முன்னோக்கு

வெள்ளை மாளிகை தொற்றுநோய்க்கு மத்தியிலும் ட்ரம்ப் அரசியல் சதியைத் தீவிரப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஓர் ஆழ்ந்த நெருக்கடியை எதிர்கொண்டிருக்கையில் செவ்வாய்கிழமை அவர் வெள்ளை மாளிகையில் அவரின் முதல் நாளை கழித்தார்.

செப்டம்பர் 26 இல் ரோசா தோட்டத்தில் நீதிபதி Amy Coney Barrett இன் வேட்பாளர் நியமன கொண்டாட்டத்தில் ஏற்பட்ட துணைவிளைவு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கின்ற நிலையில், வெள்ளை மாளிகை அதுவே இந்த தொற்றுநோயின் பிரதான தேசிய அபாயப்பகுதியாக உருவாகி உள்ளது. ட்ரம்பின் பாசிசவாத ஆலோசகர் ஸ்டீபன் மில்லெருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக செவ்வாய்கிழமை நள்ளிரவு அறிவிக்கப்பட்டது, இது திங்கட்கிழமை வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலர் Kayleigh McEnany நோய்தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்திருந்தது.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் ட்ரம்ப் ஆலோசகர்கள் மத்தியில் பரவியிருப்பதற்குக் கூடுதலாக, கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கடல் ரோந்துப்படையின் துணை தளபதி அட்மிரல் சார்லஸ் ரேயுடன் தொடர்பில் இருந்ததற்காக தலைவர் ஜெனரல் மார்க் மில்லெ உட்பட முப்படைகளின் தலைமை தளபதிகள் ஏறத்தாழ எல்லோருமே இப்போது தனிமைப்படலின் கீழ் உள்ளனர்.

ட்ரம்ப் மீண்டும் வேலைக்குத் திரும்பி இருந்தாலும், வெள்ளை மாளிகை அலுவலகத்தின் பல அதிகாரிகள் வரவில்லை என்பதுடன் குறைந்தபட்சம் இன்னும் ஒரு வாரத்திற்காவது அவர்கள் வரப் போவதில்லை. ட்ரம்பைப் பொறுத்த வரையிலும் கூட, அவருக்கு "எந்த அறிகுறியும்" இல்லை என்று அவரின் மருத்துவர்கள் வாதிட்டாலும், ஜனாதிபதிக்கு முழுவதுமாக ஸ்டெராய்ட் மருந்துகளும் இன்னும் பல மருந்துகளும் ஏற்றப்பட்டு, நோய் பாதிப்பு அதன் முழு வீச்சிலிருந்து தடுக்கப்பட்டு வருகிறது.

திங்கட்கிழமை இரவு வால்டர் ரீட் மருத்துவ மையத்திலிருந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதென்ற ட்ரம்பின் முடிவானது, தெளிவாக, அவரின் உடல்நலக் குறைபாடு அவரின் அந்தஸ்து மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் மீது பாதிப்பு ஏற்படுத்தும் என்ற ஆழ்ந்த கவலைகளால் உந்தப்பட்டிருந்தது.

எல்லா கருத்துக்கணிப்புகளும் முற்றிலும் தவறாக இருந்தாலும் கூட, ட்ரம்பின் அரசியல் அந்தஸ்து சரிந்து வருகிறது. அவர் கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடத்தக்க தோல்வியின் அபாயத்தை முகங்கொடுக்கிறார். ஆனால் இந்த உண்மை அவரின் திட்டங்களை மாற்றிவிடவில்லை. நிர்வாகத்தின் நெருக்கடி எந்தளவுக்கு அதிக கடுமையாக இருக்கிறதோ, அந்தளவுக்கு ட்ரம்ப் முற்றிலும் அரசியலமைப்புக்குப் புறம்பான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான அவரின் ஆற்றலைச் சார்ந்து அதிகாரத்தில் தங்கியிருப்பதற்கான அவர் சக்தியைக் கணக்கிடுகிறார். இத்தகைய சூழ்ச்சிகளை வால்டர் ரீட் மருத்துவமனை படுக்கையிலிருந்து முடுக்கி விட முடியாது. ட்ரம்புக்கு அரசு எந்திரத்தின் மீது கட்டுப்பாடு அவசியப்படுகிறது.

நீதிமன்றத்தில் அவர் ஆட்களைக் குவிப்பதற்கான அவர் முயற்சியுடன் சேர்ந்த நடவடிக்கையாக, நவம்பர் 3 க்கு முன்னதாக Barrett இன் நியமனத்திற்கு அழுத்தமளிப்பதில் அவரின் முழு கவனத்தையும் ஒருங்குவிப்பதற்காக, காங்கிரஸ் சபையில் செனட்டர் மிட்ச் மெக்கொன்னலிடம் ஒரு புதிய உதவிப்பொதி சட்டமசோதா மீதான விவாதங்களை கைவிடுமாறு கோருவதே, செவ்வாய்கிழமை ட்ரம்பின் பிரதான ஒருங்குவிப்பாக இருந்தது.

பின்னர் அவரைச் சுற்றி சூசகமாக அடையாளப்படுத்தும் விடயமும் உள்ளது. அதிவலது மற்றும் பாசிசவாத இயக்கத்தை அவர் விதைப்பதானது, அவர் குறைத்துக் காட்டியுள்ள மற்றும் தொடர்ந்து குறைத்துக் காட்டி வரும் இந்த தொற்றுநோயின் தீவிரத்தன்மையிலிருந்து குறிப்பாக அவர் மீண்டு வந்தவர் என்றும் அந்த அபாயத்திலிருந்து மீண்டு வந்தவர் என்றும் பெரிதும் அவரின் "பெருந்தலைவர்" பிம்பத்தைச் சார்ந்துள்ளது. அந்த "தலைவரை" மருத்துவமனை படுக்கையில் வைத்திருக்க முடியாது.

திங்கட்கிழமை இரவு மரீன் ஒன் ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் திரும்பியதும், வெள்ளை மாளிகையிலிருந்து அவர் வீரவணக்கம் செலுத்தியமை, தெளிவாக, 1935 நாஜி பிரச்சார திரைப்படமான Leni Riefenstahl இன் Triumph of the Will ஆல் கவரப்பட்டதாகும். அப்படத்தின் ஆரம்ப காட்சிகள் அடால்ஃப் ஹிட்லர் விமானத்திலிருந்து இறங்கி வந்து மேல்மாடத்தில் காட்சி அளிப்பதைக் காட்டுகிறது.

ஊடகங்களில் உள்ள ட்ரம்பின் ஆதரவாளர்களிடம் இருந்து வந்த கருத்துரைகள், அமெரிக்க மக்களுடன் சேர்ந்து அவரின் சொந்த உடல்நலம் மற்றும் பாதுகாப்பை ஆபத்திற்குட்படுத்திய ஒரு போர்க்கள தளபதியாக அவரைச் சித்தரிக்க முயன்றன. “அந்த தொற்றுநோயிடமிருந்து அவர் ஒளிந்து கொள்ளாததற்குக் காரணம், அந்த வைரஸைக் கண்டு அமெரிக்கா ஒளிந்து கொள்வதை அவர் விரும்பவில்லை,” என்று ஃபாக்ஸ் நியூசின் நிகழ்ச்சி நெறியாளர் Greg Gutfeld விவரித்தார். “அமெரிக்கா வேலைக்குத் திரும்ப வேண்டுமென அவர் கோர வேண்டுமானால் … அவர் அதை செய்ய வேண்டியிருந்தது, உங்களுடன் சேர்ந்து அந்த போர்க்களத்தில் அவரும் நடந்து சென்றார்,” என்றார்.

இவ்விதத்தில், வெள்ளை மாளிகை முன்னெடுத்த "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" மூலோபாயம் உருவாக்கிய பேரழிவு 200,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்று, வெள்ளை மாளிகையிலேயே தொற்று ஏற்படுத்த திரும்ப வந்திருக்கின்ற நிலையில், அது ட்ரம்ப் பலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக மாற்றப்பட உள்ளது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்பதற்கு ஒரு நியாயப்பாடாக ட்ரம்ப் அவரின் சொந்த உடல்நலக் குறைவையே துரிதமாக சாதகமாக்கிக் கொண்டார். “ஒவ்வொரு ஆண்டும் பல மக்கள், சில வேளைகளில் 100,000 க்கும் அதிகமானவர்கள், தடுப்பூசிகள் இருந்தாலும் கூட, சளிக்காய்ச்சலால் உயிரிழக்கிறார்கள்,” என்று செவ்வாய்கிழமை அவர் ட்வீட் செய்தார். “அதற்காக நாம் நம் நாட்டை அடைத்து வைத்து விடுவோமா? இல்லை, நாம் அதனுடன் வாழ பழகி உள்ளோம், அதைப் போலவே இந்த கோவிட் உடனும் நாம் வாழப் பழகி வருகிறோம்,” என்றார்.

