முன்னோக்கு

கோவிட்-19 தொற்றுநோய் அதிகரித்து வருவதற்கு மத்தியிலும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக கடுமையான புதிய தடையாணைகளைத் திணிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஈரான் பொருளாதாரத்தை அழித்து, ஈரானிய மக்களைப் பட்டினி மற்றும் நாசங்களுக்கு உட்படுத்தும் வழிவகைகள் மூலமாக அதை வாஷிங்டனின் ஆட்சி மாற்றக் கொள்கைக்கு நிர்பந்திப்பதற்காக ட்ரம்ப் நிர்வாகம் வியாழக்கிழமை அந்நாட்டிற்கு எதிராக கடுமையான புதிய சுற்று பொருளாதார தடையாணைகளை அறிவித்தது.

நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசின் அறிவித்த அந்த தடையாணைகள், நடைமுறையளவில் ஈரானை உலக நிதியியல் சந்தைகளிலிருந்து துண்டிப்பதுடன், இரண்டாம்நிலை தடையாணைகளுடன் சேர்ந்து 18 ஈரானிய வங்கிகளை இலக்கில் வைக்கின்றன. அந்நடவடிக்கை "கட்டுப்பாடுகளை மீறி அமெரிக்க டாலர்கள் பெறுவதை நிறுத்துவதற்கான நமது கடமைப்பாடுகளைப் பிரதிபலிக்கிறது,” என்று அறிவித்த மினுசின், அது "ஈரானிய மக்களுக்கு உதவியாக மனிதாபிமான பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து அனுமதிக்கும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இந்த கடைசி வலியுறுத்தல் ஓர் அப்பட்டமான பொய். இந்த 18 வங்கிகளும் இரண்டாம்நிலை தடையாணைகளால் பாதிக்கப்பட்ட கடைசி அமைப்புகளாக இருக்கப் போவதில்லை, இந்த தடையாணைகள் அமெரிக்க சந்தைகளில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுடன் வியாபாரம் செய்ய துணியும் எந்தவொரு நிதியியல் அமைப்புக்கும் தடைவிதிக்கிறது. கோவிட்-19 தொற்றுநோயால் அந்நாடு சீரழிந்து கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு கீழ் அத்தியாவசியமாக தேவைப்படும் உணவு, மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான அந்நாட்டின் சக்தியை முடக்கும் வகையில், இதன் விளைவு ஒட்டுமொத்த ஈரானிய நிதி துறையையும் தடைப்பட்டியலில் நிறுத்துவதாக இருக்கும். இந்த அமெரிக்க நடவடிக்கை, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள ஈரானின் பத்து பில்லியன் கணக்கிலான டாலர் அரசு சொத்துக்களை அது நடைமுறையளவில் அணுக முடியாமல் செய்கிறது.

“பயங்கரவாதத்திற்கு" நிதி வழங்குதல், ஆயுதங்கள் கொள்முதல் அல்லது அணுஆயுத திட்டத்தில் ஈரான் ஈடுபடல் என தடைவிதிக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று கூறப்படும் எந்தவொரு நடவடிக்கையைக் கொண்டும் அந்த வங்கிகள் மீது குற்றஞ்சாட்ட அமெரிக்க அதிகாரிகள் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்கு பதிலாக, “ஈரானிய நிதியியல் துறையில் செயல்பட்ட" “குற்றத்திற்காக" 16 அமைப்புகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது, ஓர் அமைப்பு முன்னதாக தடை விதிக்கப்பட்ட வங்கி கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும் மற்றொன்று "இராணுவத்துடன் தொடர்பில்" இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டன.

