மத்திய கிழக்கு முழுவதும் போர் ஆபத்து மேலெழுகையில் ஆர்மீனிய-அஸெரி சண்டை அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே நடந்த இரண்டாவது நாள் சண்டையில் நேற்று டஜன் கணக்கான சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்கு முன்னதாக இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கிடையில் 1988-1994 போர் வெடித்ததிலிருந்து இதுவரை டாங்கிகள், கவச வாகனங்கள், போர்-குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் ஈடுபட்ட கடுமையான சண்டை இந்த இரத்தக்களரியாகத்தான் இருக்கிறது.

நாகோர்னோ-கராபாக் சண்டையில் ஈடுபட்டிருக்கும் ஆர்மீனிய அதிகாரிகள் தாங்கள் 28 சிப்பாய்களை இழந்ததாகவும், மொத்த உயிரிழப்புகள் 59 ஆக இருப்பதாகவும் தெரிவித்தனர், அதேநேரம் ஆர்மீனியாவைச் சேர்ந்த 200 பேர் காயமுற்றுள்ளனர். நாகோர்னோ-கராபாக் பகுதியின் ஆர்மீனிய பெயரான ஆர்ட்சாக்கிலுள்ள மனித உரிமைகள் பாதுகாவலர் அலுவலகமானது, ஸ்டெபனகெர்ட், அஸ்கெரான், மார்டகெர்ட், மார்டூனி, ஹட்ருத் மற்றும் சுஷி உள்ளிட்ட அனைத்து நகரங்களும் தாக்கப்பட்டதாகக் கூறியது; ஒரு பாட்டி மற்றும் அவரது பேத்தியும் கொல்லப்பட்டனர் என்றும் கூறியது. ஆர்மீனிய படைகள் 15 ட்ரோன்களையும் பல அஸெரி கவச வாகனங்களையும் அழித்ததாகவும் நூற்றுக்கணக்கான அஸெரி சிப்பாய்களைக் கொன்றதாகவும் கூறியது.

செப்டம்பர் 27, 2020 ஞாயிற்றுக்கிழமை அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட காட்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், அஜர்பைஜானின் சுய-பிரகடனப்படுத்தப்பட்ட நாகோர்னோ-கராபாக் குடியரசின் முன்னரங்கிலிருந்து ஒரு சிறிய ரக பீரங்கி மூலம் அஜர்பைஜானின் சிப்பாய்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். (அஜர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் AP வழியாக)

இராணுவ இழப்புக்களைப் பற்றி தகவல் கொடுக்காத அஸெரி படைகள், நகரங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டபோது 26 அஸெரி குடிமக்கள் காயமடைந்ததாக தெரிவித்தனர். மேலும், அவர்கள் தரையில் சிறிய முன்னேற்றங்களை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் வெளியிட்ட காணொளிகள், துருக்கியால் வழங்கப்பட்டதாக கூறப்படும் அவர்களின் ட்ரோன்கள், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆர்மீனிய கவச வாகனங்கள் மற்றும் குறுகிய தூர விமான-எதிர்ப்பு ஏவுகணை தளங்களை அழித்ததாக காண்பித்தன. துருக்கிய படைகள் ஏற்கனவே ட்ரோன்களை பயன்படுத்தி, லிபியா மற்றும் சிரியாவில் நடந்த போர்களில் ரஷ்ய ஆதரவு படைகளால் நிறுத்தப்பட்டுள்ள அத்தகைய தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.

அஸெரி நகரமான டெர்ட்டருக்கு ஆர்மீனியா ஷெல் வீசியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அஜர்பைஜான் ஆர்மீனியாவுக்கு "கடைசி எச்சரிக்கை" ஒன்றை வெளியிட்டது. "தேவைப்பட்டால் அவர்களுக்கு எதிராக போதுமான பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் ஆர்மீனியாவுக்கு கடைசி எச்சரிக்கையை அளிக்கிறது," என்று அது கூறியது.

