ஜேர்மன் ஒன்றிணைவின் 30 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் மக்களில் பெரும்பான்மையினருக்கு ஜேர்மன் ஒன்றிணைந்த இந்த நாளில் கொண்டாட எதுவும் இல்லை. உத்தியோகபூர்வ ஜேர்மன் தேசிய விடுமுறை, மக்கள் தொகையில் ஒருபோதும் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்புகளைக் காணவில்லை. ஏனென்றால் மீண்டும் ஒன்றிணைவது மோசடியின் அடிப்படையிலான ஒரு பிற்போக்குத்தனமான நிகழ்வாகும். சுவர், இரண்டு பெரிய பொய்களைப் பிரித்தது. கிழக்கில், ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் சோசலிசத்தை கட்டியெழுப்பியதாகக் கூறினர். மேற்கில், நாஜிகளின் தொடர்ச்சியை கொண்டிருந்த இருந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தங்களை தாராளவாதிகள் மற்றும் ஜனநாயகவாதிகள் என்று கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

பேர்லினின் பிராண்டன்பேர்க் வாயிலில் சுவரின் ஒரு பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்கள் கீழே வீழ்த்திய பின்னர் கிழக்கு ஜேர்மன் எல்லைக் காவலர்கள் பேர்லின் சுவரின் ஒரு இடைவெளி ஊடாக பார்க்கின்றனர். [மூலம்: AP Photo/Lionel Cironneau, File] [AP Photo/Lionel Cironneau, File]

ஒன்றிணைப்பின் விளைவு ஒரு பெரிய சமூக பின்னடைவாக மட்டுமே இருக்க முடியும். கிழக்கு ஜேர்மனி முதலாளித்துவத்தின் யதார்த்தத்தினுள் அகப்பட்டவுடன் எந்தவொரு தெளிவற்றதாக இருந்த நம்பிக்கையும் விரைவில் மறைந்துவிட்டது. தொழிலாளர்களின் சமூக உரிமைகள் அடித்து நொருக்கப்பட்டன, பாரிய பணிநீக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன, நாடு முழுவதும் ஒரு பெரிய கலாச்சார வீழ்ச்சி ஏற்பட்டது. மறு ஒன்றிணைப்பின் பிற்போக்குத்தனமான சூழலில், மிகவும் வலதுசாரி சக்திகள் உந்துதலை பெற்றன.

ஜேர்மன் அரசியல் தலைவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு (GDR) கலைக்கப்பட்டதை நினைவுகூரும் போது, முந்தைய சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் செழிப்பு ஆகியவை பற்றிய முன்னைய வாக்குறுதிகள் இப்போது வெறும் சொற்றொடர்களாக இருக்கின்றன. அவை தினசரி யதார்த்தத்தால் மறுக்கப்படுகின்றன. மாறாக, சமூக சமத்துவமின்மை, பாசிசம் மற்றும் போர் ஜேர்மனியிலும் உலகெங்கிலும் அதிகரித்து வருவதுடன், மேலும் மனிதகுலத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், முதலாளித்துவத்தின் பேச்சாளர்கள் GDR இன் முடிவையும், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளையும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பையும் "வரலாற்றின் முடிவு" என்று வெற்றிகரமாக கொண்டாடினர். சோசலிசம் தோல்வியடைந்தது என்று அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். முதலாளித்துவம் ஜனநாயகத்திற்கு சமமானது மற்றும் இதுதான் மனித சமூகம் இதுவரை அடையக்கூடிய மிக உயர்ந்த கலாச்சார நிலை என்றும் குறிப்பிட்டனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே அந்த நேரத்தில் அதற்கு எதிரான முன்னோக்கிற்காக போராடியது. தோல்வியுற்றது சோசலிசம் அல்ல, ஆனால் மார்க்சிஸ்டுகளைத் துன்புறுத்தி மற்றும் கொலை செய்து, தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கி மற்றும் அதன் சர்வதேச போராட்டங்களை நாசப்படுத்திய ஒரு எதிர்ப்பு புரட்சிகர அதிகாரத்துவ சாதியின் ஆட்சியான ஸ்ராலினிசமே தோல்வியுற்றது என்று நாங்கள் விளக்கினோம். இருபதாம் நூற்றாண்டை வரலாற்றில் மிகவும் வன்முறையாக மாற்றிய முரண்பாடுகளில் ஒன்று கூட இன்றுவரை தீர்க்கப்படவில்லை.

மாறாக, கிழக்கு ஐரோப்பா, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவில் முதலாளித்துவத்தை மறுசீரமைப்பது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு புதிய தாக்குதலுக்கும், உலகின் மறுபகிர்வுக்கான புதிய ஏகாதிபத்தியப் போர்களுக்கும் முன்னோடியாக இருந்தது. புரட்சிகர வர்க்கப் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு சோசலிசக் கட்சியைக் கட்டியெழுப்புவது மிகவும் அவசர அவசியமாக உள்ளது.

முப்பது ஆண்டுகளில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் மற்றும் அதன் ஜேர்மன் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகமும் (BSA, இப்போது சோசலிச சமத்துவக் கட்சி - SGP) அப்போது சரியாக இருந்தன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

முப்பது வருட யுத்தம்

1990 ல் ஜேர்மன் மீண்டும் ஒன்றிணைந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர், முக்கிய ஐரோப்பிய சக்திகள் உட்பட அமெரிக்கா தலைமையிலான கூட்டணி ஈராக் மீது படையெடுத்தது. அப்போதிருந்து, நேட்டோவின் ஆதரவுடன் வாஷிங்டன் தொடர்ச்சியாக போரை நடத்தி வருகிறது. மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் யேமனில் உள்ள முழு சமூகங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், அணுசக்திகொண்ட சீனா, ரஷ்யா ஆகிய சக்திகளுக்கு எதிராக அனைத்து மனிதகுலத்தையும் அழிக்க அச்சுறுத்தும் ஒரு போரை அமெரிக்கா தயாரிக்கிறது.

ஜேர்மனியில், மீண்டும் ஒன்றிணைந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னர், பாசிஸ்டுகள் மீண்டும் பாராளுமன்றத்தில் வந்துள்ளனர். பாதுகாப்பு அமைப்புகளுக்குள் புதிய வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்கள் இருப்பது பற்றி அறியப்படாமல் ஒரு வாரம் கூட கடக்கப்பட்டதில்லை. ஜேர்மனிக்கான மாற்று (AfD) அரசு மற்றும் ஸ்தாபகக் கட்சிகளால் திட்டமிட்டு ஆதரவளிக்கப்பட்டு, மதிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்களின் வலதுசாரிக் கொள்கைகளை செயல்படுத்த அவர்களுக்கு இது தேவைப்படுகிறது. AfD இன் பல முன்னணி உறுப்பினர்கள் காவல்துறை, இராணுவம் (Bundeswehr) மற்றும் இரகசிய உளவுத்துறையிலிருந்து வருகிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு AfD நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த பின்னர், ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், ஜேர்மன் ஒற்றுமை தினத்தன்று, “ஜேர்மன் தேசப்பற்றுக்கு” அழைப்பு விடுத்து, “சமரசமின்மையின் சுவர்கள்” அகற்றப்பட வேண்டும் என்றும், AfD தலைவர்கள் அலிஸ் வைடெல் மற்றும் அலெக்சாண்டர் கௌலாண்ட் ஆகியோரை அவரது உத்தியோகபூர்வ இல்லமான Bellevue Castle க்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இறுதியாக, கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளுக்கும் சமூக ஜனநாயகவாதிகளுக்கும் இடையிலான பெரும் கூட்டணியின் தொடர்ச்சியானது 12.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த AfD யை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைமையாக மாற்றியது. அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் முக்கியமான நாடாளுமன்றக் குழுக்களுக்கு தலைமை தாங்க AfD பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர்.

பெரும் கூட்டணி AfD யின் தீவிர வலதுசாரி திட்டத்தை நடைமுறையில் கொண்டு வருகிறது. இது இராணுவ மறுஆயுதமயமாக்கல் மற்றும் மனிதாபிமானமற்ற அகதிகள் தொடர்பான கொள்கைகளுக்கும் பொருந்தும். அக்கொள்கையில் இது "தடுத்து நிறுத்தி நாடுகடத்து" என்ற குறிக்கோளைப் பின்பற்றி, அகதிகளை வதை முகாம் போன்ற இடங்களுக்கு அனுப்ப கட்டாயப்படுத்துவதுடன் மற்றும் ஆயிரக்கணக்கானோர் மத்தியதரைக் கடலில் மூழ்க அனுமதிக்கிறது.

சோசலிச தொழிலாளர் கழகம் (BSA) எச்சரித்தபடி, ஜேர்மன் ஆளும் வர்க்கம் ஒருங்கிணைப்பை தொடர்ந்து பெரும் அதிகார அரசியல் மற்றும் இராணுவவாதத்திற்கு திரும்பியுள்ளது. இது (அரசாங்க ஆலோசகர் ஹேர்ஃபிரீட் முங்க்லரின் வார்த்தைகளில்) ஐரோப்பாவை "மேலாதிக்கம் செலுத்தும்" மற்றும் "நெறிப்படுத்துவதாக" கூறி, அதன் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை இரட்டிப்பாக்கி, முழு உலகையும் அதன் நலன்களுக்கான கோளமாக அறிவித்துள்ளது. ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்திய வொல்ப்காங் ஷொய்பிள, கிரீஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு மிருகத்தனமான சிக்கன திட்டங்களுக்கு ஆணையிட்டார்.

இது ஜேர்மன் ஏகாதிபத்தியம் மற்றும் நாஜிக்களின் குற்றங்களை அற்பமானதாக்குவதோடு கைகோர்த்துச் செல்கிறது. வரலாற்றாசிரியர் ஜோர்ஜ் பாபெரோவ்ஸ்கி 2014 இல் நாஜிக்கு வக்காலத்துவாங்கிய ஏர்ன்ஸ்ட் நோல்டவை Der Spiegel இதழில் ஆதரித்து, “ஹிட்லர் ஒரு மனநோயாளி அல்ல, அவர் தீயவர் அல்ல” என்று அறிவித்தபோது, சோசலிச சமத்துவக் கட்சி அவரை விமர்சித்து. அவர் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் நிர்வாகத்தால் கடுமையாக பாதுகாக்கப்பட்டார்.

ஆசியாவில் ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்து ஆபிரிக்காவில் மாலி வரை, பன்னிரண்டு நாடுகளில் இராணுவம் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. உலக வல்லரசிற்கான அதன் பழைய கோரிக்கைகளைத் தொடரும் முனைப்பில் மத்திய அரசு இந்த சர்வதேச போர் முயற்சிகளை பெருமளவில் விரிவுபடுத்த விரும்புகிறது. புதிய "இந்தோ-பசிபிக் வழிகாட்டுதல்களில்", வெளியுறவு அலுவலகம் சமீபத்தில் பசிபிக் இனை ஒரு ஜேர்மன் செல்வாக்கு மண்டலமாக அறிவித்தது. ஜேர்மனி, உலகளவில் தீவிரமாக செயல்படும் வர்த்தக தேசமாக, இராணுவ அடிப்படையில் "பார்வையாளர் பாத்திரத்துடன் திருப்தி அடையக்கூடாது" என்று அதில் எழுதியது.

சமூக எதிர்ப்புரட்சி

மீண்டும் ஒன்றிணைப்பின் சமூக இருப்புநிலை கணக்கு பேரழிவுகரமானதாகும். வாக்குறுதியளிக்கப்பட்ட "பூத்துக்குலுங்கும் நிலப்பரப்புகளுக்கு" பதிலாக, கிழக்கு ஜேர்மனியில் தொழிலாளர்கள் வரலாற்று ரீதியாக முன்னோடியில்லாத சமூக வீழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள். அரசு நிறுவனங்கள் மலிவு விலைக்கு விற்கப்பட்டன. கிழக்கு ஜேர்மனியானது மேற்கு ஜேர்மன் நிறுவனங்களுக்கு குறைந்த ஊதிய சொர்க்கமாக மாற்றப்பட்டது. தனியார்மயமாக்கலை மேற்பார்வை செய்த Treuhandanstalt அமைப்பு மொத்தம் 14,000 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை அழித்து, சிலவற்றை விற்று பெரும்பாலானவற்றை மூடிவிட்டது. மூன்று ஆண்டுகளுக்குள், அனைத்து தொழிலாளர்களில் 71 சதவீதம் பேர் வேலை மாறிவிட்டனர் அல்லது வேலை இழந்தனர். அரசுக்குச் சொந்தமான சொத்துடன் சேர்ந்து, அதன் அடிப்படையிலான சமூக சாதனைகள் அடித்து நொருக்கப்பட்டன: வேலை செய்வதற்கான உரிமை, மருத்துவ பராமரிப்பு, கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு இதில் உள்ளடங்கும். சோசலிச தொழிலாளர் கழகம் கணித்தபடி, கிழக்கில் பேரழிவு தரும் நிலைமைகள் மேற்கில் சமூக உரிமைகளை இல்லாதொழிப்பதற்கான அளவீடாக பயன்படுத்தப்பட்டன. ஷ்ரோடர்-பிஷ்ஷர் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல் 2010 அனைத்து தொழிலாளர்களிலும் சுமார் 40 சதவீதம் பேர் ஆபத்தான வேலை நிலைமைகளை எதிர்கொள்வதை உறுதிசெய்ததுடன், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு கூட சம்பாதிக்க முடியாத நிலைமையை உருவாக்கியது.

மேலாளர்களுக்கு மில்லியன் கணக்கான ஊதியம் மற்றும் உயரும் பங்கு மற்றும் சொத்துச் சந்தைகளில் இருந்து ஒரு சிறுபான்மை சலுகைகள் வழங்கப்பட்டாலும், ஜேர்மனி முழுவதும் வறுமை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றில், 2.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர். ரூஹர் பகுதியில் உள்ள சில நகரங்களில், நான்கு குழந்தைகளில் ஒருவர் பாதிக்கப்படுகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன், சமூக எதிர்ப் புரட்சி இப்போது ஒரு புதிய பரிமாணத்தை எடுத்து வருகிறது. ஆளும் வர்க்கம் தொழிலாளர்களின் வாழ்க்கையை அகதிகளின் வாழ்க்கையைப் போலவே அவமதிப்பு மற்றும் இரக்கமற்ற முறையில் நடத்துகிறது. இலாபங்கள் மீண்டும் பாய்வதற்கு, தொழிலாளர்கள் முற்றிலும் பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகங்களுக்குத் தள்ளப்படுகிறார்கள். பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் எந்தவித தடையும் இன்றி மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்த கொடிய கொள்கையை நியாயப்படுத்த, அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நாஜிகள் பயன்படுத்திய அதே உயிரியல் மற்றும் மனிதாபிமானமற்ற சித்தாந்தத்தைப் பயன்படுத்துகின்றனர்.

நிறுவனங்கள் மற்றும் நிதிச் சந்தைகளின் தொண்டையில் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் வீசப்பட்ட பின்னர், இப்போது நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் வீசப்பட உள்ளனர். பெரிய நிறுவனங்கள் நெருக்கடியைப் பயன்படுத்தி மறுசீரமைப்பு மற்றும் பாரிய பணிநீக்கங்களுக்கான நீண்டகால திட்டங்களை முன்வைக்கின்றன. ஏற்கனவே கொடூரமான குறைந்த ஊதியத் துறை மேலும் விரிவுபடுத்தப்பட்டு, வேலை நிலைமைகள் மிகவும் மோசமாகவும் மாறி வருகின்றன.

எவ்வாறாயினும், ஜேர்மன் மறு ஒன்றிணைப்புக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அது முதலாளித்துவ பிரச்சாரத்தின் முக்காடு கிழிந்துவிட்டது மட்டுமல்லாது, முதலாளித்துவம் அதன் அனைத்து மனிதாபிமானமற்ற மிருகத்தனத்திலும் தன்னைக் வெளிப்படுத்திக்காட்டுகிறது. அதைக் தூக்கிவீசுவதற்கான நிலைமைகளும் வளர்ந்து வருகின்றன.

மெக்சிக்கோ, போர்த்தோ ரிக்கோ, ஈக்குவடார், கொலம்பியா, சிலி, பிரான்ஸ், ஸ்பெயின், அல்ஜீரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து லெபனான், ஈராக், ஈரான், சூடான், கென்யா, தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் ஹாங்காங் வரை மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாகன உற்பத்தியாளர்களால் நாடு தழுவிய முதல் வேலைநிறுத்தம் நடந்தது. இந்தப் போராட்டங்களின் மிகச்சிறந்த அம்சம் அவர்களின் சர்வதேச தன்மையாகும். அவை பெரும்பாலும் இளைய தலைமுறையினரால் மேற்கொள்ளப்படுகின்றன மற்றும் முதலாளித்துவ சார்பு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு வெளியே உருவாகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று இந்த சமூக மோதல்களை துரிதப்படுத்துகிறது மற்றும் தீவிரப்படுத்துகிறது. ஜேர்மனியிலும், இது மேற்பரப்பின் கீழ் கொதித்து வருகிறது. எந்தவொரு போராட்டத்தையும் நசுக்கும் தொழிற்சங்கங்களின் கழுத்துப்பிடியில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளை பொது சேவை, கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து துறைகளில், வாகன, உலோக மற்றும் எஃகு தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் தேடுகின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நவ-பாசிசத்திற்கு எதிராகவும், போருக்கு எதிராகவும் இளைய தலைமுறை வீதிகளில் இறங்குகிறது.

இந்த போராட்டங்களை முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கமாக ஒன்றிணைப்பதற்கான முக்கியமான விடயம் 20 ஆம் நூற்றாண்டின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கு ஆகும். எவ்வித பாரிய எதிர்ப்பையும் எதிர்கொள்ளாமல் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏன் முதலாளித்துவத்தை அறிமுகப்படுத்த முடிந்தது என்பதையும், எந்த அரசியல் சக்திகள் அதன் பின்னணியில் செயல்படுகின்றன என்பதையும் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜேர்மனியின் பிரிப்பு

ஜேர்மனி பிரிக்கப்பட்டது யால்டா மற்றும் பொட்ஸ்டாமின் பிற்போக்கு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைந்தது. இதில் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் மேற்கத்திய சக்திகளுடன் ஐரோப்பா முழுவதும் வளர்ந்து வரும் புரட்சிகர எழுச்சிகளை அடக்குவதற்கும் கண்டத்தை செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிப்பதற்கும் உடன்பட்டது.

கிரெம்ளின் அதிகாரத்துவமும் ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்களும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், முதல் உலகப் போரின் முடிவில் நடந்ததைப் போலவே, முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகர எழுச்சிகள் வெடிக்கும் என்று அஞ்சினர். இத்தாலி, பிரான்ஸ், யூகோஸ்லாவியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் பல தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தியிருந்தனர். அவர்கள் பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பில் இணைந்து போராடினார்கள். ஜேர்மனியிலும், தொழிற்சாலை ஆக்கிரமிப்புகள் மற்றும் தன்னியல்பான பறிமுதல்கள் எல்லா இடங்களிலும் நடந்தது.

கிரெம்ளின் அதிகாரத்துவம் மேற்கு ஐரோப்பாவிலும் கிரேக்கத்திலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது தனது செல்வாக்கை ஆயுதமேந்திய மக்களை கலைப்பதற்கும் ஒரு முதலாளித்துவ வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் உறுதியளித்தது. பதிலுக்கு, மற்றொரு ஏகாதிபத்திய படையெடுப்பிலிருந்து பாதுகாப்பை வழங்க கிழக்கு ஐரோப்பாவில் இடைத்தடை அரசுகளை உருவாக்க உறுதியளிக்கப்பட்டது.

இந்த நோக்கத்திற்காக, ஒவ்வொரு கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் போலவே ஒவ்வொரு புரட்சிகர இயக்கமும் கிழக்கு ஜேர்மனியில் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. மாஸ்கோவிலிருந்து கிழக்கு ஜேர்மனிக்கு பறந்து வந்த உல்பிரிச் குழு, தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு சுயாதீன முயற்சியையும் தடுத்து நிறுத்துவதிலும், அனைத்து சுயாதீன சோசலிச மற்றும் பாசிச எதிர்ப்புக் குழுக்களையும் கலைத்து, அவற்றை அதன் சொந்த அமைப்புகளால் பிரதியீடு செய்வதையும் அதன் முக்கிய பணியாக கொண்டது.

இந்த அடிப்படையில், ஆரம்பத்தில் முதலாளித்துவ உடமை கட்டமைப்புகளை தீண்டாமல் விட திட்டமிடப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் அழுத்தத்தின் கீழும் மற்றும் சோவியத் யூனியனுக்கு எதிரான வாஷிங்டனின் பெருகிய ஆக்கிரமிப்பு கொள்கையினால் தான், 1917 அக்டோபர் புரட்சியின் சோசலிச சொத்துடமை முறைகளை இடைத்தடை அரசுகளுக்கு விரிவுபடுத்த அதிகாரத்துவவாதிகள் 1948 இல் தொடங்கினர். எவ்வாறாயினும், முதலாளித்துவ அரசின் பல அம்சங்கள் அவ்வாறே இருந்தன. பழைய நாஜி செயற்பாட்டாளர்கள் அதிகார அமைப்புகளின் கீழ்மட்ட மற்றும் நடுத்தர மட்டங்களில் தொடர்ந்தும் பதவியில் இருந்தனர்.

