தமிழ்நாட்டில் பொது முடக்க நீக்கமானது கொரோனா பரவலையும் சுரண்டலையும் தீவிரமாக்கியுள்ளது

தமிழ்நாட்டின் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.இ.அ.தி.மு.க.) அரசாங்கம், பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து, மாநிலத்தில் கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த பொது அடைப்பை நீக்கி, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்தித்துள்ளது.

இந்த பொதுமுடக்க நீக்கம், வெகுஜனங்களின் உயிர்வாழ்வை அலட்சியம் செய்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் உழைப்பை, பெரும் வர்த்தகர்களின் இலபத்திற்காக கடுமையாக சுரண்டுவதற்கு அனுமதிப்பதை இலக்காகக் கொண்டு, உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் முன்னெடுக்கும் “வேலைக்குத் திரும்புதல்” என்ற குற்றவியல் கொள்கையின் பாகமாகும்.

உலகின் ஏனைய அரசாங்கங்களைப் போலவே இந்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசாங்கமும் தொற்றுநோயை உடலில் தாங்கிக்கொண்டு உழைக்க நிர்ப்பந்திக்கும், விஞ்ஞானபூர்வமாக ஒப்புக்கொள்ளப்படாத “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” (Herd immunity) கொள்கையை சூட்சுமமாக அமுல்படுத்துகின்றன. அரசாங்கம் வேலைத்தளங்கள் மட்டுமன்றி கோயில்கள், பெரும் வணிக வளாகங்கள், பூங்காக்கள் என அனைத்தையும் திறந்துவிட்டுள்ளது.

25 சதவீத பணியாளர்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தபோதே வேலைத்தளங்களில் தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இப்போது 100 வீதம் தொழிலாளர்களை பயன்படுத்தப்படும்போது மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் தொற்றுக்கு உள்ளாகும் மரண ஆபத்தை எதிர்கொள்கின்றனர். போதாக்குறைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இயங்கும் பொதுப் போக்குவரத்து சேவையில், தொழிலாளர்கள் சமூக இடைவெளி இன்றி நெரிசலாக பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர்.

ஏனைய மாநிலங்களில் போல் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியின் அ.இ.அ.தி.மு.க. அரசாங்கமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுகின்றது. செப்டம்பர் 9, விழுப்புரத்தில் உரையாற்றிய முதலமைச்சர், கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது என்று புழுகியுள்ளார்.

உண்மை என்னவெனில், தமிழ் நாட்டில் நாளொன்றுக்கு கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கவுள்ளது. இந்தியாவில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்ரா மற்றும் ஆந்திர பிரதேசத்தை அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை செய்திகளின்படி 5,488 புதிய நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 67 பேர் மரணித்துள்ளனர். அவர்களில் தலைநகர் சென்னையில் மட்டும் 989 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கோவிட் 19 வரைஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 530,908 பேர் ஆகும். தமிழகத்தில் இதுவரை 8685 பேர் தொற்று நோயால் மரணித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரம் குழந்தைகள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் பள்ளிகள் திறக்கபடமாட்டாது என்று பழனிசாமி கூறியுள்ள போதிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட இருப்பதால் அங்கு இருக்கும் தனிமைப்படுத்தப்படும் முகாம்களை அப்புறப்படுத்துமாறு அரசாங்கத்தின் தலைமை செயலர் உத்தரவிட்டிருக்கிறார். பழனிசாமியின் கருத்து, மாணவர்களுக்கு கொரோனா தொற்றினால், அதற்கு பெற்றோரைப் பொறுப்பாக்குவதை இலக்காகக் கொண்டதாகும்.உலகம் பூராவும் அரசாங்கங்கள் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதற்காக, அவர்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப நிர்ப்பந்தித்து வருகின்றன.

அ.இ.அ.தி.மு.க. அரசாங்கம் புதிய சுற்று சுரண்டலுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பை நசுக்குவதற்கு அடக்குமுறைகளையும் தயார் செய்துள்ளது. செப்டம்பர் முதல்வாரத்தில் தங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவை ஊதியத்தையும் மருத்துவ காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கிய, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை காவல்துறையினர் கைதுசெய்து ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்தனர். அங்கும் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். செங்கொடி தொழிற்சங்கம் வழமைபோல் தொழிலாளர்களின் எதிர்ப்பை கரைத்து விடுவதற்காக போராட்டத்தை ஏற்பாடு செய்துவிட்டு, எந்த பயனும் இன்றி காட்டிக்கொடுத்துவிட்டது.

மே மாதம் தமிழ்நாடு அரசாங்கம் தனது வருமானத்தை பெருக்குவதற்காக டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தவிட்டு, அவற்றில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை கட்டாய வேலையில் அமர்த்தியது. ஆகஸ்ட் 25 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை தமிழகம் முழுவதும் இரண்டு மணி நேர வேலை நிறுத்தம் செய்தனர். கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம், வாரிசுக்கு அரசு வேலை, தொழில் நிரந்தரம் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை டாஸ்மார்க் தொழிலாளர்கள் வலியுறுத்தினர். போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்காக, டாஸ்மாக் நிர்வாகம் சென்னையில் 25 பேர் உட்பட தமிழகம் முழுவதிலும் போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேரை இடமாற்றம் செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மூன்றாவது கட்ட முடக்கத் தளர்வின்போது, உணவு விநியோக வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஸ்விக்கி நிறுவனம், கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னர் கொடுத்த அத்தனை வருவாய்களையும் பாதியாக வெட்டித் தள்ளியதற்கு எதிராக, கடந்த மாதம் உணவு விநியோக தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

சென்னையில் சுமார் 7,000க்கும் அதிகமான ஸ்விக்கி தொழிலாளர்களில் பலர் பட்டதாரிகளாவர். கொடுக்கப்படும் இலக்குகளை அடைந்து பணம் சம்பாதிக்க இரவு பகலாக வண்டியை ஓட்டி உடல் வலியையும் நோய்களையும் மட்டுமே அந்த இளைஞர்கள் சம்பாதிக்கின்றனர். “முன்னர் நாளொன்றுக்கு 700 ரூபாய்க்கு டெலிவரி பார்த்தால், 200 ரூபாய்க்கு மேல் ஊக்கத்தொகை கிடைக்கும். அதோடு வாரா வாரம் இலக்கு மற்றும் வாடிக்கையாளரின் மதிப்பீட்டுக்கு (Target and Customer Rating) 1,000-2,300 ரூபாய்க்கு மேல் வரும். நாளொன்றுக்கு குறைந்தது 25 டெலிவரியாவது பார்ப்போம். இந்த கொரோனா காலகட்டத்தில் அவ்வளவாக ஆர்டர் வர்றதில்லை. முன்னர் நாளொன்றுக்கு எல்லாச் செலவும் போக 700-800 ரூபாய் மிஞ்சும். இப்போ பெட்ரோல் செலவெல்லாம் போக கையில எதுவும் இல்லை. இதில குடும்பத்தை நடத்தமுடியாமல் இருக்கிறோம்” என்று ஸ்விக்கி ஊழியர் ஒருவர் ஊடகமொன்றிற்கு கூறியுள்ளார்.

மார்ச் மாதத்திலிருந்து ஓயாது பணிபுரியும் ஊழியர்கள், ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் என பல ஆயிரம் 108 இலக்க ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்கள் முறையாக கொடுக்கப்படாததால் தேநீர் மற்றும் பிஸ்கட்டை உண்டு சேவையாற்றுகின்றனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மார்ச் மாதம் அரசு அறவித்த ஒரு மாத சிறப்பு ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. கொரோனா தடுப்பு பணியில் உள்ள 108 இலக்க ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கடந்த ஆகஸ்ட்டில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்த சிறப்பு ஊக்கத் தொகை 5,000 ரூபாயும் வழங்கப்படவில்லை. நிர்வாகத்திடம் கேட்டால் இன்னும் அரசாணை போடவில்லை என்று கூறுகின்றனர். பணியின்போது கொரோனா பாதித்து இறந்த ஆம்புலனஸ் மருத்துவ உதவியாளருக்கு அரசு அறிவித்த ரூபா 50 லட்சமும் கிடைக்கவில்லை.

தொழிற்படையை குறைப்பதற்கும் சுரண்டலை அதிகரிக்கவும் தற்போது தானியங்கி உற்பத்தி முறையை ஊக்குவிக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்சி எடுத்துவருகின்றன. வீடுகளுக்கே பொருள் விநியோகம் செய்வது, உற்பத்தியை தானியங்கி (automation) முறையில் விரிவுபடுத்துவது, திறமான செயல்பாட்டை உறுதிப்படுத்த டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துவது போன்றவற்றுக்காக 150 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக ஆம்வே (Amway) இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்ஷு புத்ராஜா கூறியிருக்கிறார்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம், அதன் உற்பத்தியில் கோவிட்டுக்கு முந்தைய நிலைகளில் 80 சதவீதத்தை எட்டியிருப்பதாகவும் ஜூன் மாதம் 50 சதவீதமாக குறைந்திருந்த மின்னணு பொருள் உற்பத்தியை 80 வீதமாக அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கிறது. வேலை சுமையை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய இலக்கை எட்டுவது சாத்தியமாகும்.

பொதுமுடக்கத்தின் போது அரசாங்கத்தால் அலட்சியம் செய்யப்பட்ட புலம்பெயர் மலிவு கூலி தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்காத நிறுவன உரிமையாளர்கள், இப்போது அவர்களை வைத்து குறைந்த கூலிக்கு வேலை வாங்குவதற்காக அழைத்துவர செலவிடுகின்றன. "நாங்கள் வலுவான வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். பீகார் மற்றும் பிற இடங்களிலிருந்து 35 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஒரு நபருக்கு 8,000 ரூபாய் செலவழித்து அழைத்து வருகிறோம்" என்று எஸ்பி அப்பரல்ஸ் நிர்வாக இயக்குநர் பி. சுந்தர்ராஜன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.

பொது முடக்கத்தினால் சென்னையில் மட்டும் வீடூகளில் பணிபுரியும் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கின்றனர். இந்த வறிய தொழிலாளர்களில் அதிகமானவர்கள் ஆரோக்கியமற்ற சேரிகளிலிருந்து பணிக்கு வருகிறார்கள். இப்போது ஒரு சில வீடுகளில் பணிபுரிய அழைக்கப்பட்டாலும் முகக்கவசமோ அல்லது சானிடைசரோ கொடுக்கப்படுவதில்லை. அரசாங்கம் தங்களை கணக்கெடுப்பதில்லை என்று பணியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ரேசன் அரிசியும், தன்னார்வலர்கள் அவ்வப்போது கொடுக்கும் உதவிகள் மட்டுமே கிடைக்கின்றன. ரேசனில் கொடுக்கும் அரசி மிக மோசமானதாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறினார்கள்.

தமிழ்நாட்டின் முக்கிய பழமையான சுற்றுலாத்தளமான மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல்வேறு சுற்றுலாத்தளங்களுக்கும் பயணிகள் வராத காரணத்தால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டல் அமைப்புகள் அலுவலகங்களை மூடிவிட்டன. இதனால் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைப்புகள் தெரிவிக்கின்றன. 2014 இலிருந்து 2018 வரையான காலத்தில் 39 கோடி உள்ளூர் சுற்றுலா பயணிகளும், 61 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இவ்வளவு பிமாண்டமான வருமானத்தை தமிழ்நாடு இழந்திருக்கின்றது.

சுற்றுலாவில் ஈடுபடும் வாகனங்களுக்கான சாலை வரி மற்றும் வாகன காப்பீடு கட்டமுடியாத நிலையிருப்பதால் அதற்கு விலக்கு அளிக்குமாறும், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு தாங்கள் செலுத்திய ஒரு வருட ஜிஎஸ்டி வரி பணத்தை திருப்பி கொடுக்குமாறும், மேலும் மீண்டும் பழைய நிலைமைக்கு வரும்வரை தங்களுக்கு மானியங்கள் வழங்கவேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் வெங்கட சுப்பு ஊடகத்திற்கு தெரிவித்திருக்கிறார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் அல்லது நிவாரணம் கொடுப்பதற்கு பதிலாக, சம்பளம் கொடுக்கவும் அவர்களை மீண்டும் வேலையில் தக்கவைத்துக்கொள்வதற்கும் எங்களுக்கு பாதி அல்லது மாத சம்பளத்தில் 50 அல்லது 100 சதவிகித மானியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அரசாங்கம் சுற்றுலா தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எந்த மானியமும் வழங்காத அதேவேளை, மரணமடைந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த நட்ட ஈடும் வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

தொழிலாளர்களை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கு எந்த அரசாங்கமும் முதலாளித்துவக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தயாராக இல்லை என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை பேணுவதன் மூலம் இந்திய துணைக் கண்டத்தில் ஆதிக்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம், கொரோனா பாதிப்பினால் எழுச்சியடையும் வெகுஜனப் பகைமையை திசைதிருப்பிவிடுவதற்காக சீன-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சாரத்தை ஸ்ராலினிச சிபிஐ, சிபிஏம் உட்பட எதிர்கட்சிகளும் மௌனமாக ஆதரிக்கின்றன.

தமிழகத்தின் எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் துன்பங்களை தேர்தல் நலன்களுக்காக பயன்படுத்திக்கொண்டிருப்பதோடு, அந்த எதிர்ப்புகளை தேசியவாத பாதையில் திசை திருப்பிவிடுவதற்காக ”ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகத்தை தூக்கிப் பிடிக்கின்றது.

தமிழ்நாட்டுத் தொழிலாளர்களும் மற்ற மாநில மற்றும் சர்வதேச தொழிலாளர்களும் ஐக்கிய்படுவதை தடுப்பதற்காக நாம் தமிழர் கட்சி, தமிழ் பேரியக்கம் போன்ற பல்வேறு மொழிவாத, இனவாத, சாதிய மற்றும் பிராந்திய கட்சிகளும் முழுமூச்சாக செயல்பட்டுவருவதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தெற்காசிய பிராந்திய மூலோபாய நலன்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டுவருகின்றன.

கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு முதலாளித்துவ அமைப்பும் இலாயக்கற்றுள்ள நிலையில், கொரோனாவை தடுக்க சர்வதேச தொழிலாளவர்க்கத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியமாகும். அனைத்து மட்டங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் தரமான சம்பளம், சிறந்த வேலை நிலைமை மற்றும் பணி நிரந்தரம் கோரியும், அதிக நேர வேலை மற்றும் வேலை அழிப்புக்கும் எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சர்வதேச தொழிலாளர்களுடன் இந்திய தொழிலாளர்களும் ஐக்கியப்பட்டு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தை தூக்கி வீசி, ஆட்சி அதிகாரத்தை தொழிலாளர்கள் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே தொற்று நோய், உலக யுத்தம் உட்பட பேரழிவுகளை தடுக்க முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் தலைமையிலான சோசலிச சமத்துவக் கட்சிகள் (சோ.ச.க.) மட்டுமே இந்த முன்நோக்குக்காகப் போராடி வருகின்றன. இந்தியாவில் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைப்பதற்கான போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கு இன்றியமையாததாகும்.

Loading