இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன், மஸ்கெலியா மற்றும் நானு ஓயா பிரதேசங்களில் உள்ள பல பெருந்தோட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தாங்கமுடியாத அளவிற்கு வேலை இலக்குகளை உயர்த்துவதன் மூலம் தோட்ட கம்பனிகள் முன்னெடுக்கும் ஊதிய மற்றும் கொடுப்பனவு வெட்டுக்களுக்கு எதிராக கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக உட ரதல்ல தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய மறியல் போராட்டம்

 

நிர்வாகத்தின் தாக்குதல்களை முழுமையாக அங்கீகரித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) மற்றும் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) உட்பட அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களையும் மீறியே தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.

* களனிவெளி பெருதோட்ட நிறுவனத்தின் கீழுள்ள நானு ஓயாவின் உட ரதல்ல தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 300 தொழிலாளர்கள் செப்டம்பர் 10 அன்று சம்பள வெட்டு மற்றும் தோட்டத்தின் குழந்தை பராமரிப்பு மையத்தின் இரண்டு நிரந்தர தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர்.

* மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழுள்ள மஸ்கெலியா ஸ்றெத்ஸ்பி தோட்டத்தின் அகரவத்த பிரிவில் 175 தொழிலாளர்கள் செப்டம்பர் 9 மற்றும் 10 திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

* ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்றெத்டன் தோட்டத்தின் செம்பகவத்த பிரிவில் 150 தொழிலாளர்கள் செப்டம்பர் 10 முதல் மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

* செப்டம்பர் 11 அன்று ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழுள்ள மஸ்கெலியா சாமிமலையின் கவரவில தோட்டத்தின் மூன்றாவது பிரிவில் நாறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்தம் ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் துரிதமாகப் பரவலாம் என்ற அச்சத்தில், இ.தொ.கா. மற்றும் NUW தொழிற்சங்கங்களின் தலைவர்கள், உடனடியாக தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். தற்போதைய ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ அரசாங்கத்தில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமானும் NUW தலைவரும் முன்நாள் தோட்ட உள்கட்டமைப்பு அமைச்சருமான பி. திகாம்பரமும் வேலை நிறுத்தங்களுக்கு முடிவுகட்டுவதற்காக தனிப்பட்ட முறையில் தலையிட்டுள்ளனர்.

“பெருந்தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி” பிரச்சினைகளை தீர்ப்போம் என்று கூறி, தொழிலாளர்களுக்கு பயனற்ற வாக்குறுதிகளை இரு அதிகாரிகளும் கொடுத்தனர்.

பெருந்தோட்ட நிர்வாகம் ஊதியங்களைக் குறைப்பதுடன் மேலும் உயர்ந்த உற்பத்தி விகிதங்களைக் கோருகிறது. உட ரதல்ல தோட்டத்தில், தினசரி தேயிலை பறிக்கும் இலக்கு ஒரு தொழிலாளிக்கு 18 கிலோ ஆகும். ஆனால் ஒரு பெண் தொழிலாளி “தினசரி இலக்கை விட ஒரு கிலோ குறைவாக பறித்தாலும் எங்களுக்கு அரை நாள் ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது, அதாவது 350 ரூபாய் [1.89 அமெரிக்க டாலர்] மட்டுமே கிடைக்கும்,” என ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

“இந்த அநியாய வேலை கோரிக்கைகள் குறித்து நாங்கள் உதவி தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தெரிவித்த போதிலும், யாரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை; அவர்கள் அனைவரும் தோட்ட நிர்வாகத்தை ஆதரிக்கிறார்கள்," என மற்றொரு தொழிலாளி கூறினார்.

ஸ்றெத்டன் தோட்டத்தில் தினசரி தேயிலை கொழுந்து பறிப்பதற்கான இலக்கு 19 கிலோவாகும். தொழிலாளர்கள் குறைந்தது 12 கிலோ பறிக்கத் தவறினால், தினசரி அடிப்படை ஊதியத்தில் பாதி, அதாவது 350 ரூபா மட்டுமே கிடைக்கும். ஹட்டன் உதவி தொழில் ஆணையாளருக்கும் தோட்ட நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில், இ.தொ.கா. மற்றும் NUW உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் பங்குபற்றி, ஊதியக் குறைப்புக்கு ஒப்புக் கொண்டதாக தொழிலாளர்கள் கூறினர். ஸ்றெத்ஸ்பி தோட்டத்தில் தினசரி கொழுந்து பறிக்கும் இலக்கு 18 கிலோ ஆகும்.

உட ரதல்ல தோட்டத் தொழிலாளர்கள் சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் பேசுகிறார்கள்

தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் இடையில் 2018 இல் கையெழுத்திடப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தத்தில், உற்பத்தித்திறன் மற்றும் சம்பள வெட்டுக்களுக்கான நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டன. இந்த நிபந்தனைகள் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தொழிற்சங்கங்களின் ஆதரவோடு பெருந்தோட்டக் கம்பனிகளால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கொழுந்து பறிக்கும் இலக்குகளை உயர்த்துவதன் மூலம் இந்தியா மற்றும் கென்யாவின் மட்டத்திற்கு தினசரி உற்பத்தி இலக்குகளை உயர்த்துவதற்கு இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்பார்கின்றன. பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின்படி, இலங்கையில் ஒரு தொழிலாளிக்கு சராசரியாக தினசரி தேயிலை கொழுந்து பறிக்கும் இலக்கு 18-20 கிலோ ஆகும். இந்தியா மற்றும் கென்யாவில் இது முறையே 40 மற்றும் 60 கிலோ ஆகும்.

தோட்டக் கம்பனிகளால் முன்மொழியப்பட்டு வரும் “வருமானப் பகிர்வு” அல்லது வெளியார் உற்பத்தி முறை, இலங்கையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு தோட்ட நிர்வாகங்கள் விடுத்து வரும் கோரிக்கைகளின் இன்னொரு அங்கமாகும். இதன் கீழ், சுமார் 1000-1500 தேசியலைச் செடிகள் அடங்கிய ஒரு நிலம் ஒரு உழைக்கும் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் அதைப் பராமரித்து கொழுந்து பறிக்க வேண்டும். உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களை கம்பனி கொடுக்கும் அதேவேளை, அதன் செலவை தொழிலாளியின் அறுவடை வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ளும். ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உட்பட அனைத்து ஓய்வூதியங்களும் இந்த முறைமையின் கீழ் இரத்து செய்யப்படும்.

அது மாத்திரமன்றி தோட்டங்களில் இருந்து தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் வெளியேற்றி அவர்களை "புதிய பெருந்தோட்ட கிராமங்களில்" வாழ நிர்ப்பந்திக்கும் திட்டத்தையும் பெருந்தோட்டக் கம்பனிகள் முன்னெடுக்கவுள்ளன. தற்போதைய ஒழுங்கின் கீழ் உள்ள, மட்டுப்படுத்தப்பட்ட வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளும் முடிவுக்கு வந்துவிடும்.

2018 டிசம்பரில், தங்களது தினசரி ஊதியத்தை 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை அதிகரிக்கக் கோரி 200,000 தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்தன. கடந்த பொதுத் தேர்தலின் போது, தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை சுரண்டிக்கொள்வதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் மற்றும் இ.தொ.கா. தலைமைத்துவமும், 1,000 ரூபாய் தினசரி ஊதியத்துக்கான தொழிலாளர்களின் கோரிக்கையை வழங்குவதாக போலி வாக்குறுதியளித்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசிய போது, பல தோட்டங்கள் குறைவான பராமரிப்பின் விளைவாக குறைந்த தேயிலையை உற்பத்தி செய்வதால், புதிய வேலை இலக்குகள் மிகவும் கடினமானவை, எனக் கூறினர்.

ஸ்றெத்ஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறியதாவது: "தோட்டத்தை சுத்தம் செய்வதில் நிர்வாகத்திற்கு அக்கறை இல்லை. புல் அதிகமாக உள்ளது. தேயிலைச் செடிகளுக்கு மத்தியில் நடப்பது கடினம். குளவிகள் மற்றும் பாம்புகளின் தாக்குதலுக்கு நாங்கள் உள்ளாகின்றோம். பல தொழிலாளர்கள் இந்த வருடம் இறந்துள்ளனர். தேயிலை செடிகளை வளர்ப்பதற்கு தேவையான உரங்கள் மற்றும் களை கொல்லிகள் பயன்படுத்தப்படுவதில்லை. கொழுந்தின் அளவு குறைவாகவே உள்ளது. இதன் அர்த்தம் தினசரி இலக்கை அடைய முடியாது என்பதே.”