தெஹ்ரானுக்கும் வல்லரசுகளுக்கும் இடையிலான 2015 அணுசக்தி உடன்படிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் இரண்டாண்டுகளுக்கு முன்னர் தன்னிச்சையாக ஏற்க மறுத்த பின்னர் அது தொடங்கிய "அதிகபட்ச அழுத்தம்" தரும் தடையாணைகளின் நடவடிக்கை ஏற்கனவே ஈரான் பொருளாதாரத்தை முடக்கி இருந்ததுடன், அந்நாட்டின் பொருளாதார ஜீவநாடியான எண்ணெய் விற்பனையைப் பெரிதும் தடுத்துள்ளது. மார்ச் 2020 இல் நிறைவுற்ற 12 மாத காலத்தில், ஈரானிய எண்ணெய் விற்பனை 2011 இன் 120 பில்லியன் டாலரிலிருந்து குறைந்து, வெறும் 20 பில்லியனுக்கும் சற்று அதிகமாக இருந்தது.

கடந்த மாதம், கடிவாளமற்ற இறுமாப்புடன் கூடிய ஒரு நடவடிக்கையில், வாஷிங்டன், ஈரானின் அணுஆயுதம் சாராத அணுசக்தி திட்டத்தில் தெஹ்ரான் கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதற்கு பிரதிபலனாக ஐக்கிய நாடுகள் சபை நீக்கியிருந்த தடையாணைகளை அது மீண்டும் கொண்டு வர வேண்டுமென கோரி, அதுவே விட்டொழித்திருந்த 2015 அணுசக்தி உடன்படிக்கையின் "முதுகெலும்பை முறிக்கும்" (snapback) வழிவகைகளைத் துணைக்கிழுத்தது.

குறிப்பாக ஈரானுக்கு அணுஆயுதமல்லாத ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதன் மீதான தடையைத் தொடர வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது, இது அணுசக்தி உடன்படிக்கை வரையறைகளின் கீழ் அக்டோபர் 18 இல் காலாவதி ஆக உள்ளது. ரஷ்யாவும் சீனாவும் இரண்டுமே ஈரானுக்கு ஆயுதங்களை விற்க ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், வாஷிங்டன் தன்னிச்சையாக தடையை அமல்படுத்த சூளுரைத்துள்ளது, இது உலகின் பிரதான அணுசக்தி களுக்கு இடையே ஒரு மோதலுக்கான சாத்தியக்கூறை உயர்த்துகிறது.

ஈரானிய அதிகாரிகள் அந்நாட்டின் நிதித்துறைக்கு எதிரான புதிய கடுமையான தடையாணைகளைக் கண்டித்துள்ளனர். ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹம்மத் ஜாவத் ஜரீஃப் ட்வீட் செய்து, “உணவு & மருந்துகளுக்கு பணம் செலுத்துவதற்காக எங்களுக்கு எஞ்சியுள்ள வழிகளையும் அமெரிக்க ஆட்சி அடைக்க விரும்புகிறது. இந்த சமீபத்திய குரூரங்களில் இருந்தும் ஈரானியர்கள் உயிர்பிழைப்பார்கள். ஆனால் மக்களைப் பட்டினிப் போடுவதற்கான சூழ்ச்சி மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும்,” என்று குறிப்பிட்டார்.

வியாழக்கிழமை இரவு பயங்கரவாத எதிர்ப்பு மீது ஐக்கிய நாடுகளின் பொது சபை அமர்வில் பேசுகையில், ஈரானுக்கான ஐ.நா. தூதர் மஜித் தக்த்-ரவன்ச்சி, “அரசு பயங்கரவாதம் மற்றும் பொருளாதார மற்றும் மருத்துவ பயங்கரவாதம்" செய்வதாக வாஷிங்டனைக் குற்றஞ்சாட்டினார்.

“ஈரான் மீது அமெரிக்காவின் அதிகபட்ச அழுத்த கொள்கை, வேண்டுமென்ற கண்மூடித்தனமாக இன்னல்களையும் அவலங்களையும் உருவாக்கும் நோக்கில் அப்பாவி மக்களை இலக்கில் வைத்துள்ளதுடன், சிதறடிக்கும் ஆட்சி மாற்ற கொள்கைக்கேற்ப சமூக அமைதியின்மையைத் தூண்டிவிட்டு வருகிறது,” என்று தக்த்-ரவன்ச்சி தெரிவித்தார்.

