இந்திய மாக்னா காஸ்மா தொழிலாளர்கள் பழிவாங்கலுக்கு எதிராகவும் புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க கோரியும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிலாளர்கள் செப்டம்பர் 17 அன்று பழிவாங்கப்பட்ட 18 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் மற்றும் அவர்களுடைய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வைத்து ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு தென்மேற்கில் 55 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்சாலை பகுதியில் இருக்கும் மாக்னா காஸ்மா தொழிற்சாலையின் 75 நிரந்தரத் தொழிலாளர்களில் ஐம்பத்தைந்து பேர் இந்த தொழில்துறை நடவடிக்கையில் இணைந்து கொண்டனர்.

மாக்னா காஸ்மா இன்டர்நேஷனல் இந்தியா தனியார் நிறுவனம், மாக்னா இன்டர்நேஷனலின் ஒரு பகுதி, அது 29 நாடுகளில் 316 உற்பத்திச்சாலைகள் மற்றும் 84 தயாரிப்பு மேம்பாடு, பொறியியல் மற்றும் விற்பனை மையங்களை கொண்டது, அது கனடாவை மையமாக கொண்டு ஒரு பூகோள வாகன உற்பத்திக்கு பாகங்களை அளித்துவருகிறது.

ஒரகடத்தின் ஒரு கிராமமான வடக்குப்பட்டில் மாக்னா தொழிற்சாலை 2013 இல் உற்பத்தியைத் தொடங்கியிருக்கிறது. இது நிசான், ஃபோர்டு, ஹூண்டாய் மற்றும் கியா உட்பட பிரதான நிறுவனங்களுக்கு வாகன பாகங்களை அளித்துவருகிறது.

இந்தியாவில் பொது மற்றும் தனியார் துறைகள் இரண்டிலும் பெருமளவில் பரவலாக நடைமுறைப்படுத்தப்படுவதைப் போன்று மிகப்பெரிய சுரண்டலுக்கு வசதியாக வெறும் 75 நிரந்தரத் தொழிலாளர்களுடன் சேர்ந்து 350 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் 200 பயிற்சியாளர்களைக் கொண்ட ஒரு பல அடுக்கு தொழிலாளர் பிரிவுகளை மாக்னா பராமரித்து வருகிறது.

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸுடன் (INTUC) இணைக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான நிறுவன சார்பு தொழிற்சங்கத்தால் மூன்றரை ஆண்டுகளாக கட்டாயப்படுத்தப்பட்ட மோசமான நிலைமைகளை எதிர்கொண்டு வந்ததாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) கூறினார்கள். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC), பெருவணிக காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க கூட்டமைப்பாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் மாவோயிச இடது தொழிற்சங்க மையத்துடன் (LTUC) இணைந்த ஒரு புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கினர். புதிய தொழிற்சங்கத்தை அமைப்பதில் முன்முயற்சி எடுத்த போர்க்குணமிக்க தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையை கட்டவிழ்த்துவிடுவதன் மூலமாக நிர்வாகம் பதிலளித்துள்ளது. அது மார்ச் 19 அன்று ஆறு தொழிலாளர்களை பணி இடை நீக்கம் செய்தது. 12 தொழிலாளர்களை மகாராஷ்ராவிலிருக்கும் அதன் பூனே தொழிற்சாலைக்கு தன்னிசையான பணியிட மாற்றம் செய்ய நிர்வாகம் உத்தரவிட்டது. வலுக்கட்டாய பணியிடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த தொழிலாளர்கள் பின்னர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்கள்.

தொழிலாளர்கள் ஒரு ஆர்ப்பாட்டதை நடத்தினார்கள் மற்றும் நிர்வாகத்தின் பழிவாங்கலை திரும்பப்பெற்றுகொள்ளவேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்கள். ஆகஸ்ட் 26 அன்று நிரந்தரத் தொழிலாளர்கள் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருந்தனர். செப்டம்பர் 17 அன்று அவர்கள் அவர்களுடைய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இருந்தபோதிலும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒரு ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான தொழிலாளர்கள் கலந்துகொண்டாலும் சிறந்த வேலை நிலைமைகளுக்காக போராடுவதற்கான ஒரு உறுதியை அது எடுத்துக்காட்டுகிறது.

எவ்வாறாயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரானதாக, LTUC அதன் வழக்கமான காட்டிக்கொடுத்தல் முறையை பின்பற்றியிருக்கிறது. LTUC யின் துரோக பாத்திரத்தின் பதிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஜனவரி நடுப்பகுதி வரை அதிக ஊதியங்கள், சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பாக மதர்சன் ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் & இன்ஜினியரிங் (MATE) தொழிலாளர்கள் இதே தொழிற்துறைப் பகுதியில் நடத்திய 140 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் உட்கொண்டதாக இருக்கிறது.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் மதர்சன் தொழிலாளர்களை LTUC, தனிமைப்படுத்தி வைத்து காட்டிக்கொடுத்துவிட்டது. அவர்களுடைய கோரிக்கைகளில் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல், போர்க்குணமிக்க 51 தொழிலாளர்களை பணி இடை நீக்கம் செய்திருக்கும் நிலையில் ஜனவரி 13 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வேலைக்கு திரும்புமாறு LTUC கூறியது. இது நிர்வாகத்தின் கைகளை பலப்படுத்தியது, இறுதியாக யூலையில் 51 தொழிலாளர்களும் நிரந்தரமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

மதர்சனைப் போல், LTUC மாக்னா வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு வேலை செய்துகொண்டிருக்கிறது, அது ஆலையிலுள்ள ஒப்பந்த தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் போராட்டத்திற்கு அழைப்பதற்கு மறுக்கிறது. அத்தகைய ஒரு அழைப்பு தவிர்க்கமுடியாதபடி ஒப்பந்த தொழிலாளர்களின் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளாக இருக்கும் நிரந்தரப்படுத்தல் மற்றும் அதிக ஊதியம் போன்ற தேவை குறித்த விஷயங்களையும் எழுப்பும்.

மதர்சன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது மேற்கொண்டதைப் போன்று இந்தியா முழுவதிலும் மற்றும் பூகோள அளவில் இருக்கும் பிற மாக்னா ஆலைகளிலுள்ள தொழிலாளர்களிடம் அல்லது பெரும் எண்ணிகையிலான தொழிற்துறைகள் இயங்கும் இந்த மையத்திலும் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்க LTUC எந்தவித முயற்சிகளும் எடுக்கவில்லை.

அதற்குப் பதிலாக, வெளிப்படையான தொழிலாள வர்க்க விரோத பதிவுகளைக் கொண்டிருக்கும் அஇஅதிமுக அரசாங்கம் தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலதுசாரி அஇஅதிமுக மாநில அரசாங்கத்திடமும், மாநில தொழிலாளர் துறையிடமும் பயனற்ற முறையீடுகளை செய்யும்படி LTUC மாக்னா வேலைநிறுத்தப் போராட்டக்காரர்களிடம் கூறியது. .

மாக்னா வேலைநிறுத்தப் போராட்ட இடத்திற்கு சன்மினா மற்றும் ஃபோர்டு ஆகியவற்றின் சில தொழிற்சங்க அலுவலர்கள் வருகை தந்து அவர்களுடை வாய்வழி “ஒற்றுமை” மற்றும் சில நிதி உதவிகளையும் வழங்கியுள்ளனர். செப்டம்பர் 24 அன்று ஃபோர்டு தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்வா இந்தப் பகுதிக்கு வந்து வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்ததுடன் சில நிதி உதவிகளை வழங்கியுள்ளார். அவர் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டக்காரர்களிடம் பேசுகையில் அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களைப் பற்றி ஃபோர்டு கம்பனியிடம் பேசப்போவதாக கூறினார். அவர் ஃபோர்டு தொழிலாளர்களிடம் எந்த வேண்டுகோளும் விடப்போவதில்லை மாறாக நிர்வாகத்திடம் தான். இது அந்த சங்கத்தின் கம்பெனி சார்பு நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மாக்னா வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை அருகிலுள்ள கிராம மக்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவதற்கு வடக்குப்பட்டு, சென்ன குப்பம், மாம்பாக்கம் மற்றும் பன்ருட்டி உட்பட்ட பக்கத்திலிருக்கும் பஞ்சாயத்துக்களுக்கு (கிராமளவிலான உள்ளூர் கவுன்சில்கள்) போகுமாறு LTUC அவர்களை அறிவுறுத்தியது.. LTUC முகநூல் செய்தியின்படி “மாக்னா நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கையை அவர்கள் கண்டனம் செய்தனர், மேலும் தமிழ்நாட்டு அரசாங்கம் கட்டாயம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்கள்” எனவே இந்த பிரச்சாரம் அஇஅதிமுக அரசாங்கத்திடம் ஒரு வேண்டுகோள் விடுப்பதற்கு மீண்டும் செயற்பட்டிருக்கிறது..

மதர்சன் போராட்டத்தை காட்டிக்கொடுப்பை போன்று வட இந்தியாவின் ஹரியானா, மானேசர் இல் ஜப்பானுக்கு சொந்தமான மாருதி சுசூகி வாகன பகுதிகளை இணைக்கும் தொழிற்சாலையில், தொழிலாளர்களின் கசப்பான அனுவபத்திலிருந்தும் மாக்னா தொழிலாளர்கள் படிப்பினைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கொடூரமான கம்பனி மற்றும் அரசாங்கத்தின் பொய்யாக ஜோடிப்பினால், 13 போர்க்குணமிக்க மாருதி சுசூகி தொழிலாளர்கள் அவர்கள் செய்யாத ஒரு கொலைக்காக சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகின்றனர். கம்பனியின் அடிமை உழைப்பு நிலமைகளுக்கு எதிராக 2011 நடுப்பகுதியிலிருந்து வேலைநிறுத்தப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டங்கள் போன்ற தொழிற்சாலையில் எழுச்சி பெற்றுவரும் போர்க்குணத்தை அடக்குவதற்கான ஒரு முயற்சியில் இந்த பழிவாங்கல் நடவடிக்கை யூலை 2012 இல் கட்டவிழ்த்துவிடப்பட்டது,

அவர்கள் இந்த நாட்டின் பூகோள ரீதியாக இணைக்கப்பட்ட வாகன தொழிற்துறையில் நிலவிவரும் மிருகத்தனமான வேலைநிலைமைகளை சவால் செய்ய துணிந்தார்கள் என்ற காரணத்தினால் இந்த இளம் தொழிலாளர்களை துன்புறுத்துவதற்கும் அவர்களை ஒரு எடுத்துக்காட்டாக ஆக்குவதற்கும் இந்தியாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஆகியவை மாருதி சுசூகி தொழிலாளர்களின் விடுதலையை வென்றெடுக்கவும் ஒட்டுமொத்த அரசு ஸ்தாபகம், நீதிமன்றம் மற்றும் பொலிஸ் ஆகியவை சம்பந்தப்பட்ட இந்த சதியை அம்பலப்படுத்த ஒரு சர்வதேச பிரச்சாரத்தை மேற்கொண்டது.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான தாக்குதல் ஹரியானா மாநில காங்கிரஸ் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது மேலும் அது மே 2014 வரை புதுடெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் ஆதரவளிக்கப்பட்டது. இந்த இரண்டு அரசாங்கங்களும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் கைகளுக்கு மாறிய போதும் ஜோடிக்கப்பட்ட குற்றம் தொடர்ந்தது.

ஆனால் ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் முறையே அவற்றின் தொழிற்சங்க இணைப்புகளான - இந்திய தொழிற் சங்கங்களின் மையம் (CITU) மற்றும் அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (AITUC) ஆகியவையும் சற்றும் குறைவில்லாமல் மாருதி சுசூகி தொழிலாளர்களை சிறையில் அடைப்பதற்கு கடுமையான மவுனத்துடன் உறுதியாக இருந்தனர்.

சிறையிலிருக்கும் மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான எந்தவொரு போராட்டமும் அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் வைத்திருக்கும் அரசியல் பங்காளித்தனத்திற்கும் மற்றும் முதலாளிகளுடன் அவர்கள் கொண்டிருக்கும் வசதியான உறவுகளுக்கும் இடையூறு ஏற்படுத்தலாம் என்று ஸ்ராலினிஸ்டுகள் அச்சமடைந்தனர். மேலும் இந்த ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு அம்பலமானால் அது இந்திய குடியரசின் நீதிமன்றங்களும் பிற நிறுவனங்களும் ஆளும் வர்க்கத்திற்கும் முதலாளிகளுக்கும் எதிரான ஒரு "ஜனநாயக" அரணாக இருக்கின்றன என்ற அவர்களின் கூற்றை பொய்யாக்கும்.

நிரந்தர வேலைகள், தரமான ஊதியங்கள், மேம்பட்ட வேலை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம், முதலாளித்துவ அமைப்பையும் அதன் அரசியல் தரகர்களையும் சவால்செய்வதன் மூலமாக மட்டுமே முன்னோக்கி செல்ல முடியும். அதற்கு அனைத்து ஸ்ராலினிச-மாவோயிச கட்டுப்பாட்டிலுள்ள, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களிலிருந்து முழுமையாக முறித்துக்கொள்வதுடன் உண்மையான சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டவேண்டியது இதற்கு தேவையாக இருக்கிறது.

Loading