ட்ரம்ப் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மறுத்து வருகையில் பைடெனும், ஜனநாயகக் கட்சியினரும் வலதுசாரி நிர்வாகத்திற்குத் தயாரிப்பு செய்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திங்கட்கிழமையும் அரை டஜன் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது, 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடென் ஜெயித்து விட்டதாக அறிவிக்க அனைத்து பிரதான ஊடக நிறுவனங்களையும் நிர்பந்திக்கும் வகையில் சனிக்கிழமையே தேர்வுக் குழுவிலும் மக்கள் வாக்குகளிலும் இரண்டிலும் ஜோ பைடென் முன்னிலையில் இருந்தார். 28 ஆண்டுகளில் டொனால்ட் ட்ரம்ப் தான் மறுதேர்வுக்கான போட்டியில் தோற்கடிக்கப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியாவார்.

தேர்வுக் குழுவில் அவரை முன்னிலைக்குக் கொண்டு வந்த மாநிலமான பென்சில்வேனியாவிலும், அத்துடன் நெவாடா மற்றும் ஜோர்ஜியாவிலும் பைடெனின் முன்னிலை தொடர்ந்து அதிகரித்தது. இதை எழுதிக் கொண்டிருக்கையில், பென்சில்வேனியாவில் அந்த முன்னாள் துணை ஜனாதிபதி 43,194 வாக்குகளும், நெவாடாவில் 31,464 வாக்குகளும், ஜோர்ஜியாவில் 10,353 வாக்குகளும் முன்னிலையில் இருந்தார். முதல் இரண்டு மாநிலங்களிலும் சனிக்கிழமை பைடென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார், அதேவேளையில் ஜோர்ஜியாவில் இறுதி முடிவு, சில தற்காலிக வாக்குகள் (provisional ballots) மற்றும் இராணுவ வாக்குச்சீட்டுக்களின் எண்ணிக்கைக்காகவும், அதைத் தொடர்ந்து மறுஎண்ணிக்கைக்காகவும் காத்திருக்கிறது.

அரிசோனாவில் பைடென் 16,952 வாக்குகள் முன்னிலையில் உள்ளார், இந்த எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களில் 60,000 இல் இருந்து குறைந்துள்ளது. Fox News உம் அசோசியேடெட் பிரஸூம் அரிசோனாவில் பைடெனை வெற்றியாளராக அழைத்துள்ளன என்றாலும் மற்ற ஊடக அமைப்புகள் அதை செய்யவில்லை. வடக்கு கரோலினாவில் 75,387 வாக்குகள் வித்தியாசத்தில் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார், 110,000 இக்கும் அதிகமான தற்காலிக வாக்குகள் (provisional ballots) மற்றும் தபால் வாக்குச்சீட்டுக்கள் மீதான எண்ணிக்கை அங்கே நிலுவையில் உள்ளது, இது நவம்பர் 10 வரையில் தொடங்காது.

அடுத்த ஜனாதிபதியை உத்தியோகப்பூர்வமாக தேர்ந்தெடுக்க டிசம்பர் 14 இல் ஒன்றுகூடும் தேர்வுக் குழுவில், ட்ரம்புக்கான 232 வாக்குகளுடன் ஒப்பிடுகையில், 306 தேர்வுக் குழு வாக்குகளுடன் மாநிலங்களில் பைடென் முன்னிலை வகிக்கிறார். 2016 இல் ட்ரம்ப் இதே வித்தியாசத்தில் தான் ஹிலாரி கிளிண்டனை விட மேலோங்கி இருந்தார்.

ஆனால் விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா போன்ற ட்ரம்ப் சிறிய வித்தியாசத்தில் வென்ற மாநிலங்களில் கிளிண்டன் விரைவிலேயே விட்டுக்கொடுத்ததுடன், மறுஎண்ணிக்கையையும் கூட எதிர்த்தார், அதேவேளையில் ட்ரம்போ ஒப்புக் கொள்ள மறுப்பதுடன் தேர்தலில் தானே வென்றதாக தொடர்ந்து அறிவிக்கிறார். சிறிய வித்தியாசத்தில் போட்டி நிலவும் மாநிலங்கள் பலவற்றில் சட்டபூர்வ சவால்களுக்கு நிதியளிக்க அவர் மில்லியன் கணக்கிலான டாலர்களைத் திரட்டி உள்ளார்.

இறந்தவர்களின் வாக்குகள் இடப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து, கணினி நிரல்கள் மூலமாக குடியரசுக் கட்சியினரின் வாக்குகள் ஜனநாயகக் கட்சியினருக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது வரையில், பத்தாயிரக் கணக்கான வாக்குச்சீட்டுக்கள் அப்பட்டமாக ஜனநாயகக் கட்சிக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது வரையில் பல்வேறு தேர்தல் விதிமீறல்கள் இருப்பதாக மூர்க்கமான ஆதாரமற்ற வாதங்களுடன், ட்ரம்பின் செய்தி தொடர்பாளர்களும் காங்கிரஸ் சபையின் முன்னணி குடியரசுக் கட்சியினரும் வெளியிட்ட அறிக்கைகள் அவற்றின் தீவிரத்தன்மையில் வெறித்தனமாக இருந்தன.

ஒவ்வொரு இடத்திலும், வாக்கு எண்ணிக்கை இருகட்சியினரின் பார்வையாளர் குழுக்களால் மேற்பார்வையிடப்பட்டு வந்த நிலையில், குறிப்பிடத்தக்க சர்ச்சைகளைக் குறித்து அங்கே எந்த செய்திகளும் இல்லை. முன்னுக்கு வந்த அவ்விதமான தவறுகள் பிரதானமாக தேர்தல் அதிகாரிகளால் சுயமாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், பின்னர் ஒட்டுமொத்தமாக அவை பெரிதுப்படுத்தப்பட்டு, ட்ரம்ப் மற்றும் அவரின் ஏவலர்களால் சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டன.

ஜோர்ஜியா, அரிசோனா மற்றும் நெவாடா உட்பட போட்டியிட்ட பல மாநிலங்களில், குடியரசுக் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணைய எந்திரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு, குறிப்பிட்டு நம்பத்தகாத ட்ரம்பின் மோசடி வாதங்களைச் செய்து வருகின்றனர். மாநில நிர்வாகத்தை ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பென்சில்வேனியாவில், பெரும்பாலான உள்ளாட்சிகளில் குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன, சொல்லப்போனால் இந்த அதிகார எல்லைகள் பிரதானமாக ஜனநாயகக் கட்சியினர் செலுத்திய பெருந்திரளான தபால் வாக்குச்சீட்டுகளை எண்ணி வருகின்றன.

புதிய ஜனநாயகக் கட்சி நிர்வாகத்திற்குக் கைமாற்றுவதற்கு உதவ அவசியமான சட்டபூர்வ நடவடிக்கைகளையும் ட்ரம்ப் நிர்வாகம் பின்னுக்கு இழுத்து வருகிறது. தேர்தல் முடிவுகள் இறுதியானவை என்றும், அவ்விதத்தில் நிர்வாகத்தை ஏற்கும் பைடெனின் குழு பாதுகாப்புத்துறை ஒப்புதல்கள் மீதும், உள்துறை அரசு தகவல்கள் மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் மீதும் அதிகாரம் பெறலாம் என்றும், பெரும்பாலான படைத்துறைசாரா அரசு கட்டமைப்பைச் செயல்படுத்தும், மத்திய பொது சேவைகள் நிர்வாகம் (GSA) உத்தரவு பிறப்பிப்பது முக்கிய நடைமுறையாகும். ட்ரம்ப் நியமனமான GSA இன் தலைவர் எமிலி முர்பி இதுவரையில் அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை, இந்த தாமதமும் ஒரு நீண்ட சட்ட போராட்ட விடயமாக ஆகலாம்.

வாக்கு "மோசடி" குறித்து குடியரசுக் கட்சி பிரச்சாரத்தின் நோக்கம், தேர்தல் முடிவை மாற்றுவதற்கான சாத்தியக்கூறு இன்னமும் இருக்கிறது என்றாலும், விட்டுக்கொடுப்புகளின் ஒரு வடிவத்தில், பைடெனிடம் இருந்து ஓர் அரசியல் விலையைப் பெறுவதை விட; கொள்கை மற்றும் ஊழியர்களின் வடிவத்தில் ஒரு புதிய நிர்வாக உருவாக்கத்தில் சலுகை கேட்பதாக தெரிகிறது. பைடெனும் காங்கிரஸ் சபை ஜனநாயகக் கட்சியின் தலைமையும், இதுபோன்ற விட்டுக்கொடுப்புகளை வழங்க விரும்புகின்றனர், பேரார்வத்துடனும் கூட இருக்கின்றனர் என்பதற்கு அங்கே எல்லா அறிகுறியும் உள்ளது.

“நெருக்கடி காலங்களில் அரசியல் வட்டாரம் முழுவதிலும் குடியரசுக் கட்சியினரையும் ஜனநாயகக் கட்சியினரையும் ஐக்கியப்படுத்துவதில் ஜோ பைடென் அவரின் தொழில்வாழ்வை செலவிட்டுள்ளார்,” என்று ஞாயிறன்று பைடெனின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜமால் பிரௌன் தெரிவித்தார். பைடெனே கூட சனிக்கிழமை இரவு அவரின் வெற்றி உரையில் இரு கட்சி மீதும் ஒருமுனைப்பட்டிருந்தார்.

பைடென் பிரச்சாரக் குழு ஆதாரநபர்களிடம் இருந்து ஊடகங்களுக்கு கசியவிடப்பட்ட வரவிருக்கும் மந்திரிசபை வேட்பாளர்களின் பட்டியலில் ஜனநாயகக் கட்சியின் வலதுசாரிகளில் இருந்தும் அல்லது பாதுகாப்புத்துறை செயலர் பதவிக்கு மிஷேல் ஃபுளோர்நோய் (Michele Flournoy), நிதித்துறை செயலர் லெயில் பிரெய்னார்ட் (Lael Brainard), வெளியுறவுத்துறை செயலர் சூசன் ரைஸ் (Susan Rice) அல்லது கிறிஸ் கூன்ஸ் (Chris Coons) போன்ற தேசிய பாதுகாப்பு ஸ்தாபகத்தினரும் நிரப்பப்பட்டு உள்ளனர். பொதுவான இந்த பட்டியல்கள் ஜனநாயகக் கட்சியின் சாண்டர்ஸ்-வாரென் அணியிலிருக்கும் பிரமுகர்களை விட குடியரசுக் கட்சியினர் பலரை உள்ளடக்கி உள்ளது.

வேறொன்று இருக்குமென்றால், அது குடியரசுக் கட்சியினரைச் சாந்தப்படுத்தும் ஒரு முன்கூட்டிய முயற்சியாக ஜனநாயகக் கட்சியின் இடது அணியை நீக்கும் ஒரு பிரச்சாரத்திற்கு நிகரான ஒன்றை காங்கிரஸ் சபை ஜனநாயகக் கட்சியினர் முன்னெடுக்கின்றனர். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் ஓர் இழிவார்ந்த வலது சாரியான செனட்டர் ஜோ மன்சின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆசனங்களுக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சியினரின் மோசமான செயல்திறனுக்கு "சோசலிசம்" மீது பழி தூற்றினார், அவர், எந்தவொரு துணுக்கு ஆதாரமும் இல்லாமல், அவரது மாநிலமான மேற்கு வேர்ஜினியாவில் பலரும் குடியரசுக் கட்சியினருக்கு வாக்களித்ததற்கு அது தான் காரணம் என்றவர் வாதிட்டார்.

நவம்பர் 3 இல் மறுதேர்வுக்குப் போட்டியிட்டு சிறிய வித்தியாசத்தில் ஜெயித்த முன்னாள் சிஐஏ முகவரும் வேர்ஜினியாவின் பிரதிநிதியுமான அபிகாயில் ஸ்பான்பேர்க்கர் (Abigail Spanberger) இன் ஒரு மெக்கார்த்திச அறிக்கை, ஜனநாயகக் கட்சியின் அம்மாநில வேட்பாளர்களிடையே பரந்த ஆதரவைப் பெற்றுள்ளதுடன், பரப்புவதற்கு ஊடகங்களும் அதை எடுத்துக் கொண்டன. தேர்தலுக்குப் பின்னர் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினரது தொலைபேசி வழி கூட்டுக்கூட்டம் ஒன்றில், ஸ்பான்பேர்க்கர் பேசுகையில், “பொலிஸிற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கவும்" மற்றும் "அனைவருக்கும் மருத்துவக் கவனிப்பை" நிறுவவும் அழைப்பு விடுத்ததாலேயே பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியின் ஆசனங்கள் குறைந்ததாக பழிச்சுமத்தினார்.

“நாம் மீண்டும் ஒருபோதும் 'சோசலிஸ்ட்' அல்லது 'சோசலிசம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியதில்லை,” என்று அந்த அழைப்பில் ஸ்பான்பேர்க்கர் தெரிவித்தார். “அதன் காரணமாக நாம் நல்ல உறுப்பினர்களை இழந்துவிட்டோம்,” என்றார். இந்த வலதுசாரி சொல்லாடலை முன்நகர்த்துவதற்காகவே அந்த தொலைபேசி அழைப்பின் ஒலியலைப் பத்திரிகைகளுக்குக் கசியவிடப்பட்டது.

ஜனநாயகக் கட்சி மிகவும் இடதிலிருந்து போட்டியிட்டதாக கூறும் கூற்று அர்த்தமற்றதாகும். இதுவொரு வலதுசாரி முதலாளித்துவக் கட்சி, முன்னணி படையினர் என்ற அர்த்தத்தில், கடந்த இரண்டாண்டுகளில் முன்னாள் சிஐஏ மற்றும் சிறப்புப் படை நடவடிக்கையாளர்களின் ஓர் அடுக்கும், அத்துடன் சேர்ந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் இருந்த முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் உயர்மட்ட படைத்துறைசாரா ஆலோசகர்களும் அதில் குறிப்பிடத்தக்களவுக்கு அதிகமாக உள்ளே வந்துள்ளார்கள். இப்போது பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களில் இவர்கள் ஏறக்குறைய 15 பேர் இருப்பதுடன், அடுத்த காங்கிரஸ் சபையின் அதிகார பகிர்வை இவர்கள் பிடியில் வைத்திருப்பார்கள்.

செனட் சபை போட்டியில், செனட் சபையின் ஜனநாயகக் கட்சி தலைவர் சக் ஷுமர் வலதுசாரி நியமனங்களைக் கொண்டு வருவதில் வெற்றியடைந்தார், கென்டக்கி, வடக்கு கரோலினா மற்றும் டெக்சாஸ் ஆகிய மூன்று இடங்களில் இராணுவ-உளவுத்துறை பின்புலங்களைக் கொண்ட முன்று நபர்களும் இதில் உள்ளடங்குவர். அயோவா, அலாஸ்கா, கன்சாஸ் மற்றும் மைன் ஆகிய இடங்களில் இன்னும் பல பழமைவாத, வணிக-சார்பு வேட்பாளர்களுக்கு ஏற்பட்டதைப் போலவே, அவர்கள் மூவருமே தோல்வியடைந்தவர்கள், இதில் இரண்டு பேர் பெரும் வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்கள். போட்டி நிறைந்ததாக கருதப்பட்ட எந்தவொரு செனட் ஆசனத்திற்கும் ஜனநாயகக் கட்சியினர் சாண்டர்ஸ் அணியின் ஒரேயொரு வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை, ஆனால் கட்சியின் மேலோங்கிய வலதுசாரிகளைக் கொண்டும் செனட் சபையை ஜெயிக்க தோல்வியடைந்ததன் மீது பழி சுமத்தி அங்கே எந்த ஆரவாரமோ கதறலோ இருக்கவில்லை.

ஞாயிற்றுக் கிழமை தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சிகளில், மன்சினின் சோசலிச-விரோத பிதற்றல்களுக்கு அப்பாற்பட்டு, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பதவியைப் பைடென் ஜெயிப்பதில் முக்கிய பிரமுகரான பிரதிநிதிகள் சபை கொறடா ஜிம் கிளைபேர்ன், உழைக்கும் மக்களின் கண்களில் கட்சி அதன் நம்பகத்தன்மையைத் தக்க வைக்க எந்த முற்போக்கான பொருளாதார கொள்கைகளையும் வழங்கவில்லை என்ற பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அலெக்சாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸின் வாதங்களை மறுத்தளித்தார். என்ன முத்திரைகள் என்பது விசயமல்ல என்ற அவர், ஜோர்ஜியாவில் இரண்டு செனட் ஆசனங்களுக்கு கட்சி இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நகர்கின்ற நிலையில், இது செனட் சபையில் கட்டுப்பாடு எடுப்பதைத் தீர்மானிக்கும் என்பதால், காலநிலை மாற்றம், மருத்துவக் கவனிப்பு அல்லது பொலிஸ் வன்முறை சம்பந்தமாக அவர் எதை "தீவிர" கொள்கைகள் என்று அழைத்தாரோ அதனுடன் ஜனநாயகக் கட்சியினர் எந்த விதத்திலும் இணைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஏற்கனவே அமெரிக்காவில் 240,000 க்கு அதிகமானவர்கள் உயிரிழந்து 10 மில்லியன் பேர் நோய்வாய்ப்பட்டுள்ள இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய் மீதான நடவடிக்கைக்கு பைடென் பிரச்சாரக் குழுவோ அல்லது காங்கிரஸ் சபை ஜனநாயகக் கட்சி தலைமையோ எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்மொழிவுகளும் வழங்கவில்லை. அதற்கு பதிலாக, முற்றிலும் சுய விருப்பத்தின் அடிப்படையில் முகக் கவசம் அணிவதையும் ஏனைய நடவடிக்கைகளையும் ஊக்குவிக்க, டேவிட் கெஸ்லெர் மற்றும் விவேக் மூர்த்தி ஆகிய இரண்டு முன்னாள் அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் திங்கட்கிழமை பைடென் ஒரு பணிக்குழுவை ஏற்படுத்தினார்.

செப்டம்பர் 30, 2021 வரையில் இருக்கும் தற்போதைய எஞ்சிய நிதியாண்டுக்கு நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களை நிறைவேற்ற விரைவிலேயே கூட்டப்பட இருக்கும் வெளியேறவிருக்கும் ஆட்சியின் காங்கிரஸ் சபை அமர்வில் வேலைவாய்ப்பின்மை நெருக்கடி மீது அவசர சட்டமசோதா நிறைவேற்ற வேண்டுமென பைடென் அழைப்புவிடுக்கவில்லை. இந்த மசோதாக்கள் பைடென் நிர்வாகத்தின் முதல் எட்டு மாதங்களுக்கான செலவின கட்டமைப்பை அமைக்கும் என்றாலும், இதன் அடிப்படை விபரங்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி உடனான பேச்சுவார்த்தையில் ட்ரம்ப் மற்றும் செனட் சபை பெரும்பான்மை அணி தலைவர் மிட்ச் மெக்கொன்னால் அமைக்கப்படும்.

“பரவும் நோய்கள் உருவாவதை, பரவுவதை அல்லது தொற்றுவதைத் தடுக்க [அதன்] முடிவு தேவைப்பட்டால் அதுபோன்ற நெறிமுறைகளை வகுத்து அமலாக்க…" பொது சுகாதார சேவைச் சட்டம் 1944 நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திற்கு அதிகாரம் அளிக்கின்ற போதினும், விண்ணைத் தொடும் எண்ணிக்கையில் கொரொனா வைரஸ் நோயாளிகளைக் கையாள பரந்த சமூக அடைப்பு மீதான எந்தவொரு விவாதத்தையும் பைடென் தவிர்த்துள்ளார்.

பைடென் எடுத்துள்ள முற்றிலும் வெள்ளோட்ட நடவடிக்கைகளும், ட்ரம்ப் நிர்வாகத்தின் முட்டுக்கட்டை போடும் விடையிறுப்புக்கு அவரின் சுமூகமான அணுகுமுறையும், தேர்ந்தெடுக்கப்பட்டு வரவிருக்கும் ஒரு குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி எவ்வாறு நடந்து கொள்வாரோ அதற்கு முற்றிலும் முரணாக உள்ளன.

டிசம்பர் 2000 இல் உச்ச நீதிமன்றத்தால், புஷ்ஷூக்கு எதிரான கோர் வழக்கில் அதன் இழிவார்ந்த முடிவில், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போது, அந்த புதிய ஜனாதிபதி அவர் மிகப் பெரியளவில் வாக்காளர்களின் தீர்ப்பை ஜெயித்தவரைப் போல முன்நகர்ந்தார். ஜனநாயகக் கட்சியின் அல் கோர் 500,000 வாக்குகள் முன்னிலையில் இருந்து, செனட்டில் 50 க்கு 50 என்று இருந்து, பிரதிநிதிகள் சபையில் சிறிய வித்தியாசத்தில் நான்கு பெரும்பான்மை வாக்குகள் இருந்த போதும் இது நடந்தது, 2021 இல் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையுடன் ஒப்பிட்டால் இது குறிப்பிடத்தக்களவில் குறைவாகவே இருக்கும்.

புஷ் உடனடியாக குறிப்பிடத்தக்க ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவுடன் செல்வந்தர்களுக்கான பாரிய வரி விலக்கு மற்றும் ஏனைய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை வேகவேகமாக முன்நகர்த்தினார். பிரதிநிதிகள் சபையில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்ற போதினும், மக்கள் வாக்குகளில் குறைந்தபட்சம் ஐந்து மில்லியன் வாக்குகள் பெரும்பான்மையில் இருக்கின்ற போதினும், பைடெனோ தேர்தலைக் குடியரசுக் கட்சியினர் வென்றுவிட்டதைப் போல நடந்து கொள்கிறார்.

Loading