முன்னோக்கு

மிச்சிகன் சதி, ட்ரம்பும் 2020 தேர்தலும்

மொழிபெயர்ப்பின்மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மரைக் கடத்தி கொலை செய்ய சதிசெய்த 13 பாசிஸ்டுகளுக்கு எதிரான குற்றவியல் சதி குற்றச்சாட்டுகள் பற்றிய நேற்றைய அறிவிப்பு, டொனால்ட் ட்ரம்ப் ஒரு "அமைதியான அதிகார மாற்றத்திற்கு" மறுக்கும்போது எதனை கருதுகின்றார் என்பது பற்றிய அனைத்து சந்தேகங்களையும் நீக்குகிறது. நவம்பர் 3 தேர்தலின் முடிவை மாற்றியமைக்கும் ஒரு பரந்த மற்றும் வன்முறை சதித்திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி சொல்லாலும் மற்றும் செயலாலும் தெளிவாக இணைந்திருக்கின்றார்.மிச்சிகனின் மேற்கு மாவட்டத்திற்காக அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 15 பக்க குற்றவியல் புகாரில் சதித்திட்டத்தின் ஆரம்ப விவரங்களை மத்திய அரசின் வழக்குத்தொடுனர்கள் கோடிட்டுக் காட்டினர். "நூற்றுக்கணக்கான" மக்களை அணிதிரட்டுவதற்கான திறனிருப்பதாகக் கூறும் சதிகாரர்கள், விட்மரை தனது விடுமுறை இல்லத்தில் பிடிப்பதற்கும், மிச்சிகன் ஏரியின் குறுக்கே ஒரு படகில் விஸ்கான்சினில் அடையாளம் தெரியாத கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வலுக்கட்டாயமாக கொண்டு செல்வதற்கும் சிக்கலான திட்டங்களை வகுத்தனர். பின்னர் அவர்கள் ஒரு விசாரணையை நடத்தி அப்பெண்மணியை தூக்கிலிட திட்டமிட்டனர். மற்ற சதிகாரர்கள் லான்சிங்கில் உள்ள மாநில தலைநகரில் இறங்கவும், சட்டமன்றத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைக்கவும் திட்டமிட்டனர்.

தேர்தல் நாளுக்கான ட்ரம்பின் திட்டம் இனி ஊகிக்க வேண்டிய விஷயமல்ல. பைடெனை ஆதரிக்கும் மோதல்மிக்க மாநிலங்களில், ட்ரம்ப் தான் தேர்தல் மோசடிக்கு பலியானதாக பொய்யாக அறிவித்து, வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கு வன்முறைக் குழுக்களை பயன்படுத்தி, மாநில அலுவலகங்களை கைப்பற்றி மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களை அகற்ற முனையலாம். ஆயுதமேந்திய ஆதரவாளர்கள் வாக்களிப்பு செல்லாது என்று அறிவிப்பார்கள் அல்லது வாக்காளர்கள் ட்ரம்ப் சார்பானவர்கள் என்று சான்றிதழ் வழங்க மாநில சட்டமியற்றுபவர்களை கட்டாயப்படுத்துவார்கள். மிச்சிகன், வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகியவை ஜனநாயகக் கட்சி ஆளுநர்களையும் மற்றும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டமன்றங்களையும் கொண்டுள்ளன. எனவே இந்த சதித்திட்டத்தின் மைய இலக்காக இவை இருக்கலாம்.

இந்த சதித்திட்டம் மேலதிகமாக, வால்டர் ரீட் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு விரைந்து செல்வதற்கான ட்ரம்பின் உந்துதல்களை தெளிவுபடுத்துகிறது. புதன்கிழமை, நேற்றைய அறிவிப்புக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:

வால்டர் ரீட் மருத்துவ மையத்திலிருந்து திங்கள்கிழமை இரவு வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கான ட்ரம்ப்பின் முடிவு, அவரது நிலை மற்றும் அரசியல் சதித்திட்டங்களில் அவரது நோயின் தாக்கம் குறித்த ஆழ்ந்த கவலைகளால் தெளிவாகத் தூண்டப்பட்டது.

அனைத்து கருத்துக்கணிப்புக்களும் முற்றிலும் தவறாக இல்லாவிட்டால், ட்ரம்ப்பின் அரசியல் நிலைப்பாடு மோசமடைந்து வருகிறது, மேலும் அவர் தேர்தல்களில் கணிசமான தோல்வியின் அபாயத்தை எதிர்கொள்கிறார். ஆனால் இந்த உண்மை அவரது திட்டங்களை மாற்றாது. நிர்வாகத்தின் நெருக்கடி எவ்வளவு தீவிரமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக ட்ரம்ப் தனது பதவியில் நீடிப்பதற்கான தகமை, முழுமையாக அரசியலமைப்புக்கு புறம்பான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை பொறுத்திருக்கின்றது என்று கணக்கிடுகிறார். வால்டர் ரீட்டில் உள்ள ஒரு மருத்துவமனை படுக்கையிலிருந்து இத்தகைய சதித்திட்டங்களைத் திட்டமிட முடியாது. ட்ரம்பிற்கு அரசின் அமைப்புகளின் மீது கட்டுப்பாடு தேவையாக உள்ளது.

