காக்கசஸில் ஆர்மீனிய-அஸெரி மோதல் வெடித்து பரந்த போருக்கு அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

காக்கசஸில் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பகுதியில் நேற்று பெரிய அளவிலான இராணுவ மோதல்கள் வெடித்தன. பீரங்கிகள், ட்ரோன் மற்றும் டாங்கித் தாக்குதல்களினால் இரு தரப்புகளிலும் பல சிப்பாய்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டனர், ஒவ்வொரு தரப்பும் மோதலைத் தொடங்கியதாக மற்றய தரப்பைக் குற்றம்சாட்டின.

16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஆர்மீனியா கூறியது, அதே நேரத்தில் அஜர்பைஜான் புள்ளிவிவரங்களை வழங்காமல் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டது. யெரெவனும் பாக்குவும் (Yerevan and Baku) ஒன்றுக்கொன்று படைகளுக்கு எதிரான தாக்குதல்களின் வீடியோக்களையும் நாகோர்னோ-கராபாக்கில் தணிக்கை செய்யப்பட்ட படங்களையும் வெளியிட்டது. அஸெரி பாதுகாப்பு அமைச்சகம் பிராந்தியத்தில் ஏழு எல்லை கிராமங்களை கைப்பற்றியதாகக் கூறியது, ஆர்மீனியா நான்கு ஹெலிகாப்டர்களை அழித்ததாகவும் 10 டாங்கிகள் மற்றும் 15 ட்ரோன்களை தாக்கியதாகவும் கூறியது.

சோவியத் ஒன்றியத்தின் 1991 ஸ்ராலினிச கலைப்புக்கு முன்னர் தொடங்கிய இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு இடையிலான 1988-94 மோதலுக்குப் பின்னர் இது மிகவும் தீவிரமான ஆர்மீனிய-அஸெரி மோதலாகும். இந்த போர், இறுதி ஆய்வில், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீட்டெடுத்ததற்கும், தேசிய-அரசு அமைப்புமுறையின் பிற்போக்குக் குணாம்சத்தினதும் ஒரு அழிவுகரமான தயாரிப்பாகும். ஈராக், சிரியா மற்றும் லிபியாவில் ஏகாதிபத்தியப் போர்களால் தூண்டப்பட்ட பூகோள புவிசார் அரசியல் போட்டிகளுடன் இது இப்போது நேரடியாகப் பற்றிக்கொண்டுள்ளது.

ஒரு ஆர்மீனிய நிலையின் மீது தாக்குதலைக் காண்பிப்பதற்கான வீடியோ. (அஜர்பைஜான் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய வீடியோவிலிருந்து படப் பிடிப்பு)

ஒரு ஆர்மீனிய-அஸெரி போர் விரைவாக கட்டுப்பாட்டை மீறி ரஷ்யா, துருக்கி மற்றும் வட அமெரிக்காவும் ஐரோப்பாவில் மற்றய நேட்டோ சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்த போராக விரிவடையக்கூடும்.

ஜூலை மாதம், வடகிழக்கு ஆர்மீனியாவின் தயுஷ் (Tayush) மற்றும் அஜர்பைஜானிலுள்ள டோயுஸ் (Toyu) மாவட்டத்தில் ஆர்மீனிய-அஸெரி மோதல்கள் வெடித்தன, அதில் 12 அஸெரி மற்றும் நான்கு ஆர்மீனிய சிப்பாயகளும் கொல்லப்பட்டனர்.

அப்போதிருந்து, இராணுவ பதட்டங்கள் அதிகரித்துள்ளன. ஒரு நேட்டோ உறுப்பு நாடும் மற்றும் அஜர்பைஜானின் முக்கிய நட்பு நாடுமான துருக்கி, ஜூலை மோதல்களுக்குப் பின்னர் உடனடியாக பாகு, நச்சிவன், கஞ்சா, குர்தாமீர் மற்றும் யெவ்லாக் ஆகிய இடங்களில் அஜர்பைஜானுடன் விமான மற்றும் தரைப்படைகளின் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தியது. ஆர்மீனியாவை ஆதரிக்கும் ரஷ்யாவானது, 150,000 துருப்புக்கள், 26,000 க்கும் மேற்பட்ட ஆயுதக் கருவி அமைப்புகள், 414 விமானங்கள் மற்றும் 106 போர்க் கப்பல்களை உள்ளடக்கிய "ஆச்சரியமான போர் தயார்நிலை சோதனை" என்ற ஒன்றை அறிவித்தது.