இந்த போர், சோவியத் ஒன்றியத்தை கலைத்து முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதற்கான ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தேசியவாதக் கொள்கை மற்றும் 1991 முதல் இப்பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக ஏகாதிபத்தியப் போர் ஆகியவைகளின் பேரழிவுகரமான விளைபொருளாகும். பரந்த பூகோள அரசியல் பதட்டங்கள் இப்போது காகசஸில் குவிந்துள்ளன – அதாவது, மேற்கில் கருங்கடலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையில், வடக்கே ரஷ்யா, கிழக்கில் காஸ்பியன் கடல் மற்றும் சீனா மற்றும் தெற்கே ஈரான் மற்றும் துருக்கி ஆகியவைகளுக்கு இடையிலுள்ள யூரேசியாவின் மையத்திலுள்ள ஒரு நிலப் பகுதியாகும். ஆர்மீனிய பிரதம மந்திரி நிகோல் பாஷினியன், சண்டை "பிராந்தியத்திற்கு வெளியே செல்லலாம் மற்றும் மிகப் பெரிய அளவைப் பெறலாம்" என்று ஞாயிற்றுக்கிழமையன்று எச்சரித்தார்.

குறிப்பாக, ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவ விரிவாக்கத்தின் மத்தியில் இந்த மோதல்கள் வருகின்றன. ஞாயிறன்று அதிகாலையில் ஆர்மீனிய-அஸெரி மோதலில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, ஈரான் மற்றும் பிரான்ஸ் ஆகியவைகள் அறிக்கைகளை வெளியிட்ட பின்னர், வாஷிங்டனும் அவ்வாறே செய்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர் கூட்டத்தில் ஆர்மீனிய-அஸெரி மோதல் பற்றி கேட்கப்பட்டதற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெறுமனே கூறினார்: "நாங்கள் அதை மிகவும் உன்னிப்பாக பார்க்கிறோம். அந்த பகுதியில் நல்ல உறவுகள் நிறைய உள்ளன. அதை நிறுத்த முடியுமா என்று பார்ப்போம்" என்றார்.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அரசாங்கம் இந்த கடமைக்காக செய்யப்பட்ட அறிக்கைகளை ஒதுக்கித்தள்ளியது, இருப்பினும், ஆக்கிரமிப்பு அஸெரி நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நாகோர்னோ-கராபாக் ஆர்மீனியாவின் கட்டுப்பாட்டில் முடிவடைந்த 1988-1994 போரானது ஒரு இரத்தக்களரி மோதலாகும், இது தேசிய-அரசு அமைப்பின் பிற்போக்குத்தனக் குணாம்சத்தை அம்பலப்படுத்தியது. முறையே 3 மற்றும் 10 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அரசுகளுக்கு இடையிலான ஆர்மீனிய-அஸெரி போரில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் 20,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். எவ்வாறாயினும், போரின் முடிவை மாற்றியமைக்கவும், அஜர்பைஜானுக்கு நாகோர்னோ-கராபாக் திரும்பப் பெறவும், ஆர்மீனியாவுக்கு ஒரு இரத்தம் தோய்ந்த தோல்வியைக் கொடுக்கவும் எர்டோகன் அழைப்பு விடுத்தார்.

"நாகோர்னோ-கராபாக் ஆக்கிரமிப்புடன் தொடங்கிய பிராந்திய நெருக்கடிக்கு, முடிவுகட்டப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று எர்டோகன் நேற்று இஸ்தான்புல்லில் அறிவித்தார். "ஆர்மீனியா உடனடியாக அது ஆக்கிரமித்துள்ள பகுதியை விட்டு வெளியேறியதும், இப்பகுதி அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு திரும்பும்" என்றும் கூறினார்.

சோவியத்துக்கு பிந்தைய காலத்தில், அஸெரி-ஆர்மீனிய சமாதானப் பேச்சுவார்த்தைகளை பாரம்பரியமாக தரகு செய்த அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதானத்தை கடைப்பிடிக்க கோரிய அழைப்புகளை எர்டோகன் நிராகரித்தார். "அவர்கள் அடிப்படையில் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள், ஆனால் இது பிரச்சினையை தீர்க்கவில்லை," என்றும் "இப்போது அஜர்பைஜான் விஷயங்களை தனது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

Turkish Defense Minister Hulusi Akar reiterated his regime’s ethnic solidarity with Turkic Azeris against Armenia, saying: “Ties between Turkey and Azerbaijan are based on ‘two states one nation’ principle. We are always together, on good or bad days. We are on the side of our Azeri brothers in their defense of homeland.”