சாதாரண நிலைமைகளின் கீழ், அரசியல் இங்கிதம் ஆனது, ட்ரம்ப் ஆளுநர் விட்மரை அழைத்து, ஆபத்திலிருந்து தப்பித்ததற்கு தனது நிம்மதியை வெளிப்படுத்தவும், அவரது வாழ்க்கைக்கும் மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கிற்கு எதிரான சதித்திட்டத்தை மிகவும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கவும் மற்றும் அவரது நிர்வாகத்தின் முழு ஆதரவையும் உறுதிப்படுத்தவும், சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தண்டனை வழங்கவும் ஊக்குவிப்பதாக இருக்கும்.

ஆனால் ட்ரம்ப் அப்படி எதுவும் செய்யவில்லை. நேற்றிரவு Fox News இல், சதி பற்றி "புகார்" செய்ததற்காக ட்ரம்ப் விட்மரை திட்டினார். "அப்பெண்மணி தனது சிறிய அரசியல் செயலைச் செய்கிறார், அவர் தனது மாநிலத்தை மூடி வைத்திருக்கிறார் ... அவர் செய்வது மக்களுக்கு ஒரு பயங்கரமான விஷயம்; தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன." ட்ரம்பின் இந்த அறிக்கைகள் பாசிச வன்முறையை மன்னிக்கவும் நியாயப்படுத்தவும் செய்கின்றன. அவரது கருத்துக்கள் பாசிச சதிகாரர்களுக்கு ட்ரம்ப் தங்களுக்கு பின்னால் இருக்கின்றார் என்பதற்கும், மேலும் அவர்கள் ஒரு குற்றத்திற்கு தண்டனை பெற்றால் ஜனாதிபதி மன்னிப்பை நம்பலாம் என்பதற்கான சமிக்கையாகும்.

வாஷிங்டன் டி.சி. இலிருந்து அல்லாமல் மிச்சிகனில் இருந்து அறிவிக்கப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டு, மிச்சிகன் சதி ட்ரம்ப் அல்லது அவரைச் சுற்றியுள்ளவர்களுடன் தொடர்புபட்ட ஒரு தேசிய சதித்திட்டத்தில் பனிப்பாறையின் முனை மட்டுமே என்பதை தெளிவுபடுத்துகிறது. குற்றவியல் புகார் சதிகாரர்களில் ஒருவரை மேற்கோள் காட்டி, "பல மாநிலங்கள் கொடுங்கோலர்களை கைதுசெய்வதை நான் காண்கின்றேன்." ஓஹியோவின் அதிகாரபலம் நிலையற்ற மாநிலங்களில் உள்ள ஆய்தக்குழுக்களுடன் சதிகாரர்களின் ஒத்துழைப்பையும், ஜூன் மாதத்தில் விஸ்கான்சினில் இக்குழு ஒரு இரகசிய சந்திப்பை நடத்தியதை பற்றியும் இக்குற்றச்சாட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரில் ஜனாதிபதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சதித்திட்டத்தை உருவாக்கியவர் வெள்ளை மாளிகையில் இருக்கிறார். ட்ரம்ப் பல சந்தர்ப்பங்களில் குறிப்பாக விட்மரை கண்டனத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார், ஏனெனில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மிச்சிகனை பேரழிவிற்கு உட்படுத்திய தொற்றுநோயை தடுப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் அவர் வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டிருந்தார். இந்த தாக்குதல்கள் தற்போதைய ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அடிப்படையை அமைப்பதற்கான ஒரு திட்டமிட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருந்தன என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

மார்ச் மாதத்தில், தொற்றுநோய்க்கு தனது நிர்வாகத்தின் பிரதிபலிப்பை விமர்சித்ததற்காக ட்ரம்ப் அப்பெண்மணியை "அரை-விட்மர்" என்று குறிப்பிட்டார். ஏப்ரல் 17 ம் தேதி, ட்ரம்ப் தனது அழைப்பை “மிச்சிகனை விடுதலை செய் மற்றும் மினசோட்டா மற்றும் வேர்ஜீனியா உள்ளிட்ட பிற அதிகாரபலம் நிலையற்ற மாநிலங்களுக்கு ட்வீட் செய்துள்ளார், இது கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பரப்புவதைத் தடுக்கும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரால் நடத்தப்பட்ட “Operation Gridlock” ஆர்ப்பாட்டங்களுக்கு தெளிவான சமிக்ஞையாகும்.

அதே மாதத்தில், அவர் பின்வருமாறு ட்வீட் செய்தார்: “அவர்கள் நான் சொல்வதைக் கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் என்னைப் போலவே இந்த கருத்தை மதிக்கும் எதிர்ப்பாளர்களாகத் தோன்றுகிறார்கள். மேலும் எனது கருத்து ஆளுநர்கள் அனைவரினதும் போலவே உள்ளது. அவர்கள் அனைவரும் திறக்க விரும்புகிறார்கள்-யாரும் மூடப்பட விரும்பவில்லை, ஆனால் அவர்கள் பாதுகாப்பாக திறக்க விரும்புகிறார்கள்.”