லிபியா மற்றும் சிரியாவில் நேட்டோ போர்களானது முந்தைய ஆர்மீனிய- அஸெரி போர் நிறுத்தங்களுக்கு தரகுகளாக இருந்த அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா அரசுகளின் திறனை அல்லது விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. துருக்கியுடனான அவர்களின் உறவுகள் சரிந்துவிட்டன: அதாவது லிபியாவில் துருக்கிய ஆதரவு படைகளுக்கு எதிராக ரஷ்யா ஒரு பினாமி போரை நடத்துகிறது, கிழக்கு மத்தியதரைக் கடல் எண்ணெய் மோதல்களில் துருக்கிக்கு எதிராக பிரான்ஸ் கிரேக்கத்தை ஆதரிக்கிறது மற்றும் சிரியாவில் துருக்கியை எதிர்க்கும் குர்திஷ்-தேசியவாத கெரில்லாக்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. கிழக்கு மத்தியதரைக் கடலில் கிரேக்கத்திற்கு ஆர்மீனியா தனது ஆதரவை அறிவித்தது, அஜர்பைஜான் துருக்கியை ஆதரிப்பதாக அறிவித்தது.

சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) ஆய்வாளர் ஒலேஸ்யா வர்தன்யன் ட்விட்டரில் எழுதினார்: “ஏராளமான சமிக்ஞைகள் இருந்தன, அனைவரும் அவற்றைப் பார்த்தார்கள், பல வாரங்களாக எதுவும் செய்யவில்லை. செயற்திறன் மிக்க சர்வதேச மத்தியஸ்தம் தேவை. இந்த தாக்குதலை சரி என்று பலர் காரணங்களைக் கண்டறிந்தனர். அவர்கள் இப்போது அமைதியாக இருந்தால், ஒரு உண்மையான போரை எதிர்பார்க்கலாம்.”

எவ்வாறாயினும், சமாதானத்திற்கு தரகு செய்வதற்கு பதிலாக, முக்கிய சக்திகள் உண்மையில் ஒன்றுடன் ஒன்று போருக்கு தயாராகி வருகின்றன. கருங்கடல் முழுவதும், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஜேர்மனுடன் சேர்ந்தும், போலந்தானது லிதுவேனியன் ஆலோசகர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் உக்ரேனுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டன. உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது: அதாவது "முதல் முறையாக, நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆயுதப்படைகளின் இராணுவப் பிரிவுகளானது மூலோபாய கட்டளையிலும் மற்றும் அதிகாரிகள் பயிற்சிகளிலும் ஈடுபடும்."

80,000 துருப்புக்கள் பங்குபற்றிய ரஷ்யாவின் காவ்காஸ்-2020 (காக்கசஸ் -2020) போர் விளையாட்டுகளும் கூட வடக்கு காக்கசஸிலும் கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடல்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. சீனா, ஆர்மீனியா, பெலருஸ், ஈரான், மியான்மர் மற்றும் பாகிஸ்தானிலிருந்து 1,000 துருப்புக்கள், அத்துடன் 250 டாங்கிகள், 450 ஆயுத கவசந் தாங்கிகள் மற்றும் 200 பீரங்கி அல்லது பல்குழல் ராக்கெட் ஏவுகணை அமைப்புகள் இதில் பங்கேற்றன.

ஆர்மீனிய மற்றும் அஸெரி அதிகாரிகளின் அறிக்கைகளானது தென் காக்கசஸில் பிராந்திய மற்றும் பூகோளரீதியில் கூட யுத்தம் ஒரு உண்மையான மற்றும் உடனடி ஆபத்து என்பதை தெளிவுபடுத்துகின்றன.

ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் கூறினார்: “தெற்கு காக்கசஸில் ஒரு முழு அளவிலான இராணுவ மோதலின் விளிம்பில் நாம் இப்போது நிற்கிறோம், இது மிகவும் முன்கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். இது பிராந்தியத்திற்கு வெளியே பரவி, மிகப் பெரிய அளவை அடையலாம், இது சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகிறது.” "துருக்கியை எந்தவொரு ஈடுபாட்டிலிருந்தும் தடுக்க, கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நெம்புகோலையும் பயன்படுத்தி இழுக்க சர்வதேச சமூகத்திற்கு" அவர் அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும், சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் ஆர்மீனியாவில் இராணுவச் சட்டம் மற்றும் முழு அளவிலான போர் அணிதிரட்டலை அறிவித்தார்: அதாவது “அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில், இராணுவச் சட்டம் மற்றும் முழு அணிதிரட்டல் ஆர்மீனியா குடியரசில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் அதிகாரபூர்வ வெளியீட்டிற்குப் பின்னர் உடனடியாக நடைமுறைக்கு வரும். இராணுவத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பணியாளர்களும் தங்கள் பிராந்திய இராணுவ ஆணையகங்களில் அறிக்கை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிவித்தார்.

சமமாக போருக்கு ஆத்திரமூட்டும் அஜர்பைஜானின் அரசாங்கமும் பல நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் ஒரு அரச முற்றுகை நிலையை அறிவித்து பதிலிறுத்தது. துருக்கியின் அரசுக்கு சொந்தமான அனடோலு ஏஜென்சியின் கூற்றுப்படி, அஸெரி பாராளுமன்றம் "போர் நிலைமை தொடரும் வரை நாட்டிலுள்ள அஜர்பைஜான் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரின் சொத்து உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை ஓரளவு மற்றும் தற்காலிகமாக கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு ஒரு நடவடிக்கையை" நிறைவேற்றியது.

COVID-19 பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட வெடிக்கும் சமூக பதட்டங்களுக்கு மத்தியில் இரு நாடுகளிலும் ஆளும் உயரடுக்கினர் ஆக்கிரமிப்பு இராணுவக் கொள்கையை பின்பற்றுகின்றனர். ஆர்மீனியாவில் ஏறக்குறைய 50,000 கோவிட்-19 நோயாளிகளும் மற்றும் 951 இறப்புகளும் மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையில் பதிவாகியுள்ளன, இது ஆசியாவின் மிக உயர்ந்த இறப்பு வீதமாகும், ஆனால் பஷினியன் வியாழக்கிழமையன்று ஆர்மீனியா "கொரோனா வைரஸுடன் வாழ வேண்டும்" என்று கூறினார். 10 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அஜர்பைஜானில், 40,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகளையும் 586 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.

இரு நாடுகளும் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் இராணுவ செலவினங்களை கடுமையாக உயர்த்தியுள்ளன. 2019 ஆம் ஆண்டில், இராணுவ செலவினம் அஜர்பைஜானில் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது, இது எல்லா காலங்களைக் காட்டிலும் உயர்ந்த அளவாகும், மற்றும் ஆர்மீனியாவில் கிட்டத்தட்ட 650 மில்லியன் டாலர்கள் அதாவது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட ஐந்து சதவிகிதமாகும், இது உலகின் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

நேற்று இரத்தக்களரி அதிகரித்த பின்னர், சர்வதேச அளவில் அதிகாரிகள் சண்டையை நிறுத்த அழைப்புவிடுக்கத் தொடங்கினார்கள். ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானுக்கு "உடனடியாக சண்டையை நிறுத்தவும், பதட்டங்களை குறைக்கவும், தாமதமின்றி அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பவும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் " அழைப்பு விடுத்தார். நேட்டோவானது "நாகோர்னோ-கராபாக் மோதல் மண்டலத்திலுள்ள முன்னரங்குகளில் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளின் அறிக்கைகளால் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது" என்று இரு தரப்பினரையும் "உடனடியாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" என்று கூறியது.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் "இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார், அதே நேரத்தில் பிரெஞ்சு அரசாங்கம் "மோதலால் மிகவும் கவலை கொண்டுள்ளது" என்று அறிவித்தது.

