ஆர்மீனிய-அஸெரி போர் தீவிரமடைவதற்கு ரஷ்யாவும் பிரான்சும் துருக்கிக்கு கண்டனம் தெரிவிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே சண்டை வெடித்து நான்கு நாட்களுக்குப் பின்னர் சக்திகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் எல்லைகளில் ஒரு போரை நடத்த துருக்கி மற்றும் சிரிய இஸ்லாமிய போராளிகள் அஜர்பைஜானுக்கு கூலிப்படைகளை அனுப்புகிறார்கள் என்ற தகவல்களுக்கு மத்தியில், ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான மோதலுக்கான ஆபத்து அதிகரித்து வருவதானது ஒரு பிராந்திய அல்லது உலகளாவிய போருக்கான ஆபத்தையும் ஆரம்பித்து வைக்கிறது.

அஸெரி படைகள் நாகோர்னோ-கராபாக் பகுதிக்குள் வெகுதூரம் முன்னேறியதாகத் தெரியவில்லை என்றாலும், அந்தப் பகுதிகளிலுள்ள நகரங்களின் மேல் துல்லியமான ஆயுதங்களினால் மழைபொழிவது போல் தாக்குதல் நடத்துவதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆர்மீனிய அதிகாரிகள் நேற்று 104 துருப்புக்களை இழந்துவிட்டதாகவும், சண்டை தொடங்கியதிலிருந்து குறைந்தது ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். அஸெரி அதிகாரிகள் இராணுவ இழப்புகள் குறித்து எந்த புள்ளிவிவரத்தையும் கொடுக்கவில்லை, ஆனால் 15 அஸெரி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்தினர்.

நாகோர்னோ-கராபாக் பிரிந்த பகுதியில் அஜர்பைஜானின் படைகளுடனான சண்டையில் ஒரு ஆர்மீனிய சிப்பாய் ஒரு பீரங்கிக் குண்டைச் சுடுகிறார்.

இராணுவப் பிரிவுகள் மற்றும் உபகரணங்களுக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தும் வான் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஆன்லைன் வீடியோக்கள் காட்டுகின்றன. ஆர்மீனிய அதிகாரிகள் 83 ட்ரோன்கள், ஏழு ஹெலிகாப்டர்கள், 166 கவச வாகனங்கள், ஒரு போர் விமானம் மற்றும் ஒரு ஏவுகணைத் தளம் ஆகியவைகளை அழித்ததாகவும், 920 உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றனர். 130 கவச வாகனங்கள், 200 பீரங்கிகள், ஏவுகணை ஏவுதளங்கள், 25 வான் பாதுகாப்பு ஏவுகணை தளங்கள் மற்றும் ஒரு S-300 வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவைகளை அழித்ததாகவும், அதே நேரத்தில் 2,300 பேர் உயிரிழந்தனர் என்றும் அஜர்பைஜான் கூறுகிறது.

“நாங்கள் ஒரு நீண்ட போருக்கு தயாராக இருக்க வேண்டும். … போர் அஜர்பைஜானின் தோல்வியுடன் முடிவடையும், அல்லது குறைந்தபட்சம் ஒரு வெற்றியுடன் அல்ல” என்று நாகோர்னோ-கராபாக்கின் அதிகாரபூர்வமற்ற ஆர்மீனிய அதிகாரத்தின் தலைவர் அராயிக் ஹருதுயன்யன் எச்சரித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், துருக்கிய ஆதரவு அஸெரி நடவடிக்கைகளில் முக்கிய இலக்குகளில் ஈரானும் ஒன்றாகும் என்று அவர் சேர்த்துக் கொண்டார். அவர் கூறினார், அதாவது “இந்த போர்களின் இலக்குகளில் ஒன்று (முன்னணி வரிசையில் சண்டையிடுவது) ஈரான் என்று நான் கூற விரும்புகிறேன், ஏனெனில் இந்தப் போர் மற்றவற்றுடன் ஈரானுக்கு எதிராக இயக்கப்படுகிறது. ஈரானின் வடக்கே, குறிப்பாக பிராந்திய பிரச்சினைகள் குறித்து நாங்கள் அறிவோம், ”அங்கு கணிசமான அஸெரி மக்கள் உள்ளனர். ஈரானிலிருந்து பிரிந்து அஜர்பைஜானில் சேர ஆதரவாக ஈரானிய அஸெரிஸ் மத்தியில் பிரிவினைவாத உணர்வு தோன்றக்கூடும் என்று ஈரானிய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

