பாதுகாப்பற்ற வகையில் வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டியிருப்பதை எதிர்த்து கிரீஸ் எங்கிலுமுள்ள பள்ளிகளை மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாதுகாப்பற்ற வகையில் வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டியிருப்பதை எதிர்த்து, கடந்த வாரம், கிரேக்கத்தின் பல நகரங்களிலும் மற்றும் தீவுகளிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளனர்.

கர்திட்சா (Karditsa) மற்றும் அக்ரினியோ (Agrinio) நகரங்களிலுள்ள பள்ளிகள் முன்னரே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. கர்திட்சாவில் மேல்நிலைக் கல்வி இயக்குநர் தெரிவித்தபடி, நகரிலுள்ள ஐந்து பொது சொற்பொழிவுக் கூடங்களில் (General Lyceums) நான்கு கடந்த புதனன்று ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. அத்துடன், கர்திட்சாவில் உள்ள இரண்டு தொழிற்கல்விக் கூடங்களையும் (Vocational Lyceum – EPAL) மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

திங்களன்று, தேசிய அளவில் டசினுக்கும் மேற்பட்ட பள்ளிகள் போராட்டங்களில் இணைந்துகொண்டன; இந்நிலையில் செவ்வாய்க்கிழமைக்குள், தேசிய அளவில் 100 க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்தன.

இந்த கோடையில் கிரேக்கத்தில் வைரஸ் நோய்தொற்று மறுஎழுச்சி கண்டபோதிலும் —சுற்றுலா காலத்தை தொடருவதற்கு அனுமதித்த கொலைகார முடிவால் தீவிரப்படுத்தப்பட்டது— பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸின் (Kyriakos Mitsotakis) வலதுசாரி புதிய ஜனநாயக அரசாங்கம் செப்டம்பர் 14 அன்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் வகுப்பறைகளுக்கு திருப்பி அனுப்பியது. இதனால், கிரேக்கத்தின் 10 மில்லியன் மக்கள்தொகையில் பெரும்பகுதியினராகவுள்ள 557,516 க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், மேல்நிலைப் பள்ளிகளின் 64,000 நிரந்தர ஆசிரியர்களும் ஆபத்தில் உள்ளனர். பள்ளிக்கு மீண்டும் திரும்பும் இந்த நடவடிக்கை தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான சிரிசா-முற்போக்குக் கூட்டணி (Syriza-Progressive Alliance) ஆகியவற்றின் எவ்வித எதிர்ப்புமின்றி தொடரப்பட்டது.

ஆக்கிரமிப்பு செய்துள்ள மாணவர்களின் சில கோரிக்கைகள் அடங்கிய ஒரு பதாகை பள்ளியின் வேலியில் வைக்கப்பட்டுள்ளது. இதில், “வகுப்பிற்கு 15 மாணவர்களுக்கு மேலாக இருக்கக்கூடாது, கல்விக்கு பணம் கொடுங்கள், எங்களால் செலவு செய்ய முடியாது!” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. (Credit: Pantelis Paspals/Facebook)

ஒரு வாரத்திற்குள்ளாக, இந்த பேரழிவுகரக் கொள்கை, பள்ளி அமைப்பு மூலம் கோவிட்-19 நோய்தொற்றை வெடித்து பரவ அனுமதித்தமை குறைந்தது 59 பள்ளிகளை மூடுவதற்கு இட்டுச் சென்றது. பள்ளி செயல்படுவதைத் தடுக்க, குறைந்தபட்சம் மூன்று கொரோனா வைரஸ் நோயாளிகள் —அதாவது ஒருவருக்கொருவர் நேரடி தொடர்பில் இல்லாத நபர்கள்— அடையாளம் காணப்பட வேண்டும்.

453 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் இருப்பதாகவும் மற்றும் ஆறு இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் திங்களன்று அறிவித்து தேசியளவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இது பங்களிப்பு செய்தது. மேலும் செவ்வாயன்று, 346 புதிய கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்களும் (இதில் அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்தியமான அட்டிக்காவைச் சேர்ந்த 210 பேர் அடங்குவர்) மற்றும் 8 இறப்புக்களும் பதிவாகின. இவர்களில் எழுப்பதேழு பேருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இது மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை 15,928 ஆகவும், மொத்த இறப்புக்களை 352 ஆகவும் அதிகரிக்கச் செய்துள்ளது.