ரஷ்ய மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகங்கள் ஒவ்வொன்றும் "சுய-நிதானத்திற்கு" அழைப்பு விடுத்தன, மாஸ்கோ "நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக உடனடியாக போர் நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தைகளையும் தொடங்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்தது.

துருக்கிய அதிகாரிகள் ஆர்மீனியாவை ஆக்கிரமிப்பாளர் என்று கண்டித்தனர், அஜர்பைஜானுக்கு தங்கள் முழு ஆதரவையும் அறிவித்தனர். மூன்று மில்லியன் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட பிராந்தியத்தின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆர்மீனியாவை "பிராந்திய அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் முத்திரை குத்துகையில், துருக்கிய பாதுகாப்பு மந்திரி ஹுலுசி அகர் தனது அஸெரி பிரதிநிதியை அழைத்து பின்வருமாறு கூறினார்: அவர்களுடைய பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான அவர்களுடைய போராட்டத்தில் எல்லா வகையிலும் "துருக்கி எப்போதும் அஸெரி துருக்கியர்களுடன் (Azeri Turks) நிற்கும்.”

2010 துருக்கி-அஸெரி இராணுவ ஒப்பந்தம் ஒன்று, இரு தரப்பினரும் மூன்றாவது நாடுகளால் தாக்கப்பட்டால் இராணுவ ரீதியாக விடையிறுக்க வேண்டும். துருக்கிய இராணுவ தலையீட்டிற்கு ஒரு சாக்குப்போக்கை வழங்குவதற்கு துருக்கிய ஆதரவு துருக்கிய செய்தி ஊடக நிறுவனங்கள் வேலை செய்து வருகின்றன, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) மற்றும் மக்கள் பாதுகாப்பு பிரிவுகளின் (YPG) போராளிகள் ஆர்மீனிய போராளிகளுக்கு பயிற்சியளிக்க நாகோர்னோ-கரபாக் சென்றுவிட்டனர் என்ற ஆதாரமற்ற கூற்றுக்களை வெளியிடுகின்றன. இரண்டு குர்திஷ் குழுக்களும் "பயங்கரவாதக்" குழுக்களாக அங்காராவால் முத்திரை குத்தப்பட்டுள்ளது.

துருக்கியின் முதலாளித்துவ எதிர்க் கட்சி மீண்டும் அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு பின்னால் அணிவகுத்துச்சென்று கொண்டிருக்கிறது. குடியரசு மக்கள் கட்சி (CHP) ஒரு "ஆர்மீனிய தாக்குதலை" கண்டனம் செய்தது, அதே நேரத்தில் CHP இன் அதிவலது கூட்டாளியான Good Party, "அஜர்பைஜான் மீதான ஆர்மீனியாவின் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றும் அது "அஜர்பைஜானுடன் அதன் நியாயமான நோக்கத்திற்கு நிற்கிறது" என்றும் அறிவித்தது.

துருக்கியானது அஜர்பைஜானை தீவிரமாக ஆதரிக்கும் அதே வேளையில், ரஷ்யா பாரம்பரியமாக ஆர்மீனியாவை ஆதரித்து வருகிறது, மேலும் ஆர்மீனியா கியூம்ரியில் ஒரு பெரிய இராணுவ தளத்தை கொண்டுள்ளது. ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் முழு அளவிலான யுத்தம் நடந்தால், ரஷ்யா அல்லது துருக்கியின் நட்பு நாடுகளின் தோல்வியைத் தவிர்ப்பதற்கான தலையீடு மாஸ்கோவிற்கும் அங்காராவுக்கும் இடையிலான முழுமையான போருக்கு வழிவகுக்கும். இது முழு நேட்டோ கூட்டணியும் ரஷ்யாவிற்கு எதிராக துருக்கியுடன் பக்கபலமாக இருக்குமா என்ற கேள்வியை தவிர்க்க முடியாமல் முன்வைக்கும்.

காக்கசஸ் பகுதி முழுவதிலும், சிரியாவிலும், கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதிகளிலும் போர் மற்றும் COVID-19 பெருந்தொற்று நோய்க்கு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க (herd immunity) கொள்கைகளுக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டமைக்க தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் ஐக்கியப்படுத்த வேண்டிய அவசர அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading