நீண்டகால கோவிட் தொற்றுநோய்க்கு பின்னரான வைரஸ் நோயறிகுறித் தொகுப்பு: கோவிட் பெருந் தொற்றுநோய்க்கான 1889 ஆம் ஆண்டு ரஷ்ய காய்ச்சலின் மூலம் கிடைத்த படிப்பினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1918-1919ஸ்பானிஷ் இன்ஃப்ளூயன்ஸா என்ற தொற்றுநோய் கோவிட்-19தொற்றுநோய்க்கான ஒரு ஒத்த சொல்லாகப் பயன்படுத்தப்பட்டாலும், ரஷ்ய இன்ஃப்ளூயன்ஸா அதற்கான ஒரு சரியான கலாச்சார இணைப் பொருத்தமாக இருக்கலாம்.மார்க் ஹொனிக்ஸ்பாம்

ஆங்கில மருத்துவ வரலாற்றாசிரியரும், ஊடகவியலாளருமான மார்க் ஹொனிக்ஸ்பாம் லான்செட் இதழில் பிரசுரமான கோவிட்-19 பெருந் தொற்றுநோய் குறித்த ஒரு சமீபத்திய கட்டுரையில் 1889-90 ஆண்டின் ரஷ்ய காய்ச்சலின் தாக்கம் பற்றிய ஒரு சுவராஸ்யமான செய்தித் துணுக்கை வழங்குகிறார். 1889-1890 ஆம் ஆண்டு ரஷ்ய காய்ச்சல் பெருந்தொற்று அநேகமாக ஒரு மில்லியன் பேரை பலி கொண்டது. இந்த தொற்றுநோயின் பல அலைகள் 1891 முதல் 1895 வரையிலான ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் மறுஎழுச்சி கண்டன.

ஆங்கில பெண்ணியலாளரும், பெண்கள் வாக்குரிமைக்கான பிரச்சாரகருமான ஜோசபின் பட்லர், 1892 ஜனவரியில் தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில், “ஜெனோவாவில் எனக்கு ஏற்பட்ட மலேரியா காய்ச்சலுக்கு பின்னர், இந்தளவிற்கு பலவீனமாக ஒருபோதும் நான் உணர்ந்ததாக எனக்கு நினைவில்லை. ஒரு அரை மணி நேரத்திற்கு நான் படித்தாலோ அல்லது எழுதினாலோ கூட நான் மிகவும் பலவீனமாக உணர்கிறேன், மேலும் படுத்துக்கொள்ளும் அளவிற்கு மிகவும் சோர்வடைந்து மயக்கநிலைக்கும் சென்றுவிடுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். (ஹொனிக்ஸ்பாம் & கிருஷ்ணன், 2020)

1891 கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தின்போது, அவர் ரஷ்ய இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல நாட்கள் விழி வெண்படல அழற்சி மற்றும் நிமோனியாவால் பலவீனமாக இருந்தார். பின்னர் தனக்கு காய்ச்சல் குறைந்துவிட்டாலும் கூட, மூன்று மாதங்களுக்குப் பின்னர் தான் தனது முழு உடல்நிலையிலும் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டதாக அவர் நினைவுகூர்ந்தார்.

1890 ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள ரஷ்ய காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கவனிக்கப்படுகின்றனர்

1957 ஆம் ஆண்டின் பெருந்தொற்று நோய்க்கு பிந்தைய பகுப்பாய்வு, நோய்தொற்று காலத்திற்கு பின்னர் உயிரோடு இருந்தவர்களின் இரத்தத்தை பரிசோதித்ததில் H2N2 க்கு எதிரான நோயெதிர்ப்பி (antibodies) அதில் இருந்ததாகக் குறிப்பிட்டதுடன், இது ரஷ்ய காய்ச்சலில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதியது. இதற்கு மாறாக, நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டதான ஒரு சீரம் (குருதிநீரியல்) தொல்பொருளியல் ஆய்வு, இது பெரும்பாலும் H3N8 வைரஸின் துணை வகை மரபுக்கூறு என வலியுறித்தியது. இருந்தாலும், பெல்ஜிய உயிரியலாளரான லீன் விஜென் (Leen Vijgen) தலைமையிலான சமீபத்திய ஆய்வுகள், இந்த நோய்தொற்று குறிப்பாக HCoV-OC43 ஒரு கொரோனா வைரஸ் வகையினதாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டன.

