முன்னோக்கு

பிளேயரிச யூத-எதிர்ப்புவாத சூனிய வேட்டையில், சமீபத்திய அட்டூழியமாக தொழிற் கட்சி தலைமையால் ஜெர்மி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜெர்மி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டமை, தொழிற் கட்சியைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள வலதுசாரி சதிக்கூட்டத்தின் ஒரு வக்கிரமான ஜனநாயக-விரோத நடவடிக்கையாகும்.

அவரின் தலைமையின் கீழ் தொழிற் கட்சியில் பரந்தளவில் "இடது யூத-எதிர்ப்புவாதம்" (left anti-Semitism) இருந்ததாகக் கூறி, இந்த இடைநீக்கம் செய்வதற்கான அரசியல் சாக்குபோக்கு, கோர்பினுக்கு எதிராக மட்டுமல்ல எண்ணற்ற கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஓர் அவமதிப்பாகும். இது, இஸ்ரேலிய அரசு கொள்கைகள் மீது கோட்பாட்டுரீதியிலான எதிர்ப்பை நேர்மையின்றி சட்டவிரோதமாக யூத-எதிர்ப்புவாதமென அடையாளப்படுத்துவதைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களினது மத்திய கிழக்கு கொள்கைகளின் அமலாக்கத்தை நியாயப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஓர் அரசியல் சூனிய வேட்டையாகும்.

இதில் சம்பந்தப்பட்டுள்ள எரிச்சலூட்டும் மட்டம் நம்பத்தகுந்ததாக இல்லை. யூதர்களை நோக்கி திருப்பிவிடப்பட்ட இனரீதியிலான வெறுப்பான யூத-எதிர்ப்புவாதம், அரச குடும்பத்தினுள் உள்ளடங்கலாக பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தினுள் பல ஆதரவாளர்களைக் கொண்டிருக்கின்ற போதினும், வரலாற்றுரீதியில் அது அதிவலதுடன், குறிப்பாக நாஜி ஜேர்மனியுடன், அடையாளப்படுகிறது. பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஜேர்மன் நாடாளுமன்ற கீழ் அவையில் உத்தியோகபூர்வ எதிர்கட்சி அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு, மரீன் லு பென்னின் தேசிய பேரணி (National Rally) உள்ளடங்கலாக இதுபோன்ற அமைப்புகள் ஐரோப்பா எங்கிலும் ஆளும் உயரடுக்கால் விதைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இப்போது யூத-எதிர்ப்புவாதத்தின் ஆதாரமாக இடது இலக்கு வைக்கப்பட்டு வருகிறது.

பாலஸ்தீனர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கோர்பின் வெளிப்படுத்திய எதிர்ப்பு இப்போதும் இஸ்ரேலில் இடது மற்றும் சமாதான இயக்கத்தின் கணிசமான பிரிவுகளிடையே காணப்படுவதை விட அதிகமானதல்ல. இருந்தாலும் 2015 இல் கோர்பின் தொழிற் கட்சி தலைவராக ஆனதில் இருந்தே, யூத-எதிர்ப்புவாதம் என்ற இந்த போலி குற்றச்சாட்டுக்கள், பிளேயரிச வலது, பழமைவாத கட்சி, நெத்தன்யாஹூ அரசாங்கம், மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டனின் பாதுகாப்பு சேவைகளால் தொடுக்கப்பட்டு வரும் ஓர் அருவருக்கத்தக்க பிரச்சாரத்தின் அடிப்படையில் இடதுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் மீதும் பாலஸ்தீனர்களை அது இன்னலுக்கு உட்படுத்துவது மீதுமான எந்தவொரு விமர்சனமும், குற்றஞ்சாட்டுபவரை தொழிற் கட்சியிலிருந்து நீக்கும் கோரிக்கைகளுக்கான தருணமாக ஆக்கப்படுகிறது. இது இஸ்ரேல் அரசு மீதான அரசியல் விமர்சனத்தைச் சட்டவிரோதமாக்கி, 2018 இல் யூத-எதிர்ப்புவாதத்தின் சர்வதேச யூத-இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டணியை (IHRA) தொழிற் கட்சி ஏற்றுக் கொண்டதில் சூசகமாக எடுத்துக்காட்டப்பட்டது. தொழிற் கட்சியை முற்றும் முழுவதுமாக பிரிட்டிஷ் அரசு எந்திரத்தினுள் உள்ள மிகவும் பிற்போக்குத்தனமான கூறுபாடுகளின் ஒரு நம்பகமான கருவியாக மாற்றும் நடைமுறையை முழுமைப்படுத்துவதே இதுபோன்ற அடித்தளமற்ற பொய்களின் ஒரே நோக்கமாகும். இன்று அனேகமாக பிரிட்டிஷ் அரசியலில் மிகவும் வஞ்சகமான நபராக இருக்கும் போர் குற்றவாளி டோனி பிளேயர் மற்றும் அவரின் உள்பரிவாரங்களால் அது முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது சவால் செய்யப்படாவிட்டால், அரசு கையாட்கள் மற்றும் அரசியல் அயோக்கியர்களின் கணக்கில் வராத சதிக்கூட்டத்தால் சட்டவிரோதமாக கருதப்படும் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் கொள்கைகளை முன்னெடுப்பதற்கான அரசியல் கட்சிகளின் உரிமை உட்பட அது ஜனநாயக உரிமைகள் மீது நடுங்க வைக்கும் தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

இதில் எதுவுமே, கோர்பின் அவரின் தலைவிதியை அவரே தான் வடிவமைத்தார் என்ற உண்மையையும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வலதுசாரி அதன் திட்டங்களை முன்னெடுக்க அனுமதிக்க அவரே பொறுப்பு என்ற உண்மையையும் மன்னித்து விடாது.

கோர்பின் 2015 இல் கட்சி தலைமையை வென்றார், பின்னர் மீண்டும் 2016 இல் பிளேயர் மற்றும் பிரௌன் தொழிற் கட்சி அரசாங்கங்களின் குற்றகரமான வணிக-சார்பு மற்றும் போர்நாடும் பாரம்பரியத்துடன் அரசியல்ரீதியில் கணக்குத் தீர்த்துக் கொள்ள கோரி நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட ஒரு மக்கள் கிளர்ச்சியிலும் தலைமையில் இருந்தார். கோர்பின் பிளேயரிசவாதிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, மாறாக அவர்களைக் கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதற்காகவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அவர் அவ்வாறு செய்யவில்லை, “கட்சி ஒற்றுமை" என்று வலியிறுத்தி வலதுசாரிகளை வெளியேற்றுவதற்கான பெருந்திரளானவர்களின் எல்லா நகர்வுகளையும் எதிர்த்து அவர்களின் கட்டுப்பாடு தங்கியிருப்பதற்கு தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தியதுடன், பரிதாபகரமாக ஓர் அடிபணிவு மாற்றி ஒன்றாக அடிபணிந்தார். இது முன்னாள் இலண்டன் மேயர் கென் லிவிங்ஸ்டன், கறுப்பின யூத செயல்பாட்டாளர் ஜாக்கி வால்கர், மார்க் வாட்ஸ்வொர்த், நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் வில்லியம்ஸ் மற்றும் எண்ணற்ற சாமானிய கட்சி உறுப்பினர்கள் உட்பட அவரின் முன்னணி கூட்டாளிகள் மீது யூத-எதிர்ப்புவாத சூனிய வேட்டையை மையப்படுத்தி, பிளேயரிசவாதிகள் கோர்பினிசவாதிகளைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கான அவர்களின் திட்டங்களைப் பின்தொடர உதவியது. பின்னர் அவர்கள் டிசம்பர் 2018 தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் கையிலெடுத்தனர்.

இந்தப் போக்கில் அவரின் விரோதிகளுக்கு, வெளியேற்றுவதற்கு எதிரான எந்த தடையும் இருக்கவில்லை என்பதுடன், இப்போது அவர்கள் கோர்பினில் தொடங்கி இரத்த ஆறு ஓடச் செய்யும் ஓர் அரசியல் நடவடிக்கையுடன் முன்நகர்ந்து வருகிறார்கள்.

“யூத-எதிர்ப்புவாதத்தை கையாள்வதில் தொழிற் கட்சி தலைமை ஆழமாக தோல்வியடைந்துவிட்டது, யூத-எதிர்ப்புவாத புகார்களைக் கையாள்வதற்கு போதிய நடைமுறைகள் இல்லை,” என்று குறிப்பிட்ட சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணைய (Equality and Human Rights Commission EHRC) அறிக்கை வெளியிடப்பட்டு வெறும் ஒரு சில மணி நேரங்களில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பாரபட்சமற்ற சட்ட அமலாக்கத்திற்குப் பொறுப்பான EHRC அமைப்பு, “யூத-எதிர்ப்புவாத புகார்களில் அரசியல் தலையீடு, யூத-எதிர்ப்புவாத புகார்களைக் கையாள்பவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க தவறியமை, சட்டவிரோதமான பாரபட்சம் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மூன்று சமத்துவ சட்ட (2010) மீறல்கள்" இருந்ததாக அது அடையாளங்கண்டு குறிப்பிட்டிருந்தது.

இந்த EHRC அமைப்பு குற்றஞ்சாட்டப்படும் குற்ற நடவடிக்கைகளுக்காக யாரொருவரையும் உத்தியோகபூர்வமாக குற்றவாளியென அடையாளம் காணவில்லை, ஆனால் டஜன் கணக்கான தருணங்களில் கோர்பினின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சியோனிச ஆதரவு (யூத-அரசு அமைப்பதை ஆதரிக்கும்) யூத தொழிலாளர் இயக்கம் (JLM) மற்றும் யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிரான பிரச்சாரக் குழு ஆகியவற்றின் புகார்கள் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட EHRC விசாரணை பாரிய வெளியேற்றங்களில் போய் முடியும் என்பதை சோசலிச சமத்துவக் கட்சி 2019 மார்ச்சில் எச்சரித்தது.

யூத-எதிர்ப்புவாதத்தை எதிர்ப்பதில் அவர் முன்வரலாறைப் பாதுகாத்து நேற்று காலை கோர்பின் ஓர் அறிக்கை வெளியிட்டார். தொழிற் கட்சிக்குள் நிலவும் "பிரச்சினையின் அளவு" “கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எங்கள் எதிர்ப்பாளர்களாலும், அத்துடன் பெரும்பாலான ஊடகங்களாலும், அரசியல் காரணங்களுக்காக நாடகபாணியில் பெரிதாக்கப்பட்டதாக" அவர் குறிப்பிட்டார்.

கட்சியிலிருந்து அவரை வெளியேற்றுவதற்கான பிளேயரிசவாதிகள் மற்றும் ஊடகங்களின் கோரிக்கைகளுக்கு மத்தியில், இரண்டு மணி நேரங்களில், கோர்பின், கட்சி தலைவர் சர் கெர் ஸ்டார்மெரால் இடைநீக்கம் செய்யப்பட்டார். கோர்பினின் நிழலமைச்சரவையின் முன்னாள் உள்நாட்டு செயலர் டைன் அபோட், அவரைப் பிரதியீடு செய்வதில் முன்னுரிமையில் இருந்த ரெப்பக்கா லாங்-பைய்லி, தற்போது ஸ்டார்மெரின் துணை தலைவராக உள்ள அங்கெலா ரைய்னெரும் கூட இவர்கள் உட்பட 16 நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து தொழிற் கட்சியிடம் புகார் பதிவு செய்திருப்பதாக யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிரான பிரச்சாரக் குழு குறிப்பிட்டது.

ஆனால் இது அத்துடன் நின்றுவிடாது. இந்த மெக்கார்த்திச நாசவேலையின் இறுதியான இலக்கு தொழிலாள வர்க்கமாகும், அது தணிக்கையை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மற்றும் சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை எதிர்ப்பதற்காக குற்றகரமான இன்னல்படுத்தல்களையும் கூட முகங்கொடுக்கும். பிரிட்டன் வளாகங்களில் IHRA வரையறைகளை அமலாக்குவதற்கு ஜோன்சன் அரசாங்கத்தால் ஏற்கனவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கோர்பினிசவாதிகள் மீண்டுமொருமுறை சரணடைவதற்கான கொடியைக் காட்டி விடையிறுத்துள்ளனர். நிழலமைச்சரவையின் முன்னாள் சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல், “கட்சி ஒற்றுமையின் நலனுக்காக செய்யக்கூடாதவை மீது ஒரு வழியைக் காண்போம் & இதை தீர்த்துக் கொள்வோம்,” என்று ட்வீட் செய்தார். கோர்பின் Sky News க்கு கூறுகையில், “நான் என்ன செய்வேன் என்றால் மீண்டும் நிதானமாக சிந்தியுங்கள் … என்று கட்சிக்கு முறையிடுவேன்,” என்றார். பின்னர் அவர் தொழிற் கட்சி உறுப்பினர்களுக்கு முறையிட்டார், “விலகிச் செல்லாதீர்கள், கட்சியிலிருந்து வெளியேறாதீர்கள். கட்சியில் இருந்து, நமது சமூகத்திற்கான பொருளாதார மற்றும் சமூக நீதிக்கான விசயத்தை வாதிடுங்கள்.”

இந்த தரந்தாழ்ந்த நிகழ்விலிருந்து பிரிட்டனிலும் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இப்போது அடிப்படை படிப்பினைகளை எடுத்தாக வேண்டும்.

சோசலிஸ்ட் கட்சியின் கருத்துப்படி, கோர்பின் தலைமையில் தொழிற் கட்சி "சமூக ஜனநாயகத்தின் மறுபிறப்பை" பிரதிநிதித்துவம் செய்தது அல்லது "தொழிலாளர்களின் புதிய கட்சி" உருவானது என்ற போலி-இடது குழுக்களின் வாதங்களுக்கு இந்த சம்பவங்கள் ஒரு கடுமையான மறுப்பை வழங்கி உள்ளன. தொழிற் கட்சியிலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அதன் கூட்டு அமைப்புகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்காக, பிளேயரிசவாதிகளுக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்கி வைப்பதே கடந்த ஐந்தாண்டுகளில் அவரின் ஒரே நிஜமான கவலையாக இருந்துள்ளது என்பதையே கோர்பினின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

பழைய மதிப்பிழந்த கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு புத்துயிரூட்ட முடியும் என்றும் அல்லது இத்தகைய பழைய கட்சிகளின் பல்வேறு துண்டுகளை ஒருங்கிணைத்து தொழிலாள வர்க்கத்தின் புதிய அரசியல் வாகனமாக ஒன்று சேர்க்க முடியும் என்றும் உறுதியளித்த இடதுசாரி பிரமுகர்கள் மற்றும் இயக்கங்கள் என்று கூறிக் கொள்பவைகளின் வரிசையில் கோர்பின் வெறுமனே சமீபத்திய பிரமுகர் மட்டுமே ஆவார். இத்தகைய அரசியல் சாகசங்கள் ஒவ்வொன்றும் அழிவுகரமாகவே போய் முடிந்துள்ளது.

பிளேயரிசவாதிகளிடம் கோர்பின் சரணடைந்தமை கிரீஸில் சிரிசா சரணடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக நடந்தது, ஜூன் 2015 இல் ஐரோப்பிய ஒன்றியம்/சர்வதேச நாணய நிதியம் கட்டளையிடும் சிக்கன நடவடிக்கைளை எதிர்க்க பாரியளவில் வெகுஜனங்களின் ஒரு கட்டளை வழங்கப்பட்டிருந்த நிலையில், சிரிசா அதற்கு முன்பிருந்த வலதுசாரி அரசாங்கத்தை விட அதிக கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது. ஸ்பெயினில், புதிய அரசியல் அலையாக புகழப்பட்ட பொடெமோஸ் இப்போது சோசலிஸ்ட் கட்சியுடன் (PSOE) சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான கூட்டணியில் ஆட்சி செலுத்தி வருகிறது. அமெரிக்காவில், பராக் ஒபாமா "நம்பிக்கை" மற்றும் "மாற்றத்திற்கு" வாக்குறுதி அளித்தார், ஆனால் எட்டாண்டு காலம் இடைவிடாத போர்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளை வழங்கினார். ஜனநாயகக் கட்சி மூலமாக சோசலிசத்திற்கு வாக்குறுதி அளித்து ஒரு கடுமையான நீண்ட தேடலில் மில்லியன் கணக்கான இளம் ஆதரவாளர்கள் தேர்ந்தெடுத்த பேர்ணி சாண்டர்ஸ், இப்போது ஜனாதிபதி சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பைக் கலைத்து விடும் முயற்சியில் ஜோ பைடெனின் வலதுசாரி பிரச்சாரத்திற்கு ஓர் இடது திரையை வழங்கி வருகிறார்.

தொழிற்கட்சி வரலாற்றுரீதியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒரு கட்சி என்பதையும், தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச திருப்பம் எடுப்பதை எதிர்ப்பதில் அது பிரதான ஒத்துழைப்பாளராக இருந்ததுள்ளதையும் எச்சரித்து, சோசலிச சமத்துவக் கட்சி கோர்பினின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ஒரு சமூக சீர்திருத்தவாதம் மீது பிரமைகளை விதைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் நிராகரித்தது. அனைத்திற்கும் மேலாக அது வலதை நோக்கி சரிந்தமை டோனி பிளேயர் போன்ற மோசமான தலைவர்களின் விளைவல்ல மாறாக பழைய தொழிலாளர் அமைப்புகள் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையைக் உள்பொதிந்துள்ள வேலைத்திட்டங்கள் மீதான நம்பகத்தன்மையைக்குக் கடுமையாக குழிபறித்திருந்த, பூகோளமயமாக்கலுடன் தொடர்புபட்ட அடிப்படை உலக முதலாளித்துவ மாற்றங்களில் ஆழமான புறநிலை வேர்களைக் கொண்டிருந்தது. இந்த மதிப்பீடு ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. போர் குற்றவாளியும் வாழும் போதே பிரிட்டனில் மிகவும் வெறுக்கப்படும் அரசியல்வாதியான பிளேயர், இவர் வழிவந்தவர்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசத்துடன் தொடர்பிருப்பதாக காட்டி வந்த அதன் கடைசி பாசாங்குத்தனங்களைக் கூட உரித்தெறிந்து விட்ட ஒரு கட்சியை மாற்றுவதற்கு மீண்டும் வந்துள்ளனர்.

தொழிற் கட்சி அதன் உறுப்பினர்களுக்கு எதிரான சூனிய வேட்டை தொடங்கப்படுகையில் அது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய உயிர்பிழைக்காது. அதுபோலவே கோர்பினும் "கோர்பினிசமும்" எதையும் செய்ய மாட்டார்கள். இறுதியாக தொழிற் கட்சியை விட்டு வெளியேறி ஒரு புதிய கட்சியைத் தொடங்குமாறு அங்கே உருக்கமான அழைப்புகளும் உள்ளன. ஆனால் ஒவ்வொரு திருப்பத்திலும் தங்களின் ஆதரவாளர்களைப் பரிதாபகரமாக கைவிட்டு எதையும் முன்கணிக்காதவர்கள் தலைமையிலான அதுபோன்றவொரு கட்சியின் தன்மை என்னவாக இருக்கும்?

இதற்கு பதிலாக, நீண்டகாலமாக நடந்து வரும் தொழிற் கட்சியின் மரணம், கோர்பினிசத்தின் தோல்வியைக் கணித்தது மட்டுமல்ல மாறாக சோசலிச சர்வதேசியவாதத்தின் உண்மையான மாற்றீட்டை முன்னெடுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அதன் சகோதர கட்சிகளைக் கட்டமைப்பதை நோக்கி தொழிலாள வர்க்கம் ஓர் அரசியல் திருப்பம் எடுப்பதற்கான தருணமாக இது இருக்க வேண்டும்.

Loading