடுகளும் சேர்ந்து சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்து, ரஷ்ய உள்நாட்டுப் போரில் எதிர் புரட்சிகர வெண்படையினரை ஆதரித்து, புதிய தொழிலாளர் அரசை நசுக்கி, ரஷ்யாவில் ஒரு புதிய காலனித்துவ, யூத-விரோத வெள்ளை ஆட்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன. கிரேக்க படையினரிடையே அனட்டோலியாவின் பகுதிகளில் கிரேக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பைத் திரட்ட கிரேக்க கம்யூனிஸ்டுகள் போராடினர்.

எவ்வாறாயினும், துருக்கிய கம்யூனிஸ்டுகளை அழிக்க முயன்ற, குர்திஷ் மக்களின் கலாச்சார மற்றும் அரசியல் உரிமைகளை மிதிக்க முயன்ற துருக்கிய முதலாளித்துவ அரசையும் அல்லது ஏகாதிபத்தியத்துடன் அது ஒப்புக்கொண்ட எல்லைகளையும் தொழிலாளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று இது குறிக்கவில்லை. இந்த எல்லைகளை அமுல்படுத்தியதானது, 1923 ஆம் ஆண்டில் இனரீதியாக பிரிக்கப்பட்ட கிரேக்க மற்றும் துருக்கிய நாடுகளை நிறுவுவதற்கான முயற்சியாக 1.6 மில்லியன் மக்களை கொடூரமாக கட்டாயமாக நாடுகடத்தியது. சோவியத் அரசாங்கத்தை பொறுத்தவரையில் அதன் ஸ்ராலினிச சீரழிவுக்கு முன்னர், அது தனது கொள்கையை ஒரு சர்வதேச சோசலிச புரட்சியின் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டு, இது ஒரு உலக சோசலிச கூட்டமைப்பினுள் தேசிய எல்லைகளை இல்லாதொழிப்பதற்கான அடித்தளத்தை அமைக்கும் என்றது.

எவ்வாறாயினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரு நாடுகளும் அமெரிக்கா தலைமையிலான, சோவியத் எதிர்ப்பு நேட்டோ கூட்டணியில் இணைந்த பின்னரும் துருக்கிய-கிரேக்க கடல் எல்லைகள் ஒருபோதும் தீர்க்கப்படவில்லை. துருக்கிய கடற்கரையிலிருந்து சில மைல் தொலைவில் உள்ள ஏஜியன் மற்றும் மத்திய தரைக்கடல் கடல்களுக்கு குறுக்கே அமைந்துள்ள தீவுகளை கிரேக்கம் தக்க வைத்துக் கொண்டது. இதனால் கடல் எல்லையை வரைவது சர்ச்சைக்குரியதாகவும் மற்றும் நடைமுறையில் சாத்தியமற்றதாகவும் இருந்தது.

கிரேக்கம், துருக்கி, லெபனான் மற்றும் சிரிய கடற்கரைகளில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள தீவான சைப்ரஸ் மீதும் ஒரு நீடித்த சர்ச்சை எழுந்தது. 1974 ஆம் ஆண்டில் சிஐஏ ஆதரவுடைய கிரேக்க இராணுவ ஆட்சிக்குழுவின் ஆட்சி கவிழ்ப்பு வெடித்து, துருக்கிய சைப்ரஸ் மக்களின் மீதான தாக்குதல்களுக்கு இழிபெயர்பெற்ற அரசியல்வாதியான தீவிர வலதுசாரி கிரேக்க சைப்ரஸ் நிகோஸ் சாம்ப்சனை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. துருக்கிய இராணுவம் சைப்ரஸை ஆக்கிரமித்தது, இது தீவின் நீடித்த பிரிவுக்கும் கிரேக்க இராணுவ ஆட்சிக்குழுவின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. எவ்வாறாயினும், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் கிரேக்க இராணுவ ஆட்சிக்குழுவை ஆதரித்தன. ஆனால் துருக்கிய சைப்ரஸ் பிராந்தியத்தை அங்கீகரிக்கவில்லை.

மத்தியதரைக் கடலில் கிரேக்கத்திற்கும் துருக்கிக்கும் இடையிலான இன்றைய இராணுவ பதட்டங்களைத் தூண்டியது, லிபியா மற்றும் சிரியாவில் இரத்தக்களரி நேட்டோ போர்களுடன் பிணைந்த சர்வதேச மோதல்களாகும். துனிசிய ஜனாதிபதி ஜைன் எல் அபெடின் பின் அலி மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஹாஸ்னி முபாரக் ஆகியோரை கவிழ்த்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகளை எதிர்கொண்டு, கர்னல் முயம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக லிபியாவில் இஸ்லாமிய பினாமிப் போரை பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா நடத்தியது. துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் இஸ்லாமிய நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (AKP) ஆட்சி, போர்களுக்கு எதிராக குறுகிய காலம் எதிர்ப்பு தெரிவித்த பின்னர், அவர்களுக்கு ஆதரவாக மாறியது.

இந்த போர்கள் நீண்டகால மற்றும் முன்னெதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தின. லிபியாவில் இஸ்லாமிய மற்றும் பழங்குடி போர்க்குழுக்களை ஆயுதபாணியாக்கி, நாட்டில் குண்டுவீச்சு நடாத்தியதன் மூலம் ஆகாய வழி ஆதரவை வழங்கிய நேட்டோ சக்திகள் லிபிய அரசாங்கத்தை ஆறு மாதங்களில் அழித்தன. லிபியா போட்டி இராணுவக் குழுக்களுக்கு இடையிலான உள்நாட்டுப் போரில் மூழ்கிய நிலையில், முக்கியமாக துருக்கி வழியாக பல இஸ்லாமிய போராளிகளும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக போராட சென்றனர். சிஐஏ மற்றும் பாரசீக வளைகுடா எண்ணெய் ஷேக்குகளின் பில்லியன் கணக்கான டாலர்கள் ஆதரவு நிதியுதவி இருந்தபோதிலும், இந்த சிறிய, செல்வாக்கற்ற சுன்னி இஸ்லாமிய ஆயுதக்குழுக்களால் பெரிய, சிறந்த ஆயுதம் கொண்ட சிரிய ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை. 2015 அளவில் சிரிய ஆட்சியை ஆதரிக்க முதல் ஈரானிய படைகளும் மற்றும் பின்னர் ரஷ்ய படைகள் தலையிட்ட பின்னர், நேட்டோவின் இஸ்லாமிய பினாமிகள் தோல்வியை எதிர்கொண்டனர்.

சிரியாவில் குர்திஷ் போராளிகளை பினாமிகளாகப் பயன்படுத்த வாஷிங்டன், பாரிஸ் மற்றும் பிற நேட்டோ சக்திகள் எடுத்த முடிவில் ஏற்பட்ட மாற்றம் இறுதியில் ஏகாதிபத்திய சக்திகளுடனான துருக்கியின் உறவுகளை முறித்துக் கொள்ள வழிவகுத்தது. துருக்கியினுள் குர்திஷ் தேசியவாத உணர்விற்கு அதன் பாரம்பரிய விரோதத்திற்கு ஏற்ப அங்காரா, சிரியாவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கொள்கையை பெருகிய முறையில் எதிர்த்தது. நவம்பர் 2015 இல் சிரியா மீது ஒரு ரஷ்ய ஜெட் விமானத்தை சுட்டு, கிட்டத்தட்ட ஒரு போரைத் தூண்டிய பின்னர், அது மாஸ்கோவுடன் சிறந்த உறவுகளைத் தேடியது. எர்டோகானைக் கொலை செய்வதற்கான தோல்வியுற்ற ஜூலை 2016 ஆட்சி கவிழ்ப்பு முயற்சியினூடாக வாஷிங்டனும் பேர்லினும் பதிலடி கொடுத்தன. எவ்வாறாயினும், அது எர்டோகனை அதிகாரத்தில் விட்டுவைத்து மற்றும் அவரது பெயரளவிலான நேட்டோ நட்பு நாட்டுடன் அவநம்பிக்கை கொள்ளச் செய்தது.