ஜூன் 17, 1953 அன்று, பணிச்சுமை மேலும் அதிகரிப்பதை எதிர்த்து நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கியதும், அவை பின்னர் சோவியத் டாங்கிகளால் நசுக்கப்பட்டதும் GDR அரசின் தொழிலாள வர்க்க எதிர்ப்பு தன்மை தெளிவாகியது. குறைந்தது 200 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் பேர்லின் சுவரின் கட்டுமானம், இதுபோன்ற எழுச்சிகள் மீண்டும் மீண்டும் உருவாகி பேர்லின் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சத்தால் உந்தப்பட்டது. இந்த சுவர் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஒரு கருவியாக இருந்தது.

இந்த அதிகாரத்துவ சிதைவு இருந்தபோதிலும், ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியில் இருந்து தோன்றிய சோசலிச சொத்து உறவுகளின் மாற்றம் சமூக முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. திட்டமிட்ட பொருளாதாரம் கணிசமான தொழில்துறை வளர்ச்சிக்கான அடிப்படையையும், செழிப்பையும் அதிகரித்தது. ஆகையால், நான்காம் அகிலம் கிழக்கு ஐரோப்பாவின் அரசுகளை "ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்" என வரையறுத்தது. "ஊனமுற்ற" என்பதற்கு முக்கியத்துவத்தை கொடுத்தன் ஊடாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு இடைத்தடை அரசுகளின் மட்டுப்படுத்தப்பட்ட சமூக முன்னேற்றத்தை விட, ஸ்ராலினிசத்தின் எதிர் புரட்சிகர பங்கிற்கு வரலாற்று ரீதியாக மிக அதிகமாக அழுத்தத்தை கொடுத்தது.

கிரெம்ளின் அதிகாரத்துவம், மேற்கு மற்றும் கிழக்கு இரண்டிலும் புரட்சியை அடக்குவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதால்தான், ஜேர்மன் முதலாளித்துவம் நாட்டின் மேற்கு பகுதியில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த முடிந்தது. வணிகம், அரசியல் மற்றும் அரசு எந்திரத்தில் பழைய பாசிச உயரடுக்கினர் அதிகாரத்தில் இருந்தனர். ஹான்ஸ் குளோப்க (Hans Globke - மேற்கு ஜேர்மனியில் உள்ள ஜேர்மன் சான்சலரியின் தலைமைத் தளபதி அக்டோபர் 28, 1953 முதல் அக்டோபர் 15, 1963 வரை), அவுஷ்விட்ஸில் அடிமை உழைப்பால் பயனடைந்த தொழிலதிபர் Krupp வம்சம் மற்றும் மேற்கு ஜேர்மனிய இரகசிய சேவையை கண்டுபிடித்த முன்னாள் நாஜி ஜெனரல் ரெய்ன்ஹார்ட் கெஹ்லன் (Reinhard Gehlen) ஆகியோரை வெளியேற்ற எந்தவொரு புரட்சியும் இருக்கவில்லை. மில்லியன் கணக்கான கட்டாய உழைப்புத் தொழிலாளர்களை சித்திரவதை செய்து மனித தோலில் இருந்து மின்விளக்கு மூடிகள் மற்றும் மனித தலைமுடியிலிருந்து தலையணைகளை செய்த அதே நிறுவனங்கள், இப்போது மேற்கு ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தை மீண்டும் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் திரைமறைப்பின் கீழ், அவர்கள் விரைவாக தங்கள் பொருளாதார சக்தியை மீண்டும் கட்டியெழுப்பினர்.

இரண்டு உலகப் போர்களுக்கும், இறுதியில் மனித வரலாற்றில் மிகப் பெரிய குற்றங்களுக்கும் வழிவகுத்த முரண்பாடுகள் எதுவும் போருக்குப் பிந்தைய ஒழுங்கால் தீர்க்கப்படவில்லை. ஜேர்மன் உயரடுக்கினர் மீண்டும் ஐரோப்பாவில் அதிக சுதந்திரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் அழுத்தம் கொடுத்தனர். ஜேர்மன் மறு ஒருங்கிணைப்பு மற்றும் கிழக்கு பிராந்தியங்களை கையகப்படுத்துதல் ஆரம்பத்தில் இருந்தே ஜேர்மன் முதலாளித்துவத்தின் பழிவாங்கும் இலக்காக இருந்தது.

1970 முதல், சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் வில்லி பிராண்ட்டின் புதிய கிழக்கு கொள்கை, மேற்கு ஜேர்மனிய தொழில்துறை, கிழக்கில் சுரண்டலுக்காக தொழிலாளர்களையும் சந்தைகளையும் திறப்பதாக இருந்தது. 1980 களில், ஒரு நடுத்தர அளவிலான சக்தியாக ஜேர்மனி எவ்வாறு சர்வதேச அளவில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உயரடுக்கினர் ஏற்கனவே மீண்டும் விவாதித்தனர். 1980 களின் பிற்பகுதியில் "வரலாற்றாசிரியர்களின் விவாதம்" ஏற்கனவே நாஜி குற்றங்களை நியாயப்படுத்துவதோடு இணைந்திருந்தது.

மறு இணைப்பு

மறு இணைப்பு மூலம், ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய விருப்பங்கள் நிறைவேறியது. இது போரின் தோல்விக்குப் பின்னர் மறுக்கப்பட்ட GDR இன் பிரதேசங்களை இணைத்துக்கொண்டது. 1980 களின் நடுப்பகுதியில் இராணுவம் வைத்திருந்த 4,600 டாங்கிகளில் ஒன்று கூட ஜேர்மன் முதலாளித்துவத்திற்கு தேவைப்படவில்லை. இந்த நிலப்பரப்பு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் ஒரு வெள்ளித் தட்டில் வைத்து அவர்களுக்கு வழங்கப்பட்டது.

1950 கள் மற்றும் 60 களில் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வெற்றிகள் இருந்தபோதிலும், “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற ஸ்ராலினிசக் கோட்பாடு, உலக சந்தையிலிருந்தும் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களிலிருந்தும், கிழக்கின் ஏனைய நாடுகளைப் போலவே GDR இனை துண்டித்துவிட்டது. உற்பத்தியின் பூகோளமயமாக்கலுடன், குறிப்பாக GDR இன் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் இறுதியாக மிகவும் ஆழமான நெருக்கடியில் விழுந்தது.

இந்த சூழ்நிலைகளில், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்டெடுக்கவும், அரசுக்குச் சொந்தமான சொத்தை கொள்ளையடிக்கவும் முடிவு செய்தது. 1989 ஆம் ஆண்டில், கிழக்கு பேர்லினில் சோசலிச ஐக்கிய கட்சி (Socialist Unity Party - SED) பொதுச் செயலாளர் எரிக் ஹொனேக்கர் சோவியத் தலைவர் கோர்பச்சேவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தயங்கினார். ஆனால் சோசலிச ஐக்கிய கட்சி தலைமையின் பெரும்பான்மையானது முதலாளித்துவத்தை நோக்கிய பாதையில் செல்ல நீண்ட காலமாக முடிவு செய்திருந்தது. பேர்லின் சுவர் விழுவதற்கு முன்பே, சோசலிச ஐக்கிய கட்சியின் மத்திய குழு ஹொனேக்கரை கவிழ்த்து, அவருக்கு பதிலாக முதலில் ஏகோன் கிரென்ஸ் மற்றும் பின்னர் ஹான்ஸ் மோட்ரோ ஆகியோரால் பிரதியீடு செய்யப்பட்டது. பின்னர் ஹான்ஸ் மோட்ரோ தனது நினைவுக் குறிப்புகளில், “என் கருத்துப்படி, ஒன்றிணைப்பிற்கான பாதை தவிர்க்க முடியாதது, அதை உறுதியுடன் முன்னெடுக்க வேண்டியிருந்தது" என ஒப்புக்கொண்டார்.

சோசலிச ஐக்கிய கட்சி சர்வாதிகாரத்திற்கு எதிராக 1989 நவம்பரில் வீதிகளில் இறங்கியவர்களில் பெரும்பாலோர் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதை விரும்பவில்லை. ஆனால் பல தசாப்தங்களாக மார்க்சிசத்தினதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு சுயாதீன இயக்கம் மீதான அடக்குமுறையும் ஆழமான அடையாளங்களை விட்டுச்சென்றுள்ளன என்பது தெளிவாகியது. ஆர்ப்பாட்டங்கள் மீது அதிகாரத்துவத்தின் வலதுசாரி பிரிவு மற்றும் "வட்ட மேசையின்" (“Round Table”) குட்டி முதலாளித்துவ சக்திகளால் ஆதிக்கம் செலுத்த முடிந்ததுடன், மேலும் மீண்டும் ஒன்றிணைவதை நோக்கி நகர்ந்தன.

நவம்பர் நிகழ்வுகள் ஒரு புரட்சி அல்ல, ஆனால் அனைத்து சமூக வெற்றிகளையும் அழித்து கிழக்கு மற்றும் மேற்கு இரண்டிலும் முன்னோடியில்லாத வகையில் கலாச்சார வீழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு சமூக எதிர்ப்புரட்சியின் ஆரம்பமாகும். இது ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள் எழுச்சிக்கும் தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்கும் வழி வகுத்தது.

ஸ்ராலினிச அதிகாரத்துவம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தது. ஆளும் கட்சியாகவும், பின்னர் ஜனநாயக சோசலிச கட்சி (Party of Democratic Socialism - PDS) என மறுபெயரிட்டுக் கொண்டபோதும், தொழிற்சாலை மூடல் மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் அடக்குவதற்கு இது எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. 1950 களில் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டு, தங்களை ஸ்ராலினிசத்தின் தீவிர பாதுகாவலர்களாக மாற்றிக் கொண்ட ஐக்கிய செயலகத்தின் பப்பலோவாதிகள் இதை ஆதரித்தனர்.

நவம்பர் 1989 இல், ஐக்கிய செயலகத்தின் தலைவரான ஏர்னெஸ்ட் மண்டேல், கிழக்கு பேர்லினுக்கு தனிப்பட்ட முறையில் பயணம் செய்து, ஸ்ராலினிச இளைஞர் அமைப்பான FDJ இன் பத்திரிகையில் BSA இன் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை கண்டித்தார். நவம்பர் 4 ம் தேதி பாரிய ஆர்ப்பாட்டத்தில், சோசலிச ஐக்கிய கட்சி (SED) அதிகாரத்துவத்தை அகற்றவும் தொழிலாளர் சபைகளை நிறுவவும் BSA அழைப்பு விடுத்தது. மண்டேல் இதை, அனுமதிக்க முடியாத வெளியில் இருந்தான தலையீடு என்று கண்டித்து, சோசலிச ஐக்கிய கட்சியை ஆதரித்தார். ஜனவரி 1990 இல் “ஐக்கிய செயலகத்தின் மண்டேலின் ஆதரவாளர்கள், ஹான்ஸ் மோட்ரோ வின் சோசலிச ஐக்கிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தினுள் இணைந்துகொண்டனர்.

