சாயிப் எரேகாட்: பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சீரழிவின் சரியான எடுத்துக்காட்டாக இருந்த பாலஸ்தீன சமாதான பேச்சுவார்த்தையாளர் (1955-2020)

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்ட நான்கு வாரங்களுக்குப் பின்னர், கடந்த வாரம் ஜெருசலேமில் மருத்துவமனையில் சாயிப் எரேகாட் இறந்தார். அவர் 2017 ம் ஆண்டில் அமெரிக்காவில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதால், இந்த நோயால் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவராக இருந்தார்.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) மிக முக்கியமான உறுப்பினர்களில் எரேகாட்டும் ஒருவர். பாலஸ்தீனிய ஆணையம் (PA) என்று அறியப்பட்ட பாலஸ்தீனிய தேசிய அதிகாரசபையில் அமைச்சராக பணியாற்றிய அவர், பாலஸ்தீனிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

மறைந்த யாசர் அரபாத் பாலஸ்தீனிய விடுதலை மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமாக எழுச்சியுற்றதுடன் எப்போதும் இணைக்கப்பட்ட ஒருவராக இருக்கும்போது, எரேகாட் வெறுமனே அதன் ஆடம்பரமான செய்தித் தொடர்பாளராக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அரசியல் வீழ்ச்சியின் போது வாஷிங்டனின் பேச்சுவார்த்தை மேசையில் ஒரு சிறிய உயரடுக்கின் சார்பாக ஒரு சில நொறுக்குத் தீனிகளுக்காக பிச்சை எடுப்பவராக இருந்தார்.

2015 நியூயோர்க் மாநாட்டில் சாயிப் எரேகாட் (நன்றி: Wikimedia Commons)

பாலஸ்தீனிய ஆணையத்தின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், எரேகாட்டின் மரணம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் "ஒரு சிறந்த போராளியும், ஒரு சகோதரரும் நண்பருமான டாக்டர் சாயிப் எரேகார்ட் எம்மை விட்டுப்போவது பாலஸ்தீனத்திற்கும் எங்கள் மக்களுக்கும் பெரும் இழப்பாகும். நாங்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறோம்." எனக் குறிப்பிட்டார். ஆனால் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகள் முற்றிலும் பயனற்றவை மற்றும் பாலஸ்தீனிய உழைக்கும் மக்களுக்கும் அரசியல் ஸ்தாபகத்திற்கும் இடையிலான பெரும் இடைவெளி இருப்பதின் பரவலான புரிதலை பிரதிபலிக்கும் வகையில், மக்கள் பாரியளவு துக்கத்தை வெளிப்படுத்தவில்லை.

1960 களின் பிற்பகுதியிலும் 70 களின் முற்பகுதியிலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தீவிரமயமாக்கல் காலகட்டத்தில் எரேகாட் ஒரு "பாரிய போராளி" அல்ல. இதற்கு எதிர்மாறாக, பாலஸ்தீனத்தின் விடுதலைக்கான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்ட முன்னோக்கை அவர் கடுமையாக நிராகரித்தார். அவர் ஒரு வலுவான அரசியல் அடித்தள ஆதரவைக் கொண்ட அரசியல்வாதியும் அல்ல. பாலஸ்தீனிய உயரடுக்கின் தலைமை செய்தித் தொடர்பாளராக செயல்பட அவருக்கு இருந்த இந்த மிகவும் தகுதியான குணாதிசயங்கள்தான், நீண்ட காலமான இஸ்ரேல் / பாலஸ்தீன மோதலை தீர்த்து ஒரு சிறு-பாலஸ்தீனிய அரசை நிறுவவேண்டும் எனக்கூறப்பட்ட 1993 ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்படிக்கைகளால் இயற்றப்பட்ட இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளில் அவர்களின் பேச்சுவார்த்தையாளராக செயல்பட உதவியது.