எகிப்திய புரட்சிக்குப் பின்னர் நேட்டோ, இஸ்லாமிய மற்றும் முஸ்லீம் சகோதரத்துவ (MB) சக்திகளை நம்பியிருப்பது பிராந்தியத்திலும் கசப்பான மோதல்களுக்கு வழிவகுத்தது. எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், இஸ்லாமிய ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு எதிராக ஜெனரல் அப்தெல் பத்தா அல் சிசி தலைமையிலான 2013 சதி மற்றும் முஸ்லீம் சகோதரத்துவ ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் இராணுவ ஆட்சி மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) ஆகியவற்றின் பாரசீக வளைகுடா எண்ணெய் ஷேக்குகளைப் போலவே, முஸ்லீம் சகோதரத்துவ அல்லது எந்தவொரு அதிருப்தி இஸ்லாமியக் குழுவையும் தங்கள் எல்லைக்குள் பொறுத்துக்கொள்ளவில்லை. எகிப்திய ஆட்சிக்குழு லிபிய இஸ்லாமிய தேசிய உடன்படிக்கைக்கு ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டிருந்தது. எகிப்தில் அல்-சிசி ஆட்சியைக் கண்டித்த மற்றும் முஸ்லீம் சகோதரத்துவத்தின் நட்பு நாடான துருக்கியில் உள்ள இஸ்லாமிய நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சிக்கு அவர்களின் விரோதப் போக்கு நீடிக்கிறது.

ஏகாதிபத்திய சக்திகள் லிபியப் போரை கிழக்கு நோக்கி சிரியாவிற்கு மட்டுமல்லாமல், தெற்கு நோக்கி துணை-சஹாரா ஆபிரிக்காவிலும் தொடர்ந்தன. அதன் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்யத்தை கடந்து, பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஐவரி கோஸ்டில் தலையிட்டு ஜனாதிபதி லோரன்ட் கபாக்கோவை கவிழ்த்து, மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு துருப்புக்களை நிறுத்தியது, மற்றும் 2013 ஆம் ஆண்டில் நாட்டின் வடக்கில் இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக மாலியில் ஒரு போரைத் தொடங்கியது. இந்த அடிப்படையில் இத்தாலிய எரிசக்தி நிறுவனமான ENI க்கு எதிராக அதன் எண்ணெய் நிறுவனமான Total இன் நலன்களை முன்னெடுக்க பாரிஸ் லிபியாவில் ஹப்தாரை ஆதரித்தது.

இந்த வெடிக்கும் சர்வதேச சூழலில், கடந்த ஆண்டு கிரீஸ் மற்றும் இத்தாலி வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கான இஸ்ரேல்-சைப்ரஸ்-கிரேக்க EastMed குழாய் இணைப்பின் இறுதி கட்டங்கள் துருக்கியிலிருந்து கசப்பான எதிர்வினையைத் தூண்டின. ஆகஸ்டில், எர்டோகன் ஏஜியன் கடலின் பெரும் பகுதிகளை உரிமைகோரி ஒரு “நீல தாயகம்” வரைபடத்தை வெளியிட்டார். நவம்பரில், லிபிய இஸ்லாமிய தேசிய உடன்படிக்கை உடனான இருதரப்பு கடல் மற்றும் இராணுவ உடன்படிக்கைக்குப் பின்னர், துருக்கி கிழக்கு மத்தியதரைக் கடலில் கூட்டு ஆய்வு உரிமைகளைக் கோரி, டிசம்பரில் இந்த ஆய்வுகளைத் தொடங்கியது. கிரேக்கத்துக்கான லிபிய இஸ்லாமிய தேசிய உடன்படிக்கையின் தூதரை வெளியேற்றுவதன் மூலம் ஏதென்ஸ் இதற்கு பதிலளித்தது. துருக்கிக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்க சைப்ரஸ் மற்றும் கிரேக்க தீவான கிரீட்டிற்கு போர்க்கப்பல்களை அனுப்பப்போவதாக பிரான்ஸ் மற்றும் இத்தாலி அறிவித்தன.

ஜனவரி 2 ஆம் தேதி இஸ்ரேல்-சைப்ரஸ்-கிரேக்க குழாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டமையானது, இப்பகுதி முழுவதும் மோதல்களின் புதிய விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது. திரிப்போலி மீதான ஹப்தாரின் தாக்குதலுக்கு எதிராக இஸ்லாமிய தேசிய உடன்படிக்கையை ஆதரிக்க துருப்புக்களை பயன்படுத்தப்போவதாக அறிவித்து துருக்கி பதிலடி கொடுத்தது. இது பிரெஞ்சு மற்றும் எகிப்திய அரசாங்கங்களின் கண்டனத்தை பெற்றது. லிபியாவிற்கு ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கைக்கு வாக்களித்த கடந்த மாத லிபியா தொடர்பான பேர்லின் மாநாட்டின் ஒரு பக்கத்தில், பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஒரு பொதுவான இராணுவ கூட்டணியை அறிவித்தன.

ஏப்ரல் மாதத்தில், லிபியாவில் உள்ள துருக்கிய படைகள், திரிப்போலி மீதான லிபிய தேசிய இராணுவத்தின் முன்னேற்றத்தை நசுக்க தலையிட்டு லிபியாவின் மேற்கின் பெரும்பகுதியை கைவிடுமாறு கட்டாயப்படுத்தின. மே மாதத்தில் துருக்கி, கிரேக்க தீவுகளான கிரீட், கார்பதோஸ் மற்றும் ரோடோஸ் ஆகியவற்றிலிருந்து நேரெதிராக எண்ணெயை துளைக்கும் திட்டத்தை அறிவித்தது.

இந்த கோடையில் நிலைமை விரைவாக தீவிரமடைந்தது. ஜூன் மாதத்தில், பிரெஞ்சு போர் கப்பல் Courbet, லிபியாவிற்கு சரக்குகளை ஏற்றிச்செல்லும் துருக்கிய கப்பல்களை நிறுத்த முயன்றபோது, துருக்கிய போர்க்கப்பல்கள் அதை தங்கள் ரேடார் இலக்கு மூலம் ஒளிரச் செய்து, அவை துப்பாக்கிச் சூடு நடத்தத் தயாராக இருப்பதாக காட்டின. எகிப்திய இராணுவ ஆட்சிக் குழு, ஜூலை மாதம் லிபியா மீது முழு அளவிலான படையெடுப்பிற்கான தயாரிக்கப்பட்ட திட்டங்களை அறிவித்தது. ஜூலை தொடக்கத்தில், அடையாளம் தெரியாத போர் விமானங்கள் பிரெஞ்சு அல்லது ஐக்கிய அரபு எமிரேட் Rafale விமானங்கள் லிபியாவில் உள்ள Watiya விமானத் தளத்தின் மீது குண்டுவீசி, முக்கிய ரேடர்களை அழித்து துருக்கிய உளவுத்துறை அதிகாரிகளை காயப்படுத்தியது.

இத்தாலி மற்றும் எகிப்துடனான கடல் எல்லைகளை அடுத்து ஒரு பிரத்தியேக பொருளாதார மண்டல (EEZ) ஒப்பந்தங்களையும் பற்றி கிரேக்கம் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது. இது அங்காராவுடன் இதுபோன்ற ஒரு பேச்சுவார்த்தைகளை ஏதென்ஸ் கோருவதற்கு முன்னோடியாகும். துருக்கி அதிகாரிகள் அத்தகைய பேச்சுவார்த்தைகளை நிராகரித்துள்ளனர். ஏனெனில் துருக்கி அங்கீகரிக்காத கடல் சட்டங்கள் தொடர்பான ஐ.நா. மாநாடு, ஏஜியன் முழுவதும் பரவிக்கிடக்கும் ஒவ்வொரு தீவுகளையும் சுற்றி 12 மைல் மண்டல உரிமையை கோருவதற்கு கிரேக்கத்தை அனுமதிக்கும். இது கிட்டத்தட்ட முழு ஏஜியனையும் கிரேக்கத்திற்குரிய கடல் பிராந்தியமாக மாற்றி, இஸ்தான்புல் உடனும் துருக்கியின் ஏனைய முக்கிய வடக்கிலுள்ள நகரங்களுடனும் வர்த்தகத்தை தடைசெய்ய ஏதென்ஸை அனுமதிக்கும்.

கிரேக்க தீவான காஸ்டெல்லோரிசோ கடல்பகுதிக்கு 12 போர்க்கப்பல்களின் பாதுகாப்புடன் Oruç Reis ஆய்வுக் கப்பலை அனுப்பி வைப்பதாக துருக்கியின் ஜூலை 21 அறிவித்த பின்னர், ஏதென்ஸ் கிரேக்க இராணுவத்தை முழு எச்சரிக்கையுடன் வைத்தது. பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து வந்தவை என்று கூறப்பட்ட கிரேக்கத்தில் போலி குறுஞ்செய்திகள், ஒரு "இராணுவ மோதலுக்கு" மக்களை அணிதிரட்டுமாறு அழைப்புவிட்டு பீதியை ஏற்படுத்தியது. இறுதியில், ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலிடம் இருந்து அங்காராவுக்கு வந்த அழைப்பால் மட்டுமே ஒரு மோதல் தவிர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் துருக்கிய கப்பல்கள் சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து விலகிச் சென்றன.

ஆகஸ்டில், கிரேக்க மற்றும் துருக்கிய போர்க்கப்பல்கள் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்திய நிலையில், ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு கிரேக்கக் கப்பல் ஒரு துருக்கிய படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, மூன்று பேரைக் காயப்படுத்தியது. பாரிஸ் தனது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது. இது எகிப்துடனும் பின்னர் கிரேக்கத்துடனும் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்தியது; பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டும் போர் விமானங்களை கிரேக்கத்திற்கு அனுப்பின. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் துருக்கிக்கு எதிராக "சிவப்பு கோடுகள்" வரையப்போவதாக அறிவித்து, அதனுடனான ஒரு போருக்கு அச்சுறுத்தினார். இப்போது, பாரிஸின் வற்புறுத்தலின் பேரில், துருக்கியின் கழுத்தை நெரிக்க முயற்சிக்க பொருளாதாரத் தடைகளைத் தயாரிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த ஆபத்தான மோதலுக்கு வழிவகுக்கும் எந்த முதலாளித்துவ அரசாங்கங்களையும் தொழிலாள வர்க்கம் ஆதரிக்க முடியாது.

பாரிஸ், சர்வதேச சட்டத்தின் சொல்லாட்சியில் தனது கொள்கையை உருவாக்கும் அதே வேளையில், அதன் ஏகாதிபத்திய நலன்களையும் அதன் முந்தைய காலனித்துவ பிராந்தியங்களில் அதன் எண்ணெய் இலாபங்களையும் பாதுகாக்கிறது. லிபியாவில் போருக்கு அழுத்தம் கொடுப்பதில் பாரிஸ் வகித்த முக்கிய பங்கை அது இன்னும் தொடர்கிறது. இப்போர், நாட்டினை பேரழிவிற்கு கொண்டுசென்றதுடன், அகதிகள் அடிமைப்படுத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்படுகிறார்கள் என்று மனித உரிமைகள் குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தடுப்பு முகாம்களை அங்கு உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்வுகள், முன்னாள் முதலீட்டு வங்கியாளரான மக்ரோனின் உரைகளின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஏகாதிபத்திய வார்த்தையாடல்களின் அரசியல் உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

மக்ரோனின் கொள்கையை இயக்கும் ஒரு முக்கிய சக்தி, வர்க்கப் போராட்டத்தின் தற்போதைய சர்வதேச எழுச்சிக்கான பயம் மற்றும் கோபமும் ஆகும். இது இப்போது தொற்றுநோய் தொடர்பான தொழிலாள வர்க்கத்தின் கோபம் அதிகரிப்பதன் மூலம் தீவிரமடைகிறது. "மஞ்சள் சீருடை" இயக்கம் மற்றும் இந்த ஆண்டின் போக்குவரத்து வேலைநிறுத்தம் போன்ற உள்நாட்டிலுள்ள ஆர்ப்பாட்டங்களை மிருகத்தனமாக முறியடித்த நிலையில், ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட முன்னாள் பிரெஞ்சு காலனிகளில் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் இயக்கத்திற்கு மக்ரோனும் வன்முறையுடன் விரோதமாக இருக்கிறார்.

கடந்த ஆண்டு லெபனான் மற்றும் அல்ஜீரியாவில் மில்லியன் கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஐவரி கோஸ்டில் கபாக்கோவை வெளியேற்றுவதற்கு எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிரெஞ்சு போருக்கு எதிராக மாலியில் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பாரிஸின் ஏகாதிபத்திய ஆணவம் பற்றிய எர்டோகானின் வாய்மொழி விமர்சனங்கள் பிரெஞ்சு அதிகாரிகளை கோபப்படுத்துகின்றன. துறைமுக வெடிப்புக்குப் பின்னர் கடந்த மாதம் லெபனானுக்கு விஜயம் செய்த மக்ரோன் தன்னை சந்தித்தவர்களுடன் நாட்டின் முன்னாள் பிரெஞ்சு காலனித்துவ அதிபர் ஜெனரல் Henri Gouraud பற்றி பேசியபோது, பிரெஞ்சு காலனித்துவத்தை நியாயப்படுத்தவும், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய கொள்ளையை தொடரவும் உறுதியாக உள்ளதை காட்டினார்.

கிரேக்க பிரதம மந்திரி கிரியாக்கோஸ் மிட்சோடகிஸின் வலதுசாரி அரசாங்கம் கடந்த ஆண்டு முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனெனில் வாக்காளர்கள் சிரிசா (“தீவிர இடதுசாரிகளின் கூட்டணி”) அரசாங்கத்தை வெளியேற்றினர். ஸ்ராலினிசம் மற்றும் அடையாள அரசியலின் இணைவை அடிப்படையாகக் கொண்ட நடுத்தர வர்க்கக் கட்சியான சிரிசா ஒரு அதிர்ச்சியூட்டும் அரசியல் துரோகத்தை நடத்தியது: ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாக்குறுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கிரேக்க மக்களின் வாக்குகளை மீண்டும் மீண்டும் மிதித்தது. இது கிரேக்க வரலாற்றில் சமூக வெட்டுக்களின் மிகப்பெரிய தனித்த தொகுப்பை திணித்து, அதே நேரத்தில் அகதிகளுக்கான மோசமான ஐரோப்பிய ஒன்றிய தடுப்பு முகாம்களின் வலையமைப்பை உருவாக்கியது.

சிரிசாவின் வலதுசாரி சாதனையை தாண்டி தனது சிக்கனக் கொள்கையைத் தொடரும் போது, மிட்சோடாகிஸ் பொலிஸ்-அரசு கொள்கைகள், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் துருக்கிய எதிர்ப்பு தேசியவாதம் ஆகியவற்றை நம்பியுள்ளார். கிரேக்க-துருக்கிய எல்லையைத் தாண்டிய மத்திய கிழக்கு அகதிகளை அடித்து சுட்டுக் கொல்ல கிரேக்க பாதுகாப்புப் படைகள் பாசிச கோல்டன் டோன் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றின. அபிவிருத்தி மந்திரி அடோனிஸ் ஜார்ஜியாடிஸ் மற்றும் விவசாய மந்திரி மாகிஸ் வோரிடிஸ் உள்ளிட்ட கிரேக்க இராணுவ ஆட்சிக்குழுவிற்கான நன்கு அறியப்பட்ட அனுதாபிகளை மிட்சோடாகிஸ் தனது அமைச்சரவையில் சேர்த்துள்ளார். இதிலிருந்து தவிர்க்க முடியாமல் ஒரு இராணுவவாத, துருக்கிய எதிர்ப்பு கொள்கை உருவாகின்றது.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகானின் அரசாங்கம் அதன் மூர்க்கமான எண்ணெய் துளையிடும் கொள்கையுடன் துருக்கிய முதலாளித்துவத்தின் நலன்களை உறுதிப்படுத்த முயல்கிறது. இது இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயுவில் தங்கியிருப்பதுடன், மற்றும் தேர்தல்களில் அதன் சரிவை மீட்கப்பார்க்கின்றது. COVID-19 தொற்றுநோய், வாங்கும் திறன் வீழ்ச்சியடைதல் மற்றும் மத்திய கிழக்கில் தொடர்ச்சியான போர்களுக்கு இடையே மிருகத்தனமான வேலைக்கு திரும்பும் கொள்கையின் மீது தொழிலாளர்களின் கோபம் அதிகரித்து வருகிறது. சில வரம்புகளுக்குள், எர்டோகன் ஐரோப்பிய ஒன்றிய விமர்சனங்களை வரவேற்கிறார், இது அவரை ஏகாதிபத்திய எதிர்ப்புவாதியாக காட்டிக்கொள்ள உதவுகின்றதுடன், துருக்கியில் எழுச்சியுறும் வர்க்க மோதல்களை தணிக்கவும் உதவுகிறது.

