முன்னோக்கு

ட்ரம்பின் வருமான வரி தாக்கலும், நிதியியல் செல்வந்த தட்டின் ஒட்டுண்ணித்தனமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமை நியூ யோர்க் டைம்ஸின் முதல் பக்கம் எங்கிலும் வியாபித்திருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வருமான வரிகள் மீதான விரிவார்ந்த பகுப்பாய்வு, வெள்ளை மாளிகையில் வாழும் ஊழல் கொள்ளையர்களை அம்பலப்படுத்துவதைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது. அது, உழைக்கும் மக்களைச் சுரண்டி நாட்டின் செல்வவளத்தை ஏகபோகமாக்கும் பெரும் செல்வந்த குடும்பங்களின், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகள் உள்ளடங்கலாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஒட்டுமொத்தமாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகும்.

ட்ரம்ப் அமைப்பு நடத்திய நிதி மோசடிகளைக் குறித்து விரிவார்ந்த விபரங்களை வழங்கும் விதத்தில், தனிநபர் வருமான வரி மீதும் மற்றும் வியாபார வருமான வரி மீதும் 20 ஆண்டு கால விபரங்களை டைம்ஸ் பத்திரிகை கைவரப் பெற்றிருந்தது. நிஜமான வருவாயை ஈடுகட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவண இழப்புகளைக் காட்டவும், வரி செலுத்துவதைத் தவிர்க்கவும், ட்ரம்ப் மற்றும் அவர் குழந்தைகளின் ரியல் எஸ்டேட், சூதாட்டம் மற்றும் கோல்ஃப் விளையாட்டு மன்றங்களின் சாம்ராஜ்ஜியம் பெரிதாக ஒன்றும் இலாபமீட்டவில்லை என்ற உண்மைக்கு மத்தியிலும், தங்களை எப்போதைக்கும் முடிவின்றி செல்வ செழிப்பாக வைத்திருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும் நூற்றுக் கணக்கான சேய் நிறுவனங்களையும் போலி நிறுவனங்களையும் அக்குடும்ப நிறுவனம் பயன்படுத்தி இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27, 2020 இல் வாஷிங்டனில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தின் போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார். (படம்: அசோசியேடெட் பிரஸ்/ காரோலின் காஸ்டர்)

அந்த செய்தி அறிவித்தவாறு, “இறுதியில், திரு. ட்ரம்ப் நிஜ வாழ்வில் இருப்பதைக் காட்டிலும் ஒரு வியாபார அதிபராக மிகவும் வெற்றிகரமாக விளையாடி உள்ளார்.” அவரின் நீண்டகால NBC நிஜ நிகழ்ச்சியான The Apprentice அவரின் உண்மையான வியாபார நடவடிக்கைகளை விட அதிக இலாபகரமாக இருந்தது. அவரின் திவால்நிலைமைகள் மற்றும் பின்னடைவுகள் நீண்ட காலத்திற்கு முன்னரே அறியப்பட்டுள்ளன என்றாலும், டைம்ஸ் பத்திரிகையின் விபரங்கள், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினது நிர்வாகங்களால் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட வரிமுறைகள், வியாபாரத்தில் பொதுவாக அவரின் பெரும் பாதிப்புகளுக்கு மத்தியிலும் ட்ரம்பால் எவ்வாறு மிகப் பெரியளவில் செல்வவளத்தைக் குவித்து கொள்ள அனுமதித்தன என்பதன் மீது நுணுக்கமான விபரங்களுடன் ஒரு சித்திரத்தை வழங்குகிறது.

டைம்ஸ் பத்திரிகை விபரங்கள், கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு ட்ரம்ப் நிர்வாக விடையிறுப்பு மீதான விளக்கத்திற்கு மற்றொரு பரிமாணத்தைச் சேர்க்கிறது. ரியல் எஸ்டேட், உணவு விடுதிகள் மற்றும் கோல்ஃப் மனமகிழ் மன்றங்களில் அவருக்கிருக்கும் பாரிய சொத்திருப்புகள் ஒருபுறம் இருக்க, மனித உயிர்களை விலையாக கொடுப்பதைக் கூட பொருட்படுத்தாமல், பொருளாதாரத்தை மீண்டும் திறந்து விடவும், மற்றும் போக்குவரத்து, வியாபார சந்திப்புகள், விளையாட்டு நிகழ்வுகளை மீண்டும் தொடங்கவும் கோருவதில் அவர் நேரடியான மற்றும் உடனடியான நிதியியல் நலனைக் கொண்டிருந்தார். இதில் அவர் மட்டும் தனியாக இல்லை, மாறாக அவர் அவரின் வர்க்க நலன்களுக்காக பேசினார்.

ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கு முந்தைய 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் எந்த வருமான வரியும் செலுத்தி இருக்கவில்லை; 2016 மற்றும் 2017 இல் வருமான வரியாக 750 டாலர் செலுத்தினார், இது குறைந்தபட்ச கூலியில் வேலை செய்யும் உணவக சேவகர் செலுத்தும் தொகைக்கு நிகரானது; வியாபார செலவு என்பதாக முடிவெட்டுவதில் 75,000 ஐ கழித்திருந்தார்; அவரின் பருவமடைந்த குழந்தைகளின் பைகளில் "ஆலோசனைக்கான கட்டணம்" என்று நூறாயிரக் கணக்கில் வழங்கியிருந்தார் என்று அப்பத்திரிகை குறிப்பிடும் விபரங்கள் மலைப்பூட்டுகின்றன. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் பாசாங்குத்தனமான ஒரு மோசடியாளர் என்பது ஒளிவுமறைவின்ற நிரூபிக்கப்படுவதைப் பார்க்கையில் அது ஒன்றும் ஆச்சரியப்படுத்தவில்லை. மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள், நீண்ட காலமாகவே, வியாபாரத்திலும் அரசியலிலும் இரண்டிலுமே அவரை பழிக்கஞ்சாத ஒரு ஏமாற்றுக்காரராக தான் அங்கீகரிக்கின்றனர்.

உத்தியோகபூர்வ எஸ்டேட் வரி விகிதம் 55 சதவீதமாக இருந்த போதும் கூட நடைமுறையில் வெறும் 10 சதவீத வரிவிகிதம் மட்டுமே செலுத்தி, ட்ரம்பின் தந்தை எவ்வாறு அவர் செல்வவளத்தின் பெரும்பகுதியை அவர் மகன் டொனால்டுக்குக் கைமாற்ற வரி முறைகளில் மோசடி செய்தார் என்பதை, டைம்ஸ் பத்திரிகை, இரண்டாண்டுகளுக்கு முன்னரே, இதேயளவுக்கு விரிவாக ஆய்வு செய்து பிரசுரித்திருந்தது. அப்போது WSWS கருத்துரைக்கையில், “ட்ரம்பின் சொத்துக்களைக் குறித்து விரிவாக அது அம்பலப்படுத்தியதன் மூலம், ஓர் ஒட்டுண்ணித்தனமான செல்வந்த தட்டு தொடர்ந்து உயிர்வாழ்வது பெரும் பெரும்பான்மை மக்களின் மிகவும் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்குப் பொருத்தமாக இருக்காது என்ற சோசலிசவாதிகளின் வலியுறுத்தலை டைம்ஸ் தன்னையறியாமலேயே உறுதிப்படுத்திவிட்டது,” என்று குறிப்பிட்டது.

ஊழலும் வரி ஏய்ப்பும், ஒருவேளை குரூரத்தில் குறைவானதாக இருந்தாலும் சில விடயங்களில் மிகவும் பெரியளவில் இருந்தாலும், அமெரிக்க ஆளும் உயரடுக்கு முழுவதிலும் அது பொதுவாக நிறைந்துள்ளது. IRS புள்ளிவிபரங்களின்படி, வாரிசுரிமை செல்வவளம் கைமாற்றப்படுவதன் மீதான நடப்பிலுள்ள வரிமான வரி விகிதம், உழைக்கும் மக்கள் மீதான சராசரி வரி விகிதமான 18-19 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 4 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்னரே, மன்ஹட்டன் ஹோட்டல் வாரிசான லியோனா ஹெல்ம்ஸ்லே மீது வரி ஏய்ப்பு குற்றத்தீர்ப்பு வருவதற்கு முன்னரே, அவர் "வெகு சிலர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள்,” என்று கூறியிருந்தார். இன்றோ அது ஒட்டுமொத்த நிதியியல் பிரபுத்துவத்தின் இலட்சியமாக சேவையாற்றுகிறது.

தொழிலாளர்கள் மீது சுமையேற்ற IRS அதையொரு புள்ளியாக ஆக்குகிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். ட்ரம்ப் குடும்பத்தால் நடத்தப்படுவதைப் போன்ற பாரியளவில் வரி-ஏய்ப்பு நடைமுறைகள் மீது வழமையாக IRS கண்மூடி இருக்கிறது என்றாலும் கூட, பரிதாபகரமாக ஆசிரியர்களும் அல்லது வாகனத்துறை தொழிலாளர்களும் தான் அந்த அமைப்புக்குக் கொடுக்க வேண்டியதற்கும் குறைவாக கொடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். பல தசாப்தங்களாக அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு தொடர்ந்து செல்வந்தர்களுக்கு வரி வெட்டுக்களைச் செய்து வந்தது என்பதையும், சமூக சமத்துவமின்மையைத் திட்டமிட்டு விரிவாக்கியதன் மூலமாக எவ்வாறு அது அமுலாக்க இயங்குமுறைகளை இல்லாதொழித்தது என்பதையும் பொருளாதார நிபுணர்கள் இமானுவேல் சாஸ் மற்றும் கேப்ரியல் ஜூக்மன் விவரித்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்பினராலும் திட்டமிட்டு இதுபோன்ற ஏய்ப்புகள் செய்ய உதவியாகவும், நிதியியல் உயரடுக்கு மீது வரிச்சுமைகளைக் குறைக்கும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட வரிச் சட்டங்களை ட்ரம்ப் அவருக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளார் என்பதே அவரின் பல தசாப்த கால நிதிய ஏமாற்றுத்தனத்தின் மத்திய அம்சமாக உள்ளது. 2010 இல் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தான், IRS “கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை" திரும்பி செலுத்துவதாக கூறி, ட்ரம்புக்கு 72.9 மில்லியன் டாலர் தொகையை வழங்க உத்தரவிட்டது.

At least until he launched his campaign for the Republican presidential nomination in 2015, Trump bribed Democrats and Republicans alike with “campaign contributions” and was rewarded with loopholes such as the favored treatment of real estate losses in the Obama administration bailout of Wall Street in 2009.

குறைந்தபட்சம் 2015 இல் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு அவர் பிரச்சாரத்தைத் தொடங்கும் வரையில், ட்ரம்ப் "தேர்தல் பிரச்சார நன்கொடைகள்" மூலமாக ஜனநாயகக் கட்சியினருக்கும் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கும் ஒன்றுபோல இலஞ்சம் வழங்கி வந்த அதேவேளையில், ஒபாமா நிர்வாகத்தில் 2009 வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பில் ரியல் எஸ்டேட் நஷ்டங்களுக்காக வழங்கப்படும் உதவிகள் போன்ற ஓட்டைகள் மூலமாக அவருக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன.

தற்போது அவரின் எதிர் போட்டியாளர்களாக நிற்கும் ஜோ பைடென் மற்றும் கமலா ஹரீஸ் ஆகியோர் பல ஆண்டுகளாக ட்ரம்பின் நன்கொடைகளில் இருந்து ஆதாயமடைந்த அரசியல்வாதிகளில் உள்ளடங்குவர். இரண்டு நியூ யோர்க் ஜனநாயகக் கட்சி செனட்டர்களான சார்லஸ் சூமருக்கும், ஜனநாயகக் கட்சியின் இப்போதைய செனட் சபை தலைவர் ஹிலாரி கிளிண்டனுக்கும் அவர் 17 முறை தேர்தல் பிரச்சார நன்கொடைகள் வழங்கி உள்ளார். அரசியல்ரீதியில் சங்கடமான இந்த வரலாறு குறித்து எதுவுமே ட்ரம்பின் வரி ஏய்ப்பு மீதான டைம்ஸின் விபரங்களில் தென்படவில்லை.

ஜனநாயகக் கட்சியின் அனுதாபிகள், குறிப்பாக அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) முகாமில் உள்ளவர்கள் வேண்டுமானால் இந்த டைம்ஸ் கட்டுரையைச் சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட புத்திசாலித்தனமான நகர்வு என்று பார்க்கலாம். 2016 இல் பாலியல் மோசடி எழுத்துப்பிரதிகளின் வெளியீடு போன்றில்லாமல், ஓர் ஊழல் மோசடியாளராக ட்ரம்ப் தீர்க்கமாக அம்பலப்படுத்தப்பட்டிருப்பது அவர் பிரச்சாரத்தைத் தோய்வடைய செய்வதில் வெற்றி அடையுமென, சந்தேகத்திற்கிடமின்றி, அவர்கள் நம்புகிறார்கள்.

ட்ரம்பின் அப்பட்டமான வரி ஏய்ப்பு மீதான இந்த அம்பலப்படுத்தல் அவருக்கு சில வாக்குகளை வேண்டுமானால் குறைக்க சாத்தியமுள்ளது. ஆனால் இந்த அம்பலப்படுத்தல் பைடென் தேர்தல் பிரச்சாரக் குழுவின் பிற்போக்குத்தனமான தன்மையை மாற்றிவிடப் போவதில்லை.

ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் முகவர் அல்லது பலிக்கடா என்றும், அவர் நிர்வாகம் மத்தியக் கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும், மிகவும் பொதுவானரீதியில், ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் சம்பந்தமாக அமெரிக்க "தேசிய பாதுகாப்பு" நலன்களைப் பலவீனப்படுத்தி உள்ளது என்றும் அறிவுறுத்துவதே இந்த பிரச்சாரத்தின் மத்திய அம்சமாக உள்ளது. அவர் அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்கியதை விட இந்தியா, பிலிப்பைன்ஸ், துருக்கி மற்றும் பனாமா உட்பட வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு ட்ரம்ப் அதிக வரி செலுத்தி உள்ளார் என்ற உண்மையை பல ஊடக விமர்சகர்களும் உடனடியாக கைப்பற்றிக் கொண்டனர்.

ட்ரம்பின் வருமான வரிகள் மற்றும் தனிப்பட்ட நிதிகளைக் குறித்த விபரங்களைப் பிரசுரித்ததற்கு விடையிறுத்து, மீண்டுமொரு முறை ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்காக மிகவும் உரக்க குரல் கொடுத்து வக்காலத்து வாங்கி வருபவர்களில் ஒருவரான சபாநாயகர் நான்சி பிலோசியும் இதே கருத்துருவை எதிரொலித்தார். ட்ரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்து நஷ்டங்களுக்கு இடையிலும் 400 மில்லியன் டாலர் குவித்துக் கொண்டிருந்தார் என்பதுடன், அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் வெள்ளை மாளிகையின் இரண்டாவது பதவிக் காலத்தில் 300 மில்லியன் டாலர் கடனாக நிலுவையில் இருக்கும் என்பதும் இதில் உள்ளடங்கும் என்ற டைம்ஸின் முடிவைக் குறிப்பிட்டு, அவர் அறிவிக்கையில் ட்ரம்பின் வருமான வரிகள் "தேசிய பாதுகாப்பு பிரச்சினையை" எடுத்துக்காட்டுவதாக அறிவித்தார்.

வருமான வரி தாக்கல்கள் ரஷ்யாவிடமிருந்து எந்த வியாபார வருவாயையும் எடுத்துக்காட்டவில்லை என்பதை டைம்ஸ் ஒப்புக் கொண்டபோதும் கூட, பிலோசி ட்ரம்பை மாஸ்கோவுடன் தொடர்பு படுத்தினார்: “ஜனாதிபதி நேட்டோவுக்கான நமது கடமைப்பாடுகளைக் குறைக்க முயலுதல், ரஷ்யா மற்றும் சிரியாவுக்குச் சந்தையை விட்டுக் கொடுத்தல் என ஜனாதிபதி அரசியல்ரீதியிலும், தனிப்பட்டரீதியிலும், நிதியியல்ரீதியிலும் புட்டினுடன் என்ன தொடர்பில் உள்ளார் என்பது தான் கேள்வியாக உள்ளது … அவருக்குப் புட்டினைப் பிடிக்கும் என்றும் புட்டினுக்கு அவரைப் பிடிக்கும் என்றும் அவர் கூறுகிறார். சரி, என்ன தொடர்பு? பார்ப்போம்,” என்றார்.

ட்ரம்பின் எஜமானர் மாஸ்கோவில் உள்ளார் என்று குற்றஞ்சாட்டும் இத்தகைய விசித்திரமான மெக்கார்த்தி பாணியிலான தாக்குதல்கள் அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பை நியாயப்படுத்தும் ஓர் அரசியல் சூழலுக்குப் பங்காற்றுகிறது. அனைத்திற்கும் மேலாக இது ட்ரம்பின் சக மோசடியாளர்களுக்கு நிதியளித்து இதில் சம அளவில் அமெரிக்க வங்கிகள் வகிக்கும் பாத்திரத்தை சர்வசாதாரணமாக உதறிவிடுகிறது.

இதை விட, ட்ரம்பைப் பதவிநீக்க —இதுவொரு விளைவாக ஏற்படுகிறது என்ற அனுமானத்தில் அடிப்படையில் பார்த்தால்— ஒரு மோசடியைப் பயன்படுத்துவது அமெரிக்காவின் அரசியல் சூழலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது. ட்ரம்ப் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சமூக நெருக்கடியின் தீவிரப்பாடானது —இதற்கு ஜனநாயகக் கட்சியினரிடம் எந்த பதிலும் இல்லை— பாசிசவாத எதேச்சதிகார இயக்கங்களை வளரச் செய்வதற்கே மூலாதார சக்தியை வழங்கும்.

ட்ரம்ப் எதன் விளைபொருளாக உள்ளாரோ அந்த முதலாளித்துவ அமைப்புமுறையைப் பாதுகாக்கும் ஜனநாயகக் கட்சியைக் கொண்டு, எதேச்சதிகார ஆட்சியை நோக்கிய ட்ரம்பின் முனைவைத் தோற்கடித்து ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து விடலாம் என்பது சாத்தியமே இல்லை.

ட்ரம்பின் வருமான வரி தாக்கல்கள் மொத்தமாக ஊழல் மற்றும் குற்றங்களில் பின்னிப் பிணைந்துள்ள ஓர் ஆளும் வர்க்கத்தின் சித்திரத்தை வழங்குகிறது. மத்திய வங்கிகளால் முடிவில்லாமல் பணம் வழங்கப்படுவதன் அடிப்படையில், செல்வந்த தட்டுக்கள் மூர்க்கமாக பணத்தைச் சுற்றி திரும்பியதன் மூலமாக தங்களின் செல்வவளத்தை உருவாக்கி வருகின்றன. விபச்சார விடுதியின் தோற்றம் கொண்ட, ட்ரம்பின் பகட்டான இரசனையற்ற மாளிகைகள், முன்னொருபோதும் இல்லாதளவில் மிகப்பெரும் கடன் குவியல்களைத் தவிர வேறெந்த மதிப்பையும் உருவாக்காமல், ஏமாற்றுத்தனம், ஊக வணிகம் மற்றும் மோசடி மேலோங்கிய ஒட்டுமொத்த அமெரிக்க முதலாளித்துவ காலக்கட்டத்தின் ஒரு விளைபொருளாகும்.

ட்ரம்ப் விதிவிலக்கானவர் இல்லை; அவர் பொதுவான நடைமுறையில் ஒருவராவார். ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் பல்வேறு குற்றகரமான நடவடிக்கை வடிவங்களுடன் அதன் சமூக இருப்பைக் கொண்டுள்ளது, தவிர்க்கவியலாமல் இதற்கு தொழிலாளர்கள் தான் பலிக்கடா ஆகிறார்கள். இந்த நிதியியல் செல்வந்த தட்டுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது அவசர சமூக தேவையாக ஆகியுள்ளது.

Loading