ஒரு கொலைகார ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளை நாடு கடத்தவுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் புதன்கிழமை முன்வைத்த “புகலிடம் மற்றும் குடிவரவு ஒப்பந்தம்” மிகவும் இழிந்த மற்றும் மனிதாபிமானமற்றதும், அதை விவரிக்க வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதும் கடினமாகும். "மதிப்புகள்," "பொறுப்பு" மற்றும் "ஒற்றுமை" பற்றிய இனிப்பு சொற்றொடர்களினால் மூடப்பட்ட ஒரு திட்டத்தை ஆணைக்குழுவின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் முன்வைத்துள்ளார். இத்திட்டமானது நாடுகடத்தல், ஏழ்மை மற்றும் சில நூறாயிரக்கணக்கானவர்களுக்கு மரணங்கள் என்பதையே அர்த்தப்படுத்துகின்றது.

Pro Asyl என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குந்தர் புர்க்கார்ட் இந்த திட்டத்தை "உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையின் ஒரு கடுமையான ஒப்பந்தம்" என்று அழைத்தார். "வலதுசாரி ஜனரஞ்சகவாதிகளால் உந்தப்பட்டு, ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் புகலிடம் கோருவதற்கான உரிமையையும், பாதுகாப்பை எதிர்பார்க்கும் மக்களின் மனித உரிமைகளையும் காட்டிக் கொடுக்கிறது," என்று அவர் கருத்து தெரிவித்தார்.

மோரியா அகதிகள் முகாம் (புகைப்படம்: Tim Lüddemann)

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நடந்த போர்களில் இருந்து ஐரோப்பாவில் தஞ்சம் புகுபவர்களை கையாள்வது தொடர்பான இந்த ஒப்பந்தத்தை ஒரு "புதிய ஆரம்பம்" என்று வொன் டெர் லெயன் விவரித்த திட்டம் மீண்டும் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. "ஐரோப்பா சிக்கல்களுக்கான அவ்வப்போதான தற்காலிக தீர்வுகளிலிருந்து விலகி, குடிவரவை நிர்வாகிப்பதற்கு ஒரு கணக்கெடுக்கத்தக்க தகுந்த திட்டத்திற்கான அமைப்பை நோக்கி நகர வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் கூறினார்.

இந்த "நிர்வாகம்" தங்கள் உயிருக்கு ஆபத்திற்குள்ளாக்கி ஐரோப்பாவின் கோட்டை எல்லைகளை கடக்க முடிந்த அகதிகளை வெளியேற்றுவதில் கவனம் செலுத்துகிறது. புகலிடம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய அடிப்படைக் கொள்கைகளில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை.

"அகதிகள் தொகை பற்றிய ஒதுக்கீடுகள் இல்லை, ஆனால் கடுமையான நாடுகடத்தல்கள்" என்பது செய்தி வார இதழ் Der Spiegel திட்டத்தின் மையத்தை சுருக்கமாகக் கூறியது. பசுமைக் கட்சி சார்பு taz பின்வருமாறு எழுதுகிறது, "விரைவான பதிவுகள், விரைவான முடிவுகள், விரைவாக நாடுகடத்தப்படுதல், முடிந்தால் ஏற்கனவே வெளிப்புற எல்லைகளில் வைத்து என்பதே ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தால் அதன்" குடிவரவு மற்றும் புகலிடம் ஒப்பந்தத்தில் "முன்மொழியப்பட்ட மிக முக்கியமான கண்டுபிடிப்புகள்." இந்த ஒப்பந்தத்தை வொன் டெர் லெயனுடன் முன்வைத்த குடிவரவு ஆணையர் யல்வா ஜோஹன்சன், “இதிலுள்ள செய்தி: நீங்கள் திரும்பி அனுப்ப்படுவீர்கள்” என்றார்.

இதை அடைய, திட்டம் இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளை வழங்குகிறது: “screening” நடைமுறைகள் மற்றும் “நாடுகடத்தல் கூட்டாண்மை.”

screening நடைமுறையில், ஐரோப்பிய கடற்கரைகளுக்கு வரும் அகதிகள் ஐந்து நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டு முன்கூட்டியே பிரிக்கப்படுகிறார்கள் (“screened”). தஞ்சம் கோருவோரில் 20 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் இதுவரை அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டிலிருந்து வருபவர்கள் எல்லை நடைமுறை என்று அழைக்கப்படுபவதற்கு உள்ளாக்கப்பட்டு 12 வாரங்களுக்குள் மீண்டும் நாடு கடத்தப்படுகிறார்கள்.

நடைமுறையில், இது புகலிடம் கோருவதற்கான உரிமையை ஒழிப்பதற்கு ஒப்பானதாகும். screening மற்றும் எல்லை நடைமுறைகளின் போது, அகதிகள் நாட்டிற்குள் இன்னும் நுழைந்திருக்கவில்லை என்று கருதப்படுகிறது. அதாவது அவர்களுக்கு ஐரோப்பிய நீதிமன்றங்களுக்கு அணுகல் இல்லை, எதிர்மறையான முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. இந்த முடிவு குடிவரவு அதிகாரிகளின் தன்னிச்சையான தீர்ப்புகளுக்கு விடப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் அரசியல்ரீதியாக வலதுசாரிகளாகவும் மற்றும் அவர்களின் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர். நியாயமான புகலிட விசாரணைமுறைக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.

இந்த screening மற்றும் எல்லை நடைமுறைகளை சாத்தியமாக்குவதற்கு, ஐரோப்பிய எல்லையில் உள்ள வரவேற்பு முகாம்கள் பெரிய சிறைகளாக மாற்றப்படும், அதில் இருந்து தப்பிக்க முடியாது. கிரேக்கத்தில் லெஸ்போஸில் எரிக்கப்பட்ட மோரியா முகாம், தற்போது ஒரு கூடார நகரமாக மீண்டும் கட்டப்பட்டு வருகிறது. இது ஒரு முன்மாதிரி திட்டமாக செயல்படுகிறது. பிரஸ்ஸல்ஸில் இருந்து ஒரு "பணிக்குழு" லெஸ்போஸில் ஒரு "மாதிரி திட்டத்தை" அமைக்கவுள்ளது. அங்கு ஆணையத்தின் திட்டங்கள் முதலில் நடைமுறைப்படுத்தப்படும். கிரீஸ் ஏற்கனவே "கூட்டு முன்மாதிரி திட்டத்திற்கு" ஒப்புக் கொண்டுள்ளது "என்று வொன் டெர் லெயன் கூறினார்.

மோரியா புதிய முகாம் ஒரு சட்டரீதியாக ஒருவரும் அற்ற நிலமாகும். வக்கீல்களைப் போலவே பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. கைதிகள் முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை, அவர்கள் விவரிக்க முடியாத நிலையில் வாழ வேண்டும். தண்ணீர், போத்தல்களில் தவணை முறையில் வழங்கப்படுகிறது. குளிப்பதற்கு வசதி இல்லை. முகாமுக்கு அடுத்துள்ள கடலுக்கு செல்வது கூட முள்கம்பியால் தடுக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின் இரண்டாவது கண்டுபிடிப்பான “நாடுகடத்தல் கூட்டாண்மை” என்பது புதிதாக வடிவமைக்கப்பட்ட, வக்கிரமான வடிவமான “ஐரோப்பிய ஒற்றுமை” ஆகும். அங்கீகரிக்கப்பட்ட அகதிகளின் ஒரு ஒதுக்கப்பட்ட தொகையை ஏற்க மறுக்கும் நாடுகள் தங்களது சுதந்திரத்தின்படி அங்கீகரிக்கப்படாத அகதிகளின் எண்ணிக்கையை நாடு கடத்துவதன் மூலம் தங்கள் “ஒற்றுமையை” காட்டலாம்.

எதிர்காலத்தில் நாடுகள் "அகதிகளை வரவேற்பதற்கும் மற்றும் நாடுகடத்தலுக்கு உதவுவதற்கு இடையே தேர்வு செய்ய முடியும்" என்று இடம்பெயர்வு ஆணையர் ஜோஹன்சன் கூறினார். எட்டு மாதங்களுக்குள் அகதிகளை நாடு கடத்துவதில் அவர்கள் தோல்வியுற்றால், உதாரணமாக, நோய் காரணமாக அல்லது பிறந்த நாட்டால் மறுக்கப்பட்டால், அவர்கள் அப்படியானவர்களை தாங்களே எடுத்துக் கொள்ள வேண்டும்.

நடைமுறையில், இதன் பொருள் என்னவென்றால், இதுவரை அகதிகளை கையாள்வதில் மிகவும் மிருகத்தனமாக இருந்த ஹங்கேரி போன்ற நாடுகள், ஐரோப்பிய கோட்டைக்கு பாதுகாப்புக் காவலர் மற்றும் வாசல் காவல்காரனின் பங்கை ஏற்றுக்கொள்கின்றன. சம்பந்தப்பட்ட அகதிகளுக்கு இது எதைக் குறிக்கிறது என்பதை கற்பனை செய்வது எளிது. அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே வைப்பதற்கு இதைவிட எந்த வகையிலும் காட்டுமிராண்டித்தனமான ஒன்றும் இருக்காது. ஐரோப்பிய ஒன்றியமே இதற்கு முன்னிலை வகிக்க விரும்புகிறது. இந்த நோக்கத்திற்காக, "திருப்பி அனுப்புவதற்கான ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்" நியமிக்கப்பட உள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் மற்றும் அங்கத்துவ நாடுகளால் இன்னும் அங்கீகரிக்கப்படாத வொன் டெர் லெயனின் குடிவரவு திட்டம், பல்லாயிரக்கணக்கான அகதிகளை மத்தியதரைக் கடலில் மூழ்கடிப்பதற்கும், சஹாராவில் தாகத்தால் இறப்பது அல்லது சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி கொண்ட மனித கடத்தல்காரர்களால் அடிமைப்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளுக்கும் தொடர்ந்தும் இடமளிக்கிறது. கடல் மீட்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கோ அல்லது மோசமான லிபிய கடலோர காவல்படையினருடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கோ இது வழங்கவில்லை. அதற்கு பதிலாக, எல்லை மேலாண்மை நிறுவனமான Frontex ஐரோப்பாவின் வெளிப்புற எல்லைகளை இன்னும் அதிக அளவில் அடைத்துவைப்பதற்கும் மேலும் பலப்படுத்தப்பட உள்ளது.

2019 ஆம் ஆண்டில், 140,000 அகதிகள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோர விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அங்கீகரிக்கப்படுவார்கள். ஆனால் 1,000 குடிமக்களுக்கு 1 புகலிடம் கோருபவர் என்ற இந்த எண்ணிக்கைகூட கூட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகமானதாக தெரிகின்றது.

உத்தியோகபூர்வமாக, "புகலிடம் மற்றும் குடிவரவு ஒப்பந்தம்" ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திலிருந்து தோன்றியது. ஆனால் அதன் உண்மையான ஆசிரியர்கள் பேர்லின் சான்சலர் அலுவலகம் மற்றும் ஜேர்மன் உள்துறை அமைச்சகத்தில் உள்ளவர்கள். தற்போது ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பதவியில் இருக்கும் அதிபர் அங்கேலா மேர்க்கெலால் இந்த திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த ஆணையம் இதன் அடிப்படையில் ஜேர்மன் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைத்துவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்கிறது.

உள்துறை மந்திரி ஹார்ஸ்ட் சீஹோஃபர் ஏற்கனவே கடந்த நவம்பரில் ஒரு ஆய்வறிக்கையை விநியோகித்திருந்தார், இது 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஜேர்மன் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கான ஒரு வகையான வரைபடமாக கருதப்பட்டது. தடுப்பு முகாம்களில் தஞ்சம் கோருவதற்கான "பூர்வாங்க பரிசோதனைகளை" இது பரிந்துரைத்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் உள்ள தடுப்பு முகாம்களில் "ஆதாரமற்ற விண்ணப்பங்களை" முன்வைத்த அகதிகள் மீண்டும் நேரடியாக நாடு கடத்தப்படுவார்கள். முகாம்களுக்கு பிராந்தியங்களுக்கு அப்பாற்பட்ட தன்மை இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் அதன் சொந்த புகலிட பரிசோதனை அமைப்பை கொண்டிருப்பதுடன் பூர்வாங்க பரிசோதனை மற்றும் நாடுகடத்தலில் நேரடியாக Frontex உடன் பங்கேற்க வேண்டும். இந்த திட்டங்கள் இப்போது ஐரோப்பிய ஒன்றிய தாளில் பிரதிபலிக்கின்றன.

பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் எவ்வாறு இரக்கமற்ற தன்மையுடன் முக்கிய அடிப்படை உரிமைகளையும், அகதிகளின் உயிரையும் புறக்கணிக்கின்றதென்பதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் மனித வாழ்க்கையைப் பற்றிய அதே இரக்கமற்ற தன்மையை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதன்போது அவர்கள் நூறாயிரக்கணக்கான மக்களின் மரணங்களை வேண்டுமென்றே ஏற்றுக்கொள்கிறார்கள். நோய்த்தொற்று விகிதங்கள் வெடிக்கும் போதிலும், பொருளாதாரத்தினது இலாபங்களையும் பணக்காரர்களின் சொத்துக்களையும் பாதிக்காத வகையில் வணிகங்கள் மற்றும் பள்ளிகள் திறந்திருக்கும்.

1930 களில் இருந்து முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கம், இளைஞர்களிடமிருந்து அதிகரித்துவரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள ஆளும் வர்க்கம் எங்கும் சர்வாதிகார கட்டுப்பாட்டு முறைகளை நோக்கி திரும்புகிறது. வொன் டெர் லெயனின் “தஞ்சம் மற்றும் குடிவரவு ஒப்பந்தம்” ஜேர்மனிக்கான மாற்று (AfD), இத்தாலிய Lega அல்லது பிரெஞ்சு Rassemblement National ஆகியவற்றின் கட்சி தலைமையகத்திலும் எழுதப்பட்டிருக்கலாம். இந்த தீவிர வலதுசாரி மற்றும் நவ-பாசிச அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரி வரும் அனைத்தையும் இவ் ஒப்பந்தம் செயல்படுத்துகிறது.

தொழிலாள வர்க்கம் நிபந்தனையின்றி அனைத்து அகதிகளையும் தஞ்சம் கோருவதற்கான அவர்களின் அடிப்படை உரிமையையும் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளையும் பாதுகாக்க முடியும். இதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தை நிர்மாணிக்க வேண்டும். இது பாசிசம், போர் மற்றும் வறுமைக்கான காரணமான முதலாளித்துவத்தை அகற்றுவதற்காகவும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகவும் போராடவேண்டும்.

Loading