எர்டோகான் அரசாங்கத்தின் வரலாறு லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை உறுதிப்படுத்துகிறது: அதாவது தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளின் முதலாளித்துவம், ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிக்கவோ அல்லது ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவோ இயலாதுள்ளது. பல்வேறு பெரும் வல்லரசுகளுக்கு இடையில் ஒரு பிற்போக்குத்தனமான முதலாளித்துவ ஆட்சிச் சூழ்ச்சி, எர்டோகன் அரசாங்கத்தின் கொள்கைகள் பேரழிவிற்கு மட்டுமே வழிவகுத்தன. துருக்கிக்குள்ளேயே குர்திஷ் மக்கள் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்ந்தும், COVID-19 இல் ஒரு கொலைகார “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” மூலோபாயத்தை கடைப்பிடிக்கும் அதே வேளையில் இது லிபியா மற்றும் சிரியாவில் நடந்த ஏகாதிபத்திய போர்களை ஏற்றுக்கொண்டது. போருக்கு எதிரான போராட்டம் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது சோசலிசத்திற்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் மற்ற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை தமக்கு பின்னால் அணிதிரட்டும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களின் சர்வதேச ஒருங்கிணைப்பில் தங்கியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கம் அவிழ்கிறது

கிழக்கு மத்தியதரைக் கடலில் போர் ஆபத்து மற்றும் பல தசாப்தங்களாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு செய்துள்ள ஆய்வுகளையும் எச்சரிக்கைகளையும் நிரூபிக்கிறது. பூகோளமயமாக்கல் சகாப்தத்தில் முதலாளித்துவ சமுதாயத்தின் தீர்க்கப்படமுடியாத பூகோள அரசியல் முரண்பாடுகள் பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் முன்னே, மீண்டும் உலகப் போரா அல்லது உலக சோசலிசப் புரட்சியா என்ற மாற்றீட்டை முன்வைக்கும் என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு நீண்ட காலமாக வலியுறுத்திவந்தது. 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டது, இது தனியொரு நாட்டில் சோசலிசம் என்ற ஸ்ராலினின் தேசியவாத தத்துவத்தின் எதிர்ப் புரட்சிகர தன்மை பற்றிய ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகளை நிரூபித்தது. எவ்வாறாயினும், முதலாம் உலகப் போர் மற்றும் ரஷ்ய புரட்சி வெடிப்பதற்கு வழிவகுத்த முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை அது தீர்க்கவுமில்லை, அல்லது அக்டோபர் 1917 இல் திறக்கப்பட்ட உலக சோசலிசப் புரட்சியின் சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவுமில்லை.

சேர்பியாவில் 1999 நேட்டோ போர் மற்றும் ஈராக் மீது தொடர்ந்து குண்டுவீச்சு நடத்துதல் குறித்து ஆராய்ந்த WSWS ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிசத்தால் முதலாளித்துவ மறுசீரமைப்பு கட்டவிழ்த்து விடப்பட்ட வெடிக்கும் பூகோள-புவிசார் அரசியல் மோதல்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். அவர் பின்வருமாறு எழுதினார்:

ஏகாதிபத்தியத்தின் எழுச்சியானது, கடந்த நூற்றாண்டின் இறுதியில் உலகை தமக்குள் பிரிப்பதற்கான பெரிய சக்திகளின் முயற்சிகளைக் கண்டது போலவே, சோவியத் ஒன்றியம் இல்லாதுபோனமையானது கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா மற்றும் மத்திய ஆசியாவில் ஒரு சக்தி வெற்றிடத்தை உருவாக்கி, உலகத்தினை புதிதாக பிரிப்பதை தவிர்க்க முடியாததாக்குகின்றது. இந்த முக்கியமான கட்டத்தில், யூகோஸ்லாவியாவின் முக்கிய முக்கியத்துவம் என்னவென்றால், இது முக்கிய உலக சக்திகள் விரிவாக்கமடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான நிலப்பரப்பின் மேற்கு எல்லையில் உள்ளது. அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பிற சக்திகள் இந்த பகுதிகள் திறக்கப்படுவதை வெறுமனே செயலற்ற முறையில் பார்த்துக்கொண்டிருப்பது சாத்தியமில்லை. இப்பிராந்தியத்தை அணுகுவதற்கும் அதன் மூலப்பொருட்கள், உழைப்பு மற்றும் சந்தைகள் மீதான கட்டுப்பாட்டிற்குமான ஒரு போராட்டம் கடந்த நூற்றாண்டின் ‘ஆபிரிக்காவிற்கான போராட்டத்தை’ விட தீவிரமாக இருக்கும்.

"எதிர்வரவிருக்கும் தொடர்ச்சியான போர்கள்" பற்றிய எச்சரிக்கை, "ரஷ்யாவுடனான மோதலுக்கான சாத்தியத்தை உண்மையில் அதிகரித்துள்ளது" என்றும், சோவியத் ஒன்றியம் இல்லாமல் போனதன் தாக்கம் ஒரு பொதுவான எதிரிக்கு எதிரான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஐக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்: "அமெரிக்காவிற்கு ஒரு துணை நிலையமாக இருப்பதை என்றென்றும் ஏற்றுக்கொள்வதில் ஐரோப்பிய முதலாளித்துவம் திருப்தியடையாது. அமெரிக்கா தனது நலன்களை முன்னோக்கி அழுத்த முயலுகையில் அதன் நிலைமை தொடர்ந்து அழிக்கப்படும்” என்றும் நோர்த் குறிப்பிட்டார்.

சீனாவில், ஸ்ராலினிஸ்டுகளின் முதலாளித்துவ மறுசீரமைப்பின் தாக்கங்கள் மற்றும் உலக சந்தைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கான அணுகலை அடிப்படையாகக் கொண்ட சீனாவின் தொழில்துறை வளர்ச்சி பற்றி நோர்த் கவனத்தை ஈர்த்தார்: “அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பகிரங்கமான மோதல் தவிர்க்க முடியாதது. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடான சீனா ஒரு ஏகாதிபத்திய சக்தி அல்ல. முதலாளித்துவத்தை மறுசீரமைப்பதற்கான விரைவான பாதையில் சென்று கொண்டிருக்கும் சீனா ஒரு பெரிய பிராந்திய பொருளாதார சக்தியாக மாறவிரும்புகிறது. அமெரிக்க செய்தித்தாள்களில் தற்போதுள்ள சீன எதிர்ப்பு வெறியில் காட்டப்படும் இதுபோன்ற வளர்ச்சியானது, அமெரிக்க ஆளும் உயரடுக்கின் கணிசமான பிரிவுகளால் கடுமையாக எதிர்க்கப்படுவதை காட்டுகிறது.”