ஏப்ரல் 30 அன்று, தீவிர வலதுசாரி எதிர்ப்பாளர்கள் லான்சிங்கில் இறங்கி, பூட்டுதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தாக்குதல் துப்பாக்கிகள் சகிதம் ஆயுதம் ஏந்தி அரச மாளிகைக்குள் நுழைந்தனர். அடுத்த நாள், ட்ரம்ப் ட்வீட் செய்ததாவது: “மிச்சிகன் ஆளுநர் கொஞ்சம் கொடுக்க வேண்டும், மேலும் தீயை அணைக்க வேண்டும். இவர்கள் மிகவும் நல்லவர்கள், ஆனால் அவர்கள் கோபப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக விரும்புகிறார்கள்! அவர்களைப் பாருங்கள், அவர்களுடன் பேசுங்கள், ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள்.” கடந்த வார ஜனாதிபதி விவாதத்தின் போது, ட்ரம்ப் தனது பாசிச ஆதரவாளர்களுக்கு "தயாரிப்பு கட்டளை" என்று இராணுவத்தில் அறியப்பட்டதை வெளியிட்டார், அவர்களை "தயார்நிலையில் நிற்க" உத்தரவிட்டார்.

இந்த அச்சுறுத்தல்களுக்கு பைடென்-ஹாரிஸ் பிரச்சாரம் பதிலளித்தது, ட்ரம்ப்பின் "ஜனாதிபதி அல்லாத" நடத்தைக்காக அவரை தண்டிக்கும் தொடர்ச்சியான கருத்துக்களை வெளியிட்டு, தமக்கு வாக்களிக்க மக்களை வற்புறுத்தியது. ஆனால் தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் புறக்கணிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த முறையீடு அர்த்தமற்றவை.

ட்ரம்பின் ஜனாதிபதி காலம் முழுவதும் ஜனநாயகக் கட்சி, ட்ரம்பின் பாசிச மூலோபாயத்தின் ஒவ்வொரு விரிவாக்கத்திற்கும் அதன் ஆபத்தை மக்களுக்கு குறைத்து காட்டி பிரதிபலித்துள்ளது. நேற்று அவர்களின் வீரியமற்ற பதிலைக் கருத்தில் கொண்டால், ஜனநாயகக் கட்சியினர் பாசிச கிளர்ச்சியாளர்களை அணிதிரட்டுவதற்கான ட்ரம்ப்பின் திட்டங்களை ஒரு சிறிய அத்தியாயமாக எடுத்துக்காட்டுகிறார்கள். மேலும் முக்கிய செய்தித்தாள்கள் ஏற்கனவே தங்கள் இணைய பதிப்புகளில் இச்செய்தியை பின்னணிக்கு தள்ளி வருகின்றன.

ட்ரம்பின் சர்வாதிகார சதித்திட்டத்தின் அனைத்து விவரங்களையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அவசரமானதாகும். இதைப்பொறுத்தே ட்ரம்பின் சதித்திட்டத்தின் வெற்றி அல்லது தோல்வி தங்கியுள்ளது.

வேறு எந்த மாநிலங்களில் இதேபோன்ற திட்டங்கள் நடைபெற்று வருகின்றன? ட்ரம்பின் பாசிச உதவியாளர்களில் யார் மிச்சிகன் ஆயுதக்குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர்? நாஜி ஸ்டீபன் மில்லரா? அல்லது வலதுசாரி QAnon சதிக் கோட்பாட்டை ஊக்குவிக்க உதவிய ரோஜர் ஸ்டோனா? ட்ரம்பிற்கும் பாசிஸ்டுகளுக்கும் இடையில் எத்தனை தூரம் பிரிவு உள்ளது? வேறு எந்த பொது நபர்களை பாசிச குழுக்கள் கடத்தி படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்? ட்ரம்பின் கொலை பட்டியலில் அடுத்த ஆளுநர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், ஊடக பிரமுகர்கள் அல்லது கலாச்சார பிரமுகர்கள் யார்? சதிகாரர்களின் எழுத்துமூலமான செய்திகளும் சந்திப்பு தொடர்பான ஒளிப்பதிவுகளும் எதை வெளிப்படுத்துகின்றன?

கீழேயிருந்து எதிர்ப்பைத் தூண்டும் என்ற அச்சத்தில் இந்த விவகாரம் விசாரிக்கப்படுவதை ஜனநாயகக் கட்சி விரும்பவில்லை. அவர்களின் பதில், “தொடர்ந்து நகருங்கள், இங்கே பார்க்க எதுவும் இல்லை.” என்பதாக உள்ளது. ட்ரம்ப் தனது திட்டங்களுடன் முன்னேற இந்த முதுகெலும்பு இல்லாதவர்களில் தங்கியுள்ளார். ஆனால் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நேர்மையான ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அமெரிக்காவிற்கு எதிரான சதியை அம்பலப்படுத்தவும் நிறுத்தவும் உடனடியாக பதில்களைக் கோர வேண்டும்!

Loading