இந்த “ஆசிய” அல்லது “ரஷ்ய” காய்ச்சல் மத்திய ஆசியாவில் தோன்றியது, இது சைபீரியா மற்றும் வட இந்தியா முழுவதும் பிராந்திய ரீதியாக 1889 மே முதல் அக்டோபர் வரை ஆறு மாத காலத்திற்கு பரவியது. நவம்பர் 1889 இல் சென். பீட்டர்ஸ்பேர்க்கில் தொற்றுநோய் தோன்றி, மேற்கு நோக்கி விரைந்து பரவி, சில வாரங்களில் ஐரோப்பாவிலும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும், பின்னர் அமெரிக்காவின் எஞ்சிய பகுதிகளிலும், ஆஸ்திரேலியா, மற்றும் கடலோர ஆபிரிக்காவிலும் தொடர்ந்து பரவி, 1890 இலையுதிர் காலத்தில் அதன் பூகோள அளவிலான சுழற்சியை முடித்துக் கொண்டது.

ரஷ்ய இன்ஃப்ளூயன்ஸா, அதிகரித்தளவில் ஒன்றோடொன்று இணைந்த உலகின் பகுதிகளுக்குள் அதன் பரவும் வேகத்தை வைத்து ஒரு தொற்றுநோயின் நவீன சகாப்தத்தின் முன்மாதிரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

1889 ஆண்டு இன்ஃப்ளூயன்ஸா பெருந் தொற்றுநோய் குறித்து 2010 இல் PNAS இல் வெளியிடப்பட்ட ஒரு விஞ்ஞான அறிக்கையில், ஆசிரியர்கள், “அந்த நேரத்தில், ரஷ்யா உட்பட 19 மிகப்பெரிய ஐரோப்பிய நாடுகளில், தற்போது இருப்பதை விட அதிகமாக 202,887 கிலோமீட்டர் அளவிற்கு இரயில் பாதைகள் இருந்தன. அந்த நேரத்தில் அட்லாண்டிக் பயணம் ஆறு நாட்களுக்கு குறைவாக இருந்தது, தற்போது ஒரு நாளுக்கு குறைவாக உள்ளது (பெருந் தொற்றுநோயின் பூகோள அளவிலான குறிப்பிட்ட பரவல் கால அளவைக் கருத்தில் கொண்டோமானால், இது கணிசமான வேறுபாடல்ல.)

1880 களில், எல்விவ் பிராந்தியத்திலுள்ள இரயில் பாதையும் இரயிலும்

ரஷ்ய காய்ச்சல் தொற்றுநோயின் கொரோனா வைரஸ் ஆதாரக் கோட்பாட்டின் படி, விஜெனும் (Vijgen) அவரது குழுவினரும், 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், கால்நடை மந்தைகள் ஒரு கொடிய சுவாசத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தன என்று விளக்கினர். தொழிற்துறைமயமான நாடுகள் கால்நடைத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தொற்றுநோய்கள் விரைந்து பரவக்கூடும் என்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்காக பாரிய கால்நடை விலங்கு தேர்ந்தெடுத்து குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இத்தொழிலில் 1870 முதல் 1890 வரையிலான காலகட்டத்தில் ஒரு விலங்குத் தொற்றி (zoonotic) பரவலால் மனிதர்களுக்குள் கால்நடைசார்ந்த கொரோனா வைரஸ் நோயுற்ற விலங்குகளில் தூண்டக்கூடிய இயக்கியாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் அனுமானித்தனர்.

ஆசிரியர்கள் ஒரு மூலக்கூறு கடிகார தொழில்நுட்பத்தின் மூலம் தீர்மானித்தனர், இது, கிட்டத்தட்ட ரஷ்ய காய்ச்சல் தொற்றுடன் தொடர்புபட்ட, 1890 க்கு முந்தைய அதாவது தற்போதைய போவின் (கால்நடைசார்ந்த) கொரோனா வைரஸ் மற்றும் HCoV-OC43 வகை வைரஸ்களின் பொதுவான முந்தைய வடிவங்களான, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிர் வடிவங்கள் வேறுபட்டிருந்தபோது முந்தைய வரலாற்று காலத்தைக் குறைக்க உயிர் அணுக்களின் பிறழ்வு வீதத்தை பயன்படுத்துகிறது.

மேலும், ரஷ்ய இன்ஃப்ளூயன்ஸாவை ஏனைய இன்ஃப்ளூயன்ஸா திடீர் வெடிப்புக்களிலிருந்து வேறுபடுத்திய குறிப்பிடத்தகுந்த நரம்பியல் அறிகுறிகள் கொரோனா வைரஸை ஒத்த வகை வாய்ப்பிற்கான ஒரு தேர்வு என்பது பற்றி பேசியதாக குறிப்பிட்டது.

மேலும் ஏனைய கண்டுபிடிப்புக்கள், ஆண்களும் வயோதிபர்களும் வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தோன்றியதைச் சுட்டிக்காட்டியது. இறப்பு விகிதம் 0.1 முதல் 0.28 க்குள் இருந்ததுடன், இனப்பெருக்க எண்ணிக்கை (R0) 2.1 ஆக இருந்தது.

நோய்தொற்று அறிகுறிகளில் உச்சபட்ச காய்ச்சல், செயலிழக்கச் செய்யும் சோர்வு, மற்றும் மத்திய நரம்பு மண்டல கோளாறுகள் அடங்கும்.

ஜோன் மூர் (John Moore) என்ற ஒரு டப்ளின் மருத்துவர், டிசம்பர் 20, 1889 இல் நோய்வாய்ப்பட்ட ஒரு நோயாளியைப் பற்றிய குறிப்பை வழங்கினார். அந்த பெண் நோயாளி, “பின்னர் எனது தலையும் முகமும் மிகவும் சூடாக இருந்ததுடன், சிரமமாகவும் இருந்தது, மேலும் எனது கைகள், தோள்கள் மற்றும் கால்களில் வலியெடுக்கத் தொடங்கியுள்ளது. இரவு முழுவதும் மிக மோசமாக வலிகள் இருந்தன, மேலும் நான் அழுதுவிடும் அளவிற்கு சில நேரங்களில் எனது மார்பின் பின்புறம் முழுவதும் மிகவும் கூர்மையான வலிகள் இருந்தன” என்று குறிப்பிட்டார்.

“பிரித்தானியாவில் ‘ரஷ்ய’ காய்ச்சல்: கற்றுக்கொள்ளப்பட்ட படிப்பினைகளும், தவறவிடப்பட்ட வாய்ப்புக்களும்,” என்ற தலைப்பிலான மார்க் ஹொனிக்ஸ்பாமின் அறிக்கை, 1889 டிசம்பரில் முதல் நோய்தொற்று அடையாளம் காணப்பட்ட பின்னர், பல வாரங்களில் வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை கொல்லத் தொடங்கியது என விளக்கியது. மேலும், “இந்த நோய்தொற்று ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் லார்ட் சாலிஸ்பரியை பாதித்தது, மேலும் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் தகவல்தொடர்பு மையமான பொது அஞ்சல் அலுவலகத்தின் தந்தித் துறையில் மிகுந்த எண்ணிக்கையில் ஊழியர் வருகையின்மைக்கு வழிவகுத்தது.”

அநேகமாக விக்டோரிய மகாராணியின் பேரனான இளவரசர் ஆல்பர்ட் விக்டரின் மரணம் மிகுந்த பிரபலமான விடயமாக அப்போது இருந்தது, இது அரச வம்சத்தின் அடுத்தடுத்து அதிகாரத்திற்கு வரும் வரிசையை மாற்றியது. மேலும், ரஷ்யாவின் ஜார் (czar), பெல்ஜிய மன்னர், மற்றும் ஜேர்மனியின் பேரரசரும் கூட இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். என்றாலும் அவர்கள் தொற்றுநோயிலிருந்து மீண்டனர்.

சுவாசக் கோளாறால் ஏற்படும் அதிகப்படியான இறப்புக்கள், மற்றும் நடுத்தர வயதினரிடையேயான இறப்பு வடிவம் தொடர்பாக “பொது சுகாதார பதிலிறுப்பின் உதவி கிடைத்திருக்க வேண்டும், என்றாலும் பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் தொற்றுநோயின் தாக்கத்தை தணிக்க சிறிதளவு கூட எதையும் செய்யாத முன்னேச்சரிக்கையுடன் கூடிய தடுப்பு நடவடிக்கைகளுக்கு பரிந்துரைப்பதற்கே விரும்பினார்கள்.” வழக்கொழிந்த மியாஸ்மாடிக் (miasmatic) கோட்பாட்டின் அடிப்படையில் தற்போது மருத்துவ சமூகம் மேற்கொள்ளும் ஆய்வு, தொற்றுநோய் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த காற்றின் ஒரு மோசமான வடிவத்தால் பரவுவதாகத் தீர்மானித்துள்ளது.

தொற்றுநோய் மீண்டும் ஒரு வருடம் கழித்து திரும்பப் பரவியதில், இரு மடங்கிற்கு மேலாக மக்கள் பலியாகினர். மேலும், 1890 முதல் 1892 வரையிலான காலகட்டத்தில், இங்கிலாந்தில் நோய்தொற்றால் 110,000 பேர் இறந்து போனதாக மதிப்பிடப்பட்டது.

1889 மற்றும் 1890 ஆம் ஆண்டுகளில் இன்ஃப்ளூயன்ஸாவால் ஏற்பட்ட இறப்புக்கள் பற்றிய விவரணையாக்க ஆய்வில், பிரான்சில் கோவிட்-19 இன் இரண்டாம் கட்ட எழுச்சி அலையின் தற்போதைய தாக்கத்தை ஒத்ததாக, டிசம்பர் 31, 1890 அன்று மட்டும் ஒரு நாள் அதிகபட்ச எண்ணிக்கையாக 450 பேர் தொற்றுநோய்க்கு பலியானதாக La Lanterne என்ற பிரெஞ்சு செய்தியிதழ் குறிப்பிட்ட சில பகுதிகளை ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். பாரிஸில் நாளாந்த அதிகபட்ச இறப்புக்கள் ஜனவரி 1891 முழுவதுமாக நீடித்தன. (கிம்மர்லி, மெஹ்ஃபுட் & மரின், 2014)

பாரிஸில் ரஷ்ய காய்ச்சல்

தற்போதைய தொற்றுநோய் சூழலில், நீண்டகால கோவிட் நோய்தொற்றை விட கோவிட்-19 நோய்தொற்றுக்குப் பின்னைய வைரஸ் நோயறிகுறி தொகுப்பைக் குறிப்பாக கருத்தில் கொண்டு, திருமதி பட்லரின் அறிக்கை ஆரம்ப கட்ட தாக்கம் ஒரு பயங்கரமான பரவல் வேகத்தைக் கொண்டிருந்ததை மேற்கோள்காட்டியது.

தொற்றுநோயிலிருந்து மீண்ட அறியப்படாத எண்ணிக்கையிலான மக்கள் நாள்பட்ட வியாதிகளின் சிரமங்களை முடிவின்றி தொடர்ந்து எதிர்கொண்டனர், மேலும் “அவர்களது தலைகளில் இருந்து வந்ததாக” அவர்கள் உணர்ந்த பிரச்சினைகளுடன் பெரும்பாலும் தொடர்புபட்ட நம்பமுடியாத சுகாதார சமூகத்திடமிருந்து எந்தவித உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. (Yerramilli, 2020) கோவிட்-19 உடன் தொடர்புபட்ட வைரஸ் நோய்தொற்றுக்கு பிந்தைய கால நோயறிகுறி தொகுப்புப் பற்றி சமீபத்தில் தான் ஊடகங்களில் தேவையான தகவல்கள் வெளியாகின்றன.

இன்னும் தீவிர மதிப்பாய்வு செய்யப்படவுள்ள ஆய்வில், 4,182 கோவிட் நோயாளிகளில், 558 (13.3 சதவிகிதம்) பேருக்கு நான்கு வாரங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கும், 189 (4.5 சதவிகிதம்) பேருக்கு எட்டு வாரங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கும், மற்றும் 95 (2.3 சதவிகிதம்) பேருக்கு 12 வாரங்களுக்கு மேற்பட்ட காலத்திற்குமாக அவர்களுக்கு இருந்த நோயறிகுறிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த நோயறிகுறிகளில், பெண்கள், வயோதிபர்கள் மற்றும் அதிக எடையுள்ளவர்கள் ஆகியோரை பாதிக்கும் தீவிரமான சோர்வு, தொடர்ச்சியான தலைவலி, மூச்சுத் திணறல் மற்றும் வாசனை நுகர்வு இழப்பு ஆகியவை அடங்கும்.

நெவாடாவின் ரெனோவிலுள்ள ரெனவுன் சுகாதார அமைப்புமுறை மூலம் நடத்தப்பட்டதான நோயாளிகள் தங்களது நோயறிகுறிகள் பற்றி வழங்கிய சுய அறிக்கைகளின் அடிப்படையிலான இணையவழி ஆய்வில், 233 கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளில், 43.4 சதவிகிதத்தினர் 30 நாட்களுக்கு மேல் நீடிக்கும் நோயறிகுறிகளைக் கொண்டிருந்தனர், மற்றும் 24.1 சதவிகிதம் பேர் அவர்களது நோய்தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து குறைந்தது 90 நாட்களுக்கு ஒரு அறிகுறியையாவது கொண்டிருந்தனர். இந்த அறிகுறிகளில் மார்பு வலி, இதய படபடப்பு மற்றும் இயற்கைக்கு மாறான இதயத் துடிப்பு, மோசமான கவனக்குறைவு, மூச்சுத் திணறல், நினைவாற்றல் இழப்பு, குழப்பம், தலைவலி மற்றும் தலைச்சுற்று ஆகியவை அடங்கும். மேலும், மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு நாள்பட்ட நோயின் அறிகுறிகள் உருவாகும் ஆபத்து அதிகம் உள்ளது.

நெதர்லாந்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஐரோப்பிய ஆய்வு, மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறாத 1,837 பேரில் மூன்றில் ஒரு பங்கினர் தனியார் கவனிப்பாளர்களைச் சார்ந்திருந்தனர் என்பதைக் கண்டறிந்தது.

இந்த நோயாளிகளுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை தேவையில்லை என்றாலும், சமூக ஊடக ஆதரவு குழுக்களில் சேர்ந்தவர்கள் தங்களது நிலை எவ்வாறு பலவீனமடைந்தது என்று நினைவுகூர்ந்ததுடன், “அறிகுறிகளின் சுழற்சி அலைகள்” மற்றும் “மூளைக் குழப்பம்” போன்ற பிரச்சினைகள் தங்களுக்கு இருப்பதாக தெரிவித்தனர். கோவிட்-19 கவனிப்பற்றவர்களுக்கான குழுவின் ஜெர்சியை தளமாகக் கொண்ட ஒரு புதிய நிர்வாகி, “நாங்கள் இறந்துவிடவில்லை, என்றாலும் நாங்கள் உயிர்ப்புடன் வாழவில்லை” என்று கடுமையாகக் கூறினார்.

கோவிட்-19 நோய்தொற்றின் நாள்பட்ட பாதிப்பின் மிக மோசமான அம்சங்களில் ஒன்றாக, இயலாமையுடன் கூடிய சோர்வும் நோயுற்றிருக்கும் உணர்வும் உள்ளது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் படுக்கையிலிருந்து மீள்வதற்கு சிரமப்படுவதுடன், ஒரே நேரத்தில் சில நிமிடங்களுக்கு மேலாக தங்களால் வேலை செய்ய முடியவில்லை என்று கூறினர். ரோம் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வெளி வந்த 143 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு இத்தாலிய சிறு ஆய்வு, 53 சதவிகிதம் பேருக்கு சோர்வு இருந்ததாகவும், 43 சதவிகிதம் பேருக்கு இரண்டு மாதங்கள் கழித்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியது. (Carfi, Bernabei, & Landi, 2020)

ரஷ்ய இன்ஃப்ளூயன்ஸாவைப் போலவே, வைரஸுக்கு பின்னைய நோயறிகுறி தொகுப்பு (post-viral syndromes) வைரஸ் நோய்களுடன் தொடர்புபட்டதாகவே அடிக்கடி பதிவாகின்றன. சிகிச்சையளிக்கும் மருத்துவர்களிடம் இருந்த பத்திரிகைகள், H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்பட்ட மற்றும் 24.7 மில்லியன் முதல் 50 மில்லியன் பேர் வரை பலிகொண்ட 1918 ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சலைப் போல, உயிர் பிழைத்தவர்களில் பலரும் முழுமையாக குணமடையவில்லை என்று குறிப்பிட்டன.

8000 க்கும் அதிகமான நபர்களை நோய்தொற்றுக்குள்ளாக்கிய மற்றும் 800 க்கு நெருக்கமாக பலிகொண்ட 2003 ஆம் ஆண்டில் பரவிய மிகக் கடுமையான சுவாச நோயறிகுறி தொகுப்பு (Severe Acute Respiratory Syndrome-SARS) நோய்தொற்றுக்குப் பின்னர், உயிர் பிழைத்தவர்களில் பலர் அவர்களது உடல்நல விளைவுகளை மதிப்பிடுவது தொடர்பாக பின்தொடரப்பட்டனர். நோய்தொற்றிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் பற்றி ஓராண்டுக்குப் பின்னர் நிகழ்த்தப்பட்ட ஆய்வில், 18 சதவிகிதம் பேர் தங்களது நடக்கும் திறன் குறைவதைக் கண்டனர், அதே நேரத்தில் 17 சதவிகிதம் பேர் இன்னமும் பணிக்குத் திரும்பவில்லை. 60 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சோர்வுடன் காணப்பட்டனர். 43 சதவிகிதம் பேருக்கு மனநல கோளாறுகள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தூக்கக் கலக்கம் பொதுவான தொந்தரவாக இருந்தது. மேலும், கடுமையான பாதிப்புக்குள்ளான பலரது பராமரிப்பாளர்கள் தங்களது நோயாளிகளின் அறிவாற்றல் திறன் குறைவதாக குறிப்பிட்டனர். (Tansey & Herridge, 2007)

மருத்துவமனை சிகிச்சையிலிருந்து விடுபட்டு ஆறு மாத காலத்திற்கு பின்னர், SARS மற்றும் மத்திய கிழக்கு சுவாச நோயறிகுறி தொகுப்பு (Middle East Respiratory Syndrome-MERS) நோய்த்தொற்றுக்கள் பற்றி ஆவணப்படுத்தப்பட்ட விபரங்களுடன் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட 28 ஆய்வுகளின் தொகுப்பு பகுப்பாய்வின் படி, 27 சதவிகிதம் பேருக்கு நுரையீரல் இயக்கம் பலவீனமடைந்திருந்ததுடன், அவர்களிடம் உடற்பயிற்சி செய்யும் பொறுமையும் குறைந்திருந்தது. இந்த நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமானோர் நோய்க்கு பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு மற்றும் கவலையுடன் கூடிய மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.

பெருந் தொற்றுநோயின் ஆரம்பகட்டத்தில், Medical Hyphotheses இதழின் ஆசிரியர்கள் ஜூன் மாதம் எழுதிய ஒரு கடிதத்தில், நரம்பியல் விஞ்ஞானியும், மருத்துவம் மற்றும் மான்செஸ்டர் கல்வி சுகாதார விஞ்ஞான பள்ளியின் (School of Medicine and Manchester Academic Health Sciences) நாள்பட்ட சோர்வு நோயறிகுறி தொடர்புபட்ட நிபுணருமான முன்னணி ஆசிரியர் டாக்டர் ரேமண்ட் பெரின் (Dr. Raymond Perrin), கோவிட்-19 நோய்தொற்றிலிருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு SARS நோயாளிகளை ஒத்த நோய்தொற்றுக்கு பிந்தைய வைரஸ் நோயறிகுறிகள் இருக்கும் சாத்தியம் பற்றி எச்சரித்தார்.

“கடுமையான SARS நோய் பரவல் காலகட்டத்திற்கு பின்னர் சில நோயாளிகளுக்கு, அவர்களில் பலர் சுகாதாரப் பணியாளர்கள், நாள்பட்ட சோர்வு நோயறிகுறி தொகுப்பு (Chronic Fatigue Syndrome) / Myalgic Emcephalomyelitis (CFS/ME) போன்ற நோய் ஏற்பட்டது, இது நோயுற்றவர்கள் கிட்டத்தட்ட 20 மாதங்கள் வரை பணிக்குத் திரும்புவதைத் தடுத்தது. ஒருமுறை கடுமையான கோவிட்-19 நோய்தொற்றிலிருந்து மீண்டு வந்த, அதாவது குணமடைந்த நோயாளிகளின் துணைக்குழு, தொடர்ச்சியான சோர்வு, பரவலான தசைவலி (மியால்ஜியா), மனச்சோர்வு அறிகுறிகள், மீள முடியாத தூக்கம் போன்ற CFS/ME அறிகுறியியல் போன்ற நீண்டகால பாதகமான விளைவை அனுபவிக்க வாய்ப்புள்ளது என்று நாங்கள் கூறுகிறோம்.”

CFS/ME என்பது, ஒரு சிக்கலான, சோர்வு தரும், நீண்டகாலம் மருத்துவ நிலைமைகளானது நீண்டகால பாதிப்புகளால் வேறுபடுத்தப்பட்ட மன அல்லது உடல் ரீதியான செயல்பாடுகளுக்குப் பின்னர் உள்ள நிலையாகும், இதனால் அவர்களது நோய்க்கு முந்தைய வழமையான பணிகளைச் செய்வதற்கான திறன் கணிசமாகக் குறைந்தது, அரைகுறை உறக்கம் அல்லது உறக்கமின்மை அவர்களுக்கு ஏற்பட்டது. மோப்ப (ஒல்ஃபாக்டரி) பாதை ஊடாக ஹைபோதாலமஸுக்கு (மூளை அடிப்பகுதி) பயணிக்கும் மூளை இரத்தத் தடை கடந்த நோய்தொற்றுக்கான முன்மொழியப்பட்ட பொறிமுறையானது நோயெதிர்ப்பு குறித்த ஒரு எதிர்வினையின் துணை விளைபொருளாகும்.

மூளை இரத்த தடைகளை கடந்து செல்லும் “அழற்சி சார்பு சைட்டோகைன்கள்” (“pro-inflammatory cytokines”) மத்திய நரம்பு மண்டலத்தில் அழற்சியை ஏற்படுத்தி, “அதிக காய்ச்சல் மற்றும் நீண்டகால தூக்கம் / விழிப்பின் முறையற்ற சுழற்சி, அறிவாற்றல் செயலிழப்பு மற்றும் ஆழ்ந்த இடைவிடாத ஆற்றல் இழப்பு (anergia)” ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் “தன்னியக்க செயலிழப்புக்கு” வழிவகுக்கிறது.

அனைத்து கணக்கீடுகளின் படி, 50 மில்லியனுக்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர், தற்போதைய எழுச்சி என்பது வடக்கு அரைக்கோள நாடுகளிலுள்ள அனைத்து சுகாதார அமைப்புக்கள் மீது கவனத்தை குவிக்கச் செய்யும் ஒரு பெரும் சுனாமியாகும். மில்லியன் கணக்கானவர்கள் இறப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், இன்னும் மில்லியன் கணக்கானவர்கள், குறிப்பாக வேலையிழந்த தொழிலாள வர்க்கத்தினர், தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான உடனடி முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், முடங்கிப் போகும் நிலைமைகள் மற்றும் நீண்டகால வேலையின்மை போன்ற நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும். மில்லியன் கணக்கானவர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால விளைவுகளைத் தணிக்க ஆரம்பகட்டத் தலையீடும் ஆதரவான கவனிப்பும் அவர்களுக்கு அவசியம். மேலும், அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காக செலுத்தும் செலவுகளும் மற்றும் சிகிச்சை தொடர்புபட்ட செலவினங்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையின் படி, மார்ச்சில் கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட 41 வயது டிரிசியா சேல்ஸ், குமட்டல், தலைச்சுற்றல் மற்றும் கை கால்களில் உணர்வின்மை போன்ற நோயறிகுறிகளை அனுபவித்து வருகிறார், இவர் மருத்துவ செலவினங்களுக்காக 100,000 டாலருக்கு அதிகமாக செலவு செய்துள்ளார். அதிகபட்ச பலவீனம் குறித்த கவலையினால் பலர் சிகிச்சையைத் தொடர்கின்றனர், மேலும், அவர்கள் பணிக்குத் திரும்பும் வகையில் அவர்களது உடல்நிலை இன்னும் சீராகாததால் தங்களது சேமிப்பில் வாழ முயற்சிக்கின்றனர்.

நியூ யோர்க் பொது சுகாதார பள்ளியின் சிட்டி யுனிவர்சிட்டி, அமெரிக்க மக்கள்தொகையில் 20 சதவிகிதத்தினர் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டால், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றதற்கு பிந்தைய ஓராண்டு செலவுகள் 50 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கைசர் குடும்ப அறக்கட்டளையின் கூற்றுப்படி, பல காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கப்படும் கோவிட்-19 செலவினங்களுக்காக 2021 காப்பீடுகளை உயர்த்துகின்றன.

ஒரு முக்கிய பாதிப்பாக இருந்தாலும், SARS-CoV-2 வைரஸ் ஏற்படுத்தும் சுகாதார நெருக்கடி குறித்த முக்கியத்துவத்தின் ஒரே குறிகாட்டியாக மரணம் மட்டும் இல்லை. வைரஸ் நோய்தொற்றுக்குப் பிந்தைய நோயறிகுறி தொகுப்புகளுடன் கூடிய அனுபவம் மருத்துவ பத்திரிகைகளில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. SARS மற்றும் MERS பற்றிய எழுத்துக்கள் பொது சுகாதாரக் கொள்கைகளைப் பற்றித் தெரிவித்திருக்க வேண்டும், மேலும் இந்த நோயாளிகளை சிகிச்சைக்குப் பின்னர் பராமரித்துக் கொள்வது மற்றும் கவனித்துக் கொள்வது பற்றிய வழிகாட்டுதல்களை பெருந் தொற்றுநோய் காலத்தின் ஆரம்பத்திலேயே வழங்கியிருக்க வேண்டும்.

இந்த நோயின் பல பரிமாண அம்சங்களை நிவர்த்தி செய்ய இந்த சூழலில் புனர்வாழ்வு திட்டங்களை உருவாக்குவது முக்கியமானதாக இருக்கும். மருத்துவமனைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நோயாளிகளில் 45 சதவிகிதம் பேருக்கு சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது, மேலும் 4 சதவிகிதம் பேருக்கு தொடர்ந்து உள்நோயாளிகளாக சிகிச்சை தேவைப்படலாம். இந்நிலையில், அனைத்து தேசிய சுகாதார அமைப்புமுறைகளிலும் சுகாதார பாதிப்பு கணிசமாக இருக்கும்.

சான்றாதாரங்கள்

கார்பி, ஏ., பெர்னாபி, ஆர்., & லாண்டி, எஃப். (2020). கடுமையான கோவிட்-19 நோய்தொற்றுக்குப் பின்னர் நோயாளிகளிடம் தொடர்ந்து காணப்பட்ட நோயறிகுறிகள். ஜாமா, 603-605.

ஹொனிக்ஸ்பாம், எம்., & கிருஷ்ணன், எல். (2020). தொற்றுநோயை தீவிரமாக எடுத்துக்கொள்வது: ரஷ்ய இன்ஃப்ளூயன்ஸா முதல் கோவிட்-19 இன் நீண்டகால பாதிப்பாளர்கள் வரை. தி லான்செட், 1389-1391.

கிம்மர்லி, வி., மெஃஹ்புட், என்., & மரின், எஸ். (2014). 1889-1890 ரஷ்ய காய்ச்சலை விவரணையாக்கம். தற்போது பிரசுரிக்கப்பட்டுள்ளது.

டான்சி, சி. எம்., & ஹெரிட்ஜ், எம். எஸ். (2007). மிகக் கடுமையான சுவாச நோயறிகுறி தொகுப்பு நோய்களிலிருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு ஏற்பட்ட பின்விளைவுகள் மற்றும் சுகாதார பாதுகாப்புப் பயன்பாடு. உள் மருத்துவத்தின் காப்பகங்கள், 1312-1320.

எர்ராமில்லி, பி. (2020). கோவிட்-19 ஆல் நீண்டகாலம் பாதிக்கப்பட்டவருக்கான அனைத்து அறிகுறிகளும் என்னிடம் உள்ளன – என்றாலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவராக என்னை அடையாளம் காண நான் தயங்குகிறேன்,” என்று STAT செய்திகள் கூறுகின்றன.

Loading