மருத்துவத்துறை வல்லுனர்களால் இந்த தொற்றுநோயின் "மூன்றாம் அலை" என்று குறிப்பிடப்பட்டு வருகின்ற நாசகரமான கோவிட்-19 இன் மீளெழுச்சியை ஈரான் எதிர்கொண்டு வரும் ஒரு தருணத்தில் துல்லியமாக இந்த புதிய தடையாணைகள் வந்துள்ளன. கடந்த சில நாட்களில், அந்நாடு முன்பில்லாத எண்ணிக்கையில் புதிய நோயாளிகளையும், அன்றாட உயிரிழப்புகளையும் கண்டுள்ளது. அக்டோபர் 9 இல், ஈரானின் சுகாதாரத்துறை அமைச்சகம் 4,142 புதிய கொரொனா வைரஸ் நோயாளிகளை உறுதிப்படுத்தியது, இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை அண்மித்து அரை மில்லியனுக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 210 கோவிட்-19 நோயாளிகள் உயிரிழந்திருந்த நிலையில், இது அந்நாட்டின் மொத்த மரண எண்ணிக்கையை 28,098 ஆக கொண்டு வந்திருந்தது. கடந்த வாரத்தில் குறைந்தபட்சம் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

கூர்மையாக அதிகரித்துள்ள கோவிட்-19 நோயாளிகளால் ஈரானின் மருத்துவமனைகள், குறிப்பாக தொற்றுநோயால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதன் நகர்புறங்களின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தெஹ்ரானின் மசிஹ் தனிஷ்வரி மருத்துவமனையில் தொற்றுநோய்கள் பிரிவின் தலைமை மருத்துவர் அரசு செய்தி நிறுவனமான IRINN இக்குக் கூறுகையில், “தீவிரச் சிகிச்சை பிரிவில், அவசர சிகிச்சைப் பிரிவிலும் கூட, படுக்கைகள் இல்லாததால், நோயாளிகளை அனுமதிப்பதற்காக ஆம்புலன்ஸ்கள் ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொன்றுக்கு சென்று கொண்டே இருக்கின்றன. புதிதாக வரும் கொரொனா வைரஸ் நோயாளிகள் படுக்கைகள் கிடைக்கும் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது,” என்றார்.

கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து கொடுத்து வருவதாக ஈரானிய ஆயுதப்படைகள் அறிவித்துள்ள போதினும், இந்த உயிராபத்தான வைரஸால் உடல்நலக் குறைவுக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு இடம் கிடைக்க செய்வதற்காக பொது மருத்துவமனைகள் ஏனைய எல்லா அவசரகால செயல்பாடுகளையும் நிறுத்தி உள்ளன.

கடந்த மாதம் அரசு பொறுப்பின்றி மீண்டும் திறந்துவிட்ட பள்ளிகள் தெஹ்ரானிலும் இன்னும் சில நகரங்களிலும் மூடப்பட்டுள்ளன, அதேபோல மசூதிகளும், கடைகள், உணவு விடுதிகள் மற்றும் ஏனைய பொதுயிடங்களும் மூடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் அக்டோபர் 3 இல் ஒரு வார அடைப்பு அறிவிக்கப்பட்டது, வெள்ளிக்கிழமை ஆளுநர் அதை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடித்தார்.

இந்த தோற்றுநோய்க்கு முன்னரே கூட, அமெரிக்க தடையாணைகளின் அதிகாரம் ஈரானிய மருத்துவ அமைப்பின் இன்றியமையா மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீது தடை விதித்திருந்ததால், தடுத்திருக்கக்கூடிய பல உயிரிழப்புகளுக்கு இது இட்டுச் சென்றுள்ளது. இந்த தொற்றுநோயுடன் சேர்ந்து, அப்பாவி மக்களுக்கு எதிராக ஒரு பாரிய போர் குற்றத்திற்கு நிகராக, தடையாணைகளால் முன்பினும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த கடுமையான தடையாணைகள், ஏற்கனவே பல முனைகளில் எதிரெதிராக மோதலில் நிற்கும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கூர்மையாக பதட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளன. வாஷிங்டன் அப்பிராந்தியத்தில் அதன் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்துள்ளதுடன், அத்துடன் சேர்ந்து கடந்த மாதம் ஹோர்முஸ் ஜலசந்தி மூலமாக பாரசீக வளைகுடாவுக்குள் விமானந்தாங்கி போர்க்கப்பல் USS நிமிட்ஜையும், அத்துடன் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல் USS பிரின்ஸ்டன் மற்றும் USS Philippine Sea மற்றும் ஏவுகணை ஏந்திய நடுத்தர போர்க்கப்பல் USS Sterett ஆகியவற்றையும் அனுப்பி உள்ளது. இது அண்மித்து ஓராண்டில் இதுபோன்ற போர்க்கப்பல் தாக்குதல் படையின் நிலைநிறுத்தலைக் குறித்தது.

இதற்கிடையே, ஈராக்கில், ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆக்ரோஷ மனிதர் வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி முஸ்தபா அல்-காதிமி ஈரானுடன் அணி சேர்ந்துள்ள ஈராக்கிய ஷியா போராளிகள் குழுக்களை ஒடுக்க தவறினால், அமெரிக்கா பாக்தாத்தில் உள்ள அதன் தூதரகத்தை மூடுமென இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது போராளிகள் குழுக்களுக்கு எதிராக பரந்தளவிலான அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு முன்னறிவிப்பாக இருக்கும் என்பதை அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மக்கள் அணிதிரள்வு படையில் (Popular Mobilization Forces) ஒழுங்கமைக்கப்பட்ட இந்த போராளிகள் குழுக்கள் ஈராகிய ஆயுதப்படைகளின் பாகமாக ஒரு விதமான தேசிய பாதுகாப்புப்படையாக செயல்படுகின்றன. ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) 2014 இல் ஈராக்கின் பரந்த பகுதிகளைக் கட்டுப்பாட்டில் எடுத்த பின்னர் அதை தோற்கடிப்பதில் அந்த போராளிகள் குழுக்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன.

ஈராக்கில் அச்சுறுத்தல்களுக்கு போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியதில் இருந்து இப்போது கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் முடமாக்கும் விதமான புதிய நிதிய தடையாணைகளைத் திணித்திருப்பது வரையில் இந்த ஒவ்வொரு நடவடிக்கைகளும், பதட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டிருந்தன. இத்தகைய பதட்டங்கள் ஏற்கனவே கடந்த ஜனவரியில், ஈரானின் மிகவும் மூத்த அதிகாரிகளில் ஒருவரான லெப்டினென்ட் ஜெனரல் குவாசெம் சுலைமானி ஓர் உத்தியோகபூர்வ விஜயமாக பாக்தாத் சர்வதேச விமானநிலையம் வந்த போது அவரின் அமெரிக்க டிரோன் ஏவுகணை படுகொலையுடன் சேர்ந்து, கொதிநிலைக்கு வந்திருந்தன.

நவம்பர் 3 தேர்தலுக்கு முன்னதாக உள்நாட்டில் வேகமாக சீரழிந்து வரும் அரசியல் சூழலை முகங்கொடுத்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், வாக்காளர்களை அதிர்ச்சியூட்டுவதற்காகவும் வெள்ளை மாளிகையில் அடைகாக்கப்பட்டு வரும் அரசியலமைப்புக்குப் புறம்பான சூழ்ச்சிகளை நிறைவேற்றுவதற்கு அதிக சாதகமான நிலைமைகளை உருவாக்கவும் வடிவமைக்கப்படும் ஒரு சம்பவமாக, ஓர் "அக்டோபர் ஆச்சரியமாக" ஈரானுடன் வேண்டுமென்றே ஒரு போரைத் தூண்டிவிடும் வெளிப்படையான அச்சுறுத்தல் நிலவுகிறது.

Loading