பத்து வருட கால நியாயமற்ற தடுப்புக்காவலுக்கு ஆளாகியுள்ள அசான்ஜை உடனடியாக விடுவிக்க ஐ.நா.வின் பிரதிநிதி நில்ஸ் மெல்ஸர் கோரிக்கை விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் ஒரு அறிக்கையில், சித்திரவதை தொடர்பான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி நில்ஸ் மெல்ஸர், இலண்டனின் பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜ் தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கு “எந்தவிதமான சட்டபூர்வ அடிப்படையும் இல்லை” என்று அறிவித்து, பிரித்தானிய அதிகாரிகள் உடனடியாக அவரை விடுவிக்கக் கோரினார்.

பல்வேறு வகையான நியாயமற்ற தடுப்புக்காவல்களுக்கு உட்படுத்தப்பட்ட அசான்ஜின் சிறைவாசத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு குறித்து மெல்ஸர் சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். இது, அமெரிக்க போர்க்குற்றங்களை விக்கிலீக்ஸின் பிரசுரிப்பாளர் அம்பலப்படுத்தியதற்கான பதிலிறுப்பாக பிரித்தானிய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. அசான்ஜ் துன்புறுத்தப்படுவதை பலமுறை கண்டித்துள்ள ஐ.நா. அதிகாரியும் கூட, பெல்மார்ஷ் சிறைக்குள் தீவிரமாக கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் அவர் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆபத்தான நிலைமைகள் குறித்து கவனத்தை ஈர்த்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் இலண்டனில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் அசான்ஜைப் பாதுகாக்க மெல்ஸர் பேசுகிறார்

“திரு அசான்ஜின் உரிமைகள் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக கடுமையாக மீறப்பட்டுள்ளது,” என்று மெல்ஸர் எழுதினார். மேலும், “அவரது உடல்நிலையை மீட்டெடுக்கவும், அவருக்கு எதிராக நிலுவையிலுள்ள அமெரிக்க ஒப்படைப்பு கோரிக்கைக்கு எதிராக அவரை பாதுகாக்க போதுமான தயாரிப்புக்களை மேற்கொள்ளவும், தற்போது ஒரு சாதாரண குடும்ப, சமூக மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கை வாழ அவரை அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

வீட்டுக் காவலின் ஒரு வடிவத்தின் கீழ், அசான்ஜை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தும் அதேவேளை, அவரது தற்போதைய சிறைவாசத்திற்கு ஒரே அடிப்படையாகவுள்ள அசான்ஜை ஒப்படைக்கக் கோரும் அமெரிக்காவின் முயற்சிக்கு மெல்ஸர் தனது எதிர்ப்பை மீண்டும் தெரிவித்தார். அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவாரானால் அவரது மனித உரிமைகள் மீறப்படும், அதாவது அசான்ஜ் அங்கு 17 உளவுச் சட்ட குற்றச்சாட்டுக்களையும், சட்டபூர்வமாக செய்திகளை வெளியிட்ட நடவடிக்கைகளுக்காக 175 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையையும் எதிர்கொள்வார் என்று ஐ.நா. அதிகாரியும் மற்றும் சட்ட பேராசிரியருமான அவர் மீண்டும் எச்சரித்தார்.

பிரித்தானிய நீதித்துறை மற்றும் அதிகாரிகளின் பங்கு பற்றி மெல்ஸர் உரையாற்றுகையில், “அசான்ஜ் ஒரு குற்றவாளி அல்ல என்பதுடன், யாருக்கும் அச்சுறுத்தலாகவும் அவர் இல்லை, எனவே அதிகபட்ச பாதுகாப்புள்ள சிறையில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நீடித்த தனிமைச் சிறைவாசம் அவசியமற்றது என்பதுடன், அதற்கு எந்தவொரு தெளிவான சட்ட அடிப்படையும் கிடையாது” என்று தெரிவித்தார்.

“நீண்டகால தனிமைச் சிறைவாசத்தின் விளைவாக அசான்ஜிற்கு ஏற்பட்ட படிப்படியான கடுமையான துன்பம் நியாயமற்ற தடுப்புக்காவலுக்கு மட்டும் அவரை உட்படுத்தவில்லை, மாறாக சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான வகையில் நடத்தப்படுவதை அல்லது தண்டனையை அவர் எதிர்கொண்டார்.”

