முன்னோக்கு

உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கமும் சோசலிசத்தின் எதிர்காலமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கத்தை வரவேற்கும் பேரணியின் ஆரம்ப உரையாக டேவிட் நோர்த் இந்த அறிக்கையை வழங்கினார். நோர்த் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமாவார்.

 

உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கத்தை கொண்டாடும் வகையில் இந்த சர்வதேச இணைய பேரணியில் பங்கேற்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களையும் ஆதரவாளர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சார்பாக வரவேற்கிறேன்.

இந்த மறுதொடக்கத்திற்கான திட்டம் ஒரு வருடத்திற்கும் மேலாக நீண்டதும், தீவிர தொழில்நுட்ப, கலை, அரசியல் மற்றும் தத்துவார்த்த பணிகளை உள்ளடக்கியதுமாகும். அக்டோபர் 2, 2020 அன்று தளத்தின் புதிய பதிப்பு இணையத்திற்கு சென்று இப்போது மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது. அந்த நாளிலிருந்து, தளத்திற்கு சுமார் 2,300,000 வாசகர் வருகைகளும் மற்றும் 3 மில்லியனுக்கும் அதிகமான பக்கங்கள் வாசிக்கப்பட்டும் உள்ளன. மறுதொடக்கம் செய்யப்பட்ட தளத்திற்கு கிடைத்த பிரதிபலிப்பால் ஆசிரியர் குழு நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறது. ஆனால் உலக சோசலிச வலைத் தளத்தின் வேகமாக விரிவடைந்து வரும் வாசகர்களின் அளவு சுயதிருப்தியை நியாயப்படுத்தாது என்பதை நாங்கள் அறிவோம். இந்த பிரதிபலிப்பை விமர்சனரீதியாக ஆராய நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு நிர்ப்பந்திக்கப்படுகிறது. அதாவது, WSWS இன் தினசரி வெளியீட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் வெளிப்பாட்டைக் காணும் புறநிலை நிகழ்ச்சிப்போக்குகளை அடையாளம் காணவேண்டியுள்ளது.

டேவிட் நோர்த்

WSWS க்கான பிரதிபலிப்பு 1930களுக்கு பின்னரான மிகப்பெரிய நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் பாரிய அரசியல் தீவிரமயமாக்கல் போக்கினை பிரதிபலிக்கிறது. இந்த தொற்றுநோய் உலக முதலாளித்துவ அமைப்பின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் தார்மீக திவால்நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. COVID-19 வைரஸால் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும், இறப்பு எண்ணிக்கை கால் மில்லியனை நெருங்குகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள், நோய்த்தொற்றின் விளைவாக இறந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை நிச்சயமாக 300,000 க்கும் அதிகமாக இருக்கும். ஆனால் உலகெங்கிலும் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறி வருகையில், முதலாளித்துவ அரசாங்கங்களின் முக்கிய ஆர்வம் வைரஸைக் கட்டுப்படுத்துவதல்ல, மாறாக, இலாபங்களைப் பாதுகாப்பதாக இருக்கின்றது. இந்த குற்றவியல் முன்னுரிமை "சமூக நோய் எதிர்ப்புசக்தி பெருக்கம்" என்ற மனிதப் படுகொலை மூலோபாயத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. அதாவது மனித உயிர்களின் இழப்பின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் மிகப்பரவலான நோய்த்தொற்றின் ஊக்குவித்தலை சகித்துக்கொள்வதாகும்.

தொற்று நோயின் வெடிப்பு தொடங்கியதிலிருந்து உலக சோசலிச வலைத் தளம் விளக்கியுள்ளபடி, இந்த தொற்றுநோய், முதலாம் உலகப் போர் வெடித்ததைப் போலவே ஒரு “தூண்டுதல் நிகழ்வு” ஆகும். இது முதலாளித்துவத்தின் அனைத்து முரண்பாடுகளையும் பெரிதும் தீவிரப்படுத்தி வெடிக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. சமுதாயத்தில் உள்ள இரண்டு பெரிய வர்க்கங்களான முதலாளித்துவ வர்க்கமும் தொழிலாள வர்க்கமும் ஒவ்வொன்றும் அதனது சொந்த நலன்களின் பேரில் முரண்பாடுகளைத் தீர்க்க முற்படுகையில், இன்னும் நேரடியான மற்றும் மிருகத்தனமான மோதலுக்குள் தள்ளப்படுகின்றன.

முதலாளித்துவ உயரடுக்கினர் இந்த நெருக்கடியை சமாளிக்க முயலும் கொள்கைகள், ஜனநாயகத்தை அடக்குதல், பாசிசம் மற்றும் போர் ஆகியவையாகும். இவை அனைத்தும் உழைக்கும் மக்களின் அதிகபட்ச சுரண்டல், நசுக்குதல் மற்றும் வறுமை ஆகியவற்றை இலக்காக கொண்டு இயக்கப்படுகின்றன. இதற்கு பதிலளிப்பதற்கு, தொழிலாள வர்க்கம் புரட்சிகரப் போராட்டத்தின் பாதையில் நுழைய நிர்பந்திக்கப்படுகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கம் நடந்த அரசியல் மற்றும் வரலாற்று உள்ளடக்கம் இதுதான். ஆனால் WSWS இன் வளர்ச்சியில் ஒரு வெளிப்பாடாக இருக்கும் புறநிலை வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை அங்கீகரிப்பது என்பது, கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்பு தளத்தின் ஆரம்ப ஸ்தாபிதம் மட்டுமல்லாது WSWS இன் மறுதொடக்கம் என்பதும் குருட்டு வரலாற்று சக்திகளின் தன்னியல்பான விளைவு என்று அர்த்தமல்ல.

உலக சோசலிச வலைத் தளம் என்பது புரட்சிகர தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் காரியாளர்களின் நனவான முயற்சியின் விளைவாகும். WSWS முதன்முதலில் பிப்ரவரி 1998 இல் தொடங்கப்பட்டது. அப்போது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து ஆறு ஆண்டுகள் மட்டுமே கடந்துவிட்டிருந்தது. அதிகாரத்துவ ஆட்சியின் முறிவினை மார்க்சிச-விரோத திருத்தல்வாதிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ இடதுகளின் எண்ணற்ற வகைகளும் அத்துடன் உலகெங்கிலும் உள்ள இயலாமைமிக்க தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் விரக்தியின் வலிப்புடன் சந்தித்தன. "நூற்றாண்டின் நள்ளிரவு" வந்துவிட்டது என்றனர்.

இந்த அரசியல் மற்றும் வரலாற்று நிலைமை, அனைத்துலகக் குழுவால் முற்றிலும் மாறுபட்ட முறையில் மதிப்பிடப்பட்டது. இது பழைய மற்றும் பிற்போக்குத்தனமான அதிகாரத்துவ அமைப்புகளின் “ஒரு கல் கூட” எஞ்சியிருக்காது என்ற ட்ரொட்ஸ்கியின் கணிப்பு பூர்த்தியடைவதை கண்டு அனைத்துலகக் குழு ஆச்சரியப்படவோ அல்லது ஊக்கமின்மையடையவோ இல்லை. ஸ்ராலினிசத்தின் வீழ்ச்சி மற்றும் பழைய தேசிய சீர்திருத்தவாத மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் அழுகியநிலை இருந்தபோதிலும், முதலாளித்துவ அமைப்பு அதன் தீர்க்கமுடியாத முரண்பாடுகளால் சூழப்பட்டிருந்தது. நான்காம் அகிலத்தை எதிர்கொள்ளும் பணி, முதலாளித்துவ நெருக்கடியின் புதிய கட்டத்திற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் புத்துயிர்ப்புக்கும் தயாரிப்பு செய்வதாக இருந்தது.

வரலாற்று ரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட இந்த முன்னோக்கு, கடக்க வேண்டிய பாரிய சிரமங்களை குறைத்து மதிப்பிடவில்லை. ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், மாவோயிசம் மற்றும் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்கள் செய்த பல தசாப்த கால குற்றங்கள் மற்றும் துரோகங்களால் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவு மற்றும் தன்னம்பிக்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை ட்ரொட்ஸ்கிச இயக்கம் புரிந்து கொண்டுள்ளதுடன் அதைக் குறைத்துமதிப்பிடவுமில்லை. மேலும், இந்த குற்றங்களும் துரோகங்களும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினரிடையே சோசலிசம் என்ற கருத்தை ஆழமாக அழித்துள்ளதுடன், மதிப்பிழக்கவும் செய்துள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை. புறநிலை நிகழ்வுகளின் அழுத்தங்களின் கீழ் ஒரு புதிய தலைமுறை தோன்றுவதற்கும் கடந்த காலத்தின் காயங்கள் குணமடையவும் காலமெடுக்கும்.

ஆனால் இந்த நிகழ்ச்சிப்போக்கில், அனைத்துலகக் குழு அதன் சொந்த முக்கிய பங்கை உணர்ந்துகொண்டது. 1993 ஆம் ஆண்டில், கியேவில் எனது முதல் சந்திப்பின் போது, ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கி தலைமையிலான இடது எதிர்ப்பாளர்களின் போராட்டம் தொடர்பான வரலாற்று புத்தகத்தின் முதல் தொகுதியை எழுதிக்கொண்டிருந்த சிறந்த சோவியத் ரஷ்ய வரலாற்றாசிரியரான வாடிம் ரொகோவின், ஒரு சோசலிச இயக்கத்தை புதுப்பித்தல் எப்படி அடைய முடியும் என்று என்னிடம் கேட்டார்? ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை தொழிலாள வர்க்கத்திற்குள், ஒரு உண்மையான சோசலிச உலக கண்ணோட்டத்தையும் கலாச்சாரத்தையும் மீண்டும் உருவாக்குவதோடு இணைக்க சர்வதேச குழு உறுதியாக இருப்பதாக நான் குறிப்பிட்டேன். "இது மிகவும் உயர்ந்த இலட்சியம்" என்று வாடிம் பதிலளித்தார், மேலும் அவர் அவரது சிறந்த வரலாற்றுப் படைப்பான ஏழு தொகுதிகளை முடித்ததன் மூலம் இந்த முன்னோக்குக்கான தனது ஆதரவை நிரூபித்தார். அங்கு ஒரு மாற்றீடு இருந்ததா? தனது இறுதி தொகுதியை சர்வதேச குழுவுக்கு அர்ப்பணித்த வாடிம் 1998 இலையுதிர்காலத்தில் புற்றுநோயால் இறப்பதற்கு முன்பு உலக சோசலிச வலைத் தளத்தை தொடங்குவதைக் கண்டுகொண்டார்.

வலைத் தளம் தொடங்கப்பட்டதிலிருந்து, WSWS 8,000 க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஆரம்பத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் வெளியிடப்பட்டது மற்றும் வாரத்தில் ஆறு நாட்கள் வெளியிடுகைக்கு மிகவும் விரைவாக நகர்த்தப்பட்டது. ஒரு முன்திட்டமிடப்பட்ட இடுகை தேதி கூட தவறவிடப்படவில்லை. மார்க்சிச தத்துவத்திலும் மற்றும் நான்காம் அகிலத்தின் புரட்சிகர போராட்டத்தின் பரந்த வரலாற்று அனுபவத்தின் நனவான ஒருங்கிணைப்பு ஆகியவற்றிலும் வேரூன்றிய ஒரு முன்னோக்கினால் ஒரு வெளியீடு வழிநடத்தப்படும்போது மட்டுமே இத்தகைய உறுதி சாத்தியமாகும்.

ஜூலை 1998 இல், உலக சோசலிச வலைத் தளம் தொடங்கப்பட்ட ஒரு அரை வருடத்திற்குள், அதன் பணியின் அரசியல் மற்றும் அறிவுசார் அடித்தளங்களும் உந்துதல்களும் பின்வருமாறு வரையறுக்கப்பட்டன:

1. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மூலோபாயம் மற்றும் தந்திரோபாய ஒழுங்கமைப்பின் அடிப்படையாக சர்வதேசியவாதத்தின் முக்கியத்துவத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தியது.

2. பிற்போக்குத்தனமான தொழிலாளர் அதிகாரத்துவங்களின் தொழிலாள வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய போராட்டத்தின் சமரசமற்ற தன்மை.

3. ஒரு அத்தியாவசிய அறிவுஜீவியாக தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு உண்மையான சோசலிச அரசியல் கலாச்சாரம் புத்துயிர் பெறுவதற்கான மற்றும் ஒரு புதிய சர்வதேச புரட்சிகர இயக்கத்திற்கான "புனிதமான" முன்மாதிரி என்பதை ஒருவர் சேர்க்கலாம், என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது …

4. முதலாளித்துவத்தின் நெருக்கடி, வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சி ஆகியவற்றின் வளர்ச்சி தொடர்பாக தன்னிச்சையான மற்றும் அரசியல் விதிவச அபாயத்திற்கு எதிரான போராட்டம்.… [1]

உலக சோசலிச வலைத் தளத்தின் நிலைத்திருப்பும், வளர்ச்சியும் இந்த அடித்தளக் கோட்பாடுகளின் சரியான தன்மைக்கும், அவை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிச இயங்கியல் சடவாத உலகக் கண்ணோட்டம் மற்றும் ட்ரொட்ஸ்கிச அரசியல் வேலைத்திட்டத்திற்கும் சாட்சியமளிக்கின்றன.

ஒரு சோசலிச உலகக் கண்ணோட்டத்தாலும் கலாச்சாரத்தாலும் ஆழுமைக்குட்பட்டுள்ள ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு மார்க்சிச காரியாளரின் இடைவிடாத மற்றும் தொடர்ச்சியான செயல்பாடு தேவைப்படுகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் கிட்டத்தட்ட 23 ஆண்டுகால தொடர்ச்சியான மற்றும் தடையற்ற வெளியீட்டிற்குப் பிறகு, நான்காவது அகிலத்தின் அனைத்துலக குழுவின் காரியாளர்களின் பணிகள் "தொடர்ச்சியான" மற்றும் "தளர்ச்சியற்றது" என்று விவரிக்கப்படலாம். WSWS இன் வெளியீட்டிற்கு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த வெளியீட்டின் போது வெவ்வேறு கண்டங்களில் வாழும் காரியாளர்களின் தினசரி ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

WSWS இன் காரியாளர்கள் பரந்த அளவிலான அரசியல் அனுபவங்களைக் கொண்டவர்கள். வலைத் தளத்தின் வழக்கமான எழுத்தாளர்களில் சிலரான தோழர்களான பாரி கிரே, பாட்ரிக் மார்ட்டின், நிக் பீம்ஸ், விஜே டயஸ், கிறிஸ் மார்ஸ்டன், பீட்டர் சுவார்ட்ஸ், உல்ரிச் ரிப்பேர்ட், டேவிட் வோல்ஷ், லாரி போர்ட்டர் மற்றும் பிரெட் மாசெலெஸ் போன்ற தோழர்கள் பலரும் பல தசாப்தங்கள், ஒரு அரை நூற்றாண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட புரட்சிகர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எண்ணிக்கையில் வேகமாக அதிகரித்துவரும் பல எழுத்தாளர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரிவுகளுக்கு புதியவர்கள். இதைவிட இப்போது WSWS க்கு தொடர்ந்து பங்களிப்பு செய்யும் பல தோழர்கள் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகளை அவர்கள் வாழும் நாடுகளிலும், பிராந்தியங்களிலும் நிறுவ கடுமையாக உழைத்து வருகின்றனர்.

ஒரு வலைத் தளம் எழுத்தாளர்களால் மட்டும் இயங்கவில்லை. தளத்தின் தொழில்நுட்ப பராமரிப்பில் கலந்துகொள்ளும், கட்டுரைகளை சரிபார்த்து பின்னர் அவற்றை இணைய தளத்தில் இடுகையிடும் ஒரு சர்வதேச காரியாளர்களின் கட்டமைப்பால் WSWS பராமரிக்கப்படுகிறது. பெருநிறுவன தணிக்கையாளர்களுக்கு எதிராக WSWS தினசரி போரை நடத்த வேண்டிய நிலைமைகளின் கீழ், உலகெங்கிலும் உள்ள கட்சி பணியாளர்கள் எண்ணற்ற சமூக ஊடக தளங்களில் தலையிட்டு தளத்தின் இடுகைகளை உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றனர். உலக சோசலிச வலைத் தளத்தின் எண்ணற்ற அர்ப்பணிப்புள்ள வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் முயற்சிகளால் இந்த வேலை அளவிடமுடியாதளவு பலம்பெறுகின்றது.

நிச்சயமாக, WSWS இன் வெளியீட்டை அதன் விசுவாசமான வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வழங்கிய நிதி அர்ப்பணிப்புகள் இல்லாமல் நீடிக்க முடியாது.

பண்டைய உலகின் சிறந்த நாடக ஆசிரியரான டெரென்ஸ் எழுதினார்: “நான் மனிதன்; மனிதர்கள் யாரும் எனக்கு அந்நியமல்ல என்று நான் நினைக்கிறேன்." இந்த சர்வவியாபக பார்வை WSWS இன் உள்ளடக்கத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. அதன் வெளியீடுகளின் பரப்பளவு, பரந்த அளவிலான விடயங்கள், நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை உள்ளடக்கியது.

WSWS முற்றுமுதலாக தொழிலாள வர்க்கத்தினை நோக்குநிலையாக கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் வரை, WSWS இன் முக்கிய கவனம் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூகப் போராட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களையும் பகுப்பாய்வுகளையும் வழங்குவதாக இருக்க வேண்டும்.

உண்மையான புரட்சிகர வேலைத்திட்டத்திற்கும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் முகவர்கள் தயாரிக்கும் ஏமாற்றுகரமான திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுகொள்ள இது தொழிலாளர்களுக்கு கற்பிக்க வேண்டும். WSWS தொடர்ந்து தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நனவை உயர்த்த வேண்டும். இது சமகால நிகழ்வுகளுக்கு பதிலளிக்க அவசியமானதாகும். ரஷ்யாவில் சோசலிச அக்டோபர் புரட்சி அல்லது புதிய அமெரிக்க குடியரசின் போர்க்களங்களில் போராடிய இரண்டு பெரிய முதலாளித்துவ-ஜனநாயக புரட்சிகள் போன்றவற்றில் இரத்தத்தை விலையாக கொடுத்து பெற்ற கடந்த கால வரலாற்று வெற்றிகளின் பொய்மைப்படுத்தல் மற்றும் மறுப்புகளை ட்ரொட்ஸ்கிச இயக்கம் பொறுத்துக்கொள்ளாது.

தொழிலாள வர்க்கத்தின் விஞ்ஞானபூர்வ அறிவையும் கலாச்சார விழிப்புணர்வையும் உயர்த்த WSWS இயலுமானளவு முயற்சிக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் செல்வாக்கு எல்லைக்கு வெளியே கலாச்சாரத்தின் எந்த அம்சமும் இல்லை. புத்திஜீவித்தனமான விவாதத்தினாலும், மனித அனுபவத்தின் பரந்த அளவிலான பூரணப்படுத்தலாலும் வர்க்க உணர்வு வளப்படுத்தப்பட்டு, கூர்மைப்படுத்தப்படுகிறது

அனைத்து இனங்கள், தேசியங்கள், மதங்கள் மற்றும் இனப் பின்னணிகளை கடந்து அனைத்து வகையான ஒடுக்குமுறையிலிருந்தும் மனித குலத்தை விடுவிப்பதற்கும், உலக சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதற்கும், அதனது உலகளாவிய ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு தேவையான அளவிற்கு நனவை உயர்த்துவதே உலக சோசலிச வலைத் தளத்தின் பணியில் முக்கியமானதாகும்.

இன்று உலக சோசலிச வலைத் தளத்தின் பணியில் முக்கிய பங்கு வகிக்கும் பேச்சாளர்களிடமிருந்து உரைகளை நாம் கேட்போம். பேச்சாளர்களின் பட்டியல் நேரத்தின் காரணமாக மட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, அவர்கள் ஒரு பரந்த கூட்டு முயற்சியின் பிரதிநிதிகளாகப் உரையாற்றுகிறார்கள்.

[1] David North,Report to the Opening Session of the Eighteenth Plenum of the International Committee of the Fourth International, July 20, 1998

Loading