சோவியத் ஒன்றியத்தை 1991 இல் ஸ்ராலினிச ஆட்சி கலைப்பதற்கு சற்று முன்னர் வெடித்த இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு இடையிலான 1988-1994 போருக்குப் பின்னர் இது இரத்தம் தோய்ந்த ஆர்மீனிய-அஸெரி சண்டையாகும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து மூன்று தசாப்தங்களாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் பரவியிருந்த எண்ணற்ற பூகோள அரசியல் போட்டிகள், ஏகாதிபத்திய போர்கள் மற்றும் உள்ளூர் இன மோதல்களில் இப்போது இது ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஈரான் மற்றும் ரஷ்யா இரண்டையும் தனிமைப்படுத்தவும் அச்சுறுத்தவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு அதிகரித்து வரும் நடவடிக்கையின் மத்தியில் போர் விரிவடைகிறது.

ஆர்மீனியாவுக்கு எதிராக துருக்கிய அஸெரி இனத்தை துருக்கிய அதிகாரிகள் தீவிரமாக ஆதரிக்கின்றனர். நாகோர்னோ-கராபக்கிலிருந்து ஆர்மீனியாவை வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் அஸெரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார், மேலும் “துருக்கிய மக்கள் தங்கள் அஸெரி சகோதரர்களுடன் எங்களுடைய எல்லா வழிகளிலும் நிற்கிறார்கள்” என்று உறுதியளித்தார். கடந்த தசாப்தத்தில் லிபியா மற்றும் சிரியாவில் நேட்டோ ஆட்சி மாற்ற நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட உள்நாட்டுப் போர்களில் ரஷ்யாவும் துருக்கியும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் இரத்தக்களரி பினாமி போர்களை நடத்தி வரும் சூழ்நிலையில் இது ஆர்மீனியாவின் முக்கிய பிராந்திய ஆதரவாளரான ரஷ்யாவுடன் பதட்டங்களை தீவிரப்படுத்துகிறது.

ரஷ்யா மற்றும் ஆர்மீனியா, பெலாருஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய பிந்தைய சோவியத் குடியரசுகளை உள்ளடக்கிய ரஷ்யா மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (CSTO) உடன் இராணுவ உதவி குறித்து விவாதித்து வருவதாக ஆர்மீனிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோரை அழைத்து போரைப் பற்றி விவாதித்தார். ரஷ்யாவின் ரோசியா 1 சேனலில், அவர் போரை "ஆர்மீனிய மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தல்" என்று அழைத்தார்.

கடந்த வாரம், சிரியாவின் வடமேற்கு இட்லிப் மாகாணம் தொடர்பான ரஷ்ய-துருக்கிய பேச்சுவார்த்தை முறிந்தது. துருக்கி மற்றும் நேட்டோ சக்திகளால் ஆதரிக்கப்படும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரிய அரசாங்க துருப்புக்கள் ரஷ்ய ஆதரவுடைய தாக்குதலை எதிர்பார்க்கின்றன. எவ்வாறாயினும், அல்கெய்தாவுடன் இணைந்துள்ள சிஐஏ ஆதரவு இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக சிரிய மற்றும் ஈரானிய தரைப்படைக்கு ஆதரவளிக்க ரஷ்ய மற்றும் சிரிய விமானங்களையும் கனரக பீரங்கிகளையும் பயன்படுத்துவதற்கு துருக்கிய ட்ரோன் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு உபகரணங்களானது ஒரு தடையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய போராளிகளும், துருக்கிய தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் அஜர்பைஜானுக்கு போராளிகளை அனுப்புவதற்கு அமர்த்துவதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன. அஜர்பைஜானில் "பாதுகாப்பு" வேலைகளுக்காக 7,000-10,000 துருக்கிய லிராக்களுக்கு (US$900-1,300) இஸ்லாமிய போராளிகளால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட இட்லிப் பகுதியைச் சேர்ந்த சிரியர்களை கார்டியன் செவ்வாயன்று பேட்டி கண்டது. "வேலை கிடைக்கவில்லை. நான் அலெப்போவில் ஒரு தையல்காரராக வேலை செய்தேன், ஆனால் நாங்கள் அஜாஸிற்கு இடம்பெயர்ந்தோம் [2016 இல் அலெப்போ அசாத்திடம் விழுந்த பின்னர்], நான் எனது கைவினைத் தொழிலை செய்ய பல முறை முயற்சித்தேன், ஆனால் என் குடும்பமும் நானும் போதுமான அளவுக்கு சம்பாதிக்க முடியாது," என்று கார்டியனிடம் ஒருவர் விளக்கினார்.

வாஷிங்டன் டி.சி.யிலுள்ள பூகோளக் கொள்கைக்கான சிந்தனைக் குழுவானது கார்டியனிடம் இந்தக் கதையை இரத்தம் உறைந்த முறையில் உறுதிப்படுத்தியது: “சிரியா பூகோள-மூலோபாய வெற்றிகளை தீர்ப்பதற்கான ஒரு அரங்காக செயல்படுவதுடன், சிரியர்களின் இழப்பில் நாட்டில் தலையிடும் நாடுகளின் நலன்களை மேம்படுத்துவதற்கும் சர்வதேச சமூகம் சிரியர்களின் வாழ்க்கை இழக்கக்கூடியதாக கருதுகிறது. … போரிலிருந்து தோன்றிய அவர்களின் பெரும் பொருளாதார அழிவு மற்றும் சிரிய நாணயத்தின் சமீபத்திய மதிப்பிறக்கம் என்பதன் அர்த்தம் பெரும்பாலான சிரியர்கள் இப்போது தங்களுக்கு உணவளிக்க போராடி வருகின்றனர். மிகச் சில வாய்ப்புக்களைத்தான் எதிர்கொண்டுள்ள பலர், இப்போது தங்களை அதிக விலைக்கு விற்க தயாராக உள்ளனர்.”

"துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் உலகில் எங்கிருந்தும் போராளிகளை ஆட்சேர்ப்பு செய்வதையோ அல்லது மாற்றுவதையோ கையாள்வதில்லை" என்று தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் அல்லது போராளிகளின் பங்கைக் குறிப்பிடாமல் துருக்கிய அரசாங்கம் ஒரு தெளிவற்ற அறிக்கையுடன் பதிலளித்தது.

இந்த அறிக்கைகள் பிரதான சக்திகளுக்கு இடையிலான இராஜதந்திர மற்றும் இராணுவ பதட்டங்களை வெகுவாக அதிகரிக்கின்றன. 1990 களில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் ரஷ்யாவில் இனப் பதட்டங்கள் அதிகரித்த நிலையில், ரஷ்யாவின் அருகிலுள்ள, முஸ்லீம் பெரும்பான்மை பகுதிகளான செச்னியா மற்றும் தாகெஸ்தான் போன்றவற்றில் உள்நாட்டுப் போர்கள் வெடித்தன. அஜர்பைஜானில் சிரிய இஸ்லாமியப் போராளிகளின் வருகையை மாஸ்கோ அச்சத்தோடு பார்க்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது: அதாவது "சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் போராளிகள், குறிப்பாக சிரியா மற்றும் லிபியாவிலிருந்து [அஜர்பைஜானுக்குப் பயணம் செய்துள்ளனர்] நேரடியாக சண்டைகளில் பங்கேற்க சென்றுள்ளனர்." இஸ்லாமிய போராளிகளை நிலைநிறுத்துவது குறித்து அது “ஆழ்ந்த சிரத்தை” கொண்டுள்ளது என்று வலியுறுத்தியது, இது “பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளின் பாதுகாப்பிற்கும் நீண்டகால அச்சுறுத்தல்களை” உருவாக்குகிறது என்று தெரிவித்தது. துருக்கி அல்லது அஜர்பைஜான் என்று பெயர் குறிப்பிடாமல், "சம்பந்தப்பட்ட அரசுகளின் தலைவர்கள்" இத்தகைய இடமாற்றங்களை நிறுத்தி, அஜர்பைஜானிலிருந்து இஸ்லாமிய துருப்புக்களை "உடனடியாக" திரும்பப் பெறுமாறு அது கோரியது.

லிபிய உள்நாட்டு போரில் துருக்கிக்கு எதிரான தரப்புகளை ஆதரிக்கும் மற்றும் மத்திய தரைக்கடலில் துருக்கிக்கு எதிரான கிரேக்க கடல் உரிமைகோரல்களுக்கு ஆதரவளிக்கும் பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், நேற்று காகசஸில் துருக்கியின் கொள்கையையும் தாக்கினார். "சமீபத்திய மணி நேரங்களில் துருக்கியின் போரார்வமிக்க அறிக்கைகள் குறித்து பிரான்ஸ் மிகவும் கவலைப்படுகிறது, அது அடிப்படையில் அஜர்பைஜானுக்கு நகோர்னோ-கரபாக் ஐ மீண்டும் கைப்பற்றி வெற்றி பெற பச்சை விளக்கு கொடுக்கிறது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை," என்று லாத்வியாவிலுள்ள ரிகாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மக்ரோன் கூறினார், அங்கு தான் பெலருஸின் தேர்தல் நெருக்கடி பற்றி விவாதிக்க பயணம் செய்து கொண்டிருந்தார்.

இந்த ஆர்மீனிய-அஸெரி போரின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் வாஷிங்டனின் மெளனம் ஆகும்; அது மாஸ்கோ மற்றும் பாரிஸுடன் ஆர்மீனிய-அஸெரி மோதலை நிர்வகிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடுகின்ற 1992 ல் இருந்து நியமிக்கப்பட்ட மின்ஸ்க் குழுவிற்கு பெயரளவில் தலைமை தாங்குகிறது. ஆனால் வாஷிங்டன் நிதானத்தை கடைபிடிக்க குறிப்பிடத்தக்க வகையில் கோரவில்லை. "எங்களால் அதை நிறுத்த முடியுமா என்பதை நாங்கள் பார்ப்போம்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு சுருக்கமான அறிக்கையை மட்டுமே வெளியிட்டார்.

ஐரோப்பாவின் கார்னெஜி அறக்கட்டளையின் தோமஸ் டு வால் வாஷிங்டனை "வழக்கத்திற்கு மாறாக ஈடுபாடு காட்டவில்லை" என்றும் "மேலும் விரிவாக்கம் மற்றும் பெரும் பேரழிவு அபாயகரமான உயர்வு" என்றும் அழைத்தார். அவர் மேலும் கூறுகையில், “வாஷிங்டன் ஒரு அறிக்கையை கடைசியாக வெளியிட்ட பெரிய சர்வதேச சக்தி, இது இந்த பிராந்தியத்தில் ஆர்வத்திலிருந்து பின்வாங்குவதைக் குறிக்கிறது. பாகுவில் ஒருபோதும் முடிக்கப்படாத டிரம்ப் கோபுரத்தின் திட்ட அனுசரணையாளரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானை ஒரு வணிக முன்னோக்கின் மூலம் மட்டுமே கருதுகிறார் என்பதற்கான அறிகுறியாகும்.”

உண்மையில், ஐரோப்பா, ரஷ்யா மற்றும் கிழக்கு ஆசியாவை நோக்கிய அதன் பூகோள அரசியல் மூலோபாயத்தின் திறவுகோலாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த வாஷிங்டன் பல தசாப்தங்களாக முயன்று வருகிறது. ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரேனில் இராணுவப் பயிற்சிகளால் அமெரிக்கப் படைகள் ரஷ்யாவை அச்சுறுத்துவதோடு, ஈராக்கில் ஈரான் ஆதரவுப் போராளிகளுக்கு குண்டு வீசுவதும், மாஸ்கோவையும் தெஹ்ரானையும் அச்சுறுத்துவதில் கவனம் செலுத்துகையில் இந்த மோதல் அதிகரிக்க விடப்படுவதற்கு வாஷிங்டன் திருப்தி அடைவதாகத் தெரிகிறது.

காக்கசஸில் நடந்து கொண்டிருக்கும் போர் என்பது, தேசிய-அரசு அமைப்புமுறையின் திவால்நிலை குறித்தும் யூரேசியா முழுவதும் தேசிய மற்றும் இன மோதல்களால் எழுந்த பாரிய அளவிலான போரின் ஆபத்து குறித்தும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். ஏகாதிபத்தியம், தேசியவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி ஐக்கியப்படுத்துவது அவசரஅவசியமாக உள்ளது.

Loading