உடனடியாக அசான்ஜ் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரப்படுவதற்கு காரணமாக அவருக்கு மிக அருகில் தீவிரப்பட்டுள்ள கோவிட்-19 நோய்தொற்று அலை பற்றி அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அசான்ஜின் சிறைப்பிரிவில் உள்ள 160 கைதிகளில் குறைந்தது 65 பேருக்கு இந்த ஆபத்தான வைரஸ் நோய்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது, அதிலும் அவர்களில் சிலர் அவரது சிறை அறையில் கூட உள்ளனர்.

சிறைச்சாலை அமைப்புமுறை முழுவதுமாக கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவியது, பிரித்தானிய ஆளும் வர்க்கத்தால் செயல்படுத்தப்பட்ட “கூட்டு நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை எனும் கொலைகாரக் கொள்கையின் விளைவாகும், இது தொற்றுநோய் தொடர்ந்து எழுச்சி காண்பதற்கு வழிவகுத்தது. சிறைச்சாலைகளின் படுமோசமான நிலை, நாள்பட்ட இட நெருக்கடி, மற்றும் சுகாதார நெருக்கடி தொடங்கியவுடன் அதிகாரிகள் மிகக் குறைந்த நடவடிக்கைகளை கூட எடுக்கத் தவறியது ஆகியவற்றால் இது மேலும் அதிகரித்தது.

இந்த பரவலான சூழ்நிலையை சுட்டிக்காட்டி, மெல்ஸர் இவ்வாறு தெரிவிக்கிறார்: “கோவிட்-19 தொற்றுநோய்க்கு பதிலிறுக்கும் விதமாக உலகம் முழுவதுமாக சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெரிசல் குறைப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் சிறைவாசம் முற்றிலும் அவசியமில்லாத அனைத்து கைதிகளுக்கும் காவலில் வைக்கப்படாத நிலை நீட்டிக்கப்பட வேண்டும். அதிலும் முதலில், முன்பே சுவாசக் கோளாறு பாதிப்புள்ள திரு அசான்ஜ் போன்ற குறிப்பிட்ட பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கு காவலில் அல்லாத நடவடிக்கைகள் முக்கியமாக நீட்டிக்கப்பட வேண்டும்.

அசான்ஜின் நெருங்கிய ஆதரவாளர்களும் உறவினர்களும் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள் குறித்து எச்சரிக்கும் தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். கடந்த வாரம், விக்கிலீக்ஸின் நிறுவனர் கூட்டாளியான ஸ்டெல்லா மோரிஸ், அசான்ஜிற்கு கதகதப்பான ஆடைகளை வழங்கும் படி பெல்மார்ஷ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். அவருக்கு என குளிர்கால ஆடைகள் இருந்தாலும், அது இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை, அதாவது இரவில் அங்கு வெப்பநிலை பெரும்பாலும் பூஜ்ஜியமாக இருந்ததால் அவர் “உறைந்து கொண்டிருந்தார்” என்பதாகும்.

முன்னைய உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் அனைத்து கோவிட்-19 நோயாளிகளும் அசான்ஜின் பிரிவுக்கு மாற்றப்பட்டு வந்தனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளன. ஒரு கைதிக்கு நோய்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் கூட, அவருடன் இருக்கும் சக கைதிகளுக்கு நோய்தொற்று ஏற்படவில்லை என்றாலும் அவர்கள் வேறு சிறை அறைக்கு மாற்றப்படுவதில்லை. தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததன் முதல் ஆறு மாத காலம் முழுவதுமாக மிக அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கையான முகக்கவசம் அணிவது குறித்து அசான்ஜூக்கு முகக்கவசங்கள் கூட வழங்கப்படவில்லை என்பது ஆகஸ்டில் தெரியவந்தது. இந்த குற்றகரமான அலட்சியம் தெளிவான கொலைகார நடவடிக்கையாக இருந்தது.

அசான்ஜின் ஆரோக்கியத்தை வேண்டுமென்றே பாதிப்புக்குள்ளாக்குவதானது அவரை மவுனமாக்குவதற்கான ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். மெல்ஸரின் சமீபத்திய முறையீட்டிற்கு பிரித்தானிய அரசாங்கமோ அல்லது நீதித்துறை அதிகாரிகளோ பகிரங்கமாக பதிலளிக்கவில்லை. அசான்ஜ் பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி வழங்கப்பட்ட அவசரகால பிணை விண்ணப்பம் மார்ச் மாதம் நிராகரிக்கப்பட்டது. மேலும், விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இறக்கக்கூடும் என்று கடந்த அக்டோபர் முதல் மருத்துவர்களிடமிருந்து வந்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன அல்லது அப்பட்டமாக தள்ளுபடி செய்யப்பட்டன.