கிழக்கு மத்தியதரைக் கடல் பிரச்சினையை சுற்றியுள்ள போர்கள் மற்றும் மோதல்களின் சிக்கலானது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவால் பகுப்பாய்வு செய்யப்பட்ட நெருக்கடியின் மிக முன்னேறிய நிலையை பிரதிபலிக்கிறது. மத்திய கிழக்கு முழுவதும் பால்கன் மற்றும் வட ஆபிரிக்காவிலிருந்து மத்திய ஆசியா வரை செல்லும் பரந்த வளைவில், இராணுவ சக்தியை பயன்படுத்துவதன் மூலம் அதன் பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியை சமப்படுத்திக்கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் (2001), ஈராக் (2003), லிபியா மற்றும் சிரியா (2011) ஆகிய நாடுகளில் தொடங்கப்பட்ட ஏகாதிபத்திய போர்கள் தோல்வியில் முடிவடைந்தன. உலக ஆதிக்கத்திற்காக இந்த போரானது, ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர், இல்லாத "ஈராக்கிய பேரழிவு ஆயுதங்களை" வேட்டையாடுவது மற்றும் மத்திய கிழக்கில் ஒரு ஜனநாயகப் புரட்சிக்கான ஆதரவு போன்ற பொய்களால் பொதுமக்களுக்கு காட்டப்பட்டது. இவை அரசியல் ஸ்தாபகத்தை இழிவுபடுத்தியுள்ளன. 2002-2003ல் ஈராக்கிய போருக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த போர்கள் பின்னர் மில்லியன் கணக்கான மரணங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர்.

இந்த போர்கள், நேட்டோ கூட்டணியின் சரிவுக்கும் புதிய உலகப் போரை நோக்கிய உந்துதலுக்கும் களம் அமைத்துள்ளன. ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் குறிப்பிடத்தக்க பெரும் சக்தி போட்டியாளர்களை எதிர்கொள்கிறது. ஐரோப்பாவில், இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் முதல் முறையாக 2014 இல் ஜேர்மனி தனது வெளியுறவுக் கொள்கையை மீண்டும் இராணுவமயமாக்குவதை அறிவித்துள்ளது. 2016ம் ஆண்டிலிருந்து, லண்டனை தங்கள் திட்டங்களை தடை செய்வதிலிருந்து பிரெக்ஸிட் தடுத்தபோது, பேர்லின் மற்றும் பாரிஸ் வாஷிங்டனில் இருந்து சுயாதீனமான ஒரு ஐரோப்பிய ஒன்றிய இராணுவக் கொள்கையை வடிவமைப்பதாக பலமுறை உறுதியளித்துள்ளன.

மத்திய தரைக்கடல் கடற்கரையிலும், மத்திய கிழக்கு முழுவதிலும், வாஷிங்டன் இப்போது பெரும் சக்தி எதிர்ப்பை எதிர்கொள்கிறது. அதன் போர்கள் ஈராக்கிலும் சிரியாவிலும் ஈரானிய சார்பு ஆட்சிகளை பலப்படுத்தியுள்ளதுடன், இது ரஷ்யாவாலும் ஆதரிக்கப்படுகிறது.

வாஷிங்டன் தனது மிகப்பெரிய உலகளாவிய போட்டியாளராக அடையாளம் கண்டுள்ள சீனாவும் பெருகிய முறையில் செல்வாக்கு செலுத்துகிறது. அதன் ஒரே பாதை ஒரே இணைப்பு (Belt and Road) முன்முயற்சி மத்திய கிழக்கு முழுவதும் எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்களை உருவாக்கி வருவதால், ஈரான், ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளுக்கான மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இது உருவெடுத்துள்ளது. ஜூலை மாதம், ஈரானுக்கு 400 பில்லியன் டாலர் முதலீடு மற்றும் அமெரிக்க தாக்குதல் ஏற்பட்டால் பரஸ்பர பாதுகாப்புக்கான உத்தரவாதங்களை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தை அது வழங்கியதாக கூறப்படுகிறது.

இது, 1990 களில் அதன் முன்னணி மூலோபாயவாதிகள் வகுத்த அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு தீர்க்கமான பின்னடைவைக் குறிக்கிறது. 1997 ஆம் ஆண்டில், முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski யூரேசியாவை “உலகின் மேதகையான கண்டத்தின் அச்சு” என்று கூறி: “யூரேசிய நிலப்பரப்பில் அதிகாரப் பகிர்வு மூலம் என்ன நடக்கிறது என்பது அமெரிக்காவின் உலகளாவிய முதன்மை மற்றும் வரலாற்று மரபுக்கு தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். …ஒரு ஸ்திரமற்ற யூரேசியாவில், எந்தவொரு நாடோ அல்லது நாடுகளின் கூட்டோமா அமெரிக்காவை வெளியேற்றும் அல்லது அதன் தீர்க்கமான பங்கைக் குறைக்கும் திறனைப் பெறாதிருப்பதை உறுதி செய்வதே உடனடிப் பணியாகும்.” என வலியுறுத்தினார்.

கிழக்கு மத்தியதரைக் கடலில் நேட்டோ கூட்டணி இப்போது உடைந்து வருவதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் நேட்டோவிற்குள்ளும் யூரேசிய நிலப்பரப்பிலும் சிதறிக்கிடக்கும் சாத்தியமான எதிரிகளையும் போட்டியாளர்களையும் எதிர்கொள்கின்றது.

இந்த அசாதாரணமான கூர்மையான மோதல்கள் நேட்டோவின் கிழக்கு மத்திய தரைக்கடல் நெருக்கடியின் எந்தவொரு அமைதியான, நீண்டகால தீர்வையும் தடுக்கின்றன. ஜேர்மனிய வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் ஏதென்ஸ் மற்றும் அங்காராவிலிருந்து திரும்பிய பின்னர் பிரெஞ்சு அதிகாரிகளின் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்: “சீனாவுடனான அதன் போட்டி என்ற கண்ணாடியூடாக அமெரிக்கா உலகின் பிற பகுதிகளை இன்னும் நேரடியாகப் பார்க்கிறது. ... ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் உலகளாவிய சக்தி என்ற பாத்திரத்தை ஆற்றுவதற்கான அமெரிக்காவின் தயார்நிலை வீழ்ச்சியடைந்துள்ளது."

முதலாம் உலகப் போர் வெடித்தபின் மார்க்சிச இயக்கம் வலியுறுத்தியது போல, போர் ஆபத்துக்கான பொறுப்பு ஒன்று அல்லது மற்றொரு ஏகாதிபத்திய அரசு அல்லது அவர் எவ்வளவு ஆக்கிரோஷமாக இருந்தாலும் ஒரு அரசியல்வாதியிடம் இல்லை. அது ஒட்டுமொத்த முதலாளித்துவ தேசிய அரசு அமைப்பின் மீதும் உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திவால்நிலைக்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியம் மாற்று அல்ல. உண்மையில், பாரிஸ் மற்றும் பேர்லின் மத்தியதரைக் கடலில் தங்கள் சொந்த வெளியுறவுக் கொள்கையை இயக்குவதற்கான ஆரம்ப முயற்சி, விரைவாக வெடிக்கும் மோதலைத் தூண்டியுள்ளது. கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்கள், உலகின் மிகப் பெரிய பகுதிகளை கொள்ளையடிக்கத் தொடங்கும்போது, அவை இணக்கமானவையாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் என்பதும் உறுதியாக இல்லை.

குட்டி முதலாளித்துவ கட்சிகளின் போருக்கு ஆதரவான பங்கு

ஒரு புதிய உலகப் போரை நோக்கிய முதலாளித்துவ சக்திகளின் சுழற்சியைத் தடுப்பதற்கான ஒரே வழி, ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை, தொற்றுநோய் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் சர்வதேசரீதியாக ஒன்றிணைப்பதாகும். 2018 முதல் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே சோசலிசத்திற்கான அதிகரித்து வரும் ஆதரவும் அவ்வாறான கொள்கைக்கான அடித்தளம் புறநிலை சூழ்நிலையில் இருப்பதைக் காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர தலைமையின் நெருக்கடியே பிரதான தடையாக உள்ளது.

தற்போதுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளுக்கு எதிராகவோ அல்லது அவர்கள் சுதந்திரமாகவோ போராட்டத்தில் எழுந்தாலும், தொழிலாளர்கள் இன்னும் வசதியான நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது கட்சிகளின் எஞ்சிய செல்வாக்கை எதிர்கொள்கின்றனர். ஸ்ராலினிசம் மற்றும் அடையாள அரசியலின் இணைவை அடிப்படையாகக் கொண்ட இந்த சக்திகள், புரட்சியை நனவுபூர்வமாக எதிர்ப்பதுடன் மற்றும் தொழிலாளர்களை முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புடன் கட்டிவைக்க முயல்கின்றன. 2011 மற்றும் 2013 க்கு இடையில் எகிப்திய புரட்சியின் வெகுஜன எழுச்சிகளின் போது, தொழிலாளர்கள் எகிப்திய முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவாக இருந்தாலும் அதை ஆதரிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். முதலில் ஒரு இராணுவ ஆட்சிக்குழு, பின்னர் முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் இறுதியாக சிசி சர்வாதிகாரம் ஆகியவை ஆட்சியைப் பிடிக்கத் தயாராகி வந்தன. இது இறுதியாக 2013 இல் சிசி இராணுவ சர்வாதிகாரத்தை பலப்படுத்துவதற்கும் எகிப்திய தொழிலாளர்களின் எழுச்சியை நசுக்குவதற்கும் வழிவகுத்தது.

இப்போது, அவர்கள் கிரேக்கத்திலும் துருக்கியிலும் உள்ள தொழிலாளர்களை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தேசிய அரசாங்கங்களுக்கும் ஆயுதப்படைகளுக்கும் ஆதரவளிக்கக் கோரி, போர் உந்துதலுடன் அவர்களை பிணைக்க இயங்குகின்றனர். இதில் கிரேக்கத்தில் சிரிசா (“தீவிர இடதுசாரிகளின் கூட்டணி”) கட்சி மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணமாகும். ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் (KKE) பிளவுபட்ட துண்டுகள் மற்றும் 1968 க்கு பிந்தைய நடுத்தர வர்க்க மாணவர் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பூகோளமயமாக்கல் எதிர்ப்பு இயக்கங்களுக்கு இடையிலான ஒரு கூட்டணியான சிரிசா மிட்சோடாகிஸ் அரசாங்கத்தின் இராணுவவாத நிலைப்பாட்டை தீவிரமாக ஆதரிக்கின்றது.

கிரேக்கத்தில், சிரிசா தலைவரும் முன்னாள் பிரதமருமான அலெக்சிஸ் சிப்ராஸ், கிழக்கு மத்தியதரைக் கடல் நிலைப்பாட்டிற்கு துருக்கிய கப்பல்களுக்கு எதிராக கிரேக்க இராணுவத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு வேண்டுகோளுடன் பின்வருமாறு பதிலளித்தார்: “இந்த சட்டவிரோத நிலஅதிர்வு நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும் மற்றும் தடுக்கக் கூடியதுமாகும். இது அக்டோபர் 2018 முதல் எங்கள் ஆயுதப்படைகள் திறம்பட பயிற்சி பெறுவதில் இருந்து தெரியவந்தது. அவர்களின் திறன்களில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.”

சிப்ராஸ்ஸின் பேரினவாத கருத்துக்களுக்கு கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியும் கிரேக்க தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் "தேசபக்தி நிலைப்பாட்டை" கோரியதுடன், "திறந்த உலகவாதம்" என்பதைக் கண்டித்து ஒரு திருப்பத்தை காட்டியது. அது பின்வருமாறு வலியுறுத்தியது, “தொழிலாளர்கள், விவசாயிகள், போராடும் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் கைவினைஞர்கள், விஞ்ஞானிகள், ஆண்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு கிரேக்கத்தில் முதலிடம் கொடுக்க வேண்டும். ஏகபோகங்கள், திறந்த உலகவாதம், பெரிய மூலதனம் மற்றும் பல வடிவங்களில் வரும் அவர்களின் அரசியல் கையாளுபவர்களின் கிரேக்கத்திற்காக அல்ல.”

ஒரு கூட்டு அறிக்கையில், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ராலினிச துருக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (TKP) ஆகியவை லவுசான் உடன்படிக்கை மற்றும் பால்கனில் முதலாளித்துவ தேசிய அரசு முறைக்கு ஆதரவாக முன்வருகின்றன. அவர்கள் "எல்லை மீறல்களுக்கும் பிராந்தியத்தில் எல்லைகளை வரையறுத்துள்ள சர்வதேச ஒப்பந்தங்களை கேள்விக்குட்படுத்துவதற்கும்" மற்றும் "எல்லைகளை மாற்றுவதற்கும், அவற்றை வரையறுக்கும் ஒப்பந்தங்களுக்கும் எதிராக" இருப்பதாக அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், இந்த எல்லைகளை தாண்டி தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான போராட்டத்தை கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் ஸ்ராலினிச துருக்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் நிராகரிக்கின்றன. மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அடித்தளமாக இருக்கும் ஏகாதிபத்திய போர்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இடமளிக்கின்றன. இதன் பொருள் என்னவென்றால், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ராலினிச துருக்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று போரின் போது ஒருவருக்கொருவர் எதிராக அவரவரின் முதலாளித்துவ அரசுடன் பக்கபலமாக இருப்பர்.

துருக்கியில், துருக்கிய ஆளும் வர்க்கத்தின் பாரம்பரியக் கட்சியும் எதிர்க் கட்சியுமான குடியரசு மக்கள் கட்சி (CHP) ஜனாதிபதி எர்டோகன் அரசாங்கத்தின் கிழக்கு மத்தியதரைக் கடல் கொள்கையை அனுமதித்துள்ளது. குடியரசு மக்கள் கட்சி தலைவர் கெமால் காலடரோக்லு, கிரேக்கத்தின் வசம் உள்ள ஏஜியன் கடலில் சர்ச்சைக்குரிய தீவுகள் குறித்து முன்னர் "நான் அந்த தீவுகள் அனைத்தையும் கைப்பற்றுவேன்" என கூறியிருந்தார். ஆயினும்கூட, இடது கட்சி (முன்னர் சுதந்திரம் மற்றும் ஒற்றுமைக் கட்சி - ÖDP) மற்றும் தொழிலாளர் கட்சி (EMEP) மற்றும் துருக்கி தொழிலாளர் கட்சி (TİP) உள்ளிட்ட கட்சிகளின் ஒரு கூட்டு குடியரசு மக்கள் கட்சிக்கு ஆதரவான நோக்குநிலையை கொண்டிருப்பதுடன் ஆதரிக்கின்றன. கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்களில் அவை குடியரசு மக்கள் கட்சி மேயர் வேட்பாளர்களை ஆதரித்தன.

இதேபோல் எர்டோகனுக்கு எதிரான குறைந்த தீமை என்று குடியரசு மக்கள் கட்சியை ஆதரிக்கும் குர்திஷ்-தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, “சைப்ரஸ் தீவைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் உள்ள அனைத்து இயற்கை வளங்களும் துருக்கிய மற்றும் கிரேக்க சைப்ரஸ் மக்களுக்கு சொந்தமானது. இந்த வளங்களை அவர்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டும்." கிரேக்க மற்றும் துருக்கிய சைப்ரஸினருக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திட்டங்களைக் குறிப்பிட்டு, “அனைத்து அரசியல், இராஜதந்திர மற்றும் சட்டரீதியான உரையாடல்களுக்குமான பாதைகள் திறந்திருக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தது.

குர்திஷ்-தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சியின் (HDP) அறிக்கை குர்திஷ் முதலாளித்துவ தேசியவாதத்தின் திவால்நிலையை எடுத்துக்காட்டுகிறது. சிரியாவிற்குள் அதனுடன் நட்புகொண்ட பிரிவுகள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிநிதிகளாக செயல்பட்டுள்ளன. துருக்கியின் உள்ளே, இது குர்திஷ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு விரோதமான மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய குடியரசு மக்கள் கட்சி (CHP) போன்ற பிற்போக்குத்தனமான முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணியை நாடுகிறது. இந்த கொள்கைகள் குர்திஷ்-தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு நிலைப்பாட்டை நிராகரிப்பதை பிரதிபலிக்கிறது. போர் பதட்டங்கள் அதிகரிக்கும் போது அனைத்து இராஜதந்திர கதவுகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தபோதிலும், குர்திஷ்-தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) நோக்குநிலை கொண்டுள்ள வெவ்வேறு ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ சக்திகள் ஒருவருக்கொருவர் போரை நோக்கி செல்வதனால் அதற்கு முன்மொழிய எதுவும் இருக்கவில்லை.

