இலங்கை அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதிக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்த மாத தொடக்கத்தில், இலங்கை அமைச்சரவையானது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு பெரும் சர்வாதிகார அதிகாரங்களை வழங்கும். ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அரசாங்கம், இந்த மசோதாவை அக்டோபர் மாதம் பாராளுமன்றம் நிறைவேற்றிக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் சட்டமா அதிபர் இந்தத் திருத்தத்திற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளதுடன், அரசியலமைப்புப்படி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றால், கருத்துக் கணிப்பு இல்லாமல் அதை அமுல்படுத்த முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

ஆகஸ்ட் 5 நடந்த தேர்தலில், 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் சுமார் 145 ஆசனங்களை ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வென்றதுடன், பின்கதவு வழியான கொடுக்கல் வாங்கல் மூலமேனும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு போதுமான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற எதிர்பார்க்கின்றது.

ஜனாதிபதியின் சில அதிகாரங்களை கட்டுப்படுத்துவதால் அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை ரத்து செய்வதற்காக ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது ராஜபக்ஷவும் அவரது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வும் பிரச்சாரம் செய்தனர். நாட்டை "அபிவிருத்தி" செய்வதற்கு "வலுவான மற்றும் நிலையான" அரசாங்கத்தை நிறுவுவதற்கு இது அவசியம் என்று அவர்கள் கூறினர்.

இது ஒரு பொய் ஆகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முந்தைய ஆட்சி மீதான வெகுஜன எதிர்ப்பை பாசாங்குத்தனமாக சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்வதற்காக சர்வாதிகார அதிகாரங்களை விரும்புகிறார். கொவிட்-19 தொற்றுநோய் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான அரசாங்கத்தினதும் முதலாளிகளினதும் தாக்குதல்களை அதிகரிப்பதற்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது.

ஜனாதிபதியின் சில நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்திய 19 வது திருத்தம், 2015 ஏப்ரலில் சிறிசேன-விக்ரமசிங்க நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் உயர் அரச அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளை மட்டுமே நியமிக்க முடியும்; அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அவர்களின் செயல்பாடுகளை ஒதுக்குவதில் ஜனாதிபதியானவர் பிரதமரின் ஆலோசனையைப் பெற வேண்டும்; ஜனாதிபதிக்கு இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும், மற்றும் அதன் ஐந்தாண்டு காலத்தின் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்யும் வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாது, ஆகவை இந்த கட்டுப்பாடுகளில் அடங்கும்.

1978 அரசியலமைப்பில் ஸ்தாபிக்கப்பட்ட வெறுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவதாக வாக்குறுதியளித்தே, சிறிசேன அதிகாரத்தை வென்றார். உண்மையில், சிறிசேனாவிற்கு முன்னர் பதவியில் இருந்த இரண்டு ஜனாதிபதிகளான சந்திரிகா குமரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதே வாக்குறுதியை கொடுத்தனர். பின்னர் அதை கைவிட்டு நிறைவேற்று அதிகாரங்களை அதிகபட்சமாக பயன்படுத்தினர்.

அவரது முன்னோடிகளைப் போலவே, சிறிசேனவும் தனது வாக்குறுதியைக் கைவிட்டுவிட்டு 19 வது திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் பல்வேறு போலி-இடது குழுக்களும் சிறிசேனவின் திருத்தத்தை "ஜனநாயகத்திற்கான வெற்றி" என்று பொய்யாக அறிவித்தன.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. இன் 20 வது அரசியலமைப்புத் திருத்தம், ஜனாதிபதியின் இரண்டு முறை பதிவிக்கால வரம்பை மட்டும் வைத்துக்கொண்டு, தற்போதைய அனைத்து அரசியலமைப்பு கட்டுப்பாடுகளையும் நீக்கி, பின்வரும் அதிகாரங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது:

 ஜனாதிபதியால் பிரதமரை நியமிக்கவும் முடியும் நீக்கவும் முடியும், மற்றும் அமைச்சர்களை நியமிப்பதில் பிரதமருடன் கலந்தாலோசிக்க தேவையில்லை. தற்போது, ராஜபக்ஷ அரசியலமைப்புக்கு முரணாக பாதுகாப்பு அமைச்சராக இருப்பதுடன், 23 பிரதான அரச நிறுவனங்களை மேற்பார்வையிடுகிறார்.

 பாராளுமன்றம் அதன் ஐந்தாண்டு காலத்தின் ஒரு வருடத்தை நிறைவு செய்த பின்னர் ஜனாதிபதியால் அதை கலைக்க நீக்க முடியும்.

 குற்றவியல் வழக்கு உட்பட எந்தவொரு வழக்குகளிலிருந்தும் ஜனாதிபதி விலக்கலிப்பு உள்ளவர், மேலும் அவர் மீது அடிப்படை உரிமை வழக்குகள் எதுவும் பதிவு செய்ய முடியாது.

 தேர்தல்கள், பொலிஸ், பொது சேவை, மனித உரிமைகள், லஞ்சம், ஊழல் மற்றும் நிதி தொடர்பான ஆணைக்குழுக்களின் தலைவர்களையும், அதே போல் உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர் மற்றும் பிற உயர் அதிகாரிகளையும் ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த நியமனங்களை பற்றி, பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கத்தவர்களாக கொண்ட ஒரு உத்தேச பாராளுமன்ற பேரவையில் கலந்துரையாட முடியும். பாராளுமன்ற பேரவையில் ஜனாதிபதி பங்குபற்றுவது கட்டாயமாக இருக்காது.

24 மணி நேரத்திற்குள் பாராளுமன்றத்தில் "அவசர மசோதாக்களை" நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கும், இதன் மூலம் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் இருந்து எந்தவொரு சட்ட சவாலையும் தவிர்த்துக்கொள்ள முடியும். பாராளுமன்றத்தில் எந்தவொரு மசோதாவிற்குமான திருத்தமும், அதன் "மதிப்பு மற்றும் அடிப்படைகளிலிருந்து" விலகிச் செல்ல முடியாது, அதாவது பாராளுமன்றத்தால் பெரிய மாற்றங்களைச் செய்ய முடியாது. இந்த விதி 1978 அரசியலமைப்பில் கிடையாது.

எவ்வாறாயினும், இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு அப்பால் செல்ல ஜனாதிபதி ராஜபக்ஷ விரும்புகிறார். உண்மையில், தற்போதைய அரசியலமைப்பு அதன் “பொருத்தமற்ற தன்மை” காரணமாக 19 முறை திருத்தப்பட்டதாக அவர் கூறுகிறார். மேலும் “ஒரு நாடு, அனைத்து மக்களுக்கும் ஒரு சட்டம்” என்ற அடிப்படையில் ஒரு புதிய அரசியலமைப்பிற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இத்தகைய நடவடிக்கை தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்கு குழிபறிப்பதுடன் இனவாத பாரபட்சங்களை தீவிரமாக்கும். ராஜபக்ஷ ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, ஒன்பது அமைச்சரவை உறுப்பினர்களைக் கொண்ட, பிரதானமாக அவரது விசுவாசிகளை உள்ளடக்கிய, “நிபுணர் குழுவை” நியமித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு 1978 ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. அதன் மூலம் நாட்டின் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே. ஆர். ஜயவர்தன பதவிக்கு வந்து, பாராளுமன்றத்தை ஒரு இரப்பர் முத்திரையாகவும் நீதித்துரையை ஒரு வெற்று நிறுவனமாகவும் மாற்றினார். தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூக உரிமைகளை அபகரிப்பதன் மூலமும், மலிவான தொழிலாளர் நிலைமைகளை உருவாக்குவதன் மூலமும், அனைத்து சமூக எதிர்ப்புகளையும் நசுக்குவதன் மூலமும் இலங்கை பொருளாதாரத்தை முழுமையாக மாற்றுவதற்கும் நாட்டை பூகோள உற்பத்தியுடன் இணப்பதற்குமே 1978 அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1948 இல் உத்தியோகபூர்வமாக சுதந்திமடைந்ததில் இருந்தே, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும், அதை பலவீனப்படுத்துவதற்கும் அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பயன்படுத்தி வருகின்ற ஒரு நச்சு ஆயுதமான, திட்டமிட்ட தமிழர்-விரேத இனவாத ஆத்திரமூட்டல்களை அடுத்து, ஜெயவர்த்தன ஆட்சி அதை பிரிவினைவாத தமிழீழ விடுதலைக்கு எதிரான மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போராக மாற்றத் தொடங்கியது. 1980 ஜூலையில், வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கிய 100,000 அரசாங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் இந்த நிறைவேற்று அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன,.

எவ்வாறாயினும், தற்போதைய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், வெறுமனே 1978 அரசியலமைப்பிற்கு திரும்பவில்லை. உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோயின் வளர்ந்து வரும் தாக்கத்தின் விளைவாக ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் வருமானமும் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, இலங்கை முதலாளித்துவ வர்க்கம் ஆழ்ந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி மூன்று சதவிகிதம் எதிர்மறையாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன், பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அரசாங்கம் 2024 வரை ஆண்டுதோறும் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாகத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

உற்பத்தித் துறையில் 400,000 க்கும் மேற்பட்ட தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் துறையில் தொழிலாளர்களின் ஊதியம் குறைந்தது 30 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தொழிலாளர்களின் வளர்ந்து வரும் எதிர்ப்பின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் சமூக பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

எதேச்சதிகார ஆட்சிக்கான ராஜபக்ஷவின் தயாரிப்புகள், பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய அவரது சர்வதேச சகாக்களின் நகர்வுகளுக்கு ஏற்ப உள்ளன. அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாசிச சக்திகளை அணிதிரட்ட முயல்கிறார், அதே நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார். இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம், அதன் முஸ்லீம்-விரோத தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதோடு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக அதிதீவிர வலதுசாரி சக்திகளை ஏவிவிடுவதற்கு செயற்படுகின்றது.