ஸ்ராலினிச சர்வாதிகாரத்துவத்தின் “உண்மையில் உயிர்வாழும் சோசலிசம்” என்ற அதிகாரத்துவத்தின் பழைய பொய்யை, ஸ்ராலினிஸ்டுகளைப் போலவே பப்பலோவாதிகளும் பயன்படுத்தினர். ஆனால் அவை இனி கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் தனிநபர் வழிபாட்டிலிருந்து பெறப்படவில்லை, ஆனால் சோசலிசத்தின் தோல்வி என்று கூறப்பட்டதிலிருந்து பெறப்பட்டது. ஜேர்மன் ஒருங்கிணைப்பிற்குப் பின்னர், பப்பலோவாதிகள் PDS க்குள் நுழைந்தனர். இன்று அது, இடது கட்சியாகி, ஜேர்மன் முதலாளித்துவத்தின் சமூக தாக்குதல்கள், பொலிஸ் அரசு நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு ஆதரவளித்து வருகின்றது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் முன்னோக்கு

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஜேர்மன் பிரிவாக BSA மட்டுமே, 1990 இல் முதலாளித்துவ மறு ஒன்றிணைப்புக்கு எதிரான ஒரு முற்போக்கான முன்னோக்கை முன்னெடுத்த அரசியல் போக்காகும். ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் நாஜிக்களால் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் அது தன்னை அடித்தளமாகக் கொண்டிருப்பதாலேயே அதைச் செய்ய முடிந்தது.

ஹிட்லர் ஆட்சியை புரட்சிகரமாக அகற்றுவதற்காக போராடியதற்காக எண்ணற்ற ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நாஜி தொழிலாளர் முகாம்களிலும் எரிவாயு அறைகளிலும் படுகொலை செய்யப்பட்ட பின்னர், கிழக்கு ஜேர்மனியில் தப்பிப்பிழைத்தவர்கள் SED ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டனர். ட்ரொட்ஸ்கிஸ்டான ஒஸ்கார் ஹிப்ப 1949 இல் ஒரு சோவியத் இராணுவ தீர்ப்பாயத்தால் ஒரு கடூழிய முகாமில் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, மோசமான நிலைமைகளின் கீழ் கிழக்கு ஜேர்மனியில் எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

முதல் தொழிலாளர் அரசில் ஒரு புற்றுநோயாக உருவான ஸ்ராலினிச அதிகாரத்துவம், அக்டோபர் புரட்சியின் தலைவர்களையும், முழு தலைமுறை புரட்சிகர மார்க்சிஸ்டுகளையும் உடல் ரீதியாக அழிப்பதன் மூலமும், மார்க்சிசத்தை அடக்குவதன் மூலமும், பொய்யுரைப்பதன் மூலமும் மட்டுமே தனது அதிகாரத்தை வைத்துக் கொள்ள முடிந்தது. அது ஏகாதிபத்தியத்தை விட, அக்டோபர் புரட்சியின் வெற்றிகளை ஒரு அரசியல் புரட்சியின் மூலம் மட்டுமே அதிகாரத்துவத்திற்கு எதிராக பாதுகாக்க முடியும் என்று பிரகடனப்படுத்திய லியோன் ட்ரொட்ஸ்கிக்கும் இடது எதிர்ப்பு இயக்கத்திற்கும் மிகவும் அஞ்சியது.

அரசியல் புரட்சி இல்லையெனில் ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பார்கள் என்று 1938 இல் ட்ரொட்ஸ்கி ஏற்கனவே முன்னறிவித்திருந்தார். "ஒன்று, அதிகாரத்துவம் அதிகரித்தளவில் தொழிலாளர் அரசில் உலக முதலாளித்துவத்தின் ஒரு கையாளாக மாறி, புதிய வடிவிலான சொத்துடைமையை தூக்கியெறிந்து நாட்டை மீண்டும் முதலாளித்துவத்தினுள் பின்தள்ளும்; அல்லது தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை நசுக்கி சோசலிசத்திற்கான பாதையைத் திறக்கும்” என்று நான்காம் அகிலத்தின் ஸ்தாபக முன்னோக்கில் அவர் எழுதினார்.

இந்த நிலைப்பாடு அனைத்துலக் குழுவால் 1950 களில் இருந்து, பப்லோவாத்தத்தின் திருத்தல்வாத நிலைப்பாடுகளுக்கு எதிராக பாதுகாக்கப்பட்டது. பப்லோவாதம் ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளின் தோற்றம் ஸ்ராலினிசத்தின் முற்போக்கான பங்கிற்கு சான்றாகும் எனக் கூறியது.

ஸ்ராலினிசம் பற்றிய இந்த வரலாற்று விளக்கத்தின் அடிப்படையில், BSA மேற்கு ஜேர்மன் முதலாளித்துவம், ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் வட்ட மேசையின் குட்டி முதலாளித்துவ சக்திகள் மற்றும் முதலாளித்துவ மறுசீரமைப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட்ட அவர்களின் போலி-இடதுசாரி பிற்சேர்க்கைகளயும் எதிர்த்தது. நவம்பர் 4, 1989 அன்று பேர்லின் சுவர் இடிப்பதற்கு முன்னர் கிழக்கு பேர்லினில் நூறாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, கட்சி உறுப்பினர்கள் பெரிதும் பாதுகாக்கப்பட்ட எல்லைப்புறதினூடாக ஏராளமான துண்டுப்பிரசுரங்களை கடத்தி உள்கொண்டு சென்றனர்.