துருக்கிய பாதுகாப்பு மந்திரி ஹுலுசி அகர் ஆர்மீனியாவுக்கு எதிராக துருக்கிய அஸெரிஸுடனான தனது ஆட்சியின் இன ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்தினார்: அதாவது “துருக்கிக்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான உறவுகள் ‘இரண்டு அரசுகள் ஒரு நாடு’ கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை. நல்லதும் அல்லது கெட்டதுமான நாட்களில் நாங்கள் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம். தாயகத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் எங்கள் அஸெரி சகோதரர்களின் பக்கம் இருக்கிறோம்” என்று கூறினார்.

அஜர்பைஜானுக்கான இந்த ஆதரவானது நேட்டோ உறுப்பு நாடான துருக்கிக்கும், ஆர்மீனியாவின் கியூம்ரியில் இராணுவத் தளத்தைக் கொண்ட ஆர்மீனியாவின் முக்கிய ஆதரவாளரான ரஷ்யாவிற்கும் இடையிலான போராக விரிவடையக்கூடும்.

ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் நேட்டோ போர்களில் இந்த நாடுகளில் ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. ரஷ்யா மற்றும் துருக்கி இடையே பதட்டங்களை ஏற்படுத்தியுள்ளன, 2011 ல் தொடங்கப்பட்ட நேட்டோ பினாமிப் போர்களைத் தொடர்ந்து லிபியா மற்றும் சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போர்களில் போட்டி பிரிவுகளை இவைகள் ஆதரித்தன. செப்டம்பர் 25 அன்று, சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் கட்டுப்பாடு தொடர்பாக ரஷ்ய மற்றும் துருக்கிய அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை முறிவடைந்தது. ரஷ்ய ஆதரவுடைய சிரிய அரசாங்க துருப்புக்களுக்கும் துருக்கிய ஆதரவுடைய இஸ்லாமிய “கிளர்ச்சி” போராளிகளுக்கும் இடையே சண்டை விரைவில் வெடிக்கக்கூடும்.

ரஷ்ய மற்றும் துருக்கிய ஆதரவு துருப்புக்களும் லிபியாவில் சண்டையிடுகின்றன, அதே நேரத்தில் கடலோரங்களில் பிரான்சின் ஆதரவுடன் கிரேக்க போர்க் கப்பல்கள் கிழக்கு மத்தியதரைக் கடலின் பெரும் பகுதிகளை கட்டுப்படுத்த துருக்கியுடன் மோதலில் இருக்கின்றன.

ஆனால் இன்னும் பரந்த அளவில் பெருகும் ரஷ்ய-துருக்கிய பதட்டங்கள், நாகோர்னோ-கரபாக் போரை உந்தித் தள்ளுவது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் தேசிய அரசு அமைப்புமுறையின் விரைவான முறிவின் ஒரு கூறு மட்டுமே அத்தோடு ஒரு புதிய ஏகாதிபத்திய உலகப் போரை நோக்கிய உந்துதலாகும்.

ஒரு சதித் திட்டத்தைத் தொடங்கவும், நவம்பர் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை புறக்கணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ள ட்ரம்ப் நிர்வாகமானது, தேர்தலுக்கு முந்தைய “அக்டோபர் ஆச்சரியத்தில்” ஈரானுடன் ஒரு போரைத் தொடங்க முயற்சிக்கக்கூடும் என்ற ஆபத்து அதிகரித்து வருகிறது. 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான சட்டவிரோத படையெடுப்பிலிருந்து ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்கத் துருப்புக்கள் மற்றும் இராஜதந்திரிகளை திரும்பப் பெறுவதே தனது நோக்கம் என்று நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பேயோ ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹிடம் தெரிவித்தார். அவர்கள் அங்கு தங்கியிருந்தால், வாஷிங்டன் ஈரானுடன் போருக்குச் சென்றால் அவர்கள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

ஏற்கனவே, ஜனவரி மாதம் பாக்தாத்தில் ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானியை வாஷிங்டன் கொலை செய்த பின்னர், ஈராக்கிலுள்ள அமெரிக்க தளங்களில் ஈரான் வரையறுக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

"ஈராக்கிலிருந்து அமெரிக்க இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான அச்சுறுத்தல் போர் அச்சத்தை எழுப்புகிறது" என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது: அதாவது "5,000 துருப்புக்கள் வரை இருக்கும் ஒரு நாட்டில், அதன் இராஜதந்திர இருப்பைக் குறைக்க அமெரிக்காவின் எந்தவொரு நடவடிக்கையும் இப்பகுதியில் பரவலாகக் காணப்படும் ஈரானுடனான அதன் மோதலின் விரிவாக்கமாக ... இது இராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பைத் திறக்கும், தெஹ்ரான் மற்றும் அதன் பினாமிகளை நோக்கி கடுமையான வழியில் பிரச்சாரம் செய்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில்" இது வெளிவருகிறது.

ஈராக்கில் ஈரானிய சார்பு சக்திகளுக்கு எதிராக வாஷிங்டன் "தங்கள் விருப்பங்களை மட்டுப்படுத்தப்பட விரும்பவில்லை" என்பதால் பொம்பேயோ இதை அறிவிப்பதாக பெயரிடப்படாத மேற்கத்திய இராஜதந்திரிகளை ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது. "வாஷிங்டன் பொருளாதார அல்லது இராணுவ நடவடிக்கைகளுடன் பதிலளிக்கும் என்று அவர் எதிர்பார்த்தாரா என்று கேட்டதற்கு," இராஜதந்திரி பதிலளித்தார்: "தாக்குதல்கள்" என்று.

இந்த அச்சுறுத்தல்கள் வாஷிங்டனின் சீனாவுடனான மோதலுடன் பிணைந்துள்ளன, ஏனெனில் ஒரு இராணுவ கூட்டணிக்கும், 400 பில்லியன் டாலர்கள் வர்த்தக ஒப்பந்தத்திற்கும் ஈரானுடனும் ரஷ்யாவுடனும் சீனா பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஈரானுடன் புதுப்பிக்கப்பட்ட ரஷ்ய மற்றும் சீன ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதிக்க வாஷிங்டன் அச்சுறுத்துகிறது, இது அமெரிக்க போர்க் கப்பல்கள், ரஷ்ய மற்றும் சீன கப்பல்களை ஆழ் கடல்களில் கைப்பற்ற முயற்சிக்க வழிவகுக்கும்.

அருகிலுள்ள ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையதாக எர்டோகன் அனைத்துத்-துருக்கி (pan-Turkic) உணர்வைத் தூண்டுவதை துருக்கிய அதிகாரிகள் தெளிவாகக் காண்கின்றனர். துருக்கியின் அரசு நடத்தும் TRT உலக செய்தி நிறுவனம், அஜர்பைஜானுக்கு எதிரான மோதலில் “ஆர்மீனியாவை அமைதியாக ஆதரித்தது” என்று ஈரானைக் கண்டித்து, “ஈரானின் துருக்கியப் பிரச்சினை”, வடக்கு ஈரானிலுள்ள துருக்கிய இன சிறுபான்மையினரால் ஏற்படுத்தப்படுவதாகக் கூறியது.

TRT உலக செய்தி நிறுவனமானது இஸ்தான்புல்லின் சபான்சி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெலண்ட் அராஸை மேற்கோள் காட்டியது: அதாவது “ஈரானில் துருக்கிய தேசியவாதம் அதிகரித்து வருவது கடுமையான அரசியல் பிரச்சினையாகக் ஈரானால் கருதப்படுகிறது. அஜர்பைஜானுடனான தெஹ்ரானின் அரசியல் பிரச்சினைகளில் நாட்டின் வடக்கு மற்றும் அஜர்பைஜானுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் உறவுகள் ஒரு முக்கிய காரணியாக இருந்தன.” "பெரும் அஜர்பைஜான் கொள்கை" ஈரானில் இன பிரிவினைவாதத்தை தூண்டக்கூடும் என்று TRT ஊகம் வெளியிட்டது.

இந்த மோதல்கள் மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் முழு அளவிலான போராபத்து குறித்த எச்சரிக்கையாகும், இது அமெரிக்காவில் ஜனநாயகத்தின் வீழ்ச்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. தேசியவாதம் மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் சோசலிச எதிர்ப்பில் ஒரு சர்வதேச, போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அவசர அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading