பௌசியை குறிவைத்து ட்ரம்ப் பாசிச கிளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தொடர்ச்சியான பிரச்சார பேரணிகள் மற்றும் ட்வீட்டுகளில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாசிச வன்முறையைத் தூண்டும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளார். வன்முறைமிக்க தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்களுக்கு ட்ரம்ப்பின் ஆதரவு, நவம்பர் 3 வாக்கெடுப்பின் முடிவைப் பொருட்படுத்தாமல் அதிகாரத்தில் இருக்க அவர் சதி செய்தமை மற்றும் அவரது கொலைகார “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொரோனா வைரஸ் கொள்கை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை எடுத்துக்காட்டும் விதமாக ஜனாதிபதி, சமீபத்திய நாட்களில் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி பௌசியை குறிவைத்துள்ளார்.

தொற்று நோய்கள் குறித்த முன்னணி ஆளுமையுள்ளவர்களில் ஒருவராக பௌசி பரவலாக அங்கீகரிக்கப்படுகிறார். முகக்கவசம் அணிதல், பரிசோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் போன்ற வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான ட்ரம்பின் எதிர்ப்பை அவர் அதிகளவில் விமர்சித்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகையின் ஆலோசகர் டாக்டர் ஸ்காட் அட்லஸ் பரிந்துரைத்த விஞ்ஞான எதிர்ப்பு மற்றும் கொடிய “எதுவும் நடக்கட்டும்” என்ற கொள்கையை ட்ரம்ப் ஊக்குவிப்பதை எதிர்த்தார்.

கோவிட்-19 க்கான சிலநாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ட்ரம்ப் சமூக விலகியிருத்தலுக்கு எதிரான தனது பிரச்சாரத்தை இரட்டிப்பாக்கியுள்ளார், பாரியளவில் நோய்பரப்பும் நிகழ்வுகளில் ஒன்றாக இணைக்கப்பட்ட முகக்கவசம் அணியாத ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் பேரணிகளை நடத்தினார். தொற்றுநோயின் ஆபத்துகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதற்கும், பள்ளிகளையும் வணிகங்களையும் முழுமையாக மீண்டும் திறப்பது பாதுகாப்பானது என்பதற்கான ஆதாரமாக அவர், தான் நோயிலிருந்து மீண்டுவந்த மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை எனப்படுவதைக் காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநரான டாக்டர் அந்தோணி எஸ். பௌசி ஒரு கொரோனா வைரஸ் மாநாட்டின் போது கருத்துக்களை வழங்குவதை டொனால்ட் ட்ரம்ப் பார்க்கிறார்(Official White House Photo by Andrea Hanks)

இது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அன்றாட இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகையிலும் மற்றும் நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரிக்கும் நிலைமைகளின் கீழ் நிகழ்கின்றது. அமெரிக்காவின் முதல் 60,000 பேரில் சராசரியாக தினசரி நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால், நாடு முழுவதும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது நான்கு வாரங்களுக்கு முன்பு இருந்ததைவிட 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

தேர்தல் பிரச்சார ஊழியர்களுடன் திங்களன்று பல நிருபர்கள் அழைக்கப்பட்ட ஒரு மாநாட்டு அழைப்பில், ட்ரம்ப், “மக்கள் கோவிட் உடன் வெறுப்படைந்து உள்ளனர். நான் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேரணிகளில் கலந்துகொண்டுள்ளேன்… மக்கள், ‘எதுவாக இருந்தாலும். எங்களை தனியாக விட்டுவிடுங்கள். ’அவர்கள் அதில் வெறுப்படைந்து இருக்கிறார்கள்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “பௌசியையும் இந்த முட்டாள்களையும் கேட்டு மக்கள் சோர்வடைந்துள்ளனர், இந்த முட்டாள்கள் அனைவரையும் தவறாகப் புரிந்து கொண்டனர்… அவர் இங்கு 500 ஆண்டுகளாக இருக்கிறார். அவர் தொலைக்காட்சிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும், எப்போதும் ஒரு குண்டு இருக்கும். ஆனால் நீங்கள் அவரைச் சுட்டால் ஒரு பெரிய குண்டாக இருக்கும். ஆனால் இந்த நபர் ஒரு பேரழிவு.”

ஜோ பைடெனை சிறையில் அடைக்க வேண்டும் என்ற தனது அழைப்பையும் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தி, அவரை "குற்றவாளி" என்று அழைத்தார். இது பாரிய வாக்காளர் மோசடி பற்றிய தவறான கூற்றுக்கள் மற்றும் தேர்தல் "மோசடியால்" மட்டுமே அவர் தோல்வியடைவதற்கான ஒரேயொரு வழி என்ற கருத்துடன் இணைக்கப்பட்டது.

பின்னர் திங்களன்று, அரிசோனாவில் ஒரு விமான நிலைய ஓடுதளத்தில் செய்தியாளர்களுடன் பரிமாறிக்கொண்ட ட்ரம்ப், பௌசியைப் பற்றி பின்வருமாறு கூறினார், “நான் அவரை காயப்படுத்த விரும்பவில்லை. அவர் சுமார் 350 ஆண்டுகள் இருக்கிறார். நான் அவரை காயப்படுத்த விரும்பவில்லை. தொற்று நோய்கள் குறித்த அரசாங்கத்தின் சிறந்த நிபுணரைப் பற்றிய "கேன்டர்பரி பேராயர் தாமஸ் பெக்கெட் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் இங்கிலாந்தின் இரண்டாம் மன்னர் ஹென்றி கூறிய புகழ்பெற்ற மேற்கோளான "இந்த தொந்தரவுதரும் பாதிரியாரிடம் இருந்து யாரும் என்னை விடுவிக்க மாட்டார்களா?" என்ற இந்த அசாதாரண கருத்தைக் கேட்க ஒருவர் நினைவுபடுத்தப்படுகிறார். பின்னர், அரிசோனாவின் பிரெஸ்காட்டில் நடந்த ஒரு பிற்பகல் பேரணியில், ட்ரம்ப் பைடெனை நேரடியாக பௌசியுடன் இணைத்தார், “பைடென் அனைத்தையும் பூட்ட விரும்புகிறார். அவர் டாக்டர் பௌசியின் கருத்தை கேட்க விரும்புகிறார்." என்றார்.

CBS 60 நிமிடங்கள் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ட்ரம்பின் தொற்றுநோயைக் கையாளுவதை பௌசி விமர்சித்து ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் வந்துள்ளன. வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் ட்ரம்ப் வைரஸால் பாதிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை என்று பௌசி கூறினார். வெள்ளை மாளிகை அவரை மௌனமாக்க முயல்கிறது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

பௌசி ஏற்கனவே தீவிர வலதுசாரி ட்ரம்ப் ஆதரவாளர்களின் இலக்காக மாறிவிட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. 60 நிமிட ஒளிபரப்பில் பௌசி மற்றும் அவரது மனைவி ஒரு நடைப்பயணத்தை மேற்கொண்டனர். இதில் கூட்டாட்சி பாதுகாப்பு பிரிவினால் ஒரு நிரந்தரமாக நியமிக்கப்பட்ட இரண்டு பாதுகாப்புக் காவலர்களால் சூழப்பட்டு நடந்து செல்கின்றனர்.

மிச்சிகனின் ஜனநாயக ஆளுநர் கிரெட்சன் விட்மரைக் கடத்தி கொலை செய்வதற்கும், மாநில சட்டப்பேரவையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கும் ஒரு தீவிரமான சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக 13 ஆயுததாரிகள் உறுப்பினர்களை குற்றஞ்சாட்டியதாக எஃப்.பி.ஐ மற்றும் மிச்சிகன் அதிகாரிகள் அறிவித்து இரண்டு வாரங்கள் கூட முடிவடையவில்லை. அப்போதிருந்து, பதினான்காவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, வேர்ஜீனியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநரை படுகொலை செய்வதற்கான திட்டங்களை சதி உள்ளடக்கியதாக அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மிச்சிகனில் உள்ள தலைநகர கட்டிடத்தில் கொரோனா வைரஸ் பூட்டுதல் உத்தரவுகளுக்கு எதிராக ஆயுத ஆர்ப்பாட்டங்களில் இந்த சந்தேக நபர்கள் பங்கேற்றிருக்கின்றார்கள். வேர்ஜீனியா, மினசோட்டா, ஓஹியோ, டெக்சாஸ் மற்றும் பிற மாநிலங்களில் நாஜி சின்னம் மற்றும் கூட்டமைப்புக் கொடிகள் நிறைந்த இதேபோன்ற பேரணிகள் நடைபெற்றன. மிச்சிகன், மினசோட்டா மற்றும் வேர்ஜீனியாவை "விடுவிக்க" தனது ஆதரவாளர்களை வலியுறுத்தி ட்ரம்ப் தனது உற்சாகமான ஆதரவை ட்வீட் செய்தார். பாசிச ஆயுததாரிகளை அனுதாபம் கொண்ட போலீசார் அன்புடன் வரவேற்றனர்.

மிச்சிகனின் அரச வழக்குத்தொடுனரால் "பனிப்பாறையின் உச்சி" என்று அழைக்கப்பட்ட இது அம்பலப்படுத்தப்பட்டதற்கு முன்னர் பைடெனுடனான விவாதத்தின் போது ட்ரம்ப் தனது பாசிச பையன்களை "தயாராக பின்னால் நிற்க வேண்டும்" என்று ட்ரம்ப் அழைப்புவிட்டார். இது தேர்தலில் ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுத்துவிட்டால் அதற்கு எதிரான எதிர்ப்புக்களுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களுக்குத் தயாராகுமாறு கூறும் ஒரு மெல்லியதாக மறைக்கப்பட்ட உத்தரவாகும்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை அமல்படுத்த முற்படும் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற அதிகாரிகளுக்கு எதிராக இதேபோன்ற அச்சுறுத்தல்கள் முன்வைக்கப்படுகின்றன. அக்டோபர் 16 ம் தேதி கன்சாஸ் நபர் ஒருவர் விசிட்டா நகர அதிகாரிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி ஜனநாயகக் கட்சி ஆளுனரான பிரண்டன் விப்பிளை கடத்தி கொலை செய்வதற்காக அவரின் வீட்டு விலாசத்தை கேட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.

ட்ரம்ப் பலமுறை விட்மரைத் தாக்கி, அவரது மாநிலத்தை முழுமையாக திறக்க விட்மர் மறுத்ததாகக் கூறி, அதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு சதிகளுக்குப் பின்னால் உள்ள பாசிச சக்திகளை நியாயப்படுத்தவும், தூண்டிவிடவும் கண்டனம் செய்துள்ளார். உண்மையில், நாடு முழுவதும் உள்ள ஜனநாயகக் கட்சி ஆளுநர்களைப் போலவே விட்மரும் பெருவணிகத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, வாகன ஆலைகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க அனுமதித்து, பிற வணிகங்களுக்கு கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டார்.

அரிசோனாவின் டுஸ்கனில் திங்கள்கிழமை இரவு ட்ரம்ப் மற்றொரு பாசிச ஆத்திரத்தை காட்டினார். ஒரு வலதுசாரி பெருநிறுவன பாதுகாவலான பைடெனை அபத்தமாக "சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் மார்க்சிஸ்டுகளுக்கு" ஒரு முன்னணி மனிதராக காட்டினார். அவர் தனது தீவிர வலதுசாரி வார்த்தைகளை அனைத்தையும் காட்டி தபால் மூலம் வாக்களித்தவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் சீனாவைத் தாக்கினார். இனவெறிக்கான அழைப்பில், குறைந்த வருமானம் கொண்ட வீடுகளை நிர்மாணிப்பதை தடுப்பதன் மூலம் புறநகர்ப் பகுதிகளை "காப்பாற்றுவதாக" அவர் கூறினார். "இடதுசாரி பூகோளமயமாக்கல்வாதிகள் மற்றும் செல்வந்தர்கள், செல்வந்த நன்கொடையாளர்கள்" என்று கண்டனம் செய்வதன் மூலம் அவர் யூத-விரோத மக்களுக்கு ஒரு அழைப்பை விடுத்தார். அவர் காவல்துறை, இராணுவம் மற்றும் ICE குடியேற்ற கெஸ்டபோ மீது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அவர் விட்மரைத் தாக்கி, அவரது கொள்கைகள் மிச்சிகனை ஒரு "சிறைச்சாலையாக" மாற்றியதாகக் கூறியதுடன், பைடெனை சிறையில் அடைக்க வேண்டும் என்ற தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார். "பைடென் குடும்பத்தை" ஒரு "குற்றவியல் நிறுவனம்" என்று அழைத்தார்.

தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்களுக்கான நேரடித் தூண்டுதலில், ட்ரம்ப் இரண்டாவது திருத்தம் மற்றும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமைகளை பற்றி எட்டு தடவைகளுக்கு குறையாமல் குறிப்பிட்டார். தனது பாசிச தலைவர்” (“Führer”) ஆளுமையைச் சுற்றி ஒரு பாசிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான தனது உந்துதலை ட்ரம்ப் அடிக்கோடிட்டுக் காட்டியபோது, கூட்டத்தில் இருந்த அவரது செயல்பாட்டாளர்கள் “சூப்பர்மேன், சூப்பர்மேன், சூப்பர்மேன்!” என்ற கோஷத்தைத் தொடங்கினர்.

அமெரிக்க முதலாளித்துவத்தின் முன்னோடியில்லாத பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு பதிலளிக்கும் அமெரிக்க பெருநிறுவன தன்னலக்குழுவின் சில பகுதிகளுக்காக ட்ரம்ப் ஒரு பாசிச இயக்கத்தை கட்டியெழுப்பவும், தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் பாரிய எழுச்சியை எதிர்பார்த்து சர்வாதிகார ஆட்சியை நிறுவவும் முயல்கிறார். நவம்பர் 3 தேர்தலைச் சுற்றியுள்ள சதித்திட்டங்கள் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. இது இன்னும் முன்னெடுக்கப்படுவதுடன் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் ஆபத்துக்களை முன்வைக்கின்றன.

ட்ரம்பினதும் மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகளின் மிகப்பெரிய சொத்து ஜனநாயகக் கட்சியின் பெயரளவிலான எதிர்ப்பாகும். ஜனநாயகக் கட்சியினர் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலை தீவிரமாக எதிர்க்கவோ அல்லது தீவிரமாக எதிர்க்கவோ முடியாது, ஏனெனில் அவர்கள் அடிப்படையில் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரைப் போன்ற அதே வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

மிச்சிகன் சதித்திட்டத்தில் அம்பலப்படுத்தப்பட்ட ஆபத்துக்களையும், அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு ட்ரம்ப் மறுப்பதையும் குறைத்துக்காட்டுவதற்கும் அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். பெரும்பாலும், பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் பொதுமக்களை மயக்கத்திற்குள்ளாக்கும் சதித்திட்டத்தில் அமைதியாக இருக்கத் தேர்வு செய்கிறார்கள். அவர்களின் மிகப் பெரிய அச்சம் என்னவென்றால், எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கும் தொழிலாள வர்க்கம் இவ்வாறான அச்சுறுத்தலுக்கு கீழே இருந்து ஒரு வெகுஜன இயக்கத்துடன் பதிலளிக்கும் மற்றும் அது முதலாளித்துவ அமைப்பையே அச்சுறுத்தும் என்பதே.

தேர்தல் முடிவுகளை மீறுவதற்கான ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடும் கட்சியின் திட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை செனட் ஜனநாயகக் கட்சி அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டது. இது விட்மர் மற்றும் வேர்ஜீனியா ஆளுனர் ரால்ப் நோர்தாமிற்கு எதிரான சதி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை மற்றும் எந்தவொரு சாதகமற்ற முடிவையும் ட்ரம்ப் நிராகரிப்பதை வெறும் "தவறான தகவல்" என்று வகைப்படுத்தியது. அந்த அறிக்கை, அமெரிக்க மக்கள் "பொறுமையாக இருக்க வேண்டும்", அரசியலமைப்பை தூக்கிவீவதையும் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதையும் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கூறுகின்றது.

பைடென் தேர்தலில் வெற்றிபெற்றாலும், ட்ரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகள் பாசிச போக்குகளின் வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவிக்கும். அவர்கள் தேர்தலை ஒரு சட்டவிரோத "முதுகில் குத்தல்" என்று கூறுவர். ஒரு ஜனநாயக நிர்வாகம் இந்த சக்திகளுடன் சமரசம் செய்ய தீவிரமாக முயற்சிப்பதுடன், அதே நேரத்தில் இராணுவவாதம், சிக்கனம் மற்றும் தணிக்கை ஆகியவற்றின் கொள்கையை பின்பற்றும்.

இந்த நிகழ்வுகள், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்திற்கும் அது பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்திற்கு வெளியே தொற்றுநோய், மந்தநிலை நிலைகள், வேலையின்மை, வறுமை மற்றும் பாசிசத்தின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு எதிராக எந்தவொரு தீவிரமான போராட்டமும் இருக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.

Loading