இந்தியா: தமிழ்நாடு ஆளும் தட்டு மாணவர்களையும் தொழிலாளர்களையும் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியிடுகின்றது

ஆட்சியிலிருக்கும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.இ.அ.தி.மு.க) அரசாங்கம், இதர இந்திய மாநிலங்களிலும் உலகம் முழுவதிலும் உள்ள ஆளும் தட்டுக்களைப் போலவே மருத்துவ அறிவியலாளர்கள், வைராலாயிஸ்டுகள் போன்றவர்களின் கொரோனா பெருந் தொற்றுநோய் தொடர்பான எச்சரிக்கைகளை நிராகரித்துள்ளது.

உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பெருந்தொற்றுப் பாதிப்பில் ஒரு கோடியை (9,857,029) இந்தியா நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவலினால், எட்டு மாதத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு இலட்சத்தையும் அதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்தையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த அபாயகரமான நிலையில், மத்தியிலுள்ள இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதாக் கட்சியின் எடுபிடியாக தமிழ் நாட்டில் செயல்பட்டுவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சியும், “வைரஸுடன் வாழப் பழகுதல் மற்றும் சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்” (herd immunity) மூலம் கொரோனா வைரஸ் நோயை எதிர்க்கலாம் என்ற அறிவியலுக்கு ஒவ்வாத கொள்கைகளை காரணம்காட்டி பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுலாத் தலங்கள், மற்றும் அனைத்து வணிக, தொழிற்துறைகள் மற்றும் அரசு சேவைத் துறைகளை திறந்துவிட்டுள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான மத்தியிலுள்ள பா.ஜ.க அரசாங்கம், அக்.15 முதல் பள்ளிகள், பயிற்சி மையங்களைத் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை எடப்பாடி அரசு நிறைவேற்றியுள்ளது. இது, மனித உயிர்கள் தொடர்பான அலட்சியத்திற்கு இன்னுமொரு உதாரணமாக உள்ளது.

எதிர்க் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய காங்கிரஸ் மற்றும் சாதிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் உட்பட இதர தமிழ் இனவாதக் கட்சிகளின் எந்தவித எதிர்ப்புகளுமின்றி டிசம்பர் 2ம் தேதி முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வேளாண்மை, மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிகளின் இறுதியாண்டு மாணவர்களுக்கும் அரசாங்கம் வகுப்புகளை தொடக்கியிருக்கின்றது.

அதே நேரத்தில் கடந்த பிப்ரவரி முதலாம் திகதி, முதல் கல்வியாண்டில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பையும் எடப்பாடி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. ஆதலால், கொரோனா வைரஸிலிருந்து தமது உயிர்களைப் பாதுகாப்பது என்பது மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பெரும் போராட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள பொறியியல், மருத்துவம் உட்பட இதர கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் 50 சத வீத்துக்கும் மேற்பட்டவை தனியார் முதலாளிகளின் கைகளில் உள்ளன. அதில் அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க வினர்களின் கட்டுப்பாட்டில் அதிகமாக உள்ளன. இலட்சக்கணக்கான பணத்தை மாணவர்களிடம் வசூலிக்கும் இவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றார்கள்.

தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களின் உயிர்களை மதிக்காமல் அவர்களை வேலைக்கு திரும்ப வைப்பதற்கும் மாணவர்களை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வரவைப்பதற்கும் மூல காரணமாக இருப்பது முதலாளிகளின் இலாபங்களை குவிப்பதற்கான வேட்கையாகும்.

கொரோனா பரவலின் மையமாக உள்ள கல்லூரிகளைத் திறந்துவிட்டிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உழைக்கும் மக்கள், மருந்து இருக்கின்ற வியாதிகளை குணப்படுத்துவதற்கே போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில் மருந்தே இல்லாத கோவிட்-19 க்கு பயந்து, உயிரைப் பணயம் வைத்துக்கொண்டு கல்வி கற்க பிள்ளைகளை அனுப்புகின்றனர்.

இக்கட்டுரை எழுதும்போது, கிடைத்த செய்திகளின்படி, சென்னையில் இருக்கும் Indian Institute of Technology Madras ல் (IIT) கல்வி கற்கும் 183 மாணவர்களுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 6 முதுநிலை மாணவர்களுக்கும் கொரோனா பெரும் தொற்று ஏற்பட்டுள்ளது. "சென்னை IIT போலவே பிற கல்லூரிகளிலும் கொரோனா நோய் பரவல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது" என்று தமிழக சுகாதிரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் எச்சரித்துள்ளார்.

"இதுக்குத்தான் பள்ளி கல்லூரிகளைத் திறக்க வேண்டாம் என்று தலைபாடாக அடித்துக் கொண்டோம். இப்போது பாருங்கள் எப்படி ஆகிவிட்டது நிலைமை என்று புலம்புகிறார்கள் தமிழகத்தின் பெரும்பாலான பெற்றோர்கள்" என்று இந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பொறியியல் கல்லூரியொன்றில் பயிலும் மாணவி மீனா குமாரி ஒரு ஊடகத்திற்கு கூறுகையில் வகுப்பில் 30 மாணவர்களில் வெறும் 6 பேர் மட்டுமே கலந்துகொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அதேவேளை “என்னால் வீட்டிலிருந்து படிக்கமுடியவில்லை. எனவே நான் ஆபத்தான நிலையிலும் இங்கு வருவதற்கு முடிவெடுத்தேன்” என்று கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு பயிலும் மாணவி சேது லட்சுமி, கல்லூரிக்குத் திரும்புவதற்கு விரும்புகிற அதேவேளை, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி சென்னைக்கு செல்வதில் பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அவர் மேலும் "கல்லூரி அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றக்கூடும், ஆனால் நானும் எனது பெற்றோரும் பொது போக்குவரத்தை எடுத்துக்கொள்வதில் பயப்படுகிறோம். ஒரு காரை ஏற்பாடு செய்து பயணிக்கும் அளவுக்கு என்னால் முடியாது" என்றார்.

பொறுப்பற்றமுறையில் கல்லூரிகளை திறப்பதுடன் மேலும் விடுதிகளையும் திறப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. பெரும்பாலான ஏழை மாணவர்கள் கிராமப்புறங்களிலிருந்து வருவதால் அவர்கள் விடுதிகளில் தங்கித்தான் படிக்க முடியும். இந்த நிலையில் கல்லூரிக்கும் போகவேண்டும் விடுதியை விட்டால் வேறு வழியில்லை என்ற அச்சங்களுக்குள் மாணவர்களை அரசாங்கம் தள்ளியிருக்கிறது.

விடுதி மாணவர்களை இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தவேண்டும் என்று கல்லூரிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டிருப்பதோடு, அவர்களை கல்லூரிக்கு அருகிலிருக்கும் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகளில் தங்கி படிக்க ஊக்குவிக்கும்படி எடப்பாடி அரசாங்கம் கல்லூரி நிர்வாகங்களைக் கேட்டிருக்கிறது.

உலகளவில் நோய் பாதிப்பிலிருந்து மீள்வதில் இளந் தலைமுறையினர் இருப்பதாக கூறினாலும் நோயை சமூகத்தில் கடத்தி பாதிப்புகளை ஏற்படுத்துபவர்களில் முக்கிய பங்காற்றுகின்றனர் மற்றும் அவர்களுக்கு இளம் வயதைக் கடந்த பின்னர் அந்த நோயின் பாதிப்பு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்ற மருத்துவ அறிவியலாளர்களின் கூற்றை அரசாங்கம் அலட்சியம் செய்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் கடந்த எட்டு மாதங்களை முடித்திருக்கின்ற நிலையில் சுமார் ஏழரைக் கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் டிசம்பர் 12 தேதி வரை வெறும் 1,25,90,941 நபர்களுக்கு மட்டுமே பரிசோதணைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. மருத்துவ அறிவியலாளர்களின் அறிவுறுத்தலின்படி நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தனிமனித இடைவெளி, முகக்கவசம், கைகளைக் கழுவுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களை பாதுகாப்பதிலிருந்து எடப்பாடி அரசாங்கம் ஒதுங்கியிருக்கிறது.

முகக்கவசம் பற்றிய விழிப்புணர்வை தெரிந்துகொள்ள சென்னை மாநகராட்சி மற்றும் ஐசிஎம்ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி (ICMR-National Institute of Epidemiology – NIE) இரண்டும் அக்டோபர் மாதம் 16 மற்றும் 19 தேதிகளில் சென்னையில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் மூன்றில் ஒரு நபர் மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர் என்றும், ஏழை மக்கள் நெருக்கமாக வாழும் சேரிப் பகுதிகளில் 72 சதவீதமும், சேரி அல்லாத பகுதிகளில் வாழும் மக்களில் 64 சதவீதமானவர்களும் முகக்கவசம் அணிவதில்லை என்றும் முகக்கவசம் அணிபவர்களும் அதை முறையாக அணிவதில்லை என்றும் ஆய்வின் முடிவில் குறிப்பிட்டிருக்கின்றன. இப்படியிருக்கும் படசத்தில் மாணவர்கள் நலன்கள் மீது அக்கறையுடன் இருப்பதாக அரசாங்கம் கூறிக்கொள்வது வஞ்சகத்தனமானதாகும்.

இதற்கிடையில் பள்ளிகளைப் பொறுத்தவரை வருகின்ற ஜனவரி மாதத்திற்கு பின்னர் திறப்பதற்கான வேலைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டிருக்கின்றது. தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பள்ளிகளை விரைவில் திறப்பதற்காக எடப்பாடி அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த விடுமுறை விடுக்கப்பட்ட எட்டு மாத காலத்தில் மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அரசாங்கமும், தனியார் கல்வி நிறுவனங்களும், முதலாளித்துவ அரசியல்வாதிகளும் அதன் கல்வியாளர்களும் முதலைக் கண்ணீர் வடிப்பது ஒரு மோசடி நடவடிக்கையாகும்.

அனைவருக்குமான கல்வி கற்கும் உரிமையை இலாபமீட்டும் சரக்காக மாற்றி தனியார் முதலாளிகளிடம் விட்டிருப்பதுடன் ஏழை மாணவர்களை அரசுப் பள்ளிகளில் தரமற்ற நிலையில் தள்ளியிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பதற்கான வசதிகளற்று இருக்கின்றனர். அதேவேளை தனியார் கல்வி நிறுவனங்கள், பொருளாதார நிலைமையில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களை ஆன்லைனில் கற்பதற்கான தொழிநுட்ப உபகரணங்களை வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கின்றனர்.

தனியார் கல்வி நிறுவனங்கள் அந்த ஆண்டுக்கான பாடத்திட்டங்களை முடித்துவிட வேண்டும் என்பதற்காக, மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வகுப்புகளை எடுத்து வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம், கல்வி மீதான பயம் மற்றும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருப்பதை பல மனநோய் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பல மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. அரசாங்கமும் தனியார் கல்லூரி நிறுவனங்களும் இதன் மூலம் குற்றமிழைத்துக் கொண்டிருக்கின்றன.

வருவாய்களை இழந்த நிலையில் வாழ்வதற்காக போராடிக்கொண்டிருக்கும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள வைப்பதற்கு திக்குமுக்காடி மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இணைய சேவை இன்னமும் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. இதில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் ஒட்டுமொத்தமாக ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் டிசம்பர் 12ம் தேதி ஈரோட்டில் செய்தியாளர்களின் சந்திப்பில் பள்ளிகளுக்கான இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் மேலும் கூறும் போது “தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்” என்று கூறியுள்ளார். இது தனியார் பள்ளிகளை அரசாங்கம் வெளிப்படையாக ஊக்குவிப்பதையே காட்டுகிறது.

பொள்ளாச்சியிலிருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது, “அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பெற்றோர்களுடனோ அல்லது தனியாகவோ கூலி வேலைக்கு போய்விடுகிறார்கள். அவர்கள் வீட்டில் மொபைல் போன் வசதி கிடையாது. பெரும்பாலும் அவர்கள் ஏழைகள்தான். இவர்களால் பணம்கொடுத்து தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு முடியாது” அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்வியிலிருந்து ஒதுக்கப்பட்டு, முதலாளித்துவ பெரும் நிறுவனங்களுக்கு மலிவு கூலிகளாக ஆக்கப்படுகின்றார்கள்.

படிப்பதற்கு வசதிகளும், சத்தான உணவும் இல்லாமல் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு தமிழ் நாட்டிலிலுள்ள பள்ளிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படுகிற மதிய உணவு கடந்த எட்டுமாத கொரோனா காலத்தில் வழங்கப்படவில்லை. தேவையான சத்துணவு கிடைக்காமல் அவர்கள் வாழத் தள்ளப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு தேவையான ஆரோக்கியமும் காற்றில் தூக்கிவீசப் பட்டிருக்கின்றன.

இதற்கிடையில் மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் அனைவருக்கும் கல்வி எனும் அடிப்படை உரிமையை தூக்கி எறிந்து குறிப்பிட்ட பணவசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமான கல்வித் திட்டங்களை திணித்து வருகிறது. குறிப்பாக, மருத்துவம் கற்பதற்கு நீட் (National Eligibility cum Entrance Test - NEET) எனும் கடினமான நுழைவுத் தேர்வு முறையை மாணவர்கள் மத்தியில் திணித்துள்ளது. இதன் மூலம் மேலும் பெரும் தனியார் கல்வி நிறுவனங்கள் இலட்சக்கணக்கான பணத்தை மாணவர்களிடம் இருந்து கறக்கின்றன.

நீட் தேர்வைப் போன்று பல நுழைவுத் தேர்வுகளை புகுத்தி ஏழை மாணவர்களை கல்வி கற்பதிலிருந்து ஒதுக்கி மலிவு கூலித் தொழிலாளர்களாக அவர்களை உருவாக்குவதே வலதுசாரி மோடி அரசாங்கத்தினதும் மற்றும் பெரும் முதலாளிகளினதும் திட்டமாக இருக்கிறது.

2017 இல் கொண்டுவரப்பட்ட இந்த தேர்வு முறையால் தமிழகத்தில் இதுவரை 11 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நீட் தேர்வு முறை, தி.மு.க உள்ளடக்கிய முன்னைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய கூட்டணி மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. அதை தற்போது ஆளும் இந்து மேலாதிக்கவாத பாஜக அரசாங்கத்தால் வெகு தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவில் மதிப்பிழந்துபோன நீட் கல்வித் திட்டத்தை, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் நீக்குவோம் என்று தி.மு.க கட்சி தேர்தல் வாக்குறுகளுக்காக கூறி வருவது அப்பட்டமான மோசடியாகும்.

தமிழ் நாட்டில் 1967லிருந்து ஆட்சிக்கு வந்த தி.மு.க, எடப்பாடியின் அ.இ.அ.தி.மு.க வின் தாய்க் கட்சியாகும். பெரும் பில்லியனர்கள் மற்றும் காப்ரேட்டுக்களைக் கொண்டிருக்கின்ற இந்த இரண்டு கட்சிகளும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரானவைகளாகும்.

இந்தியாவில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், மதிப்பிழந்துபோன தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க இடத்தை நிரப்புவதற்கு, தமிழ் இனவாத மற்றும் சாதிக் கட்சிகளான நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் நனவாக செயற்பட்டு தொழிலாள வர்க்கத்தை பிரிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகின்றன.

இந்திய ஸ்ராலினிச கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ இரண்டும் முதலாளித்துவ கட்சியாக காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலங்களில் பிராந்தியவாத, சாதிய கட்சிகளுக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை தொடர்ச்சியாக திசை திருப்பிக்கொண்டிருக்கின்றன. இக்கட்சிகளின் மாணவர்கள் அணியின் சங்கங்கள் மாணவர்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தி கரைத்துவிடும் வேலையில் தீவிரமாக உள்ளன.

கொடூரமான கொரோனா பெருந் தொற்றுநோய் பரவல், தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்குமிடையில் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. உழைக்கும் மக்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவரும் முதலாளித்து அமைப்பை தூக்கி வீசுவதனூடாக, மாணவர்களின் கல்வி கற்பதற்கான அனைத்து தடைகளையும் மற்றும் சமூக காரணங்களையும் களையமுடியும்.

இந்த வரலாற்றுக் கடமையை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியினால் மட்டுமே சாத்தியமாக்க முடியும். இந்த முன்னோக்குக்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் உலக ட்ரொட்ஸ்கிச அமைப்பான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் அதன் பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன.

Loading