மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தொற்றுநோய்களின் இடைவிடாத பரவலால் ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைத்துக் கூறினார். வர்தனின் கருத்துக்கள் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதை நியாயப்படுத்தும் நோக்கமாக கொண்டிருக்கின்றன. இது எதிர்க் கட்சிகள் தலைமையிலான மாநில அரசாங்கங்களாலும் ஆதரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தேவையில்லாமல் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளை வைரஸ் தாக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
மிகவும் அதிகமான அளவில் குறைத்துக் காட்டும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மொத்த கோவிட்-19 நோய்த்தொற்றுகள் 5.6 மில்லியனைக் கடந்துவிட்டன. அதே நேரத்தில் 90,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இருப்பினும், அதிக அளவிலான தொற்று பரவலின் காரணமாக, புதிய பாதிப்புகள் வழக்கமாக ஒரு நாளைக்கு 90,000 ஐத் தாண்டி வருவதால், இந்தியாவில் விரைவில் அமெரிக்காவை விட அதிகமான நோய்த் தொற்று பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் ஒரு மணி நேரத்திற்கு அதிகமா காட்சியளித்த, சுகாதாரத் துறை அமைச்சர் வர்தன் இந்தியாவில் வைரஸ் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை என்று உண்மையிலேயே அபத்தமான கூற்றை முன்வைத்தார். "தற்சமயம் 10 மாநிலங்களில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களில் 77 சதவீதமானவர்கள் இருக்கின்றனர்" என்று வர்தன் வாதிட்டார். "நீங்கள் குறிப்பிட்ட மாநில புள்ளி விபரங்களின்படி பார்த்தால் இந்த பாதிப்புகள் ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்திருப்பதை நீங்களே பார்ப்பீர்கள்." என்று மேலும் கூறினார்.
செப்டம்பர் 14 அன்று, இந்தியாவின் பாராளுமன்றத்தின் அதன் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்றிய வர்தன், ஏற்கனவே கூறியதைப்போன்று தொற்றுநோயின் தாக்கத்தை குறைத்து காட்டவே முயன்றார். 92 சதவிகித பாதிப்புகள் "இலேசான நோய்" என்று கூறப்படுவதாக அவர் கூறினார், மேலும் தொற்றுநோய்க்கு இந்தியாவின் பதில் உலகின் மிகச் சிறந்த ஒன்றாக இருப்பதாக திருப்தியடைந்துள்ளார். "இந்தியா, அதன் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் முறையே ஒரு மில்லியனுக்கு 3,328 மற்றும் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 55 இறப்புகளாக மட்டுப்படுத்த முடிந்தது, இதேபோல் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது இது உலகின் மிகக் குறைவான ஒன்றாக இருக்கிறது." என்றார்.
இந்தியாவின் பெரும் மக்கள் தொகை 1.3 பில்லியனாக இருப்பதனால் மட்டுமே அது ஒப்பீட்டு ரீதியாக பிற நாடுகளை விட நன்றாக இருக்குமாறு புள்ளி விபரங்களை சிறப்பாக தேர்ந்தெடுக்கும் வர்தனின் முயற்சி ஒரு உண்மையை மூடி மறைக்க முடியாது, அதாவது அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் நோய்தொற்றுக்களின் அதிகரிப்பையும் மற்றும் தொற்றுநோயும் அதன் பொருளாதார வீழ்ச்சியும் ஒரு சமூக அழிவை உண்டு பண்ணியுள்ளன என பதிவு செய்துள்ளன.
சனிக்கிழமையன்று, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி அரசாங்கத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தொற்றுநோய்களின் பரவலான அதிகரிப்பை ஏற்றுக்கொண்டதுடன், மேலும் “சமூகப் பரவல் இருப்பதை நாங்கள் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்” என்றும் கூறினார்.
புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் வைரஸ் தொற்று பரிசோதணை செய்யப்பட்டதில் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 50 பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது சமூகப் பரவல் நடைபெறவில்லை என்ற வர்தனின் போலி தன்மையை மேலும் அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் இறப்புகளைப் பொறுத்தவரை 90,000 க்கும் அதிகமான உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பின்னால் இந்தியா தற்போது உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொற்றுநோயற்ற நிலைமைகளின் கீழ் கூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறப்புகளுக்கான காரணத்தை வழங்கத் தவறியதற்காக இந்திய அதிகாரிகள் கெட்ட பெயரெடுத்தவர்கள். இது உண்மையான இறப்பு எண்ணிக்கைகள் மிக அதிகமாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
தெற்காசியாவின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு இந்தியாவின் இறப்புக்கள் மிக அதிகமானதாக இருக்கிறது. செப்டம்பர் 21 நிலவரம், Worldometer கூற்றின்படி, இறப்புகளின் பாதிப்புகள் ஒரு மில்லியனுக்கு இந்தியாவில் 64ஆகவும், பாகிஸ்தானில் 29 ஆகவும் மற்றும் பங்களாதேஷில் 30 ஆகவும் இருக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை தொற்றுநோயின் பரவலைக் குறைத்து காட்டுவதாக பல்வேறு விஞ்ஞானரீதியான ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. செப்டம்பர் 10 அன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஒரு தெளியவியல் (Serology)-கணக்கெடுப்பை வெளியிட்டது, இது கொரோனா வைரஸ் பிறபொருளெதிரிகள் (antibodies) மூலம் மக்கள் தொகையை அளவிடுகிறது. 21 மாநிலங்கள் முழுவதிலும் 70 மாவட்டங்களில் 700 கிராமங்கள் / வார்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், மே மாத தொடக்கத்தில், இந்தியாவில் 6.4 மில்லியன் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நோய்த்தொற்று பாதிப்பு விகிதத்தை (infection to case ratio -ICR) இது குறிக்கிறது, அதாவது, 82 மற்றும் 130 இலிருந்து 1 க்கு இடையில் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்படைந்தவர்களுக்கு கண்டறியப்படாத நோய்த் தொற்றுகளின் விகிதமாகும். இந்த கண்டுபிடிப்பை பிரித்தெடுத்தால், இந்திய மக்கள்தொகையில் பாதி பேர் இப்போது வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வு முடிவெடுத்துள்ளது.
இந்த கண்டுபிடிப்புகள் பாஜக அரசாங்கத்தின் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்” (“herd immunity”) என்ற கொலைகாரக் கொள்கையால் உருவாக்கப்பட்ட அபாயகரமான சூழ்நிலையைக் குறிக்கின்றன. இதன் கீழ் வைரஸ், மக்கள் தொகையில் தடையின்றி பரவ அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு அற்ற மக்களிடையே இத்தகைய கொள்கை என்பது பெரியளவிலான இறப்புகளை ஏற்படுத்துவதாகும். அத்தகைய குற்றவியல் கொள்கையை பின்பற்றுவது 2 மில்லியன் இந்தியர்களின் இறப்புக்கு வழிவகுக்கும் என்று சமூக நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரித்த அரசாங்கத்தின் உயர்மட்ட தொற்றுநோயியல் ஆலோசகர்களில் ஒருவர், தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் ஒப்புக் கொண்டார்.
இத்தகைய கொடூரமான அளவில் பெருமளவிலான இறப்புகளை ”சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க" ஆதரவாளர்கள் "பொருளாதாரம்" மற்றும் பெருநிறுவன இலாபங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கூறி நியாயப்படுத்துகின்றனர். வர்தன் நாடாளுமன்றத்தில் கூறியபடி “பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்காக திறக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்”.
இப்போது பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்துப் பொறுப்பையும் உழைக்கும் மக்கள் மீது அரசாங்கம் போட்டுள்ளது. "முககவசங்கள் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்" என்று பிரதமர் மோடியின் அறிவுரையானது, பெரும்பான்மையான மக்கள் குறித்து ஆளும் வர்க்கத்தின் முழுமையான அவமதிப்பைக் காட்டுகிறது. மிக அடிப்படையான சுகாதார முறை அல்லது சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு சாத்தியமே இல்லாத சேரிகளிலோ அல்லது கிராமப்புறங்களிலோதான் பெரும்பான்மையானவர்கள் வாழ்கிறார்கள்.
ஏப்ரல் பிற்பகுதியில் இயன்றளவு முன்னதாகவே பணியிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்க பாஜக அரசு அனுமதி அளித்தது. தொற்றுநோய்களின் தொடர்ச்சியான அதிகரிப்பு இருந்தபோதிலும், பெருவணிகத்தின் இலாபம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மேலும், பேருந்துகள், ரயில்கள், மெட்ரோக்கள் (சுரங்கபாதை ரயில்கள்) மற்றும் சிறிய வேன்கள் போன்ற இந்தியா முழுவதும் பொது போக்குவரத்து சேவைகள் பொது சுகாதார முன்னெச்சரிக்கைகளுடன் செயல்படுவதற்கு முடியாதுள்ளது, அதற்கு காரணம் மக்கள் வேலைக்கு செல்வதற்காக அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் நெருக்கமாக பயணம் செய்கின்றனர்.
பெரும் நிறுவனங்களுக்கும் மற்றும் இந்திய இராணுவத்திற்கும் நிதியளிப்பதில் எந்தக் குறையும் வைக்கவில்லை, சமீபத்தில் 7.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரஃபால் போர் விமானங்களின் முதல் தொகுதியை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு விழா நடத்தப்பட்டது. அதேசமயம் நீண்டகாலமாக நிதியுதவி கிடைக்கப்பெறாத பொது சுகாதார அமைப்பு நெருக்கடியில் உள்ளது. பல மாநிலங்கள் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகளின் கடுமையான பற்றாக்குறை இருப்பதைப் பதிவு செய்துள்ளன. மத்திய பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நான்கு கோவிட் -19 நோயாளிகள் இறந்ததாக இந்திய ஊடகங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டன. இதே போன்ற பற்றாக்குறையை முகங்கொடுப்பதாக மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் தெரிவித்துள்ளன. கர்நாடகாவின் முக்கிய நகரமான பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை 10,000 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அங்கே வென்டிலேட்டர்களைக் கொண்ட ஐ.சி.யூ படுக்கைகளுக்கு கடுமையான பற்றாக்குறை இருக்கின்றன.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்த பொதுமக்களின் துயரக்குரலுக்கு பதிலளித்த சுகாதார துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண், மருத்துவ ஆக்ஸிஜனுக்கு "பற்றாக்குறை" இல்லை என்றும், துணைக்கலப் பொருட்களை நிரப்புவதற்கு ஏற்பாடு செய்வதில் சிக்கல் இருக்கிறது என்று கூறியுள்ளார். இருப்பினும், அகில இந்திய தொழில்துறை வாயு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (All India Industrial Gases Manufacturers Association) புள்ளிவிவரங்கள் இந்த கூற்றுக்கு முரணானவையாக இருக்கின்றன, ஏனெனில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதால் மருத்துவமனைகளின் ஆக்ஸிஜன் பயன்பாடு அதிவேகமாக அதிகரித்துள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏப்ரல் மாதத்தில் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு மையங்களால் சராசரியாக 750 டன் நுகர்வுடன் ஒப்பிடும்போது, இந்த மாதத்தின் நாள்ஒன்றுக்கான நுகர்வு 2,700 டன் வரை அதிகரித்திருக்கிறது.