ஸ்றெத்டன் தோட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் கூறியதாவது: "தோட்டத்தின் 40 ஹெக்டயர் பகுதி கைவிடப்பட்டுள்ளது. அதில் பயிரிடப்படுவதில்லை. மேலும் 9 ஹெக்டெயர் ஒரு தனியார் தொழில்முனைவோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் எஞ்சியிருப்பது ஒரு சிறிய பகுதி மட்டுமே. கொழுந்து குறைவாக இருப்பதால் வருமானம் குறைவாகவே இருக்கின்றது. கிடைக்கின்ற ஊதியம் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்குவதற்கு போதாது.

மோகன்ராஜ்

“எனவே, இங்கிருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை தேடி கொழும்புக்குச் செல்கிறார்கள், பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள். நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது [இ.தொ.கா.] ஜீவன் தொண்டமான் மற்றும் [NUW தலைவர்] திகம்பரமும் இங்கு வந்து வேலைநிறுத்தத்தை நிறுத்தச் சொன்னார்கள், ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை. தொழிற்சங்கங்கள் அனைத்தும் அரசாங்கத்தையும் கம்பனிகளையும் ஆதரிக்கின்றன, இல்லையெனில் கம்பனிகளால் இந்த வழியில் செயல்பட முடியாது.”

தொழிற்சங்கங்களிலிருந்து விலகி நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்ற உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களுக்கு விடுக்கும் அழைப்பை ஆதரிப்பதாக மோகன்ராஜ் கூறினார். "எங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை நாமே ஏற்பாடு செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

ஸ்றெத்ஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த பாவனா, எட்டு மணி நேரம் இடைவெளி இல்லாமல் வேலை செய்தாலும் நிர்வாகத்தின் அன்றாட உற்பத்தி இலக்கை அடைய முடியாது என்றார். "மழை பெய்யும் காலத்திலும் சரி வரட்சி காலத்திலும் சரி இந்த இலக்கை அடைய முடியாது. எமது சம்பளம் வெட்டப்படும் போது, எங்கள் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியும் வெட்டப்படும்,” என அவர் தெரிவித்தார்.

நான் இ.தொ.கா. உறுப்பினராக இருக்கிறேன். இந்த பிரச்சினைகள் பற்றி தொழிற்சங்கம் என்ன செய்கிறது என்று கேட்டு தோட்டத் தலைவருடன் நான் வாதாடினேன். அவர்கள் மௌனமாக இருந்தனர். அவர்கள் நிர்வாகத்துடன் நிற்பதோடு நிர்வாகத்துடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை கூறுவதில்லை.

இலங்கை தேயிலைத் தொழில் 2014 முதல் ஆழ்ந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த நெருக்கடி கோவிட்-19 தொற்றுநோயால் அதிகரித்துள்ளது. நாட்டின் தேயிலை உற்பத்தியின் பெரும்பகுதி ஈரான், ஈராக், துருக்கி மற்றும் ரஷ்யாவால் கொள்வனவு செய்யப்படுகின்றது. 2019 முதல் ஆறு மாதங்களில், 129 மில்லியன் டன் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 14.5 சதவீதம் குறைந்துள்ளது.

"தேயிலைத் தொழில்துறையை மீட்பதற்கான" போலித் திட்டங்களின் கீழ், தோட்ட தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த இராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், பொருளாதார எழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில், ஜனாதிபதி இராஜபக்ஷ, 20 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளில் 10 செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தோட்டங்கள் சிறிய தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இந்த பிரேரணையை இ.தொ.கா., NUW மற்றும் ஜ.தொ.கா.வும் அங்கீகரித்துள்ளன. மாணிக்கக் கல் தோண்டுவதற்காக சில தோட்டங்களின் நிலங்களை ஏலம் விடவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த சமூக அழிவுகரமான திட்டங்கள் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை வேலை இழக்கச் செய்யும், அவர்களது குடும்பங்கள் தங்குமிடங்களை இழந்து பொருளாதார வறுமைக்குள் தள்ளும்.

Loading