கோவிட்-19 உடன் போராடும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறையான அத்தியாவசிய சேவை உத்தரவை எதிர்த்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் கோவிட்-19 தொற்றுநோய் அதிகரித்து வருவதற்கு பதிலிறுத்த இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, செவ்வாய்க்கிழமை இரவு “விசேட வர்த்தமானி” அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு, துறைமுக அதிகாரசபையை அத்தியாவசிய பொது சேவையாக ஆக்கியுள்ளார்.

கொழும்பின் பிரதான துறைமுகத்தைச் சேர்ந்த குறைந்தது 80 தொழிலாளர்கள் இந்த வாரம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். தொழிலாளர் வருகை வீழ்ச்சி காரணமாக துறைமுக நடவடிக்கைகளை 60 முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் 2020 ஜூலை மாதம் போராட்டம் நடத்திய போது (Photo: WSWS)

இலங்கை துறைமுக வசதிகளில் சுமார் 15,000 தொழிலாளர்கள் நேரடியாக வேலை செய்கிறார்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொழும்பிலும், ஏனையவர்கள் திருகோணமலை, காலி மற்றும் காங்கேசந்துறை துறைமுகங்களிலும் வேலைசெய்கின்றனர். இந்த துறைமுகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்களும் பிற ஊழியர்களும் வருகை தருகின்றனர். இந்த வசதிகளிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அனைவரும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளனர்.

இந்த ஆபத்துக்களைப் புறக்கணித்து, துன்பகரமான மனித அழிவைப் பொருட்படுத்தாமல், இந்த ஊழியர்களை தொடர்ந்து பணியாற்றுமாறு அரசாங்கம் இப்போது உத்தரவிடுகிறது.

இராஜபக்ஷவின் அத்தியாவசிய சேவைச் சட்டத்தின் கீழ், வேலைக்கு வராத எந்தவொரு துறைமுக ஊழியரும் "ஒரு நீதவான் முன்னிலையில் சுருக்கமான விசாரணைக்குப் பின்னர் தண்டனையை” எதிர்கொள்வதோடு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை "கடுமையான சிறைத்தண்டனைக்கும்" உள்ளாகக் கூடும், அல்லது 2,000 முதல் 5,000 ரூபாய் வரை (11-25 அமெரிக்க டாலர் வரை) தண்டப்பணம் செலுத்த வேண்டி வரும்.

தண்டனை பெற்ற எவரினதும் அசையும் மற்றும் அசையாச் சொத்தையும் அரசுடமையாக்க முடியும் மற்றும் அவரது பெயர் "தொழில் அல்லது தொழிலுக்காக பராமரிக்கப்படும் எந்தவொரு பதிவேட்டில் இருந்தும் அகற்றப்படும்."

ஒரு நபர் “உடல்ரீதியான செயலில் அல்லது எந்தவொரு பேச்சில் அல்லது எழுத்தின் மூலமும்” வேலைக்குப் போகக் கூடாது என்று “வேறு எந்த நபரையும் தூண்டுவது, இணங்குவிப்பது அல்லது ஊக்குவிப்பது” ஒரு குற்றமாகும். துறைமுக ஊழியர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க போராடும் தொழிலாளர்களும் ஏனையோரும் தண்டிக்கப்படலாம் என்பதே இதன் அர்த்தமாகும்.

துறைமுகத் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாக இருப்பதோடு தீவு முழுவதும் கொரோனா வைரஸ் பரவினாலும் கூட, தொழிலாளர்களை தொடர்ந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தும் அதன் குற்றவியல் முயற்சிகளின் நேரடி விரிவாக்கம் ஆகும்.

அத்தியாவசிய சேவைச் சட்டங்கள், இதற்கு முன்னரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தகர்க்கவும், தொழிலாளர்களை வேட்டையாடவும் வேலைநீக்கம் செய்யவும் பயன்படுத்தப்பட்டன. அவசரகால சட்டங்கள் அறிவிக்கப்படும்போது, அத்தியாவசிய சேவை உத்தரவுகளை தனியார் துறைக்கும் நீட்டிக்க முடியும்.

அனைத்து துறைமுகத் தொழிலாளர்களையும் பாதுகாக்குமாறும், அத்தியாவசிய சேவை கட்டளையை உடனடியாக இரத்துச் செய்யக் கோருமாறும் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்துக்கும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அறைகூவில் விடுக்கிறது.

கொவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக, சோ.ச.க. பின்வரும் நடவடிக்கைகளுக்காக போராடுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு வடுக்கிறது:

* முழு ஊதிய இழப்பீட்டுடன் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளையும் நிறுத்துதல். அரசாங்கத்தால் அன்றி, தொழிலாளர்களால் நிர்ணயிக்கப்படுகின்ற, சமுதாயத்தை பராமரிக்க தேவையான அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* பாதிக்கப்பட்ட எந்தவொரு தொழிலாளிக்கும் உடனடி மருத்துவ விடுமுறை மற்றும் தேவையான சிகிச்சையை கட்டணமின்றி வழங்குவதோடு போதுமான நிதி உதவியும் வழங்கப்பட வேண்டும்.

* பயனுள்ள பரிசோதனைத் திட்டங்களை பாரியளவில் விரிவாக்குவதோடு, சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.

* கிராமப்புறங்களில் உள்ளவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் வீட்டில் பாதுகாப்பாக வசிக்கும் போது சிறந்த கல்வியைப் பெற கல்வி முறை ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உயிரைப் பாதுகாக்க இந்த அடிப்படை நடவடிக்கைகள் இன்றியமையாதவை ஆகும். கொவிட்-19 இலிருந்து இராஜபக்ஷ அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கிறது என்ற மாயை யாருக்கும் இருக்கக்கூடாது.

உலகளாவிய தொற்றுநோய் ஏற்கனவே கிட்டத்தட்ட 57 மில்லியன் மக்களை பாதித்தும் 1.3 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிரையும் பறித்துள்ளது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ளனர் மற்றும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் ஏழைகளாக மாறிவிட்டனர்.

இலங்கையில், தொற்றாளர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது, இவற்றில் 17,000 பேர் அக்டோபர் தொடக்கத்தில் நோய் தொற்றியவர்களாவர். இதே காலகட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 லிருந்து 87 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடுகளின்படி, கொழும்பில் மட்டும் 30,000 தொற்றாளர்கள் உள்ளனர். வேலைத்தளங்கள், சிறைச்சாலைகள், சுகாதார நிறுவனங்கள், பொலிஸ் மற்றும் தொலைதூர கிராமங்களிலும் இன்னும் நூற்றுக்கணக்கான தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இலங்கை அரசாங்கம் கொவிட்-19 வைரஸுக்கு பதிலிருப்பாக ஆரம்பத்தில் மார்ச் 20 அன்றே தாமதமாக பொதுமுடக்கம் செய்தது. ஆனால் தொற்று நோயைக் கட்டுப்படுத்திவிட்யதாகக் கூறிக்கொண்டு, ஏப்ரல் பிற்பகுதியில் பொருளாதாரத்தை மீண்டும் திறந்து விட்டது. அக்டோபர் தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் வெளிவரத் தொடங்கியபோது, அது சில பகுதிகளை பூட்டிய நிலையில் வைத்த போதும், விரைவில் முடக்கத்தை அகற்றியது.

இந்த மாத தொடக்கத்தில் கொவிட்-19 தடுப்பு தொடர்பான செயலணியில் உரையாற்றிய இராஜபக்ஷ, “நோயைக் கட்டுப்படுத்தும் அதேவேளை, வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு” அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்கள் தொற்றுநோயுடன் வாழ வேண்டும், அதை "புதிய இயல்பு" என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையை புறக்கணித்து அரச நிறுவனங்கள், அனைத்து தனியார் தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்களினதும் செயல்பாடுகள் தடையின்றி தொடர வேண்டும்.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட முதலீட்டுச் சபை புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் அதற்கு வெளியில் உள்ள சில தொழிற்சாலைகளில் 700,000 தொழிலாளர்களிடையே 28,670 பி.சி.ஆர். (பாலிமரேஸ் தொடர் எதிர்வினை) பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த வரையறுக்கப்பட்ட சோதனைகளில், குறைந்தது 1,500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

ஏனைய அனைத்து அரசாங்கங்களையும் போலவே, கூட்டுத்தாபன உயரடுக்கின் இலாப நலன்களைப் பாதுகாப்பதற்காக, இராஜபக்ஷ ஆட்சியும் மக்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுகிறது.

செவ்வாயன்று, நிதியமைச்சராக இருக்கும் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, அரசாங்கத்தின் 2021 வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார். இதில் உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பெரும் வரி சலுகைகள் அடங்கியிருந்ததுடன், அவற்றில் சில மொத்த விலக்களிப்பும் அடங்கும். அதே போல் பெருநிறுவன மற்றும் தனிநபர் வருமான வரிகளில் 50 சதவீத குறைப்பும் அடங்கும்.

துறைமுகங்களை ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதானது கொழும்பு ஆளும் கும்பல் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் முற்றிலும் அலட்சியமாக இருப்பதையும், இலாப அமைப்பைப் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத்தளத்திடம் (WSWS) கூறியது போல்: “அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர். தொழிலாளர்கள் வேலைசெய்யும் போது அணிய விஞ்ஞான ரீதியாக தயாரிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு ஆடையையும் தொழிலாளர்கள் [அதிகாரிகளிடம்] கேட்டார்கள், ஆனால் ரப்பர் கையுறைகள் மற்றும் நாளொன்றுக்கு 200 பி.சி.ஆர். பரிசோதனைகள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தன.” பரிசோதனை தொடர்ந்து செய்யப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.

தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பைத் தகர்த்தெறிய அதிகாரிகள் முயற்சிப்பதாக மற்றொரு ஊழியர் கூறினார். கொழும்பு துறைமுகத்தின் ஜெயா கொள்கலன் முனையத்தில் உள்ள தொழிலாளர்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு வார வேலை முறையின்படி பணியாற்றுமாறு கட்டளையிடப்பட்டுள்ளனர், என அவர் கூறினார். ஓய்வுபெற்ற சில தொழிலாளர்களும் திரும்ப அழைக்கப்பட்டனர், மற்றவர்கள் "மனித வள நிறுவனங்களிலிருந்து" கொண்டு வரப்பட்டனர்.

அனைத்து தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் அடக்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடனேயே, ஜனாதிபதியின் ஆட்சியை இராணுவமயமாக்கும் வழியில், ஒரு பிரதான தொழிலாள வர்க்க மையமான துறைமுக அதிகாரசபையை, ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தலைமையின் கீழ் இருத்தியது. அரச நிறுவனங்களின் தலைவராக ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் உள்ள ஏனைய தளபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தனியார்மயமாக்கலுக்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை துறைமுகத் தொழிலாளர்கள் பலமுறை எதிர்த்தனர். ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர், 10,000 தொழிலாளர்கள் கொழும்பு துறைமுகத்தில் கருவிகளைக் கீழேவைத்த போதிலும், அவர்களின் போராட்டம் தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது.

துறைமுகங்கள் மற்றும் ஏனைய வேலைத்தளங்களில் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளை தொழிற்சங்கங்களும் முழுமையாக ஆதரிக்கின்றன.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவற்றுடன் இணைந்த துறைமுக அதிகார சபை தொழிற்சங்கங்கள், இராஜபக்ஷவின் கொடூரமான அத்தியாவசிய சேவை நடவடிக்கைகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

WSWS இடம் பேசிய மற்றொரு தொழிலாளி, அத்தியாவசிய சேவை உத்தரவு விதிக்கப்படுவதற்கு முன்பே, தொழிற்சங்கத் தலைவர்கள் ஊழியர்களை நாட்டின் நிலைமையைப் புரிந்துகொண்டு “தொடர்ந்து பணியாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டதாக கூறினார்.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்க இணைச் செயலாளர் அன்டனி மார்கஸ், முன்னதாகவே இராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஒருங்கிணைப்பு அதிகாரி ரியர் அட்மிரல் ஹேவகேக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

எதிர்க்கட்சியான ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யும், நவம்பர் 3 அன்று, அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும், தங்கள் ஆதரவைப் பற்றி விவாதிக்க அனைத்து கட்சி மாநாட்டை கூட்டக் கோருவதாகவும் பாராளுமன்றத்தில் கூறின. இந்த முதலாளித்துவக் கட்சிகளுக்கு இராஜபக்ஷ ஆட்சியுடனும் அதன் சர்வாதிகார வழிமுறைகளுடனும் எந்தவித அடிப்படை முரண்பாடுகளும் கிடையாது; பெரிய வணிகங்களின் இலாபங்களை பாதுகாப்பதற்கே அவை அக்கறை கொண்டுள்ளன மக்களின் வாழ்க்கையை பற்றி அல்ல.

தொழிலாளர்கள், தங்கள் நல்வாழ்வை ஆபத்தில் தள்ளும் அரசாங்கத்தின் கொலைகார தீர்மானத்தை நிராகரித்து, தங்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பு, வரவேற்கத்தக்க அபிவிருத்தியாகும். தங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, வேலைத் தளங்களில் நடவடிக்கைக் குழுக்களையும் பாதுகாப்புக் குழுக்களையும் அமைக்க வேண்டும். இந்த குழுக்கள் ஏனைய வேலைத் தளங்களையும் தொடர்புகொள்ள வேண்டும். இந்த போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு உதவ சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் தயாராக உள்ளன.

சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்த, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கங்களை ஸ்தாபிக்கும் நோக்குடன் அவர்களின் போராட்டத்தை இலங்கை முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கத்திற்கான போராட்டத்துடன் இணைப்பதற்கு தொழிலாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து, இந்த முன்னோக்கிற்கான போராட்டத்தை வழிநடத்த அதை கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading