ட்ரம்பின் மத்திய கிழக்கு உடன்படிக்கையும், முதலாளித்துவ தேசியவாதத்தின் முட்டுச்சந்தும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய இரண்டு அரபு முடியாட்சி சர்வாதிகாரங்களை ஒருங்கிணைந்து கொண்டு வந்து, பாசாங்குத்தனமாக "ஆப்ரகாம் உடன்படிக்கைகள்" என்று முத்திரை குத்தப்பட்ட உடன்படிக்கைகளில் இஸ்ரேலுடன் கையெழுத்திடப்பட்ட நிகழ்வான, செவ்வாய்கிழமை வெள்ளை மாளிகையின் தென்பகுதி புல்வெளியில் ட்ரம்ப் நிர்வாகம் நடத்திய வெறுப்பூட்டும் நிகழ்வு, தசாப்தங்களாக அரபு முதலாளித்துவத்தால் நடத்தப்பட்ட சங்கிலித்தொடர் போன்ற காட்டிக்கொடுப்புகளில் இன்னுமொரு பிணைப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ட்ரம்பின் முயற்சிக்கு மத்தியில், இது அமெரிக்காவையே உள்நாட்டு போரின் விளிம்பில் கொண்டு வர அச்சுறுத்தி வருகின்ற நிலையில், மொத்தம் ஐந்து பத்திகள் நீளத்திலிருந்த அந்த "ஆப்ரகாம் உடன்படிக்கைகளில்" “டொனால்ட் ஜெ. ட்ரம்ப்" என்ற பெயர் மீண்டும் மீண்டும் நான்கு முறை குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், யார் மத்திய கிழக்கு சமாதானத்திற்கான பாதுகாவலர் என்பதை எவரொருவரும் மறந்து விட முடியாது.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாஹூவைப் பொறுத்த வரையில், வாஷிங்டனுக்கான இந்த விஜயம் இஸ்ரேலில் படிப்படியாக அதிகரித்து வரும் நெருக்கடியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஓர் ஆரம்பமாக சேவையாற்றியது. அவரே கூட மோசடி மற்றும் இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமான உடனடி குற்றப்பத்திரிகையை முகங்கொடுக்கின்ற நிலையில், இஸ்ரேல், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களிலும், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய போராட்டங்களிலும் சிக்கி உள்ளது.

கையெழுத்திட்ட அரபு அரச பிரதிநிதிகளைப் பொறுத்த வரையில், ட்ரம்ப் முன்னால் அடிபணிந்து உரசிக் கொள்வது அதிகரிக்கப்பட்ட அமெரிக்க பாதுகாப்பு உதவிகளுக்கு செலுத்தும் விலையை விட அவர்கள் செலுத்த விரும்பும் அதிக விலையாகவும், F-35 போர்விமானங்கள் உட்பட அதிநவீன இராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது.

மத்திய கிழக்கில் அவர்கள் "சமாதானத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க" இருப்பதாக அந்த "உடன்படிக்கைகள்" பிரகடனம் செய்தன. என்னவொரு கேலிக்கூத்து! வளைகுடா எண்ணெய்வள சுன்னி ஷேக் ஆட்சிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை முறைப்படுத்துவது என்பது தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்தையும் மற்றும் அப்பிராந்தியத்தில் சீனா மற்றும் ரஷ்யா இரண்டினது செல்வாக்கைப் பின்னுக்கு இழுப்பதையும் நோக்கமாக கொண்ட, உலக-பேரழிவு போராக இருக்கக்கூடிய ஒன்றுக்குத் தயாரிப்பு செய்ய, ஈரானிய-விரோத அச்சை உருவாக்குவதற்கான வாஷிங்டன் மூலோபாயத்தின் பாகமாக உள்ளது.

மத்திய கிழக்கில் அமைதி நிலவச் செய்வதற்கான விருப்பம் என்பதைப் பொறுத்த வரையில், வரலாற்றுரீதியில் அது இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் 4.75 மில்லியன் பேர், இஸ்ரேலிலேயே கூட இரண்டாந்தர குடிமக்களாக வாழும் அண்மித்து இரண்டு மில்லியன் பேர் மற்றும் அண்டைப் பகுதி நாடுகளின் அகதி முகாம்களில் சிதறிக் கிடக்கும் இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் மற்றும் பரந்தளவில் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் என இவர்கள் உள்ளடங்கலாக, குறைந்தபட்சம் சம்பிரதாயமாகவேனும், பாலஸ்தீனர்களின் தலைவிதியைத் தீர்ப்பதன் மீது தங்கியுள்ளது.

உலக ஏகாதிபத்தியம் மற்றும் அரபு முதலாளித்துவ ஆட்சிகளைப் பொறுத்த வரையில், பாலஸ்தீன பிரச்சினையானது இனிமேல் முற்றிலும் ஒரு பிரச்சினையாக கருதப்படவில்லை என்பதை இஸ்ரேலிய-எமிரேட்-பஹ்ரைன் உடன்படிக்கை தெளிவுபடுத்துகிறது. சவுதி அரேபியாவில் வரையப்பட்ட அரபு சமாதான உடன்படிக்கை என்று குறியீட்டு பெயர் கொண்ட இந்த புனைவுடன், அரபு நாடுகளுக்கும் டெல் அவிவ் க்கும் இடையே உறவுகளை "வழமையாக்குவது" என்பது 1967 போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து அது பின்வாங்க செய்வதையும் மற்றும் "இரண்டு அரசு தீர்வு" என்றழைக்கப்பட்ட பாலஸ்தீன அரசு ஸ்தாபிதத்தை அனுமதிப்பதையும் சார்ந்துள்ளது என்பதற்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

இந்த "வழமைப்படுத்தும்" நிகழ்வுபோக்கு ஒரு நீண்ட மற்றும் கசப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது. செவ்வாய்கிழமை ட்ரம்பின் "சமாதான" கேலிக்கூத்து, எகிப்திய ஜனாதிபதி அன்வர் அல்-சதாக்கிற்கும் இஸ்ரேலிய பிரதம மந்திரி மெனசெம் பெகினுக்கும் இடையே செப்டம்பர் 1978 இல் கையெழுத்தான காம்ப் டேவிட் உடன்படிக்கைகள் உட்பட, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த முந்தைய உடன்படிக்கைகளை நினைவுக்குக் கொண்டு வந்தது. காம்ப் டேவிட் உடன்படிக்கைகள் இஸ்ரேலின் நடுநிலைமைக்கு உத்தரவாதம் வழங்கியதுடன், பாலஸ்தீனர்களுடனான அதன் மோதல்களில் அரபு உலகின் மிகப்பெரும் அந்நாட்டின் முற்றுமுழுதான ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தியது.

இதை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர், பாலஸ்தீன விடுதலை இயக்க (PLO) தலைவர் யாசர் அராபத் மற்றும் இஸ்ரேலிய பிரதம மந்திரி யெட்சக் ராபினுக்கும் இடையே செப்டம்பர் 1993 இல் வெள்ளை மாளிகை புல்வெளியில் ஓஸ்லோ உடன்படிக்கைகள் கையெழுத்தாகின. இதில் நீண்ட காலமாக PLO ஐ அடையாளப்படுத்தி வந்த ஆயுதமேந்திய பாலஸ்தீன சுதந்திர போராட்டத்தைக் கைவிட்டு, அராபத், இஸ்ரேலை அங்கீகரிக்கவும், அதன் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் உடன்பட்டார்.

இது அண்மித்து மூன்று தசாப்த கால "சமாதான நிகழ்முறையை" தொடங்கி வைத்தது, இது பரந்தளவிலான இஸ்ரேலிய குடியமர்வு விரிவாக்கத்தையும் மற்றும் மேற்கு படுகையில் பாலஸ்தீன நிலத்தைக் கொள்ளையடித்ததையும் மற்றும் அடுத்தடுத்து நடந்த இரத்தந்தோய்ந்த போர்களையும் மற்றும் காசாவின் திறந்த வெளி சிறைச்சாலையில் 1.8 மில்லியன் பாலஸ்தீனர்களுக்கு எதிராக தண்டிக்கும் வகையிலான முற்றுகையையும் மூடிமறைக்க சேவையாற்றி உள்ளது.

ஓஸ்லோ உடன்படிக்கைகளின் கீழ், பாலஸ்தீன விடுதலை இயக்கம் அரசியல் பயங்கரம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டது, இதில் 2004 இல் சர்ச்சைக்குரிய அராபத் மரணத்தில் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்முறையை பாலஸ்தீன ஆணையம் நடத்தியதாக அறியப்படுகிறது. அவரை அடுத்து வந்த மஹ்மத் அப்பாஸ், 15 ஆண்டுகளுக்கு பாலஸ்தீன ஆணையத்தின் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதியாக சேவையாற்றி உள்ளதுடன், கிடைத்த உதவி பிரதியீடுகளைக் கொண்டு பாலஸ்தீன முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சிறிய அடுக்கைச் செல்வ செழிப்பாக்க சேவையாற்றும், அதேவேளையில் இஸ்ரேலிய மற்றும் ஏகாதிபத்திய நலன்களுக்காக மேற்கு படுகை மக்களை ஒடுக்குவதற்கான இன்றியமையா துணை பொலிஸ் படையை வழங்கும் ஓர் ஆட்சியை நடத்தி வருகிறார்.

இஸ்ரேலினால் எதிர்த்து ஈடுகொடுக்க முடியாதளவிற்கு பத்தாயிரக் கணக்கான பாலஸ்தீனர்களை கொண்டிருந்த, முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களிலேயே மிகவும் தீவிரமாக இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இந்த மாற்றம், எண்ணற்ற தியாகங்கள் மற்றும் அதன் தலைவர்களின் படுகொலைகளின் கீழ் நடந்ததுடன், மத்திய கிழக்கு எங்கிலும் ஒடுக்கப்பட்ட பெருந்திரளான மக்களால் ஈர்க்கப்பட்டு, ஒரு உலகளாவிய நிகழ்வுபோக்கின் பாகமாக இருந்தது.

மத்திய கிழக்கின் நாசரிசம் (Nasserism) மற்றும் பாத்திசத்தில் (Ba’athism) இருந்து, ஆபிரிக்கா எங்கிலுமான ஆப்ரிக்காவிசம் மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் பெரோனிசம், காஸ்ட்ரோயிசம் மற்றும் சாண்டினிஸ்மோ வரையில், 1950 களில் இருந்து 1970 கள் வரையில் செல்வாக்கு பெற்று விளங்கிய எல்லா தேசிய இயக்கங்களும், சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான புரட்சிகர தலையீட்டையும் ஒடுக்குவதன் மூலமாக சில பிரத்யேக அபிவிருத்தி கட்டத்தை எட்ட முடியும் என்று தேசிய விடுதலையை முன்னெடுத்த இவை, திவாலானவை என்பதை நிரூபித்துள்ளன. தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மாற்றீடாக குட்டி முதலாளித்துவ மற்றும் விவசாயிகளை அடிப்படையாக கொண்ட தேசிய விடுதலை இயக்கங்களின் ஸ்ராலினிச, மாவோயிச மற்றும் பப்லோயிச திரித்தல்வாதத்திற்குச் சார்பானவர்களும் இவ்வாறே ஆகியுள்ளனர்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சரணடைவும் தன்னிலை மாற்றமும், பல்வேறு அரபு முதலாளித்துவ ஆட்சிகள் உடனும் அத்துடன் மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துடனும் அதன் தலைமை ஏற்படுத்தி கொண்ட பாஸ்டியன் பேரம்பேசல்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு நீண்ட கால இரத்தந்தோய்ந்த காட்டிக்கொடுப்புகளின் மீது தயாரிக்கப்பட்டிருந்தது. அவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட பெரிதும் பொறுப்பற்ற ஆதரவானது அரபு உலகின் பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே PLO இன் எந்தவொரு புரட்சிகர முறையீட்டையும் நிபந்தனைக்கு உட்படுத்தி இருந்தது.

பாலஸ்தீனர்களின் அரபு ஆதரவாளர்கள் மற்றும் "சகோதரர்களின்" கரங்களுக்குப் பின்னால் முடிவில்லாமல் வழிவழியாக முதுகில் குத்தியதே இதன் விளைவாக இருந்தது. இது ஜோர்டான் முடியாட்சியால் பாலஸ்தீனர்களின் 1970 “கருப்பு செப்டம்பரில்" இருந்து, 1975 இல் காரண்டினா மற்றும் டெல் அல்-ஜாதாரில் பாலஸ்தீனர்களின் லெபனிய பாலாஞ்சிஸ்ட் படுகொலைக்கு சிரிய ஆதரவு வரையில், மற்றும் லெபனானில் இருந்து PLO ஐ வெளியேற்ற 1982 இல் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய தாக்குதலை அனுமதிப்பதில் அரபு ஆட்சிகள் அனைத்தினதும் மற்றும் சிரியாவும் உடந்தையாய் இருந்தமை வரையில் நீண்டிருந்தது.

வெவ்வேறு அரபு ஆட்சிகளுக்கும் வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு இடையிலான பனிப்போர் மோதல்களைப் பயன்படுத்துவதற்கும் இடையே உபாயங்களை மேற்கொண்டு உயிர்பிழைப்பதை அடிப்படையாக கொண்டிருந்த PLO இன் முயற்சிகள், உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த மாற்றங்களால் பேராபத்தாக குழிபறிக்கப்பட்டன, அவை இதன் இராணுவத் தோல்வியுடன் பொருந்தி இருந்தது.

1982 லெபனான் படையெடுப்பானது, 1960 கள் மற்றும் 1970 களின் உலகளாவிய பாரிய போராட்டங்களினது காட்டிக்கொடுப்புகள் மற்றும் தோல்விகளால் சாத்தியமாக்கப்பட்ட ஓர் உலகளாவிய எதிர்தாக்குதலின் பாகமாக இருந்தது. இதற்கிடையே முதலாளித்துவ உற்பத்தியின் உலகளாவிய ஒருங்கிணைப்பு அதிகரித்து வந்த நிலையில், அது PLO எதை சார்ந்திருந்ததோ அந்த சக்திகளுடனான உறவை முறித்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்டமைப்புவாத கொள்கையும் மற்றும் இறுதியில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையும் தேசியவாத அரபு ஆட்சிகள் என்று கூறப்பட்டவை ஏகாதிபத்தியத்துடன் இன்னும் நெருக்கமான கூட்டுறவை நோக்கி கூர்மையாக திருப்பம் எடுப்பதை உள்ளடக்கி இருந்ததுடன், ஈராக்கிற்கு எதிரான 1991 அமெரிக்க போருக்கு அவற்றின் பல ஆட்சிகள் வழங்கிய ஆதரவில் பூரணமடைந்தது.

இந்த நிகழ்வுபோக்கு, ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே தன்னியல்பான கிளர்ச்சியான முதல் பாலஸ்தீன புரட்சியின் (intifada) வெடிப்பைக் கொண்டு வந்தது. இந்த கிளர்ச்சி, சுயாதீனமாகவும் மற்றும் PLO தலைமைக்கு எதிர்ப்பின் மீதும் அபிவிருத்தி அடைந்த நிலையில், அடிமட்டத்திலிருந்து அதுபோன்றவொரு போராட்டம் ஏகாதிபத்தியத்துடனான கூட்டுறவில் ஒரு சுதந்திர முதலாளித்துவ அரசை ஸ்தாபிப்பதற்கான அதன் திட்டத்தைப் பேராபத்திற்கு உட்படுத்தும் என்று PLO தலைமை அஞ்சியது.

இந்த முதலாளித்துவ தேசியவாத திட்டம் முற்றிலும் ஒரு முட்டுச்சந்தை எட்டியுள்ளது. ஓஸ்லோ உடன்படிக்கைகள் கையெழுத்தானதில் இருந்து பல ஆண்டுகளாக இஸ்ரேலிய "மண்ணின் உண்மைகள்" ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியேற்றங்களின் இடைவிடாத அதிகரிப்பையும், நேரடி இஸ்ரேலிய கட்டுப்பாட்டுக்கு வெளியே மேற்குப் படுகையில் என்ன சொச்சமிச்சம் எஞ்சியிருந்ததோ அவற்றை சுவர்கள், பாதுகாப்பு சாலைகள், காசா மற்றும் ஜெருசலேமைப் பிரிக்கும் எண்ணற்ற சோதனைச் சாவடிகள் ஆகியவை பிரிக்கப்பட்டதும் அதில் உள்ளடங்கும். பன்டுஸ்தான் பாணியிலான "சுதந்திர" அரசை துண்டாடி பெருவது, பெருந்திரளான பாலஸ்தீனர்களின் கடுமையான நிலைமைகளை மேம்படுத்தும் என்ற கருத்துரு இன்று அப்பட்டமாக அர்த்தமற்றதாக உள்ளது.

ஜூலை 1939 இல், ஸ்ராலினிச படுகொலையாளி ஒருவரின் கரங்களில் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில், மாபெரும் ரஷ்ய புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி இந்திய காங்கிரஸ் கட்சியின் முதன்மை தேசியவாத இயக்கம் குறித்து தீர்க்கதரிசனமாய் எழுதினார் (அக்கட்சியிடமிருந்து தான் தென் ஆபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதன் பெயரை ஏற்க இருந்தது):

இந்திய முதலாளித்துவம் ஒரு புரட்சிகர போராட்டத்திற்குத் தலைமை கொடுக்க தகைமையற்றது. அவர்கள் பிரிட்டிஷ் முதலாளித்துவத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளதுடன், அதைச் சார்ந்துள்ளனர். அவர்களின் சொந்த சொத்துக்களுக்காக அவர்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெருந்திரளான மக்களைக் குறித்த அச்சத்தில் நிற்கிறார்கள். உயர்மட்டத்திலிருந்து சீர்திருத்தங்கள் மீதான நம்பிக்கையுடன் என்ன விலை கொடுத்தாவது இந்திய மக்களைத் தணித்து வைக்க அவர்கள் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்துடன் சமரசங்களைக் கோருகின்றனர். இந்த முதலாளித்துவத்தின் தலைவரும் ஆன்மீகத் தலைவரும் தான் காந்தி ஆவார். ஒரு போலித் தலைவர், ஒரு மோசடி ஆன்மீகவாதி.

1930 களில் ட்ரொட்ஸ்கியால் அம்பலப்படுத்தப்பட்ட காலனி நாடுகளின் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் இந்த தன்மை அடுத்தடுத்து, மத்தியக் கிழக்கு, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் அபிவிருத்திகளிலும் பல துயரகரமான விடயங்களிலும் முற்றிலும் வெளிப்பட்டுள்ளது.

அரபு முதலாளித்துவவாதிகளின் சமீபத்திய காட்டிக்கொடுப்புகள் உட்பட வரலாற்று அனுபவமானது, அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சியை வழநடத்திய ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்திற்கு மறுக்கவியலாத நிரூபணத்தை வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் காலந்தாழ்ந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும், முந்தைய வரலாற்று சகாப்தத்தில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் இணைந்திருந்த ஜனநாயக மற்றும் தேசிய கடமைகளை, ஒரு சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக புரட்சிகரமாக அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்பதை அது ஸ்தாபித்து காட்டியது.

பாலஸ்தீன மக்களின் விடுதலையும் மத்தியக் கிழக்கில் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ள ஊனமாக்கி உள்ள ஏகாதிபத்திய போர்களுக்கு முடிவுக் கட்டுவதும் ஏகாதிபத்திய மத்தியஸ்தம் செய்யும் "சமாதான" பேரம்பேசல்கள் மூலமாகவோ அல்லது "இரண்டு அரசு தீர்வு" என்ற கற்பனை மூலமாகவோ எட்ட முடியாது. உலகெங்கிலும் முதலாளித்துவத்தை முடிவு கட்டுவதற்கான போராட்டத்தின் பாகமாக மத்தியக் கிழக்கின் சோசலிச கூட்டாட்சிக்கான ஒரு பொதுவான போராட்டத்தில் அரபு, யூத மற்றும் ஈரானிய தொழிலாளர்களைச் சுயாதீனமாக அணித்திரட்டுவதிலும் ஐக்கியப்படுத்திலும் மட்டுமே ஒரே முன்னோக்கிய பாதை உள்ளது.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று

[16 May 1998]

Loading