அமெரிக்க இராஜதந்திர இரகசியங்களை விக்கிலீக்ஸ் பிரசுரித்ததற்கு பின்னைய பத்து ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இன்றைய நாள் “கேபிள் கேட்” (Cablegate) நடவடிக்கையின் பத்தாவது ஆண்டு தினமாகும், விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தல் தளம் மற்றும் அதன் கூட்டாளர் ஊடகங்கள், அமெரிக்க அரசாங்கத்தின் இராஜதந்திர இரகசியங்கள் பற்றி கசியவிடப்பட்ட நூறாயிரக்கணக்கான உள்ளடக்கங்களை வெளியிடத் தொடங்கியிருந்தது.

இந்த ஆவணங்கள், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றகரமான சதித்திட்டங்களின் பரந்த நோக்கத்தையும், பூகோள அளவிலான அதன் இலக்கையும், மற்றும் உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் மிருகத்தனத்தையும், ஊழல் நிறைந்த தன்மையையும் அம்பலப்படுத்தின.

ஜூலியன் அசான்ஜ் (Credit: Newsonline, Flickr) [Photo: Newsonline, Flickr]

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெளியீடுகளுக்கு சற்று முன்னர், விக்கிலீக்ஸ் ஏற்கனவே “கூட்டுக் கொலைகள்” அடங்கிய கொடூரமான காணொளிகளை அதே ஆண்டில் வெளியிட்டிருந்தது, இது ஈராக்கிய குடிமக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முதலுதவியாளர்கள் உட்பட அமெரிக்க சிப்பாய்களால் கொல்லப்பட்டதைக் காட்டுகிறது; ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து "போர் நாட்குறிப்புகள்" வெளியிடப்பட்டதும் அடங்கும்.

இந்த வெளியீடுகள், விக்கிலீக்ஸூக்கும், மற்றும் குறிப்பாக அதன் நிறுவனர், ஊடகவியலாளர் மற்றும் பிரசுரிப்பாளரான ஜூலியன் அசான்ஜூக்கும் ஆளும் வர்க்கத்தின் அழியாத பகைமையை சம்பாதித்துக் கொடுத்தது. இது, அசான்ஜிற்கு எதிராக அவதூறான மற்றும் போலி சட்ட ரீதியான துன்புறுத்தல் மிக்க பிரச்சாரத்தை இன்றுவரை தொடரச் செய்துள்ளது. அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதற்கான தீர்ப்புக்காக காத்திருக்கும் அவர், இலண்டனின் அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான பெல்மார்ஷில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அதாவது, உளவு சட்டத்தின் கீழ் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பேரில், அமெரிக்க சிறைச்சாலை அமைப்பின் இருண்ட நிலவறையில் 175 ஆண்டுகள் வரையிலான கடும் சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிப்படுத்தப்பட்ட இராஜதந்திர இரகசியங்களின் ஒரு சிறு மாதிரி கூட அவற்றின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துகின்றன.

அவர்கள் காட்டியபடி, 2006 ஆம் ஆண்டில் தாய்லாந்து பிரதமர் தக்ஷின் ஷினாவத்ராவை ஆட்சியிலிருந்து கவிழ்த்த இராணுவ சதித்திட்டம் பற்றி அமெரிக்கா நன்கு அறிந்திருந்ததையும், அதை அங்கீகரித்ததையும் பற்றி அவை அம்பலப்படுத்தின. மேலும் அந்த இரகசிய வெளியீடுகளின் படி, 2009 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இதேபோன்ற ஆட்சி கவிழ்ப்புக்கான சாத்தியத்தை அமெரிக்க அதிகாரிகள் நாட்டின் உச்ச ஜெனரலுடன் விவாதித்தனர். மேலும் 2009 இல், ஹோண்டுரான் ஜனாதிபதி மானுவல் ஜெலாயாவுக்கு எதிராக தீட்டப்பட்ட இராணுவ சதித்திட்டத்திற்கு வாஷிங்டன் தனிப்பட்ட முறையில் ஆதரவளித்தது என்பதுடன், அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை மூடிமறைக்கவும் வேலை செய்தது.

அதேபோல, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான குற்றகரமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஒத்துழைப்பதை உறுதி செய்யும் வகையில், 2010 இல் ஆஸ்திரேலியாவில் கெவின் ரட்டுக்கு (Kevin Rudd) பதிலாக பிரதமர் ஜூலியா கில்லார்ட்டை (Julia Gillard) பதவியில் அமர்த்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் உதவி செய்துள்ளனர். மேலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்கா தனது படையினரை சிறியளவில் அங்கு நிலைநிறுத்துவதற்கு ரட் கூட அந்த நேரத்தில் குறிவைக்கப்பட்டிருந்தார்.

எகிப்தில் தனது கூட்டாளரான ஹோஸ்னி முபாரக் (Hosni Mubarak) நிகழ்த்திய சித்திரவதை, பரவலான கைது நடவடிக்கைகள், நீதிக்கு புறம்பான கொலைகள் பற்றி அமெரிக்க அரசாங்கம் முழுமையாக அறிந்திருந்ததை இரகசிய தகவல்கள் நிரூபித்தன. துனிசியாவில் நடந்த அரசு ஊழல்களை வாஷிங்டன் நன்கு அறிந்திருப்பதாகவும், குவாண்டனாமோ விரிகுடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துனிசிய குடிமக்களிடமிருந்து அமெரிக்க அரசாங்கம் தங்கள் உரிமைகளைத் தடுத்து நிறுத்தியது என்பதையும் அவர்கள் நிரூபித்தனர். மேலும், பலமுறை நிகழ்த்தப்பட்ட பொதுமக்கள் படுகொலைக்கு காரணமான தமது நாடுகளில் நிகழ்ந்த அமெரிக்க ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதல்களுடன் பாகிஸ்தான் மற்றும் யேமன் அரசாங்கங்கள் ஒத்துழைக்கின்றன என்பதையும் அவர்கள் காட்டினர்.

2008 ஆம் ஆண்டில் காஸ்பியன் கடலில் BP எரிவாயு தளத்தில் நிகழ்ந்த ஒரு வெடிப்பு பற்றி அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தும், நிறுவனத்தின் ஏனைய தளங்களின் பாதுகாப்பு குறித்து விசாரணை செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், மெக்சிக்கோ வளைகுடா பகுதியில் எண்ணெய் தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் கொல்லப்பட்டதோடு, வரலாற்றிலேயே மிகப்பெரிய கடல் பகுதி எண்ணெய் கசிவை உருவாக்கியது. 2009 கோபன்ஹெகன் காலநிலை மாநாட்டின்போது, காலநிலை காரணமான கட்டாய கடமைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கு ஏற்ப, மேம்பட்ட உதவிகளை வழங்குவதாக போக்கு காட்டி ஏழை நாடுகளை அமெரிக்கா வெற்றிகரமாக ஏமாற்றியதுடன், அவற்றை அச்சுறுத்தியது.

அச்சமயம், ஐ.நா. மற்றும் வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளிடமிருந்து, கடன் அட்டை, அடிக்கடி மாற்றப்படும் வங்கிக் கணக்கு எண்கள், இணையத்தள கடவுச் சொற்கள், வேலைத் திட்டங்கள், மற்றும் டி.என்.ஏ. மாதிரிகள் உட்பட தனிப்பட்ட சொந்த தகவல்களை சேகரிக்கும் படி அமெரிக்க தூதரகங்களுக்கும் ஐ.நா. பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரான ஹில்லாரி கிளின்டன் ஆணையிட்டார். இதன் ஒரே உண்மையான நோக்கம், ஒரேமாதிரியான அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேலும் தயாரிப்பது மட்டுமே.

நைஜீரிய அரசின் மீதான ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் ஆதிக்கம் பற்றி இந்த இரகசிய தகவல்கள் இன்னும் விவரமாக தெரிவித்தன.

இந்த இரகசிய தகவல்களில் அடையாளம் காணப்பட்ட ஆதாரங்களை விக்கிலீக்ஸ் பொறுப்பற்ற வகையில் ஆபத்திற்குட்படுத்தியதாக அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுகளுக்கு மாறாக, விக்கிலீக்ஸ் உண்மையில் வெளியீட்டிற்கு முன்னர் அனைத்து ஆவணங்களையும் மதிப்பாய்வு செய்து திருத்த ஒரு முழுமையான மற்றும் ஒத்துழைப்பு செயல்முறையை வகுத்தது. இந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட அசான்ஜை நாடுகடத்துவது தொடர்பான விசாரணையின் போது, மூல ஆதாரங்களையும் ஆவணங்களையும் பாதுகாக்க விக்கிலீக்ஸ் மறைகுறியாக்கத்தை “முன்னோடியாக” பயன்படுத்தியது குறித்து உலகெங்கிலும் இருந்து ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், உள்ளூர் கூட்டாளர்களாகவுள்ள ஊடக அமைப்புக்களின் திறமையைப் பயன்படுத்தி இந்த இரகசிய தகவல்களில் தேவைப்படும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதிசெய்து, பின்னர் நாடு வாரியாக ஓராண்டுக்குள் அவற்றை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இன்னும் சில விவகாரங்களில் மாற்றங்களை செய்ய அமெரிக்க அரசாங்கமே ஆலோசனைகளை வழங்கியிருந்தது.

விக்கிலீக்ஸ் பாதுகாப்பாக சேமித்து வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான திருத்தப்படாத இரகசிய தகவல்கள் செப்டம்பர் 2011 இல் வெளியிடப்படுவதற்கு கார்டியன் பத்திரிகையாளர் டேவிட் லே (David Leigh) தான் பொறுப்பாளியாவார் என்பது விசாரணையில் சாட்சியங்களின் மூலம் நிரூபணமானது. “விக்கிலீக்ஸ்: இரகசியத்தை அம்பலப்படுத்துவதில் ஜூலியன் அசான்ஜின் போர்” என்ற தலைப்பில் விக்கிலீக்ஸ் மேற்கொண்ட ஒரு இரகசிய வேலையில், இரகசிய தகவல்களை உள்ளடக்கிய இணையவழி காப்பகத்திற்கான கடவுச் சொல்லை லே பிரசுரித்தது பொதுமக்கள் அவற்றை தாராளமாக அணுகுவதற்கு வழி செய்தது.

வெளிவரவிருக்கும் வெளியீடுகள் பற்றி அவர்களை எச்சரிக்க அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அசான்ஜ் அழைப்பு விடுத்தார் என்றாலும் அது புறக்கணிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஏற்கனவே பொது இணைய களத்தில் மக்கள் அணுகக் கூடியதாக இருந்தன என்றாலும், அசான்ஜூம் விக்கிலீக்ஸின் ஏனைய ஆசிரியர்களும் இணைந்து, மாற்றியமைக்கப்படாத இரகசிய தகவல்களை தாமே பிரசுரிக்க நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், விக்கிலீக்ஸின் முக்கிய ஊடக பங்காளிகளான கார்டியன், நியூயோர்க் டைம்ஸ், டெர் ஸ்பீகல், எல் பாய்ஸ் மற்றும் லு மொன்ட் ஆகியவை இந்த அமைப்புடனான தமது உறவுகளை முறித்துக் கொள்வதற்கும், அதன் வேலைக்கு கண்டனம் தெரிவிப்பதற்குமான சாக்குப்போக்காக இந்த நிகழ்வை பயன்படுத்தின.

விக்கிலீக்ஸூக்கு தடை விதித்து ஆரம்பகட்ட “கேபிள் கேட்” பிரசுரங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் பதிலிறுத்தது. அமசன் அதன் வலைத் தள சேவையகங்களிலிருந்து விக்கிலீக்ஸின் தளத்தை நீக்கியது, PayPal விக்கிலீக்ஸின் கணக்கை நீக்கியது, மாஸ்டர்கார்ட் மற்றும் விசா போன்ற நிதிய வலையமைப்புக்கள் இந்த அமைப்பிற்கான பண வழங்கல்களை தடுத்தன. பாங்க் ஆஃப் அமெரிக்கா விக்கிலீக்ஸின் கொடுப்பனவுகளை கையாளுவதை நிறுத்தியது மற்றும் போஸ்ட்பைனான்ஸ் என்ற சுவிஸ் நிதி நிறுவனம் அசான்ஜின் கணக்குகளை முடக்கியது.

விக்கிலீக்ஸ் மீதான மற்றொரு பாரிய தாக்குதல் என்னவென்றால், அதன் தளத்தின் பயன்பாட்டாளர்கள் தீவிரமாக தடுக்கப்பட்டதன் விளைவாக, மிகப்பெரியளவில் “பகிரப்பட்ட சேவை மறுப்புக்கு” (“distributed denial-of-service”) ஆளாகியது.

ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம், அப்போதைய துணை ஜனாதிபதியான ஜோ பைடென் அசான்ஜை ஒரு “உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி” என்று குறிப்பிட்டது, மற்றும் ஹில்லாரி கிளின்டன் “இந்த நபரை எங்களால் ட்ரோன் மூலம் கொல்ல முடியவில்லையா?” என்று கேட்டது உட்பட, தீவிரமாக கண்டனங்களை விடுக்கத் தொடங்கியது. இது, குடியரசுக் கட்சியினரும், வலதுசாரி ஊடகங்களும் அவரை படுகொலை செய்யும் படி தொடர்ந்து கோருவதற்கான வழியை ஏற்படுத்தியது.

அசான்ஜை கைதுசெய்வதை பாதுகாக்கும் வகையில் அவர் மீது சுமத்தப்பட்ட ஜோடிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை சுவீடன் தொடங்கிய நிலையில், அவர் ஒரு பரந்த சதித்திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டார். அதாவது, அசான்ஜ் அரசியல் தஞ்சம் கோரியிருந்ததான இலண்டனில் உள்ள ஈக்வடோரிய தூதரகத்தில் அவரை தன்னிச்சையாக தடுத்து வைக்க சுவீடன் ஒப்படைப்பு கோரிக்கையைப் பயன்படுத்திய இங்கிலாந்து அதிகாரிகளால் சுவீடன் வழக்குரைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். அசான்ஜ் மீது எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்றாலும் கூட, போலி-இடது அமைப்புக்கள் இந்த போலியான பிரச்சாரத்தின் பேரில் அவரை முற்றிலும் கைவிட்டன, அல்லது அவரை ஒரு “கற்பழிப்பாளர்” என்று கூறி பகிரங்கமாக தாக்கின.

ஏப்ரல் 2019 இல், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் லெனின் மொரேனோ தலைமையிலான புதிய ஈக்வடோர் அரசாங்கம் மூன்றும், பிரிட்டிஷ் பொலிசார் மூலம் அசான்ஜை தூதரகத்திலிருந்து சட்டவிரோதமாக கைப்பற்றிச் செல்ல வகை செய்யும் ஒரு ஒப்பந்தத்தை எட்டின.

அமெரிக்க அரசாங்கத்தின் மூர்க்கத்தனமும், மற்றும் தாராளவாத ஊடகங்களும் போலி இடதுசாரிகளும் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸை காட்டி கொடுத்தமையும், இவர்களது வெளியீடுகள் ஆழ்ந்த தீவிரமயப்பட்ட விளைவை ஏற்படுத்தக்கூடுமோ என்ற அச்சத்தில் உந்தப்பட்டவையாகும். இராஜதந்திர இரகசியங்களின் வெளியீடுகளானது, ஆளும் வர்க்கத்தின் மூடிமறைக்கப்பட்ட அன்றாட குற்றங்களையும் சூழ்ச்சிகளையும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அம்பலப்படுத்தியது. இது, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பதன் பேரில் அமெரிக்க தலைமையில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஆக்கிரமிப்புப் போர்கள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பெருநிறுவன மற்றும் நிதிய நலன்கள் பெரியளவில் விரிவாக்கம் காண்பது ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மீது வெளிச்சத்தை பாய்ச்சியது. தாராளவாத ஊடகங்களுக்கும் மற்றும் அவர்களது செல்வாக்கு பெற்ற போலி-இடது கூட்டாளிகளுக்கும், விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ஏகாதிபத்தியத்தின் முறையான காட்டுமிராண்டித்தனமும், ஜனநாயகத்திற்கு எதிரான அதன் விரோதப்போக்கும் பேசப்படாத சட்டத்தை மீறுவதாக இருந்தன.

இந்த வெளியீட்டின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகையில், நவம்பர் 30, 2010 இல் உலக சோசலிச வலைத் தளம் இவ்வாறு எழுதியது:

“அமெரிக்க ‘தேசிய பாதுகாப்பை’ விக்கிலீக்ஸ் குறைமதிப்பிற்குட்படுத்தியது என ஒபாமா நிர்வாகமும் குடியரசு கட்சியினரும் விடுத்த கடுமையான கண்டனங்களுக்கு, தனது சொந்த கொள்ளையடிக்கும் மற்றும் பிற்போக்குத்தன நலன்களை இரகசியமாக தொடர வேண்டும் என்ற ஆளும் நிதிய பிரபுத்துவத்தின் கோபம் அடித்தளமாக உள்ளது, ஏனென்றால் அவர்கள் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் எதிர்க்கின்றனர்.”

இவ்வாறு இரகசியங்களை நாங்கள் வெளிப்படுத்தியதற்கு ஒரு முன்மாதிரி இருந்தது பற்றி நாங்கள் விளக்கினோம், அதாவது ரஷ்ய புரட்சியைத் தொடர்ந்து, போல்ஷ்விக் அரசாங்கத்தால் முதல் உலகப் போரில் ஈடுபடுத்தப்பட்ட ஏகாதிபத்திய சக்திகளின் இரகசிய ஒப்பந்தங்களும் மற்றும் இராஜதந்திர ஆவணங்களும் வெளியிடப்பட்டதாகும். இதுபற்றி அப்போதைய வெளிநாட்டு விவகாரங்களுக்கான மக்கள் ஆணையர் லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

“இரகசிய இராஜதந்திரம் என்பது பெரும் சொத்து கொண்ட சிறுபான்மையினருக்கு அவசியமானதொரு கருவியாகும், இது அவர்களது நலன்களுக்கு பெரும்பான்மையினரை கீழ்ப்படுத்த அவர்களை ஏமாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏகாதிபத்தியம், அதன் வெற்றிகரமான இருண்ட திட்டங்கள் மற்றும் அதன் கொள்ளை கூட்டணிகள் மற்றும் ஒப்பந்தங்களுடன், இரகசிய இராஜதந்திர முறையை மிக உயர்ந்த மட்டத்திற்கு உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய மக்களை சோர்வடையச் செய்து அழித்ததான ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், அதே நேரத்தில் முதலாளித்துவ இராஜதந்திரத்திற்கு எதிரான போராட்டமாக பகல் நேர வெளிச்சத்தைக் கண்டு அஞ்சுவதற்கு போதுமான காரணத்தை கொண்டுள்ளது.”

வெளிப்படையாக ஒரு மாதத்திற்கும் மேலாக, விக்கிலீக்ஸ் வெளியீடுகளால் உருவான பெரும் அரசியல் தாக்கம் துனிசியாவின் நீண்டகால ஜனாதிபதி ஜைன் எல் அபாடின் பென் அலியை பதவியிலிருந்து தூக்கியெறிய காரணமான அங்கு நடந்த பாரிய எழுச்சியில் பிரதிபலித்தது. இந்த எழுச்சி அரபு வசந்தத்தின் தீப்பொறி என்று பொதுவாக கருதப்பட்டது, இது அரபு உலகின் பெரும்பகுதி எங்கிலும் எதிர்ப்பு அலைகளைக் கண்டது. துனிசியாவில் இந்த நிகழ்வுகள் “முதல் விக்கிலீக்ஸ் புரட்சி” என்று பரவலாக விவரிக்கப்பட்டன, இது துனிசிய அரசின் குற்றங்களையும் ஊழல் தன்மையையும் நிறுவனங்கள் அம்பலப்படுத்தியதன் மூலம் ஊக்குவிக்கப்பட்டது.

வர்க்கப் போராட்டத்தின் இந்த எழுச்சி மற்றும் ஈராக் மற்றும் ஆப்கானிய போர் பதிவுகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுக்கு வழங்கிய ஊக்கத்துடன் இணைந்ததான புதிய “விக்கிலீக்ஸ் புரட்சிகளின்” அச்சுறுத்தல் போன்றவை “குற்றங்களாக” கருதப்பட்டன, அதனால் ஆளும் வர்க்கத்தால் அசான்ஜ் ஒருபோதும் மன்னிக்கப்படமாட்டார். என்றாலும், அவை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அவர் செய்த மிகப்பெரிய சேவையாகும். அரசின் குற்றகரமான தன்மையும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் சதித்திட்டங்களும் விபத்துக்கள் அல்ல, அல்லது ஒரு சில மோசமான தனிநபர்களின் வேலையும் அல்ல என தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் அங்கீகாரத்திற்கு விக்கிலீக்ஸ் பங்களித்தது, என்றாலும் போட்டியிடும் தன்னலக்குழுக்கள் வகுத்த விதிகளின் அடிப்படையிலான ஒட்டுமொத்த சமூக அமைப்பின் தயாரிப்பு தூக்கியெறியப்பட வேண்டும்.

இத்தகைய சதியாலோசனைகளின் அளவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. இந்த செப்டம்பரில், ஊடகவியலாளரான போப் வூட்வார்ட், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தானும், ஜனவரியில் கோவிட்-19 பெருந் தொற்றுநோய் விளைவிக்கவுள்ள ஆபத்துக்கள் பற்றி அறிந்திருந்தனர் என்பதை வெளிப்படுத்தினார். செனட் சுகாதாரக் குழுவும் செனட் வெளியுறவுக் குழுவும் அந்த மாதத்தின் பிற்பகுதியில் கோவிட்-19 பெருந் தொற்றுநோய் குறித்த ஒரு இரகசிய தகவல் அமர்வை நடத்தியது, அது பதிவு செய்யப்படவில்லை.

மக்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தொற்றுநோயின் ஆரம்பத்தில் பல செனட்டர்கள் ஒரு பெரிய இலாபத்திற்காக பங்குகளை மறு ஒதுக்கீடு செய்யத் தொடங்கியபோது, அமெரிக்க அரசாங்கம் CARES சட்டத்தைத் தயாரித்தது: அது பல பெரும் செல்வந்தர்களின் பைகளை நிரப்ப சமூக செல்வத்தில் டிரில்லியன் கணக்கான டாலர்களை கொள்ளையடிக்க வகைசெய்தது. உலகெங்கிலும் உள்ள ஏகாதிபத்திய அரசாங்கங்கள் இதைப் பின்பற்றின. ஊழல், இலாபம் ஈட்டுதல் மற்றும் நிதி ஊகங்களின் வைரஸூக்கான உலகளாவிய பதிலிறுப்பால் எதிர்வினைகளை வகைப்படுத்தியுள்ளன.

அசான்ஜின் வாழ்க்கை அழிக்கப்படுவது ஒரு எச்சரிக்கையாக செயல்படுகிறது. புதிய குற்றங்கள் செய்யப்படும்போது புதிய வெளிப்பாடுகளைத் தடுக்க அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. எதிர்கால வெளிப்பாடுகள் தொழிலாள வர்க்கத்திற்குள் பெரும் கோபத்தைத் தூண்டக்கூடும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, மற்றும் மக்களின் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டம் என்பது, விக்கிலீக்ஸை பாதுகாப்பது, மற்றும் ஜூலியன் அசான்ஜின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதிலிருந்து பிரிக்க முடியாதது!

Loading