பிரான்சில், ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப்படும் பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) இரண்டும் கிரேக்க-துருக்கிய மோதலில் முழு மௌனமாக உள்ளது. நேட்டோ முதன்முதலில் 2011 இல் லிபியப் போரை தொடங்கியபோது இந்த கட்சிகள் உற்சாகமாக ஆதரித்தன. NPA செய்தித் தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸெனோ லிபிய "கிளர்ச்சியாளர்களை" ஆயுதமயப்படுத்துவதற்கான பாரிஸுக்கான அழைப்புகளுக்கு தலைமை தாங்கினார். இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் தொழிற்சங்கங்களுடன் நெருங்கிய உறவைக் கொண்ட LFI, பிரான்சில் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் செயல்படுத்துவதை ஆதரிக்கும் ஒரு போருக்கு ஆதரவான கட்சியாகும்.

சர்வதேசவாதிகளாக காட்டிக்கொண்டு, இந்த தேசியவாத அமைப்புகளுடன் தொழிலாளர்களை இணைக்க முற்படும் இந்த போலி-இடதுகள் குறிப்பாக பிற்போக்குத்தனமான பங்கு வகிக்கின்றன. இது ஆர்ஜென்டினாவின் தொழிலாளர் கட்சியின் (PO) துருக்கிய இணைப்பாளர்களான புரட்சிகர தொழிலாளர் கட்சியின் (DİP) மற்றும் சவாஸ் மிஷேல்-மாட்சாஸின் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் (EEK) உள்ள அதன் கிரேக்க சகோதர கட்சிகளின் செயல்பாடாகும்.

2015 ஜனவரியில் சிரிசாவின் துரோக தேர்தல் வாக்குறுதிகளுக்கு அவர்கள் அளித்த ஆதரவால் தொழிலாள வர்க்கத்தின் மீதான விரோதப் போக்கு அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. தொழிலாளர் புரட்சிக் கட்சி (EEK), “கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, சிரிசா, Antarsya, அராஜகவாத மற்றும் சர்வாதிகார எதிர்ப்பு இயக்கங்கள் போன்ற அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பிரபலமான அமைப்புகளின் “சக்திவாய்ந்த ஐக்கிய முன்னணிக்கு” அழைப்புவிட்டது. எவ்வாறாயினும், சிரிசா ஒரு முதலாளித்துவ சார்பு கட்சி என்பதை அது அறிந்திருந்தது. அதன் தடங்களை மறைக்க, வாக்காளர்களுக்கு சிரிசாவை ஆதரிக்குமாறு அறிவுறுத்தியபோதும் "முதலாளித்துவம், அரசியல் ஊழியர்கள், அனைத்து சந்தர்ப்பவாதிகள் மற்றும் மூலதனத்தின் அதிகாரத்தை ஆதரிப்பவர்கள் ஆகியோருடன் முறித்துக் கொள்ள அவர்களின் தலைமையை கோர வேண்டும்." என்றது.

புரட்சிகர தொழிலாளர் கட்சியினை (DİP) பொறுத்தவரை, அது தேர்தல்களுக்கு முன்னதாக: "தொழிலாள வர்க்கத்தின் முகாமும் மற்றும் சிரிசா தலைமையிலான ஒடுக்கப்பட்டவர்கள் தேர்தலில் இருந்து எவ்வளவு வலுவாக வெளிப்படுவர் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்" என அறிவித்தது.

கிரேக்க-துருக்கிய மோதல் குறித்த அவர்களின் கூட்டு அறிக்கை, போலி-இடது பிரிவினரின் பிற்போக்குத்தனமான தேசியவாத அரசியலை சர்வதேசவாத வண்ணங்களில் வரைவதற்கு முயற்சிக்கிறது. கிரேக்க மற்றும் துருக்கிய முதலாளித்துவ வர்க்கம் எண்ணெய் இலாபங்களை அதிகம் பெறவில்லை என்பதையும், அதற்கு பதிலாக முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்ல அனுமதிப்பதையும் இது விமர்சிக்கிறது: "இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் மத்தியதரைக் கடலின் இயற்கை செல்வங்களைப் பகிர்வதில் பெரிய பங்கை தங்கள் பாதுகாவலர்களாக காட்டும் பெரும் சக்திகளுக்கு வழங்குகின்றன. இது Total, ENI, Shell, BP, மற்றும் Exxon இடையேயான ஒரு சண்டையே தவிர, கிரேக்க மற்றும் துருக்கியின் தொழிலாளர்களிடையே அல்ல!”

"அதன் சட்டரீதியான உரிமையாளர்களான பாலஸ்தீனிய மக்களிடமிருந்து" மத்திய தரைக்கடல் எண்ணெய் செல்வத்தை அபகரித்ததற்காக இஸ்ரேலிய அரசைக் கண்டித்து, அந்த அறிக்கை திவாலான வேண்டுகோளுடன் பின்வருமாறு முடிவடைகிறது: "போருக்கு எதிரான வர்க்கப் போரை முடுக்கிவிடுவோம்! கிரேக்க மற்றும் துருக்கிய முதலாளிகள், அவர்களின் அரசாங்கங்கள் மற்றும் ஆட்சிகள், அவர்களின் ஏகாதிபத்திய புரவலர்களுக்கு சேவைசெய்யும் பிரதான எதிரி நமது சொந்த நாடுகளுக்குள்ளேயே இருக்கின்றன.”

தொழிலாளர் புரட்சிகர கட்சி (EEK) மற்றும் புரட்சிகர தொழிலாளர் கட்சி (DİP) ஆகியவை போரின் முரசுகளை ஒலிப்பதற்கும் நெருக்கடி காலங்களில் தங்கள் சொந்த முதலாளித்துவத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. 2010 ல் இஸ்ரேல் மனிதாபிமானப் பொருட்களைக் கொண்டு செல்லும் மாவி மர்மாரா என்ற கப்பலைத் தாக்கி, ஒன்பது துருக்கிய குடிமக்களைக் கொன்றபோது, துருக்கிய, இஸ்ரேலிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுமாறு புரட்சிகர தொழிலாளர் கட்சி முறையிடவில்லை. மாறாக, அது "போர்க்கப்பல்களை அனுப்புங்கள், இஸ்ரேலில் இருந்து உதவி கப்பல்களை திரும்பப் பெறுங்கள்" என்று எர்டோகான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது.

ஒட்டோமான் பேரரசின் ஏகாதிபத்திய பிரிவால் செயற்கையாக உருவாக்கப்பட்ட அரசுகளுக்கு இடையில் பிராந்தியத்தின் மூலவளங்களை பிரிப்பதே தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் புரட்சிகர தொழிலாளர் கட்சியின் முன்னோக்காகும். உண்மையில், பிராந்தியத்தின் வளங்களை அதன் சிக்கலான, ஒன்றுடன் ஒன்று இணைந்த இனக்குழுக்களுக்கு இடையே சமாதானமாகப் பிரிப்பது எவ்வாறு சாத்தியமில்லாது இருக்கின்றதோ அதேபோலவே பிராந்தியத்தில் தேசிய-அரசுகளுக்கான எல்லைகளைக் புதிதாக வரைவதும் சாத்தியமில்லை. இந்த பிராந்தியமும் அதன் இலாபங்களும் ஏகாதிபத்திய போர்களால் பிரிக்கப்படுகின்றன. இதில் முன்னாள் காலனித்துவ அல்லது அரை காலனித்துவ முதலாளித்துவங்கள் தவிர்க்க முடியாதபடி ஒரு இரண்டாம் பட்சமான பங்கை வகிக்கின்றன.

முதலாளித்துவத்தின் இடத்தில் தேசிய அரசுகளிடையே இலாபங்கள் மற்றும் பிரதேசங்களை பிரித்து, முதலாளித்துவ வர்க்கத்தை மற்ற தேசியங்களுக்கு எதிராக தேசிய நலனை நன்கு பாதுகாக்கவில்லை என்று விமர்சிக்கும் நம்பிக்கையற்ற மற்றும் பிற்போக்குத்தனமான பணியை தொழிலாள வர்க்கம் தனக்குரியதாக்க முடியாது. தொழிலாளர் புரட்சிகர கட்சி மற்றும் புரட்சிகர தொழிலாளர் கட்சியால் முன்வைக்கப்பட்ட இந்த திவாலான முன்னோக்கு, தவிர்க்கமுடியாது சிரிசா மற்றும் குடியரசு மக்கள் கட்சியின் (CHP) முன்னோக்கில் சென்று முடிகின்றது. இதன் பொருள் என்னவென்றால், மத்தியதரைக் கடல் மற்றும் ஏஜியனில் கிரேக்க மற்றும் துருக்கிய கடற்படைகள் தம்முள் எண்ணெய் இலாபங்களைப் பிரிக்க எதிரெதிராக நிற்கையில், வெளிநாட்டு எதிரிக்கு தொழிலாளர்களை போருக்காக அணிதிரட்டுகின்றன.

சோசலிசத்துக்காகவும் போருக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்திற்கு

கிரேக்கத்திலும் துருக்கியிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் படையினர் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொள்ள விதிக்கப்பட்ட எதிரிகள் என்ற பிற்போக்கு பொய்யை நிராகரித்து எதிர்க்க வேண்டும். போருக்கு எதிரான போராட்டம் மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள உற்பத்தி சக்திகளின் பகுத்தறிவு வளர்ச்சிக்காக, நிதிப் பிரபுத்துவத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளை மற்றும் அராஜகத்திலிருந்து யூரேசிய மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் பணியை தொழிலாள வர்க்கத்தின் முன்நிறுத்துகிறது. இந்த மாபெரும் போராட்டத்திற்கு தேசிய அரசு அமைப்பு மற்றும் அனைத்து முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ கட்சிகளுடன் இரக்கமற்ற உடைவு தேவைப்படுகிறது.

அக்டோபர் புரட்சி மற்றும் சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஸ்தாபகத்திற்கு அடித்தளமாக இருந்த முன்னோக்கை 1929 ஆம் ஆண்டு நிரந்தரப் புரட்சி என்ற நூலில் விளக்கி ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

தேசிய எல்லைக்குள் சோசலிச புரட்சியை நிறைவு செய்வது நினைத்துப் பார்க்க முடியாதது. முதலாளித்துவ சமுதாயத்தின் நெருக்கடிக்கு ஒரு அடிப்படை காரணம், அது உருவாக்கிய உற்பத்தி சக்திகளை இனி தேசிய அரசின் கட்டமைப்போடு சமரசம் செய்ய முடியாதுள்ளது. இதிலிருந்து ஒருபுறம் ஏகாதிபத்திய போர்களும் மறுபுறம், ஒரு முதலாளித்துவ கற்பனாவாதமான ஐரோப்பிய ஐக்கிய அரசுகளும் தோன்றுகின்றது. சோசலிசப் புரட்சி தேசிய அரங்கில் ஆரம்பித்து, அது சர்வதேச அரங்கில் விரிவடைந்து, உலக அரங்கில் நிறைவடைகிறது. இவ்வாறு, சோசலிசப் புரட்சி ஒரு புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தர புரட்சியாக மாறுகிறது. இது நமது முழு கிரகத்திலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே முழுமையை அடைகிறது.

இப்போது உற்பத்தியின் பூகோளமயமாக்கலின் மூன்று தசாப்தங்களால் பெரிதும் பலப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான சந்தர்ப்பமாகும்- முறையாகும்-. 1980 முதல், தொழில்துறை தொழிலாள வர்க்கம் மட்டும் கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 250 மில்லியனிலிருந்து கிட்டத்தட்ட 1 பில்லியன் மனிதர்களாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 1980 க்கும் 2010 க்கும் இடையில் தொழிலாள வர்க்கம் 1.2 பில்லியனால் அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான கிராமப்புற மக்கள் வேலை தேடுவதற்காக நகரங்களுக்குச் செல்வதால், உலகளாவிய உழைப்பு சக்தியில் விவசாயிகளின் சதவீதம் 1991ல் 44 சதவீதமாக இருந்து 28 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அடுத்த நூற்றாண்டில் ஆபிரிக்காவில் மட்டும் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொழிலாள வர்க்கத்தின் வரிசையில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதன் முன்னாள் ஆபிரிக்க காலனிகளில் வெடிக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் அச்சம், 2050 வாக்கில், உலகளவில் 85 சதவீத பிரெஞ்சு மொழி பேசுவர்கள் ஆபிரிக்காவில் வாழக்கூடும் என்ற கணிப்புகளுடன் பிணைந்துள்ளது. அவர்களில் பலர் வேகமாக துணை-சஹாரா ஆபிரிக்காவில் நாடுகளை தொழில்துறைமயமாக்குகின்றனர். இது, மொத்தம் 700 மில்லியன் மக்களாக இருக்கும், பிரான்சின் தற்போதைய மக்கள்தொகை 66.5 மில்லியனுடன் ஒப்பிடுகையில், 2050ல் மக்கள் தொகை 74 மில்லியனாக இருக்கும்.

அவர் 2018 முதல் வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச வெடிப்பு, சமூக சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட இராணுவ-பொலிஸ் வன்முறை ஆகியவற்றின் பாரிய மட்டங்களில் வெடிக்கும் அரசியல் கோபத்தை பிரதிபலிக்கிறது. டஜன் கணக்கான முன்னாள் காலனித்துவ மற்றும் அரை காலனித்துவ நாடுகள் உட்பட வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வர்க்கப் போராட்டங்களின் வெடிப்பு சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும், 21 ஆம் நூற்றாண்டின் தொழில் மற்றும் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ந்து வரும் வலிமையையும் பிரதிபலிக்கிறது.

ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சோசலிச போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பலம்மிக்க சக்திகளை ஒன்றிணைப்பது மத்தியதரைக் கடல் பிரச்சினையால் முன்வைக்கப்பட்ட மிகப்பெரிய பணியாகும். உலக சோசலிச கூட்டமைப்பின் பாகமாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லவுசான் தீர்வு உடன்படிக்கைக்கு எதிராக, ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கும் மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்குமான ஒரு புரட்சிகர போராட்டம் தான் முன்னோக்கி செல்லும் பாதையாகும். ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ சுரண்டல்காரர்களுடனான தேசிய ஒற்றுமைக்கான குட்டி முதலாளித்துவ முறையீடுகளுக்கு எதிராக பிற நாடுகளின் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுடன் புரட்சிகர வர்க்க ஐக்கியத்தை முன்னெடுப்பதே இதன் பொருளாகும்.

வர்க்கப் போராட்டத்தின் கடைசி இரண்டு ஆண்டுகள், அக்டோபர் புரட்சி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் பாரிய படிப்பினைகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. அதாவது தொழிலாள வர்க்கம் தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான புரட்சிகர மூலோபாயத்தையும் ஒரு சர்வதேச அமைப்பையும் உருவாக்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ போர்முழங்குபவர்களுக்குப் பின்னால் தொழிலாளர்களை கொண்டுசெல்லும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிராக சர்வதேசவாதத்துக்கும் சோசலிசத்துக்குமான போராட்டம் நனவுடன் மட்டுமே நடத்தப்பட முடியும். அதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர அரசியல் தலைமை தேவை. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் மட்டுமே பல தசாப்தங்களாக ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ-தேசியவாத கட்சிகளால் வளர்க்கப்பட்ட நடைமுறையில் உள்ள தேசியவாத நோக்குநிலையுடன் முறிவுக்கான போராட்டத்தை வழிநடத்த முடியும்.

சோசலிசத்திற்கான உலகளாவிய இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தை ஒன்றிணைக்க மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் சர்வதேசரீதியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரிவுகளை உருவாக்குவது இதற்கு தேவைப்படுகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவிற்கு அதன் ஆதரவாளர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் தங்கள் ஆதரவை வழங்கவும், அதைத் தொடர்பு கொள்ளவும், போருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவினை கட்டியெழுப்பவும் அழைப்புவிடுகின்றது.

Loading