உயர்நிலைப் பள்ளிகளை ஆக்கிரமிக்கும் மாணவர்களின் கோரிக்கைகள், வகுப்பறைக் குழுக்களில் அதிகபட்சம் 15 மாணவர்கள் இருக்கும் வகையில் கட்டுப்படுத்துவது; காலியிடங்களை நிரப்ப உடனடியாக அதிக எண்ணிக்கையில் வாடகைக்கு ஆசிரியர்களை பணியமர்த்துவது; நிரந்தர துப்புரவுப் பணியாளர்களை வாடகைக்கு பணியமர்த்துவது; மற்றும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளபடி, இணையவழி கற்றலுக்காக பள்ளிகளில் புகைப்படக் கருவிகள் பொருத்தப்படக்கூடாது; ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒரு பள்ளியில் மாணவர்கள் வைத்திருந்த ஒரு பதாகை இவ்வாறு தெரிவித்தது: “வகுப்பிற்கு 15 மாணவர்களுக்கு மேலாக இருக்கக்கூடாது, கல்விக்கு பணம் கொடுங்கள், எங்களால் செலவு செய்ய முடியாது!”

ஆரம்பப் பள்ளிகளின் வகுப்புக்களும் மற்றும் மேல்நிலைப் பள்ளியின் கடைசி வகுப்பும் அதிகபட்ச அளவாக 25 மாணவர்களைக் கொண்டு கல்வியூட்டலைத் தொடர அரசாங்கம் அனுமதிக்கிறது. ஏனைய மேல்நிலைப் பள்ளி வகுப்புக்களில் அதிகபட்ச எண்ணிக்கையாக 27 பேர் கல்வி பயில வேண்டும். இந்த எண்ணிக்கை வழமையாகவே மீறப்படுகின்றன. Efimerida Ton Syntakton நாளிதழ், கல்வி அமைச்சகத்தின் சொந்த புள்ளிவிபரங்கள் அனைத்து ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் 52 சதவிகிதம் பேர், 21 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள வகுப்புக்களில் கல்வி பயில்வதை காட்டுவதாக இந்த மாதம் தொடக்கத்தில் தெரிவித்தது. மேலும், 30 மற்றும் 31 மாணவர்களைக் கொண்ட வகுப்புக்கள் இருப்பதும் பதிவாகியுள்ளது.

மேலும், அனைத்து மாணவர்களில் 74 சதவிகிதம் பேர் (அதாவது 1.35 மில்லியனில் 1 மில்லியன் பேர்) 18 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புக்களில் கல்வி பயிலுகின்றனர் என்றும், 52 சதவிகித மாணவர்கள் (அதாவது 700,000 பேர்) 21 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புக்களில் கல்வி பயிலுகின்றனர் என்றும் இது தெரிவித்தது.

இந்த வாரம், கிரேக்கத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான தெசலோனிகியில் (Thessaloniki) உள்ள 40 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பறைகளை ஆக்கிரமித்தனர். இணையவழி அழைப்பு விடுக்கப்பட்டதன் பின்னர், N. பெட்ரிட்ஸி (N.Petritsi) மற்றும் லெஃப்கோனாஸில் (Lefkonas) சேர்ந்துள்ள உடற்பயிற்சிக்கூட மாணவர்களுடன் செரெஸ் (Serres) மற்றும் சிடிரோகாஸ்ட்ரோவில் (Sidirokastro) உள்ள மாணவர்களும் சேர்ந்து இவர்களுடன் இணைந்து கொண்டனர். இளைய உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சிடிரோகாஸ்ட்ரோ சொற்பொழிவுக் கூடத்தில் உள்ள தங்களது பழைய பள்ளித் தோழர்களுடன் இணைந்து கொண்டனர் என்று ERT தெரிவித்துள்ளது. N. பெட்ரிட்ஸி மற்றும் லெஃப்கோனாஸில் உள்ள இளைய மாணவர்களும் போராட்டங்களில் இணைந்ததாக Protothema தெரிவித்துள்ளது.

வோலோஸ், நியா அயோனியா, அக்ரினியோ, காவலா மற்றும் அச்சாயாவில் உள்ள பள்ளிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பத்ரா வழியாக மாணவர்கள் அணிவகுத்துச் சென்ற நிலையில், திங்களன்று அச்சாயா பகுதியில் உள்ள 39 பள்ளிகள் ஆக்கிரமிப்பில் இருந்தன.

திங்களன்று மேற்கு கிரேக்கத்தின் இலியா பிராந்தியத்தில் மூன்று பள்ளிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன, அத்துடன் செவ்வாய்க்கிழமை காலை தலைநகர் பிர்கோஸிலும் (Pyrgos), மேலும் குறைந்தது ஏனைய நான்கு பகுதிகளிலும் உள்ள 13 க்கும் மேற்பட்ட பள்ளிகளும் ஆக்கிரமிக்கப்பட்டன.