மெல்ஸரின் அறிக்கை அசான்ஜிற்கு எதிரான கிட்டத்தட்ட முன்நிகழ்ந்திராத பழிதீர்க்கும் நடவடிக்கைகள் பற்றி சுருக்கமாக தெரிவித்தது: “டிசம்பர் 2015 இல், தன்னிச்சையான தடுப்புக்காவல் குறித்த ஐ.நா. செயற்குழு வழங்கிய கருத்தில், 7 டிசம்பர் 2010 அன்று அசான்ஜ் கைது செய்யப்பட்டதிலிருந்து, இலண்டனின் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் 10 நாட்கள் தடுப்புக்காவலில் அவர் வைக்கப்பட்டது, 550 நாட்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது, மற்றும் இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் நீடித்ததான தடுப்புக்காவலால் தொடர்ச்சியாக அவரது சுதந்திரம் பறிக்கப்பட்டது ஆகியவை உட்பட, பல்வேறு வகையான நியாயமற்ற சுதந்திர இழப்பிற்கு அவர் உட்படுத்தப்பட்டார். மேலும், 11 ஏப்ரல் 2019 முதல், திரு அசான்ஜ் பெல்மார்ஷ் சிறையில் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அசான்ஜின் சுதந்திரம் பறிக்கப்பட்டதற்கான ஆரம்பக்கட்ட சாக்குப்போக்காக இருந்த, பாலியல் முறைகேடுகள் தொடர்புபட்ட சுவீடன் குற்றச்சாட்டுக்கள், அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட அரசு ஜோடிப்பு வழக்காக நீண்டகாலமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சுவீடன் வழக்குரைஞர்களால் அசான்ஜ் ஒருபோதும் குற்றம் சாட்டப்படவில்லை, இவர்கள் 2019 இல் மூன்றாவது மற்றும் இறுதி முறையாக “ஆரம்பகட்ட விசாரணையை” கைவிட்டனர்.

சுவீடன் விவகாரம் தொடர்புபட்ட ஏராளமான முறைகேடுகள் மெல்ஸர் மற்றும் பிற சட்ட அதிகாரிகளால் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உலக சோசலிச வலைத் தளம் முன்னரே குறிப்பிட்டது போல, அவற்றில் “சுவீடன் காவல்துறை அதிகாரிகள் புகார் அளித்தவர்களில் ஒருவரது அறிக்கையை அவருக்குத் தெரிவிக்காமல் திருத்தி எழுதியது, அமெரிக்க அரசுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஒரு வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கிளாஸ் போர்க்ஸ்ட்ராமின் (Claes Borgstrom) நெருக்கமான ஈடுபாடு, மற்றும் நூற்றுக்கணக்கான பிற விவகாரங்களில் நிகழ்ந்தது போல, காணொளி இணைப்பு அல்லது இலண்டனில் அசான்ஜை நேரடி பேட்டி காண சுவீடன் வழக்குரைஞர்கள் மறுத்தது ஆகியவை அடங்கும்.”

“அசான்ஜை அமெரிக்கா பின் தொடர்வதற்கு சுவீடனுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மிக மோசமான வகையில் சுவீடன் ஜோடிப்பு வழக்கை ஊக்குவித்தவர்கள் கூறியது ஏளனத்திற்குள்ளானது. என்றாலும், அசான்ஜ் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வந்தால் அவரை நாங்கள் அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்க சுவீடன் அதிகாரிகள் மறைமுகமாக மறுத்துவிட்டனர்.”

சுவீடன் விசாரணை அவரை சட்ட அமைப்பிற்குள் சிக்க வைப்பதை நோக்கமாக கொண்டிருந்தமை, அவருக்கு கடும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதற்கான சாக்குப்போக்கை வழங்கியதுடன், அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கான ஒரு மாற்று வழியாகவும் பயன்படுத்தப்பட்டது முற்றிலும் உறுதியானது என்பதே அசான்ஜின் வலியுறுத்தலாகும்.

சுவீடனால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இழிவான வகையில் சீர்குலைந்துவிட்ட போதிலும், அசான்ஜின் நிலைமை மட்டும் எந்த விதத்திலும் மாறவில்லை. அதாவது, அவரது சிறைவாசத்திற்கான போலி-சட்ட சாக்குப்போக்குகள் கூட மாறிவிட்டன, என்றாலும் கடந்த தசாப்தம் முழுவதுமாக தொடர்ந்து தன்னிச்சையான தடுப்புக்காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். இது, சுவீடன் விசாரணையும், மற்றும் கடந்த பத்து ஆண்டுகளாக பிரித்தானிய நீதித்துறை எடுத்துவரும் பழிவாங்கும் நடவடிக்கைகளும், அமெரிக்க அரசாங்கங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புக்களால் வடிவமைக்கப்பட்ட துன்புறுத்தல் சங்கிலியின் இணைப்புக்களாக உள்ளன என்பதற்கான தெளிவான சான்றாக உள்ளது.

அமெரிக்காவின் போர்க்குற்றங்கள், உளவு நடவடிக்கைகள் மற்றும் அதன் உலகளாவிய இராஜதந்திர சதி ஆகியவற்றை அம்பலப்படுத்துவதில் அசான்ஜின் பங்கு குறித்து அவர் மீது வழக்குத் தொடர்வது, ஆயுட்கால சிறைவாசம் அல்லது அதைவிட மோசமான தண்டனையை அவருக்கு விதிக்கச் செய்வது, மற்றும் மேலும் ஏதேனும் செய்திகளை வெளியிடவிடாமல் தடுக்க விக்கிலீக்ஸை மூடச் செய்வது ஆகியவையே இதன் நிரந்தர நோக்கமாக இருந்தது.

அசான்ஜின் மிக மோசமான இந்த நிலை குறித்து பிரிட்டன், அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவிலிருந்து அரசியல் ரீதியாக அல்லது ஊடக ஸ்தாபனங்களிலிருந்து எந்தவித கடுமையான எதிர்ப்பும் எழவில்லை.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கான ஆதரவை கீழறுக்கும் வகையில் அவர் மீதான அனைத்து அவதூறுகளும் ஊக்கவிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அசான்ஜ் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளின் தன்மை மற்றும் நோக்கம் பற்றிய அசான்ஜின் எச்சரிக்கைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பெருநிறுவன ஊடகவியலாளர்கள் தற்போது மவுனம் சாதிக்கின்றனர். அவரது சிறைவாச காலத்தின் பத்து ஆண்டுகளும் பிரதான பிரசுரங்களால் அசான்ஜ் ஒரு “கற்பழிப்பாளர்” மற்றும் “பாலியல் குற்றவாளி” என்று பல ஆண்டுகளாக அவதூறாக பேசப்பட்டே கடந்துவிட்டன.

அசான்ஜிற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அரசியல் சக்திகளின் பங்கேற்பு, அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரில் தொடங்கி, பிரிட்டனின் பழமைவாதக் கட்சி மற்றும் தொழிற் கட்சி மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகள் வரை நீள்கின்றன, அதிலும் அசான்ஜ் ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் மற்றும் ஊடகவியலாளர் என்ற போதிலும், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை ஆஸ்திரேலியா கைவிட்டுவிட்டது அல்லது அவருக்கு எதிரான பிரச்சாரத்தில் கூட தீவிரமாக பங்கேற்றது.

அடையாள அரசியலுக்கான அவற்றின் ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு அதிகரித்தளவில் பகிரங்கமாக அவை ஒத்துப்போனது ஆகியவற்றின் அடிப்படையில் அசான்ஜிற்கு எதிராக திரும்பிய போலி-இடது அமைப்புக்கள் குறிப்பாக தீங்கு விளைவிக்கும் வகையில் பங்காற்றியமை சிரியா, லிபியா மற்றும் உக்ரேனில் அமெரிக்க தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு அவை வழங்கிய ஆதரவின் மூலமாக வெளிப்பட்டது. ஊடகத் தொழில் உட்பட, பெருநிறுவன தொழிற்சங்கங்கள் தங்களது பங்கிற்கு, அதாவது அரசாங்கங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுடனான தங்களது அன்றாட ஒத்துழைப்பை கருத்தில் கொண்டு, அசான்ஜிற்காக பரவலான மக்கள் ஆதரவைத் திரட்ட எதையும் செய்யவில்லை.

அசான்ஜை விடுவிப்பதற்கான போராட்டம் என்பது, ஏகாதிபத்திய இராணுவவாதத்தை அதிகரிப்பது, சாமானிய மக்களின் சமூக உரிமைகளுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் தாக்குதல், மேலும் அதனோடு சேர்ந்து சர்வாதிகார ஆட்சி முறைகளுக்குத் திரும்புதல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் தேவைப்படுகிறது என்ற உண்மையை இந்த பதிவு மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அசான்ஜை அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கான போலிநாடக விசாரணை நடைமுறைகள் தொடர்பான தீர்ப்பு ஜனவரி 4 அன்று வழங்கப்படவுள்ளது.

Loading