மில்லியன் கணக்கானவர்கள் ட்ரம்புக்கு எதிராக வாக்களிக்கையில், அவர் வன்முறைக்கும் வாக்குகளை முடக்கவும் முன்நகர்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பத்து மில்லியனுக்கும் அதிகமானவர்கள் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவிட செல்ல இருப்பதுடன், அமெரிக்காவில் வாக்குப்பதிவு எண்ணிக்கை 100 மில்லியனைக் கடந்துள்ள நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மக்கள் விருப்பத்திற்குப் பணிய மறுத்து, பதவியில் தங்கியிருப்பதற்கான அவரின் தயாரிப்புகளை அதிகரித்து வருகிறார். கருத்துக்கணிப்புகளில் பின்தங்கியுள்ள ட்ரம்ப், வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மீதான அவரின் சமீபத்திய சட்டச் சவால்கள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் சேர்ந்து, பகிரங்கமாக வன்முறையைத் தூண்ட திரும்பி வருகிறார்.

திங்கட்கிழமை இரவு 98 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்குப்பதிவு செய்திருந்தார்கள். 2016 இல், மக்கள் வாக்குகளை இழந்த போதினும் ஹிலாரி கிளிண்டனை விட சிறிய வித்தியாசத்தில் ஜனாதிபதி தேர்வுக்குழு மூலமாக ட்ரம்ப் வென்றபோது, அங்கே 138 மில்லியன் வாக்குகள் இடப்பட்டிருந்தன. இந்தாண்டு வாக்குப்பதிவு 160 மில்லியனை எட்டும் அல்லது அதையும் கடந்து செல்லக்கூடும்.

ஏற்கனவே வாக்களித்தவர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்குமேயானால், ட்ரம்ப் தேர்தல் நாளில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடெனை விட ஏறக்குறைய 25 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருக்கக்கூடும். அவர் மீண்டும் தேர்வாக வேண்டுமானால் ஒரே நாளில் பெருவாரியான நேரடி வாக்குகள் மூலமாக தான் ஜெயிக்க வேண்டியிருக்கும்.

San Francisco Department of Elections worker Rosy Chan checks for damaged ballots at a voting center in San Francisco, Sunday, Nov. 1, 2020. (AP Photo/Jeff Chiu)

வாக்குப்பதிவின் இதே போக்கு தொடர்ந்தால் —வாக்குகள் முடக்கப்படாமல் நியாயமாக எண்ணப்பட்டால்— தேர்தல் முடிவு ட்ரம்புக்கும் குடியரசுக் கட்சிக்கும் ஓர் அரசியல் படுதோல்வியாக இருக்கும். அமெரிக்காவில் 235,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதை மூர்க்கமாக மறுத்ததற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிரப்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்களுக்காகவும் இந்த இரண்டுக்காகவும், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பெருவாரியான மக்கள் கோபத்தின் வெளிப்பாடாக மட்டுமே இதை புரிந்து கொள்ள முடியும்.

மக்களின் இந்த உணர்வுகள், கடந்த மே மாதம் மினெயாபொலிஸில் பொலிஸால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை செய்யப்பட்டதற்கு விடையிறுப்பாக, நடைமுறையளவில் ஒவ்வொரு சிற்றூரிலும் நகரிலும், அமெரிக்கா எங்கிலும் வெடித்த பாரிய போராட்டங்களில் எடுத்துக்காட்டப்பட்டன. இந்த உணர்வுகள் ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அதன் அதிவலது கொள்கைகளைப் பாரியளவில் மறுத்துரைப்பதில் மீண்டும் மேற்புறத்திற்கு மேலுயர்ந்து வருவதாக தெரிகிறது.

இந்த வாக்குப்பதிவு எண்ணிக்கையானது, மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் இளைஞர்களின் அரசியல் நனவில் ஏற்பட்ட ஆரம்ப மாற்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஒரு சில புள்ளிவிபரங்கள் இந்த தேர்தலின் சில சமூக விபரங்களை வழங்குகின்றன:

• 2016 இல், குடியரசுக் கட்சி நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த டெக்சாஸில் சுமார் 8.9 மில்லியன் பேர் வாக்களித்தனர், ட்ரம்ப் 800,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். 2020 இல், அங்கே ஏற்கனவே முன்கூட்டிய வாக்குகளாக அல்லது தபால் வாக்குகளாக 9 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளனர், செவ்வாய்கிழமை தேர்தல்களில் இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். பிரதான நகரங்களில் தான் இவ்வாறு மிக அதிகளவில் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அம்மாநிலம் இப்போது கடுமையான போட்டியில் இருப்பதாக கருதப்படுகிறது.

• ஆரம்பத்தில் ட்ரம்ப் எளிதாக கைப்பற்றிய மற்றும் வழிவழியாக குடியரசுக் கட்சியின் மாநிலமாக விளங்கும் ஜோர்ஜியாவில், 2016 இல், 4.1 மில்லியன் பேர் வாக்களித்தனர். 2020 இல் ஆரம்ப வாக்குப்பதிவில் மட்டுமே, ஏற்கனவே 3.8 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர், அதுவும் அட்லாண்டா பெருநகர பகுதியில் மிக அதிகளவில் வாக்குப்பதிவு ஆகியுள்ளது, அம்மாநிலமும் இப்படியா அப்படியா என்று கருதப்படுகிறது.

• வடக்கு கரோலினாவில், ஆரம்ப வாக்குகளும் தபால் வாக்குகளும் சேர்ந்து ஏற்கனவே 2016 இல் பதிவான மொத்தம் 4.5 மில்லியன் வாக்குகளை விஞ்சிவிட்டன. அங்கே ராலெஹ், துர்ஹாம் மற்றும் சார்லட் ஆகிய நகரங்களில் அதிக வாக்குப்பதிவு ஆகியுள்ளது, 2016 இல் சுமார் 3 சதவீத வித்தியாசத்தில் அம்மாநிலத்தை ட்ரம்ப் கைப்பற்றி இருந்த நிலையில், இளைஞர்களின் வாக்குகள் 2016 ஐ விட மிகவும் அதிகமாக உள்ளது.

• ஏற்கனவே 7 மில்லியன் இளைஞர்கள் வாக்களித்திருப்பதாகவும், 2016 உடன் ஒப்பிடுகையில் “கடும் போட்டி நிலவும்" 14 இல் 13 மாநிலங்களின் வாக்காளர்களில் இளைஞர்களே அதிக சதவீதத்தில் இருந்ததாகவும் டஃப்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கண்டறிந்தது. வேர்ஜினியா, வடக்கு கரோலினா, ஜோர்ஜியா, புளோரிடா மற்றும் டெக்சாஸ் என பல தெற்கு மாநிலங்கள் எங்கிலும் இளைஞர்களின் வாக்குப்பதிவு எண்ணிக்கை மிகப் பெரியளவில் அதிகரித்திருந்தது.

தேர்தல் முடிவில் ஜனநாயகக் கட்சியும் பைடெனும் அதிகாரத்திற்கு வந்தால், இந்த தேர்தலுக்கு எதிராகவே கூட ஓர் அரசியல் சதியை நடத்துவதற்கு நடந்து வரும் முயற்சிகள் உள்ளடங்கலாக, ட்ரம்ப் மற்றும் அவரின் பாசிசவாத கொள்கைகளை மக்கள் நிராகரித்திருப்பதிலிருந்து முற்றிலும் தகுதியின்றி ஆதாயமடைந்திருப்பவர்களாக அவர்கள் இருப்பார்கள். உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பைடென் எந்த வேலைத்திட்டமும் வழங்கவில்லை என்பதோடு, ட்ரம்பைப் போலவே, அவரும் பெருநிறுவன அமெரிக்கா மற்றும் அதன் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் நலன்களையே பாதுகாக்கிறார்.

நேரடியாக வந்து வாக்களித்தவர்களின் வாக்குகள் அடிப்படையில் மட்டுமே வெற்றி என்ற போலி வாதத்தை ட்ரம்ப் கூறுவதற்காக, தபால் வாக்குகள் எண்ணுவதைத் தாமதப்படுத்துவது அல்லது டெக்சாஸின் ஹோஸ்டனில் செய்யப்பட்டிருப்பதைப் போல ஒரு சட்டவழக்கைப் பதிவு செய்வதன் மூலமாக முற்றிலுமாக முன்கூட்டிய வாக்குகளை முடக்குவது என சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே வாக்காளர்கள் தேர்தல்களில் பெருவாரியாக வாக்களித்திருப்பதற்கு ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியின் விடையிறுப்பாக உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சங்களின் காரணமாக ஹாரீஸ் உள்ளாட்சியில் (ஹோஸ்டன்) வழங்கப்பட்ட வாகனத்திலிருந்தவாறே வாக்களிக்கும் வசதியைப் பயன்படுத்திய அவ்விட வசிப்பாளர்கள் வழங்கிய 127,000 வாக்குகளின் செல்தகைமை மீது டெக்சாஸ் சட்டவழக்கு சவால்விடுத்தது. ஹாரீஸ் உள்ளாட்சியின் மொத்த வாக்குப்பதிவுகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவை முன்கூட்டிய வாக்குகளில் உள்ளடங்கி உள்ளன, இவற்றில் பெரும்பாலானவை ஜனநாயகக் கட்சிக்குச் சார்பானவை ஆகும்.

குடியரசுக் கட்சியினர் —மூன்று வேட்பாளர்களும் ஒரு நீண்டகால கட்சி செயல்பாட்டாளரும்—முன்வைக்கும் சட்ட வாதங்கள் வெளிப்படையாகவே ஜனநாயக-விரோதமாக இருந்தன. இந்த தொற்றுநோயின் போது குடிமக்கள் பாதுகாப்பான வழிகளில் வாக்களிக்க செய்வது உள்ளாட்சி அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று வாதிட்ட அவர்கள், தேர்தலுக்கு முன்னதாக அந்த வாக்குச்சீட்டுக்களை நீதிமன்றங்கள் கலைந்தெறிய வேண்டுமென கோரினர், இது நடைமுறையளவில் 127,000 பேரின் வாக்குரிமையைப் பறிப்பதாகும். ஒரு மாநில தேர்தல் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கான ஒரு முன்னுதாரணமாக அவர்கள் 2000 ஆம் ஆண்டு புஷ் மற்றும் கோர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அவமதிக்கத்தக்க முடிவை மேற்கோளிட்டனர். டெக்சாஸ் உச்ச நீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும் ஒரு குடியரசுக் கட்சி ஆளுநரால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்ததும், அந்த வழக்காளிகள் மத்திய நீதிமன்றத்திற்குச் சென்றனர். ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷால் நியமிக்கப்பட்டிருந்த ஓர் அதிவலது குடியரசுக் கட்சி சார்பான நீதிபதி ஆண்ட்ரூ ஹனென் வழக்காளிகளுக்குச் சட்டரீதியிலான நடைமுறைகளை மேற்கொள்ளும் நிலையாணை இல்லை என்பதுடன் மக்கள் அளித்த வாக்குகளால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் காட்ட முடியவில்லை என்று தீர்ப்பளித்தார். இந்த கோடையில் வாகனங்களில் இருந்தவாறே வாக்களிக்கும் நிகழ்முறை அறிவிக்கப்பட்டிருந்ததையும், ஆனால் இந்த சட்டவழக்கு தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னர் தான் அவரின் நீதிமன்றத்திற்கு வந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். வாக்குகளை முடக்குவதற்குக் கோரப்படும் தீர்வு மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதையும் அவர்ச சேர்த்துக் கொண்டார்.

லாஸ் வேகாஸை உள்ளடக்கிய நெவாடாவின் கிளார்க் உள்ளாட்சியில் தபால் வாக்குகள் எண்ணப்படுவதை நிறுத்துமாறு கோரிய ட்ரம்ப் பிரச்சாரக் குழுவின் பிரேரணையை நெவாடா நீதிபதி மறுத்து, வாக்குகளை உரிய முறையில் பாதுகாப்பதிலும், அவற்றை திறந்து எண்ணுவதிலும் சரியான நடைமுறைகள் மீது நிலுவையிலுள்ள சட்ட வழக்கு பின்தொடரப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்த போது, கடும் போட்டி நிலவும் ஒரு மாநிலத்தில் ட்ரம்ப் பிரச்சாரக் குழு இரண்டாவது பிரதான வழக்கிலும் தோல்வி அடைந்தது. நேரடியாக இடப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே நெவாடாவில் "வெற்றி" கோருவதற்கு ட்ரம்பை அனுமதிக்கும் விதமாக, தபால் வாக்குகள் பைடெனுக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் ஆதரவாக இருக்கலாம் என்று கருதி, அவற்றின் எண்ணிக்கையை தாமதப்படுத்துவதே அந்த சட்டவழக்கின் வெளிப்படையாக நோக்கமாக இருந்தது. நெவாடா தேர்தல்களில் இடப்பட்ட வாக்குகளில் மூன்றி இரண்டு பங்கை கிளார்க் உள்ளாட்சி கணக்கில் கொண்டுள்ளது.

ட்ரம்பு வாக்கிடுவதற்கு அதிக வாக்காளர்களைக் காணுகையில், நீதிமன்றங்களில் அவருக்கு வெற்றிகள் குறைவதைக் காணுகையில், அவர் நேர்மையாக வாக்குகள் எண்ணுவதைத் தடுக்கவும் மற்றும் வெற்றியாளர் அறிவிப்பைத் திக்குமுக்காட செய்யவும் ஒரு முயற்சியாக முற்றுமுதலான வன்முறை மற்றும் அச்சுறுத்தலை ஊக்குவிக்க அதேயளவுக்கு அதிகமாக அவரின் பாசிசவாத ஆதரவாளர்களை ஊக்குவித்து வருகிறார். முக்கிய மாநிலங்களில் குடியரசுக் கட்டுப்பாட்டிலான மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தலையீடு செய்து, மாநிலத்தில் மக்கள் வாக்குகள் என்னவாக இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், ட்ரம்ப் ஆதரவு தேர்தல் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பதே இலக்காக உள்ளது. தேர்தலைக் களவாடும் அவர் முயற்சிக்கு எதிரான போராட்டங்களை கலைக்க அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்த ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

ட்ரம்ப் பென்சில்வேனியாவின் ஸ்க்ரான்டனில் திங்கட்கிழமை உரையாற்றுகையில், தபால் வாக்குகள் பெறுவதற்கான காலவரம்பை மாநில அரசுகள் நவம்பர் 3 க்குப் பின்னர் நீடிப்பதற்குக் கண்டனம் தெரிவித்தார். “அவை மிகவும் அபாயகரமான சூழலை ஏற்படுத்தி விட்டன, நான் அபாயம் என்று அர்த்தப்படுத்துவது, உடல்ரீதியில் அபாயகரமானது, அவை அதை மிகவும், மிகவும் மோசமாக்கி விட்டன, அவை இம்மாநிலத்திற்கு மிகவும் மோசமான விசயத்தை செய்துவிட்டன,” என்றவர் அச்சுறுத்தினார். ஜனநாயகக் கட்சி ஆளுநர் டோம் வொல்ஃப் ஐ குறிப்பிட்டு அவர் எச்சரித்தார்: “நாங்கள் எல்லோரும் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால், தயவு செய்து ஏமாற்றாதீர்கள். ஆளுநரே, நாங்கள் எல்லோரும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

திங்கட்கிழமை காலை அவர் பின்வருமாறு ட்வீட் செய்து, பென்சில்வேனியாவில் அந்த காலவரம்பு நீடிக்கப்பட்டிருப்பதை உறுதியாக தாங்கிப் பிடித்துள்ள அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவர் கண்டித்தார்: “பென்சில்வேனியாவில் வாக்களிப்பதன் மீது உச்ச நீதிமன்றத்தின் முடிவு மிகவும் அபாயகரமான ஒன்று. அது அட்டூழியத்தையும் தடையில்லா மோசடியையும் அனுமதித்து, நமது ஒட்டுமொத்த சட்ட முறைகளுக்கும் குழிபறிக்கும். அது வீதிகளில் வன்முறையையும் தூண்டிவிடும். ஏதாவது செய்தாக வேண்டும்!” என்றார்.

“உடல்ரீதியிலான ஆபத்தும்" “வீதிகளில் வன்முறையும்" யாரிடம் இருந்து வரும்? யார் பாதிக்கப்படுவார்கள்? இது ஏற்கனவே மிச்சிகன், வேர்ஜினியா மற்றும் ஏனைய மாநிலங்களில் வெளியானவாறு சதிகளின் அதே வரிசையில் வலதுசாரி வன்முறை அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, மாநில அதிகாரிகளை மிரட்டுவதற்காக ட்ரம்பின் தெளிவான முயற்சியாக உள்ளது, அம்மாநிலங்களில் பாசிசவாத போராளிகள் குழுக்கள் ஜனநாயகக் கட்சி ஆளுநர்களையும் வெள்ளை மாளிகையில் சர்வாதிகாரியாக இருக்கக்கூடியவருக்குப் போதுமானளவுக்கு விசுவாசமாக இல்லை என்று கருதப்பட்ட ஏனையவர்களையும் இலக்கில் வைத்துள்ளனர்.

ட்ரம்பின் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு எதிராக பரந்த மக்கள் அதிருப்தியை எதிர்நோக்கி, பல மாநில ஆளுநர்களும், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டைச் சேர்ந்தவர்களும், தேசிய பாதுகாப்புப் படையை அணித்திரட்டி உள்ளனர். ட்ரம்ப்-எதிர்ப்பு குடியரசுக் கட்சியாளரான மாசசூசெட்ஸ் ஆளுநர் சார்லி பாகர் மாநிலம் எங்கிலும் நகர்புறப் பகுதிகளில் பணியில் இறக்கி விட வேண்டியிருக்கும் என்று 1,000 துருப்புகளை எச்சரிக்கைப்படுத்தி இருந்தனர். ஓரேகன் ஆளுநர் கிறிஸ்டைன் பிரௌன் திங்கட்கிழமையில் இருந்து புதன்கிழமை வரையில் போர்ட்லாந்து பகுதியில் அவசரகால நெருக்கடி அறிவித்து, எண்ணிக்கை குறிப்பிடாமல் தேசிய பாதுகாப்பு துருப்புகளை அணித்திரட்டி இருந்தார். ஜனநாயகக் கட்சி ஆளுநர் ஜெ. பி. பிரிட்ஜ்கர் உத்தரவின் பேரில், இலினோய் தேசிய பாதுகாப்படையின் ஒரு பிரிவு ஹம்வீஸ் வாகனங்களின் துணையுடன் சிகாகோவில் நிலைநிறுத்தப்பட்டது.

மே மாதம் பொலிஸால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய போராட்டங்கள் அளவுக்கு ஏற்படக்கூடிய போராட்டங்களின் அபாயத்தைக் காட்டி, டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அப்போட் ஏற்கனவே, ஹோஸ்டன், டல்லாஸ், போர்ட் வொர்த், ஆஸ்டின் மற்றும் சான் அண்டோனியோ ஆகிய ஐந்து பிரதான நகரங்களில் 1,000 தேசிய பாதுகாப்பு துருப்புகளை அணித்திரட்டி உள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக உத்தியோகபூர்வ வாஷிங்டனின் முன்னெச்சரிக்கை சூழல் Atlantic இதழில், “ட்ரம்ப் எவ்வாறு ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முயல்வார்,” என்று வெளியான ஒரு கட்டுரையின் தலைப்பில் வெளிப்பட்டது. ட்ரம்ப் தேர்தலைக் களவாடவோ அல்லது அதன் முடிவை ஏற்க மறுக்கவோ முயன்று வரும் அபாயத்தை முன்னாள் துணை ஜனாதிபதி பகிரங்கமாக நிராகரித்துள்ள நிலையில், “தேர்தல் சுமூகமாக நடத்துவதில் ட்ரம்ப் குறுக்கிட முயலக்கூடிய பல நிலைமைகளுக்கு விரைவாக விடையிறுப்பதற்கான பாரிய திட்டமிட்ட பயிற்சிகளை" பைடென் பிரச்சாரக் குழு நடத்தி உள்ளதாக Atlantic கட்டுரை குறிப்பிடுகிறது.

இத்தகைய விடையிறுப்புகள் "மாநில அல்லது மத்திய நீதிமன்றத்தில் முன்வரையப்பட்ட அவசர தீர்மானங்கள்" வரையில் மட்டுப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. “இதுவரையில் அதனால் அனுமானிக்க முடிந்த எந்தவொரு சம்பவத்திலும் தற்காலிகமாக தடுக்கும் உத்தரவாணைகள் கோரி ஒரு மணி நேரத்திற்கு மனு தாக்கல் செய்ய பிரச்சாரக் குழு தயாராக இருக்கும்,” என்று கூறுமளவுக்கு அக்கட்டுரை செல்கிறது.

ட்ரம்ப் மத்திய அரசு முகவர்களையும் துணை இராணுவப் படைகளையும் அல்லது வழக்கமான இராணுவத்தையே கூட பயன்படுத்தக்கூடும் என்பதைக் குறித்து Atlantic விவாதிக்கிறது என்றாலும், பைடென் பிரச்சாரக் குழுவுக்கும் பென்டகனுக்கும் இடையே சந்தேகத்திற்கிடமின்றி நடந்து வரும் எந்தவொரு விவாதங்களைக் குறித்தும் அது அறிவிக்கவில்லை.

Loading