மோடி அரசாங்கம் மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் சமூக நோய் எதிர்ப்பு சக்தி கொள்கை தான் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்தும் அவர்களின் உந்துதலுக்கான ஈட்டி முனையாக உள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23.9 சதவிகித வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதோடு, அது ஆண்டு முழுவதும் குறைந்தது 5 சதவிகிதமாக சுருங்கக்கூடும் என்ற கணிப்புகளை எதிர்கொண்டுள்ள மோடி, முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களின் "முன்னோக்கிய பாய்ச்சலை" (“quantum jump”) அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளார். அரசாங்கம் ஏற்கனவே தனியார்மயமாக்கல் பரவலை அறிவித்துள்ளது, மேலும் பெருகிவரும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தின் மூலம் வேளாண் வணிகத்தினை விரைவான விரிவாக்கம் செய்வதாக இரண்டு சட்டங்களை இயற்றியிருக்கிறது.
ஒப்பந்தத் தொழிலாளர்களை மேலும் விரிவுபடுத்துதல், "முறையான" அல்லது பெரிய அளவிலான நிறுவனத் துறையில் பணிநீக்கங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளை அகற்றல், இந்தியாவின் ஏற்கனவே மோசமான தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பலவீனப்படுத்தல் மற்றும் பல தொழிலாளர் வேலை நிறுத்த நடவடிக்கைகளை சட்ட விரோதமாக்கல் ஆகிய மூன்று தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்த வர்க்கப் போர் தாக்குதல், இந்தியாவின் பிற்போக்குத்தனமான, மோடி அரசாங்கம் சீனாவுடனான தற்போதைய எல்லை நெருக்கடியில் ஆத்திரமூட்டும், போர்க்குணமிக்க நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சீன எதிர்ப்பு இராணுவ-மூலோபாய கூட்டாட்சியை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் வலியத் தாக்குதல் எனும் உந்துதலுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து கைகோர்த்துச் செல்கிறது. வாஷிங்டனின் தீவிர ஊக்கமும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் கொண்டு, அமெரிக்காவுடனும், அதன் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனும் இணைந்து, இந்தியாவை சீனாவுக்கு மாற்று உற்பத்தி சங்கிலி மையமாக வளர்ச்சி செய்து வருவதுடன் மேற்கத்திய நிறுவனங்களை மிரட்டவும், கவர்ந்திழுக்கவும் வேலை செய்து வருகிறது.
அதன் வலதுசாரிக் கொள்கைகள் மற்றும் தொற்றுநோய் குறித்த அதன் அழிவுகரமான பதிலிறுப்பு ஆகியவற்றிற்கு எதிராக வளர்ச்சியடையும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் எதிர்ப்பையும், எதிர் கொண்டுள்ள பாஜக அரசாங்கம் சீனாவுடனான பதட்டங்களை தேசிய பேரினவாதத்தைத் தூண்டிவிடவும் மேலும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் அது தொடர்ந்து மானங்கெட்டவகையில் முஸ்லிம் எதிர்ப்பு இந்து வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறது.
இந்த சூழ்நிலையில், இந்திய ஸ்ராலினிஸ்டுகள் ஒரு துரோகத்தனமாக பாத்திரத்தை வகிக்கின்றனர். பாஜகவின் ஆளும் வர்க்க எதிரிகளுக்கு குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குப் பின்னால் தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கிகொண்டிருக்கிறார்கள். - முதலாளித்துவ உயரடுக்கின் புதிய தாராளமய நிகழ்ச்சி செயல்பாடுகளுக்கு நீண்டகாலமாக தலைமை தாங்கிய பெருவணிக காங்கிரஸ் கட்சி, “உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை” அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மற்றும் பல்வேறு பிராந்திய-பேரினவாத மற்றும் சாதி அடிப்படையிலான முதலாளித்துவ கட்சிகளுடன் சேர்ந்து இயங்கிவருகிறது.
இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலமான மேற்கு வங்கத்தில் பிரதான ஸ்ராலினிச கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் காங்கிரசுடன் தேர்தல் கூட்டணியை முறைப்படுத்தும் பணியில் செயற்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கட்சியின் மாநில பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சிபிஎம் பகிரங்கமாக வரவேற்று, “காங்கிரஸ்-சிபிஎம் கூட்டணிக்கு” தலைமை தாங்க சரியான நபர் என்று அறிவித்திருக்கிறது.
