தஞ்சம் கோருவோர் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல்களை பிரித்தானிய அரசாங்கம் முடுக்கிவிடுகிறது

மொழிபெர்ப்பின்மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இராணுவ, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியிலான பேரழிவுகளிலிருந்து தப்பித்து நாட்டிற்குள் நுழையும் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோரின் ஜனநாயக உரிமைகள் மீது ஜோன்சன் அரசாங்கம் தனது தாக்குதல்களை அதிகரித்து வருகிறது.

ஐரோப்பாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் தஞ்சம் கோருவோருக்கு “அடைக்கலம் வழங்கும் நடைமுறை” இந்த ஆண்டு இறுதியில் பிரெக்ஸிட் (Brexit)நடைமுறைக்கு வரும்போது பெரும்பாலும் நிச்சயமாக நிறுத்தப்படும். தற்போதைய நிலவரப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) டப்ளின் ஒழுங்குமுறை, புலம்பெயர்ந்தவர்கள் ஒரு ஐரோப்பிய நாட்டிற்குள் முதன் முதலில் நுழைகிறார்கள் என்று கருதப்பட்டால் அவர்களைஅந்தஐரோப்பிய நாட்டிற்கு திருப்பியனுப்ப பிரிட்டனை அனுமதிக்கிறது. அதாவது, இந்த ஒப்பந்தத்தின் படி அல்லாமல், சர்வதேச சட்டத்தின் கீழ், பிரிட்டனுக்குள் தஞ்சம் கோரும் எவருக்கும் அவர்களது புகலிட அனுமதிக்கான நடைமுறை பூர்த்தியாகும் வரை அங்கு தங்கும் உரிமை உண்டு.

எல்லைப் படை கப்பல் ஒன்று, ஆகஸ்ட் 8, 2020, சனிக்கிழமையன்று, சிறிய படகுகளிலிருந்து இங்கிலாந்தின் துறைமுக நகரமான டோவரில் தஞ்சம் கோருபவர்கள் என்று கருதப்பட்ட ஒரு குழுவினரைக் கொண்டு வருகிறது. அமைதியான கோடைக்கால பருவநிலையானது வடக்கு பிரான்சிலிருந்து இங்கிலாந்து வரை ஆபத்து நிறைந்த கடல் பகுதியை சிறிய படகுகளில் கடப்பதற்கு முயற்சி செய்த ஒரு சாதனையளவிலான ஏராளமான மக்களைத் தூண்டியுள்ள நிலையில், எல்லைப்புற நடவடிக்கைகளை வலுப்படுத்தப் போவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவிக்கிறது. (AP Photo/Kirsty Wigglesworth)

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதான மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (Universal Declaration of Human Rights- UDHR) அடிப்படை “புகலிடம் கோரும் உரிமை” பிரிவை ஆதரிக்கும் எண்ணம் கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு இல்லை. மேலும், தஞ்சம் கோரி நாட்டிற்குள் நுழையும் மக்களை வந்தவுடன் நாடுகடத்துவதற்கான திட்டங்களை ஒன்றிணைப்பதில் டோரிக்கள் மும்முரமாக உள்ளனர். இவ்வாறு பரிசீலிக்கப்படும் திட்டங்களில், பயன்படுத்தப்படாத படகுகள், பயன்படுத்தப்படாத வட கடல் எண்ணெய் தளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள தொலைதூர தீவுகளில் அவர்களை தடுத்து வைப்பதும் அடங்கும்.

அனைத்து தெரிவுகளும் கவனத்துடன் கையாளப்படுவதுடன், அதன் தாக்கங்களும் மதிப்பிடப்படுகின்றன, அத்துடன் “சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழையவிடாமல் புலம்பெயர்ந்தோரை ‘அதைரியப்படுத்தவும்’ ‘தடுக்கவும்’ புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என்று ஒரு அரசாங்க ஆதாரம் தெரிவிப்பதாக கார்டியன் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த திட்டங்கள் “தேசிய குடிவரவு மற்றும் புகலிடச் சட்டம் 2002 இன் 77 மற்றும் 78 பிரிவுகளை மறுப்பதாக” இருக்க வேண்டும், அப்போது தான் தஞ்சம் கோருவோரது கோரிக்கை அல்லது முறையீடு நிலுவையில் இருக்கும்போது பிரித்தானியாவில் இருந்து அவர்களை வெளியேற்ற முடியும்” என்று அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட சட்ட ஆலோசனை பற்றி கார்டியன் குறிப்பிடுகிறது.

செப்டம்பர் மாத இறுதியில், தஞ்சம் கோருபவர்களை நாடு கடத்துவதற்கான முயற்சியை அரசாங்கம் முடுக்கிவிட்டது, அதாவது பலர் “புகலிடம் கோர தகுதியற்றவர்கள்” என்று அறிவிக்கும் கடிதத்தை பெற்றிருந்ததன் அடிப்படையில், தொற்றுநோய் தீவிரமாக பரவியபோது அவர்கள் தங்க அனுமதிக்கப்பட்டிருந்த தங்கும் விடுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். உள்துறை அலுவலகத்தின் கடிதம், அவர்கள் இதுவரை பெற்று வந்த எந்தவித ஆதரவும் அக்டோபர் 7 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும், “ஐக்கிய இராச்சியத்தை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது. மேலும், அத்தகைய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்காவிட்டால், வலுக்கட்டாயமாக நீங்கள் வெளியேற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை எதிர்கொள்வீர்கள்” என்றும் தெரிவிக்கிறது.

நோய்தொற்று தீவிரத்தின் போது ஆயிரக்கணக்கான தஞ்சம் கோருவோருக்கு உணவுவிடுதிகளில் தங்குமிடம் வழங்கப்பட்டிருந்தது, அந்த வகையில் தற்போது 3,000 பேரை வெளியேற்றுவதற்கு சாத்தியம் இருப்பதாக உள்துறை அலுவலகம் மறுஆய்வு செய்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக டோரி தலைமை அரசாங்கங்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள “விரோத சூழல்” காரணமாக, 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்து – புகலிடம் வழங்குவது, மனிதாபிமான பாதுகாப்பு, விட்டுவிடுதல் மற்றும் மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்தல் போன்ற மாற்று வடிவங்களில் - வெறும் 20,703 பேருக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கியது. மக்கள் தொகையில் நபர்கள் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பெறப்பட்ட புகலிடக் கோரிக்கைகளின் எண்ணிக்கையின்படி இங்கிலாந்து 19வது இடத்தில் உள்ளது.

ஏற்கனவே ஹோட்டல்களில் இருந்து துரத்தப்பட்ட பலரும் அவர்களது நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இன்னும் படுமோசமான தங்குமிடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம், கென்டில் உள்ள ஃபோக்ஸ்டோனுக்கு அருகிலுள்ள முன்னாள் நேப்பியர் இராணுவ குடியிருப்பில் தங்கியிருந்தவர்களில் குறைந்தது ஒரு தஞ்சம் கோரும் நபருக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அங்கு 400 க்கும் மேற்பட்ட தஞ்சம் கோருபவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். “அங்கு ஒவ்வொரு தங்குமிடத்திலும் சுமார் 32 ஆண்கள் தங்கியிருந்தனர், அறையின் ஒரு பக்கத்திற்கு 16 பேர் வீதம் நெருக்கமாக தங்கியிருந்தனர். மேலும், படுக்கைகளுக்கு இடையில் சமீபத்தில் தான் திரைகள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்” என்று ஒரு தொண்டு ஊழியர் கூறியதாக கார்டியன் தெரிவித்தது.

உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல் மற்றும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Credit: Hannah McKay Pool via AP)

செப்டம்பர் 7 அன்று, ஒரு நபர் பெரிய கத்தியுடன் இலண்டன் சட்ட நிறுவனத்திற்குள் நுழைந்து – இவரது பெயர் பகிரங்கப்படுத்தப்படவில்லை – ஒரு ஊழியரை காயப்படுத்தும் வகையில் “வன்முறைமிக்க, இனவெறி தாக்குதலை” நடத்தினார். அந்த நபர் அவரது பையில் ஒரு கூட்டமைப்புக் கொடியையும், தீவிர வலதுசாரி இலக்கியத்தையும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. உள்துறை செயலாளர் ப்ரீதி படேல், தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர், புகலிடம் கோருபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் “ஆர்வலர் வழக்கறிஞர்களுக்கு” எதிராக வசைமாரிப் பொழிந்தது தான் தாக்குதலுக்கான ஒரு முக்கிய காரணியாக இருந்ததாக தாங்கள் நம்பியதாக சட்ட சங்கம் அவருக்கு தகவல் கொடுத்தது. தாக்குதல் குறித்த சாட்சி அறிக்கை உட்பட ஒரு ஆவணம், “இந்த தாக்குதலுக்கான பொறுப்பும் பொறுப்புடைமையும், இந்த நிறுவனத்தின் பார்வையில், ப்ரீதி படேலின் காலடியில் தான் உள்ளன” என்று குறிப்பிட்டது.

“அப்பாவி உயிர்கள் பலியாவதற்கும், இந்த துறையில் பணியாற்றும் நபர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படுவதற்கும்” முன்னர் படேல் தனது “வேண்டுமென்ற ஆத்திரமூட்டும் வாய்ச்சவடால் பேச்சுக்களை” முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று சட்ட நிறுவனம் சட்ட சங்கத்திற்கு எழுதியது.

படேல், “சமாதானப்படுத்த முடியாதவர்களை பாதுகாக்கும்” “நல்லது செய்பவர்கள்” மற்றும் “இடதுசாரி வழக்கறிஞர்களை” டோரி கட்சி மாநாட்டில் கண்டித்து தனது வாய்ச்சவடாலை இரட்டிப்பாக்கி பதிலிறுத்தார். அவரைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், குற்றவியல் நீதி முறைமை “இடதுசாரி மனித உரிமை வழக்கறிஞர்களால் முடக்கப்பட்டதாக” கூறி அதற்கு பதிலிறுத்தார்.

இந்த அறிக்கைகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பாசிசவாத நடவடிக்கைக்கு அழைப்புவிடுக்கும் “நாய்-சீழ்க்கை” போன்ற முறையை வலுவாக எதிரொலிப்பதுடன், ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல் பயணத்தின் போக்கு குறித்த நடுங்கச் செய்யும் எச்சரிக்கைகளாகவும் அவை உள்ளன.

புகலிடம் கோருவோர் மீதான விரோதப் போக்கைத் தூண்டுவது என்பது அரசியல் பிளவு நாடெங்கிலும் நடைபெறுகிறது. இந்த மாதம் தொடக்கத்தில், ஒய்வுபெற்ற ராயல் கடற்படை அட்மிரல், தொழிற்கட்சி சகாவான Lord West, Baron West of Spithead, “நாம் விரும்பும் அளவிற்கு பலரை நாம் கைது செய்யலாம். இந்த நாட்டில் நாம் அவர்களை கையாளுவதற்கான ஒரு தீர்வை எட்டி, அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ள பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வரை, நாம் அவர்களுடன் சிக்கிக் கொண்டிருக்கிறோம், இந்நிலையில் ஒரு முகாம் அல்லது எங்கேனும் ஒரு நெருக்கடியான இடத்தில் வைத்து அவர்களை நாம் கையாள வேண்டும்” என்று தஞ்சம் கோருபவர்களைப் பற்றி BBC வானொலி நேர்காணலில் தெரிவித்தார்.

இவ்வாறு நம்பிக்கையிழந்த, ஆதரவற்ற பலர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அவர்களது வீடுகள் அழிக்கப்பட்டு வாழ்விழந்து நின்றனர், அந்த நேரத்தில் ராயல் கடற்படையின் தலைவராக Lord West இதில் முக்கிய பங்கு வகித்தார். West, அவரது First Sea Lord பதவிக் காலத்தைத் தொடர்ந்து, கோர்டன் பிரவுனின் தொழிற்கட்சி அரசாங்கத்தில் உள்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நாடாளுமன்ற துணைச் செயலராக அவர் நியமிக்கப்பட்டார்.

வதை முகாம்களைக் கட்டமைப்பதற்கான West இன் அழைப்பை பேட்டியாளர் சவாலாக எடுத்துக்கொள்ளவில்லை, இது சமூக ஊடகங்களில் பலரது சீற்றத்தை அதிகப்படுத்தியது. ஒரு ட்டுவீட், “என்னவானாலும் எந்தவொரு சவாலுமின்றி நாடுகடத்தப்படுவதற்கு முந்தைய நிலையில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கான அனைத்து தீவிரத்தன்மை கொண்ட வதை முகாம்களிலும் Admiral Lord Alan West of Spithead முன்மொழிந்தது இன்று காலை கொடூரமான ஒளிபரப்பாக இருந்தது. மேலும், இது முற்றிலும் வெறுக்கத்தக்கது” என்று தெரிவித்தது. மேலும் மற்றொரு ட்டுவீட், “அட்டூழியங்களின் நினைவுகளைத் தூண்டும் வகையில் இவ்வாறு வார்த்தைகளைப் பிரயோகிப்பது எவ்வளவு கொடுமையானது, அத்துடன் ஆலோசனையும் வழங்குகிறது. எவ்வளவு கேவலமான, அருவருப்பான, தீங்கான செயல் இது” என்று கூறியது.

அத்துடன் 20 ஆம் நூற்றாண்டின் கொடூரங்களைக் குறிப்பிடுவதோடு, ஏனையோர் இன்று நடக்கும் அட்டூழியங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர். “தற்சமயம், அமெரிக்காவில் உள்ள வதை முகாம்களில், அலட்சியப்படுத்தல், மோசமான சிகிச்சை மற்றும் போதிய மருத்துவ வசதி இல்லாமை ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தடுக்கப்படக்கூடிய நோயினால் இறந்துள்ளனர். இந்த வதை முகாம்களில் எப்போதும் இப்படித்தான் முடியும் என்பதால் Lord West அழைப்பு விடுக்கிறார்.”

அரை மனதுடன் மன்னிப்புக் கோரி, West பின்னர், “ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது இதற்கு தீர்வு காண உதவும் என்பதை தாண்டி செயல்பட நான் முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.

செப்டம்பர் 10, 2020 கிரேக்கத்தின் வடகிழக்கு தீவான லெஸ்போஸில் உள்ள மோரியா அகதிகள் முகாமுக்கு அருகே சாலையில் உறங்கும் புலம்பெயர்ந்தோர்

“சிக்கித் தவிக்கும்” அகதிகளை எவ்வாறு “கையாளுவது” என்பது பற்றிய Lord West இன் சிந்தனையை ஐரோப்பியத் தலைவர்களும் ஏற்கிறார்கள். கிரேக்கத்தின் லெஸ்போஸில் உள்ள மோரியா வரவேற்பு மற்றும் அடையாள மையம் (Moria Reception and Identification Camp) 2,800 பேர் வரை வசிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டது. கடந்த மாதம் அது எரிந்து தரைமட்டமாகிப் போன நேரத்தில் அதன் கொள்ளளவுக்கு ஐந்து மடங்கிற்கு மேலாக மனிதாபிமானமற்ற வகையில் அங்கு 13,000 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஆலோசனை வழங்கும் நிபணர்கள் குழுவின் உறுப்பினரான ஜீன் ஜீக்லர் (Jean Ziegler) கடந்த ஆண்டு மோரியா முகாமை “ஐரோப்பிய மண்ணில் உள்ள ஒரு பொழுதுபோக்கு வதை முகாம்” என்று விவரித்தார்.

அதிலும், “விலங்குகளை காட்டிலும் மோசமான” நிலைமைகளில் தாங்கள் வாழ்வதாக குடியிருப்பாளர்கள் கூறும் புதிதாக கட்டப்பட்டுள்ள “மோரியா 2.0” முகாமின் நிலைமையோ கொஞ்சமும் சகித்துக்கொள்ள முடியாதது. மிக மோசமான சுகாதாரம் மற்றும் மிகக் குறைந்த தண்ணீர் வசதி உள்ள நிலைமைகளில், அங்கு வசிப்பவர்கள் தங்களது உடலையும் உடைகளையும் கடலில் சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உணவு மற்றும் உணவுப் பொருட்களை பெறுவதற்கான வரிசைகள் முடிவின்றி நீள்கின்றன. கூடாரங்களில் காலநிலைக்கேற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை. ஒரு குடும்பத்திற்காக வடிவமைக்கப்பட்ட கூடாரங்கள் பல குடும்பங்களால் பகிரப்பட்டது, அதிலும் தனி நபர்கள் பெரும்பாலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுடன், 200 பேர் தங்கக்கூடிய பெரும் கூடாரங்களுக்குள் அடக்கி வைக்கப்பட்டனர். முன்னாள் துப்பாக்கி சுடும் முகாமின் தரையில் உண்மையான துப்பாக்கி ரவைகள் இருப்பதை அங்கு வசிக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் எளிதில் கண்டுபிடிக்கப்படுகின்றன.

செப்டம்பர் 17, 2020, வியாழக்கிழமை, கிரேக்கத்தின் வடகிழக்கு தீவான லெஸ்போஸை வானிலிருந்து காணக்கூடியதாகவுள்ள புதிய தற்காலிக அகதிகள் முகாம்கள் (AP Photo/Panagiotis Balaskas)

முகாம்களின் மோசமான நிலைமைகளை பிரதிபலிக்கும் வகையில், தீவில் உள்ள லெஸ்போஸ் ஒற்றுமை (Lesbos Solidarity) தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் கார்மென் டுபோன்ட் (Carmen Dupont) என்பவர், “புலம்பெயர்வு ஒப்பந்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வழிகாட்டுதலுடன் தொடர்புபட்ட திட்டநிரல் தான் இது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இது கட்டுப்படுத்தக்கூடியது. அதாவது, மனிதாபிமானமற்ற முகாம்களில் நரக நிலைமைகளில் மனிதர்களை சிக்க வைத்து, பூட்டி வைத்திருப்பது, அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள கண்ணியமான தங்குமிடங்களை அழித்து மூடுவது போன்றதாகும்” என்று கூறினார்.

தோல்வியுறும் முதலாளித்துவ அமைப்புமுறையின் சமூகக் கேடுகளின் பழியைச் சாட்டுவதற்கும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பிரித்தானியா மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள், மற்றும் தஞ்சம் கோருபவர்கள் பலிகடாக்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரை பாதுகாக்க பிரிட்டன் தொழிலாளர்கள் முன்வர வேண்டும். ஒட்டுமொத்த மக்களையும், மற்றும் அவர்களது நாடுகளிலிருந்து கட்டாயத்தினால் புலம்பெயரும் மில்லியன் கணக்கானவர்களை அச்சுறுத்தும் போர்கள், சூற்றுச்சூழல் அழிவு மற்றும் பொருளாதாரச் சீர்குலைவு ஆகியவைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய சோசலிசத்திற்கான போராட்டம் மட்டும்தான் ஒரே வழியாக இருக்க முடியும்.

Loading