அரபாத், அவர் நம்பியிருந்த அனைத்து முதலாளித்துவ அரபு ஆட்சிகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தை கைவிட்ட பின்னர் எரேகாட் முக்கியத்துவம் பெற்றார். 1988 டிசம்பரில், அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வார்த்தைக்கு வார்த்தை கூறப்பட்ட ஒரு அறிக்கையில், அரபாத் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தார். அதில் இஸ்ரேலுடனான சமாதான தீர்வு என்பது ஒரு "மூலோபாயமே தவிர இடைக்கால தந்திரோபாயம் அல்ல" என்பதை ஏற்றுக்கொண்டு, மேலும் "தனிநபர், குழு மற்றும் அரச பயங்கரவாதம் உட்பட” அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கைவிட்டார். அவரது அவமானத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, இஸ்ரேலை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்க ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டபோது, அரபாத், “உங்களுக்கு என்ன வேண்டும்? நான் ஆடை களைந்து ஆடவேண்டுமென விரும்புகிறீர்களா? அது பார்க்க கூடியதாக இருக்காது" என்றார்.

இஸ்ரேல் பிரதமர் எகூட் பராக், அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அரபாத்

25 ஆண்டுகளாக, எரேகாட் அந்த பார்க்கக்கூடாததை செய்வது பற்றி எந்தவிதமான மன உறுத்தலும் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்களான ஜேசன் க்ரீன்ப்ளாட் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் சந்திப்பு உட்பட அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்களின் அனுசரணையில் நடைபெற்ற இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான ஒவ்வொரு மற்றும் அதிகரித்தளவில் இழிவான பேச்சுவார்த்தைகளிலும் அவர் பங்கேற்றார். அவரது கண்காணிப்பின் கீழ், பாலஸ்தீனிய அகதிகளின் தலைவிதி, நிலம் மற்றும் ஜெருசலேமின் நிலை போன்ற அனைத்து முக்கிய விடயங்களிலும் பாலஸ்தீனிய ஆணையம் இஸ்ரேலுக்கு விட்டுக்கொடுத்தது. மேலும் அது 1999 முதல் 2010 வரையிலான உள்ளக இஸ்ரேலிய-பாலஸ்தீனிய ஆவணங்கள் 2011 இல் அல்-ஜசீராவிற்கு கசிந்ததால் வெளிப்படுத்தப்பட்டபடி ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதம் ஏந்திய பாலஸ்தீனியர்களைக் கொல்வது மற்றும் கைது செய்வதில் இஸ்ரேல் படைகளுடன் ஒருங்கிணைந்தும் செயற்பட்டுள்ளது.

டிசம்பர் 2017 இல், ட்ரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தைகளின் அனைத்து பாசாங்குகளையும் கைவிட்டு, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்க தூதரகத்தை அங்கு நகர்த்துவதற்கான தனது முடிவை அறிவித்தது. அப்போதுதான் எரேகாட்டின் குழு வாஷிங்டனுடனான அரசியல் கொடுக்கல்வாங்கல்களை கைவிட்டது.

அனைத்து இரங்கல்களும் எரேகாட்டின் உறுதியான தன்மைக்கு சாட்சியமளித்தாலும், அவரும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஏன் இறுதியில் தோல்வியுற்றார்கள் என்பதை யாராலும் விளக்க முடியவில்லை. பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் ஒற்றுமையை காட்டுவதற்காக, பாலஸ்தீனிய தலையணியை keffiyeh கட்டுவதை பராமரிக்கும் பெயரளவிலான இடது குழுக்கள் எவரும் அவரைப் பற்றியோ அல்லது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் பற்றியோ எதுவும் கூறாது இருப்பது கவனத்தை ஈர்க்கின்றது.

இரு அரசுகள் என்ற தீர்வை அடைய முயன்ற எரேகாட்டின் அரசியல் தோல்வி பாலஸ்தீனிய தேசியவாத இயக்கத்தின் ஒட்டுமொத்த சீரழிவை வெளிப்படுத்துகிறது. இது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முதலாளித்துவ குணாம்சத்தில் வேரூன்றியுள்ளது. ஒரு பாலஸ்தீனிய அரசினை அடைவதற்கான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னோக்கு எப்போதுமே ஆயுதப் போராட்டத்தின் மூலமாக முதலில் பேச்சுவார்த்தை மேசையில் ஒரு இடத்தைப் பெறுவதற்காகவும், பின்னர் பேச்சுவார்த்தைகளின் மூலமாக ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதை அடிப்படையாகக் கொண்டது. பாலஸ்தீனியர்களின் பரந்த பிரிவினரிடையே வெகுஜன மக்கள் தளத்தை ஏற்படுத்திக்கொண்ட தேசிய இயக்கங்களில் இது மிகவும் தீவிரமானது என்றாலும், இறுதி ஆய்வில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமை பரந்துபட்ட மக்களின் நலன்களை அல்லாமல் பாலஸ்தீனிய முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்தியது.

பாலஸ்தீனிய தொழிலாள வர்க்கமும் விவசாயிகளும் 1948 இல் இஸ்ரேல் அரசை ஸ்தாபிப்பதன் மூலம் தம்மிடமிருந்து களவாடப்பட்ட நிலத்தை திரும்பபெற்றுக் கொள்வதற்கும் மற்றும் ஏகாதிபத்தியத்தினதும் இஸ்ரேலின் ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறையாக தமது தேசத்தை நாடினர். ஆனால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் நோக்கம், அதன் சொந்த வர்க்க ஆட்சியைப் பாதுகாக்கவும், அதன் "சொந்த" தொழிலாள வர்க்கத்தை சுரண்டவும், உலகப் பொருளாதார அரங்கில் அதன் இடத்தைப் பெறவும் உதவும் ஒரு பாலஸ்தீனிய அரசை ஸ்தாபிப்பதேயாகும். ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற அரசிற்கான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னோக்கு சாராம்சத்தில் ஒரு முதலாளித்து தன்மையுடையதாகும். இந்த நோக்கத்திற்காக அது தொழிலாள வர்க்கத்தினதும் மற்றும் ஏழை விவசாயிகளின் எந்தவொரு சுயாதீன அணிதிரட்டலையும் எதிர்த்ததுடன், மேலும் அது தன்னை "பாலஸ்தீன மக்களின் ஒரே நியாயமான பிரதிநிதி" என்றும் வலியுறுத்தியது.

அவ்வாறு செய்யும்போது, தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், நிக்கரகுவாவில் உள்ள சாண்டினிஸ்டாக்கள், எல் சால்வடாரில் FMLN மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஆயுதப் போராட்டத்தின் மூலம் தேசிய விடுதலைக்கு உறுதியளித்த பிற இயக்கங்கள் பயணித்த பாதையை அது பின்பற்றியது. இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் எந்தவொரு புரட்சிகர இயக்கங்களோ பரந்த எரிசக்தி வளங்களை தமது கைகளில் கொண்டிருந்த காலனித்துவ ஆட்சியாளர்களை வெளியேற்றி, நிதி மூலதனம் மற்றும் நாடுகடந்த நிறுவனங்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரவோ அல்லது தொழிலாள வர்க்கத்தினதும் ஏழை விவசாயிகளினது பயங்கரமான துன்பங்களைத் தணிக்கவோ முடியவில்லை. காலனித்துவ ஆட்சியாளர்கள் அல்லது அவர்களின் உள்ளூர் கைக்கூலிகள் ஊழல் நிறைந்த உள்ளூர் செல்வந்தர்களால் மாற்றப்பட்டனர்.

பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆதிக்கம் செலுத்திய, பாலஸ்தீன ஆணையத்தின் வரலாறும் வேறுபட்டதல்ல. ஒரு பாலஸ்தீனிய அரசை அடைவதற்கு பல்வேறு அரபு ஆட்சிகள் மூலம் செயல்பட்ட அதன் மூலோபாயம் பேரழிவை ஏற்படுத்தியது. ஏனெனில் அவை ஒன்றன் பின் ஒன்றாக அரபாத்தையும் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் காட்டிக்கொடுத்து, தனிமைப்படுத்தின.

இந்த மற்ற தேசிய இயக்கங்களைப் போலவே, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயிர்வாழும் திறனும் வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான சூழ்ச்சிக்கையாளலை பொறுத்திருந்தது. ஆனால் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மறுபுனருத்தானம் செய்வதற்கும் சோவியத் ஒன்றியத்தை கலைப்பதற்கும் திரும்பியபோது, அந்த மூலோபாயம் முற்றிலும் சாத்தியமற்றது.

அதே நேரத்தில், பாலஸ்தீனிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னிச்சையான கிளர்ச்சியான, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே 1987 இன் இறுதியில் வெடித்த முதல் இன்டிபாடா, அதன் சட்ட கட்டமைப்பை கொண்டு பாலஸ்தீனிய முதலாளித்துவத்தால் தொழிலாள வர்க்கத்தை சுரண்டும் ஒரு சுதந்திரமான முதலாளித்துவ அரசை அமைக்கும் முன்னோக்கை அச்சுறுத்தியது. 1993 வாக்கில், தனது முதலாளித்துவ நட்பு நாடுகளை இழந்த அராபத், ஒஸ்லோ உடன்படிக்கைகளையும், எதிர்காலத்தில் பாலஸ்தீனத்தின் நிலத்தில் வெறும் 22 சதவீதத்தில் மிகவும் குறைந்துவிட்ட அரசினை அமைக்கும் மாயையான வாக்குறுதியையும் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பாலஸ்தீன பேச்சுவார்த்தைக் குழுவின் பகிரங்கமான முகமாக வெளிப்பட்டது எரேகாட் தான்.

சாயிப் எரேகாட் யார்?

1955 ஆம் ஆண்டில் கிழக்கு ஜெருசலேமின் அப்போது ஜோர்டானிய ஆட்சியின் கீழ் இருந்த புறநகர்ப் பகுதியான அபு டிஸ் இல் ஒரு வளமான வணிகக் குடும்பத்தில் பிறந்தார். எரிகாட் தனது ஆரம்ப ஆண்டுகளை ஜெரிகோவில் கழித்தார். ஒரு இளைஞனாக இஸ்ரேலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது கல் வீசியதால், அவர் கைது செய்யப்பட்டார்.

அவரது குடும்பத்தின் ஒப்பீட்டளவில் சலுகை பெற்ற நிலைமை 17 வயதில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கல்லூரிக்குச் செல்ல அவருக்கு உதவியது. அங்கு அவர் சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்தில் சர்வதேச உறவுகளைப் படிக்க முன் ஆங்கிலம் கற்றார். 1979 ஆம் ஆண்டில், அவர் 1967 யுத்தத்தின் பின்னர் இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மேற்குக் கரைக்குத் திரும்பினார். நாப்லுஸில் உள்ள அன்-நஜா பல்கலைக்கழகத்தில் (1979-91) பேராசிரியர் பதவியைப் பெற்றதுடன், பாரம்பரியமாக எச்சரிக்கையான, பழமைவாத அல்-குட்ஸ் (al-Quds)செய்தித்தாளுக்கு எழுத்தாளராகவும் இருந்தார்.

எரேகாட் பிரிட்டனில் உள்ள பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் (1983) அமைதி கல்வித்துறை ஆய்வில் முதுமானி பட்டத்தை (PhD) பெற்றார். இது அவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர் விளக்கமளித்தபடி, இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதலுக்கு இராணுவ தீர்வு இல்லை என்று அவர் உறுதியாக நம்பியதாகவும், அது பேச்சுவார்த்தைகளின் மூலம் மட்டுமே முடிவிற்கு கொண்டுவரப்பட முடியும் என்று நம்பிக்கை கொண்டதாகவும் தெரிவித்தார். பாலஸ்தீன விடுதலை இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தின் ஆண்டுகளில் செய்த மிக வீர தியாகங்கள் அனைத்தையும் அவர் நிராகரித்து, அதனை அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகளின் மந்திரத்தால் மாற்றினார்.

அவர், “பாலஸ்தீனியர்கள் வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் சொல்கிறேன். எங்கள் இலக்குகள், நமது சுதந்திரம், நமது விடுதலை ஆகியவற்றை அடைய சர்வதேச சட்டத்தின் நாகரிக வழிமுறைகளைப் பயன்படுத்தப் போகிறோம்”. பாலஸ்தீனியர்கள் சார்பாக செயல்பட “சர்வதேச சமூகத்திற்கு” அவர் அழைப்பு விடுத்தார்.

ஆங்கிலத்தில் அவர் சரளமாக இருந்தமையும், எழுதும் திறன் மற்றும் வலுவான அரசியல் தொடர்பு இல்லாதது ஆகியவற்றுடன் 1991 ஆம் ஆண்டு மாட்ரிட் மாநாட்டில் கலந்து கொள்ள அராபத் அவரை அழைக்க வழிவகுத்தது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இஸ்ரேலுக்கு இடையிலான இந்த முதல் நேருக்கு நேர் சந்திப்பில் பாலஸ்தீனியர்களின் பேச்சுவார்த்தையாளராக அவரது வாழ்க்கை தொடங்கியது.

ஒஸ்லோவின் மோசடி

2004 ஆம் ஆண்டில் தெளிவுபடுத்தப்படாத மரணம் வரை அரபாத்துடன் நெருக்கமாக பணியாற்றிய எரேகாட் ஒஸ்லோ ஒப்பந்தங்களில் பங்கேற்றார். ஒஸ்லோ உடன்படிக்கைகளின் கீழ், இஸ்ரேலை அங்கீகரிக்கவும், அதன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் நீண்ட காலமாக அடையாளம் காணப்பட்ட பாலஸ்தீனிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை கைவிடவும் அராபத் ஒப்புக்கொண்டார். இதற்கு பதிலாக அமெரிக்கா தரகராக இருக்க இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய "இரு அரசுகள் தீர்வு" என்று அழைக்கப்படும் இஸ்ரேலுக்கு அருகாமையில் ஒரு சிறிய பிளவுபட்ட பாலஸ்தீனிய அரசினை ஒத்துக்கொண்டார்.

இந்த ஒப்பந்தங்கள், பாலஸ்தீன ஆணையத்தை இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும் மற்றும் வரவிருக்கும் அரசாங்கத்தின் பாதுகாவலராகவும் உருவாக்கியது. ஆனால் அதன் எல்லைகள் மீது எந்த கட்டுப்பாடும் இல்லாமல், காஸா மீது முழு அதிகார வரம்பும், மேற்குக் கரையில் வெறும் 18 சதவிகிதமும் (பகுதி A) மற்றும் இஸ்ரேலுடன் கூட்டு அதிகார வரம்புடன் 22 சதவிகிதத்திற்கும் மேலாகவும் (பகுதி B) என அதன் கட்டுப்பாட்டு அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேற்குக் கரையில் (பகுதி C) முழுமையாக 60 சதவீதம் இன்றுவரை இஸ்ரேலிய இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எரேகாட் ஒப்புக் கொண்டபடி, “அவர்கள் [இஸ்ரேல்] நீர், வானம் மற்றும் பாதைகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். ஆக்கிரமிப்பு முடிந்துவிட்டது என்று எப்படி கூற முடியும்?”

இஸ்ரேல் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் நலன்களுக்காக பாலஸ்தீனியர்களை அடக்குவதற்கும், வளைகுடா மற்றும் பிற இடங்களில் பணக்காரர்களாக வளர்ந்த பாலஸ்தீனிய முதலாளித்துவத்தின் குறுகிய அடுக்கை மேலும் செல்வந்தர்களாக்குவதற்கும் உலகின் தனிநபர் விகிதத்திற்கு அதிகமான பொலிஸ் படைகளில் ஒன்றான பாலஸ்தீன ஆணையமானது சர்வதேச "உதவியை" மரியாதையையுடன் பராமரிக்கின்றது.

மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் ஐந்து மில்லியன் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலில் வாழும் இரண்டு மில்லியன் இரண்டாம் தர குடிமக்கள் மற்றும் லெபனான், சிரியா மற்றும் ஜோர்டான் மற்றும் பரந்த புலம்பெயர் நாடுகளில் மோசமான அகதி முகாம்களில் வாழும் மில்லியன் கணக்கான மக்களின் அவல நிலையையும் அத்தகைய ஒரு அரசு எவ்வாறு தீர்க்கும் என்பது ஒருபோதும் தெளிவுபடுத்தப்படவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே, ஒரு குட்டி-பாலஸ்தீனிய அரசு கூட ஏரியல் ஷரோன் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் கீழ் லிக்குட் கட்சியால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்ரேலின் தீவிரவலதுசாரி தேசியவாதிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. ஒஸ்லோ உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான பிரதமர் இட்சாக் ராபின் படுகொலை, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1995 இல் ஒரு வலதுசாரி இஸ்ரேலிய வெறியரால் நடத்தப்பட்டது, பாலஸ்தீனியர்களுடன் இஸ்ரேல் எந்த சமரசத்தையும் ஏற்படுத்தாது என்பதுடன் ஒட்டுமொத்தமான அடிபணிவை மட்டுமே வேண்டிநிற்பதை குறிக்கிறது.

ஜூலை 2000 இல், ஒஸ்லோ உடன்படிக்கைகள் தங்கள் சமூக நிலையை மேம்படுத்தத் தவறியது குறித்து பாலஸ்தீனியர்களின் அதிகரித்துவரும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் நன்கு அறிந்த அரபாத், இஸ்ரேலுடனான ஒரு ஒப்பந்தத்தை கேம்ப் டேவிட்டில் நிராகரித்தார். இந்த ஒப்பந்தம் முழு ஜெருசலேம் இஸ்ரேலிய இறையாண்மையின் கீழ் இருக்க வேண்டும் மற்றும் பாலஸ்தீனிய அகதிகளுக்கு திரும்புவதற்கான உரிமையின் கடுமையான மட்டுப்படுத்தல்கள் ஒரு பாலஸ்தீனிய சேரிக்கான ஒரு தொடர் தெளிவற்ற வாக்குறுதிகளை தவிர வேறொன்றாக இருக்கவில்லை.

செப்டம்பர் 2000 இல் அல்-அக்ஸா வளாகத்திற்கு ஷரோனின் ஆத்திரமூட்டும் விஜயத்தை தொடர்ந்து உருவாகிய இன்டிபாடா அல்லது எழுச்சியை ஏரேகாட் எதிர்த்தார். 3,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் உயிர்களை இழந்த எழுச்சியை அடக்குவதற்கு இஸ்ரேலுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியது. அரபாத் தனது வாழ்க்கையின் கடைசி இரண்டரை ஆண்டுகளை உண்மையான கைதிபோல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ரமல்லா குடியிருப்பினுள் கழித்திருந்தார்.

அக்டோபர் 2004 இல் அரபாத்தின் மரணத்தைத் தொடர்ந்து, எரேகாட் அரபாத்தின் வாரிசான மில்லியனர் தொழிலதிபரும் மற்றும் வலதுசாரியுமான மஹ்மூத் அப்பாஸ் உடன் பல இணைந்து பணியாற்றத் தயாராக இருந்தார். ஏனெனில் அவருடன் முக்கிய அரசியல் வேறுபாடுகள் எதுவும் இருக்கவில்லை. அவர் சமாதானத்திற்கான "நியாயமான பங்காளியாக" செயல்படுமாறு இஸ்ரேலுக்கு அழைப்புவிடுத்து அவர் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பினார்.

1967 போருக்குப் பின்னர் இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் குடியேற்றங்களின் எண்ணிக்கையை விரிவாக்குவதற்கு "சமாதான முன்னெடுப்பை" ஒரு மூடுதிரையாக இஸ்ரேல் பயன்படுத்தியது. ஆயினும்கூட "இந்த அரசாங்கத்தின் கொள்கையை, திருடுவது (நிலம்) மற்றும் நேரத்தை வீணடிப்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்" என்று ஒத்துக்கொண்டு எரேகாட் பேச்சுவார்த்தை மோசடியைத் தொடர்ந்தார்.

பாதுகாப்புச் சுவர் மற்றும் ஒரு சாலை வலைப்பின்னல்கள் மற்றும் 140 மனிதர்களால் பரிசோதிக்கப்படும் இடங்கள் மற்றும் மேற்குக் கரையின் நகரங்களுக்கும் கிராமங்களுக்குமான வாகனங்களின் அணுகலைக் கட்டுப்படுத்தி அப்பகுதியை சிறுதுண்டுகளாக்கும் பிற தடைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனியர்கள் தங்கள் ஒலிவ் தோப்புகள் மற்றும் வீடுகளைத் தாக்கி, தண்டனையின்றி கொலை செய்யும் பாசிச குடியேற்றவாசிகளிடமிருந்து தினசரி துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். இஸ்ரேலின் உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்குக் கரையில், முக்கியமாக பகுதி C இல் 463, 353 இஸ்ரேலியர்கள் வாழ்ந்தனர். அத்துடன் 1967 ஜூன் மாதத்தில் இஸ்ரேலால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் 300,000 பேர் வசித்து வருகின்றனர்.

"சமாதான பேச்சுவார்த்தைகளின்" முடிவுகள் பாலஸ்தீனியர்களுக்கு உண்மையிலேயே பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. மேற்குக் கரையில் 25 சதவிகித மக்களை வறுமை பாதிக்கிறது. இது தொற்றுநோயால் குறைந்தது 30 சதவிகிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனியர்களில் பெருமளவிலானோர் வேலைக்காக இஸ்ரேலுக்குள் செல்ல முடியவில்லை.

அதே நேரத்தில், அதன் பாதுகாப்புப் படையினருக்கான 42 மில்லியன் டாலர் நிதியுதவி தவிர பாலஸ்தீன ஆணயத்திற்கான அனைத்து அமெரிக்க உதவிகளும் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் திவால்நிலையை எதிர்கொள்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் "நூற்றாண்டின் ஒப்பந்தத்தை" பாலஸ்தீன ஆணயத்தினர் நிராகரித்ததற்கு பதிலளிக்கும் விதமாகவும், அதன் வளைகுடா நட்பு நாடுகள் பாலஸ்தீன ஆணயத்திற்கான தங்களது நிதி மானியங்களையும் உதவிகளையும் குறைக்க வேண்டும் என்ற வாஷிங்டன் கோரிக்கை விடுத்துள்ளது.

முதலாளித்துவ இஸ்லாமிய குழுவான ஹமாஸால் நிர்வகிக்கப்படுகின்ற காஸாவில் உள்ள நிலைமைகள் பாலஸ்தீன ஆணயத்தினதும் எகிப்தினாலும் வேண்டப்பட்டு உதவியளிக்கப்பட்ட 13 ஆண்டுகளாக இஸ்ரேலின் ஒரு குற்றவியல்தனமான முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டும், அத்துடன் பல இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களாலும் வீழ்ச்சியில் வாசலில் உள்ளன. 2019 ஆம் ஆண்டிற்கான Al Mezan மனித உரிமைக்கான அமைப்பின் வருடாந்த அறிக்கையின்படி, வேலையின்மை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை விகிதங்கள் முறையே 45 மற்றும் 69 சதவிகிதம் ஆகும். வறுமை என்பது தொற்றுநோய்க்கு முன் 53 சதவீதமாக இருந்தது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.8 சதவீதம் குறைந்து 1,417 டாலராகியுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம், டிசம்பர் 2017 முதல் பேச்சுவார்த்தைகளின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளது. இது ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அதன் தூதரகத்தை அங்கு நகர்த்தி, ஆக்கிரமித்த பாலஸ்தீனிய பிரதேசத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்களை “சர்வதேச சட்டத்திற்கு முரணானது” என்று இனி கருதுவதில்லை என்றும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமைக்கான (UNRWA) நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தது. கடந்த வாரம், UNRWA தனது 28,000 ஊழியர்களுக்கான முழு சம்பளமான 70 மில்லியன் டாலர்களை இந்த மாத இறுதிக்குள் திரட்டாவிட்டால் அதனை செலுத்த முடியாது என்று அறிவித்தது. இது அப்பிராந்தியத்தில் உள்ள அகதிகளையும் அவர்களது ஊழியர்களையும் பாதிக்கும்.

ஜனவரி மாதத்தில், ட்ரம்பின் "நூற்றாண்டின் ஒப்பந்தம்" மேற்குக் கரையில் இஸ்ரேலின் இடைவிடாத நில அபகரிப்புகளை முறையாக அங்கீகரித்தது மற்றும் டெல் அவிவ் இந்த பிராந்தியங்களை முறையாக இணைத்தல் மற்றும் நிறவெறி ஆட்சியை பலப்படுத்துதல் ஆகியவற்றிற்கு பச்சைகொடி காட்டியது. எதிர்காலத்தில் ஏதாவது ஒரு கட்டத்தில் "பாலஸ்தீனிய அரசுக்கு சாத்தியமான பாதை" என்ற அவரது முன்மொழிவானது, பாலஸ்தீன ஆணயமானது இஸ்ரேலை ஒரு "யூத நாடு" என்று அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இருந்தது. மேலும் இஸ்ரேலிய பாலஸ்தீனியர்களை இரண்டாம் தர குடிமக்களாக தரமிறக்கல், காஸாவை நிராயுதபாணியாக்குவது, "பயங்கரவாதத்தை" கைவிடல் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் நிதி உதவி, மற்றும் ஒரு புதிய காலனித்துவ நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வது ஆகியனவும் இதில் அடங்கியுள்ளன.

கடந்த செப்டம்பரில், வெள்ளை மாளிகை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் பஹ்ரைன் இஸ்ரேலுடன் இராஜதந்திர மற்றும் வணிக உறவுகளை ஏற்படுத்துவதற்கான ஒரு உடன்படிக்கைக்கு தரகராக செயற்பட்டது. முன்னர் இஸ்ரேல் / பாலஸ்தீனிய மோதலுக்கு தீர்வு காணாமல் இது தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. அதற்கு ஈடாக மேற்குக் கரையில் பாலஸ்தீனிய நிலங்களை இஸ்ரேல் இணைப்பதற்கான திட்டங்கள் நிறுத்தப்படலாம். அதன் நோக்கம் ஈரானுக்கு எதிரான சுன்னி பெட்ரோ-முடியாட்சிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒரு கூட்டணியை உறுதிப்படுத்துவதாகும். பாலஸ்தீனியர்களின் தலைவிதியை ஏகாதிபத்திய சக்திகளிடமோ அல்லது அவர்களை கைவிட்டு துரோகம் செய்துள்ள அவர்களின் பிராந்திய முகவர்களிடமோ ஒப்படைக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.

ஆபிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் முதலாளித்துவ தேசியவாதத்தின் முட்டுச்சந்து மீண்டும் மீண்டும் பொதுவான சுதந்திரம் கிடைத்து ஒரு சில ஆண்டுகளுக்குள் உள்நாட்டுப் போர்கள், சர்வாதிகார ஆட்சி மற்றும் வெகுஜன வறுமை ஆகியவற்றைக் கொண்டு வந்ததுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை தேசிய ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்கான தேசிய முதலாளித்துவ பாதை எதுவுமில்லை.

பாலஸ்தீனியர்கள் உட்பட உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள், ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது, ஜனநாயக உரிமைகள், வேலைகள் மற்றும் சமூக சமத்துவம் போன்ற எந்தவொரு அடிப்படை தேவைகளையும் தேசிய முதலாளித்துவத்தின் எந்தவொரு பிரிவினரின் பின்னால் அணிதிரளுவதால் அடைய முடியாது என்பதை இந்த அனுபவங்கள் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. ஏகாதிபத்திய சகாப்தத்தில், பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் தொடர்புடைய பணிகளான ஒடுக்கப்பட்ட நாடுகளில் அடிப்படை ஜனநாயக, தேசிய கடமைகளை பூர்த்தி செய்வது தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்தை கைப்பற்றுவதாலேயை சாத்தியம் என்பதை முன்வைக்கின்றது. இது உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் பாகமாக தேசிய மற்றும் சர்வதேச பொருளாதாரத்தின் அனைத்து வளங்களையும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்டுப்பாட்டில் வைப்பதால் மட்டுமே அடைய முடியும்.

இந்த போராட்டத்தை நடத்துவதற்கு, பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கு இரண்டு விஷயங்கள் தேவை: ஒன்று ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம் மற்றயது அவர்களின் சொந்த போராடும் அமைப்புகளான மதசார்பற்ற மற்றும் மதசார்பான தேசிய முதலாளித்துவத்திலிருந்தும் அரசியல்ரீதியாக சுயாதீனமானதாக இருக்கவேண்டும். முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தில், பிராந்தியத்தில் உள்ள பாலஸ்தீனிய தொழிலாளர்களையும் கிராமப்புற ஏழைகளையும் தங்கள் சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைக்கும் போராட்டத்தில், உலக சோசலிசப் புரட்சியின் பாகமாக மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின் மூலமாகவே முன்னோக்கி செல்லும் பாதை உள்ளது. இதற்கு, ஒரு சோசலிச புரட்சிகர தலைமையை வழங்க பிராந்தியமெங்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டமைப்பது தேவைப்படுகிறது.

Loading