முதலாளித்துவத்தின் உலகளாவிய சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை தொடர்பான கிரேட் பாரிங்டன் பிரகடனம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை என்பது தடுப்புமருந்து வழங்கல் தொடர்பாக பயன்படுத்தப்படும் ஒரு கருத்துரு ஆகும். அதாவது நோய்தொற்றுக்கு தடுப்புமருந்து ஆரம்பகட்டத்திலேயே வழங்கப்படுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்பதாகும். சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை என்பது மக்களை வைரஸிலிருந்து பாதுகாப்பதன் மூலம் நிறைவேற்றப்படுமே தவிர, வைரஸிற்கு அவர்கள் தங்களை தொற்றுக்குட்படுத்திக் கொள்வதனால் அல்ல. பொது சுகாதார வரலாற்றில், வெடித்துப்பரவும் எந்தவொரு தொற்றுநோயையும் கட்டுப்படுத்த சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை ஒருபோதும் ஒரு மூலோபாயமாக பயன்படுத்தப்படவில்லை. நாம் முழுமையாக அறிந்திராத அபாயகரமான வைரஸை சாதரணமாக பரவ விட்டிருப்பது நியாயமற்றதே. இது ஒரு விருப்பத் தேர்வுக்கான விடயமல்ல.” என்று உலக சுகாதார நிறுவனத்தின் அக்டோபர் 12, 2020 ஊடக சுருக்கச் செய்தியில், அதன் பொது இயக்குநரான Tredos Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.

பொது இயக்குநரின் ஆரம்பகட்ட குறிப்புக்கள், அக்டோபர் 4 அன்று மாசசூசெட்ஸில் உள்ள கிரேட் பாரிங்டன் நகரில் உள்ள அமெரிக்க பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் (American Institute of Economic Research-AIER) தயாரிக்கப்பட்டு கையெழுத்தான ஒரு சர்வதேச திட்டமான, கிரேட் பாரிங்டன் பிரகடனம் (The Great Barrington Declaration) என்ற கடந்த வார அறிவிப்பிற்கு பதிலிறுப்பாக வெளிவந்தன.

இந்த அறிவிப்பு, “கவனம் செலுத்தப்பட்ட பாதுகாப்பு,” என்று சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை அழைத்து அதை ஒரு அணுகுமுறையாக பரிந்துரைக்கிறது, அதனால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இதன் மூலம் மக்கள் மத்தியில் பரந்த அடிப்படையிலான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க இளைஞர்கள் தொற்றுநோயாளிகளாக மாற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

“சொத்து உரிமைகளையும் திறந்த சந்தைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை,” தமது நோக்கமாக கருதும் ஒரு சுதந்திரவாத சிந்தனைக்குழாமான, AIER, மிகுந்த பிற்போக்குத்தனமான, தொழிலாள வர்க்க விரோத மற்றும் சோசலிச எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு வலதுசாரி பில்லியனரான சார்லஸ் கோச் (Charles Koch) பகுதியளவு நிதியளித்துள்ளார், மேலும் இவர், இந்த கொலைகார அறிவிப்பை மரியாதைக்குரியதாக மாற்றவும், தொற்றுநோய் விவகாரத்தை கையாளுவதற்கு உலகளவில் தேவைப்படும் கொள்கையாக சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை முறைப்படுத்தவும் என விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட கூட்டத்தையும் நடத்தினார்.

Drs. Martin Kulldorf, Sunetra Gupta, and Jay Bhattacharya at the American Institute for Economic Research, photo courtesy of American Institute for Economic Research.

இந்த அறிவிப்பு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சுனேத்ரா குப்தா (Sunetra Gupta), கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பான ட்ரம்பின் “தேர்ந்தெடுக்கப்பட்ட” ஆலோசகரும், Santa Clara ஆய்வின் ஆசிரியருமான டாக்டர் ஸ்காட் அட்லஸூக்கு (Dr. Scott Atlas) மிக நெருக்கமானவருமான ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜெய் பட்டாச்சார்யா (Jay Bhattacharya) மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மார்ட்டின் குல்டோர்ஃப் (Martin Kulldorff) ஆகியோரால் தயாரித்து வழங்கப்பட்டது. இவர்கள் அனைவருமே அவரவர் அமைப்புகளுக்குள் மிகப் பிரபலமான விஞ்ஞானிகளாவர்.

இந்த மோசடி நிறைந்த அறிவிப்புக்குப் பின்னால், இந்த வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள், மதிப்பிற்குரிய ஒரு தன்மையை வழங்குவதற்காக தங்களது நன்மதிப்பையும் நிறுவனங்களையும் பயன்படுத்த முயற்சிப்பது தெளிவாகிறது. கல்வி மற்றும் விஞ்ஞானத்துடன் தொடர்புடைய இதே நிறுவனங்கள் பல தசாப்தங்களுக்கும் மேலாக நிதிமயமாக்கப்பட்டு அரசியல் எந்திரத்திற்குள் ஆழமாக புதைந்து கிடக்கின்றன. சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை மீதான அவரது சர்ச்சைக்குரிய நிலைப்பாடு குறித்து ஸ்டன்போர்டின் 100 க்கும் மேற்பட்ட தனது சக ஊழியர்களால் டாக்டர் அட்லஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பது கவனிக்கப்பட வேண்டும்.

யேல் பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் கிரெக் கோனால்வ்ஸ் (Gregg Gonalves) Mother Jones என்ற இடதுதாராளவாத இதழிடம், “இந்த ஆசிரியர்கள் பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை நன்கு பரிச்சயமானவர்களே, என்றாலும் கோவிட்-19 விவகாரத்தை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி ஒருமித்த கருத்துடன் எதையும் இவர்கள் பரிந்துரைக்கவில்லை. இவர்களது துறையின் ஏனையோர் இவர்களை திகைப்புடன் பார்க்கின்றனர்” என்று கூறினார். Nation இல் தான் எழுதிய ஒரு ஆழமான விமர்சனத்தில், அவர் இந்த அறிவிப்பை தான் எதிர்ப்பது தொடர்புபட்ட முக்கியமான காரணிகளை எடுத்துக்காட்டுகிறார்:

வயோதிபர் இல்லங்கள் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாக கூடியதாக இருப்பதால், பெரும்பாலான அமெரிக்க வயோதிபர்கள் தங்களது சமூகங்களுக்குள் மிக ஆழமாக ஒருங்கிணைந்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் நோய்தொற்று வெடித்து பரவுகையில், தவிர்க்கமுடியாமல் வயோதிகர்களும் நோய்தொற்று சங்கிலிக்குள் மாட்டிக் கொள்கின்றனர் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் கோவிட்-19 நோய்தொற்றின் கடுமையான விளைவுகளுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (CDC) கூட மதிப்பிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகளில் 18 முதல் 34 வயதிற்குட்பட்ட இளம் வயதினரில், 21 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது, 10 சதவிகிதத்தினருக்கு செயற்கை சுவாச வசதி தேவைப்படுகிறது, மேலும் 2.7 சதவிகிதம் பேர் இறந்துபோயினர்.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுடன் இணைந்த ஜாக்கோபின் பத்திரிகை சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை குறித்த விஞ்ஞான எதிர்ப்பை வளர்ப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. டாக்டர் கேத்ரின் யே (Dr. Katherine Yih) மற்றும் அறிவிப்பில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான டாக்டர் மார்ட்டின் குல்டோர்ஃப் ஆகியோர் உடனான நேர்காணலை ஒரு கட்டுரையாக ஜாக்கோபின் இதழ் பிரசுரித்தது.

“பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மீண்டும் திறக்கப்பட வேண்டும், அப்போது தான் இளமையான ஆரோக்கியமான மக்களால் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு பங்களிக்கப்பட்டு, இறுதியில் அது அனைவருக்கும் பலனளிக்கும்,” என்று அவர்கள் வாதிட்டனர். ஜாக்கோபின் செய்தி வெளியீட்டாளரான பாஸ்கர் சுங்கரா (Bhaskar Sunkara), “குல்டோர்ஃப் பூட்டுவற்கு அறிவிப்பதானது கடந்த அரை நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்திற்கு விழும் படுமோசமான அடியாகும்,” என்று எழுதினார். கோவிட்-19 விவகாரத்திற்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் கொலைகார பதிலிறுப்பை சுங்கரா முக்கியமாக ஒப்புக்கொண்டார், மேலும் இந்த விடயங்களில் தொடர்ந்து மௌனம் சாதிக்கும் கூட்டாளிகளாக அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) இருப்பதையும் இது ஆழமாக குறிக்கிறது.

கிரேட் பாரிங்டன் பிரகடனத்தில் கையெழுத்திட்டதன் பின்னர் டாக்டர் குல்டோர்ஃப், குப்தா மற்றும் பட்டாச்சார்யா ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டனர் என்பதுடன், “கவனம் செலுத்தப்பட்ட பாதுகாப்பு” என்று தங்களது புதிய மூலோபாயத்தை மேம்படுத்த கொரோனா வைரஸ் குறித்த ட்ரம்பின் ஆலோசகரான டாக்டர் ஸ்காட் அட்லஸ் மற்றும் சுகாதாரம் மற்றும் மனித வளங்கள் செயலாளரான அலெக்ஸ் அஸார் ஆகியோரை சந்தித்தனர். இந்த கொலைகார கொள்கையை மேம்படுத்துவதில், தனியார் இலாபம் தான் அடிப்படை சமூக காரணியாக இருக்க வேண்டுமேயன்றி, மனித வாழ்க்கை அல்ல என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை, கார்டியன் பத்திரிகை, உலகளவில் பல விஞ்ஞானிகளும் மருத்துவ பயிற்சியாளர்களும் கையெழுத்திட்ட இந்த அறிவிப்பில் கையெழுத்திட்டவர்களின் பட்டியலில் பல தவறான பெயர்கள் இருந்ததை குறிப்பிட்டது. இந்த பிற்போக்குத்தனமான அறிவிப்பின் பின்னணியில் உள்ள கூறுகளை அம்பலப்படுத்த இன்னும் பல விடயங்கள் வெளிவரும், என்றாலும் எழுதிய மை உலர்ந்து போவதற்கு முன்னரே அதன் பின்னணியில் உள்ள மோசடி ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

Southampton பல்கலைக்கழகத்தில் உலக சுகாதாரப் பிரிவின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர் மிக்கேல் ஹெட் (Dr. Michael Head), இந்த அறிவிப்பு ஒரு பயங்கரமான யோசனையாகும் என்பதுடன், வைரஸ் பரவலாக பரவ அனுமதிக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்படக்கூடியவர்கள் வைரஸை எப்படி தவிர்ப்பார்கள் என்பதும் சந்தேகமே என்று கூறினார். “இறுதியாகக் கூறுவதானால், இந்த அறிவிப்பு தேசிய மற்றும் உலகளவிலான பொது சுகாதாரத்திற்கு ஆபத்தான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது,” என்றும் கூறினார்.

கடந்த வாரம், அமெரிக்காவின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான டாக்டர் அந்தோனி ஃபவுசி (Dr. Anthony Fauci), கடந்த செப்டம்பரில், பலரை மருத்துவமனைகளில் சேர்க்கும் நிலையை உருவாக்கியதான “அதிவேகமாக நோயை பரப்பும் நிகழ்வாக,” வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ரோஸ் கார்டன் விழாவை எடுத்துக்காட்டிப் பேசினார். அந்த நிகழ்வின் போது ஒன்று அல்லது இரண்டு நபர்கள் தான் பலர் தொற்றுக்குள்ளாக காரணமாக இருந்தனர். தொற்றுநோயுடன் தொடர்புபட்ட இந்த சமீபத்திய அனுபவம், அதிவேக நோய்தொற்று பரவலுக்கான நிகழ்ச்சிகள் என்பவை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல; மாறாக அவை வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான முக்கிய வழிமுறைகளாக உள்ளன என்பதை நிரூபித்துள்ளது.

இரண்டு தென்கிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள பொது சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய தொடர்பு தடமறிதல் ஆய்வான சமீபத்திய கண்காணிப்பு ஆய்வில், 85,000 க்கு மேற்பட்ட கோவிட்-19 தொற்றுநோயாளிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர், இதில் மிகஅதிக நோய்தொற்று பரவும் கருத்துரு பற்றி மிகவும் சுருக்கமாக ஆசிரியர்கள் நிரூபித்தனர்.

நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 71 சதவிகிதத்தினரிடையே, வேறு எந்த தொடர்புபட்ட நபர்களுக்கும் நோய்தொற்று பரவவில்லை என்று அவர்கள் விளக்கினர். என்றாலும், பாதிக்கப்பட்டவர்களில் எட்டு சதவிகிதத்தினர் 60 சதவிகித புதிய நோய்தொற்றுக்களுக்கு காரணமாக இருந்தனர் என்றனர்.

தொற்றுநோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் அழித்தொழிப்பது என்பது பற்றிய உண்மையான விவாதத்தையும் நடவடிக்கையையும் திசைதிருப்புவதற்கான ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளின் முயற்சிகளானது, பொது சுகாதார நிறுவனங்கள் அரசியல் சார்பற்ற நிறுவனங்கள் அல்ல, மாறாக ஆளும் உயரடுக்கின் முக்கியமான கொள்கைக் கருவிகளாக அவை செயல்படுவதையே எடுத்துக் காட்டியுள்ளன.

சமீபத்திய மாதங்களில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய வழிகாட்டுதல்களில் காணப்படும் நெளிவு சுளிவுகளைப் பற்றி, சுகாதாரப் பாதுகாப்பு குறித்த தரவு பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட முடிவுகளை விஞ்ஞான அடிப்படையிலான, பகுத்தறிவு கொள்கை முடிவுகளாக திசைதிருப்புவதற்கான ஆளும் உயரடுக்கின் முயற்சிகளைக் கொண்டு மட்டுமே விளக்க முடியும். இந்த மாறும் வழிகாட்டுதல்கள், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட முதலாளித்துவத்தின் மீதான தொற்றுநோயின் தாக்கத்தை திறம்பட நிவர்த்தி செய்ய இயலாத ஆளும் உயரடுக்கின் மூலம் இயக்கப்படும் அரசு ஸ்தாபகத்திற்குள் உள்ள கன்னை மோதல்களுக்கான சான்றாக உள்ளன.

கடந்த திங்கட்கிழமை வெளிவந்த நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மிக சமீபத்திய மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய அறிக்கையில், வைரஸ் காற்றின் வழி துகள்கள் மூலம் பரவக்கூடும் என்பதை இறுதியில் நிறுவனம் ஒப்புக்கொண்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யாரோ ஒருவர் சுவாசிக்கையில், பேசுகையில், பாடுகையில், கூச்சலிடுகையில் அல்லது தும்முகையில் வெளியேறும் மிகச்சிறிய நீர்த் திவலைகள் நிமிடங்கள் முதல் மணிநேரம் வரை காற்றில் நீடித்திருக்கும் என்பதுடன் ஆறு அடிக்கு மேலாக அது பயணிக்கும் என்ற நிலையில் நோய்தொற்று இதன்மூலமாகவும் பரவக்கூடும் என்பதாகும்.

ஆமி கோனி பாரட்டை (Amy Coney Barret) மேல்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பரிந்துரைப்பது தொடர்பாக அறிவிக்க செப்டம்பர் 26 அன்று வெள்ளை மாளிகையில் ரோஸ் கார்டனில் நடைபெற்ற ஒரு விழாவில் 200 விருந்தினர் கலந்துகொண்டதான நோய்தொற்றின் அதிவேக பரவலுக்கான வாய்ப்பை உருவாக்கிய இந்த நிகழ்வை விட உறுதியான சான்றுகள் வேறெதுவும் இருக்கக்கூடுமா? அதனால், “34 வெள்ளை மாளிகை ஊழியர்கள், வீட்டு பணியாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய நபர்கள், அத்துடன் ஜனாதிபதி, அவரது மனைவி, ஒரு கடற்படை அட்மிரல் மற்றும் பல பிரச்சார உதவியாளர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவியது” என்பதை அக்டோபர் 7 அன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டாட்சி அவசரநிலை மேலாண்மை நிறுவனத்தின் குறிப்பாணை உறுதிப்படுத்தியது.

என்றாலும், வெள்ளை மாளிகையும் ட்ரம்பும், இந்த நோய்வெடிப்பு தொடர்பாக விசாரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தடைசெய்கின்றனர். இந்த அதிவேக பரவல் நிகழ்வை உருவாக்கிய நிலைமைகள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் நிலவுகின்றன. மேலும், ட்ரம்பிற்கும் அவரது கூட்டாளிகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படும் அதேவேளை, ஏனையோர் தரமான சுகாதார பாதுகாப்பை விட இலாபத்தைப் பெருக்க முனையும் உடைந்து போன சுகாதார அமைப்புக்களையே எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதையும் சேர்த்துக் கூற வேண்டும்.

அமெரிக்காவில் தொற்றுநோயின் மூன்றாவது அலை அதன் வேகத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் உள்ள முரண்பாடு என்னவென்றால், பெரியளவிலான பரிசோதனைத் திறனை கொண்டிருக்கையில் நோயிற்கான நேர்மறை விகிதம் மிகக் குறைந்த அளவாக இருக்கையிலும், நோய்தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பரந்தளவில் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பல நாடுகளில், நோய் தொற்றுக்கான அலைகளை திருப்பிவிட முடிந்தது. தொடர்பு தடமறிதல் கட்டமைப்பில் நிலவும் பற்றாக்குறை என்பது, பரிசோதிப்பதை ஒரு தனித்த செயல்முறையாக கொண்டிருப்பது ஒரு சமுதாய மற்றும் சமூக மட்டத்தில் சிறிதளவே உதவுகின்றது. இது சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை நடைமுறையில் இருப்பதற்கான உறுதியான அறிகுறியாகும்.

உலகளாவிய ஆரோக்கியத்தில் கொள்கை தாக்கத்திற்கான டியூக் பல்கலைக்கழக மையத்தை வழிநடத்தும் மருத்துவரான, டாக்டர் கவின் யாமி (Dr. Gavin Yamey), “இது நமது கொடூரமான கனவுகளுக்கு அப்பாற்பட்டது. இது ஒரு தோல்வி, ஒரு தேசிய பேரழிவு, மற்றும் பல வழிகளில் இதை நோய்தொற்றின் மூன்றாவது அலை என்றே நீங்கள் கருதலாம். மூன்றாவது அலை என்பது பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் அலை; இது ஒரு சுயதூண்டுதலினால் உருவான தேசியளவிலான காயமாகும்” என்று சுருக்க விளக்கம் தந்தார். மேலும், மழலையர் பள்ளிகள் முதல் 12 ஆம் வகுப்புகள் வரையிலுமான பள்ளிகள் திறக்கப்படுவதாலும் இது கணிசமாக அதிகரித்துள்ளது என்பதையும் சேர்த்துக் கூற வேண்டும் என்றார்.

நோய்தொற்றின் இந்த படுமோசமான அதிகரிப்புக்கள் முன்னறிவிக்கப்பட்டவை, மற்றும் முன்கணிக்கப்பட்டவையாகும். அவை ஆய்வு செய்யப்பட்டு வெறும் மாதிரிகளாக மட்டும் இருந்தபோதிலும், அவற்றின் முடிவுகள் மதிப்புமிக்க பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் பரவலான ஊடகச் செய்திகளாக கவனம் செலுத்தப்பட்டிருந்தன.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS), ஆளும் உயரடுக்கின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை எனும் கொலைகார கொள்கையானது என்ன விலை கொடுத்தேனும் இலாபம் பிழிந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் ஒரு கொள்கை என்று மிக உறுதியாகக் கூறியுள்ளது. ஆபத்துக்களைப் பற்றி பொருட்படுத்தாமல், முதலாளித்துவ வர்க்கமோ, “வீணடிக்க நேரமில்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், அதன் போக்கில் அது பரவட்டும்! மேலும் அடைப்புக்கள் வேண்டாம்!” எனக் கோருகிறது.

சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை அதன் பல அம்சங்களில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை மற்றும் நலனுக்கு எதிராக “சந்தைகளுக்கு அனைத்து வளங்களையும் சக்திகளையும்” வழங்கக் கோரும் எதிர்ப்புரட்சிகர கோரிக்கையை முன்வைக்கும் மோசமான புறக்கணிப்பு கொள்கையாகும். அத்தகைய கடுமையான மற்றும் கொடூரமான கொள்கைக்கு ஒரு போலி விஞ்ஞான ரீதியான பகுத்தறிவுமிக்க காரணத்தை அல்லது நியாயத்தை வழங்குவது எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் அரசியல் நனவை நசுக்குவதற்கும் முக்கியமானதாகிறது.

Loading