இவற்றில், “சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் அது ஆதிக்கம் செலுத்திய பிற நாடுகளிலும் எதிர்ப் புரட்சிகர அதிகாரத்துவத்தை, அரசியல் புரட்சி மூலம் அகற்றுவது” என்பது, “உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். அரசியல் புரட்சியின் மூலம் மட்டுமே அக்டோபரின் சாதனைகள், குறிப்பாக அரசு திட்டமிட்ட பொருளாதாரத்தை பாதுகாப்பதுடன், அனைத்து அதிகாரத்துவ சீரழிவுகளையும் களையெடுத்து, சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ மேற்கு நாடுகளில் உள்ள அதன் வர்க்க சகோதரர்களுடன் ஐக்கியப்பட்டு உலக சோசலிசப் புரட்சியையும் மற்றும் சோசலிசத்தின் கட்டுமானத்தையும் பூர்த்திசெய்ய முடியும்" என்று குறிப்பிட்டது.

ட்ரொட்ஸ்கிச உலக இயக்கத்தின் மதிப்பீட்டில், BSA அதன் தலையீட்டை அடித்தளமாகக் கொண்டிருந்தது. கோர்பச்சேவ் மீதான புகழ்பாடல் உச்சத்தில் இருந்தபோது, 1980 களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு அவர் முதலாளித்துவ மறுசீரமைப்பிற்கு தயாராகி வருவதாக ஏற்கனவே எச்சரித்திருந்தது. உற்பத்தியின் பூகோளமயமாக்கல் கிழக்கு முகாமின் தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதாரங்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்து, “தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியெழுப்புதல்” என்ற ஸ்ராலினிச வேலைத்திட்டத்தின் அடித்தளத்தை இல்லாதொழித்தது. அதற்கு பதிலளித்த கோர்பச்சேவ், சோவியத் ஒன்றியத்தை உலகப் பொருளாதாரத்துடன் ஒரு முதலாளித்துவ அடிப்படையில் ஒருங்கிணைக்க முற்படுவதன் மூலமும், ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தபடி அதிகாரத்துவத்தின் சலுகைகளைப் பாதுகாப்பதன் மூலமும் அதை முதலாளித்துவ தனியார் சொத்தாக மாற்றுவதன் மூலமும் பதிலளித்தார்.

ஸ்ராலினிச ஆட்சிகளின் நெருக்கடியானது, முழு ஏகாதிபத்திய உலக அமைப்பின் நெருக்கடியின் வெளிப்பாடு என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு புரிந்து கொண்டிருந்தது. உற்பத்தியின் பூகோளமயமாக்கல், உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவம் அடித்தளமாகக் கொண்ட தேசிய அரசுக்கும் இடையிலான முரண்பாட்டை அதிகரித்து ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான மோதல்களை அதிகப்படுத்தியது.

ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவு, தேசிய நோக்குநிலையுடைய அனைத்து அதிகாரத்துவங்களின் திவால்தன்மையின் வெளிப்பாடு என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் விளக்கினார். "கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளின் முறிவு ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் தேசிய வேலைத்திட்டத்தின் வீழ்ச்சியைக் குறிப்பது போல, கடந்த தசாப்தத்தில் முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கம் அனுபவித்த தோல்விகள், சமூக ஜனநாயக மற்றும் சீர்திருத்தவாத அதிகாரத்துவங்களின் தேசிய வேலைத்திட்டத்தின் திவால்தன்மையை நிரூபிக்கின்றன. தேசிய அளவில், தனிமைப்படுத்தப்பட்ட "சோசலிச" அரசுக்கு இடமில்லை என்பது போலவே, தேசிய சீர்திருத்தக் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்ட தொழிற்சங்கங்களுக்கும் அங்கு இடமில்லை."

இரண்டு பகுப்பாய்வுகளும் கடந்த 30 ஆண்டுகளில் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 30 ஆண்டுகால இடைவிடாத போர்களுக்குப் பின்னரும், ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து ஆயுதம் ஏந்தி மூன்றாம் உலகப் போருக்கு மேலும் மேலும் வெளிப்படையாகத் தயாராகின்றன. இராணுவவாதத்தின் இந்த வலுப்படுத்தல் மற்றும் வரலாற்று ரீதியாக முன்னோடியில்லாத வகையிலான சமூகத் துருவப்படுத்தல் ஆகியவையே அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் பாசிசம் திரும்புவதற்கு காரணமாகும்.

முன்னாள் தேசிய நோக்குநிலை கொண்ட தொழிலாளர் அமைப்புகள் முற்றிலும் முதலாளித்துவ அமைப்புகளாக மாற்றங்கண்டுள்ளன. அவை தொழிலாளர்களின் கடைசி சமூக உரிமைகளை அடித்து நொருக்குவதிலும் ஏகாதிபத்திய போர்களைத் தயாரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதே நேரத்தில், இந்த கொள்கைகளுக்கு எதிர்ப்பும் வளர்ந்து வருகிறது. அனைத்துலகக் குழுவால் மட்டுமே பாதுகாக்கப்பட்டுள்ள சர்வதேச சோசலிசத்திற்கான முன்னோக்கே இந்த நிலைமைகளின் கீழ் முக்கிய விடயமாகின்றது. கடந்த நூற்றாண்டின் முதல் பாதியைப் போலவே, மனித சமுதாயம் சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற மாற்றீட்டை எதிர்கொள்கிறது. SGP இனையும் மற்றும் ஏனைய நாடுகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரிவுகளை நிர்மாணிப்பதே முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கும் போர் மற்றும் பாசிசம் மீண்டும் வருவதைத் தடுப்பதற்கும் மிக முக்கியமான நிபந்தனையாகும்.

Loading