இலங்கை அரசாங்கம் சர்வதிகார அரசியலமைப்பு மாற்றங்களை முன்நகர்த்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ அரசியலமைப்பின் பிற்போக்கான 20 வது அரசியலமைப்பு திருத்தத்தை முன்நகர்த்தி வருகிறார். நவம்பர் 17 அன்று அரசாங்கம் தனது வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னர், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இராஜபக்ஷ விரும்புவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரமடைந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். [Credit: AP Photo/Eranga Jayawardena]

கடந்த வாரம் ஜனாதிபதியின் சகோதரரான பிரதமர் மஹந்த இராஜபக்ஷ, பல ஊடக ஆசிரியர்களை சந்தித்தார். ஆளும் கட்சிக்குள்ளான பிளவுகள் பற்றிய அறிக்கைகளை ஒதுக்கித் தள்ளிய அவர், அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை அரசாங்கம் வெல்லும் என்று அறிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமாக்கப்பட்ட பொருளாதார பேரழிவை எதிர்கொள்ளும் ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளினதும் வெகுஜன சமூகப் போராட்டங்களின் வெடிப்பை நசுக்குவதற்கு புதிய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

இந்தத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைத்திருந்தாலும், முன்மொழியப்பட்ட திருத்தங்களை எதிர்க்கும் மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, விவாதத்தை தொடங்க முடியாது.

ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச), ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.), தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க் கட்சிகளும் பல சிவில் அமைப்புக்களும் தனிநபர்களும் உயர் நீதிமன்றத்தில் டஜன் கணக்கில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஐ.ம.ச., ஐ.தே.க. மற்றும் தமிழ் கூட்டமைப்பும் இந்தத் தீர்திருத்த்தினை பாராளுமன்றத்தில் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவது மற்றுமன்றி, ஒரு தேசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றன.

இலங்கை நீதித்துறையானது அரசியல் சார்புக்கு பேர்போனதாகும். முதலாளித்துவ அரசின் இந்த ஆயுதம், தங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் என தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் நம்பினால், அது மாயை ஆகும்.

முன்மொழியப்பட்ட இருபதாவது திருத்தமானது ஜனாதிபதிக்கு பாரிய எதேச்சதிகாரங்களை கொடுக்கின்றது. இந்த திருத்தத்தின் கீழ், ஜனாதிபதியால் பிரதமரை நியமிக்க அல்லது அகற்ற முடியும், மற்றும் பிரதமரின் ஆலோசனையின்றி அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முடியும், தேர்வு செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குள் பாராளுமன்றத்தை கலைக்க முடியும், மற்றும் தேர்தல்கள், பொலிஸ், மனித உரிமைகள், லஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் நிதி தொடர்பான ஆணைக்குழுக்களின் தலைவர்களை நியமிக்க முடியும்.

வழக்குகளில் இருந்து விலக்களிப்பு கொண்டவரான ஜனாதிபதி, உயர்மட்ட நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபரையும் நியமிக்கும் அதிகாரம் கொண்டவராவார். ஜனாதிபதி, அந்த உயரதிகாரிகளை நியமிப்பது சம்பந்தமாக பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உட்பட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற பேரவையா கலந்தாலோசிக்கலாம், ஆனால் அது கட்டாயமானதல்ல.

20வது திருத்தமானது 19வது திருத்தத்தை அகற்றுகின்றது. 19வது திருத்தமானது, ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும் என வரையறுக்கின்றது, தேர்வு செய்யப்பட்டதில் இருந்து நான்கரை வருடங்களுக்குள் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதை தடுக்கின்றது, உயர்மட்ட அரச அதிகாரிகள் மற்றும் நீதிபதிளை நியமிக்க சுயாதீனமான ஆணைக் குழுக்களை நியமிக்க கோருகின்றது, பிரதமரின் ஆலோசோனையுடனேயே அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதை கட்டாயமாக்குகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவந்த 19வது திருத்தம் 2015 ஏப்பிரலில் நடைமுறைக்கு வந்தது.

சிறிசேன ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக, தான் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றிலுமாக ஒழிப்பதாக உறுதியளித்திருந்தார். தனது முன்னோடிகளைப் போலவே, சிறிசேனவும் ஆட்சிக்கு வந்தபின் இந்த வாக்குறுதியை கைவிட்டு, அதற்கு பதிலாக மட்டுப்படுத்தப்பட்ட 19வது திருத்தத்தை முன்வைத்தார்.

1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளால் பரவலாக வெறுக்கப்படும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை, ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நசுக்குவதற்கும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பின் 30 ஆண்டுகால கொடூரமான இனவாத உள்நாட்டுப் போரை நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கமானது பொருளாதார அபிவிருத்திக்கு 20வது அரசியலமைப்பு திருத்தம் தேவையென பொய்யாக கூறிக்கொள்கின்றது. ஜனாதிபதி இராஜபக்ஷவும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அரசாங்கமும் சிக்கன திட்டத்தை அமுல்படுத்திய முன்னால் ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முந்தைய அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்புகளைச் சுரண்டிக்கொண்டே ஆட்சிக்கு வந்தது. ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. சமூக நிலைமைகளை மேம்படுத்துவதாக பொய்யாக வாக்குறுதியளித்த அதே வேளை, “ஒரு பலமான ஸ்திரமான” ஆட்சியை ஸ்தாபிப்பதாக பெரும் வர்த்தகர்களுக்கு உறுதியளித்தது.

இராஜபக்ஷ எதேச்சதிகார ஆட்சி வடிவத்தை ஸ்தாபிப்பதற்காக துரிதமாக முன்நகர்கின்றார். செப்ரம்பர் 25 அன்று, ஹல்துமுல்லவுக்கு அருகில் தூரத்து மலையக கிராமம் ஒன்றில் நடந்த ஒரு கூட்டத்தில் இதை அதிகளவில் தெளிவுபடுத்தினார். நாட்டின் அரச அதிகாரிகளின் சோம்பேறித்தனம் எனக் கூறப்படுவது பற்றி மோசமாக கண்டனம் செய்த அவர், “எனது உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்; எழுத்துமூலமான சுற்றுநிரூபங்கள் அவசியமற்றது, நான் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாகும். எனக்கு அப்பாற்றபட்டு என்ன இருக்கின்றது?” என பிரகடனம் செய்தார்.

இராஜபக்ஷ நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த உடனேயே, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்தமை உட்பட நாட்டின் முக்கிய பதவிகளில் பல ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் உள்ள இராணுவத் தளபதிகளை நியமிப்பதன் மூலம், தனது ஆட்சியை இராணுவமயமாக்க ஆரம்பித்தார்.

சில அரசாங்க உறுப்பினர்கள் 20வது திருத்தத்தை விமர்சித்துள்ளாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த தேர்தலில் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. உடன் தேர்தலில் போட்டியிட்ட சிங்கள அதிதீவிரவாத தேசிய சுதந்திர முன்னணி மற்றும் பிவிதுரு ஹெல உறுமய கட்சி போன்ற சிறிய குழுக்களே கவலை தெரிவித்துள்ளன.

இந்த இனவாத அமைப்புகள், இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டங்களை பலவீனப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதுடன், 20 வது திருத்தமானது தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் என்று வாதிடுகின்றன. அவை, அரசு பெரும்பான்மையான பங்குகளை கொண்டிருக்கும் நிறுவனங்களை கணக்காய்வாளர் நாயகம் கண்காணிப்பதை நீக்குவதையும், வர்த்தமானி அறிவிப்புகள் இல்லாமல் அவசரகால சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தையும் குறைத்து மதிப்பிடுவதையும் விமர்சித்துள்ளன.

இருப்பினும், இந்த “விமர்சகர்கள்” அரசாங்கத்துடனான தமது விசுவாசத்தைக் காட்ட ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பில் பிரதமருடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் எவரும் ஜனாதிபதி சர்வதிகார அதிகாரங்களை பெறுவதை எதிர்க்கவில்லை.

உயர் நீதிமன்றில் ஐ.ம.ச., ஐ.தே.க., தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஏனையோரைப் பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள், பல்வேறு விடயங்களைப் பற்றி அக்கறை காட்டினர். அரசாங்கத்தின் ஒரு பிரிவிடம் மாத்திரம் அதிகாரம் குவிக்கப்படுவது, கணக்காளர் நாயகத்தின் அதிகாரங்களை குறைத்தல், மற்றும் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் அரசாங்கத்தில் சிரேஷ்ட பதவிகளை பெறுவதற்கு அனுமதித்தல் ஆகியவை இவற்றில் அடங்கும். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்காவிட்டாலும், அதுவும் இதே நிலைப்பாட்டைப் பகிருந்துகொள்கின்றது.

இந்தக் கட்சிகள் ஜனநாயக உரிமைகள் பற்றிய கரிசனை காட்டுவதாக பாசாங்கு செய்துகொள்ளும் அதே வேளை, கடந்த தசாப்பத காலத்தில் எதாவதொரு வழியில் ஒடுக்குமுறையான நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை ஆதரித்துள்ளன. எதேச்சதிகார ஜனாதிபதி முறைமையினை அறிமுகப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியே ஆகும்.

ஜனாதிபதி இராஜபக்ஷ அரசாங்கத்தை இராணுவமாக்குவதை அவர்கள் ஒருபோதும் எதிர்த்ததில்லை. அனைத்து கட்சிகளும், மார்ச் மற்றும் ஏப்ரலில் பிரதமரால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்று, ஜனாதிபதி, தொற்று நோய்க்கு முகங்கொடுக்கும் நடவடிக்கைகளை இராணுவத்திடம் ஒப்படைத்ததை ஆதரித்தன.

ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதி ஒரு “பழங்குடித் தலைவர்” என முத்திரை குத்துவதன் மூலம் இராஜபக்ஷவின் சர்வதிகாரத்தின் கொடூரமான அச்சுறுத்தலை மூடி மறைத்ததுடன், அவர் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த மக்களை குற்றம் சாட்டினார்.

முன்நாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சிக்கு முன்னர் ஆதரவளித்த ஜே.வி.பி., பின்னர் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவளித்து, இராபக்ஷவும் மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அதிகாரத்திற்கு வருவதற்கான அடித்தளத்தை தயாரித்தது. ஜே.வி.பி., இப்போது 20 வது திருத்தத்தை தோற்கடிக்க ஒரு பரந்த முன்னணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. எந்தவொரு எதிர்ப்பையும் பாதிப்பில்லாத ஆர்ப்பாட்டங்களுக்குள் திசைதிருப்புவதற்காக, பல்வேறு முதலாளித்துவ அமைப்புகளுடன் அமைக்கப்படும் ஒரு கூட்டணியைத் தவிர, இது வேறு ஒன்றும் இல்லை.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது இந்த பிற்போக்கு திருத்தம் வெகுஜன கிளர்ச்சியை தூண்டிவிடும் என்ற ஆளும் வட்டாரங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. “முற்றிலும் சக்திவாய்ந்த ஒரு ஜனாதிபதியினால் சட்டவிரோதமாக அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான அதிருப்தியை தீர்ப்பதற்கு பொதுமக்களுக்கு வழி இல்லையேல், அரசுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பது மட்டுமே பரிகாரமாக இருக்கும்,” என அது பிரகடனம் செய்கின்றது.

உண்மையில், சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கு திரும்புவதானது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கான அரசியல் போராட்டத்துடன் பிணைந்துள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது.

இலங்கை தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீன வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிற்போக்கு நிகழ்ச்சி நிரலையும் அதன் முதலாளித்துவ “விமர்சகர்களையும்” எதிர்க்க வேண்டும். முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக, அது, கிராமப்புற ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேசவாத திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டிக்கொண்டு, ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும். இந்த முன்னோக்குக்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது, இந்த போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்புவிடுக்கின்றோம்.

Loading