ராஜபக்ஷ ஏற்கனவே தனது நிர்வாகத்தில் சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளைச் சேர்த்துள்ளதோடு இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான கட்டமைப்பை உருவாக்கி வருகிறார்.

இலங்கையின் எதிர்க்கட்சிகள் என்று கூறிக்கொள்பவற்றுக்கு, சர்வாதிகாரத்தை நோக்கிய அரசாங்கத்தின் நகர்வுகளுடன் அடிப்படை வேறுபாடுகள் எதுவும் கிடையாது, அவை முதலாளித்துவத்திற்கும் இலங்கையின் ஆளும் உயரடுக்கிற்கும் எதிராக அதிகரித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பைப் பற்றி பீதியடைந்துள்ளன.

மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தினங்களில், இரண்டு அனைத்து கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு, கோவிட் -19 க்கு ஜனாதிபதியின் பிரதிபலிப்பை பாராட்டி, ஐ.தே.க., ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. மற்றும் முஸ்லீம் கட்சிகளும் தங்களது ஒத்துழைப்பை வழங்கி, ராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பலப்படுத்தியுள்ளன. ஆகஸ்ட் 20 அன்று, அனைத்து எதிர்க் கட்சிகளும் ஜனாதிபதியின் பாராளுமன்ற கொள்கை அறிக்கைக்கு வாக்களிக்காமல் ஒப்புதல் அளித்தன.

இந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தியானது கொழும்பு புறநகரில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி, "மக்களை அணிதிரட்டுவதன்" மூலம் 20 வது திருத்தத்தை தோற்கடிப்பதாக "உறுதியளித்தது". இந்த வாய்ச்சவடால் வெகுஜனங்களைத் திசைதிருப்பி விடவும், அந்த எதிர்ப்பை பாராளுமன்றத்திற்கு வேண்டுகோள் விடுக்கும் முட்டுச் சந்துக்குள் திசை திருப்பிவிடவும் நோக்கமாக கொண்டது.

இதேபோல், ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார திட்டங்களால் ஏற்படும் உண்மையான ஆபத்துக்களை மூடிமறைப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக திசைதிருப்ப ஜே.வி.பி. முயல்கிறது. செப்டம்பர் 4 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க, புதிய அரசியலமைப்பு திருத்தம் "நாட்டின் நலன்களுக்காக அல்ல", மாறாக "ஒரு பிரிவினருக்கு அரசியல் ரீதியாக பயனளிப்பதாக" அதாவது ராஜபக்ஷ குடும்பத்திற்கு பயணளிப்பதாக உள்ளது என அறிவித்தார்.

அதேபோல், முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி-இடது அமைப்புகளும், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன அணிதிரள்வையும் தடுக்க இந்த வலதுசாரிக் கட்சிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் அணிசேர்ந்து நிற்கின்றன.

செப்டம்பர் 4 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய மு.சோ.க. கல்விப் பிரிவு செயலாளர் புபுது ஜாகொட, "ஒரு தனிநபரின் எதேச்சதிகார ஆட்சி நாட்டிற்கு பயங்கர பேரழிவைத் தரும்" என்று அறிவித்து, 20வது திருத்தத்தை எதிர்க்குமாறு அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரிதாபகரமாக வேண்டுகோள் விடுத்தார். விடுத்தது. ஆகஸ்ட் 5 நடந்த பொதுத் தேர்தல்களைத் தொடர்ந்து, "இடதுசாரி, குட்டி முதலாளித்துவ மற்றும் வலதுசாரிக் கட்சிகளின் முற்போக்கான பிரிவுகளுடன்… பொது பிரச்சினைகளில் இணைந்து பணியாற்ற மு.சோ.க. தயாராக உள்ளது என ஜாகொட அறிவித்தார்.

இலங்கையில் சர்வாதிகார ஆட்சியின் வளர்ந்து வரும் ஆபத்து குறித்து தொழிலாள வர்க்கத்தை தொடர்ந்து எச்சரித்த ஒரே அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே ஆகும். அரசாங்கத்துக்கோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கோ விடுக்கும் எந்தவொரு வேண்டுகோளும், இலங்கை ஆளும் உயரடுக்கு மேம்படுத்தும் வலதுசாரி ஜனநாயக-விரோத நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்காது.

தொழிலாள வர்க்கம் தனது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும் முறித்துக் கொண்டு அதன் சொந்த சுயாதீன நலன்களைச் சுற்றி -அதாவது ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்- அணிதிரள்வதன் மூலம் மட்டுமே முன்னோக்கிச் செல்ல முடியும். இன பாகுபாடுகளுக்கு அப்பால் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காகப் போராடுவதையும் மற்றும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டுவதே இதன் அர்த்தமாகும்.

Loading