இதில் எதுவுமே நிர்வாகத்தைச் சுற்றி வளைத்துள்ள ஆழ்ந்த நெருக்கடியை மறைத்துவிடவில்லை. ஆனால் நிலை எந்தளவுக்கு மிகவும் கடுமையாக ஆகிறதோ, அந்தளவுக்கு ட்ரம்பின் நடவடிக்கைகளும் மிகவும் பொறுப்பின்றி ஆகிறது. அவரின் சூழ்ச்சிகரமான சதித்திட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதுடன், அங்கே தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. “தேச ஒற்றுமை" என்ற பெயரில் ஆதரவை அணித்திரட்ட பயன்படுத்தும் விதத்தில், “அக்டோபர் ஆச்சரியம்” என்று இராணுவத்தைத் தூண்டுவிடுவதற்கான சாத்தியக்கூறு உட்பட ட்ரம்ப் பல உத்திகளைக் கொண்டுள்ளார்.

ஒரு காரணி ட்ரம்பிற்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கிறது: அதாவது, ஜனநாயகக் கட்சியின் போலித்தனமான, முதுகெலும்பற்ற, அடிப்படையில் பிற்போக்குத்தனமான தன்மை. ட்ரம்ப் நிர்வாகத்தின் நெருக்கடிக்கு ஜனநாயகக் கட்சியினர் பாத்திரத்தைக் கொண்டாட முடியாது. அவர் சதித்திட்டங்களை அம்பலப்படுத்துவதற்கு மாறாக, அவர்கள் ட்ரம்பின் பாசிசவாத சூழ்ச்சிகளுக்கு எதிரான பாரிய எதிர்ப்பின் குரல்வளையை நெரிக்கவும் சர்வாதிகாரத்தின் அபாயத்தை மூடிமறைக்கவும் அவர்களால் ஆனமட்டும் அனைத்தும் செய்துள்ளனர்.

சென்ற சனிக்கிழமை நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டதைப் போல, ஜனநாயகக் கட்சியினரும் அவர்களுடன் இணைந்துள்ள ஊடகங்களும் "தேசத்திற்காகவும்" “தேசப் பாதுகாப்புக்காகவும்" விரைவாக குணமாகி வர உவகையோடு நம்பிக்கைகளை வெளியிட்டு, ட்ரம்பின் உடல்நல கோளாறுக்கு விடையிறுத்தனர் — அதுவும் ட்ரம்ப் பாசிசவாத வன்முறைக்கு பகிரங்கமாக முறையீடு செய்த ஜனாதிபதி விவாதத்திற்கு வெறும் ஒரு சில நாட்களில் இது வந்தது. தேர்தல் முடிவுகளை கவிழ்ப்பதற்கான அவரின் தயாரிப்புகளை மீண்டும் தொடங்கும் விதத்தில் வெள்ளை மாளிகைக்கு அவர் திரும்பியதன் மூலமாக, “விரைவில் குணமாகி வாருங்கள்" என்ற ஜனநாயகக் கட்சியினரின் பிரார்த்தனைகளுக்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

அது கூறும் எதுவொன்றும் ட்ரம்புக்கு எதிராக திரும்பாமல் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திரும்பும் மிகப் பெரிய மக்கள் எதிர்ப்பின் அடிநாதத்தைத் தூண்டிவிடுமோ என்பதே வோல் ஸ்ட்ரீட், பென்டகன் மற்றும் உளவுத்துறை முகமைகளின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சியின் பிரதான பயமாக உள்ளது.

திங்கட்கிழமை இரவு, பைடென் NBC டவுன் ஹால் நிகழ்வில் அறிவிக்கையில், ட்ரம்பை “கோமாளி” என்று குறிப்பிட்டதற்காக அவர் மன்னிப்புக் கோரினார், இது மிகவும் “விரோதமூட்டுவதாக” இருப்பதாக அவர் அறிவித்தார். ட்ரம்ப் உள்நாட்டு போரைத் தூண்டிவிட்டு வருகையில், பைடெனோ "நல்லிணக்கத்திற்கு" அழைப்பு விடுக்கிறார்.

ஜனநாயகக் கட்சியினர், அரசு எந்திரத்திற்குள் தீவிரமடைந்து வரும் நெருக்கடியை அரசு எந்திரத்திலிருந்து வெளியே வந்துவிடாமல் அதற்குள்ளேயே அடைத்து வைக்க விரும்புகிறார்கள். ஒரு போட்டியிடும் தேர்தல் சம்பவத்தில், அதிகாரத்திற்கான மத்தியஸ்தர்களாக இராணுவத்திடம் அவர்கள் முறையிடுவார்கள் — இதுவே கூட அமெரிக்க அரசியலை அதிகரித்தளவில் சர்வாதிகார மற்றும் எதேச்சதிகார திசையில் விட்டுக்கொடுப்பதாகும்.

அடுத்த மாதத்தில் அரசு எந்திரத்திற்குள் அரசியல் நெருக்கடி எப்படி அபிவிருத்தி அடைந்தாலும், அமெரிக்க ஜனநாயகம் அதன் மரண வாசலில் உள்ளது. வெள்ளை மாளிகை, தொற்றுநோயின் அதிருஷ்டவசமான அல்லது தற்செயலான பாதிப்பின் அடிமையத்திலேயே அழுகிப் போயுள்ள ஒரு சமூக அரசியல் அமைப்புமுறையை ஆரோக்கியமாக மீட்டமைத்து விடாது.

ட்ரம்ப் ஒரு பாசிசவாத அமைப்பை இயக்கத்திற்குக் கொண்டு வருகிறார். அரசு எந்திரம் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்குள் இதற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது. ஏற்கனவே பாரியளவில் மரணத்திற்கு இட்டுச் சென்றுள்ள ஒரு கொள்கையை ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. பத்து மில்லியன் கணக்கானவர்கள் அதிகரித்தளவில் கடுமையான நிலைமையை முகங்கொடுக்கிறார்கள், பாரிய வேலைவாய்ப்பின்மை, பசி மற்றும் வீடற்ற நிலைமையை எதிர்கொண்டுள்ளனர். மத்திய ரிசர்வ் வங்கி பாய்ச்சிய ட்ரில்லியன் கணக்கிலான டாலரால் ஊதிபெரிதாக்கப்பட்ட வோல் ஸ்ட்ரீட்டின் பொருளாதார சீட்டுக் கட்டு மாளிகை தொடர்ந்து பொறிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தொற்றுநோயோ புதிதாக இன்னும் அதிக அபாயகரமான கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது.

எதிர்ப்பு எந்தளவுக்கு ஜனநாயகக் கட்சியிக்கு அடிபணிந்து இருக்கிறதோ, அந்தளவுக்கு அது மீண்டும் வருவதற்கான வாய்ப்பை ட்ரம்புக்கு வழங்கும். அவர் வர முடியவில்லை என்றாலும், ஜனநாயகக் கட்சியினர் ஒரு கையில் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு சமாதானக் கொடியையும் மற்றொரு கையில் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் எதிர்ப்புக்கு எதிராக பயன்படுத்தும் ஒரு தடியையும் கொண்டு அதிகாரத்திற்கு வருவர்.

தொழிலாள வர்க்கம் அடுத்த நான்கு வாரங்களையும் அதற்கடுத்துள்ள நாட்களையும், ஆளும் வர்க்கத்தின் “சமூக நோயெதிர்ப்பு பெருக்கும்" கொள்கை, சமூக சீரழிவு, போர், பொலிஸ் வன்முறை மற்றும் எதேச்சதிகாரத்திற்கு எதிரான அதன் போராட்டங்களை சோசலிசத்திற்கான ஒரு சுயாதீனமான மற்றும் புரட்சிகரமான இயக்கத்திற்குள் ஒருங்கிணைக்கவும் ஒன்றுபடுத்தவும் பயன்படுத்த வேண்டும்.

Loading