முன்னோக்கு

COVID-19 தகவல்களை வெளிப்படுத்திய ரெபேக்கா ஜோன்ஸ் மீதான அரசாங்க தாக்குதலை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தகவல்தரவு விஞ்ஞானி ரெபெக்கா ஜோன்ஸ் வீட்டின் மீதான பாசிச பொலிஸ் தாக்குதலை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது. புளோரிடாவிலும் அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளிகளிலும் கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதை அம்பலப்படுத்திய அவரது பணிக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.

Rebekah Jones (Screenshot: CBS Local)

புளோரிடா மாநில காவல்துறையினர் திங்கள்கிழமை அவரையும் அவரது குடும்பத்தினரையும் துப்பாக்கியால் குறிவைத்தபடி ஜோன்ஸின் வீட்டினுள் புகுந்தனர். அவர்கள் அவருடைய தொலைபேசி, கணினி மற்றும் பல வன் தட்டுக்களைக் (hard drives) கைப்பற்றி, கோவிட்-19 பரவல் குறித்த தரவுகளைத் தொடர்ந்து வெளியிடுவதைத் தடுத்தனர். சோதனைக்குப் பின்னர் ஜோன்ஸ் பின்வருமாறு ட்வீட் செய்தார்: "அவர்கள் என் முகத்திற்கு எதிராக துப்பாக்கியைக் காட்டி, என் குழந்தைகளை நோக்கியும் துப்பாக்கிகளைக் காட்டினர் ... இது DeSantis இன் வேலையாகும். அவர் கெஸ்டபோவை அனுப்பினார்."

செப்டம்பர் மாதம் புளோரிடாவின் குடியரசுக் கட்சி ஆளுநர் Ron DeSantis ஆல் பிராந்திய நீதிபதி ஜோசுவா ஹாவ்க்ஸ் நியமிக்கப்பட்டார் என்பதை அறிந்ததாக ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை ட்வீட் செய்தார். மேலும் நீதிபதியாக அவர் செய்த முதல் செயல்களில் ஒன்று, அவரது தொழில்நுட்பத்தை கைப்பற்ற வழிவகுத்த தேடல் பிடியாணையில் கையெழுத்திட்டடதாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிக முக்கியமான ஆதரவாளர்களில் DeSantis உம் ஒருவர். அத்தியாவசியமற்ற வணிகங்கள் மற்றும் பள்ளிகளைத் திறப்பதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கையை அவர் முன்னெடுத்துள்ளார்.

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட தகவல் சேமிப்பான்களில் புளோரிடா அதிகாரிகள் “உள்ளக அறிக்கைகள் மற்றும் மத்திய நோய்த்தடுப்பு நிலையத்தின் அறிவிப்புகள் போன்ற விஷயங்களைப் பற்றி ஜனவரி மாதம் பொய் கூறினார்கள்” என்பதற்கும் “அரசு சட்டவிரோத செயல்களுக்கான சான்றுகள்” இருப்பதாகவும் ஜோன்ஸ் CNN க்கு தெரிவித்தார்.

சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் தகவல்களை அணுகுவதற்கான உரிமைகளை நசுக்கும் இந்த வெட்கக்கேடான செயலை எதிர்க்க வேண்டும்! அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் ஜோன்ஸ் மற்றும் அனைத்து தகவல் வெளியிடுவோரின் பாதுகாப்பிற்கு வர வேண்டும், மேலும் கோவிட்-19 பற்றிய அனைத்து தரவினது முழு வெளிப்படைத்தன்மைக்கும் மற்றும் அவை பற்றி அறிவிப்பதற்காக போராட வேண்டும்!

புளோரிடா சுகாதாரத் துறையின் முன்னாள் ஊழியர் ஜோன்ஸ் அமெரிக்காவின் மிக முக்கியமான தரவு விஞ்ஞானிகளில் ஒருவராவர். மேம்பட்ட புவியியல் தகவல் அமைப்பு (GIS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மாநிலத்தில் தொற்றுநோய் பரவுவதை கவனமாகக் கண்டறிய புளோரிடாவின் கோவிட்-19 அட்டவணையை உருவாக்க ஜோன்ஸ் உதவினார். அதன் பின்னர், மே மாதத்தில் DeSantis இன் வேலைக்குத் திரும்புதல் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பிரச்சாரங்களை ஆதரிப்பதற்காக தரவுகளை திரிபுபடுத்த மறுத்ததற்காக அவர் வேலைநீக்கப்பட்டார்.

தனது பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஜோன்ஸ் புளோரிடா மற்றும் அமெரிக்காவின் K-12 பள்ளிகளில் முறையே கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளைக் கண்காணிப்பதற்கான மிக விரிவான தரவுத்தளங்களான புளோரிடா COVID Action மற்றும் COVID Monitor என்பவற்றை உருவாக்கி மேற்பார்வையிட உதவினார்.

இந்த திட்டங்களுடன் ஜோன்ஸ் வகித்த பங்கின் காரணமாகவும், DeSantis மற்றும் ட்ரம்ப்பை வெளிப்படையாக விமர்சிப்பவராகவும் இருந்ததால் குறிவைக்கப்பட்டார். பொங்கி எழும் தொற்றுநோய்களுக்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் பொறுப்பற்ற கொள்கைக்கு எதிராக அவர் தொடர்ந்து எச்சரித்துள்ளார்.

திங்களன்று பொலிஸ் சோதனைக்கு வழிவகுத்த ஜோன்ஸ் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டு என்னவென்றால், புளோரிடாவின் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு "இன்னும் 17,000 பேர் இறப்பதற்கு முன் பேச வேண்டும்" என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுவதற்கு அவர் பொறுப்பாக்கப்பட்டதாகும். இதை அனுப்பியதை ஜோன்ஸ் மறுக்கிறார். சுகாதாரத் திணைக்களத்திற்குள் தனக்கு என்ன தொடர்புகள் உள்ளன என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகள் தனது சாதனங்களை பறிமுதல் செய்ததாக அவர் வலியுறுத்தினார். இதற்காக அவர் விரைவான எதிர்காலத்தில் பலியாக்கப்படுவார்.

தொற்றுநோய்கள் கட்டுக்கடங்காமல் இருக்கும்போது, பள்ளிகள் மற்றும் அத்தியாவசிய வணிகங்களைத் திறந்து வைப்பதற்கான கொலைகாரக் கொள்கைகளை எளிதாக்கும் நோக்கில் ஜோன்ஸ் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களுக்கு எதிராக எச்சரிக்கும் விமர்சனரீதியான மற்றும் வெளிப்படையாக பேசும் விஞ்ஞானிகளை அச்சுறுத்துவதே இதன் அர்த்தமாகும்.

COVID Monitor இல் உள்ள ஜோன்ஸ் மற்றும் இரண்டு சகாக்கள் டிசம்பர் 2 அன்று யு.எஸ். நியூஸில் ஒரு கட்டுரையை வெளியிட்டனர், “பள்ளிகள் திறந்திருக்க வேண்டுமா? இவ்வளவு வேகமாக இல்லை." 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையை அவர்கள் குறிப்பிட்டு, “பள்ளிகள் பாதுகாப்பான புகலிடங்களோ அல்லது கிட்டங்கிகளோ அல்ல என்று சிலர் நம்புவதாக எங்கள் தரவு நிரூபிக்கிறது. மேலும் அவை உண்மையில் கோவிட்-19 இன் பரவலுக்கு பங்களிக்கின்றன. பல வழிகளில் ..எங்கள் கருத்துப்படி, பள்ளிகள் பாதுகாப்பாக இல்லை என்றும், பள்ளிகளுக்குள்ளும் மற்றும் சுற்றியுள்ள சமூகங்களுக்குள்ளும் வைரஸ் பரவுவதற்கு பங்களிக்கின்றது என்பதை தரவு அறிவுறுத்துகிறது.”

அமெரிக்கா முழுவதும் K-12 பள்ளிகளில் குறைந்தது 187,351 மாணவர்கள் மற்றும் 80,689 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக COVID Monitor ஆவணங்கள் தெரிவிக்கின்றன. புளோரிடாவில் மொத்தம் 1,178,703 தொற்றுக்கள் மற்றும் 19,716 இறப்புகள் உள்ளன. இதில் குழந்தைகளிடையே 101,264 தொற்றுக்கள் மற்றும் ஒன்பது இறப்புகள் உள்ளன.

அமெரிக்காவின் மிகப்பெரிய பள்ளி மாவட்டமான நியூயோர்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட அதே நாளில் தான் போலீஸ் சோதனை நடந்தது. இந்த பொறுப்பற்ற மறு திறப்பு நியூ யோர்க் டைம்ஸால் இடைவிடாமல் ஊக்குவிக்கப்பட்டதுடன் மற்றும் ஜனநாயகக் கட்சி மேயர் Bill de Blasio மற்றும் ஐக்கிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு (UFT) தலைவர் மைக்கேல் முல்க்ரூ ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. இது பள்ளிக்குச் செல்லும் உந்துதலுக்கான இரு கட்சியினதும் மற்றும் தொழிற்சங்க ஆதரவின் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் தலைமையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நாடு தழுவிய பிரச்சாரத்தைப் போலவே, நியூயோர்க் நகர பள்ளிகளையும் திறப்பதற்கான உந்துதல் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக நிதி தன்னலக்குழுவின் இலாப நலன்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

பள்ளிகளைத் திறப்பது ஆளும் வர்க்கத்தின் மூலோபாயத்தின் மையமாகும். மிருகத்தனமான சுரண்டலை எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற பணியிடங்களுக்குத் திரும்பும்படி பெற்றோரை கட்டாயப்படுத்த, தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். வோல் ஸ்ட்ரீட் மற்றும் நிதி மூலதனத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சியினர், பள்ளிகளை மீண்டும் திறப்பதில் குடியரசுக் கட்சியினரைப் போலவே குற்றவாளிகளாக உள்ளனர்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், ஜோன்ஸை பாதுகாப்பதற்காகவோ அல்லது தொற்றுநோய் பரவுவது குறித்த தரவுகளை அணுகுவதற்கான உரிமை பற்றியோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அதற்கு பதிலாக, செவ்வாயன்று ஒரு உரையில், "எங்கள் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது மற்றும் அவர்களை பள்ளியில் வைத்திருப்பது ஒரு தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்," மற்றும் எனது பதவியின் முதல் 100 நாட்களின் முடிவில் "எங்கள் பள்ளிகளில் பெரும்பாலானவை திறக்கப்படுவதைக் காண தான் பணியாற்றுவார்” என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவில் உள்ள அனைத்து K-12 மாணவர்களில் பாதிப் பேர் தற்போது இணையத்தில் கற்பித்தலை மட்டுமே வழங்கும் பள்ளிகளில் படிக்கின்றனர். 32.5 சதவீதம் பேர் முழுக்க முழுக்க நேரடியாக கற்றல் உள்ள பள்ளிகளிலும், கிட்டத்தட்ட 17 சதவீதம் பேர் இரண்டும் கலந்த பள்ளிகளிலும் பயின்றனர். பைடென் தனது இலக்கில் வெற்றி பெற்றால், மக்கள் தொகை முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு முன்பே ஏப்ரல் மாத இறுதிக்குள் மேலும் பல மில்லியன் மாணவர்கள் பாதுகாப்பற்ற வகுப்பறைகளுக்குத் திரும்புவர்.

மேலெழுந்தவாரியான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சில கூடுதல் நிதிகளை வழங்குவதன் மூலம் வரும் மாதங்களில் பள்ளிகளை பாதுகாப்பாக மீண்டும் திறக்க முடியும் என்ற பொய்யை பைடன் தனது உரையில் ஊக்குவித்தார். ஜனநாயக தேசியக் குழுவின் உறுப்பினரும், கல்விச் செயலாளருக்கான தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பு (AFT) தலைவர் ராண்டி வீங்கார்டன், இந்த மோசடிக்கு தனது முழுமையான ஆதரவை அளித்து, “ஹலேலூயா! ட்ரம்ப்பைப் போலல்லாமல், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடென் பள்ளிகளை பாதுகாப்பாக மீண்டும் திறக்க விரும்புகிறார்” என்றார்.

ஜோன்ஸின் உபகரணங்கள் பறிமுதல் மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் குறித்த அவரது அறிக்கையை தணிக்கை செய்வதற்கான முயற்சிகள் அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தால் தகவல் வெளியிடுவோர்களுக்கு எதிரான பல தசாப்தங்களாக நடந்த போரில் சமீபத்தியதாகும்.

அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தால் எண்ணற்ற குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸுக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கு ஒத்த, அநாமதேயமாக சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மூலம் K-12 பள்ளி தொற்றுதல்கள் குறித்த தரவை COVID Monitor தொகுக்கிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்களில் கிட்டத்தட்ட 750,000 தகவல்களின் மூலஆதாரமாக செல்சியா மானிங் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவர் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு அங்கு அவர் உளவியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டார். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் கடந்த பத்தாண்டுகளாக இடைவிடாமல் வேட்டையாடப்பட்டு தற்போது லண்டனின் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டு அவர் அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படுவது தொடர்பான தீர்ப்புக்காக காத்திருக்கிறார். அங்கு அவர் 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கக்கூடும்.

எட்வார்ட் ஸ்னோவ்டென் மற்றும் பலருடன் சேர்ந்து இந்த இரு தைரியமான தகவல் வெளியிடுபவர்களான ஒபாமா-பைடென் நிர்வாகத்தின் கீழும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழும் சமமாக துன்புறுத்தப்பட்டனர். மேலும் பதவிக்குவரும் பைடன்-ஹாரிஸ் நிர்வாகம் பேச்சு சுதந்திரம் மீதான தாக்குதலை இன்னும் ஆழமாக்கும்.

ஒரு தடுப்பூசி இல்லாமல் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கத்தை" வளர்ப்பதற்கான ஆளும் வர்க்க மூலோபாயம் தரவுகளை அடக்குதல் மற்றும் விஞ்ஞானத்தை பொய்மைப்படுத்தலில் அடித்தளத்தை கொண்டுள்ளது. இது ஜோன்ஸ் வீட்டில் சோதனை போன்ற பொலிஸ் அரசு நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படக்கூடிய ஒரு கொள்கையாகும். அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தியும் மற்றும் கோவிட்-19 தொற்றுக்கள் பற்றி முழு வெளிப்படைத்தன்மையைக் கோருவதில் தனது புறநிலை நலன்களை கொண்டதும் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஜோன்ஸ் மற்றும் அனைத்து தகவல் வெளியிடுவர்கள் மீதான தாக்குதலை எதிர்க்கவும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒரு விரிவான திட்டத்திற்காக போராடவும் அழைப்பு விடுக்கின்றது. அத்தியாவசியமற்ற வணிகங்களும் பள்ளிகளும் உடனடியாக மூடப்பட வேண்டும். நம்பகமான மருத்துவ நிபுணர்களால் நிர்ணயிக்கப்பட்டபடி, அனைத்து தொழிலாளர்களுக்கும் தொற்றுநோய் கட்டுப்படும்வரை பாதுகாப்பாக தடுப்பூசி போடப்படும் வரை முழு வருமான பாதுகாப்பு, வீட்டுவசதி, மருத்துவ பராமரிப்பு மற்றும் உயர்தர உணவு வழங்கப்பட வேண்டும். இந்த சமூக திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கு ஆளும் உயரடுக்கினரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பரந்த செல்வத்தை பறிமுதல் செய்ய வேண்டும், அவர்கள் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையையும் மற்றும் சமீபத்திய தசாப்தங்களில் டிரில்லியன் கணக்கானதையும் சேகரித்திருக்கிறார்கள்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் போராட்டத்திற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டமும் சோசலிசத்திற்கான போராட்டமும் தேவை. சமூக சமத்துவத்தின் கொள்கையின் அடிப்படையில், பெரும்பான்மையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூகத்தின் முழுமையான மறுசீரமைப்பின் அவசியத்தை தொற்றுநோய் வெளிப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் அதனை செயற்படுத்துவதற்காக போராட வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பவர்கள் இன்று சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதனை கட்டியெழுப்ப முடிவெடுக்கவேண்டும்.

Loading