கிரேக்கத்தின் மிகப்பெரிய தீவான கிரீட்டில் உள்ள டசின் கணக்கான பள்ளிகளில் ஆக்கிரமிப்புக்கள் வெடித்தன. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தலைநகர் ஹெராக்லியனில் (Heraklion) உள்ள 14 பள்ளிகள் பாதிப்புக்குள்ளாகியதுடன், சானியா (Chania) மற்றும் ரெதிம்னோ (Rethymno) நகரங்களில் உள்ள பள்ளிகளிலும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்தன. சானியாவில், இரண்டு பள்ளிகளின் பிரதி ஆண்டுக் குழு, பொது சொற்பொழிவுக் கூடம், மற்றும் உயர்நிலைப் பள்ளி உட்பட குறைந்தது ஒன்பது பள்ளிகள் பாதிப்புக்குள்ளாகின.

தெசலோனிகியில் நிலவும் கல்வியின் மோசமான நிலை எதிர்ப்புக்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சுயாதீன செய்தி தளமான Press Project தெரிவித்துள்ளது. அங்கு அடித்தளங்களில் அமைந்துள்ள காற்றோட்ட வசதிகளில்லாத அறைகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயில வேண்டியுள்ளது.

ஒரு ஆரம்பப் பள்ளியுடன் அமைந்துள்ள கோர்டெலியோ (Kordelio) உயர்நிலைப் பள்ளியில், பள்ளியின் அடித்தளத்தில் அமைந்துள்ள இரண்டு அறைகள் கல்வி கற்க ஏற்றவை அல்ல என்று கருதப்படுவதால், பள்ளியின் முற்றத்தில் கல்வி கற்க மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

EPAL அமைப்பு முழுவதும் மற்றும் பெரும்பாலும் மேற்கு தெசலோனிகியின் உடற்பயிற்சிக் கூடங்களிலும் மற்றும் பொது சொற்பொழிவுக் கூடங்களிலும் வகுப்பு அளவுகளின் வரம்பு 25 முதல் 27 வரை உள்ளது.

பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் நுழைந்தவுடன் நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் சில நேரங்களில் பேருந்துகளில் நீண்டதூரம் பயணித்து பள்ளிக்கு வருகிறார்கள் என்ற நிலையில், அது வைரஸ் நோய்தொற்று பரவுவதற்கான அதிக வாய்ப்புக்களை உருவாக்குகிறது. EPAL Evosmos பள்ளியில் சேர முடியாத குழந்தைகள் பேருந்து மூலம் கோர்டெலியோவுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், EPAL ஸ்டாவ்ரூபோலிஸில், அதிகபட்ச நெரிசல் கொண்ட வகுப்புக்களைச் சேர்ந்த 1,200 மாணவர்கள் பள்ளியின் முற்றத்தில் ஒன்றாக அமர்ந்து பயில வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Press Project இவ்வாறு தெரிவித்தது: “டயாவாடாவில், மாணவர்கள் தொழிற்கல்வி உயர்நிலைப் பள்ளிக்கு (EPAL), அல்லது பொது உயர்நிலைப் பள்ளிக்கு (GEL) என எங்கு செல்வதானாலும், அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே எழுந்திருக்க வேண்டும் என்பதுடன், அந்த நேரத்தில் உள்ளூர் தொழிற்சாலைகளில் பணிபுரியச் செல்லும் தொழிலாளர்களுடன் சேர்ந்து பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலையில் மாணவர்கள் தங்களை நெரிசலுக்கிடையில் திணித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஏனென்றால், மிக அருகில் உள்ள பள்ளிகள் கூட ஒன்று அல்லது இரண்டு கிராமங்கள் தொலைவில் உள்ளது.”

Ampelokipi இல் உள்ள மற்றொரு EPAL பள்ளியில், தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் கூட, ஒட்டுமொத்த பள்ளியையும் சுத்தம் செய்ய ஒரேயொரு துப்புரவுப் பணியாளர் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அதிலும் சிலர் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்துவதை எதிர்க்கின்றனர். கிரேக்கத்திலும் மற்ற நாடுகளைப் போல, ஒரு சிறிய, திசைதிருப்பப்பட்ட பிரிவினர் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர், அதேவேளை மாணவர்களோ, நெரிசலான, பாழடைந்துள்ள, மற்றும் காற்றோட்ட வசதிகளில்லாத பள்ளிகளில் தமக்கு தாமே பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது போதாது என்ற அடிப்படையில் அவர்களை எதிர்க்கின்றனர்.

“உரிய உள்கட்டமைப்பு வசதியும் தடுப்பு நடவடிக்கைகளும் இல்லாத பட்சத்தில் முகக்கவச பயன்பாடு மட்டும் விரும்பிய நன்மையைத் தராது என்றே நாங்கள் நம்புகிறோம்,” என்று ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டாம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர் கூறியதை Tovima செய்தியிதழ் மேற்கோளிட்டுக் காட்டியது.

மேலும், அரசாங்கம் வழங்கும் இலவச முகக்கவசங்கள் தரம் குறைந்தவையாக உள்ளன என்பதுடன், பெற்றோர்களே தங்களது குழந்தைகளுக்கு முகக்கவசங்களை வாங்கித் தரும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். “பாராசூட் முகக்கவசங்களை” ஒத்த முகக்கவசங்களை அணிகையில், பார்ப்பதற்கு வசதியாக அவற்றில் துளைகள் போட வேண்டியுள்ளது. கிரேக்கத்தின் துணை சுகாதார அமைச்சரான வஸ்ஸிலிஸ் கொன்டோசமனிஸ் (Vassilis Kontozamanis), “அரசாங்கத்திற்கும் ஒப்பந்தக்காரருக்கும் இடையில் தவறான புரிதல் ஏற்பட்டதால்” வரிசெலுத்துவோர் செலவில் பயன்படுத்த இயலாத 500,000 முகக்கவசங்களை அரசாங்கம் வாங்கி விநியோகிக்க நேரிட்டது என்று தெரிவித்தார்.

ஆக்கிரமிப்புக்களை அரசாங்கம் அடக்குமுறை கொண்டு நசுக்கி வருகிறது. திங்களன்று, சிறார் வழக்குறைஞரான டிமிட்ரா சியார்டக்லி (Dimitra Tsiardakli), தெசலோகினி மாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பள்ளிகளை குறிவைப்பதன் மூலம் பொது சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க காவல்துறைக்கான ஒரு உத்தரவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த உத்தரவு தெசலோகினியின் பொது காவல் இயக்குநரகம் மற்றும் உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிப்பதிலிருந்து பின்வாங்கச் செய்ய, மாணவர்களுக்கும் அதே அபராதங்களை விதிக்க கவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை, ஏதென்ஸூக்கு அருகிலுள்ள அட்டிக்காவின் பைரஸ் (Piraeus) பகுதிகளில் உள்ள கராட்சினியில் (Karatsini) உள்ள ஒரு பள்ளியில் 12 மாணவர்களை ஒரு மோட்டார் சைக்கிள் பொலிஸ் பிரிவு கைது செய்தது. கைது செய்வதற்கான உத்தரவு மத்திய பொலிஸ் தலைமையகத்திலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து பேசிய பின்னரே குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர்.

பைரஸில் நிகழ்த்தப்பட்ட கைது நடவடிக்கைகள் “கிரீட்டில் நிகழ்ந்த இதையொத்த சம்பவத்தைப் போல, வலுவான எதிர்வினைகளுக்கு வழிவகுத்தன; அங்கு சீருடை அணிந்த அதிகாரிகள் பள்ளிகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் பெயர்களை ஒப்படைக்க ஹெராக்லியனில் உள்ள பள்ளி முதல்வர்களிடம் கோரியதாக புகார்கள் வந்தன” என்று நேற்று Efimerida Ton Syntakton நாளிதழ் தெரிவித்தது.

கிரேக்கத்தின் இத்தகைய தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள், முதலாளித்துவ அரசாங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மீண்டும் பள்ளிக்குத் திரும்பச் செய்யும் உந்துதலால் சர்வதேச அளவில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே அதிகரித்துவரும் கோபத்திற்கு மத்தியில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் பெரும் எதிர்ப்பு வெடிக்கக் காத்திருக்கிறது. இந்நிலையில், கிரேக்கத்திற்கும் அதற்கு அப்பாலும், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேவையான அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்றால், அமெரிக்கா, ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உருவெடுத்துள்ள கல்வியாளர்களுக்கான சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் உலகளாவிய வலையமைப்பில் அவர்களும் இணைந்து, போராட்டத்திற்கான சுயாதீன அமைப்புக்களை உருவாக்குவதாகும்.

Loading